Wednesday, July 20, 2011

சிங்கள மன்னர்களின் கீழேயே தமிழ் மன்னர்கள் இருந்தனராம்.

2,500 ஆண்டுகளுக்கு முன்னர் இருந்து பௌத்த மதம் பின்பற்றப்பட்டு வருகின்றது. 1,000 ஆண்டுகளுக்கு முன்னர் இருந்து இந்து மதம் பின்பற்றப்பட்டு வருகின்றது. 800 ஆண்டுகளுக்கு முன்னர் இருந்து இஸ்லாம் மதம் பின்பற்றப்பட்டு வருகின்றது. அந்தக் காலத்தில் சிங்கள மன்னர்களின் கீழ் தமிழ் மன்னர்கள் இருந்தார்கள்.

இவ்வாறு இலங்கைப் பிரதமர் டி.எம்.ஜயரத்ன புதிய சரித்திர விளக்கம் ஒன்றை தெரிவித்தார். கோப்பாய் நாவலர் வித்தியாலயத்தின் பாடசாலை விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பிரசாரக் கூட்டத்திலேயே அவர் மேற்கண்ட வரலாற்று விளக்கத்தை அளித்தார்.

அவர் மேலும் தெரிவித்தமை வருமாறு:

கடந்த 30 ஆண்டு கால யுத்தத்தினால் இந்தப் பிரதேசத்திலும் நாட்டின் பல பிரதேசத்திலும் ஆலயங்கள் அழிவடைந்துள்ளன. அவற்றைப் புனரமைத்து மக்களிடம் கையளித்து வருகின்றோம்.இங்கும் இவ்வாறான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன. இருப்பினும் தற்போது தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர் இவ்வாறான நடவடிக்கைகள் மேற்கொள்வது தவறு. எனவே 25 ஆம் திகதிக்குப் பின்னர் அவற்றை மேற்கொள்ள உள்ளோம்.

இலங்கையில் 27 லட்சம் தமிழ் மக்கள் வாழ்கின்றனர். வடமாகாணத்தில் 9 லட்சம் தமிழ் மக்களும் கிழக்கு மாகாணத்தில் 4 லட்சம் தமிழ் மக்களுமாக 13 லட்சம் தமிழ் மக்கள் தான் வாழ்கின்றனர். ஏனைய இடங்களில் தான் 14 லட்சம் தமிழ் மக்கள் வாழ்கின்றனர்.

வடக்கு கிழக்கை விட ஏனைய இடங்களில்தான் அதிகமான தமிழ் மக்கள் வாழ்கின்றனர். எங்களுடைய பிரதேசங்களில் சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்கள் அனைவரும் ஒற்றுமையாக வாழ்கின்றார்கள். நாங்கள் இந்தப் பகுதி மக்களுக்கு தகுதி தராதரம் பாராமல் உதவிகள் செய்து வருகின்றோம். நீங்கள் ஏன் சிந்திக்கவில்லை. அவர்கள் போன்று ஒற்றுமையாக வாழ்வதற்கு? நாங்கள் ஆட்சியைக் கைப்பற்றுவதற்கு இங்கு வரவில்லை. மக்களுக்கு சேவை செய்யவே வந்திருக்கின்றோம் என்றார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com