Wednesday, October 12, 2011

கல்முனை மேயர் தெரிவில் குழப்பம்

கல்முனை மாநகர சபை மேயர் யார் என்பது தொடர்பில் இறுதித் தீர்மானம் இன்று அறிவிக்கப்படும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அறிவித்துள்ளது. கொழும்பில் இன்று கூடவுள்ள கட்சித் தலைமை உறுப்பினர்கள் இது தொடர்பிலான இறுதி முடிவை எடுக்கவுள்ளதாக அக்கட்சி குறிப்பிட்டுள்ளது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உயர் மட்டக் குழு இது தொடர்பான தீர்மானம் எடுப்பதற்காக நேற்றும் கொழும்பில் கூடி ஆராய்ந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. நடைபெற்றுமுடிந்த கல்முனை மாநகர சபைக்கான தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி 11 ஆசனங்களைக் கைப்பற்றி ஆட்சியை வசமாக்கியது.

இந்த நிலையில் கூடுதல் வாக்குகளைப் பெற்ற முஹம்மட் ஸிராஸ் என்பவரையா அல்லது அதற்கு அடுத்த நிலையிலுள்ள நிஸாம் காரியப்பரையா மேயராக நியமிப்பது என்பது தொடர்பில் குழப்ப நிலையொன்று தோன்றியுள்ளது. இதனைத் தீர்க்கும் வகையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அம்பாறை மாவட்ட மத்திய குழு உறுப்பினர்கள் கொழும்புக்கு அழைக்கப்பட்டு நேற்று உயர் குழுகூடி ஆராய்ந்துள்ளது.

இந்த நிலையில் இன்று கூடவுள்ள கட்சியின் உயர்நிலைக் குழு இது தொடர்பிலான இறுதித் தீர்மானத்தை அறிவிக்கும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.

இதேவேளை, நிசாம் காரியப்பர் மேயராகத் தெரிவுசெய்யபட்டதாக வெளியான வதந்தியொன்றால் நேற்றிரவு சாய்ந்தமருதில் பதற்ற நிலை ஒன்று உருவாகியது அதைத்தொடர்ந்து சில வன்முறை சம்பவங்களும் இடம்பெற்றுள்ளன. மாகான சபை உறுப்பினர் ஏ.எம்.ஜெமீலிற்கு சொந்தமானதாகக் கூறப்படும் கல்வி நிலையம் ஒன்று
தாக்குதலுக்கு இலக்காகியுள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com