Wednesday, March 31, 2010

இலங்கை: அவசரகாலச் சட்டத்தை அகற்று! By the Socialist Equality Party (Sri Lanka)

சோசலிச சமத்துவக் கட்சி (சோ.ச.க.) நாட்டின் அவசரகால சட்டத்தை உடனடியாக அகற்றுமாறு கோருகின்றது. இது மார்ச் 1ம் திகதி ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷவால் புதுப்பிக்கப்பட்டு பாராளுமன்ற ஒப்புதலுக்காக மார்ச் 9 அன்று வாக்கெடுப்புக்கு வந்துள்ளது. ஏப்பிரல் 8 நடக்கவுள்ள பாராளுமன்ற தேர்தலின் பின்னர் அரசாங்கம் அமுல்படுத்தவுள்ள வயிற்றிலடிக்கும் நடவடிக்கைகளை தொழிலாளர்கள் மற்றும் கிராமப்புற வறியவர்கள் எதிர்க்கும் போது அதை நசுக்குவதற்காக இந்த கொடூரமான அவசரகால அதிகாரங்கள் பயன்படுத்தப்படும் என சோ.ச.க. எச்சரிக்கின்றது.

2005 ஆகஸ்ட்டில் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க அமுல்படுத்தியதில் இருந்து தற்போதைய அவசரகால நிலைமை நடைமுறையில் உள்ளது. 2005 நவம்பரில் ஜனாதிபதி தேர்தலில் வென்ற ஜனாதிபதி இராஜபக்ஷ, பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான தனது புதுப்பிக்கப்பட்ட யுத்தத்தை பயன்படுத்தி, அவசரகால விதிகளை தொடர்ந்தும் நடைமுறைப்படுத்தி வந்தார். கடந்த ஐந்து ஆண்டுகளாக, பாராளுமன்றத்தில் இருதரப்பினரும் இந்த நடவடிக்கைகளை அங்கீகரித்தன.

புலிகளின் கட்டுப்பாட்டில் கடைசியாக எஞ்சியிருந்த பிராந்தியத்தையும் இராணுவம் கைப்பற்றி ஒன்பது மாதங்கள் கடந்த பின்னும், அரசாங்கமும் இன்னமும் அவசரகால சட்டத்தை நீடிப்பதை நியாயப்படுத்த "பயங்கரவாதம்" என்ற பேயை கிளப்புகிறது. கடந்த மாதம் பாராளுமன்ற அங்கீகாரத்துக்காக அவசரகால பிரகடனத்தை முன்வைத்த பிரதமர் ரட்னசிறி விக்கிரமநாயக்க, "பயங்கரவாதம் அதன் அசிங்கமான தலையை மீண்டும் தூக்குவதற்கு அனுமதிக்க முடியாது... அரசின் எதிரிகள் ஒன்றுசேரவும் ஐக்கியப்படவும் முயற்சிப்பதால் அவசரகால சட்டம் தேவை," எனக் கூறிக்கொண்டார்.

இராஜபக்ஷவின் எதேச்சதிகார ஆட்சியின் களஞ்சியத்தில் உள்ள ஆயுதங்களில் அவசரகால சட்டமும் ஒன்று. பெப்பிரவரி 8 அன்று, எதிர்க் கட்சி வேட்பாளரும் ஓய்வுபெற்ற ஜெனரலுமான சரப் பொன்சேகா, சதிப் புரட்சியன்றை திட்டமிட்டார் என்ற ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களின் பேரில், அரசாங்கம் அசாதாரணமான முறையில் அவரை கைது செய்ய நடவடிக்கை எடுத்தது. ஜனவரி 26 நடந்த ஜனாதிபதி தேர்தலில் தோல்விகண்ட பொன்சேகா, கடற்படை தலைமையகத்தில் இராணுவப் பொலிசாரால் தடுத்து வைக்கப்பட்டுள்ளதோடு, அவர் மீது குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்படவில்லை. பொலிசார் பொன்சேகாவின் மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி (யூ.என்.பி.), மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) போன்ற எதிர்க் கட்சிகளதும் ஆதரவாளர்களையும் தடுத்து வைத்துள்ளனர்.

பாராளுமன்ற தேர்தலுக்கு முன்னதாக அரசாங்கம் எதிர்க் கட்சிகள் மீது பாய்வதானது, தொழிலாள வர்க்கத்துடனான மோதலுக்கான தயாரிப்பில் அதன் அதிகாரங்களை பலப்படுத்திக்கொள்வதற்கே ஆகும். நாடு கடுமையாக கடன்பட்டுள்ளதோடு வரவு-செலவுத் திட்ட பற்றாக்குறையை பாதிக்கும் மேல் குறைக்குமாறு சர்வதேச நாணய நிதியம் கொடுக்கும் அழுத்தத்துக்கும் உள்ளாகியுள்ளது. தேர்தல் ஒரு இடையூறாக இல்லாமல் போகும் பட்சத்தில், இராஜபக்ஷ உழைக்கும் மக்களின் வாழ்க்கைத் தரத்துக்கு எதிரான தாக்குதலை முன்னெடுப்பதோடு எந்தவொரு எதிர்ப்பையும் நசுக்குவதற்காக கடந்த 26 ஆண்டுகால யுத்தத்தின் போது கட்டியெழுப்பப்பட்ட பொலிஸ் அரச நடவடிக்கைகளையும் பயன்படுத்துவார்.

அவசரகாலச் சட்டம் புதுப்பிக்கப்பட்டமை, இரண்டு காரணங்களுக்கு சேவை செய்கின்றது. முதலில், சிங்கள மற்றும் தமிழ் தொழிலாளர்களை பிளவுபடுத்துவதன் பேரில் "பயங்கரவாதம்" சம்பந்தமான பீதியை கிளப்பவும் மற்றும் இனவாத பதட்ட நிலைமைகளை உக்கிரமாக்கவும் மேற்கொள்ளப்படும் தொடர்ச்சியான அரசாங்கப் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக அது உள்ளது. இரண்டாவதாக, இந்த அவசரகாலச் சட்டமானது, கட்டிடங்களை சோதனையிடவும், குற்றஞ்சாட்டுக்கள் இன்றி எவரையும் தடுத்து வைக்கவும், கூட்டங்களையும் ஆர்ப்பாட்டங்களையும் தடை செய்யவும், ஊடகங்களை தணிக்கை செய்யவும், தொழிற்சங்க நடவடிக்கைகளை சட்ட விரோதமாக்கவும், தொழிலாளர்களை வேலை நீக்கம் செய்யவும் மற்றும் அத்தியாவசிய சேவைகளை முன்னெடுக்க ஆயுதப்படைகளை அணிதிரட்டவும் பரந்த அதிகாரங்களை இராஜபக்ஷவுக்கு வழங்குகின்றது.

கடந்த நான்கு ஆண்டுகளாக, நாட்டின் தமிழ் சிறுபான்மையினரை திட்டமிட்டு அடக்கவும் மற்றும் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவும் ஒரு பிரதான சக்தியாக அவசரகால அதிகாரங்கள் அரசாங்கத்தால் பயன்படுத்தப்பட்டுள்ளன. பத்தாயிரக்கணக்கானவர்கள் "புலி சந்தேக நபர்களாக" கைது செய்யப்பட்டுள்ளதோடு, அவசரகால சட்டத்தின் கீழ் அல்லது அதனுடன் இணைந்த பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் அவர்களது அடிப்படை ஜனநாயக உரிமைகளை வெளிப்படையாக மீறி விசாரணையின்றி தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்படுவதை விட, அவசரகாலச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்படுவது பயங்கரமானதாகும். "தேசிய பாதுகாப்புக்கு" குந்தகமான விதத்தில் செயற்படும் எவரும் பாதுகாப்புச் செயலாளரின் கட்டளையின் கீழ் தடுத்து வைக்கப்பட முடியும் --தற்போது ஜனாதிபதியின் சகோதரரே பாதுகாப்புச் செயலாளராக உள்ளார். ஆகஸ்ட் 2008ல், விசாரணையின்றி தடுத்து வைக்கும் காலம் 12 முதல் 18 மாதங்கள் வரை என நீடிக்கப்பட்டு இந்தச் சட்டம் திருத்தப்பட்டது. 30 நாட்களின் பின்னர் கைதிகள் நீதிமன்றத்துக்கு கொண்டுவரப்படுவர். ஆனால் அவர்களை விடுதலை செய்யும் அதிகாரம் நீதிமன்றுக்கு கிடையாது.

அவசரகாலச் சட்டம் ஏற்கனவே தொழிலாள வர்க்கத்துக்கு எதிராக பயன்படுத்தப்பட்டுள்ளது. 2006 ஆகஸ்ட்டில், யுத்தம் மீண்டும் தொடங்கி இரண்டே வாரங்களுள் மத்திய வங்கி, எரிபொருள் விநியோகம், தபால் மற்றும் தொலைத்தொடர்பு, ஏற்றுமதி தொழிற்துறை மற்றும் பொதுப் போக்குவரத்தையும் இராஜபக்ஷ "அத்தியாவசிய சேவையாக" பிரகடனம் செய்ததோடு, அதனால் அங்கு தொழிற்சங்க நடவடிக்கைகள் தடைசெய்யப்டும் நிலையில் வைக்கப்பட்டன. சம்பள உயர்வு கோரி துறைமுகத் தொழிலாளர்கள் சட்டப்படி வேலை செய்யும் பிரச்சாரத்துக்கு பிரதிபலித்த அவர், தனது அதிகார நகர்வுகளை நியாயப்படுத்தினார்.

யுத்த காலத்தின் போது, இராஜபக்ஷ வேலை நிறுத்தம் செய்த தொழிலாளர்களை தேசிய பாதுகாப்பை கீழறுப்பவர்கள் என்றும் "பயங்கரவாதிகளுக்கு" உதவுகிறார்கள் என்றும் மீண்டும் மீண்டும் குற்றஞ்சாட்டினார். 2008ல், சம்பள உயர்வு கோரி சுகாதார ஊழியர்கள் வேலை நிறுத்தம் செய்த போது, அதை தகர்ப்பதற்காக அவர் ஆஸ்பத்திரிகளில் இராணுவத்தை நிறுத்தினார். புலிகளின் தோல்வியின் பின்னர், தான் "தேசத்தை கட்டியெழுப்பும்" "பொருளாதார யுத்தம்" ஒன்றை முன்னெடுக்கப் போவதாக ஜனாதிபதி பிரகடனம் செய்தார். அவர் தனது பொருளாதார நிகழ்ச்சி நிரலை அமுல்படுத்தும் போது, தமது அடிப்படை உரிமைகளை காக்கப் போராடும் உழைக்கும் மக்களை "துரோகிகள்" என முத்திரை குத்தவும் இராஜபக்ஷ தயங்கமாட்டார் என்பதில் சந்தேகம் இல்லை.

நவம்பரில், இராஜபக்ஷ முதல் தடவையாக, சம்பள உயர்வு கோரி இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம், இலங்கை மின்சார சபை, நீர்வழங்கல் சபை மற்றும் துறைமுகத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடுவதை தடை செய்ய அவசரகாலச் சட்டத்தின் கீழ் அத்தியாவசிய சேவைகள் உத்தரவை பிரப்பித்தார். இந்த முடிவுக்கு எதிராக பிரச்சாரமொன்றை முன்னெடுப்பதற்கு மாறாக, அதை ஏற்பாடு செய்த தொழிற்சங்கங்கள் அதற்கு வளைந்து கொடுத்தன.

இலங்கையில் அவசரகாலச் சட்டத்தின் முழு வரலாறும், அது தொழிலாள வர்க்கத்துக்கு எதிராகப் பயன்படுத்தப்பட்டுள்ளதையே காட்டுகின்றன. சுதந்திரத்துக்கு சற்று முன்னதாக 1947ல், பொது வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்யுமாறு ஆளுனர் கட்டளையிட்டு சில நாட்களின் பின்னர், பிரிட்டிஷ் காலனித்துவ நிர்வாகம் பொது பாதுகாப்பு சட்டத்தை அறிமுகம் செய்தது. அதைத் தொடர்ந்து ஆட்சியில் இருந்த கொழும்பு அரசாங்கங்கள், ஒவ்வொரு அரசியல் நெருக்கடியின் போதும் -குறிப்பாக 1953ல் பொது வேலை நிறுத்தமும் ஹர்த்தாலும் தீவை ஆட்டுவித்த போது- அவசரகாலச் சட்டத்தை நாடின. சில ஆண்டுகள் தவிர, 1979ல் இருந்து அவசரகாலச் சட்டம் அமுலில் இருந்து வந்துள்ளது.

அவசரகாலச் சட்டத்தை எதிர்க்க தொழிலாளர்கள் எதிர்க் கட்சிகள் மீது நம்பிக்கை வைக்க முடியாது. யூ.என்.பி. மற்றும் ஜே.வி.பி. யும் அரசாங்கத்தைப் போலவே அதே சிங்கள மேலாதிக்கவாதத்தில் ஊறிப் போயுள்ளன. அவை, இராஜபக்ஷவின் இனவாத யுத்தத்தை ஆதரித்ததோடு அவரசரகால அதிகாரத்தை புதுப்பிக்க ஒவ்வொரு மாதமும் வழமையாக அதற்கு வாக்களித்தன. இராஜபக்ஷவின் ஜனநாயக-விரோத வழிமுறைகள் பற்றி பொதுமக்கள் அக்கறை காட்டுவது அதிகரித்துள்ள நிலையில், யூ.என்.பி. மற்றும் ஜே.வி.பி.யும் ஜனநாயக உரிமைகளின் பாதுகாவலர்களாக மோசடித்தனமாக காட்டிக்கொள்ளத் தொடங்கியுள்ளன. எவ்வாறெனினும், பாராளுமன்றத்தில் அவர்களது "எதிர்ப்பு", தமக்கு எதிராக அவசரகாலச் சட்டத்தை பயன்படுத்த வேண்டாம் என இராஜபக்ஷவுக்கு வேண்டுகோள் விடுக்குமளவுக்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த மூன்று மாதங்களாக, ஜே.வி.பி. அவசரகால சட்டத்துக்கு வாக்களிப்பதை புறக்கணித்து வந்தாலும், அதற்கு எதிராக வாக்களிக்கவில்லை. கடந்த மாத வாக்களிப்பின் போது, யூ.என்.பி. பாராளுமன்ற உறுப்பினர்கள் வாக்களிப்பை புறக்கணித்துக்கொண்டு, ஒரே ஒரு பாராளுமன்ற உறுப்பினரை மட்டும் எதிர்த்து வாக்களிக்க அனுமதித்தனர்.

தொழிலாளர்கள் தமது சொந்த சுயாதீன பலத்தில் தங்கியிருக்க வேண்டும். சோ.ச.க. உழைக்கும் மக்களின் உரிமைகளை காக்க வேலைத் தளங்களிலும், பெருந்தோட்டங்களிலும், தொழிலாள வர்க்க பிரதேசங்களிலும் நகரங்களிலும் மற்றும் கிராமங்களிலும் நடவடிக்கை குழுக்களை அமைக்குமாறு அழைப்பு விடுக்கின்றது. பயங்கரவாத தடைச் சட்டத்தையும் சகல ஒடுக்குமுறை சட்டங்களையும் தூக்கிவீசவும், அதே போல் மத, மொழி மற்றும் இன அடிப்படையிலான பாகுபாட்டுக்கும் முடிவுகட்டுவதற்குமான பரந்த பிரச்சாரத்தின் பாகமாக, அவசரகாலச் சட்டத்தை அகற்றுமாறு நாம் கோருகிறோம். குற்றச்சாட்டுக்கள் இன்றி தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் அனைவரும் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும், தற்போது ஒரு இலட்சத்துக்கும் மேலான தமிழர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ள "நலன்புரி கிராமங்களை" இழுத்து மூட வேண்டும் மற்றும் வடக்கு-கிழக்கில் இராணுவ ஆக்கிரமிப்புக்கு முடிவுகட்ட வேண்டும் என சோ.ச.க. அழைப்புவிடுக்கின்றது.

ஜனநாயக உரிமைகளைக் காப்பதற்கான போராட்டமானது, சமுதாயத்தை ஒரு சில செல்வந்தர்களின் இலாபத்துக்காக அன்றி, பெரும்பான்மையான உழைக்கும் மக்களின் தேவைகளை இட்டுநிரப்பும் வகையில் மறு ஒழுங்கு செய்யும் சோசலிச வேலைத்திட்டத்துக்கான பரந்த போராட்டத்துடன் பிணைக்கப்பட்டுள்ளது. தெற்காசியா மற்றும் உலகம் பூராவும் சோசலிசத்துக்கான போராட்டத்தின் பாகமாக, இலங்கையில் தொழிலாளர்-விவசாயிகள் அரசாங்கத்துக்காக சோ.ச.க. போராடுகிறது. எமது தேர்தல் பிரச்சாரத்தில் செயலூக்கத்துடன் பங்குபற்றுமாறு நாம் தொழிலாளர்கள், இளைஞர்கள் மற்றும் புத்திஜீவிகளுக்கும் அழைப்பு விடுக்கின்றோம்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com