Tuesday, April 6, 2010

சித்தார்த்தன் பாராளுமன்றுக்கு தெரிவானால் அது தமிழ் மக்களுக்கு பயன் தருமா? பீமன்

தமிழ் தேசியச் கூட்டமைப்பு என்ன செய்தது என்பது முக்கியமல்ல இனி என்ன செய்யப்போகின்றது என்பது அவதானிக்கப்படவேண்டியது, எனவே தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு உங்கள் வாக்குகளை அள்ளி வழங்குங்கள் என வானுயர எழுப்பபட்ட வெற்றுக் கோஷங்களுடன் தேர்தல் பிரச்சார முழக்கங்கள் ஒய்ந்துள்ளது. இவ்வெற்றுக்கோஷங்கள் நேற்று நள்ளிரவுடன் தற்காலிகமாக ஓய்ந்திருந்தாலும் வடக்கு எதிர்கொள்ள இருக்கும் அடுத்த தேர்தலான மாகாண சபைத் தேர்தலில் மீண்டும் ஒலிக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

தமிழ் தேசியக் கூட்டமைப்பைச் சார்ந்தோரது மேற்படி கோஷங்கள் 30 வருடங்களாக அகிம்சை போராட்டம் எனவும், 30 வருட காலங்கள் ஆயுதப் போராட்டம் எனவும் தமிழ் மக்களை உணர்ச்சி ஊட்டி, அவர்களது வாக்குகளை கபளிகரம் செய்து உல்லாசம் அனுபவிக்க உதவியதுடன், தமிழ் மக்களை ஓட்டாண்டிகளாக விட்டு விட்டு மீண்டும் தொடக்க புள்ளிக்கு கொண்டு வந்துள்ளதை உணர்த்துகின்றது. இங்கு நான் தமிழ் தேசியக் கூட்டமைப்புச் சார்ந்தோர் என்று கூறுவது சம்பந்தன் கூட்டமைப்பு, மஹிந்த கூட்டமைப்பு, கஜேந்திரர்கள் கூட்டமைப்பு, சிவாஜி கூட்டமைப்பு என யாவரையும் உள்ளடக்கியதாகும்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்பது 22 ஓட்டைகள் கொண்ட வெற்றுப்பானை. வெறுமனே புலிகளின் அராஜகங்களை நியாயப்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வரலாற்றில் 2 காலங்கள் உண்டு. தமிழ் தேசியம் எனும் வெற்றுக்கோஷத்தைக் கிளப்பி தமிழ் மக்களின் ஒட்டுமொத்த வாக்குகளையும் அபகரித்து பாராளுமன்றம் சென்று தமிழ் மக்களுக்கு எந்த விதத்திலும் கடமைப்படாதவர்களாக, புலிகளின் ஆராஜகங்களை நியாயப்படுத்தியவண்ணம் புலிகளுக்கு தம்மை சிறந்த சேவர்களாக கண்பித்தவாறு தமது குடும்பங்களை செல்வந்த நாடுகளில் குடியேற்றியும், தமது பொருளாதாரத்தை பெருக்கும் கைங்கரியங்களிலும் ஈடுபட்பட்ட காலம் வசந்தகாலம்.

மே 17ம் திகதிக்கு பின்னர் மஹிந்தவின் காலடியில் அட்டாங்க நமஸ்காரம் செய்து, நாம் பிரபாகரனை என்றும் ஏற்றவர்கள் அல்லர், இக்கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் நான்கு கட்சிகளது தலைவர்களையும் புலிகளே சுட்டுக்கொன்றுள்ளனர். நாம் புலிகளின் ஆயுதத்தின் மீது கொண்ட பயத்தின் காரணமாகவே புலிகளை ஏற்றுக்கொள்வதாக கூறியிருந்தோம் என கூறி, மீண்டும் வடகிழக்கு மக்களை ஏமாற்றுவதற்காக மஹிந்தவின் அடுக்களையில் சுருண்டு கொண்டனர். அப்போது இவர்களுக்கு வவுனியாவிலே சுமார் மூன்று லட்சம் மக்கள் கஞ்சிக்கு கையேந்தி நின்றமையும், 11000 இளைஞர் யுவதிகள் தடுப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டிருந்தமையும் கண்களுக்கு தெரியவில்லை. மாறாக அரசாங்கம் செய்கின்ற விடயங்கள் யாவற்றிலும் எமக்கு பூரண திருப்தி என சர்வதேச, உள்நாட்டு ஊடகங்களுக்கு அரசின் செயற்பாடுகளை நியாப்படுத்தவும் செய்தனர்.

இந்நிலையில்தான் ஜெனரல் பொன்சேகா தேர்தலில் குதித்தார். அவருடன் தென்னிலங்கைக் கட்சிகள் பல கைகோர்த்தன. ஆய்வுகள் யாவும் பொன்சேகா அமோக வெற்றியீட்டப்போகின்றார் எனக் கூறின. மஹிந்தவின் அடுக்களையில் கண்ணை மூடிக்கொண்டு பால் குடித்துக்கொண்டிருந்த பூனைகள், ஜெனரல் பொன்சேகா வெற்றியீட்டப்போகின்றார், இவருடன் சேர்ந்தால் புலிகளுடன் இணைந்திருந்தாற்போல் ஏனைய தமிழ் கட்சிகளை ஒரம் கட்டி நாம் வடகிழக்கில் தனித்தவில் அடிக்க முடியும் என்ற எதிர்பார்ப்பில் பொன்சேகாவிற்கு ஆதரவு வழங்குவதாக தெரிவித்தனர். ஆனால் யாவும் தலைகீழாக மாறியது. 22 ஓட்டை கொண்ட வெற்றுப்பானை கீழே விழுந்தது 4 துண்டுகளாக உடைந்தது. இக்காலத்தை இலையுதிர்காலம் எனலாம்.

இலங்கையில் ஒரளவேனும் ஜனநாயக சூழ்நிலை உருவாகியுள்ள நிலையில் வடகிழக்கின் பல பகுதிகளிலும் அளவுக்கு அதிகமான வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிடுகின்றனர். இவ்விடயம் தமிழ் மக்கள் என்றுமே விரும்புகின்ற தமிழ் பிரதிநிதித்துவத்திற்கு சற்று ஆபத்தானதாகவே காணப்படுகின்றது. இருந்தாலும் இந்நிலைமை இலங்கை அரசினால் திட்டமிடப்பட்டு மேற்கொள்ளப்பட்ட விடயமாகும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பு குற்றச்சாட்டு ஒன்றினையும் முன்வைக்கின்றது. தமிழ் மக்களின் ஒருமித்த பலம் கூறுபோடப்பட்டுள்ளதாக த.தே.கூ கூறுகின்றது. அவ்வாறாயின் அன்று தமிழ் மக்களுக்காக போராடச் சென்ற அத்தனை போராட்ட இயக்கங்களையும் பிரபாகரன் கொன்றொழித்து தமிழ் மக்களின் பலத்தை சிதைத்தார். ஆகவே பிற சக்கிகளுக்கு விலைபோயே தமிழ் மக்களின் பலத்தை பிரபாகரன் ஒழித்தார் என்பதையும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு இக்கட்டத்தில் சுட்டிக்காட்டுகின்றது. ஆனால் அன்று பிரபாகரன் தமிழ் மக்களின் பலத்தை கூறுபோட்டபோது, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தன்னிகரில்லாத் தலைவர் என போற்றப்படும் சம்பந்தனுக்கு பிரபாகரனை தட்டிக்கேட்க தைரியம் இருக்கவில்லை. அவ்வாறு செய்யவேண்டிய தேவையும் இருக்கவில்லை.

எரியிற நெருப்பில பிடிங்கினது மிச்சம் என பிரபாகரனுக்கு சாமரம் வீசி தமது பதவிகளை தக்கவைத்துக் கொண்டனர். தமிழ் மக்களின் அவலங்களில் நின்று அரசியல் செய்யவிரும்பும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்றுமே தமிழ் மக்களுக்கு சாத்தியாமான தீர்வொன்றை பெற்றுக்கொள்ள முயற்சிக்கவில்லை. அத்துடன் புலிகளுடன் இணைந்து நின்று தமிழ் மக்களுக்கு கிடைத்திருக்க கூடிய வாய்ப்புக்களை தட்டிக்களித்தே வந்துள்ளது. என்றுமே அவலக்குரல் எழுப்பி அரசியல் புரிய விரும்பும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு அன்று தமிழ் இளைஞர்கள் கைகளில் ஆயுதங்களை திணித்தது. இவ்வாயுதப்போராட்டம் ஆரம்பமானபோது புலிகள் அமைப்பின் அன்றைய தலைவராக இருந்த உமா மகேஸ்வரன் அவர்கள் சில விடயங்களை மிகவும் தீர்க்கதரிசனத்துடன் கூறியிருந்தார்.

அவர் கூறிய விடயம் யாதெனில் : „ தமிழ் மக்களின் விடுதலைக்காக ஆயுதப்போராட்டம் ஒன்றை தொடங்கியிருக்கின்றோம். இவ்வாயுதப்போராட்டத்தை நாம் மிக மிக குறுகிய காலத்தில் முடித்துக்கொள்ளவேண்டும். நாம் இப்போராட்டத்தை வருடக்கணக்கிற்கு கொண்டு செல்வோமாக இருந்தால் இலங்கையின் இராணுவம் அதீத வளர்ச்சி பெறும், எமது விடுதலைப் போராட்டம் மீது பயங்கரவாத முத்திரை குத்தப்படும், பயங்கரவாதத்தை ஒடுக்கும் பெயரில் வடகிழக்கின் கிராமங்கள் தோறும் இராணுவ முகாம்கள் அமைக்கப்படும், முகாம்களில் உள்ளவர்களின் பெயரால் எமது குடிமனைகளின் மத்தியில் இராணுத்தினருக்கான குடிமனைகள் அமைக்கப்படும். „ என உமா மகேஸ்வரன் போராளிகளுக்கு மாத்திரம் தெரிவித்திருக்கவில்லை ஆயுதப்போராட்டத்திற்கு தூபமிட்ட தமிழ் தலைவர்களுக்கும் தெரிவித்திருந்தார்.

ஆனால் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இன்றுள்ளோர், அன்று அவர் கூறிய விடயத்தை ஏற்றுக்கொள்ளவில்லை. அன்று உமாமகேஸ்வரன் அவர்களால் கூறப்பட்ட மேற்படி விடயங்கள் யாவும் நிதர்சனமாகியுள்ளது. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் இன்றைய தேர்தல் பிரச்சாரத்திற்கு கிடைத்துள்ள அவல் யாதெனில் அன்று அவர் கூறிய விடயங்களேயாகும். எனவே மக்கள் தொடர்ந்தும் முட்டாள்களாக இருக்க கூடாது. இவர்கள் மீண்டும் தொடக்க புள்ளிக்கு வந்துள்ளனர் என்பதை உணரவேண்டும். கொடிய போரினால் சிதைந்து போன எம் இனம் இன்று ஒரு புதிய முகத்துடன் தனது பயணத்தை தொடரவேண்டிய நிலையில் உள்ளது.

இந்நிலையில் எதிர்வரும் பாராளுமன்றமும் அதன் தமிழ் பிரதிநிதித்துவமும் தமிழ் மக்களுக்கு இன்றியமையாதது என்பதில் சந்தேகம் இல்லை. தொடர்ந்தும் உங்களுக்கு அவலங்களைத் தந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பு உங்கள் அவலங்களை உங்களுக்கே எடுத்துக்கூறி தங்களுக்கு வாக்கு கேட்கின்றது. அதேநேரம் தமிழ் தேசியக் கூட்டமைப்பை விடுத்தால் தமிழ் மக்களுக்கு மாற்று வழி உண்டா என்ற நியாயமான கேள்வி தமிழ் மக்களிடம் உண்டு. ஆனால் தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்ற பெயருக்கும் அதில் அங்கம் வகிப்பவர்களுக்கும் இதில் எவ்வித சம்பந்தமும் கிடையாது. இவர்களில் அனைவருமே இலங்கை அரசிற்கும், பேரினவாத சக்கிகளுக்கும், ஏகாதிபத்தியங்களுக்கும் விலைபோயுள்ளவர்கள்.

எனவே ஓரளவேனும் தமிழ் மக்களின் நலன்களுடன் அரசியல் நகர்வுளை மேற்கொள்ளும் கட்சியாக புளொட் அமைப்பு காணப்படுகின்றது. அக்கட்சி யாழ்பாணம், மட்டக்களப்பு, வன்னி ஆகிய மாவட்டங்களில் ஈழ மக்கள் புரட்சிகர முன்னணியுடன் இணைந்து தேர்தலில் போட்டியிடுகின்றது. வன்னி மாவட்டத்தில் புளொட் அமைப்பின் தலைவர் சித்தார்த்தன் தலைமையில் வேட்பாளர்கள் களமிறங்கியுள்ளனர். தமிழ் தலைவர்கள் யாவருமே இன்று சோரம் போயுள்ள நிலையில், கடந்த 30 வருடங்களாக தமிழ் மக்களின் விடுதலைக்காக இதயசுத்தியுடன் தமது முழுப்பங்களிப்பையும் புலிகளின் ஆயுதப்போராட்டத்திற்கு வழங்கிவந்த புலம்பெயர் மக்களில் பலர் எதிர்காலத்தில் சித்தார்த்தன் ஒருவரை மாத்திரமே நம்ப முடியும் என்ற கருத்தைக் கொண்டுள்ளதையும் அவதானிக்க முடிகின்றது. ஆனால் தாம் கொண்டிருந்த புலிக்கோட்பாட்டிலிருந்து விலகிக் செல்ல முடியாதவர்களாக சிலரும், புலம்பெயர் புளொட் கிளைச் செயற்பாட்டாளர்களின் மக்களுடனான அணுகு முறைகளில் அதிருப்தியடைந்தவர்களாக சிலரும் தமது கருத்துக்களை, முடிவுகளை திடமாக முன்வைக்க அல்லது வெளிக்கொணர தயங்குகின்றமையையும் காணக்கூடியதாகவுள்ளது.

ஆனால் நீங்கள் காட்டும் இத்தயக்கம் மேலும் சில மணித்தியாலயங்கள் நீடிக்குமானால், மீண்டும் ஒருமுறை பச்சோந்திகளின் கைக்கு தமிழ் மக்களின் தலைவிதி செல்லும் என்பதை உணர்ந்து கொண்டு, தமது வாக்குகளை மிகவும் அவதானமாக பயன்படுத்துமாறு உங்கள் உறவுகளை வேண்ட வேண்டும்.

புளொட் அமைப்பின் கடந்த காலச் செயற்பாடுகள் தொடர்பான நியாயமான விமர்சனங்கள் என்னிடமும் உண்டு. ஆனால் இன்று தமிழ் தேசியத்திற்கு தலைமைதாங்கக் கூடியவர் யார் என்ற கேள்வியை கேட்கும்போது அதை ஓரளவேனும் செய்யத்தகுந்தவர் சித்தார்த்தன் அவர்கள் என்ற முடிவுக்கு வரலாம். இலங்கையிலே முதல்தர ஜனநாயகவாதி எனக்குறிப்பிடக் கூடிய அன்றைய சோவியத் இலங்கை நட்புறவுக் கழக தலைவரும், தமிழ் அரசுக் கட்சியின் ஸ்தாபக உறப்பினரும், சிறந்த சட்டத்தரணியும், இலங்கை அரசியல்வாதிகளின் செயற்பாடுகளுக்கு நேர் எதிராக தனது சொந்த செல்வத்தை சமுதாய தேவைகளுக்காக பயன்படுத்தியுள்ள ஒரு வரலாற்றைக் கொண்டவருமான திரு தர்மலிங்கம் அவர்களின் புதல்வரான சித்தார்த்தன் அவர்கள், தான் அனுபவித்திருக்க கூடிய சகல சுகபோகங்களையும் துறந்து, கடந்த 1961 களிலிருந்து தமிழ் மக்களின் உரிமைக்களுக்காக தன்னை முற்றுமுழுதாக அர்பணித்துள்ளார் என்றால் அது மிகையாகிவிடாது.

1961 ஆம் ஆண்டு தமிழரசுக் கட்சியினால் மேற்கொள்ளப்பட்ட சத்தியாகிரக போராட்டகங்களில் 11 வயதினிலே தனது தந்தையாருடன் கலந்து கொண்ட சித்தார்த்தன் அவர்கள், தொடர்ச்சியாக தமிழ் மக்களின் உரிமை வேண்டிய அகிம்சைப் போராட்டங்கள் யாவற்றிலும் கலந்து கொண்டதுடன் உரும்பிராய் சிவகுமாரன் போன்றவர்களுடன் இணைந்து செயற்பட ஆரம்பித்தார். பின்னர் செட்டி தனபாலசிங்கம் போன்றோர் சிறையுடைத்து வெளியே வந்தபோது அவர்களை சில காலங்கள் குடாநாட்டின் பல பகுதிகளிலும் மறைத்து வைத்திருந்தார். பின்னர் அவர்கள் கைது செய்யப்பட்டபோது சித்தார்த்தன் அவர்கள் தஞ்சம் வழங்கினார் என்ற விடயங்கள் பொலிஸாருக்கு தெரியவருகின்றது. பொலிஸார் இவரை கைது செய்யப்போகின்றனர் என்ற விடயம் அன்று யாழ் பொலிஸ் நிலையத்தில் இருந்த அதிகாரி ஒருவரால் சித்தார்த்தன் அவர்களின் தந்தையாருக்கு அறிவிக்கப்படுகின்றது. அதன் காரணமாக இவர் உடனடியாக லண்டனுக்கு தப்பிச் செல்ல நேரிடுகின்றது.

1983 களில் இலங்கையில் கலவரங்கள் வெடித்து இளைஞர்கள் இராணுவப் பயிற்சிக்காக இந்தியா நோக்கி சென்றுகொண்டிருந்தபோது, லண்டனில் தனக்கு கிடைக்கவிருந்த பிரஜா உரிமையையும், அன்று தான் வகித்த பதில் கணக்காளர் பதவியையும் (Assistant Accountant) தூக்கி எறிந்து விட்டு இந்தியா சென்றார். இந்தியா , லெபணான் என தனது காலங்களை தமிழீழப் போராட்ட வேலைத்திட்டங்களுக்காக கழித்த அவர் இந்திய - இலங்கை ஒப்பந்தத்தின் பின்னர் நாடு திருப்பியதுடன் உமாமகேஸ்வரனின் மறைவின் பின்னர் புளொட் அமைப்பின் தலைமை பொறுப்பையும் ஏற்றார்.

விடுதலைப் போராட்ட அமைப்புக்களை எடுத்துக் கொண்டால் அமைப்புக்கள் கூறுகளாக உடைவதும், கட்சியின் முக்கியஸ்தர்கள் தலைமையுடன் முரண்பட்டு வெளியேறுவதும் எல்லா அமைப்புகளிலும் இடம்பெற்றுள்ள நிலையில் சித்தார்த்தன் அவர்கள் தான் தலைமை வகிக்கும் கட்சியினுள் எவ்வித பிளவுகளும் ஏற்பாடாதவாறு தனது நிர்வாக திறமையை நிருபித்துக்காட்டியுள்ளார். அத்துடன் தலைமையின் தீர்மானமே இறுதி முடிவு என தமிழ்க் கட்சிகள் பலவும் தனிமனித கட்சிகளாக இருக்கின்றபோது சித்தார்த்தன் தலைமையிலான புளொட் அமைப்பு ஒன்றே மத்திய குழுக்கூடி தீர்மானங்களை எடுக்கும் கட்சியாக இருக்கின்றது. மக்கள் தலைவர்களின் பின்னால் அன்றி கொள்கையின் பின்னால் நிற்கவேண்டும் என்ற விடயத்திற்கு சித்தார்த்தன் முன்உதாரணமாக திகழ்கின்றார்.

வன்னி மாவட்டத்திலிருந்து இரு தடவைகள் பாராளுமன்றுக்கு தெரிவாகியிருந்தபோதும் அமைச்சுப்பதவிகளை பெற்றுக்கொள்ளுமாறு சந்திரிகா மற்றும் ரணில் அரசாங்கங்கள் வேண்டியபோதும், நியாயமான காரணங்களுக்காக இணக்க அரசியலைச் செய்வோம் எனவும் தமிழ் மக்களின் உரிமைப்பிரச்சினைக்களுக்கான தீர்வு காணப்படாதவரை ஆழம்கட்சியில் அமரமாட்டோம் என்ற தனது கொள்கையிலும் அவர் உறுதியாக இருந்த அதே நேரத்தில் அரசாங்கங்களுடன் சுமுகமான உறவைப் பேணி மக்களுக்கு அவ்வரசாங்கங்களுடாக செய்யக்கூடியவற்றை செய்தே வந்திருக்கின்றார்.

அத்துடன் அரசினால் வழங்கப்படும் சில சலுகைகளை மக்களுக்கு பெற்றுக்கொடுக்கும் தமிழ் அரசியல்வாதிகள் தெருத்தேங்காயை எடுத்து வழிப்பிள்ளையாருக்கு அடித்துவிட்டு நாங்கள் தேங்காய் அடித்துவிட்டோம் என கூப்பாடுபோடுகையில் யாழ்பாணத்தில் புதிதாக ஆசிரியர் கலாசாலை ஒன்றை கட்டுவதற்கு காணி இல்லை என்ற நிலை இருந்தபோது சித்தார்த்தன் அவர்கள் தனது பரம்பரைச் சொத்தில் 230 பரப்பு காணியை கோப்பாய் ஆசிரியர் கலாசாலை கட்டுவதற்கு வழங்கிவிட்டு இன்றுவரை தான் இவ்வாறு ஒர் காணியை வழங்கியிருக்கின்றேன் என எவ்விடத்திலும் சுட்டிக்காட்டியது கிடையாது.

எனவே தமிழ் மக்கள் தமது எதிர்காலத் தலைமையை தெரிந்தெடுக்கும்போது சித்தார்த்தன் அவர்களது ஆழுமை, தற்புகழ்சியற்ற தனிமனிதப்பண்புகளை கருத்தில் எடுக்கவேண்டும். தமிழ் ஊடகங்கள் பலவும் தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்காக இன்று தேர்தல் பிரச்சாரங்களை மேற்கொள்கின்றது. இவ்வூடகங்கள் தமது ஸ்தாபன மற்றும் சொந்த நலன்களுக்காகவே கூட்டமைப்பு சார்பான பிரச்சாரங்களை மேற்கொள்கின்றது என்பதனை மக்கள் தெரிந்து கொள்ளவேண்டும். இவ்வாறு தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்காக தீவிர பிரச்சாத்தில் பத்திரிகைகளில் உதயனும், இணையத்தளங்களில் லங்காசிறியின் தமிழ்வின் இணையத்தளமும் நிற்கின்றது.

இவ்விரு ஊடகங்களும் தமது ஸ்தாபன, சொந்த நலன்களுக்காக தமிழ் மக்களை தொடர்ந்தும் ஏமாற்ற முனைகின்றன. உதயன் பத்திரிகையின் சரவணபவான் தேர்தலில் போட்டியிடுகின்ற காரணத்தினால், அவர் தெரிவு செய்யப்பட்டால் அது தமது ஸ்தாபனத்திற்கு பலமாக அமையும் என்ற காரணத்தினால் அவர்போட்டியிடும் தமிழ் தேசியக் கூட்டமைப்புச் சார்பாக உதயன் பிரச்சாரங்களை மேற்கொள்கின்றது.

லங்காசிறியின் தமிழ்வின் இணையத்தளம் ஏன் தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்காக தேர்தல் பிரச்சாரங்களை மேற்கொள்கின்றது என பலருக்கும் தெரியாமல் இருக்கலாம். யாழ் மாவட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் போட்டியிடும் சிறிதரன் என்பவர் லங்காசிறி உரிமையாளர் சிறிகுகனின் சகோதரராவார். எனவே சிறிகுகன் (தமிழ்வின்) சிறிதரனுக்காக பிரச்சாரம் செய்கின்றார். எனவே இவ்விணையங்கள் தமிழ் மக்கள் மீது திணிக்கும் கருத்துக்களை மிகவும் அவதானத்துடன் அணுக வேண்டும். லங்காசிறி இணையத்தளம் முற்று முழுதாக வியாபார நோக்கம் கொண்டதோர் இணையமாகும். ஆனால் தமது வியாபாரத்தினை பெருக்குவதற்காக மிகவும் நச்சுத்தனமான பிரச்சாரங்களை அது மேற்கொண்டுவருவதையும் அப்பிரச்சாரங்களில் சுயநலன் இருப்பதையும் மேற்படி இத்தேர்தல் பிரச்சாரங்கள் எடுத்துக்கூறுகின்றது.

லங்காசிறி எனும் இணையம் எவ்வாறு பிரபல்யமானது? சிறிலங்கா எனும் பெயரை தலைகீழாக மாற்றி இணையம் ஒன்று இருக்கின்றது அதுவே லங்காசிறி என இளைஞர்களுக்கு கூறப்பட்டது. அப்பெயர் தமிழ் மக்களுக்கு மிகவும் இதமாக இருந்தது. ஆனால் அவ்விணையத்திற்கான பெயர் சிறிலங்காவை தலைகிழாக மாற்றி வைக்கப்படவில்லை என்பதையும், இணையத்தளத்தின் உரிமையாளர் சிறி, அவர் இலங்கையை சேர்ந்தவர். அதாவது இலங்கைசிறி : லங்காசிறி என பெயரிடப்பட்டது. அவர் அன்று ஏன் ஈழம்சிறி என அவ்விணையத்திற்கு பெயரிடவில்லை என்பதை மக்கள் சிந்தித்தால் இவர்களது தொலைநோக்கு புரியும்.

இன ஐக்கியத்தை வலியுறுத்தி அன்று இணையங்கள் செய்தி வெளியிட்டபோது அவை அரசாங்கத்தின் பொய்பிரச்சார ஊது குழல்கள் என தமிழ்வின் விமர்சித்தது. ஆனால் இன்று அரசாங்கத்தின் பிரச்சாரங்களை முன்னெடுப்பதில் முன்னணியில் நிற்கும் ஊடகமாக லங்காசிறி திகழ்கின்றது.

மூவின மக்களின் அர்ப்பணிப்பாலேயே இலங்கைக்கு சுதந்திரம் கிடைத்தது : இராணுவத்தளபதி யாழில் தெரிவிப்பு

தெல்லிப்பளை வைத்தியசாலைப் பிரதேசம் பாதுகாப்பு வலயத்திலிருந்து நீக்கம்

உதாரணத்திற்கு மேற்படி இணைப்புக்களை வாசித்து மக்கள் இவ்விணையம் தொடர்பான நம்பகத்தன்மையை ஊகித்துக்கொள்ளலாம். இன்றைய இராணுவத் தளபதி தொடர்பான இலவச விழம்பரம் செய்கின்றது லங்காசிறி.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு தொடர்பாக தமிழ்வின் மேற்கொள்ளும் பிரச்சாரம் வியாபாரநோக்கம் கொண்டதாகும். வன்னி மக்கள் இடைத்தங்கல் முகாம்களிலும் , தடுப்புக்காவல் முகாம்களிலும் முடங்கிக்கிடந்தபோது தமிழ் தேசியக் கூட்டமைப்பு மஹிந்தவின் அடுக்களையிலேயே கிடந்தது. அத்துடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் 22 பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் வடக்கிலிருந்து ஒருவர், கிழக்கிலிருந்து தேசியப்பட்டியல் ஊடாக ஒருவர் என 24 வடகிழக்கு பா.உ பாராளுமன்றில் இருந்தபோதும், வன்னி மக்கள் சார்பாகவும், முகாம்களில் அடைக்கப்பட்டுள்ள புலிகளில் குற்றமிளைக்காதோர் சார்பாகவும் தமிழ்வின் போன்ற இணையங்கள் இனவாதிகள் என மக்களுக்கு இனம் காட்டியிருந்த ஜேவிபி யினரே குரல் தொடுத்திருந்தனர். கைது செய்து தடுத்துவைக்கப்பட்டுள்ளவர்கள் தொடர்பாக ஜேவிபியின் பாராளுமன்ற குழுத் தலைவராக செயற்பட்ட அனுர குமார திஸாநாயக்க அவர்கள் விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டு பேசியிருந்தார். அவர் அங்கு பேசுகையில் 11000 மேற்பட்ட தமிழ் இளைஞர் யுவதிகள் தடுப்பு முகாம்களில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் உயிர்வாழ்கின்றார்களா? என்பது அவர்களது பெற்றோருக்கு தெரியாது. தனது குழந்தை உயிர்வாழ்கின்றதா இல்லையா என அறியும் உரிமை பெற்றோருக்கு உண்டு. ஆனால் அவ்வுரிமை அப்பெற்றோருக்கு மறுக்கப்பட்டுள்ளது. எனவே தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைவரதும் பெயர் விபரங்களை பாராளுமன்றில் சமர்ப்பிக்குமாறு அரசை அவர் வேண்டியிருந்தார். (அவர் பாராளுமன்றில் பேசிய விடயம் தொடர்பான வீடியோ இணைக்கப்பட்டுள்ளது, சிங்களத்தில் அவர் பேசும் விடயங்களை ஆர்வமுடையோர் தயவு செய்து மொழி பெயர்த்து கருத்துக்கள் பகுதியில் பதிவு செய்யவும்.)

http://www.youtube.com/watch?v=ZBRbnR-_0Lo&feature=related

http://www.youtube.com/watch?v=LDpuxORBaF0&feature=related

வடகிழக்கை சேர்ந்த 24 பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்றில் இருந்தும் தடுத்து வைக்கப்பட்டுள்ள இளைஞர் யுவதிகள் சார்பாக ஜேவிபி குரல் கொடுக்க நேரிட்டது. ஆனால் அவ்விடத்தில் சித்தார்தன் அல்லது அவர் தலைமையில் ஒரிருவர் இருந்திருந்தால் நிலைமைகள் எவ்வாறு இருந்திருக்கும் என்பதை ஊகிக்க தெரிந்த எம்மவர்கள் ஊகித்துக் கொள்வதுடன் உங்கள் வாக்குகள் மேலும் ஒருமுறை பச்சோந்திகளின் சுகபோக வாழ்விற்காக பயன்பட இடமளிக்கூடாது.


2 comments :

samo April 6, 2010 at 9:11 PM  

Writer is 100% correct.But the tamil community doesn't have the mentality to accept this truth.

Anonymous ,  April 7, 2010 at 5:32 PM  

தங்கத் தமிழினமே உன் வரலாற்றை கூர்ந்து கவனித்துப்பார்!!நீ என்றுமே பலபிரிவுகளாகவே வாழ்ந்துள்ளாய்,சேர,சோழ,பாண்டிய,பல்லவராக பின் மலையாளி,கன்னடன்,தெலுங்கன் ,தமிழன் ஆக,அப்புறம் காங்கிரஸ்,திமுக,அதிமுக என இந்தியாவிலும் இலங்கையில் தமிழ் காங்கிரஸ்,தமிழரசு கட்சி என,அப்புறம் கூட்டணியாகி பின்னர் போராடும்போது என பல குழுக்களாகவும் இருந்துள்ளன.அதுவே மனித சுதந்திரம்.அந்த சுதந்திர வேட்கையை அதிகாரத்தின் மூலம் அடக்கி ஒடுக்கியபோதே போராட்டங்கள் ஓங்கி வெடித்தன!அதை யார் அடக்கியாள நினைப்பினும் அதற்கெதிராக உண்மையான தமிழன் போராடுகிறான்.தமிழும் தமிழனின் உரிமையும் ஒரு குழுவின் சொத்துக்கிடையாது,அதற்காக எவரும் உரிமை கோரவோ,ஏகபிரதிநிதிகள் என உரிமை கொண்டாடவோ முடியாது.அது தமிழ் பேசுவோரின் பொதுச்சொத்து!!அதற்கு தேசியத்தலைமை தேவையில்லை.பல்லாண்டுகளாக வாழும் தமிழும் தமிழனும் இந்துமதம் போல எவர்துணையுமின்றி வளரும்.அதற்கு அகராதியை யாரும் வழங்கவேண்டிய அவசியமுமில்லை,வள்ளுவன் அன்றே அதை நன்றே செய்துவிட்டான்.அதன்படி வாழுபவனே தமிழன். மற்றோரெல்லாம் தமிழர் என சொல்லிக்கொள்பவர் மட்டுமே!அதை தடுக்கும் உரிமைகூட எவருக்குமில்லை.அன்று சிங்கள பராக்கிரமபாகுவை துணைக்கழைத்த பாண்டியனை துரோகி என சோழன் சொன்னதில்லை,அவன் தனது வீரத்தில்,அறத்தில் நம்பிக்கையுடன் போராடி வென்றான்.துரோகம் என்பது உண்ட வீட்டிற்கு இரண்டகம் செய்வது,நண்பனாகப்பழகி ஒட்டியுறவாடிவிட்டு பின்னாலிருந்து தாக்குவது.ஆகவே, இயக்கத்தை விட்டு பகிரங்கமாக வெளியேறியவர் எதிர்கட்சி தொடங்கினாலோ,மாற்றுக்கருத்துள்ளவர் எதிரியின் எதிரியோடு இராஜதந்திரநோக்கோடு(நிராஜ் டேவிட்டுக்கு நன்றி) சேர்ந்து தாக்கினாலோ துரோகம் கிடையாது.இயலாதவன் புலம்பல்!!இங்கும் நிராஜ் டேவிட்டுக்கே நன்றிகள்! நாம் செய்ததை எதிரி நமக்கு செய்கையில் அதை எப்படி துரோகம் என்பது!செஞ்சோற்றுக்கடனை வைகாசி ஒன்றில் அடித்ததுதான் உண்மையில் துரோகம்,அதைத்தான் முதுகில் குத்தும் நண்பனின் செயல் என்பது.அது ராஜதந்திரமென்று குறளில் கூறவே இல்லை.அதையே பச்சை துரோகம் என அதில் கூறியுள்ளார் உண்மை தமிழர் வள்ளுவர்!!தமிழனுக்கு தனிநாட்டைவிட புறம் பேசாமை,வாய்மை,விருந்தோம்பல்,புலான்மறுத்தல்,கள்ளாமை,பிறன்மனை கவராமை,கல்வி,மனைமாட்சி,நன்மகப்பேறு.... ..என்பவையே உயிரானவை.மேலும் தகவல்களுக்கு இல் பாருங்கள் புரியும் .நன்றி!!

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com