Monday, April 29, 2013

டக்ளஸ் தேவானந்தாவுக்கு பகிரங்க மடல்

300 வரையான உள்ளுர் நோயாளிகளுக்கு உணவு வழங்கும் பொறுப்பில் உள்ள யாழ்ப்பாணம் ஆஸ்பத்திரி உணவகம் (கன்ரீன்) என்ன நிலையில் நடக்கிறது என்று தெரியுமா? 12 சமையல் பணியாளர்கள் நியமனம் செய்யக்கூடிய இடத்தில் 6 பேர் மட்டும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இந்த 6 பேரிலும் இரவுக்கடமை, விடுமுறை, சிறுவிடுப்பு நேரங்களில் 2 அல்லது 3 பணியாளர்கள் மட்டுமே சகல நோயாளர்களுக்கும் உணவு பரிமாற வேண்டி ஏற்படுகிறது. இதனால் நோயாளிகளுக்கு சரியான கவனிப்பு கிடைக்காமல் அவர்கள் அவதிப்பட வேண்டியுள்ளனர்.

இதனை விட ஜப்பானிய அரசாங்கத்தால் பல மில்லியன் ரூபா பணம் செலவு செய்து கட்டப்பட்ட நவீன மருத்துவமனை அமைந்துள்ள ஆஸ்பத்திரி வளாகத்திலே உணவகத்தின் நிர்வாகப் பணியாளர்களின் நிலமை இவ்வாறு இருக்கும்போது, உணவகத்தின் நிலமை இதனை விட வெட்கக்கேடானது.

இவ்வுணவகமானது சிறிய மழைக்குக்கூட ஒழுகும் நிலையில் உள்ளது. ஒழுகும் மழை நீரால் உணவகத்தினதும், நோயாளர்களினதும் சுகாதாரம் பாதிக்கப்படுகிறது. கடந்த 03 வருடமாக இதே நிலமையிலேயே இது உள்ளது. மழை பெய்யும் போது அவர்களிடம் சென்று முறையிட்டால் கூரையை உடனடியாக மாற்றுவதாக கூறுவார்கள் பிறகு கண்டுகொள்ள மாட்டார்கள்.

இதனை விட சகல நோயாளிகளுக்கும் தயாரிக்கப்படும் உணவுக்கான மிளகாய்த்தூளை இன்று வரை அவர்கள் உரலில் இட்டு இடித்து தான் பயன்படுத்துகிறார்கள். மிளகாய்த்தூள் இடிக்கும் பணியில் சென்ஜோன்ஸ் அம்புலன்ஸ் படைப்பிரிவை சேர்ந்த 15 – 16 வயது மாணவர்களே (சாரணர்கள்)ஈடுபடுகின்றார்கள்.

யாழ் மாவட்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை தலைவராக கொண்ட யாழ்ப்பாண ஆஸ்பத்திரியில் நோயாளருக்கான உணவு விடுதியில் தெரிந்தே விடப்பட்டுள்ள குறைபாடுகளை மக்கள் ஊழலாகவே கருதுகிறார்கள். தமிழ் மக்களுக்கு வேலைவாய்ப்பை பெற்றுத்தருவதாகவும், மீள்கட்டுமானத்தை செய்வதாகவும் பீற்றிக்கொள்ளும் டக்ளஸ் தேவானந்தா தனது அதிகாரத்திற்கு உட்பட்ட யாழ் ஆஸ்பத்திரியில் சமையலறை பணியாளர் வெற்றிடத்தை நிரப்பாமல் இருப்பது ஏன்? கடந்த 3 வருடமாக ஒழுகும் கூரையை திருத்தாமல் இருப்பது ஏன்? சென்ஜோன்ஸ் அம்புலன்ஸ் பிரிவு சாரணர்கள் உருவாக்கப்பட்ட நோக்கம் யாழ்ப்பாண ஆஸ்பத்திரியில் மிளகாய்த்தூள் இடிப்பதற்காகவா என்று மக்கள் கேள்வி எழுப்புகின்றார்கள்.

இந்த நிலையில் ஜப்பான்காரன் என்ன அமெரிக்கா உட்பட அகில உலகமே வந்து அபிவிருத்திக்காக பாடுபட்டாலும் ஒன்றும் நடக்காது. ஊழல் அற்ற நிர்வாகம் ஒன்று ஏற்படும் வரை வடக்கை பொறுத்தவரை எல்லாமே கானல் நீர்தான்.

இவ்வண்ணம்
வி.சகாதேவன்
தலைவர்
போரால் பாதிக்கப்பட்ட மக்கள் இயக்கம்.


0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com