Friday, January 11, 2013

ஷிராணியை விரட்டும் தெரிவுக்குழு அறிக்கை 106 மேலதிக வாக்குகளால் நிறைவேறியது.

பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்க மீதான குற்றப்பிரேரணை தொடர்பில் பாராளுமன்றில் சமர்பிக்கப்பட்டுள்ள தெரிவுக்குழு அறிக்கை குறித்து இன்று இறுதிக்கட்ட விவாதம் இடம்பெற்றது. இன்று பகல் ஒரு மணிக்கு பாராளுமன்றம் சபாநாயகர் சமல் ராஜபக்ஷ தலைமையில் கூடி இறுதி விவாதம் இடம்பெற்று மாலை வாக்கெடுப்பு இடம்பெற்றது.

இந்த வாக்கெடுப்பில் ஷிராணி பண்டாரநாயக்கவுக்கு எதிரான குற்றப்பிரேரணை 106 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.

தெரிவுக்குழு அறிக்கைக்கு ஆதரவாக 155 வாக்குகளும் எதிராக 49 வாக்குகளும் பெறப்பட்டன.

ஐதேக, ததேகூ அறிக்கையை எதிர்த்து வாக்களித்தது.

பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்க மீது 14 குற்றச்சாட்டுக்களை சுமத்தி ஆளும் கட்சி உறுப்பினர்கள் 117 பேர் கையெழுத்திட்டு குற்றப்பிரேரணை ஒன்றை பாராளுமன்ற சபாநாயகரிடம் கடந்த நவம்பர் மாத இறுதியில் கையளித்தனர்.

பின்னர் அது குறித்து பாராளுமன்றில் ஆராயப்பட்டு குற்றப்பிரேரணையை விசாரிக்க பாராளுமன்றத் தெரிவுக்குழு அமைக்கப்பட்டது.

தெரிவுக்குழுவில் 11 பேர் உள்ளடக்கப்பட்டனர். ஐதேக 2, ததேகூ 1, ஜதேகூ 1, ஐமசுமு 7 என உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டனர்.

அதன்படி ஷிராணி பாராளுமன்றக் கட்டடத் தொகுதிக்கு அழைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. விசாரணை இடையில் ஷிராணி தனது சட்டத்தரணிகளுடன் வெளிநடப்பு செய்தார். அதற்கு காரணம் தெரிவுக்குழுவில் உள்ள அரசு கட்சி உறுப்பினர்கள் தன்னை அவமதிக்கும் வகையில் வார்த்தைப் பிரயோகங்களை செய்ததாக ஷிராணி குற்றம் சுமத்தினார். இது குறித்து சபாநாயகருக்கு கடிதம் ஒன்றையும் அனுப்பினார்.

ஷிராணி தெரிவுக்குழுவில் இருந்து வெளியேறிய போது எதிர்கட்சி உறுப்பினர்களும் வெளியேறினர்.

எனினும் அரசு கட்சி உறுப்பினர்கள் சாட்சிகளை அழைத்து விவசாரணையை நிறைவு செய்து அறிக்கை தயாரித்து மறுநாளே பாராளுமன்றில் சமர்பித்தனர்.

14 குற்றச்சாட்டுக்களில் 5 குற்றச்சாட்டுக்கள் விசாரிக்கப்பட்டு அதில் மூன்றில் ஷிராணி குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார். இரண்டு குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்படவில்லை.

இந்த நிலையில் பாராளுமன்றத் தெரிவுக்குழு அறிக்கையை சவாலுக்கு உட்படுத்தி பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்க மேன்முறையீட்டு நீதிமன்றில் மனு தாக்கல் செய்திருந்தார்.

ஷிராணியின் மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட மேன்முறையீட்டு நீதிமன்றம் பாராளுமன்றத் தெரிவுக்குழு உறுப்பினர்களுக்கு அழைப்பாணை விடுத்தது.

எனினும் பாராளுமன்றில் விவாதம் இடம்பெற்று அதில் எடுக்கப்பட்ட இறுதி தீர்ப்பின்படி நீதிமன்றில் அழைப்பாணையை ஏற்றுக் கொள்ள முடியாது என சபாநாயகர் அறிவித்துவிட்டார்.

எனினும் நீதிமன்றம் மீண்டும் தெரிவுக்குழு உறுப்பினர்களுக்கு அழைப்பாணை விடுத்ததோடு பாராளுமன்றத் தெரிவுக்குழு குறித்து உயர் நீதிமன்றிடம் வியாக்கியானம் கோரியிருந்தது.

நீதிமன்றம் விடுத்த அழைப்பை ததேகூ, ஜதேகூ உறுப்பினர்கள் ஏற்று நீதிமன்றில் ஆஜரான நிலையில் ஐமசுமு, ஐதேக என்பன நீதிமன்ற அழைப்பாணையை மறுத்து ஆஜராகவில்லை.

இந்நிலையில் உயர் நீதிமன்றில் வியாக்கியானத்தை மேன்முறையீட்டு நீதிமன்றம் அறிவித்தது.

அதாவது பாராளுமன்ற கட்டளைகள் சட்டம் இல்லை என்பதால் பிரதம நீதியரசரை விசாரணை செய்து தண்டனை வழங்கும் ஆணை, அதிகாரம் பாராளுமன்றம் தெரிவுக்குழுவிற்கு கிடையாது என அந்த வியாக்கியானத்தில் தெரிவிக்கப்பட்டது. இதனால் பாராளுமன்றத் தெரிவுக்குழு அறிக்கை செல்லுபடியற்றது என அறிவித்து நீதிமன்றம் அதனை இரத்து செய்துள்ளது.

இதற்கிடையில் பாராளுமன்றமா? நீதிமன்றமா? நாட்டில் மீயுயர் அதிகாரம் கொண்டது என்ற போட்டி நாட்டில் ஏற்பட்டுள்ள நிலையில் ஷிராணிக்கு ஆதரவாகவும் எதிராகவும் குற்றப்பிரேரணைக்கு ஆதரவாகவும் எதிராகவும் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெறுகின்றன.

இவை எல்லாவற்றுக்கும் மத்தியில் குற்றப்பிரேரணை குறித்த தெரிவுக்குழு அறிக்கை பாராளுமன்றில் 10ம் 11ம் திகதிகளில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு இன்று (11) மாலை வாக்கெடுப்பு இடம்பெற்றது.

வாக்கெடுப்பில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையில் தெரிவுக்குழு அறிக்கை நிறைவேற்றப்பட்டமையின் காரணமாக ஷிராணி பண்டாரநாயக்கவை பிரதம நீதியரசர் பதவியில் இருந்து நீக்கும் அதிகாரம் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு உண்டு. அவரும் அதனை செய்வார். காரணம் அரசுதான் குற்றப்பிரேரணையை முன்வைத்தது.

இறுதியில் ஷிராணி பண்டாரநாயக்க பதவியில் இருந்து நீக்கப்படுவார். அதன்பின் புதிய பிரதம நீதியரசர் நியமிக்கப்படுவார். புதிய நீதியரசரை ஏற்றுக் கொள்ள மாட்டோம் என இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் அறிவித்துள்ளது.

ஆக நாடு தொடர்ந்தும் பிரச்சினைக்கு மேல் பிரச்சினையில் தள்ளப்படும். இதன் விளைவு எங்கு சென்று முடியும் என யார் அறிவாரோ...?

(அத தெரண தமிழ்)

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com