எது கொடியது? சி.ஐ.ஏ. நடத்தும் சித்திரவதையா? என்.ஜி.ஓ.க்கள் பேசும் மனித உரிமையா?
“பயங்கரவாதத்தின் மீதான போர்” என்ற பெயரில் அமெரிக்க உளவு நிறுவனமான சி.ஐ.ஏ., உலகெங்கும் இரகசியமாக ஆட்கடத்தல்- சித்திரவதைகளை நடத்தியிருப்பதை, நியூயார்க்கைச் சேர்ந்த “ஓப்பன் சோசைட்டி பவுண்டேசன்” என்ற ஏகாதிபத்தியத் தொண்டு நிறுவனத்தின் புலனாய்வு அறிக்கை அம்பலப்படுத்தியிருக்கிறது. மன்மோகன் சிங்கின் மகள் அம்ரித் சிங் வெளியிட்டுள்ள “சித்திரவதையின் உலகமயமாக்கம்” என்ற இந்த அறிக்கை, உலகின் 54 அரசுகள், தமது நாட்டு சட்டங்களுக்கே விரோதமாக, தம் நாட்டுக் குடிமக்களையே கைது செய்து சி.ஐ.ஏ.விடம் ஒப்படைத்ததோடு, அவர்களைச் சித்திரவதை செய்யவும் கடத்தவும் உடந்தையாக இருந்ததை அம்பலப்படுத்தியிருக்கிறது. இப்படி சி.ஐ.ஏ. வுக்கு ஒத்துழைத்த நாடுகளின் பட்டியலில் ‘ஜனநாயகம் தழைத்தோங்கும்’ ஜெர்மனி, பிரிட்டன், டென்மார்க், கனடா போன்ற நாடுகள் முதல் அமெரிக்காவால் “தீய சக்திகளின் ஆணிவேர்” என சித்தரிக்கப்படும் சிரியா, இரான் போன்ற இஸ்லாமிய நாடுகள் வரை பலரும் அடக்கம்.
அதிர்ச்சியூட்டும் செய்தி இது மட்டுமல்ல; சி.ஐ.ஏ.வை அம்பலமாக்கும் இந்த அறிக்கையை வெளியிட்டிருப்பவர், அமெரிக்காவில் வசிக்கும் மன்மோகன் சிங்கின் மகள் அம்ரித் சிங். புருவத்தை உயர்த்த வேண்டாம். அது பற்றி ஆராய்வதற்கு முன், அம்ரித் சிங்கின் அறிக்கை கூறும் விவரங்களில் சிலவற்றைப் பார்ப்போம்.
இன்று அமெரிக்க மனித உரிமைத் தீர்மானத்தை எதிர்கொண்டிருக்கும் இலங்கை அரசு, சி.ஐ.ஏ.வின் ஆட்கடத்தலுக்கு உதவியுள்ளது. 2003-இல் சி.ஐ.ஏ.வின் ஆட்கடத்தலுக்காக உபயோகப்படுத்தப்படும் ரிச்மோர் ஏவியேஷன் நிறுவனத்தின் விமானம், பாங்காக்கிலிருந்து ரித்வான் இசாமுதீனைக் கடத்துவதற்கு முன் இலங்கையில் தரையிறங்கியிருக்கிறது. இவர் பின்னர் மூன்றாண்டுகள் சி.ஐ.ஏ.வின் பல்வேறு இரகசிய முகாம்களில் சித்திரவதை செய்யப்பட்டு, 2006-இல் குவாண்டினாமோ பே சிறைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
2004-ஆம் ஆண்டு பாத்திமா பவுச்சர் என்ற சிரிய நாட்டுப் பெண் கோலாலம்பூர் விமான நிலையத்தில் பிடிக்கப்பட்டு விமான நிலையத்திலேயே உருவாக்கப்பட்ட இரகசிய அறையில் அமெரிக்க உளவுத்துறையினால் பல நாட்கள் சித்திரவதை செய்யப்பட்டார். நான்கரை மாத கர்ப்பமாக இருந்த பவுச்சர், சங்கிலியால் கட்டப்பட்டு, ஐந்து நாட்களுக்குப் பட்டினி போட்டுக் கொடுமைப்படுத்தப்பட்டிருக்கிறார்.
ஈரானில் பிடிக்கப்பட்ட அகமது அல்-தீமா, ஆப்கானிஸ்தானில் அமெரிக்க உளவுத்துறையின் இருண்ட சிறையில் 77 நாட்கள்அடைக்கப்பட்டிருந்தார். அதன் பிறகு பாக்ரம் என்ற இடத்துக்கு கடத்தப்பட்டு கூரையில் கட்டித் தொங்கவிடுவது, நாய்களால் அச்சுறுத்துவது, சித்திரவதை வீடியோக்களை பார்க்க வைப்பது, எந்திரத்தால் அறுக்கும் சத்தத்தோடு வலியால் அலறும் சத்தத்தைக் கேட்க வைப்பது என்று 40 நாட்களுக்குச் சித்திரவதை செயப்பட்டிருக்கிறார்.
-இவை சில எடுத்துக்காட்டுகள். இது போல பல விதமாக அமெரிக்கா நடத்திவரும் மனிதத்தன்மையற்ற, மிருகத்தனமான சித்திரவதைகளுக்கு 54 நாடுகள் முழு ஒத்துழைப்பு கொடுத்துள்ளன.

தற்போது இவ்வறிக்கையை வெளியிட்டிருக்கும் அம்ரித் சிங், “சி.ஐ.ஏ. வின் இத்தகைய நடவடிக்கைகள் மீது அமெரிக்க அரசு ஒரு சுயேச்சையான விசாரணை நடத்தி, இந்தச் சித்திரவதை நடவடிக்கைகளுக்குப் பொறுப்பான சி.ஐ.ஏ. அதிகாரிகள் யார் என்பதை அம்பலமாக்க வேண்டும்; நடந்துள்ள இந்த முறைகேடுகளுக்கு அமெரிக்கா மட்டுமின்றி, மற்ற நாடுகளும் பொறுப்புதான் என்ற போதிலும், இவ்வாறு சர்வதேச சட்டங்களை மீறி நடந்து கொள்வதன் விளைவாக, உலகளவில் பயங்கரவாதத்துக்கு எதிராக அமெரிக்கா மேற்கொண்டு வரும் முயற்சிகளுக்கு ஆதரவு குறைவதுடன், அமெரிக்காவின் தார்மீகத் தகுதியும் பாதிக்கப்பட்டுவிடும்” என்று குறிப்பிடுகிறார்.
அம்ரித் சிங்கின் அறிக்கை, “அமெரிக்க அரசு வேறு; அதன் உளவு நிறுவனமான சி.ஐ.ஏ. வேறு” போலவும், சி.ஐ.ஏ. என்பது நாட்டாமைக்கு தெரியாமல் ரவுடித்தனம் செயும் தறுதலைப் பிள்ளை போலவும் ஒரு தோற்றத்தை ஏற்படுத்துகிறது. சி.ஐ.ஏ. வுக்கு கிரிமினல் வேலைகளில் ஈடுபடுவதற்கான சுதந்திரமும் சுயேச்சைத்தன்மையும் அமெரிக்க அரசால் திட்டமிட்டேதான் வழங்கப்பட்டிருக்கின்றன. பல்வேறு நாடுகளில்”டேர்டிவொர்க்ஸ்” என்று வகைப்படுத்தப்பட்டுள்ள ஆட்கடத்தல், சித்திரவதை, கொலை போன்ற இரகசிய வேலைகளில் தொடங்கி, இராணுவ ஆட்சிக் கவிழ்ப்புகள் வரையில் எல்லா நடவடிக்கைகளிலும் அது ஈடுபட்டிருப்பது மட்டுமின்றி, அமெரிக்க ஏகாதிபத்தியத் தொழில் நிறுவனங்களுக்காக, மற்ற நாடுகளின் வணிக நடவடிக்கைகள், ஒப்பந்தங்களை வேவு பார்ப்பது வரையிலான முறைகேடுகளிலும் அது ஈடுபட்டிருக்கிறது.
அம்ரித் சிங்
“சித்திரவதையின் உலகமயமாக்கம்” அறிக்கையைத் தொகுத்து வெளியிட்ட அம்ரித் சிங்.

ஓபன் சொசைட்டி பவுண்டேசன் என்பது உலகப் பெரும் கோடீசுவரனும், நிதி மூலதனச் சூதாடியுமான ஜார்ஜ் சோரோஸ் என்பவனால் நடத்தப்படும் தன்னார்வத் தொண்டு நிறுவனம். 1980-களில் போலந்தில் போலி கம்யூனிச ஆட்சிக்கு எதிரான மக்கள் கோபத்தை சாலிடாரிட்டி என்ற எதிர்ப்புரட்சி இயக்கத்துக்கு ஆதரவாகத் திருப்புவதில் சோரோஸின் இந்த அமைப்பு முக்கியப் பாத்திரம் ஆற்றியது. மாசிடோனியா, பெலாரஸ், குரோசியா எனப் பல கிழக்கு ஐரோப்பிய போலி சோசலிச நாடுகளில் முதலாளித்துவத்தை நிறுவியதும், ஜார்ஜியாவில் ரோஜாப் புரட்சியை பின்நின்று இயக்கியதும் சோரோஸின் தொண்டு நிறுவனங்கள்தான்.
ஜார்ஜியாவில் ஆட்சியைக் கைப்பற்றியதும் ஓபன் சோசைட்டி பவுண்டேசனின் பொறுப்பில் இருந்தவர்கள் அமைச்சர்களாயினர். அந்நாட்டின் துறைமுகம், மின்சாரம், ரயில்வே ஆகியவை சோரோஸின் கைக்கு மாறின. மிலோசோவிச்சை ஆட்சியிலிருந்து இறக்கி, யூகோஸ்லாவியாவைப் பிளந்தது மட்டுமல்ல, கொசாவோ விடுதலைப் படை என்ற இசுலாமியப் படைக்கு பணமும் ஆயுதமும் கொடுத்து, பதிலுக்கு அந்நாட்டின் தங்கம், வெள்ளி, காரீயச் சுரங்கங்களைக் கைப்பற்றிக் கொண்டார் சோரோஸ். “முன்னாள் சோவியத் சாம்ராச்சியத்தை இனி சோரோஸ் சாம்ராச்சியம் என்று அழையுங்கள் ” என்று திமிராக அறிவிக்கும் அளவுக்கு சோரோஸின் தொண்டு நிறுவனங்கள் கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் விளையாடின.
ஜார்ஜ் சோரஸ்
ஓப்பன் சொசைட்டி பவுண்டேசன் என்ற தொண்டு நிறுவனத்தை நடத்தி வரும் அமெரிக்கப் பெருமுதலாளி ஜார்ஜ் சோரஸ்.

சோரோஸ் கடைப்பிடிக்கும் உத்தி எளிமையானது. எந்த நாடுகளில் சர்வாதிகாரத்துக்கு எதிரான மக்கள் அதிருப்தி நிலவுகிறதோ, அங்கே சோரோஸின் மனித உரிமை மீட்பர்கள் களமிறங்குவார்கள். அதன் பின்னர் அந்த நாடுகள் பற்றிப் பத்திரிகைகள் வெளியிடும் தலைப்புச் செய்திகளை சோரோஸின் பணம் தீர்மானிக்கும். அரசுக்கு எதிரான மக்கள் கோபத்தை சோரோஸின் அரசியல் மற்றும் அறிவுத்துறை கூலிப்படை தன்வயப்படுத்திய பின்னர், பொருத்தமான நேரத்தில் அமெரிக்க வெளியுறவுத்துறை கண் சிமிட்டும். அந்த நாட்டில் ‘புரட்சி’ அல்லது ‘ஆட்சிக்கவிழ்ப்பு’ அரங்கேறும். அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் விரிவாக்க நடவடிக்கைகளும், சோரோஸின் தொழில் சாம்ராச்சியமும், அவரது தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும் இணக்கமான முறையில் பிணைந்திருக்கின்றன.
இதன் பொருள் பிணக்கே இல்லை என்பதல்ல. முதலாளித்துவத்தையும் அமெரிக்க மேலாதிக்கத்தையும் நாசூக்காக, நயவஞ்சகமாக மக்கள் ஆதரவோடு நிலைநாட்ட வேண்டும் என்பது சோரோஸின் அணுகுமுறை. இதை விடுத்து மூர்க்கத்தனமான முறையில் இராக் மீது படையெடுத்த காரணத்தினால் ஜூனியர் புஷ்ஷை வெளிப்படையாக எதிர்த்து பரபரப்பைக் கிளப்பினார் சோரோஸ். அப்போதே சோரோஸின் உண்மை முகத்தை ‘நியூ ஸ்டேட்ஸ்மேன்’ பத்திரிகையில் நீல்கிளார்க் என்ற பத்திரிகையாளர் தோலுரித்தார்.
சோரோஸ் வெளியிட்ட ஆக்கிரமிப்பு எதிர்ப்பு எத்தகையதோ, அத்தகையதுதான் தற்போது மன்மோகன் சிங்கின் மகள் அம்ரித் சிங் வெளியிட்டிருக்கும் சித்திரவதை எதிர்ப்பு. அப்பன் அமெரிக்க அடிவருடி என்றால், மகள் எதிர்ப்பை நிறுவனமயமாக்கிக் காயடிக்கும் தொண்டு நிறுவன நிர்வாகி. எது கொடியது? சி.ஐ.ஏ. வின் சித்திரவதையா, தொண்டு நிறுவனங்கள் பேசும் மனித உரிமையா?
- அன்பு
1 comments :
We preach only to the whole world because we have the rights to do that,but the same preachings are not suitable for us.
Post a Comment