Friday, August 5, 2011

டக்ளஸை ஏன் கைது செய்யவில்லை: மத்திய அரசிடம் விளக்கம் கோரும் உயர் நீதிமன்று.

தேடப்பட்டு வரும் குற்றவாளியான டக்ளஸ் தேவானாந்தா டெல்லி வந்தபோது அவரை ஏன் கைது செய்யவில்லை என்பதற்கு விளக்கம் அளிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. கடந்த 1986ஆம் ஆண்டு சென்னை சூளைமேட்டில் ஈழப் போராளிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் திருநாவுக்கரசர் என்பவர் சுட்டுக் கொல்லப்பட்டார். இது தொடர்பாக ஈ.பி.ஆர்.எல்.எப். இயக்கத்தைச் சேர்ந்த டக்ளஸ் தேவானந்தா மீது கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இது தொடர்பான வழக்கு விசாரணை 4ஆவது கூடுதல் செசன்ஸ் கோர்ட்டில் நடந்து வருகிறது. தமிழ்நாட்டில் இருந்து இலங்கைக்கு தப்பிச் சென்ற டக்ளஸ், இலங்கை அரசின் ஆதரவாளராக மாறினார். அதன் பயனாக ராஜபக்சே தலைமையிலான அமைச்சரவையில் அமைச்சராகப் பதவி வகித்து வருகிறார்.

இதற்கிடையே கொலை வழக்கு விசாரணைக்கு டக்ளஸ் வராததால் அவரை கைது செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதோடு அவர் தேடப்படும் குற்றவாளியாகவும் அறிவிக்கப்பட்டார். கடந்த ஆண்டு அவர் டெல்லிக்கு அரசு விருந்தினராக வந்தபோது அவரை கைது செய்யக்கோரி பொது நல வழக்கு தொடரப்பட்டது.

இதனால் பயந்துபோன டக்ளஸ் தனக்கு எதிரான கைது வாரண்டு உத்தரவையும், தேடப்படும் குற்றவாளி என்ற உத்தரவையும் ரத்து செய்யக் கோரி மனு செய்தார். தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்றும் மனுவில் கூறி இருந்தார்.

இந்த மனு மீதான விசாரணை நீதிபதி நாகமுத்து முன்னிலையில் நடந்தது. அப்போது டக்ளசுக்கு ஜாமீன் கொடுக்க அரசு வக்கீல் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இதையடுத்து டக்ளசுக்கு ஜாமீன் வழங்க இயலாது என்று நீதிபதி உத்தரவிட்டார். டக்ளஸ் ஐகோர்ட்டில் சரண் அடைந்து தன் மீதான உத்தரவுகளை திரும்ப பெற்றுக் கொள்ளலாம் என்றும் நீதிபதி கூறினார்.

ஆனால் இதுவரை அவர் சரண் அடையவில்லை . இந்த நிலையில், டக்ளஸை எதிராக தொடரப்பட்டுள்ள பொது நல வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், டெல்லிக்கு வந்தபோது டக்ளஸ் தேவானந்தாவை மத்திய அரசு ஏன் கைது செய்யவில்லை. தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டவரை கைது செய்ய முடியாத நிலை ஏன் ஏற்பட்டது என்பது குறித்து விளக்குமாறு மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.


0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com