Saturday, August 28, 2010

அரசியல் யாப்பு மாற்றம் மூன்று முறைகளில் நிறைவேற்றப்படும். விமல் வீரவன்ச

இலங்கை அரசியல் அமைப்பில் ஏற்படுத்தப்படும் மாற்றங்கள் மூன்று முறைகளில் அமுல்படுத்தப்படவுள்ளதாக வீடமைப்புத் துறை அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். அம்மூன்று முறைகளில் முதலாவது முறை உடனடியாக நடைமுறைக்கு வரும் எனவும் , எதிர்வரும் நவம்பர் மாதம் ஜனாதிபதி இரண்டாவது தனது தவணைக்காக பதவிப்பிரமாணம் செய்து கொள்ளும்போது சகல விடயங்களும் சரியான முறையில் நடைமுறைப்படுத்தப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

செப்டெம்பர் முதல் வாரத்தை அடுத்து அரசியலமைப்பு திருத்தங்கள் குறிப்பான ஆவணம் பாரளுமன்றத்தில் சமர்பிக்கப்படும் என தெரிவித்துள்ள அமைச்சர் டினேஷ் குணவர்த்தன அவ்விவாதங்கள் மற்றும் வாக்கெடுப்புக்களில் கலந்து கொள்ளும் பொருட்டு தமது கட்சி உறுப்பினர்கள் அனைவரையும் அடுத்த மாதம் செப்டம்பர் 7 ஆம் திகதி நடைபெறவுள்ள பாராளுமன்ற அமர்வுகளில் நிச்சயம் நாட்டைவிட்டு வெளியேறாது இருந்து கலந்து கொள்ளுமாறு பணிக்கப்பட்டுள்ள்தாகவும் தெரிவித்துள்ளார்.

அரசியல் யாப்பு மாற்றங்கள் தொடர்பான விடயங்கள் எதுவும் இதுவரை வெளியிடப்படவில்லை என குறைகூறிவரும் ஜேவிபி யினர் மக்கள் அரசியல் யாப்பில் மாற்றங்களை மேற்கொள்வதற்காக இவ்வரசாங்கத்திற்கு ஆணை வழங்கவில்லை எனவும் தெரிவித்துள்ளனர். அத்துடன் அரசியல் யாப்பில் மாற்றம் செய்வதாயின் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையினை ஒழிப்பதாகவே ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மக்களுக்கு உறுதி வழங்கியிருந்ததாகவும் அதற்கு மாறாக தற்போது இரு முறைகளே ஒருவர் நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதியாக இருக்க முடியும் என்ற வரையறையினை மாற்றியமைத்து மீண்டும் தனது அதிகாரத்தை தக்க வைத்துக்கொள்ள முனைவதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

மேலும் தமது கட்சியினர் ஆட்சிக்கு வந்தால் நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதி ஆட்சி முறையினை ஒழிப்போம் என்றபோது மக்கள் நம்பவில்லை. அரசியல் யாப்பின் பிரகாரம் ஒருவர் இருமுறைகளே ஜனாதிபதியாக இருக்க முடியுமாகையால் மகிந்த ராஜபக்ச தனது இரண்டு தவணைகளையும் முடித்துக்கொண்டு நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதி ஆட்சி முறையை ஒழித்துவிட்டுச் செல்வார் என மக்கள் எதிர்பார்த்தனர். ஆனால் இன்று மக்களின் விருப்பு மற்றும் கணிப்புக்கு எதிராகவே யாவும் இடம்பெறுகின்றன என தெரிவிக்கின்றனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com