Thursday, November 1, 2012

ஐ.நா வின் மனித உரிமை பேரவை அமர்வில் இலங்கைக்கு பெரும் பாராட்டு.

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையின் 14ம் அகில கால பேரமர்வுகளின் போது இன்று ஐரோப்பிய நேரம் 14.30 மணிக்கு இலங்கை தனது தரப்பு நியாயங்களை யுத்தத்தின் பின்னர் இனநல்லிணக்கம் , முன்னாள் புலிகளை புனரமைத்தல் , யுத்தத்தால் உள்நாட்டில் இடம்பெயர்ந்தவர்கள் மீளமர்த்தல் , அரசியல் தீர்வொன்றுக்கான முன்னெடுப்பு உட்பட்ட பல காரணிகளை தொகுத்து முன்வைத்தது.

அமர்வுகளில் இலங்கை சார்பாக கலந்து கொண்ட இராஜதந்திரிகள் குழுவிற்கு தலைமை தாங்கிய மனித உரிமைகளுக்கான ஜனாதிபதியின் விசேட தூதுவர் மஹிந்த சமரசிங்க சுமார் ஒரு மணி நேரம் உரையாற்றினார்.

அமைச்சரின் உரையை அடுத்து கலந்து கொண்ட நாடுகளின் பிரதிநிதிகளுக்கு இலங்கை தொடர்பான தமது நாடுகள் கொண்டுள்ள நிலைப்பாடுகளை தெரிவிப்பதற்கு இடமளிக்கப்பட்டது. அங்கு பேசிய பெரும்பாலான நாடுகள் இலங்கை பயங்கரவாதத்தை வெற்றிகொண்டு மேற்கொண்டுவரும் பணிகளையிட்டு பெரும் பாராட்டுதல்களைத் தெரிவித்தமையை கீழே உள்ள வீடியோவில் கேட்கலாம்.அங்கு பேசிய அமைச்சர் இலங்கை அரசாங்கம், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு மற்றும் சிவில் சமூக குழுக்களின் அறிக்கைகளை ஆராய்ந்து இதனடிப்படையில் மதீப்பீடு அமையும் எனவும் கடத்தல்கள், காணாமல் போதல்கள் தொடர்பில் விசாரணை நடாத்த தேசியப் பொறிமுறைமையொன்று உருவாக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 20 ஆண்டு காலப்பகுதியில் காணாமல் போதல்கள் 5600 சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகத் தெரிவித்துள்ள அமைச்சர் காணாமல் போனவர்கள் பற்றிய உண்மையான தகவல்களை அறிந்து கொள்வதற்கு வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்கள் பற்றிய தகவல்கள் அவசியமானவை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறெனினும், ஏனைய சம்பவங்கள் தொடர்பில் விசாரணை நடத்தப்படும் என தெரிவித்துள்ள அவர் பொதுமக்கள் மீது அரசாங்கத் தரப்பு தாக்குதல் நடத்துவதாக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கள் முற்றிலும் உண்மைக்கு புறம்பானவை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும மனித உரிமை உறுதிப்படுத்தல் மற்றும் மேம்படுத்தல் தொடர்பில் உள்நாட்டு ரீதியான நடவடிக்கைகளுக்கு சந்தர்ப்பம் அளிக்கப்பட வேண்டுமென வேண்டுதல் விடுத்துள்ள அமைச்சர் சமரசிங்க இலங்கையின் மனித உரிமை நிலைமைகளை தனிமைப்படுத்த மதிப்பீடு செய்யக் கூடாது எனவும், கள நிலவரங்கள் காலச் சூழ்நிலைகளின் அடிப்படையில் மனித உரிமை நிலைமைகளை கவனத்திற் கொண்டு தீர்மானங்கள் எடுக்கப்பட வேண்டுமெனவும் கேட்டுக்கொண்டுள்ளார்:

இலங்கையில் மனித உரிமையை மேம்படுத்துவது தொடர்பில் அனைத்து தரப்பினருடனும் இணைந்து ஒத்துழைப்புடன் செயற்படத் தயார் என கூறியுள்ள அவர் இலங்கையின் தற்போதைய நிலைமைகள் குறித்து 99 நாடுகளும் காட்டி வரும் கரிசனை பாராட்டுக்குரியது என அவர் தெரிவித்துள்ளார்.

2008ம் அமர்வுகளில் உறுதியளிக்கப்பட்டது போன்று மனித உரிமை தொடர்பில் தேசிய செயற்திட்டமொன்று உருவாக்கப்பட்டுள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தொழிலாளர்களின் உரிமைகள், கைதிகளின் உரிமைகள், இடம்பெயர் மக்களின் உரிமைகள், மகளிர் உரிமைகள், சிறுவர் உரிமைகள், சட்டவிரோத குடியேற்றங்களை தடுத்தல், மனித உரிமை மீறல்கள் தொடர்பில் காவல்துறையினருக்கு பயிற்சி அளித்தல் உள்ளிட்ட பல்வேறு வழிகளில் மனித உரிமைகளை மேம்படுத்த தேசிய செயற்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

யுத்தம் இடம்பெற்ற உலகின் ஏனைய நாடுகளைப் போன்றே இலங்கையிலும் யுத்தத்தின் பின்னர் பல்வேறு காரணிகள் தொடர்பில் கவனம் செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

மனிதாபிமான உதவிகளிலிருந்து, அபிவிருத்தி உதவிகளுக்கு இடம் நகர்வதற்கு போதியளவு கால அவகாசம் வழங்கப்பட வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.

நாட்டில் மெய்யான நல்லிணக்கத்தை ஏற்படுத்த அரசாங்கம் பல்வேறு வழிகளில் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

கருத்து சுதந்திரத்தை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மீது அடக்குமுறைகள் பிரயோகிக்கப்படுவதாக சுமத்துவதனை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.1 comments :

Anonymous ,  November 2, 2012 at 7:47 PM  

Well done Srilanka.

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com