Saturday, March 6, 2010

தமிழக மக்களின் உணர்வுகளை மழுங்கடிக்கவே நிருபமா இலங்கை வந்துள்ளார். விக்கிரமபாகு

இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக தமிழ்நாட்டில் ஏற்பட்டுவரும் உணர்வை மழுங்கடிக்கவே இந்திய அயலுறவுச் செயலர் நிருபமா ராவ் சிறிலங்க பயணம் மேற்கொள்கிறார் என்று இலங்கை இடதுசாரி விடுதலை முன்னணியின் தலைவர் விக்கிரமபாகு கருணாரட்ன கூறியுள்ளார்.

நிருபமாவின் இலங்கைப் பயணம் குறித்து கருணாரட்ன வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

“தமிழகத்தில் ஏற்பட்டுள்ள உணர்வுபூர்வமான செயற்பாடுகளைத் தடுப்பதற்காகவே இந்திய அயலுறவுச் செயலர் நிருபமா ராவ் சிறிலங்காவுக்கு பயணம் மேற்கொள்கிறார்.

விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் சிறிலங்காவிற்கு இந்திய மத்திய அரசு முழுமையான ஆதரவை அளித்தது. ஆனால் தற்போது 13வது திருத்தச் சட்டத்திற்கு அப்பால் ஒரு அரசியல் தீர்வுத் திட்டத்தை காண்பதற்கு முயன்று வருகின்றது.

ஈழத் தமிழர்களின் பிரச்சனையில் தமிழகத் தலைவர்களிடம் ஏற்பட்டுவரும் மாற்றங்களை மழுங்கடிப்பதற்கே தற்போது இந்தியா முயன்று வருகின்றது. தமிழ் மக்களின் பிரச்சனைகள் தொடர்பில் இந்தியாவில் உள்ள இடதுசாரி கட்சிகளும் சிறீலங்காவுக்கு எதிரான கருத்துக்களை வெளியிட ஆரம்பித்துள்ளன. அவற்றை எல்லாம் மழுங்கடிப்பதற்கே இந்தியா தற்போது முயன்று வருகின்றது. அதற்காகவே நிருபமா சிறீலங்கா வந்துள்ளார்.

அமெரிக்காவும், இங்கிலாந்தும் இப்போது முதலைக்கண்ணீர் வடிக்கின்றன. ஆனால் விடுதலைப்புலிகளை முறியடிப்பதற்கு அவர்கள் தான் சிறீலங்கா அரசுக்கு பணமும், ஆயுதங்களும் வழங்கியவர்கள். தற்போது அவர்கள் அரசியல் தீர்வு பற்றிப் பேசி வருகின்றனர்.

சிங்கள இன கடும்போக்காளர்களை கொண்ட அரசிடம் இருந்து நாம் எவ்வாறு அதிகாரப்பகிர்வை எதிர்பார்க்க முடியும்? அவர்கள் தற்போது உள்ளூராட்சி சபைகளுக்கு எதனை வழங்கியுள்ளார்களோ அதனை தவிர நாம் எதனையும் அவர்களிடம் இருந்து பெறமுடியாது” என அவர் கருணரட்ன தெரிவித்துள்ளார்.

இடதுசாரி போர்வை போர்த்துள்ள விக்கிரமபாகு மேற்குலகத்தினதும் மஹிந்தவினதும் ஊதுகுழல் என்பது பலரும் அறிந்திராத விடயம். இலங்கை தமிழர்களுக்கான அரசியல் தீர்வு ஒன்று தொடர்பாக இந்திய அரசோ மேற்குலகமோ அரசு மீது அழுத்தம் ஒன்றை பிரயோகிக்க முனையும் போது, குறிப்பிட்ட நாடுகள் புலிகளை அழிப்பதற்கு உதவி வழங்கிய விடயங்களை அம்பலப்படுத்துவோம் என மறைமுகமாக விடுக்கும் எச்சரிக்கையாகவே மேற்படி அறிக்கை அமைந்துள்ளது.

1 comments :

Anonymous ,  March 7, 2010 at 7:09 PM  

Attractive comments cannot be useful to the tamil population.We should know Indian goverment plays an important role in Srilankan politics.
It's unavoidable as such we should tactfully finish off everything with the help of Indian government.Beating about the bush is an unhealthy political tactics.

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com