Monday, February 25, 2013

திரு பொன்னம்பலம் சண்முகலிங்கம் அவர்கள் கனடாவில் காலமானார்.

1944 ஆண்டு ஜூன் 23ம் திகதி கரவெட்டியில் பிறந்த பொன்னம்பலம் சண்முகலிங்கம் அவர்கள் தனது சிறுவயதில் நேரடியாகக் கண்ணுற்ற மோசமான அநியாயமான சம்பவங்களால் மிகவும் பாதிப்படைந்து அவற்றுக்கெதிராகக் குரல் கொடுக்கவும் போராடவும் புறப்பட்டார்.

இவருடைய இளம் பராயத்தில் தமிழ் பேசும் இலங்கையரின் தானைத் தலைவராக ஈழத்துக் காந்தி தந்தை செல்வநாயகம் இருந்தார். செல்வநாயகத்தின் அரசியலோ சிங்கள வெறுப்பை அடிப்படையாகக் கொண்ட இனவாதத்துள் பிறந்து. யாழ்ப்பாண நடுத்தர வர்க்க தமிழர்களை மட்டுமே பிரதிநிதித்துவப்படுத்தியது. பரந்த மனிதம் தழுவிய கருத்தியல் செல்வநாயகம் அறியாத ஒன்று. ஒரு பிரிட்டிஷ் விசுவாசியான செல்வநாயகம் இலங்கை வரலாற்றிலேயே மோசமான இனவாதக் கட்சியான UNPயுடன் உறவாக இருந்தார். N.M பெரேரா, கொல்வின் R.D.சில்வா, பீற்றர் கெனமன், சண்முகதாசன் போன்றவர்களுக்கு இருந்த சிந்தனை விருத்தி, ஒரு சாதாரண மேடைப்பேச்சைக் கூட நிகழ்த்த முடியாத செல்வநாயகத்துக்கு இருக்கவில்லை. இதனைக் கண்ணுற்ற சண்முகலிங்கம் அவர்கள் லங்கா சமசமாஜக் கட்சியில் முழு நேர தொண்டனாக சேர்ந்தார். அமிர்தலிங்கம் முதல் ஆனந்தசங்கரி வரை ஆரமபத்தில் லங்கா சமசமாஜக் கட்சியில்தான் சேர்ந்திருந்தனர். ஆனால் இவர்கள் அனைவரும் பின்னர் இனவாதச் சகதியினுள் விழுந்து விட இனவாத அரசியலை முற்றாக நிராகரித்த சண்முகலிங்கம் அவர்கள் அன்றைய காலகட்டத்தில் இலங்கையில் மிகவும் பாதிக்கப்பட்டிருந்த மலையக மக்களுக்காக தன்னலம் பாராது உழைத்தார். ஜெயவர்த்தன அரசினால் 1977ல் திட்டமிட்டு ஏற்படுத்தப்பட்ட இனக்கலவரத்தினால் மோசமாகப் பாதிக்கப்பட்டு அநாதரவாக வன்னிக்குத் துரத்தப்பட்ட மலையக மக்களுக்காக இராஜசுந்தரம், சந்ததியார், சுந்தரம் போன்றவர்களுடன் சேர்ந்து காந்தீய அமைப்பு மூலம் அகதிகளான மலையக மக்களின் விடிவுக்காக பணியாற்றினார்.

முற்போக்கு சிந்தளையும் தெளிவான அரசியல் பார்வையும் கொண்ட சண்முகலிங்கம் அவர்கள் 1981ல் சந்ததியாரை கொழும்புக்கு அழைத்துச் சென்று சண்முகதாசனை அறிமுகம் செய்து வைத்தார். எண்பதுகளில் கைதாகி சிறைவாசமும் அனுபவித்தார். சிறையிலிருந்து வெளிவந்தபின்னர் தமிழ்நாடு சென்று புளொட் இயக்கத்திற்குள் ஏற்பட்ட பிரச்சனைகளால் வெளியேறி தவித்த இளைஞர்களுக்கு உதவி செய்தார். ஞானசேகரம் (பரந்தன் ராஜன்) , தேவானந்தா (டக்லஸ்), அற்புதன் போன்றவர்களுடன் சேர்ந்து ENDLF என்ற இயக்கத்தை உருவாக்கினார்.

கனடாவுக்குப் புலம் பெயர்ந்த பின்னர் மித்திரன், மயில், கருமையம் சபேசன், மனவெளி செல்வன் போன்றவர்களுடன் இணைந்து தேடகம் அமைப்பிலும் தீவிரமாகப் பங்காற்றினார். மிகவும் நேர்மையாக பொதுப்பணத்தை கையாள்வதிலும், கொள்கைகளை ஒரு போதும் விட்டு கொடுக்காது போராடுவதிலும் எந்தவித சுய இலாபமும் இல்லாத ஏராளமான பொது காரியங்களில் சிரத்தையோடு ஈடுபடுவதிலும் சண்முகலிங்கம் அவர்கள் முன்னணியில் திகழ்ந்தார்.

புலிகளினது மாபியா அரசியல் தமிழ் மக்களை படுகுழியில் விழுத்திவிடும் என்பதில் மிகவும் தெளிவான சிந்தனை கொண்டிருந்த சண்முகலிங்கம் அவர்கள் புலிகளை துணிகரமாக வெளிப்படையாகவே விமர்சித்திருந்தார். எந்த விதமான பணமோ புகழோ கருதாது மாற்று கருத்துக்கள் வெளிப்படுத்தும் உரிமை மதிக்கப்பட வேண்டும் என்பதற்காக பல்வேறு எதிர்ப்புகளுக்கும் மத்தியிலும் டென்மார்க் பாரதி பாலனின் "சமரசபூமி" நூல் வெளியீட்டுவிழாவை கனடாவில் நடாத்திய பெருந்தகைதான் சண்முகலிங்கம் அவர்கள்.

நாளொரு அமைப்பும்,பொழுதொரு பிழைப்புமாக புறம்போக்குத் தமிழர்களும் முஸ்லீம்களும் பணத்திற்காகவும் புகழிற்காகவும் பிழையென தெரிந்துகொண்டும் சரியென நியாயப்படுத்துகையில், தங்களது சுயநலத்துக்காக கொள்கைகளை காற்றில் பறக்க விடுவோர் மலிந்துபோன காலகட்டத்தில் சுயமாக சிந்தித்து இறுதி வரை வாழ்ந்த சண்முகலிங்கம் அவர்கள் ஒரு ஒளிவிளக்காக கொள்கை குன்றமாக திகழ்ந்தவர்.

நீண்ட காலம் நோய்வாய்ப்பட்டிருந்த சண்முகலிங்கம் அவர்கள் கடந்த 22ம் திகதி டொராண்டோவில் காலமானார்.

அவரின் இறுதி மரியாதைகள் பற்றிய விபரங்களிற்கு

647-878-2478 அல்லது 416-431-0718 என்ற தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளவும்.


- சி.கந்தசாமி




2 comments :

Anonymous ,  February 25, 2013 at 8:04 PM  

ஐயா உங்க ஆத்தமா சாந்தியடைய
என் பிராத்தணைகள்!!! உங்கள் பிரிவால் கலங்கும்......
N N VIDEO LTD (TUXEDO COURT )

Anonymous ,  February 25, 2013 at 10:46 PM  

Shan was an honest gentleman with a very kind personality. He really lived for others. Truly a very humble but brave person.
We really miss you!

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com