Wednesday, January 20, 2010

நைஜீரியாவில் பரவும் மதக் கலவரம்- 200 பேர் பலி

நைரோபி: நைஜீரியாவின் ஜோஸ் நகரில் கிறிஸ்தவர்- முஸ்லிம்களுக்கு இடையே கடந்த மூன்று நாட்களாக நடந்து வரும் கலவரத்தில் 200க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டிருப்பதாக செய்திகள் வருகின்றன.

ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவின் பிளாட்டூ மாகாணத்தில் கிறிஸ்தவர் மற்றும் முஸ்லிம்களுக்கு இடையே அடிக்கடி கலவரம் ஏற்படுவதுண்டு.

கடந்த 2008ம் ஆண்டில் ஏற்பட்ட கலவரத்தில் 200க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். ஓராண்டுக்கும் மேலாக பெரிய கலவரங்கள் வெடிக்காத நிலையில் கடந்த ஞாயிறன்று பிளாட்டூ தலைநகர் ஜோஸ் பகுதியில் மோதல் வெடித்தது.

தொடர்ந்து நான்காவது நாளாக இப்பகுதியில் நடந்து வரும் கலவரத்தால் இரு பிரிவிலும் சேர்த்து சுமார் 150 பேர் கொல்லப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

800க்கும் மேற்பட்ட மக்கள் காயம் அடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொல்லப்பட்டவர்களின் பிணங்கள் தெருக்களில் ஆங்காங்கே கிடப்பதாக கூறப்படுகிறது.

நிலைமையை கட்டுக்குள் கொண்டு வரும் நடவடிக்கையில் ராணுவமும் போலீசும் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றன.

எனினும் கலவரத்தை அடக்க முடியவில்லை. மாறாக, கலவரம் ஜோஸ் நகரில் இருந்து அருகில் உள்ள புகுரு நகருக்கும் பரவியிருப்பதாக கூறப்படுகிறது.

இதனால் இப்பகுதிகளுக்கு கூடுதல் ராணுவப்படைகளை அனுப்ப நைஜீரிய அரசு முடிவு செய்துள்ளது. இப்பகுதிகளில் 24 மணி நேர ஊரடங்கு உத்தரவு ஏற்கனவே பிறப்பிக்கப்பட்டுள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com