Tuesday, July 16, 2013

உளவு விமானங்கள் மூலம் எப்படி தீவிரவாத நபர்களை கொல்லுகிறார்கள் தெரியுமா? பகுதி 2

அமெரிக்கா தனது விளையாட்டுக்களை மத்திய கிழக்கு நாடுகளில் எவ்வாறு காட்டிக்கொண்டிருக்கின்றது என்பதையும் அது இருந்த இடத்திலிருந்து கொண்டே எவ்வாறு கொலைகளை செய்கி்ன்றது என்பதையும் இக்கட்டுரையில் விளக்கப்படுகின்றது. விறுவிறுப்பின் முதலாவது பாகத்தை வாசிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

பாகிஸ்தானிலும், ஆப்கானிஸ்தானிலும் தீவிரவாத இலக்குகளின் மீது வானில் இருந்து ஏவுகணை ஏவும் உளவு விமானங்கள் எப்படி இயக்கப்படுகின்றன? எப்படி ஏவுகணை ஏவ வேண்டிய இலக்குகளை கண்டு பிடிக்கின்றன? எப்படி ஏவுகணைகளை ஏவுகின்றன?

ஏவுகணைகள் வெடித்துச் சிதறி உயிர்களை பலிவாங்கும் பகுதியில் இருந்து பல்லாயிரம் கிலோ மீட்டர்களுக்கு அப்பால், அமெரிக்காவில் உள்ள இந்த ஆபரேஷன் சென்டர்களின் அறைகளுக்கு உள்ளே இருந்தே, அனைத்தும் நடைபெறுகின்றன.

பாகிஸ்தானிலும், ஆப்கானிஸ்தானிலும் தீவிரவாதிகளை (பொதுமக்களும் சிக்கிக் கொள்வதுண்டு) கொல்லும் இந்த அமெரிக்க ஆபரேட்டர்கள் பலர், பாகிஸ்தானிலோ, ஆப்கானிஸ்தானிலோ இதுவரை கால்கூட வைக்காதவர்கள்.

விமானத்தை இயக்கும் ஆபரேட்டர்கள், அமெரிக்கா, நெவாடாவில் உள்ள இந்த ஆபரேஷன் தரைக் கட்டுப்பாட்டு மையத்தில் சிறிய சிறிய அறைகளில் ஷிஃப்ட் முறையில் பணிபுரிகிறார்கள். ஒவ்வொரு அறையும் ஒவ்வொரு விமானம்.

இருளான அறைக்குள் ஒரு ஆபரேட்டர் அமர்ந்து எதிரே தெரியும் கம்ப்யூட்டர் திரையில் தெரிவதை உற்றுப் பார்த்துக் கொண்டு இருக்கிறார் என்றால், அந்த அறைக்கான விமானம் வானில் பறந்து கொண்டு இருக்கின்றது என்று அர்த்தம்.

அறையில் இருப்பவரது கையில்தான் விமானத்தின் முழுமையான கட்டுப்பாடும் இருக்கும். விமானத்தின் உயரத்தை, வேகத்தை, திசையை எல்லாம் இங்கிருந்தே மாற்றி மாற்றி விமானத்தை செலுத்தும் நபர் இவர்தான். கீழே தாக்கவேண்டிய இலக்கு கிளிக் ஆனதும், அடுத்த சில விநாடிகளில் இலக்கை தூள்தூளாக்க வைக்கும் பட்டனும் இந்த அறைக்குள் இருப்பவருக்கு முன்னால்தான் இருக்கிறது.

கிட்டத்தட்ட வீடியோ கேம் விளையாடுவது போல – ஆனால் இதில் மனிதர்களும் நிஜம். அவர்களது உடல்கள் சிதறுவதும், உயிர் பிரிவதும் நிஜம்.

ஏவுகணை ஏவும் உளவு விமானங்களின் வேகம் அவ்வளவாக இல்லை. அதிக பட்ச வேகமே மணிக்கு 100மைல்கள் தான். ஆனால் 25,000 அடி உயரம்வரை பறக்கக் கூடியவை. தற்போது அதைவிட உயரத்தில் பறக்கக்கூடிய சில புதிய விமான ரகங்கள் டெஸ்ட்டிங்கில் உள்ளன. ஆனால். பாகிஸ்தானிலும், ஆப்கானிஸ்தானிலும் இப்போது ஏவுகணை ஏவும் விமானங்கள், பழைய விமானங்களே.

“சரி. இந்த உளவு விமானங்கள் இதுவரை நடாத்திய தாக்குதல்கள் அனைத்துமே துல்லியமான வெற்றியா?” இந்தக் கேள்விக்கு, ஆபரேஷன் சென்டர் அதிகாரி “நூறு சதவிகிதம் அப்படிச் சொல்ல முடியாது” என்கிறார்.

இதுவரை இங்கிருந்து நடத்தப்பட்ட தாக்குதல்களில், வெளியே தகவல் தெரிவிக்கலாம் என கிளியர் செய்யப்பட்ட சில தாக்குதல்கள் பற்றிய விபரங்களையும் செய்தியாளர்களுக்கு கொடுத்தார் அந்த அதிகாரி.

கடந்த காலத்தில் இந்த ஆபரேஷன் சென்டரில் உள்ள ஆபரேட்டர்கள் நடத்திய தாக்குதல்களும், அவற்றின் முடிவு எப்படியிருந்தது என்பது பற்றியும் ஒரு தொகுப்பு இதோ:

அக்டோபர் 2001

இந்த ஆபரேஷன் சென்டரால் இயக்கப்பட்ட உளவு விமானத்தின் கேமரா, ஆப்கானில் ஒரு ராணுவ வாகனத்தொடரை படம்பிடித்தது. அதை இயக்கிய ஆபரேட்டர், மிக நுணுக்கமாக ஸூம் பண்ணிப் பார்த்தபோது, அந்த வாகனத் தொடரில் சென்ற ஒரு வாகனத்தில் தலிபான் தலைவர் முல்லா ஓமர் இருப்பது தெரிந்தது.

இந்த ஆபரேட்டர் உடனடியாக தமது உயரதிகாரியை தொடர்பு கொண்டார். முக்கியமான ஒருவர் இருப்பதால், ஏவுகணையைச் செலுத்துவதற்கு உயரதிகாரிகளிடம் அனுமதி கேட்கப்பட்டது.

உயரதிகாரிகள் அனுமதி கொடுப்பதா இல்லையா என்று குழம்பிப்போய், பாதுகாப்பு அமைச்சு ராணுவ சட்டவல்லுனர்களிடம் கேட்க, அவர்கள் ஆராய்ந்து பார்த்துவிட்டு, ஏதும் சிக்கல் இல்லை என்று சிக்னல் கொடுப்பதற்குள் வாகனத்தொடர் போய்ச் சேர்ந்து விட்டது. முல்லா ஓமரும் இவர்களது பார்வையிலிருந்து அகன்று சென்று விட்டார்.

நவம்பர் 2001

ஆப்கான் காபுல் நகருக்கு தெற்கேயுள்ள ஹோட்டல் ஒன்றுக்கு அல்-கய்தாவின் முக்கிய நபர்கள் வந்து செல்வது வழக்கம் என்ற தகவல் சி.ஐ.ஏ.வுக்கு கிடைத்தது. அதனையடுத்து, குறிப்பிட்ட ஹோட்டலை ஒரு உளவு விமானம் எப்போதும் கவனித்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டது.

ஒரு மாலை நேரத்தில், சுமார் 10 வாகனங்கள் ஹோட்டல் பார்க்கிங் லாட்டுக்கு வேகமாக வந்து நின்றன. அவற்றில் இருந்து ஆட்கள் இறங்கி ஹோட்டலுக்குள் செல்வதும், அவர்களது கைகளில் துப்பாக்கிகள் இருப்பதும் ஒரு ஆபரேட்டரால் அவதானிக்கப்பட்டது.

உடனடியாக ஹோட்டல் மீது உளவு விமானத்தில் இருந்து இரு ஏவுகணைகள் ஏவப்பட்டன. சிறிது நேரத்தின்பின் மற்றொரு உளவு விமானத்தில் இருந்து மூன்றாவது ஏவுகணையும் ஏவப்பட, ஹோட்டல் சிதறியது.

மறுநாள் கிடைத்த தகவல்களின்படி, அந்த ஹோட்டலில் அல்-கய்தா ஆட்கள் 100 பேர் கொல்லப்பட்டார்கள். பின்லேடனின் ராணுவ துணைத்தலைவர் மொகமட் அட்டெப் அப்போது அந்த ஹோட்டலில் இருந்தார் என்பதால்தான் இவ்வளவு பேர் அவருக்கு பாதுகாப்பு கொடுத்து எங்கோ அழைத்துச் செல்ல ஹோட்டலுக்கு வந்திருந்தார்கள்.

அந்த தாக்குதலில் மொகமட் அட்டெப்பும் கொல்லப்பட்டார்.

நவம்பர் 2002

இது சி.ஐ.ஏ.வுக்கு கிடைத்த உளவுத் தகவலின் அடிப்படையில் நடந்த தாக்குதல். அந்த நாட்களில் சி.ஐ.ஏ. வலைவீசி தேடிக்கொண்டிருந்த அல்-காய்தா தளபதி அபு அலி அல்-ஹரீதியின் ரகசிய மறைவிடம் ஒன்று ஏமனில் இருப்பது சி.ஐ.ஏ.வுக்கு தெரியவந்தது.

இதையடுத்து, அந்த மறைவிடத்தை கண்காணிக்க சி.ஐ.ஏ. ஏஜென்ட்டுகள் ஏமனில் இறக்கி விடப்பட்டனர். நவம்பர் 3-ம் தேதி தமது மறைவிடத்தில் இருந்து வெளியே வந்த அபு அலி அல்-ஹரீதி, சிலருடன் கார் ஒன்றில் ஏறிக்கொண்டார்.

இந்த தகவல் – காரின் லைசன்ஸ் பிளேட் இலக்கம் உட்பட - சி.ஐ.ஏ.வுக்கு உடனே பாஸ் பண்ணப்பட, அடுத்த சில நிமிடங்களின் பின், வீதியில் சென்று கொண்டிருந்த அந்தக் கார் மீது, உளவு விமானம் ஒன்று ஏவுகணை வீசியது.

அபு அலி அல்-ஹரீதியும், காரில் இருந்த 5 பேரும் கொல்லப்பட்டனர். (இந்த அபு அலி அல்-ஹரீதிதான், 2000-ம் ஆண்டு ஏமனில் அமெரிக்க போர்க்கப்பல் USS-Cole மீதான தாக்குதலை நடத்தியவர்)

டிசம்பர் 2003

ஆப்கானிஸ்தானில் பொதுமக்களைக் கடத்தி பணயக் கைதிகளாக வைத்திருந்த தலிபான் நபர்கள் மூவர்மீது இலக்கு வைக்கப்பட்டது. ஏவுகணையும் விமானத்திலிருந்து செலுத்தப்பட்டது.

ஆனால் சரியாக இலக்கு வைக்கப்படாத காரணத்தால் ஏவுகணை தலிபான் ஆட்கள்மீது விழாமல் அருகே வேறு இடத்தில் போய் விழ 9 குழந்தைகள் உட்பட 10 பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.

மே 2005

பாகிஸ்தான் – ஆப்கான் எல்லையில் சென்று கொண்டிருந்த வாகனத் தொடர் ஒன்றில் அல்-கய்தாவின் வெடிகுண்டு நிபுணர் ஹைத்தம் ஏமானி இருப்பது அடையாளம் காணப்பட, உடனே உளவு விமானத்தில் இருந்து ஏவுகணை செலுத்தப்பட்டது. இதில், ஹைத்தம் ஏமானி உட்பட மூன்று பேர் கொல்லப்பட்டார்கள்.

டிசம்பர் 2005

அந்த நாட்களில் அல்-கய்தாவின் மூன்றாவது நிலை தலைவரான (பின்லேடனுக்கும், ஜவாகிரிக்கும் அடுத்த நிலைத் தலைவர்) அபு ஹம்சா ரபியாவின் பாகிஸ்தானிலுள்ள ரகசிய மறைவிடம் பற்றிய உளவுத் தகவல் கிடைத்தது. அந்த வீட்டில் அவர் தூங்கிக் கொண்டிருந்தபோது, வானில் இருந்து ஏவுகணை பாய்ந்தது. அபு ஹம்சா ரபியா கொல்லப்பட்டார். கூடவே அவரது மெய்ப்பாதுகாவலர்கள் 3 பேர் இறந்தார்கள்.

ஜனவரி 2006

அல்-கய்தாவின் இரண்டாவது நிலை தலைவராக இருந்த அய்மன் ஜவாகிரியின் நடமாட்டம் பற்றிய உளவுத் தகவல் கிடைத்தது. அவர் அதி முக்கிய நபர் என்பதால், அவர் இருந்த இடத்தை வானிலிருக்கும் எட்டு உளவு விமானங்களில் இருந்து ஒரே நேரத்தில் ஏவுகணைகளை ஏவினார்கள்.

ஒன்று குறிதப்பினால் மற்றய ஏவுகணையாவது ஆளை விழ்த்திவிடும் என்ற நினைப்பில்!

ஆனால், இவர்கள் செய்த அதிதீவிர முன்னேற்பாடுகள் (8 விமானங்களை ஒரே நேரத்தில் வானத்துக்கு கொண்டு வந்தது உட்பட) அதிக நேரம் எடுத்து விட்டதில், ஏவுகணை ஏவப்படுவதற்கு சில நிமிடங்களுக்கு முன்னர் அய்மன் ஜவாகிரி அங்கிருந்து மற்றொரு இடத்துக்கு சென்று விட்டார்.

ஆனால், அந்த இடத்தில் தங்கியிருந்த அல்-கய்தாவின் நட்சத்திர வெடிகுண்டு தயாரிப்பாளர் மிட்காட் முர்சி கொல்லப்பட்டார். இவர், அய்மன் ஜவாகிரியின் மருமகன்.

நன்றி விறுவிறுப்பு

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com