பின்லேடனின் 3 மனைவிகள் மீது சட்டவிரோதமாக குடியேறியதாக பாகிஸ்தான் திடீர் வழக்கு
அமெரிக்கப் படையினரால் ஒசாமா பின் லேடன் சுட்டுக் கொல்லப்பட்ட பின் பாகிஸ்தான் உளவுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவரது 3 மனைவிகள் மீதும் சட்ட விரோதமாக குடியேறியதாக பாகிஸ்தான் அரசு திடீரென புதிய வழக்கு பதிவு செய்துள்ளது.
இதன்மூலம் அவர்களை அவர்களது சொந்த நாடுகளுக்கே நாடு கடத்த பாகிஸ்தான் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.
கடந்த 2011ம் ஆண்டு மே 2ம் தேதி பாகிஸ்தானின் அபோடாபாத் நகரில் அமெரிக்கப் படைகள் தாக்குதல் நடத்தி பின்லேடனை கொன்றன. அவருடன் அவரது மகன், மேலும் இருவர், ஒரு பெண் ஆகியோர் கொல்லப்பட்டனர்.
பின்லேடனுடன் அந்த வீட்டில் இருந்த அவரது 3 மனைவிகள், குழந்தைகள், பேரக் குழந்தைகள் பிடிபட்டனர். அவர்களை பாகிஸ்தான் அரசிடம் அமெரிக்கா ஒப்படைத்தது. இதையடுத்து பின்லேடனின் 3 மனைவிகளையும் பாகிஸ்தான் அரசு கைது செய்தது.
இந் நிலையில் பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் ரகுமான் மாலிக் நேற்று கூறுகையில்,
பின்லேடனின் 3 மனைவிகள் மீது நடவடிக்கை எடுக்க பாகிஸ்தான் புலனாய்வு அமைப்பு முடிவு செய்துள்ளது. அவர்கள் சட்டவிரோதமாக பாகிஸ்தானுக்குள் புகுந்து குடியேறியதாக பாகிஸ்தான் சட்டப்படி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
அவர்கள் சரியான சட்டமுறைப்படியே காவலில் வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் 5 படுக்கை அறைகள் கொண்ட வீட்டில் பாதுகாவலில் வைக்கப்பட்டுள்ளனர். அந்த வீட்டையே கிளைச்சிறையாக அறிவித்து, அதில் பின்லேடனின் மனைவிகளும், பிள்ளைகளும் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளனர்.
பின்லேடனின் மனைவிகள் ஒரு வழக்கறிஞரை அமர்த்திக் கொள்ளலாம். அவர்கள் நீதிமன்றத்துக்கு சென்று, தங்களை காத்துக் கொள்ள முழு சுதந்திரம் உள்ளது. பின்லேடனின் பிள்ளைகள் மைனர்கள் என்பதால் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்படவில்லை. அவர்கள் விரும்பினால் நாட்டை விட்டு வெளியேறிக் கொள்ளலாம். அது அவர்களின் தாய்மார்களின் விருப்பத்தைப் பொறுத்தது என்றார்.
பின்லேடனின் குடும்ப உறுப்பினர்கள் குறித்தும், எத்தனை குழந்தைகள் உள்ளனர் என்பது பற்றியும் தகவல் தெரிவிக்க ரகுமான் மாலிக் மறுத்து விட்டார்.
பின்லேடனின் 2 மனைவிகள் செளதி அரேபியா நாட்டைச் சேர்ந்தவர்கள். ஒருவர் ஏமன் நாட்டைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர்களையும் குழந்தைகளையும் அந்தந்த நாடுகளுக்கே திருப்பி அனுப்பிவிட பாகிஸ்தான் முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது. இதன் ஒரு பகுதியாகவே சட்ட விரோதக் குடியேற்ற வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கைக் காரணம் காட்டி இவர்களை நாடு கடத்துகிறோம் என்று சொல்லி அவர்களது சொந்த நாடுகளுக்கு பத்திரமாக திருப்பி அனுப்பி வைத்துவிட பாகிஸ்தான் முடிவு செய்துள்ளது. இதற்கு அமெரிக்காவும் அனுமதி தந்துவிட்டதாகத் தெரிகிறது.
அதே நேரத்தில் செளதி அரேபியாவை சேர்ந்த பின்லேடனின் மனைவிகளை அனுமதிக்க அந்த நாடு தயாராக இல்லை என்று தெரிகிறது. இதனால் அவர்கள் பாகிஸ்தானிலேயே வீட்டுச் சிறையில் தொடர்ந்து இருக்க நேரிடலாம்.
0 comments :
Post a Comment