Wednesday, September 12, 2012

லிபியாவில் அமெரிக்க தூதரகம் மீது தாக்குதல்! தூதுவர் உட்பட நால்வர் பலி!

இஸ்லாம் மார்க்கத்தையும், முஹம்மது நபியையும் கீழ்த்தரமாக சித்தரிக்கும் அமெரிக்க திரைப்படத்திற்கு கண்டனம் தெரிவித்து, லிபியா மற்றும் எகிப்து ஆகிய நாடுகளில் உள்ள அமெரிக்க தூதரகங்கள் மீது தாக்குதல்கள் மேறகொள்ளப்பட்டன. இத்தாக்குதலில், லிபியாவில் உள்ள அமெரிக்க தூதுவர் கொல்லப்பட்டார். மேலும் மூன்று தூதரக அதிகாரிகளும், கொல்லப்பட்டனர்.

இஸ்ரேலிய அமெரிக்கரான கலிபோர்னியாவை சேர்ந்த ஷாம் பேசிலி என்பவரும், புனித குர்ஆனை எரித்து சர்ச்சைக்குள்ளான புளொரிடாவை சேர்ந்த பாதிரியார் டெரி ஜோன்ஸ் என்பவரும், ஷஇனசன்ஸ் ஒப் முஸ்லிம்ஸ்| என்ற படத்தை தயாரித்துள்ளனர். இந்த படம் குறித்து, சமூக ரீதியில் பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில், எகிப்திலும் லிபியாவிலும் இந்த தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

நேற்றிரவு எகிப்து தலைநகர் கைரோவில் உள்ள அமெரிக்க தூதரகம் முன்னாலும், லிபியாவின் பெங்காசி நகரில் உள்ள அமெரிக்க தூதரகம் முன்னாலும் ஆயிரக்கணக்கான மக்கள் கூடி கோசங்களை எழுப்பினர். பலர் துப்பாக்கிகளையும் ஏந்தியிருந்தனர். பெங்காசியில் அமைந்துள்ள தூதரகம் மீது ரொக்கெட் குண்டுகளாலும், துப்பாக்கிகளாலும் தாக்குதல் நடாத்தியபடி திடிரென உள்ளே நுழைந்த போராளிகள், கடும் தாக்குதல்களை நடாத்தினர். அமெரிக்க கொடியை கிழித்து வீசியதோடு, தூதரகத்திற்கும் தீ வைத்தனர்.

இதனால் தூதரகத்தின் ஒரு பகுதி சேதமடைந்தது. இதனை தொடர்ந்து, அங்கிருந்த அமெரிக்க தூதுவர் கிறிஸ்டோபர் ஸ்ரீபன்ஸை பாதுகாக்க, அவரை ஊழியர்கள் ஒரு அறைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அந்த அறைக்குள் பரவிய கடும் புகை மூட்டத்தால் அவர் மூச்சு திணறி அவர் உயிரிழந்துள்ளார். அவருடன் இருந்த மூன்று ஊழியர்களும் கொல்லப்பட்டனர். இத்தாக்குதலில், தூதரக ஊழியர்கள பலர், காயமடைந்தனர்.

இத்தாக்குதலுக்கு, கொல்லப்பட்ட லிபியாவின் முன்னாள் தலைவர் கடாபியின் ஆதரவாளர்களான "இஸ்லாமி லோ சபோட்டர்ஸ்" என்ற அமைப்பு உரிமை கோரியுள்ளது. இந்நிலையில, இப்படத்தை தயாரித்த ஷாம் பேசிலி தலைமறைவாகியுள்ளார்.

இதேநேரம், எகிப்து தலைநகர் கைரோவில் ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள், அமெரிக்க தூதரகததிற்குள் நுழைந்து, அந்நாட்டின் கொடியை கிழித்தெறிந்து, கறுப்புக்கொடியை ஏற்றியுள்ளனர். செப்டெம்பர் 11 நியூயோர்க் தாக்குதல் நினைவு நாளில், இந்த சம்பவங்கள் இடம்பெற்றமை, குறிப்பிடத்தக்கது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com