Saturday, May 1, 2010

ஐரோப்பிய ஒன்றிய விதிகளை பின்பற்றினால் GST+ கிடைக்கும். இறுதி சந்தர்பம் மே யில்

ஜனநாயக தேசிய கூட்டணியின் தலைவர் சரத் பொன்சேகாவை தொடர்ந்து சிறிலங்கா ராணுவ காவலில் வைத்திருப்பது மற்றும் அவர் மீது அவசரகால கட்டுப்பாடுகளை திணிப்பது குறித்த தனது கவலையை ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது. அதே வேளையில் இது சிறிலங்காவின் உள்நாட்டு விவகாரம் என்பதால் இந்த பிரச்சினையில் ஐரோப்பிய ஒன்றியம் கட்டளையிட விரும்பவில்லை என ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கைக்கான வதிவிடப்பிரதிநிதி பெர்னார்ட் சவேஜ் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறியுள்ளதாவது.

கடந்த வருடம் ஓகஸ்ட் மாதம் முதல் சிறிலங்காவிற்கான ஏற்றுமதி வரிச் சலுகைகளை (General System of Preferences - GSP+) ஐரோப்பிய ஒன்றியம் ரத்து செய்தது. மனித உரிமைகள், தொழிலாளர் உரிமைகள் மற்றும் ஊடக சுதந்திரம் ஆகியவை முறையாக மதிக்கப்படுவதை சிறிலங்கா உறுதிப்படுத்தினால் ஐரோப்பிய ஒன்றியம் பின்னர் நிலைமையினை ஆராயும் போது ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகையினை மீண்டும் வழங்கும் எனவும் சவேஜ் தெரிவித்துள்ளார்.

ஐரோப்பிய ஒன்றியம் சிறிலங்கா தொடர்பான விடயங்களில் அமெரிக்காவை போன்றே எதிர்மறையான அணுகுமுறையை கையாள்வதாக மக்கள் மத்தியில் கருத்து நிலவுகிறதே என கேட்கப்பட்ட போது பதிலளித்த சவேஜ் , பொது மக்கள் மத்தியில் நிலவும் கருத்துக்கெல்லாம் தான் பதில் சொல்ல முடியாதென்றும், சிறிலங்கா குறிப்பாக அதிபர் மகிந்த ராஜபக்சவின் தலைமையிலான அரசின் நிர்வாகம் தொடர்பான ஐரோப்பிய ஒன்றியத்தின் மனப்போக்கு எத்தகையது என்பதை ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளிவிவகாரப் பிரதிநிதி கேதேரின் ஆஷ்டன் ஏப்ரல் 13 ஆம் திகதி நடைபெற்ற பாராளுமன்ற தேர்தல்கள் குறித்த அறிக்கையில் தெளிவாகக் குறிப்பிட்டிருந்தார் என்றும் கூறினார்.

அதிபர் ராஜபக்சவின் அரசாங்கம் பெற்ற வெற்றிக்கு தன் வாழ்த்தினை தெரிவித்திருந்த கேதேரின் ஆஷ்டன் தேசிய ஒருமைப்பாடு உள்ளிட்ட நாட்டினது முக்கியமான பிரச்சினைகளுக்குத் தீர்வுகாணும் வகையில் புதிய அரசு செயலப்படும் என்ற நம்பிக்கையினையும் வெளியிட்டிருந்தார் என சவேஜ் கூறியுள்ளார்.

ஜி.எஸ்.பி வரிச்சலுகைகளை நிறுத்துவது என்ற ஐரோப்பிய ஒன்றியத்தின் பரிந்துரையினை மீள்பரிசீலனை செய்யும் வகையில் சிறிலங்கா அதிகாரிகளுக்கும் ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகளுக்கும் இடையில் பெல்ஜிய தலைநகர் பிருச்செல்ஸில் நடத்தப்பட்ட முதற்கட்ட பேச்சுவார்த்தைகள் பயனளிக்கும் விதத்தில் இருந்ததாக மேலும் கூறினார்.

போருக்குப் பின் நாட்டின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளின் மீள்கட்டுமானம் மற்றும் நல்லிணக்கம் குறித்த விடயங்களில் ஐரோப்பிய ஒன்றியத்தின் உதவிகளை பெறுவதற்கும் ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை குறித்து கலந்தாலோசிப்பதற்கும் அரசின் திறைச்சேரி செயலாளர் ஜெயசுந்தர தலைமையிலான உயர்மட்ட குழுவொன்றை கடந்த மார்ச் மாதம் இலங்கை அரசு பிருச்செல்சிற்கு அனுப்பியிருந்தது.

மார்ச் மாதத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பு ஆக்கபூர்வமானதாக இருந்ததாகவும் சிறிலங்காவின் மற்றுமொரு உயர்மட்டக்குழு மே மாதம் பிருச்செல்சிற்கு வரவிருப்பதாகவும் சவேஜ் கூறியுள்ளார்.

மே மாதம் நடைபெறவிருக்கும் இந்த சந்திப்பில் இரண்டு தரப்பினருக்குமிடையே ஜி.எஸ்.பி பிளஸ் தொடர்பான விடயங்களில் சுமூக உடன்பாடு எட்டப்படலாம். ஐரோப்பிய ஒன்றியத்தின் விதிகளுக்கு ஏற்ப செயல்படுவதற்கான இன்னொரு வாய்ப்பை மே மாதம் நடைபெறும் இந்த சந்திப்பு சிறிலங்காவிற்கு வழங்கும் என சவேஜ் நம்பிக்கை தெரிவித்தார்.

நாட்டின் அதிபர் மூன்று முறை பதவியில் இருக்கும் வகையில் அரசியலமைப்பில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படவுள்ளது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த சவேஜ், நாட்டினது அரசியலமைப்பை மீறாமல் அதேநேரத்தில் நாட்டு மக்களின் தேவைகளை பூர்த்திசெய்யும் வகையில் இருக்குமெனில் அதிபர் ராஜபக்ச மூன்றாவது முறையாகவும் ஆட்சியில் இருப்பது பிரச்சினைக்குரிய விடயமன்று என்று கூறினார்.

இந்த விடயம் தொடர்பாக நான் கருத்து கூறுவது பொருத்தமானதல்ல. மக்களின் விருப்பமே இதில் முக்கியமானது. மேலும் அரசு பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையினை பெற்றால் அரசியலமைப்பில் தாங்கள் விரும்பிய மாற்றத்தினை கொண்டுவர இயலும். அதே நேரத்தில் நாட்டின் அடிப்படைச் சட்டம் மதிக்கப்படவும் பாதுகாக்கப்படவும் வேண்டும் என சவேஜ் மேலும் வலியுறுத்தினார். [கவிநிலா]

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com