இந்தியா ஏவியது ஏவுகணை! அமெரிக்கா நிரூபித்தது இந்தியா தன் எடுபிடி என்பதை.
நீண்டதூரம் செல்லும் தனது ஏவுகணையை இந்தியா அண்மையில் பரீட்சித்தது. இந்தியாவின் இந்நடவடிக்கையை சீன உள்ளிட்ட பல நாடுகள் விமர்சித்திருக்கின்றன. ஆனால் அமெரிக்க வெளியுறவுத்துறை இந்த ஏவுகணை நடவடிக்கையை கண்டும் காணமல்போகும் போக்கை கடைப்பிடித்து வருகின்றது.
அமெரிக்க வெளிவிவகாரத்துறை அதிகாரி ஒருவர், புதன்கிழமை , வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் பேசுகையில், இந்த நடவடிக்கை குறித்து அமெரிக்கா பெரிதும் கவலை கொள்ளவில்லை என்று கூறினார். ஏனெனில், இந்தியா, அணு ஆயுதப்பரவல் விஷயத்தில், நல்ல வகையில் செயல்பட்டிருக்கிறது என்று கூறியுள்ளார்.
வடகொரியா, இரான் போன்ற நாடுகள் இதே போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டால், அதைக் கண்டிக்கத் தயங்காத அமெரிக்கா, இந்தியா அதைச் செய்யும்போது, அதே போன்ற நிலைப்பாட்டை எடுக்காதது , இந்தியா அமெரிக்காவின் எடுபிடி என்பதை வெளிப்படையாக காட்டியுள்ளது.
இந்தியா மீதான விமர்சனங்கள் சரியல்ல என்று கூறும் இந்திய வெளிவிவகாரத்துறையின் முன்னாள் செயலர், நீலகண்டன் ரவி, இந்தியாவை, இரான் , வடகொரியா போன்ற நாடுகளோடு ஒப்பிடுவது தவறு என்கிறார்.
1957லிருந்தே இந்தியா அணுஆயுதப்பரவலை எதிர்த்து வந்திருக்கிறத என்று கூறும் ரவி, இந்தியாவின் உள் நாட்டு சட்டங்கள் சர்வதேச அணு ஆயுதப்பரவல் சட்டங்களை விட கடுமையானவை என்றார்.
அமெரிக்காவின் நிலைப்பாடு இரட்டை அளவுகோலை அடிப்படையாக் கொண்டது என்ற விமர்சனத்தில் ஓரளவு உண்மை இருக்கலாம் என்ற அவர், ஆனால், இந்திய அமெரிக்க உறவுகள் கடந்த 2000ம் ஆண்டிலிருந்தே, பாதுகாப்பு போன்ற விஷயங்களில் பலமடைந்து வந்திருக்கின்றன என்பதைக் குறிப்பிட்டு, இந்தியாவை, அமெரிக்கா ஒரு சரிசமமான நட்பு நாடாக கருதுவதாகவும் கூறினார்.
ஆனால் இந்தியாவை , சீனாவுக்கெதிராக ஒரு 'சமநிலைப்படுத்தும் சக்தியாக' அமெரிக்கா பயன்படுத்த நினைக்கிறது என்ற கருத்தை மறுத்த அவர், இந்தியா ஒரு பழமை வாய்ந்த நாடு, பெரிய நாடு, எந்த ஒரு நாடும் அதை பயன்படுத்த முடியாது என்றார் அவர்.
நீலகண்டனின் கூற்றானது தனது நாட்டின் நலன்சார்ந்ததாக இருந்தாலும் அமெரிக்கா பிராந்தியத்தில் காலூன்றுவதற்கு இந்தியாவை பயன்படுத்துகின்றது என்பது அரசியல் அவதானிகளின் வெளிப்படையான விமர்சனமாக இருந்து வருகின்றது.
0 comments :
Post a Comment