Wednesday, October 31, 2012

தமிழ்நாட்டின் 20 மாவட்டங்களில் விடிய விடிய மழை: பள்ளிகளுக்கு விடுமுறை

வங்க கடலில் உருவான நீலம் புயல் இன்று மாலை சென்னை அருகே கரையை கடக்கிறது. இதன் காரணமாக தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்களிலும், உள் மாவட்டங்களிலும் கனமழை பெய்து வருகிறது.

சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர், கடலூர், நாகை, திருவாரூர், தஞ்சை, விழுப்புரம், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், கரூர், புதுக்கோட்டை, அரியலூர், உள்பட 20 மாவட்டங்களில் விடிய விடிய மழை கொட்டியது.

நாகை மாவட்டம் வேதாரண்யம் பகுதியில் பலத்த சூறை காற்றுடன் மழை பெய்து வருகிறது. இதனால் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. மழை காரணமாக வேதாரண்யத்தில் மின்வெட்டு ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. அவர்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் முடங்கி கிடக்கிறார்கள்.

தஞ்சையில் சூறை காற்றுடன் மழை பெய்து வருகிறது. இதனால் பஸ் நிலையம் - மார்க்கெட் பகுதிகளில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

தஞ்சை மாவட்டத்தில் மழையால் 12 ஆயிரம் ஏக்கர் சம்பா பயிர்கள் தண்ணீரில் அழுகும் அபாயம் உள்ளது. இதனால் விவசாயிகள் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் மழை தண்ணீரை வடிய வைக்கும் ஈடுபட்டு வருகின்றனர்.

மழைவெள்ள முன்னேற்பாடு பணிகளை மாவட்ட நிர்வாகம் சார்பில் முடுக்கி விடப்பட்டுள்ளது. குறிப்பாக ஏரி- குளம்- வாய்க்கால் உடைப்பை சீரமைக்க மணல் மூட்டைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

தஞ்சை மாவட்டத்தில் அதிராம்பட்டினம், மல்லிபட்டினம், சேதுபாவாசத்திரம் ஆகிய கடலோர பகுதிகளில் கடல் சீற்றத்துடன் காணப்பட்டது. இதனால் மீனவர்கள் இன்று 4- வது நாளாக கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.

திருச்சி மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்த வண்ணம் உள்ளது. மணப்பாறை, துறையூர், முசிறி, தொட்டியம், தா.பேட்டை, ஜீயபுரம், லால்குடி பகுதிகளில் பெய்த இடைவிடாத மழையால் வயல்களில் தண்ணீர் தேங்கியுள்ளது.

பலத்த காற்று வீசியதால் வாழைகள் சாய்ந்தன. மேலும் சாலைகளில் மிகப்பெரிய பள்ளங்கள் ஏற்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பொதுமக்கள் வெளியே வரமுடியாமல் வீடுகளுக்குள் முடங்கினர்.

கடலோர மாவட்டமான புதுக்கோட்டையில் 5-வது நாளாக மழை நீடித்து வருகிறது. கோட்டைபட்டினம், ஜெகதாபட்டினம், முத்துக்குடா, புதுப்பட்டினம், மீமிசல் ஆகிய பகுதிகளில் கடல் மிகவும் சீற்றமாக காணப்பட்டது.

நேற்று இரவு முதல் பலத்த காற்று வீசி வருகிறது. இதனால் கடலில் ராட்சத அலைகள் உருவானது. நள்ளிரவு முதல் மாவட்டம் முழுவதும் கன மழை பெய்து வருகிறது. 6-வது நாளாக 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.

கரூர் மாவட்டத்தில் கரூர், அரவக்குறிச்சி, தோகைமலை, குளித்தலை, லாலாப்பேட்டை உள்பட அனைத்து பகுதிகளிலும் நேற்று மாலை முதல் இடைவிடாது மழை கொட்டி வருகிறது. தாழ்வான குடியிருப்பு பகுதிகளில் மழை நீர் குளம்போல் தேங்கியுள்ளது.

அரியலூர் மாவட்டத்தில் அரியலூர், உடையார்பா ளையம், திருமானூர், ஜெயங் கொண்டம் உள்ளிட்ட பகுதிகளில் விடிய, விடிய கன மழை பெய்தது. இன்று காலையும் மழை தொடர்கிறது.

பெரம்பலூர் மாவட்டத்திலும் பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது. சேலம் மாவட்டத்தில் நேற்று மாலை தொடர்ந்து இடைவிடாமல் விடிய, விடிய பெய்து கொண்டே இருந்தது. தற்போதும் மழை தொடர்ந்து தூறிக் கொண்டே இருக்கிறது.

மழை விடிய, விடிய பெய்தது. தொடர்ந்து பலத்த காற்றுடன் மழை கொட்டி வருகிறது.

இந்த மழையின் காரணமாக ஏற்காடு நகரமே நேற்று மின்சாரம் இல்லாமல் இருளில் மூழ்கியது. மலைப்பாதையில் வாகனங்கள் முகப்பு விளக்கை போட்டுக் கொண்டு மெதுவாக இயக்கப்பட்டு வருகிறது.

மலைப்பாதையில் ஏதாவது மண் சரிவு ஏற்படுகிறதா? என்றும் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.

நாமக்கல் மாவட்டத்தில் நேற்று மாலை முதல் விடிய, விடிய மழை பெய்து கொண்டே இருந்தது. இன்று காலையும் மழை விடாமல் கொட்டி வருகிறது. கொல்லிமலை பகுதியிலும் மழை தீவிரமாக பெய்து வருகிறது. நிலச்சரிவு ஏற்படுகிறதா? என்று அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.

தர்மபுரி - கிருஷ்ணகிரி மாவட்டத்திலும் விடிய, விடிய சாரல் மழை பெய்தது. மழை காரணமாக ஓசூர் பகுதியில் ரோஜா மலர்கள், மற்றும் கொய்மலர்கள் பாதிக்கப்பட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்தில் விடிய, விடிய பலத்த மழை பெய்தது. பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தேனி மாவட்டத்தில் இன்று காலை மேகமூட்டமாக காணப்பட்டது. அவ்வப்போது லேசாக மழை தூறி வருகிறது.

பெரியாறு அணை நீர் பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இதனால் அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com