Wednesday, March 24, 2010

விகிதாசாரத் தேர்தல் முறையும், சிறுபான்மை சமூகத்தவர்களும் -04 – புன்னியாமீன்

சிறுபான்மையினரின் அங்கத்துவம் அதிகரிப்பதனால் மாத்திரம் உரிமைகளைப் பெற்றுவிட முடியாது. உணர்வுபூர்வமான பிரதிநிதித்துவம் தேவை.

விகிதாசார பிரதிநிதித்துவமுறையின் போனஸ் ஆசனமுறை, வெட்டுப்புள்ளி வாக்குகள் பெறாத கட்சிகளை போட்டியிலிருந்து நீக்குதல், தொடர்புடைய வாக்குகளைக் கணிப்பீடு செய்தல், முடிவான எண்ணைக் கணிப்பீடு செய்தல், முடிவான எண்ணுக்கமைய ஆசனங்களைப் பகிர்தல், பிரச்சினைக்குரிய ஆசனங்கள் இருப்பின் மிகப் பெரும் பகுதி மிகுதி முறைக்கமைய ஆசனங்களை ஒதுக்கீடு செய்தல் ஆகிய தலைப்புக்களை கடந்தவாரம் நோக்கினோம். மேற்படி ஆறு படிமுறைக்கு அமையவே இலங்கையிலுள்ள 22 தேர்தல் மாவட்டங்களிலிருந்தும் 196 பிரதிநிதிகள் தெரிவு செய்யப்படுவர்.

தேசியபட்டியல் மூலம் மீதான பிரதிநிதிகளைத் தெரிவு செய்தல்


இலங்கைப் பாராளுமன்றத்தின் மொத்தப் பிரதிநிதிகள் எண்ணிக்கை 225 ஆகும். இதில் 196 பிரதிநிதிகள் 22 தேர்தல் மாவட்டங்களில் இருந்தும் மீதான 29 பிரதிநிதிகள் தேசிய பட்டியல் மூலமாகவும் தெரிவு செய்யப்படுவர்.

தேசிய பட்டியல் என்றால் என்ன?

விகிதாசார தேர்தல் முறையின் கீழ் பாராளுமன்றப் பொதுத் தேர்தலொன்றுக்கு நியமனப் பத்திரம் கோரப்படும்போது 29 பெயர்களைக் கொண்ட பட்டியலொன்றினையும் தாக்கல் செய்யும்படி தேர்தல் ஆணையாளர் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளையும், சுயேட்சைக் குழுக்களையும் கேட்டுக் கொள்வார். இப்பட்டியல் தரப்படுத்தப்பட்டதாக அமைதல் வேண்டும்.

ஒரு அரசியல் கட்சி எத்தனை தேர்தல் மாவட்டத்தில் போட்டியிட்டாலும்கூட 29 பெயர்களைக் கொண்ட ஒரு பட்டியலை மாத்திரமே தர்கல் செய்ய முடியும். இப்பட்டியலே தேசியப்பட்டியல் எனப்படுகிறது. சுயேட்சைக்குழுக்கள் (விரும்பின்) இப் பட்டியலை தாக்கல் செய்யலாம்.

பொதுத் தேர்தலின் முடிவில் போட்டியிட்ட அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளும், தனித்தனி சுயேட்சைக் குழுக்களும் தேசிய ரீதியில் பெற்றுக்கொண்ட வாக்கு விகிதாசாரத்துக்கமைய தேசிய பட்டியல் பிரதிநிதித்துவம் தீர்மானிக்கப்படும்.

எமது தெளிவிற்காக 2000 ஆண்டு பாராளுமன்றப் பொதுத் தேர்தல் முடிவுகளை உதாரணமாகக் கொண்டு இதனை ஆராய்வோம்.

2000ம் ஆண்டு பொதுத் தேர்தலில்:

தெரிவாக வேண்டிய அங்கத்தவர் எண்ணிக்கை : 225

பதிவுசெய்யப்பட்ட வாக்குகள் : 12,071,062
அளிக்கப்பட்ட வாக்குகள் : 9,128,832 (75.62%)
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் : 481,155
செல்லுபடியான வாக்குகள் : 8,647,668

மேற்படி பொதுத் தேர்தலில் அங்கீகரிக்கப்பட்ட 29 அரசியல் கட்சிகளும் 99 சுயேட்சைக் குழுக்களும் போட்டியிட்டன. இவற்றுள் அகில இலங்கை ரீதியில் ஒரு இலட்சத்துக்கு (1,00000) அதிகமான வாக்குகளைப் பெற்ற கட்சிகளை நோக்குவோம்.

பொதுசன ஐக்கிய முன்னணி 3,900,901 (45.10%)
ஐக்கிய தேசிய கட்சி 3,477,770 (40.21%)
மக்கள் விடுதலை முன்னணி 518,774 (5.99%)
தேசிய ஐக்கிய முன்னணி 197,983 (2.28 %)
சிஹல உறுமய 127,863 (1.47 %)
தமிழர் விடுதலைக் கூட்டணி 106,033 (1.22 %)

ஏனையவை அனைத்தும் 1,00000க்கும் குறைவாகவே வாக்குகளைப் பெற்றன.

தேசிய பட்டிலுக்கான குறைந்த பட்ச வாக்குகளைக் கணித்தல்

தேசிய ரீதியில் செல்லுபடியான மொத்த வாக்குகளை 29ஆல் வகுக்கும்போது தேசியபட்டியலுக்கான குறைந்த பட்ச வாக்குகளைக் கண்டு கொள்ள முடியும்.

2000ம் ஆண்டு நாடாளுமன்றப் பொதுத் தேர்தலில் தேசிய பட்டியலுக்கான
குறைந்தபட்ச வாக்கு = 8,647,668 / 29
= 298,195 ஆகும்.

இந்த வாக்கினை ஒரு அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி அல்லது சுயேட்சைக்குழு பெற்றிருப்பின் தேசிய பட்டியல் பிரதிநிதியொருவரைப் பெற உரித்தாகின்றது.

இனி கட்சிகளுக்கு தேசிய பட்டியலை ஒதுக்கீடு செய்யும்போது அகில இலங்கை ரீதியில் கட்சிகள் பெற்ற மொத்த வாக்குகள் தேசியப் பட்டியலுக்குரிய குறைந்தபட்ச வாக்கினால் வகுக்கப்படும். முதலில் முழுமையான எண்ணுக்கமைய ஆசனம் ஒதுக்கீடு செய்யப்பட்டு, மேலும் ஆசனம் தேவையெனின் மிகப்பெரும் மிகுதி முறைக்கமைய பகிரப்படும்.

பொதுசன ஐக்கிய முன்னணி பெற்ற மொத்த வாக்குகள் 3,900,901 ஆகும். இதனை 298,195 ஆல் வகுக்கும்போது ‘13’ உம் மிகுதியாக 24366 வாக்குகளும் வரும். எனவே முழுமையான எண்ணுக்கமைய பொதுசன ஐக்கிய முன்னணி 13 தேசியப்பட்டியல் உறுப்பினர்களைப் பெற உரித்துடையது.

அடுத்து இரண்டாவது அதிகப்படியுமான வாக்குகளைப் பெற்ற ஐ.தே.க. 11 தேசியப்பட்டியல் உறுப்பினர்களைப் பெற உரித்துடையது.

மூன்றாவது இடத்தைப் பெற்ற கட்சி மக்கள் விடுதலை முன்னணியாகும். இக்கட்சி பெற்ற மொத்த வாக்குகளான 518,774 ஐ 298,195 ஆல் வாக்கினால் வகுக்கும்போது ‘1’ உம் மிகுதியாக 220579 வாக்குகளும் வரும். எனவே முழுமையான எண்ணுக்கமைய ம.வி. முன்னணி ஒரு தேசியல்பட்டியல் உறுப்பிரைப் பெற்றுக்கொள்ள உரித்துடையது.

2000ம் ஆண்டு பாராளுமன்றப் பொதுத் தேர்தலில் மேற்படி 3 கட்சிகளையும் தவிர வேறு எந்தவிதமான அரசியல் கட்சிகளோ அல்லது சுயேட்சைக்குழுக்களோ தேசியபட்டிலுக்குரிய குறைந்த பட்ச வாக்கினைவிட அதிகமாகப் பெறவில்லை. ஆகவே இங்கும் மிகப் பெரும் மிகுதி முறையைப் பயன்படுத்த வேண்டும்.

முழுமையான எண்களுக்கமைய பொ.ஐ.மு. 13 உறுப்பினர்களையும், ஐ.தே.க. 11 உறுப்பினர்களையும், ம.வி.மு 1 உறுப்பினர்களையுமாக மொத்தம் 25 உறுப்பினர்களைப் பெற்றுக் கொண்டன. மேலும் 4 தேசிய பட்டியல் உறுப்பினர்கள் தெரிவாக்கப்படல்; வேண்டும். எனவே மிகப்பெரும் மிகுதிக்கமைய பின்வரும் அந்த 4 உறுப்பினர்களும் தீர்மானிக்கப்படுவர்.

பொ.ஐ.மு. மீதி - 24,366
ஐ.தே.க. - 197,625
ம.வி.மு. - 220,579
தே.ஐ.மு. பெற்ற வாக்குகள்- 197,983
சிஹல உருமய - 127,863

இதன் படி ஆகக் கூடுதலான மிகுதியைப் பெற்றுள்ள ம.வி.முன்னணி ஒரு பிரதிநிதியையும், 2வது மிகுதியைப் பெற்றுள்ள தே.ஐ.முன்னணி ஒரு பிரதிநிதியையும், 3 வது மிகுதியைப் பெற்றுள்ள ஐ.தே.கட்சி ஒரு பிரதிநிதியையும், 4 வது மிகுதியைப் பெற்றுள்ள சிஹல உருமய ஒரு பிரதிநிதியையும் பெற்றுக் கொள்ளும்.

பொ.ஐ.மு முழுமையான எண்ணுக்கமைய 13 தேசியப்பட்டியல் பிரதிநிதிகளைப் பெற்றுக் கொள்ளும். மிகப்பெரும் மிகுதிக்கமைய பிரதிநிதிகளைப் பெற முடியாது. ஆகவே பொ.ஐ.மு மொத்தமாகப் பெற்றுக்கொண்ட தேசியப்பட்டியல் பிரதிநிதிகளின் எண்ணிக்கை 13 ஆகும்.

ஐ.தே.க முழுமையான எண்ணுக்கமைய 11 தேசியப்பட்டியல் பிரதிநிதிகளையும் மி கப்பெரும் மிகுதிக்கமைய 1 பிரதிநிதியையும் பெற்றுக் கொள்ளும். ஆகவே ஐ.தே.க மொத்தமாகப் பெற்றுக்கொண்ட தேசியப்பட்டியல் பிரதிநிதிகளின் எண்ணிக்கை 11+1 = 12 ஆகும்.

ம.வி.மு முழுமையான எண்ணுக்கமைய 1 தேசியப்பட்டியல் பிரதிநிதியையும் மி கப்பெரும் மிகுதிக்கமைய 1 பிரதிநிதியையும் பெற்றுக் கொள்ளும். ஆகவே ம.வி.மு மொத்தமாகப் பெற்றுக்கொண்ட தேசியப்பட்டியல் பிரதிநிதிகளின் எண்ணிக்கை 1+1 = 2 ஆகும்.

தே.ஐ.மு, சிஹல உருமய ஆகியன மிகப் பெரும் மிகுதி முறைக்கமைய ஒவ்வொரு ஆசனங்களைப் பெற்றுக் கொள்ளும். இந்த அடிப்படையில் தேசியப்பட்டியல் 29 பிரதிநிதிகளும் பகிரப்படுவர்.

தேசியப்பட்டியல் பிரதிநிதித்துவத்திற்கு வெட்டுப்புள்ளி வாக்குகள் 5% பாதிப்பைச் செலுத்த முடியாது.

2000ம் ஆண்டு பாராளுமன்றத்தேர்தல் முடிவினூடாக நோக்குமிடத்து சிறிய கட்சிகளான ம.வி.முன்னணி 2 உறுப்பினர்களைப் பெற்றுக் கொள்ளவும், தே.ஐ.மு. 1 உறுப்பினர்களைப் பெற்றுக் கொள்ளவும், மாவட்ட ரீதியில் போட்டியிட்டு அனைத்து மாவட்டங்களிலும் தோல்வியடைந்த சிஹல உருமய ஒரு உறுப்பினரையாவது பெற்றுக் கொள்ளவும் தேசியப்பட்டியல் துணை புரிந்துள்ளது.

அதே நேரததில் பிரதான கட்சிகளும், தேசியப்பட்டியல் மூலமாக சிறுபான்மையினருக்கு இடம் வழங்க வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு உள்ளாககப்படுகின்றது. 2000 ஆம் ஆண்டு பாராளுமன்றப் பொதுத் தேர்தலை அடுத்து பொது ஜன ஐக்கிய முன்னணியின் தேசியப் பட்டியல் மூலமாக லக்ஸ்மன் கதிர்காமர், அலவி மௌலானா, யூ.எல்.எம் ஹனீபா, மாரிமுத்து, ரிஸ்வி சின்னலெப்பை, ஆகிய சிறுபான்மைப் பிரதிநிதிகளும், ஐக்கிய தேசியக்கட்சியின் தேசியப்பட்டியல் மூலமாக ஏ.எச்.எம் அஸ்வர், எம்.எஸ்.செல்லச்சாமி, அப்துல் மஜீட், பி.பி. தேவராஜ், கனகராஜா போன்ற சிறுபான்மைப் பிரதிநிதிகளும், மக்கள் விடுதலை முன்னணி மூலமாக அன்ஜாத் உம்மா (இலங்கையிலே முதலாவது முஸ்லிம் பெண் பாராளுமன்றப் பிரதிநிதி) ஆகியோரும் தெரிவு செய்யப்பட்டமை தேசியப்பட்டியல் சிறுபான்மையினருக்கு வாய்ப்பானதொன்று நிராகரித்து விட முடியாதுள்ளது.

குறிப்பாக விகிதாசார தேர்தல் முறையின் கீழ் தனியொரு கட்சிக்கு தனது பெரும்பான்மையினை பெற்றுக் கொள்வது கடினமான நிலை காணப்பட்டமையினால் சிறிய கட்சிகள் சிறுபான்மை கட்சிகளுடன் இணைந்தே பிரதான கட்சிகள் அரசாங்கத்தை அமையக்கக்கூடிய நிலை ஏற்பட்டன. இதனால் அக்கட்சிகளை திருப்திப்படுத்திக் கொள்ள தேசியபட்டியலினூடாக பிரதிநிதித்துவத்தை வழங்க வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு பிரதான கட்சிகள் தள்ளப்படுகின்றன. மேற்குறிப்பிட்ட நிலையின் கீழ் தேசியபட்டியலினூடாக சில சிறுபான்மைத்துவம் இடம்பெற்றாலும்கூட, அப்பிரதிநிதித்துவங்கள் தமது இனத்துக்காக அல்லது இனத்தின் உரிமைக்காக எத்தகைய பங்களிப்பினை ஆற்றியன என்பது கேள்விக் குறியே.

குறிப்பாக இலங்கையில் காணப்படக்கூடிய விகிதாசார முறைக்கமைய பாராளுமன்றத்தில் சிறுபான்மை அங்கத்துவம் அதிகரித்துக் காணப்பட்டது என்பது ஏதோ உண்மைதான். ஆனால், சிறுபான்மையினரின் உரிமையைப் பெற்றுக்கொள்ள பாராளுமன்றத்தில் அங்கத்துவர் எண்ணிக்கையால் மாத்திரம் உறுதிப்படுத்தப்படுவதில்லை என்பதை கடந்த கால அனுபவங்களினூடாக எம்மால் காணமுடிந்தது. எனவே, பாராளுமன்றத்தில் சிறுபான்மை அங்கத்தவர் என்பதை விட, உணர்வுபூர்வமான செயல்திறன்மிக்க அங்கத்துவமே தேவைப்படுகின்றது.

கட்சிகளால் தேர்தல் காலத்தில் தாக்கல் செய்யப்படக்கூடிய பட்டியலுக்கமையவே தேர்தல் ஆணையாளரினால் தேசியபட்டியல் பிரதிநிதித்துவம் வழங்கப்பட்டாலும் கூட, இலங்கையில் தேர்தல் சட்ட மூலத்தின் கீழ் கட்சிகளின் செயலாளரினால் சிபாரிசு பண்ணக்கூடிய பிரதிநிதியையும் தேர்தல் ஆணையாளரினால் தேசியபட்டியலினூடாக நியமனம் வழங்கலாம். எனவே, பட்டியல் முன்வைக்கப்பட்ட போதிலும்கூட, பட்டியலில் உள்ளவர்கள் மாத்திரமே பிரதிநிதித்துவத்தைப் பெறுவார்கள் என்பதை உறுதியாகக் கூறிவிட முடியாது.
(முற்றும்)

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com