Friday, March 11, 2011

ஜப்பானில் பயங்கர பூகம்பம், ஆழிப் பேரலைத் தாக்குதல்.

ஜப்பானின் வட கிழக்கு கடற்பகுதியில் மையம் கொண்டு ஏற்பட்ட பயங்கர பூகம்பமும், அதனைத் தொடர்ந்து உருவான ஆழிப்பேரலையும் அந்நாட்டின் வடக்கு, கிழக்குப் பகுதிகளை முற்றிலுமாக புரட்டிப்போட்டுள்ளது. சர்வதேச நேரப்படி இன்று காலை 05.46 மணிக்கு (இந்திய நேரப்படி காலை 11.16) ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் இருந்து 400 கி.மீ. தூரத்தில், ஹான்சூவில் இருந்து 130 கி.மீ தூரத்தில் கடற்பகுதியில் பயங்கர பூகம்பம் ஏற்பட்டுள்ளது. இந்த பூகம்பம் ரிக்டர் அளவுகோலில் இது 8.9 புள்ளிகளாக பதிவாகியுள்ளதென அமெரிக்க புவியியல் துறை கூறியுள்ளது. ஆனால், பூகம்ப அளவு 8.4 புள்ளிகள் என்று ஜப்பான் அரசு கூறியுள்ளது.

பூமத்திய ரேகையிலிருந்த 38.322 டிகிரி வடக்கும், அட்சரேகை 142.369 டிகிரி கிழக்கும் சந்திக்கும் இடத்தில் மையம் கொண்டு இந்த பூகம்பம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் துறை தெரிவித்துள்ளது.

கடற்பகுதியில் ஏற்பட்ட இந்த பயங்கர பூகம்பத்தையடுத்து, ஆழிப்பேரலை (சுனாமி) எச்சரிக்கை விடுக்கப்பட்டது. எச்சரிக்கைக்கு இணங்க அடுத்த சில மணி நேரத்தில் ஆழிப்பேரலை ஜப்பானின் கிழக்குக் கரைகளை கடுமையாகத் தாக்கியது. ஆழிப்பேரலையின் உயரம் 10 முதல் 13 மீட்டர் உயரத்திற்கு எழுந்து தாக்கியதாக செய்திகள் கூறுகின்றன.

பூகம்பத்தால் ஜப்பானின் வடக்கு, கிழக்குப் பகுதிகள் கடும் பாதிப்பிற்கு உள்ளாயின. டோக்கியோ அருகிலுள்ள சீமா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை தீப்பற்றி எரிகிறது. பலமாடிக் கட்டடங்கள் பலவற்றில் விரிசல் ஏற்பட்டுள்ளதெனவும், பல தொழிற்சாலைகளில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதெனவும் செய்திகள் கூறுகின்றன.

இந்த நிலையில் ஆழிப்பேரலைத் தாக்கியுள்ளது. மியாகி மாகாணம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மற்றொரு கடலோர நகரமான செண்டாய் பெரும் பாதிப்பிற்குள்ளாகியுள்ளதெனவும் கூறப்படுகிறது. ஜப்பானின் 5 அணு மின் நிலையங்களின் இயக்கம் நிறுத்தப்பட்டுள்ளதெனவும், பூகம்பத்தால் அணு மின் நிலையங்களுக்கு பாதிப்பு ஏற்பட்டாலும், அணுக் கதிர் வீச்சி எதுவும் ஏற்படவில்லை என்று தொலைக்காட்சியில் உரையாற்றிய அந்நாட்டுப் பிரதமர் நவோட்டா கேன் கூறியுள்ளார்.

பூகம்பத்தாலும், ஆழிப்பேரலைத் தாக்குதலினாலும் உயரிழிந்தோர் எண்ணிக்கை பற்றி எந்தத் தகவலும் இல்லை. ஆனால் பேரலைத் தாக்குதலில் 10 பேர் காணவில்லை என்று மட்டும் முதல் தகவல் வந்துள்ளது.

ஆனால் ஆழிப்பேரலைத் தாக்குதல் காட்சிகளைப் பார்க்கும்போது பல்லாயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்திருக்கலாம் என்று எண்ணத் தோன்றுகிறது. வீடுகளையும், படகுகளையும், சிறு கப்பல்களையும் ஆழிப்பேரலை அடித்துச் செல்லும் காட்சி அச்சமூட்டுவதாக உள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com