Thursday, June 13, 2013

வடக்கில் நிர்க்கதியான சிங்களவர்களுக்கு கைகொடுக்கிறது இலண்டன்! (படங்கள் இணைப்பு)

இலங்கையில் வட மாகாணத்தில் அகதிகளாக இருக்கின்ற சிங்களக் குடும்பங்களுக்கு உதவும் நோக்கோடு இலண்டனில் நட்புத்துவ ஒன்றுகூடலொன்று இடம்பெற்றது.

பிரித்தானியாவின் இலங்கை வட்டம், கிழக்கு இலண்டனின் சிங்கள நலனோம்புச் சங்கம் மற்றும் இதமான உள்ளங்களின் அமைப்பு எனும் மூன்று அமைப்புக்களும் ஒன்றிணைந்து சேர்த்த பணம், தற்போது வட மாகாணத்தில் அகதிகளாக இருக்கின்ற சிங்களக் குடும்பங்களுக்கு வீடு மற்றும் ஏனைய தேவைகளைப் பெற்றுக் கொடுப்பதற்குப் பயன்படுத்தப்படவுள்ளதாக அமைப்பின் உறுப்பினர்கள் குறிப்பிட்டனர்.

சிறுமி மராயா அல்மேதாவின் இரம்மியமான நடனத்துடன் நிகழ்ச்சி ஆரம்பமானது. இலங்கையின் சுயாதீனத்தன்மையைப் பாதுகாப்பதற்காக தம்முயிரைப் பணயம்வைத்துப் போராடிய முப்படையினரையும், விசேட அதிரடிப்படையினரையும், கிராமக் காவல் படையினரை – அவர்களின் சொல்லால் சொல்லமுடியாத தியாகங்களை நினைவுகூர்ந்து, அவர்களுக்கு மலரஞ்சலி செலுத்தப்பட்டது.

நாட்டுப்பற்றுள்ளவர்களுக்காக மட்டுமே ஏற்பாடுசெய்யப்பட்டிருந்த அந்த ஒன்றுகூடலில் அதிகமானோர் கலந்து சிறப்பித்தனர்.

நிகழ்வில் கலந்துகொண்டிருந்தோரை விளித்து உரையாற்றிய பெரிய பிரித்தானிய இலங்கை வட்டத்தைச் சேர்ந்த ஜனக்க அலகப்பெரும,

‘மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக இழுத்தடிக்கப்பட்ட பயங்கரவாத்த்தினால் எந்தவொரு இனத்திற்கும் ஒரு செப்புக் காசுக்குக்கூட பயன் இருக்கவில்லை என்பது தெட்டத்தெளிவான உண்மை எனவும், அதனால் முழு இலங்கையும் பாரிய இழப்பையே சந்தித்த்து எனவும், அதனால் கூடுதலாகப் பாதிக்கப்பட்டது வடக்கு கிழக்கில் காலகாலமாக வாழ்ந்து வந்த சிங்களக் குடியேற்றவாசிகளே என்றும் அதனை ஒருபோதும்‘ என்றும் குறிப்பிட்டார்.

அங்கு அலகப்பெரும தொடர்ந்து உரையாற்றுகையில்:

தமிழ்ப் பயங்கரவாதிகள் ஆரம்பத்திலேயே வட மாகாணத்தில் வசித்துவந்த சிங்களவர்களை அங்கிருந்து விரட்டியடித்தனர். யுத்தம் முடிவுக்கு வந்து நான்கு ஆண்டுகள் நிறைவடைந்தும்கூட வடக்கிலிருந்து விரட்டியடிக்கப்பட்ட அப்பாவிச் சிங்கள மக்களுக்கு இதுவரை எந்தவித உதவியும் கிடைக்கவில்லை என்பது தெட்டத்தெளிவு.

அரசாங்கத்தினாலோ ஏனைய அரச சார்பற்ற நிறுவனங்களாலோ எந்தவித உதவியும் கிடைக்காது பல ஆண்டுகளாக தெருத்தெருவாய் அங்கலாய்த்துக் கொண்டிருக்கும் குடும்பங்களுக்கு உதவ்வேண்டியது அனைத்துச் சிங்களவர்களினதும் கடப்பாடாகும். நாட்டின் பெரும்பான்மை இனம் என்று மார்தட்டிக் கொள்பவர்கள் இவ்வாறானதொரு நிலைக்குள்ளாகியிருப்பது மிகவும் சோகமயமானது.

பன்னூறு கோடி ரூபாக்களைப் பயன்படுத்தி வசந்த பூமியாக வடக்கை மாற்றியமைத்திருக்கின்ற போதும், வடக்கிலிருந்து விரட்டியடிக்கப்பட்ட சிங்களவர்களுக்கு இதுவரை அந்த வசந்த்த்தின் ஒளிக்கீற்றுக்களை தூரத்திலிருந்தேனும் பார்ப்பதற்கான உரிமை வழங்கப்படவில்லை. ஒருபோதும் வசந்தத்தைக் காணமுடியாமல் இருக்கின்ற அந்த அப்பாவிச் சிங்கள மக்கள் வீழ்ந்திருக்கின்ற படுகுழியிலிருந்து அவர்களைக் கரைசேர்க்க வேண்டியது எங்களது பொறுப்பாகவுள்ளது. இவ்வாறானதொரு காலத்தில் வட மாகாணத்தில் நிர்க்கதியாக இருக்கின்ற சிங்களவர்களுக்கு எங்களால் இயலுமான அளவு உதவுவதே எங்களது திடசங்கற்பமாகும். இதற்கொப்ப, நிர்க்கதியான சனத்தை பொருத்தமான இடங்களில் குடியமர்த்துவதற்கும், நிலையாக வீடுகள் அமைத்துக் கொடுப்பதற்கும் தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றோம். இன்று கூடியுள்ள நட்பு ஒன்றுகூடலின் முக்கிய நோக்கம் இதுதொடர்பில் எங்கள் இனத்தவர்களுக்கு தெளிவுறுத்துவதும், அவர்களது உதவி ஒத்தாசைகளைப் பெறுவதுமாகும்.’

‘வடக்கிலிருந்து விரட்டியடிக்கப்பட்ட சிங்களவர்கள் சாமனியர்கள் அல்லர். அவர்கள் வடக்கிற்குத் தேவையான சேவைகளை, உதவிகளை வழங்கிவந்த சிறந்த மக்கள் என்பதை ஒருபோதும் மறக்க வேண்டாம்’ என்றும் அலகப்பெரும குறிப்பிட்டார்.

நிகழ்வில் வைத்தியர் ஞானிஸ் சுபசிங்கள, வைத்தியர் குசும் சுபசிங்கள, லக்ஷ்மி பெரேரா, தில்கானி ஜகொடகே ஆகியோர் தேசப்பற்றுப் பாடல் இசைத்து அங்கிருந்தோரை மகிழ்ச்சிக்குள்ளாக்கினர்.

இலண்டன் நகரில் வசித்துவரும் கொட்ப்ரி த சில்வா மற்றும் அவரது நண்பர்கள் குழுவினர் ஒன்றுசேர்த்த பணத்தொகையும், நிர்க்கதியான மக்களுக்கு உதவுவதற்காக அங்கு கையளிக்கப்பட்டது.

இலண்டன் மாநகரில் பல ஆண்டுகளாக இலங்கை சார்ந்த பல்வேறு விடயங்களுக்கும் தானாக முன்வந்து உதவுகின்ற கருணா பஸ்நாயக்க மற்றும் வைத்தியர் எம்.பீ. ரணதுங்க ஆகியோரின் சேவை நலனைப் பாராட்டி அவர்களுக்கு பாராட்டுப் பத்திரங்கள் வழங்கப்பட்டன.

நிகழ்வுக்கு வருகை தந்திருந்த அனைவருக்கும் இலங்கைக்கே உரித்தான உணவு பரிமாறுவதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. அந்நிகழ்வைச் சிறப்பிப்பதற்காக ஒலிபெருக்கிகள், வாகனங்கள், உணவு பானங்கள் ஆகியவற்றை வழங்கியவர்களுக்கும், பல்வேறு வித்திலும் உதவியவர்களுக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது.

(சிங்களத்தில்: திஸ்ஸ மடவல - தமிழில்: கலைமகன் பைரூஸ்)

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com