பெப்பிலியானவில் ஹராமும் பெவிலியனில் ஹக்கீமும்!-.எச்.சித்தீக் காரியப்பர்
பெப்பிலியான பிரதேசத்திலுள்ள முஸ்லிம் வர்த்தக நிலையம் ஒன்று தாக்கப்பட்ட சம்பவம் அண்மையில் இடம்பெற்றிருந்தது. பொதுபல சேனா அமைப்பினாலேயே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாகக் கூறப்பட்டது. குறித்த ஆடைத் தொழிற்சாலைக்குப் பாரிய இழப்புகள் ஏற்பட்டிருந்த நிலையில்
பெப்பிலியான வர்த்தக நிறுவனத்தின் உரிமையாளர் இந்த வழக்கை விட்டுக் கொடுத்தமை தொடர்பில் பல்வேறு சந்தேகங்கள் எழுப்பப்பட்டன. அச்சுறுத்தல், அழுத்தங்கள் காரணமாகவே அவர் இந்த வழக்கை வாபஸ் பெற்றிருக்கலாம் என்று கூறப்பட்டது.
இது குறித்து அமைச்சர் ஹக்கீமும் வாய் திறந்திருந்தார்.” குறிப்பிட்ட நிறுவனத்தின் உரிமையாளர் அல்லது அந்த நிறுவனத்தினர் அவ்வாறான விட்டுக்கொடுப்பைச் செய்ய முன்வந்திருந்தாலும் கூட, கள நிலவரத்தை பொறுத்து அவரது விட்டுக் கொடுப்பின் பின்னணியில் தலையீடுகளும் அழுத்தங்களும் பிரயோகிக்கப்பட்டிருக்கக் கூடுமென்ற சந்தேகம் பொதுமக்கள் மத்தியில் மேலோங்குவது இயல்பானது. என்று ஹக்கீம் கூறியிருந்தார்.
இதனை விடவும் இன்னாரு விடயத்தையும் அவர் தனது அறிக்கையில் சுட்டியிருந்தார். “அதாவது, அநீதிகளும் அநியாயங்களும் இழைக்கப்படும் போது பாதிப்புக்குள்ளாகும் சமூகங்களுக்காக குரல் கொடுக்கும் அரசியல்வாதிகள் ஒரு தலைப்பட்சமான விட்டுக் கொடுப்புகளைச் செய்ய வேண்டும் என மேலாதிக்கச் சிந்தனையுள்ளோர் எதிர்ப்பார்ப்பதைப் பற்றி இந்நாட்டு வரலாறு நெடுகிலும் சான்றுகள் நிறையவுள்ளன“ என்கிறார். இதன் மூலம் தனது சமூகத்துக்கு இழைக்கப்படும் கொடுமைகளைப் பற்றிக் குரல் எழுப்பும் அரசியல்வாதிகள் விட்டுக் கொடுக்க வேண்டிய நிலையையே மேலாதிக்கச் சிந்தனையுள்ளோர் எதிர்ப்பார்ப்பதாக அவர் தெரிவித்து, அந்த அடிப்படியில்தான் தனது சமூகத்தின் மீதான அடக்குமுறைகளை மேலாதிக்கச் சிந்தனை கொண்ட தனது அரச தலைமைகளிடம் விட்டுக் கொடுத்துக் கொண்டிருக்கிறாரோ என்ற சந்தேகம் இப்போது முஸ்லிம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
மேலும், பெப்பிலியான சம்பவத்தில் பாதிக்கப்பட்ட நிறுவனத்தின் உரிமையாளரின் விட்டுக் கொடுப்பின் பின்னணியில் தலையீடுகளும் அழுத்தங்களும் பிரயோகிக்கப்பட்டிருக்கக் கூடுமென்ற சந்தேகம் பொதுமக்கள் மத்தியில் மேலோங்குவது இயல்பானது என்றும் அவர் கூறியிருந்தார். இப்போது முஸ்லிம் மக்களிடம் ஏற்பட்டுள்ள சந்தேகம் இதுவல்ல. அமைச்சர் ஹக்கீமின் நடவடிக்கைகள், விட்டுக் கொடுப்புகள் தொடர்பில்தான் சந்தேகங்கள் முஸ்லிம் மக்களிடம் நிறையவே எழுந்துள்ளன.
குறித்த சம்பவம் இடம்பெற்றவுடன் ஜனாதிபதியைத் தொடர்பு கொண்டு உடனடியாக அமைச்சரவையைக் கூட்டுமாறு தான் வேண்டுகோள் விடுத்ததாக ஹக்கீம் தெரிவித்திருந்தார். ஆனால், அப்படி எதுவும் நடக்கவில்லை. வழமையான அமைச்சரவைக் கூட்டம் கடந்த வார இறுதியில் இடம்பெற்ற போது கூட முஸ்லிம்களின் விடயம் சாதாரணமாகக் கூட அலசப்படவில்லை என்று தகவல்கள் வெளிவந்துள்ளன.இந்த இடத்தில் நாம் ஒன்றைக் கவனிக்க வேண்டும். உடனடியாக அமைச்சரவையைக் கூட்டுமாறு ஜனாதிபதியை அவர் கேட்டிருந்தும் அந்த வேண்டுகோள் கணக்கெடுக்கப்படாமல் இருந்திருப்பின் அதற்கு ஹக்கீமின் பலவீனமே காரணம் என அர்த்தம் கொள்ள முடியும். அரச உயர் மட்டத்தில் அவருக்குள் செல்வாக்கு எப்படி என்பதனை இதன் மூலம் தெரிந்து கொள்ளக் கூடியதாகவும் உள்ளது.
சிரேஷ்ட முஸ்லிம் அமைச்சர் ஒருவர், அதுவும் பெரிய கட்சி ஒன்றின் தானைத் தலைவரான ரவூப் ஹக்கீமினால் இவ்வாறானதொரு வேண்டுகோள் விடுக்கப்பட்டிருந்தும் அது அரச தலைமையினால் நிராகரிக்கப்பட்டிருந்தால் தனதும் தனது கட்சியினதும் தனது சமூகத்தினதும் தன்மானத்தின் அவமானமாக இதனைக் கருதி அவர் தனது அமைச்சுப் பதவியை இராஜினாமாச் செய்து அரசினை விட்டு வெளியேறியிருக்க வேண்டும். ஏனெனில், முன்னர் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அரசாங்கத்திலிருந்து வெளியேறிய போது ஒரு விடயத்தை அவர் கூறியிருந்தார். அதாவது முஸ்லிம்கள் தொடர்பான தங்கள் கோரிக்கைகளை அரசாங்கம் நிறைவேற்றாமை காரணமாகவே தாம் அரசிலிருந்து வெளியேறியதாகக் கூறியிருந்தார்.
இந்த அடிப்படையில் நோக்கும் போது மிக மோசமாக இடம்பெற்ற பெப்பிலியான சம்பவம் தொடர்பில் அவர் அமைச்சரவையைக் கூட்டுமாறு கோரியிருந்தும் அது நிராகரிக்கப்பட்டிருந்தால் அவர் அரசிலிருந்து வெளியேறியிருக்க வேண்டும். முஸ்லிம்களின் எரியும் விவகாரம் பற்றி விவாதிக்கக் கூட அமைச்சரவையைக் கூட்டாத அரசுடன் ஒட்டியிருப்பதில் என்ன இலாபம்? அவ்வாறு இல்லாவிடின் அமைச்சரவையைக் கூட்டுமாறு அவர் கோரிக்கை விடுத்ததாகக் கூறப்படுவது என்பது அவரால் சொல்லப்பட்ட இன்னொரு பகிரங்கமான பொய்யாகவே நினைக்கத் தோன்றும்.
இது ஒருபுறமிருக்க, பெப்பலியான சம்பவத்தின் பின்னர் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீடம் கூடி சமகால நிலைமைகள் தொடர்பில் ஆராய்ந்ததாகச் செய்திகள் பரபரப்பாக வெளிவந்து கொண்டிருந்தன. ஆனால், அதன் முடிவுகள் எதுவும் சரியாக வெளியிடப்படவில்லை. இது ஹக்கீம் தலைமையிலான முஸ்லிம் காங்கிரஸுக்குப் புதிதான விடயமல்ல. சந்தர்ப்பத்தைச் சமாளிப்பதற்கான தந்திரமே இது.
பெரும்பாலானோர் அரசிலிருந்து முஸ்லிம் காங்கிரஸ் விலக வேண்டுமென்ற கோரிக்கையை முன்வைத்தனர் எனக் கூறப்படுகிறது. ஆனால், அந்தக் கோரிக்கை முஸ்லிம் காங்கிரஸ் தலைமையிலான ஜீரணிக்க முடியாத ஒன்றாகவே காணப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. முஸ்லிம் காங்கிரஸ் அரசை விட்டு விலக வேண்டுமென்பதோ அல்லது அமைச்சுப் பதவிகளைத் துறக்க வேண்டுமென்பதோ அமைச்சர் ஹக்கீமின் கட்சிச் ஷரியா சட்டத்தின் கீழ் நிச்சயமாக ஹராமாக்கப்பட்ட ஒரு விடயமாகவே உள்ளது.
இந்த நாட்டு முஸ்லிம்களுக்கு எதிராக இவ்வாறெல்லாம் அநியாயங்கள் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள நிலையில், தனது கட்சியே முஸ்லிம் மக்களின் தனித்துமான கட்சி. தானே முஸ்லிம்களின் அரசியல் தலைவர் என்றெல்லாம் இன்னும் மிகையாகப் பிடிவாதம் பிடித்துக் கொண்டிருப்பது வெட்கக் கேடானது. இந்த விடயத்தில் முஸ்லிம் மக்களும் தெளிவு கொள்ள வேண்டும். இப்போது முஸ்லிம்களுக்கு எதிரி பொதுபல சேனா என்று கூற முடியாது. ஆனால், முஸ்லிம்களுக்கு யார் எதிரிகள் என்பதனை பொதுபல சேனாவே இன்று அம்பலப்படுத்தியுள்ளது என்பதனை ஏற்றுக் கொள்ள வேண்டும்.
இது இவ்வாறிருக்க, முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் நாயகமும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம். ஹஸனலி சில கருத்துகளைத் தெரிவித்துள்ளார். அவரின் கருத்துகள் யாருக்கும் முதுகு குனிந்த நிலையில் தெரிவிக்கப்படவில்லை. மிகவும் காட்டசாட்டமாக அவர் வெளியிட்டுள்ள கருத்துகள் இன்று முஸ்லிம் சமூகத்துக்கு ஓரளவு நம்பிக்கையக் கொடுத்துள்ளது. அதாவது, ”நாட்டில் முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் இன்னுமொரு பிளவை ஏற்படுத்துவதற்கான சூழ்ச்சியாகும். முஸ்லிம்களை குறிவைத்து எடுக்கப்பட்ட நடவடிக்கைகளினால் நாட்டுக்கு அவப்பெயர் ஏற்பட்டுள்ளது.
முஸ்லிம்கள் பொறுமையாகவும் அமைதியாகவும் இருந்து வருவதனால் அவப்பெயர் ஏற்படுகின்ற வேகம் குறைவடைந்து காணப்படுகின்றது. முஸ்லிம்களுக்கு எதிராக தம்புள்ளயில் ஆரம்பித்த நடவடிக்கைகள் இன்றுவரை தொடர்ந்து கொண்டிருக்கின்றது. இதனைக் கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கைகள் அவசியமாகும். இவ்வாறானதொரு நிலையில் நாட்டில் ஐக்கியத்தையும் அமைதியையும் ஏற்படுத்துவதற்கும் சட்ட உருவாக்கத்தை மேற்கொள்வதற்கும் அபிவிருத்திகளைச் செய்வதற்கும் ஒரு விசேட பொறிமுறையை ஜனாதிபதி ஏற்படுத்த வேண்டும். என அவர் ஆக்ரோஷப்பட்டுக் கருத்துத் தெரிவிக்கையில் அமைச்சர் ஹக்கீமோ மேலாதிக்கச் சிந்தனை உள்ளோரின் எதிர்பார்ப்பை நிறைவேற்றவே முயற்சிப்பது தெட்டத் தெளிவாகிறது என்றே கருத முடியும். எனவே அமைச்சர் ஹக்கீமின் அறிக்கைகள் என்பது இன்று அர்த்தமற்ற அங்கீகாரத்துக்குள்ளாகி உள்ளன என்பது மட்டும் நிச்சயம்.
இதேவேளை, இலங்கை முஸ்லிம்களுக்கு எதிரான பெளத்த அடிப்படைவாதக் குழுக்களின் தாக்குதல்கள் அதிகரித்து வருவதாகவும் அதனைத் தடுப்பதற்கு அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் சும்மா சாட்டுக்காக கருத்து வெளியிட்டிருந்த ரவூப் ஹக்கீம், கொழும்பு ஹவ்லொக் மைதானத்தில் இடம்பெற்ற இலங்கை - சீன தாய்பே அணிகளுக்கு இடையிலான ரக்பி ஆட்டத்தின் போது அந்த விளையாட்டு மைதான பெவிலியனில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் அனைத்தையும் மறந்த நிலையில் மனம் விட்டு கலகலப்பாகப் பேசி சிரித்துக் கொண்ருந்த படம் ஒன்றினை ஆங்கிலப் பத்திரிகை ஒன்று ”ரோம் எரியும் வேளையில்” என்ற தலைப்பில் வெளியிட்டுக் கேலி செய்திருந்தது. ஆனால் அது கேலிக்குரிய விடயம் மட்டுமல்ல. முஸ்லிம்களைப் பொறுத்த வரையில் கேள்விக்குரிய விடயம் என்றே கூறலாம்.
0 comments :
Post a Comment