Wednesday, April 18, 2012

புலிகளினால் விரட்டப்பட்ட முஸ்லிம்களுக்கு நியாயம் வேண்டும் – அஸ்வர் MP

யாழ்ப்பாணம் உள்ளிட்ட வடக்கு, கிழக்கு பகுதிகளில் வாழும் முஸ்லிம் மக்களின் உரிமைகளை பாதுகாப்பது குறித்து இந்தியா கவனம் செலுத்த வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம்.அஸ்வர் கோரிக்கை விடுத்துள்ளார்.

யுத்த காலத்தில் புலிகளினால் யாழ்ப்பாணத்தில் இருந்து முஸ்லிம் மக்கள் விரட்டப்பட்டதாகவும் ,இதனால் அந்த மக்களின் அடிப்படை உரிமை மீறப்பட்டதாகவும் அஸ்வர் எம்பி, இந்திய பாராளுமன்றக் குழுவை சந்தித்தபோது சுட்டிக்காட்டியுள்ளார்.

புலிகளினால் 48 மணித்தியாலங்களில் யாழ் குடாநாட்டிலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டனர். இவர்கள் இன்னமும் சிங்கள கிராமங்களில் தொடர்ந்தும் தங்கியுள்ளனர். இந்த இனச் சுத்திகரிப்புக்கு எதிராக எந்தவொரு தமிழ் தலைவர்களும் குரல்கொடுக்கவில்லை. வடக்கில் இருந்து புலிகளினால் விரட்டப்பட்டு தற்போது சிங்கள மக்களுடன் வாழ்ந்து வரும் முஸ்லிம் மக்கள் தங்களுடைய சொந்த இடங்களுக்குச் செல்ல வழி ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என அஸ்வர் எம்பி கூறியுள்ளார்.

இது தொடர்பில் இலங்கையில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் அஸ்வர் குறிப்பிட்டுள்ளார்.

யாழ் குடாநாட்டிலிருந்து புலிகளினால் வெளியேற்றப்பட்ட முஸ்லிம் மக்களுக்கும், இந்திய உதவியுடன் கட்டப்பட்டுவரும் 50 ஆயிரம் வீட்டுத் திட்டங்களில் வீடுகள் வழங்கப்பட வேண்டுமென பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம்.அஸ்வர் கேட்டுக்கொண்டார்.

நேற்றையதினம் பாராளுமன்றத்துக்கு விஜயம் செய்திருந்த இந்தியப் பாராளுமன்றக் குழுவினரைச் சந்தித்தபோதே அஸ்வர் இந்த வேண்டுகோளை முன்வைத்துள்ளார்.

இந்திய லோக்சபாவின் எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா சுவராஜ் தலைமையிலான இந்தியக் குழுவினருடனான சந்திப்பு பாராளுமன்றக் கட்டடத்தொகுதியின் குழு அறையில் நடைபெற்றது.

இந்தச் சந்திப்பில் பிரதி சபாநாயகர் சந்திம வீரக்கொடி, இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் அசோக்.கே.காந்தா, அரசாங்கத்தின் பிரதம கொரடா தினேஷ் குணவர்த்தன, எதிர்க்கட்சியின் பிரதம கொரடா ஜோன் அமரதுங்க, சஜித் பிரேமதாச, அமைச்சர் அநுரபிரியதர்ஷன யாப்பா, பிரதியமைச்சர் ஏ.ஆர்.எம். அப்துல் காதர், பிரதியமைச்சர் முத்துசிவலிங்கம், பாராளுமன்ற உறுப்பினர்களான இராஜரட்ணம், சுரேஷ் பிரேமச்சந்திரன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டருந்தனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com