Sunday, December 4, 2011

USA க்கான PAK தூதருக்கு அதிரடியாக வீட்டுக்காவல்! இப்போது பாஸ்போர்டும் பறிக்கப்படுகிறது!!

அமெரிக்காவுக்கான முன்னாள் பாகிஸ்தான் தூதர் ஹசெயின் ஹக்கானி நாட்டிலிருந்து வெளியேற முடியாது என்ற உத்தரவை வியாழக்கிழமை பிறப்பித்துள்ளது பாகிஸ்தானிய சுப்ரீம் கோர்ட். அவர்மீதான் உயர் மட்ட விசாரணைகள் ஆரம்பமாகி விட்டதாக அரசு தெரிவித்த தகவலையடுத்தே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

முன்னாள் தூதர் ஹக்கானி, அமெரிக்காவில் இருந்து பாகிஸ்தான் வருமாறு உத்தரவிடப்பட்டு, கடந்த 22-ம் தேதி பதவியில் இருந்து இறங்குமாறும் உத்தரவிடப்பட்டிருந்தார்.

இவர்மீது நடவடிக்கை எடுக்கப்படும் விவகாரம் என்னவென்றால், அமெரிக்காவில் பாகிஸ்தான் தூதராக இருந்த இவர், ரகசிய கடிதம் ஒன்றை எழுதி மற்றொரு நபரிடம் அதைக் கொடுத்து, அட்மிரல் மைக் முல்லனிடம் கையளிக்கும்படி அனுப்பி வைத்தாராம். அமெரிக்க ராணுவத் தளபதியாக இருந்த மைக் முல்லன், இது நடைபெற்ற போது Joint Chiefs of Staff தலைமைப் பதவியில் இருந்தார். கடிதத்தை எடுத்துச் சென்ற நபரின் பெயர் மன்சூர் இஜாஸ். இவர் பாகிஸ்தானில் பிறந்து அமெரிக்காவில் குடியேறிய ஒரு அமெரிக்க பிரஜை.

இந்தக் கடித விவகாரம் வெளியானதையடுத்து, பாகிஸ்தானில் கடும் சர்ச்சைகள் ஏற்பட்டன. ஹக்கானியை விசாரணைக்காக பாகிஸ்தான் வருமாறு அழைப்பு அனுப்பப்பட்டது. பாகிஸ்தான் சென்றால் கைது செய்யப்படுவார் என்பது சிறு குழந்தைக்கும் தெரிந்திருந்தது. இதனால் அவர், பாகிஸ்தான் செல்லாமல் அமெரிக்காவிலேயே தங்கிவிட சில ஏற்பாடுகளைச் செய்ததாக கூறப்பட்டது.

ஆனால் அதன்பின் என்ன நடந்ததோ, அவரது பாதுகாப்புக்கு என்ன உறுதிமொழிகள் கொடுக்கப்பட்டனவோ, கராச்சி போய் இறங்கினார் ஹக்கானி. போய் இறங்கிய உடனேயே வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார். அவரது பதவி பறிக்கப்பட்டு, அவருக்குப் பதிலாக புதிய தூதர் அமெரிக்காவுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

பாகிஸ்தானால் அவரை ரீபிளேஸ் பண்ண அனுப்பி வைக்கப்பட்ட புதிய தூதர் ஷெரி ரெஹ்மான். இவர் பாகிஸ்தான் ஜனாதிபதி ஆசிப் அலி சர்தாரியின் நம்பிப்பைக்கு உரிய நபராகக் கருதப்படும் ஒருவர். இதில் வேடிக்கை என்னவென்றால், தற்போது தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் தூதர் ஹக்கானி, ஜனாதிபதி ஆசிப் அலி சர்தாரியின் ஆசியுடனேயே குறிப்பிட்ட ரகசிய மெமோவை எழுதியிருந்தார் என்பதாகவும் ஒரு குற்றச்சாட்டு உண்டு.

அந்தக் குற்றச்சாட்டை ஜனாதிபதி ஆசிப் அலி சர்தாரி மறுத்திருந்த போதிலும், அவரது மறுப்பை பாகிஸ்தான் ராணுவத் தலைமை, மற்றும் உளவுத்துறை ஐ.எஸ்.ஐ. தலைமை ஆகியவை நம்பத் தயாராக இல்லை.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com