Friday, October 19, 2012

இலங்கை ம. உ. ஆ.விற்கு சமர்ப்பித்த அறிக்கை தொடர்பான ஆராய்வு நவம்பர் 1-5! ஜெனீவாவில்!

ஜெனீவாவிலுள்ள மனித உரிமைகள் ஆணைக்குழுவில் நவம்பர் 1ம் திகதி முதல் 5ம் திகதி வரை, இலங்கை யினால் மனித உரிமைகள் ஆணைக் குழுவிற்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ள அறிக்கை தொடர்பில் ஆராயப்படவுள் ளதாகவும், இக்கூட்டத் தொடரால் அரசாங்கத்திற்கு எந்தவொரு வகையிலும் பாதகமாக அமையாது என வெளிவிவகார அமைச்சின் செயலாளர் கருணாதிலக்க அமுனுகம தெரிவித்துள்ளார்.

யு.பி.ஆர். எனப்படும் சர்வதேச தவணைமுறை மீளாய்வுக் கூட்டத் தொடரில் இலங்கை சார்பில் அமைச்சர் மஹிந்த சமரசிங்க கலந்து கொள்வதுடன் இவருக்கு மேலதிகமாக விசேட குழுவொன்று ஜெனீவா செல்ல தயாராக விருப்பதாகவும் அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்

ஐக்கிய நாடுகள் சபையில் உறுப்புரிமை பெற்றுள்ள நாடுகள் நான்கு வருடங்களுக்கு ஒரு தடவை மேற்படி யு.பி.ஆர். கூட்டத் தொடருக்கு சமுகம் அளிப்பது வழக்கம். அந்த வகையிலேயே இலங்கை அரசாங்கம் சார்பிலான பிரதிநிதிகளும் நவம்பர் முதலாம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ள கூட்டத் தொடரில் கலந்து கொள்ளும் வகையில் ஜெனீவா நோக்கி பயணம் செய்யவுள்ளனர்.

இக்கூட்டத் தொடர் குறித்த சரியான விளக்கம் கொண்டிராத பல்வேறு ஊடகங்கள் மனித உரிமைகள் ஆணைக்குழு அரசாங்கப் பிரதிநிதிகளை வரவழைத்திருப்பதாகவும் இதனால் இலங்கை அரசாங்கம் நெருக்கடிக்கு முகம் கொடுக்கவிருப்பதாகவும் தவறான செய்திகளை பிரசுரித்து வருகின்றன. இவ்வாறான செய்திகளில் எவ்வித உண்மையும் இல்லை எனவும் செயலாளர் அமுனுகம மறுப்புத் தெரிவித்தார்.

யு.பி.ஆர். கூட்டத் தொடர் என்பது ஐ.நா. உறுப்புரிமை கொண்டுள்ள நாடுகளுக்கு ஒரு பரீட்சை போன்றதென்றே கூறலாம். இலங்கை இரண்டாவது தடவையாகவே எதிர்வரும் முதலாம் திகதி இக்கூட்டத் தொடரில் கலந்து கொள்கிறது. நீதியமைச்சின் செயலாளர் மற்றும் சட்டமா அதிபர் திணைக்களம் மீள்குடியமர்வு புனர்வாழ்வு பாதுகாப்பு அமைச்சு ஆகியவற்றின் பிரதிநிதிகள் அடங்கிய குழு இக்கூட்டத் தொடரில் தங்களது துறை சார்பில் விளக்கமளிப்பர்.

அபிவிருத்தி மற்றும் நல்லிணக்கம் நோக்கிய எமது பாதையில் ஏதேனும் திருத்தங்கள் செய்ய வேண்டியிருப்பின் இது எமக்கு சிறந்ததொரு வாய்ப்பாக அமையுமெனவும் வெளிவிவகார அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார் அத்துடன் இக்கூட்டத் தொடர் இலங்கை அரசாங்கத்திற்கு எந்த வகையிலும் பாதகமாக அமையாதென சுட்டிக்காட்டிய அவர் ,தற்போது இலங்கையினால் மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ள அறிக்கையில் கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகள் அமுல்படுத்தப்பட்டுள்ள விதம் ஆகியன தெளிவுபடுத்தப் பட்டுள்ளமையினால் இக்கூட்டத் தொடரில் பாரிய சிக்கல்கள் எதுவும் எழுவதற்கு வாய்ப்பில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com