Friday, January 22, 2010

நெய் கடைந்த போது குடம் உடைந்த கதை எமக்குப் படிப்பினை. -கனகண்ணா லண்டன்-

ஜனாதிபதி தேர்வில் தமிழ் மக்கள் யாரை ஆதரிப்பது?1987 இல் இலங்கை – இந்திய ஒப்பந்தம் மூலம் கிடைத்த மாகாணசபை முறைமை, 2006 இல் ஒஸ்லோ பேச்சுவார்த்தையின் போது ஏ9 பாதை திறக்கப்பட்டால்தான் மேற்கொண்டு பேச்சுவார்த்தை என நிபந்தனைகள் விதிக்கப்பட்டதனால் இன்னொரு தீர்வுக்கான சந்தர்ப்பம் தவறவிடப்பட்டது. இது தமிழரின் வாழ்வில் அடிக்கடி வந்து போன துர்ப்பாக்கியம். அதை இந்த முறையும் நாம் செய்தால் நாம் பயணிக்கும் வரலாற்றுப் பாதையில் முப்பதோ அல்லது முந்நூறோ வருடங்கள் கடந்து போனாலும் தமிழர் பிரச்சனைகளை எப்போதும் தீர்த்து வைக்க முடியாத நிலை நீடிக்கும்.

எப்போதும் ஆக்கபூர்வமான சிந்தனைகளையும், அறிவுபூர்வமான எண்ணங்களையும் கொண்டு மெய்ப்பொருள் காண்பதுதான் அறிவு. இரத்தத்திற்கு இரத்தமென்றால் நாம் அறிவு பூர்வமாகச் சிந்திக்கவில்லை என்றுதான் அர்த்தம். வெட்டுக்கு வெட்டென்றால், நாம் இன்னும் பரிணாம வளர்ச்சி அடையவில்லை என்பதுதான் உண்மை.

பள்ளிக்கூடங்களின் தவணைச் சோதனையின் போது மாணவர்களின் விடைத்தாள்களில் மதிப்பெண்ணை மட்டும்தான் ஆசிரியரால் கொடுக்க முடியும் பிழையான விடைகளுக்குத் திருத்தம் செய்து கொடுப்பதில்லை காரணம் விடைத்தாள்களை திரும்பவும் விசேட காரணங்களின்றி மாணவர் பார்வைக்கு வழங்குவதில்லை. ஆனால் வகுப்பறைகளில் நடைபெறும் பரீட்சைகள் அப்படியல்ல. பிழைகள் உடனுக்குடன் திருத்தப்பட்டு மாணவர்கள் விட்ட தவறுகளை திருத்தி அறியத்தருகிறார்கள். அதன் பெறுபேறு மாணவர்களால் தமது பிழைகளை உடனே உணரமுடிகிறது. எனவே தங்கள் அறியாமையைத் திருத்திக் கொள்கிறார்கள்.

வாழ்க்கையில் சோதனை வரலாம். அதனூடாக அனுபவத்தைப் பெற்றுப் பிழைகளை தானாகவே திருத்திக் கொள்ளச் சந்தர்ப்பமும் உண்டு, அல்லது சரியான அறிவுரைகளைக் கேட்டுப் புரிந்து திருத்திக் கொள்ள வாய்ப்பும் உண்டு. ஆனால் சோதனையே வாழ்க்கையானால் மதிப்பெண் மட்டும்தான் கிடைக்குமே தவிர திருந்இதவோ, திருத்திக் கொள்ளவோ சந்தர்ப்பங்கள் கிடைக்க அவகாசம் இருப்பதில்லை.

வாழ்க்கையும் ஒரு வகுப்பறைதான் என்பதைப் பலர் உணர்வதில்லை. அதனால்தான் 'கற்றது கை மண்ணளவு' என்று அறிஞர்கள் கூறியுள்ளார்கள். அன்று வள்ளுவன் கூறினான் 'இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண நன்னயம் செய்துவிடல்' வேண்டும் என்று. இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்பு பிறந்த ஒரு மனிதனால் அன்று பரிணாம வளர்ச்சியடைந்திருக்க முடியுமென்றால், இத்தனை காலமும் நாம் எங்கே இருந்தோம்? வெட்டுக்கு வெட்டென்று மட்டும்தான் மனப்பாடம் பண்ணிக் கொண்டு இருந்தோமா? அல்லது யாருக்கோ பயந்து கொண்டு இத்தனை காலமும் வாழ்ந்தோமா?

திருவள்ளுவர் காலத்திற்கும் இன்றைய காலத்திற்கும் இடைப்பட்ட காலத்தில், கல்வியிலும் _ஏனைய துறைகளிலும் மலையளவு முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன. எத்தனையோ கருணையுள்ள மதங்கள் தோன்றின. எத்தனையோ அறிஞர்கள் தோன்றினார்கள். நாடுகளுடன் நாடுகள் போட்டி போட்டுக் கொண்டன. சிலநாடுகள் முன்னேறின. நாகரீகமும் வளர்சியடையும் வாய்ப்பைப் பெற்றன. ஆனால் பேராசையின் விளைச்சலான போர் ஒன்றுதான் பல நாடுகளில் ஏதோ ஒரு காரணத்தைக் காட்டித் தொடர்ந்து கொண்டே போகிறது. அது சிலரை உணரவைத்தும், பலரை வளர்ச்சி அடைய விடாமல், பாகுபாடாக நின்று, இனிய நல்மக்களைத் திசை திருப்பி, அறிவாயுதத்தைப் பாவிக்க விடாமல் தடுத்து நிற்கிறது.

அன்பு என்றும் ஆட்சி நடத்தும் தன்மையுள்ளது, அது மென்மையானது, அதுதான் இன்பஊற்று, அதுதான் இன்பஜோதி, அதுதான் உலகின் மகாசக்தி. அதைத்தாண்டி வெறுப்புக்கள் எம்மிடம் வந்து சேர்வதென்றால் நாம் அன்பை வெறியாக மாற்றி இருக்கிறோம். இரண்டிற்கும் வித்தியாசம் அறியாமல் தவிக்கிறோம் என்ற அர்த்தம் தானே? அறியாமை எம்முள் இன்னும் நீடிப்பத்ற்கு யார் காரணம்? அறிவை எங்கே தொலைத்தோம்?

உலகம் தோன்றி கோடி அல்லது அதன்மேலும் பலகோடி வருடங்கள் ஆகலாம். இதை ஊகமென்றாலும், யதார்த்தமுள்ள ஊகம். பல்வேறு உயிரினங்கள் வாழும் பூமியில், முதலில் புல்லாகிப் பூடாகிப் புழுவாய் மரமாகிப் பல்விருகம் ஆகிப் பறவையாய் பாம்பாகிக் கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய் வலசுரர் ஆகி முனிவராய்த் தேவராய் என்ற மாணிக்கவாசகரின் மணி வரிகளுக்கு இணங்கக் காலமும் வளர்ச்சி கண்டது. நாமும் வளர்ச்சி அடைந்தோம். இன்னும் வளர்ச்சி நடந்து கொண்டே இருக்கிறது. இதுதான் பூமியின் தோற்றமும், அதன் ஜீவராசிகளின் வளர்ச்சியும். இதுதான் உண்மையும் யதார்த்தமும்.

விருப்பும் வெறுப்பும் எங்களுடன் கூடப்பிறந்தவை. தொப்புள் கொடியுடன் இருக்கும்வரை தாய் உணவுண்டு குழந்தையின் பசியைத் தீர்த்து வைக்கிறாள். குழந்தை பிறந்து, தொப்புள் கொடி அறுக்கப்பட்டதும், குழந்தை வீரிட்டு அழுகிறதே! அது தாயும் பிள்ளையும் ஆனாலும் வாயும் வயிறும் வேறு என்று எண்ணியதால் தானோ என்னவோ! எப்படியோ? அது யதார்த்தமாய் ஒவ்வொரு பிரசவத்திலும் நடைபெறுகின்ற ஒரு நிகழ்ச்சி. அத்துடன் இருட்டில் இருப்போரை வெளியில் கொண்டு வரும்போதும், இப்படி நடை பெறுவது உண்மைக்குப் புறம்பானது அல்ல. விருப்பு – வெறுப்பின் எல்லைகள்தான் எம்மைச் சமூகத்தின் அங்கங்களாக வாழ வைக்கின்றன. சமூகம் இல்லையேல் நாம் இருட்டில் வாழும் மனிதர்களே ஆவோம்.

சமூகம் வளர்ந்து கொண்டிருக்கிறது. ஆரம்பகாலச் சமூகத்திற்கும் தற்போதைய சமூகத்திற்கும் எத்த்னையோ வேறுபாடுகள் உண்டு. மாற்றங்கள் பல நிகழ்ந்துள்ளன. பண்டைக்கால சமூகத்திற்கு சரியென்று பட்டசில கொள்கைகள், கோட்பாடுகள் நாட்கள் செல்லச்செல்ல, சமூகத்தால் அன்றைய நிலைமைக்குத் தக்கவாறு சரியாக்கப்படுகிறன.
அரச சட்டங்களும் அப்படித்தான் பிழையென உணரும் போது மாற்றங்கள் செய்யப் படுகின்றன. பரிணாம வளர்ச்சியும் அப்படித்தான். நியாயம் எனும் போது அரசோ, சமூகமோ சீர்செய்து கொள்கிறது. இதற்கு பேரறிஞர் பெர்னாட்ஷா சொல்லிய விளக்கம் தனித்துவமானது 'புனிதமான தத்துவங்கள் என்று போற்றப்படும் எதுவும் அதன் ஆரம்பகாலத்தில் நாத்தீகக் கருத்துக்களாக தூற்றப் பட்டவை ஆகத்தான் இருக்கின்றன சந்தேகமிருந்தால் உலக வரலாற்றைப் புரட்டிப் பாருங்கள்' என்றார். ஏன் அன்று இயேசுபிரான் போதனைகளைத் தூற்றி அவரைச் சிலுவையில் அறைந்து கொல்லவில்லையா? பின்பு இயேசுபிரான் போதனைகளைப் போற்றிப் புகழவில்லையா? உலகம் உருண்டை என்று சொன்ன விஞ்ஞானியையும் சிறையில் அடைக்கவில்லையா? சிந்தனையும் அறிவும் வளரவளர உண்மைகளை நாம் ஏற்றுக் கொள்கிறோம் என்பதே மாற்றத்திற்கு உள்ளான உண்மை.

இன்று யுத்தம் முடிவடைந்து விட்டது. ஆனால் எம்மில் அனேகமானோர் தமது உற்ற சொந்தங்களைத் தொலைத்து விட்டு, நெஞ்சம் பதைபதைத்து நிற்பதை நாம் அறிவோம். பெற்றோர் முன்னும் சமூகத்தின் முன்னும் அங்கவீனர்களாய் நிற்கும் குழந்தைகளையும், பெரியயவர்களையும் நாம் அறிவோம். கண்ணீர் விட்டுக் கதறியழுதா? அல்லது குரோதத்தை மனதில் வைத்துப் பழி வாங்கும் எண்ணத்தை வளர்த்துத் தொடர்வதா? நின்று நிதானித்து சிந்தித்து முடிவு எடுக்க வேண்டிய முக்கியமான விடயம் இது.

வெட்டுக்கு வெட்டென்பதா? இரத்தத்திற்கு இரத்தமென்பதா? மீண்டும் இந்த இரத்த ஆறு ஓட வேண்டாம். அவலக் குரல்கள் கேட்க வேண்டாம் தவிக்கும் மழலைகளின் ஈனக்குரல்கள் கேட்க வேண்டாம், புதிய விதவைகள், தபுதாரர்கள், அநாதைச் சிறுவர்கள் உருவாக வேண்டாம். எனவே மீண்டும் சண்டை வேண்டாம்.

அப்படியென்றால் இப்பொழுது என்ன செய்வது? எம்முன்னால் உள்ள கடமை என்ன? ஏற்கெனவே துன்பத்துக்கு உள்ளானவர்களை எப்படிப் பாதுகாப்பது என்பதைத்தான் முதலில் எமது குறிக்கோளாக எடுத்துக் கொள்ள வேண்டும். 'புத்திவான்தான் பலவானே தவிர உடம்பில் முறுக்கு ஏறியவர்கள் அல்ல' அறிவும், பொறுமையும், தீர்க்கதரிசனமும் உண்டானால் இழந்தவற்றில் உயிர்களைத் தவிர யாவற்றையும் மீள முறையே பெற்று நிம்மதியாக இலங்கையர் அனைவரும் வாழலாம். பின்பு அவரவர் அபிலாசைகள் பூர்த்தி செய்யப்பட்டு சுதந்திரமாகவும் ஆனந்தமாகவும் வாழலாம்.

கி.மு 115 ஆண்டுகளுக்கு முன் அதாவது 2125 வருடங்களுக்கு முன்பு துட்டகைமுனு – எல்லாளன் போர் நடை பெற்றது. அன்று கைமுனு என்ற சிங்கள அரசன் வெற்றியும் பெற்றான். எல்லாளன் இலங்கைத் தமிழ் மன்னன் என்று சரித்திரம் கூறுகிறது. போரின் பின் இரு சமூகமும் சுமூகமாய் வாழ்ந்ததாகவும் சரித்திரம் கூறுகிறது. மீண்டும் ஏன் அப்படி நடக்கக்கூடாது? இன்று இலங்கையின் முழுச் சனத்தொகை கிட்டத்தட்ட 210 இலட்சம். அதில் சிறுபான்மையினர் 40 இலட்சம் அதில் தமிழர் தொகை கிட்டத்தட்ட 35 இலட்சம். இதை 2125 வருடங்கள் பின் நோக்கிச் சென்றால் சனத்தொகை எவ்வளவாக இருந்திருக்கும்? தற்செயலாக அன்றைய தமிழர் சனத்தொகை சிங்கள மக்களைப் போல் சமமாக இருந்திருந்தால் அந்தச் சனத்தொகையில் பல தமிழர் அன்று புலம் பெயர்ந்தார்களா? சரித்திர ரீதியாகத் தமிழர் வடக்கிலும் கிழக்கிலும் பெரும்பான்மையாக இருந்திருக்கிறார்கள் என்பது வெள்ளிடை மலை.

ஆங்கிலேயர் ஆட்சியில் நமது இலங்கை ஒன்பது மாகாணங்களாகப் பிரிக்கப்பட்டது. அதில் தமிழைத் தாய் மொழியாகக் கொண்ட மக்கள் பெருவாரியாக வடக்கு – கிழக்கு மாகாணங்களில்தான் இருந்தார்கள். தொழில் காரணமாகத் தமிழ் மக்கள் மெல்லமெல்ல ஏனைய மாகாணங்களுக்கும் விசேடமாகத் தென்மாகாணத்திற்கும் வந்து பிற்காலத்தில் தாங்களிருந்த இடங்களைச் சொந்தமாக்க முடிந்தவர்கள் சொந்தமாக்கிக் கொண்டு அங்கேயே குடியேறியும் விட்டார்கள்.

1948 ஆம் ஆண்டு மாசி மாதம் நான்காம் திகதி இலங்கைக்குச் சுதந்திரம் கிடைக்கப் பெற்றது. அந்நாள் பொன்னான நன்நாளாகக் கருதப்பட்டு, வருடா வருடம் சுதந்திர தினத்தைக் குதூகலமாகக் கொண்டாடுகிறோம். சுதந்திரத்துக்குப் பின் அமைக்கப்பட்ட அரசாங்கத்தில் தமிழரும் பங்குகொள்ள வாய்ப்புத் தரப்பட்டது. அந்நேரத்தில் ஜி. ஜி. பொனம்பலமும் தமிழ் மக்களின் சார்பில் தெரிவு செய்யப்பட்டார். அவர் ஒரு புத்திஜீவி, அரசியல் தீர்க்கதரிசி இலங்கைத் தமிழ் காங்கிரஸ் கட்சியை உருவாக்கினார். அதேநேரம் எஸ். ஜே. வி. செல்வநாயகமும் காங்கிரஸ் கட்சியில்தான் இருந்தார். ஜி. ஜி. தலைமையுடன் முரன்பாடு கொண்டு பிரிந்து இல்ங்கைத் தமிழரசுக் கட்சியை உருவாக்கினார். அதன் கொள்கைகள் தமிழ் மக்களுக்கு இன போதை ஏற்றிய மது. மதுவானது மக்களுக்குக் கேடானது என்பதைத் தமிழ் மக்களில் பலர் அறிந்திருந்தும், மதுவின் மயக்கம் அவர்களை விட்டபாடில்லை.

எஸ். ஜே. வி. உருவாக்கிய கட்சியி பெயர் சிங்கள அரசியல்வாதிகட்கு மெல்லக் கிடைத்த அவல் மாதிரி ஆனது. தமிழ் மக்கள் தீர்க்கதரிசியான ஜி. ஜி. யைத் தூக்கி எறிந்தார்கள். இலங்கைத் தமிழ் மக்கள் அவரின் சேவையையும், தேவையயும் புரிந்து கொள்ளத் தவறிவிட்டனர். அதுவும் நெய் திரைந்து வந்தபோது குடம் உடைத்த கதையேதான். வடக்கு – கிழக்கில் செல்வாவும் அவர்களின் சகாக்களும் ஊதிய சங்கையெடுத்து சிங்கள அரசியல்வாதிகளும் தம் மக்களுக்குப் பொய்யாக ஊதிஊதிப் பெரிதாக்கினார்கள். அது சிங்கள – தமிழ் ஒற்றுமையை உடைத்தது. அவர்கள் வேறு நாங்கள் வேறு என்ற பிரிவினையை உண்டாக்கியது.

இது சுயலாப நோக்கத்துடனான பிரச்சாரம் என்பதை யாரும் மறுக்க முடியாது. அந்நேரம் சிங்கள மக்களின் சில கட்சிகள், குறிப்பாகத் தொழில் கட்சிகள் தமிழரின் தேவைகளை அறிந்து எமக்காகக் குரல் கொடுக்க முன் வந்த போதும் அந்தக் குரல்களும் துச்சமாக மதிக்கப்பட்டு குரல் கொடுத்தவர்களும் ஓரம் கட்டப்பட்டார்கள்.

இவ்வாறு பிரிவினக்கு வழி வகுத்தவர்கள் இயற்கை எய்திவிட்டார்கள். அதன் பலன் கிட்டத்தட்ட இரண்டரை இலட்சம் மக்களின் இன்னுயிர்கள் காவு கொள்ளப்பட்டன. தங்களின் இன்னுயிரைத் தியாகம் செய்த நம்மக்களுக்கு எமது சிரம் தாழ்ந்த வணக்கங்கள் உரித்தாகட்டும். அவர்களது ஆத்மா சாந்தியடைய நாம் எல்லோரும் வேண்டுவோம்.

ஜனநாயக முறையில் கோசம் உயர்த்தப்பட்டிருந்தால் உயிர்சேதங்கள் தவிர்க்கப்பட்டிருக்கலாம். இழந்த அவயவங்களையும் எம்மால் காப்பாற்றி இருக்க முடியும். எல்லைச் சண்டைக்குக் கத்தி தூக்குவதைவிட புத்தியைப் பாவிப்பவனே பலவான். சிங்கள மக்கள் வேறு, தமிழ் மக்கள் வேறு என்று பிரித்துப் பார்ப்பது அறிவிலாரின் ஆரோக்கியமற்ற சிந்தனை.

விஜய அரசனும் அவரது எழுநூறு தோழர்களும் மணமுடித்தது இந்திய தமிழ்ப் பெண்களை என்ற உண்மையை மகாவம்சம் சொல்கிறது. இந்த உண்மையை எத்தனை பேர் அறிவார்களோ? எனவே அவர்களும் எமது தொப்புள்கொடி உறவுதான் என்பதை ஏற்றுக் கொண்டாகத்தான் வேண்டும். ஆகவே அவர்களையும் நாங்கள் மதித்தாக வேண்டும். கதியால் சண்டை முடிந்த பின், கல்யாண வீடு துக்க வீட்டுச் சம்பவங்களில் ஒன்று சேர்வது இல்லையா? நடந்தவற்றை எல்லாம் மறந்து உறவு தொடர்வது இல்லையா? சிந்தித்துப் பாருங்கள் நாங்களும் மன்னிக்கவும் மறக்கவும் கற்றுக் கொள்ள வேண்டும் கடந்த 2009 ஆம் ஆண்டு வரை நாம் சந்தித்தது நரக வாழ்க்கை அதுவரை அனைவர்க்கும் ஒரு பொல்லாத காலமே. நடந்தவைகள் நடந்தவைகளாக இருக்கட்டும். இனி நடப்பவைகள் இனிமையானவைகளாக இருக்க இறைவனை வேண்டுவோம்.

2010 என்ற புதிய ஆண்டில் கால் பதித்து விட்டோம். அதையும் ஆங்கில ஆண்டு என்று புறக்கணித்தாலும், அதுதான் உலகம் முழுவதும் பயன்பாட்டில் உள்ளது. ஆங்கிலேயர் பயன் படுத்தியதால் அது ஆங்கிலேயரின் ஆண்டாக முடியாது. இருந்தும் 'குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை' என்ற ஒளவை வாக்கிற்கிணங்க மன்னிப்போம், மறப்போம். மறப்பது சிறந்த அருமருந்து. இவ்வாண்டில் நாம் முதலில் பேண வேண்டியது ஒற்றுமை என்னும் கீதம்:

'ஒற்றுமையாய் வாழ்வதாலே உண்டு நன்மையே
வேற்றுமையை வளர்ப்பதனாலே விழையும் தீமையே'

இந்த ஆண்டில் ஜனாதிபதித் தேர்தல் தை மாதம் 26 ஆம் திகதி வருகிறது. அந்தத் தேர்தலில் இலங்கை மக்கள் யாரை ஜனாதிபதியாகத் தெரிவு செய்ய வேண்டும் என்ற கேழ்விக்குப் பதிலைத் தேடுகிறேன், அலசுகிறேன், ஆராய்கிறேன்.

1948 ஆம் ஆண்டு தொடக்கம் 2005 ஆம் ஆண்டு வரை எம்மை ஆண்ட தலைமைகளை ஆராய்ந்தால், ஒவ்வொரு தலைமையும் இலங்கை மக்கள் ஒற்றுமையாக வாழ வேண்டும், நாட்டு மக்கள் நிம்மதியுடன் இருக்க வேண்டும் என்றும் நாட்டை முன்னேற்றி உலகின் முன்னேறிய நாடுகளின் ஒன்றாக ஆக்க வேண்டும் என்றும் சிந்தித்தது இல்லை.

சுயலாபத்திற்காகப் பதவி வேண்டும், அத்தோடு ஆதிக்கமும் வேண்டும், ஆட்சியும் தலைமையும் தம் கையில் வேண்டும் என்றும், யோசித்தார்களே அன்றித் தங்கள் மனச் சாட்சியை தொட்டு நாட்டை ஆள வேண்டும் என்று சிந்தித்ததே இல்லை. அதை சுயநனல அரசியல் என்பர் அறிவுளோர், சந்தர்ப்ப அரசியல் என்பர் மதியுளோர்.

சுதந்திரத்தால் வந்த அரசை தந்திரத்தால் தலைமை அமைத்து, சந்தர்ப்ப அரசியல் ஆக்கி, செழித்து வளர்ந்து உயர வேண்டிய, அழகிய இயற்கை வளங்கள் நிறைந்த, எமது இலங்கையை நூறுவருடங்கள் பின் தங்கிய காடாக மாற்றி விட்டார்களே! இனியும் பின்னடைய வைக்க முயலுவது சரியா?

பசுத்தோல்லைப் போர்த்துக் கொண்ட புலிகள் போன்ற எதிர் கட்சிகளின் வேடங்களை உணர வேண்டியது இலங்கையராகிய நாங்களே.

எங்கள் நாடு, வேறு சில நாட்டில் இல்லா அரிய வளங்களைக் கொண்டுள்ளது. எழிய வளங்கள் கொண்டது எம் நாடு ஏன் கையை ஏந்த வேண்டும். பிற நாட்டில்! என்பதை முன்பு ஆண்டவர்கள் ஏன் உணரவில்லை? அணுகுண்டை உற்பதி செய்தலோ, சந்திரனுக்கு சற்லயிற் அனுப்பிலோ தான் முதல் தர நாடாகும் என்ற அவசியம் இல்லை. இருக்கும் வளங்களை முதலாய்க் கொண்டே கடனற்ற நாடாகவே இருந்துவிட்டால் நம் கெளரவம் தானாகவே உயர்ந்துவிடும், பின்பு வருவாயை உயர்த்தும் பணியை மேற் கொண்டாலே நாடு சிறப்படைந்து விடும். அதற்கு நாட்டுப் பற்று வரவேண்டும், நாட்டுப் பற்று வந்தால் ஒற்றுமை வேண்டும் என்ற எண்ணம் தோன்றும், அது தோன்றினால் ஜனநாயகம் வேரூன்றும், ஜனநயகம் கிளை கொண்டால் சட்டங்கள் பெரிதாக மதிக்கப்படும், சட்டங்கள் மதிக்கப் பட்டால் நீதி மேலோங்கும், நீதி மேலோங்கினால் புத்தரை வணங்கும் தேசமென்றும், தெய்வத்தை மதிக்கும் மக்களென்ற உண்மையும், உலகமெல்லாம் பரவும்.

இதைக் அறிந்து கொண்ட மகிந்தாவை எதிர்கிறார்கள் என்றால் அவரின் சேவை, தங்களின் சுயலாபக் கொள்கைகள் வெளிச்சத்திற்குக் கொண்டு வரப்பட்டு விடும் என்ற ஆதங்கம், மீண்டும் அவர்களால் எப்போதுமே ஆட்சிக்கு வரமுடியாது என்ற பயம் தானே? சும்மா சொந்தங்களை வைத்து அரசியல் செய்கிறார் என்று சொல்பவர்கள் இலங்கையின் சரித்திர ஏட்டைத் புரட்டிப் பார்த்தால், தந்தை, தாய், மகளென்று நம் நாட்டை ஆளவில்லையா? மக்கள் விரும்பி பாராளுமன்ற உறுப்பினர்களைத் தெரிவு செய்கிறார்கள். அவர்களுள்ளும் வெளியேயும் நாட்டைச் சீராக்கக்கூடிய இலங்கை மகனை மகளை அமைச்சர் ஆக்குவதற்குச் சட்டம் இருக்கிறது. அப்படிச் செய்வதில் என்ன பிழை?

பொறாமை பிறர்க்கு வரலாம் 'கரும்பு கட்டுடன் இருந்தால் எறும்புதான் என்னசெய்ய முடியும்' என்பது அன்றைய வார்த்தை. அதேபோல் நாம் அனைவரும் மொழி, மதபேதம் இன்றி ஒற்றுமையாக இருக்கும் வரை எம்மை எவரும் எதுவும் செய்துவிட முடியாது. குற்றவாளியை மட்டும் தண்டி, அதற்காக அயலவனையும் அவன் நண்பனையும் அவன் பெற்றோரை, சகோதரரை, தற்செயலாக அவ்விடத்தில் நின்றவனையும், கண்டவனையும் தண்டிப்பதால் ஒரு எதிரிக்காகப் பல எதிரிகள் உருவாக்கப் படுகிறார்கள். அதனால் பயங்கர வாதமும் தோன்ற வழி வகுக்கப்படுகிறது. அதனால் ஜனநாயகம் உயிரிழக்கிறது. எப்போதும் ஜனநாயகம் காப்பாற்றப் பட்டால் நீதி செழித்தோங்கும். நீதி செழித்தோங்கும் நாடு இலங்கையென்றால், யார் அந்தப் பெருமையை அடைவார்? அடைவது நாட்டின் தலைவனும் அவனது மக்களும் என்றால் மிகையாகுமா?

'நாடென்ன செய்த்து நமக்கு எனக் கேழ்விகள் கேட்பது எதற்கு?
நீயென்ன செய்தாய் அதற்கு என நினைத்தால் நன்மை உனக்கு'
தலைவர்கள் உருவாக்கப் படுகிறார்களா? தோன்றுகிறார்களா? முதலில் பிறக்கிறார்கள் அறிவும் ஆற்றலும் தேடி எங்கெல்லாமோ அலைந்து உண்மைகளை ஒவ்வொன்றாகத் அலசி ஆராய் கிறார்கள், கற்றுக்கொள்கிறார்கள், கற்றவை கற்ற பின் நிற்க அதற்குத் தக வென்று பயணத்தை தொடர்கிறார்கள். தொடரும் போதுதான் அவர்கள் மென்மேலும் மக்களைச் சந்திக்கும் வாய்ப்பைப் பெறுகிறார்கள். அந்தத் தோற்றம்தான் எம்மால் அவர்களைத் தலைவனென அடையாளம் கண்டு கொள்ள முடிகிறது.

தலைமை என்பது எல்லோருடைய பொறுப்பையும் தானாக விரும்பி ஒரு மனிதன் ஏற்றுக் கொள்வது. மறு புறத்தில் மக்கள் யாவரும் அவர்மீது பூரண நம்பிக்கை வைத்து தங்கள் உரிமைகளையும் சுதந்திரத்தையும் ஒப்படைக்கும் மாபெரும் தியாகம் அது. ஆழ்பவர், ஆழப்படும் மக்கள் என்ற இரண்டு பேரும் ஈடுபடும் ஒரு மகாத்தான செயல்தான் தலமை என்பது.. சில வேளைகளில் துரதிட்டவசமாகத் தவறுதலாக எங்கிருந்தோ அதிகார வெறியைக் கொண்டும் தலைமைகள் தோன்றுவது உண்டு. இதில் தியாகம் தென்படுவது இல்லை. மக்கள் மட்டும் பல் சித்திரைவதைகு உள்ளாகி மரணிப்பதும் உண்டு. அதே சமயம் தியாக உணர்ச்சி கொண்டு மக்களை இன்புற ஆண்ட தலைமைகளையும் சரித்திரம் கண்டு உள்ளது.

தற்போதைய மக்களில் பலர் சரித்திரத்தையும் ஜனநாயகத்தையும் பற்றி நிறையக் கேள்வி ஞானம் கொண்டுள்ளனர். இருந்தும் சில கல்வி அறிவிலோர் இதை தெரியாமல் காலத்தை வீணடிக்கின்றனர்.. அப்படி வீண்டிப்பவர்கள் ஒருகுட நீரினுள் ஒரு துளி விசம் போன்றவர்கள் என்பது உள்ளங்கை நெல்லிக்கனியே.

2005 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் ஒரு சுவாரசியமானதும் இலங்கை மக்கட்கு அதிஸ்டமானதும் கூட! காரணம் இரு பகுதி மக்கள் தலவனத் தேர்ந்தடுக்கும் முயற்சியில் மூன்றாவது மக்களின் வாக்குகள் இல்லாமலே இலங்கைக்கு முதல் முறையாகச் சிறந்த ஒரு அரசியல் ஞானி தலைவனாகத் தெரிவு செய்யப்பட்டார். அது இலங்கைக்குக் கிடைத்த ஒரு மாபெரும் வரப்பிரசாதம். அவர்தான் மேதகு மகிந்த ராஜபக்க்ஷா , நாற்பது ஆண்டுகளுக்கு மேல் அரசியல் ஞானம் கொண்ட அனுபவசாலி. கொள்கையி உறுதி கொண்ட தலவன். குழந்தைகள் வன்மம் காட்டும் போது கண்டிப்புள்ள ஆசானாகவும். தேவை என வரு போது நேசக்கரம் நீட்டும் அன்னையாகவும்தான் இதுவரை இருந்துள்ளார். எவரை எந்தத் தொழிலில் அமர்த்தப்பட வேண்டும் என்ற ஞானம் கொண்ட தன்மையும் சேவையும் அவரை ஒரு சாணக்கியன் ஆக்கியது. மக்களின் சேவையே நாட்டின் தேவை என உணர்ந்தவர்.
'குற்றம் செய்யாதவன் முதல் கல்லை வீசட்டும்' என்று யேசுபிரான் கூறியபோது கல்லை வீச ஆட்கள் ஒருவரும் இல்லை. அவர் கூறியதை விளங்கிக் கொண்டமையால்தான் யாரும் கல்லை வீசவில்லை. ஆனால் வென்று மட்டும் வா என்பதைப் புரிந்து கொள்ளாமல், கொன்று வந்தால் அது சொன்னவரின் குற்றமா? அல்லது செய்தவரின் குற்றமா? அப்படிப்பட்ட தளபதிகளைத் தெரிவு செய்யப் பட்டமைதான் அரசின் குற்றம்.

ஒரு சில வேளைகளில் தனிப் பட்ட குரோதங்கள் காரணகளாக இருக்கலாமோ என்னவோ!. இருந்தும் ஜனாதிபதி ஒற்றுமையின்றிச் சிதைந்து இருந்த இலங்கைத் தேசத்தை ஓரளவு நிம்மதியில் வைத்து உள்ளார் என்பதும், நாடும் வளர்ச்சி அடையும் நிலைபெற்றும் இருக்கிறது என்பதும் உண்மை. நிதி நிலைமை சரிவான நேரத்திலும் தனது அரசியல் சாணக்கியததால் வெற்றி கண்டுள்ள பெருமையும் ஜனாதிபதியையே சாரும். ரோம் நகரம் ஒரே நாளில் கட்டப்பட்டதல்ல என்பதையும் நாம் மனதில் கொள்ள வேண்டும்.

இதுவரை ஜனாதிபதி தனது தலைமையின் காலத்தில் கால் பகுதியை வாதம் விவாதங்களிலும் கால் பகுதியைப் போரிலும் போக்க வேண்டிய நிர்பந்த்த்தைப் பெற்றிருந்தார் என்பதை எல்லோரும் அறிவீர்கள். இன்னும் சட்டரீதியாக ஐந்து அல்லது ஆறு வருடங்கள் உள்ளன அதற்கு மக்களாகிய நீங்கள்தான் ஆணை தர வேண்டும். நமது நாடு முன்னேறத் தக்க தருணம் வாய்த்துள்ளது. அதையும் நாம் ' நெய் திரண்டு வரும் போது குடம் உடைத்த கதையாக மாற்றப் படாது' வேற்றுமையை மறப்போம், ஒற்றுமையை வளர்ப்போம். முதலில் நாம் இலங்கையர், பின்பு எமது உரிமையைப் பெறமுடியும் என்ற நம்பிக்கை எமக்கு வேண்டும். எமது உரிமைகளும், அபிலாசைகளும் எம்மை வந்து அடையும் நாள் வெகு தொலைவில் இல்லை.

புலம்பெயர்ந்தோர், புலத்தில் உள்ளோரின் மனதைச் சீண்ட வேண்டாம். புலத்தில் அவர்கள் சிறிது மன அமைதியைத் தற்போதுதான் கொண்டுள்ளார்கள். அவர்களின் அறிவைப் பாவிக்க விடுங்கள். இனிப் புலத்தில் பசியால் யாத்திரை வேண்டாம். புலம்பெயர்ந்தவர்கு எல்லாம் கிடைக்கிறது. புலத்தில் வாழ்வோருக்கு தற்போதுதான் யாவும் கிடைக்க ஆரம்பித்துள்ளது அமைதி உட்படஇ அதையும் தட்டி விட முயல வேண்டாம். வளரும் ஜனநாயகத்தை முளையிலேயே கிள்ள எத்தனிக்க வேண்டாம். மொழிரீதியாகச் சுதந்திரம் எல்லோருக்கும் கிடைக்கும் என்ற நீண்ட நாள் கனவு மெய்ப்படும் நாள் வெகு தூரமில்லை. அதை நனவாக்கும் சாமர்த்தியம் மகிந்தா ராஜபக்க்ஷாவிற்கே உண்டு என்பதை நினைவில் கொள்ளுங்கள். அதிஸ்டமும் சந்தர்ப்பமும் கதவைத் தட்டுகிறது. உங்கள் வாக்குரிமையை மகிந்தாவிற்கே நம்பிக்கையுடன் அளியுங்கள்.

எல்லா எதிர் அணிகளும் ஒன்று திரண்டு நிற்கின்றன. இலங்கையை அழிக்கவா? ஆக்கவா? என்ற கேழ்விக்குப் பதில் வேண்டும்.. எதிரணிகள் முக்கியமாக வேண்டுவது நிறவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை ஒழிப்பது. 77 களில் அரசாங்கம் மிக இலாபகரமாகப் போனதால் பல பாராளுமன்ற அங்கத்தவர்களைத் தூண்டி ஜே. ஆர். ஜெயவர்தனா கொண்டு வந்த அதிகாரம்தான் இந்த நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சி. அதையே அவரின் கட்சிக் காரரே தற்போது பிழை என்று கூறினால் அன்று ஏன் அதை எதிர்க்கவில்லை? ஜே. ஆர். ருக்குப் பயந்து நடித்தார்களா? அல்லது இம் முறையும் கோட்டை விட்டால் இனி ஆட்சிக்கு வரச் சந்தர்ப்பம் இல்லை என்பதால் இப்போ 'தன் மூக்குப் போனாலும் எதிரிக்குச் சகுனப் பிழை வந்தால் போதும்' என்று வேறு விதமாக நடிக்கிறார்களா? எதிர் கட்சி சரத் பொன்சேக்காவை ஆதரிக்கிறார்கள் அவரும் தான் ஜனாதிபதியாக வர வேண்டும் என்ற ஆர்வத்தில் முதலில் எல்லாவற்றையும் தரலாம் என்றார், பின்பு சில எதிர்ப்புக்கள் தோன்றியவுடன் கொள்கைகள் மாற்றப் படுகின்றது. இப்படி அனுபவமற்ற முறையில் கொள்கைகள் அடிக்கடி மாற்றப் பட்டால் அறிவு அனுபவ முதிர்ச்சி இல்லை என்பதே பொருள். தற்போதுள்ள சூழ்நிலையில் இவரால் ஆக்க முடியுமா? முடியாது என்பதே பதில். அடுத்தபடியாக நிறைவேற்று அதிகாரத்தை இல்லாமல் செய்து விட்டால் பின்பு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவது எப்படி? பொய்யைச் சொல்லும் போது அது பொருந்துமா? பொருந்தாதா? என்று மக்களுக்குத் தெரியாதா? மக்களை இன்னும் ஏமாந்த சோணகிரிகள் என்று எண்ணுகிறார்களோ?

தற்போதைய் எதிர் கட்சி 77 களில் ஆட்சியில் இருந்தது அப்போ அவர்களின் அரசியல் பலம் எதையும் சாதிக்கும் வல்லமை கொண்டு இருந்தது. அந்நேரத்தில் எதிர் கட்சியாக இருந்த தமிழ் கட்சியை அவமதித்து நாட்டையே விட்டு விரட்டியவர்கள். விரும்பியிருந்தால் அன்றே தமிழ் மக்களின் அபிலாசைகளை இன்று சொல்வது போல் மதித்திருந்திருந்தால், உடன் ஆவனவும் செய்திருக்கலாம். ஆனால் செய்யவில்லை. இப்போ ஆடு நனைகிறதென்று எதிர் கட்சியும் அதைச் சார்ந்தவர்களும் ஓனாய் அழுவதைப்போல் கண்ணீர் வடிக்கிறார்கள் அதை தமிழ் தேசியக் கூட்டமைப்பு நம்புகிறது. யாரை நம்புவது என்று அண்டம் காக்கைக்கும், குயில்களுக்கும் பேதம் தெரியாத கூட்டமைப்பின் சொல்லை நம்பினால் மண் குதிரையை நம்பி ஆற்றில் இறங்கியது போல் ஆகாதா?

போருக்குமுன் வாயை மூடிக் கொண்டி இருந்த கூட்டணி இப்போ ஐக்கிய இலங்கைக்குள் என்ற வரியைப் பாடுகிறதே! இந்த வாய்பாட்டை முன்பு உறுதியாகவும் பயமில்லாமலும் கூறி இருந்திருந்தால், எத்தனையோ உயிகளைக் காப்பாற்றியிருக்க முடிந்திருக்குமே! முன்பு பிழை விடப்பட்டது என்பதை ஏற்றுக் கொள்ளும் அதே கட்சி திரும்பவும் அதே பிழையை விடுவது சரியா? அவர்கள் எப்பொழுதும் பிழையான இடத்தில், பிழையான நேரத்தில் நிற்பதையே வழக்கப் படுத்திக் கொள்கிறார்கள். அனுபவம் இல்லாதவர்கள் போல் எங்கு நிற்பது என்று தெரியாமல் தடம் பிரளுகிறார்கள்.

தமிழ் மக்களே அவர்களை நீங்கள் நம்பவேண்டாம், நீங்கள் உங்கள் வாக்குக்களை சரியான முறையில் இம்முறை வெற்றிலை சின்னத்திற்கே இடுங்கள் அதனால் நன்மை அடைவீர்கள் அது நிட்சயம்.

இலங்கயில் தமிழன் ஜனதிபதியாக முடியாது என்று பரப்புரை தமிழர்க் எல்லாம் பரப்பப் பட்டது. இது தமிழரின் காதில் பூச்சுத்திய கதை, இப்போ சிவாஜிலிங்கம் கோதாவில் நிக்கிறாரே அவருக்குப் பெரும்பான்மையான வாக்குக்கள் கிடைத்தால் யார் அரசுத் தலைவர் ஆவர்? மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு என்கிறது யாப்பு. அதுதான் இலங்கையின் சக்தி. மக்கள் அவர்க்கு பெரும் பான்மை வாக்கை அளிக்கவில்லை என்றால், யாப்பைக் குறை கூறுதல் எய்தவன் இருக்க அம்பை நோகுதல் போன்றதல்லவோ!

'சிங்களவர், தமிழர், இஸ்லாமியர், பறங்கியர் மலேயர் என்று பிரித்துப் பார்க்கமல் எல்லோரையும் இலங்கையர் என்றே கூறு' இதை சொன்னவர் மகிந்தா ரஜபக்க்ஷா. ஐ. நா. வில் தமிழில் உரையாற்றிய பெருமையும் அவரையே சாரும். நம்பிக்கைதான் வாழ்க்கை அவரையே நம்புவோமாக.

தமிழர் தேசியக் கூட்டமைப்புக்குத் தீர்கதரிசனம் கிடையாது. யார்மூலமாகவோ வந்து தமிழரின் பிரதிநிதி என்று நம்பவைக்க முயலுகிறார்கள். இருந்த தீர்க்கதரிசியை இல்லாமல் ஆக்கிவிட்டுத் தகுந்த தலைமையில்லாமல் தமிழர் வேதனைப்படுவதை யார் அறிவர்? இலங்கையராகிய நாம் நாற்பது வருடங்களுகு மேல் அரசியல் அனுபவம் கண்ட தற்போதைய ஜனாதிபதி மகிந்தா ராஜபக்க்ஷா இருக்கையில் நாம் ஏன் வேறொருவரைத் தேடவேணும்?

முன்னைய ஜனாதிபதிகள் நாட்டைக் காடாக்கினார்கள். ஆனால் காடாய் இருந்த பூமியைப் போருக்குப் பின் நல்லதோர் நாடாக்க முயலும், இலங்கையரின் நண்பன், ஏழைகளின் தோழன், நாட்டுப் பற்றாளன் மகிந்தா ராஜபக்க்ஷாவை ஆதரிப்பதால், இலங்கையர் அனைவர்க்கும் உண்டு நன்மையே. உங்களின் நம்பிக்கை அவரேயென்ற மனத் திருப்தியுடன் உங்கள் வாக்கை அவருக்கே அளியுங்கள். ஒற்றுமை என்ற உணர்வு எல்லோர் உள்ளும் வளரும். இலங்கையின் முன்னேற்றமும் இலங்கையர் அனைவரின் கனவும் மெய்ப்படும் காலம் இதோ உங்கள் முன்.

சென்றமுறை உங்கள் கை படாமல் வந்த தலைமை, இம்முறை உங்கள் கைபட்டு வரட்டுமே! புதிய வருடம், புதிய யுகம், இன்னும் புதியதோர் ஒற்றுமையான இலங்கை உருவாகிறது. மூன்றாம் இடத்திலிருந்தி முதலாம் உலகாய் மாறும் இலங்கையைப் பார்க்கும் நாள் வெகு தூரம் இல்லை! நம்பினார்க் கெடுவதில்லை. இது நான்கு மறைத் தீர்ப்பு.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com