Thursday, November 5, 2009

ஜிஹாத், அல்பத்தாஹ், புலிகள், சங்கிலியன் படை. - யஹியா வாஸித் -

புலிகளுக்கு சார்பான ஊடகங்கள் மட்டுமல்ல, புலிகள் சார்பான புத்தி ஜீவிகள் கூட இன்னும்,
இன்றும் முஸ்லீம்களை இரண்டாம் கண்கொண்டே பார்க்கின்றனர். அதிலும் கிழக்கில் முஸ்லீம்களையும், தமிழர்களையும் எவ்வாறு மோதவிடலாம் என்பதில் கண்ணும் கருத்துமாகவே உள்ளனர். அண்மையில் சகோதரர் பக்ஷீர் எழுதிய ஒரு கட்டுரையில் புலிகள் இறந்த பாறூக்குக்கு எவ்வாறு பட்டுக்குஞ்சம் கட்டி, பட்டுத்தாம்பரம் விரித்தனர் என எழுதியிருந்தார். யார் இந்த பாறூக், யார் அந்த மொகமட் ஹாசீம் மொகமட் றாபி என்பதை பார்க்க முதல், 1983 க்கு முந்தைய கிழக்கு மாகாணம் எப்படி இருந்தது என்பதை சற்று பார்ப்போம்.

1960,1970,1980 காலகட்டங்களில் கிட்டத்தட்ட மொத்த கிழக்குமாகாணத்தவனும் படிக்காத முட்டாளாகவே இருந்தார்கள். கண்ணுக்கெட்டிய தூரம்வரை பச்சைப் பசேலென்ற வயல்வெளிகள், ஆங்காங்கே மாட்டுப்பண்ணை, ஆட்டுப்பண்ணை, வயல்வெளிகளுக்குள் குட்டிக்குட்டி தேனீர்கடைகள், நீண்ட நெடிய ஆறுகள், இடுப்பளவு தண்ணீருடன் குளங்கள், நாள்சந்தைகள், வாரச்சந்தைகள், துடிக்கத் துடிக்க கடல் மீன்களை கூறு போட்டு விற்கும் மீன் சந்தைகள், வீடுகள், பாடசாலைகள், கோயில்கள், தீர்த்தோற்சவங்கள், தீமிதிப்புகள், பெருநாட்கள், விளையாட்டுப் போட்டிகள்.

நாங்கள் வயலுக்கு பைசிக்கிளில் அதிகாலை போய்கொண்டிருப்போம். வழியில் தமிழ் சகோதரர் ஒருவர் மீன் வண்டியுடன் வந்து கொண்டிருப்பார். எங்களை கண்டதும் காக்கா நல்ல விரால் மீன் இருக்கு காக்கா வாங்கலையா என்பார். நான் வயலுக்கு போறன். வீட்ட பொண்டாட்டி இருப்பா நல்ல விரால் மீனாகப் பார்த்து ஒரு நாலு விரால் கொடு. நாளை பணம் தருகின்றேன் என சொல்லி விட்டு நாங்கள் வயலுக்கு செல்வோம். எஸ் வீ ஓள் ஆர் பிறதர்ஸ்.

புட் போல் மெச். ஒன்று யங்ஸ்டார். சித்திரவேல், நடராஜா, சின்னவன், போளையன், சங்கர், மூர்த்தி, தவராஜா என தமிழ் சகோதரர்களின் ரீம். ஆதம்பாவா, சீனிக்காக்கா, பாறூக், அஸீஸ், ஜமால், வட்டானை என முஸ்லீம் சகோதரர்களை கொண்ட ரீம். இரண்டு ரீம்காறர்களும் வெலிங்டன் தியேட்டர் அருகில் சந்தித்து அடுத்த வாரம் மோதுவதாக முடி வெடுப்பார்கள். செய்தி காட்டுத் தீயாக ஊர் முழுக்க றெக்கை கட்டிப் பறக்கும். தமிழ் பகுதிகளில் அடுத்தவாரம், காக்கா மாருக்கு இருக்குது அடி எனவும், முஸ்லீம் பகுதிகளில் வாற வெள்ளிக் கிழமை தமிழனுக்கு இருக்குது குறுமா எனவும் இளைஞர்கள் பேசிக் கொள்வார்கள்.

மரவெட்டான் குளம் ( எழுதுமட்டுவான் மைதானம் ) வெள்ளிக் கிழமை தமிழ் முஸ்லீம் இளைஞர்களால் நிரம்பி வழியும். மச்சான் நடராஜா, பின்னால சீனிக்காக்கா வாறான் கவனம் மச்சான் என தமிழ் இளைஞர்களும், சீனிக்காக்கோவ் கோணர் கிக் ஒண்டு கொடுங்கோ சீனிக்காக்கா என முஸ்லீம் இளைஞர்களும் குரல் கொடுப்பார்கள். ஆம் யுத்தம், தர்ம யுத்தம் நடக்கும். இறுதியில் தமிழ் இளைஞர்கள் வென்று விடுவார்கள். முஸ்லீம் இளைஞர்கள் வெடிக் கொழுத்துவார்கள். பக்கத்தில் உள்ள யாசீன் காக்காட சினிமா தியேட்டரில் அனைவரும் ஒன்றாக 6.30 படம் பார்த்து, அடுத்தவாரம் தர்மசங்கரி மைதானத்தில மோதுவோம் மச்சான் என புறப்படுவார்கள். எஸ் வீ ஓள் ஆர் கசின்.

வீடு கட்ட வேண்டும். புது வீடுகட்ட நிலம் பார்க்க, நிலக்கால் நாட்ட தமிழ் சாத்திரிமாருக்கிட்டத்தான் அத்தனை காக்கா மாரும் போவார்கள். கிழக்குமாணத்தில் உள்ள 90 வீதமான முஸ்லீம்களின் வீடுகள் 1983க்கு முதல் தமிழ் சகோதரர்களால்தான் கட்டப்பட்டது. அவ்வளவு நேர்த்தி, அவ்வளவு பொறுப்புணர்ச்சியுடன் இருந்து தங்கள் குடும்பத்தில் ஒருவருக்கு உதவுவது போல் செய்வார்கள். எஸ் வீ ஓள் ஆர் சேம் பிளட்.

ஆம் தமிழ் முஸ்லீம் இனக்கலவரங்கள் வரும். கல்முனை காக்கா மாருக்கும், நற்பிட்டிமுனை தமிழ் சகோதரர்களுக்கும், அக்கரைப்பற்று காக்கா மாருக்கும், பனங்காடு, கோளாவில் தமிழ் சகோதரர்களுக்கும், காத்தான்குடி காக்காமாருக்கும், ஆரப்பத்தை தமிழ் சகோதரர்களுக்குமிடையில் இரண்டு வருடத்துக்கொரு முறை இனக்கலவரம் வரும். இது திட்டமிட்ட புத்திஜீவிகளால் உருவாக்கப்படும் இனக்கலவரம் அல்ல. நேற்று இரவு தென்னங்கள்ளையோ அல்லது வடிசாராயத்தையோ அருந்தியவர்களால் உருவான இனக்கலவரம். முதல்நாள் இரண்டு பகுதியிலும் இரண்டு பேரின் செவியை (காது) அறுப்பார்கள். அடுத்தநாள் இரண்டு பகுதியிலும் கொஞ்சம் சோடா போத்தல் பறக்கும். மூன்றாம் நாள் அப்பகுதி பொலீஸ் அதிகாரி இருபகுதியிலும் கோயில் தலைவர்கள், பள்ளிவாசல் தலைவர்களை அழைத்து. ஓகே. இன்றிலிருந்து சமாதானம் சரியா என்பார். இருதரப்பாரும் தலையாட்டுவர். பகல் ஒரு மணிபோல் போலீஸ் வண்டியில் ஸ்பீக்கர் கட்டி. சரி இருதரப்பும் சமாதானம் ஆகிவிட்டது. நாளை கடை திறக்கலாம், பாடசாலைக்குப் போகலாம், எல்லாம் வழமை போல் இயங்கும் என்பார்கள். டண். இரண்டு பகுதியிலும் போத்தல் எறிந்த குறுப்புகள் அன்று பின்னேரமே சாறாட ( சிங்கள சகோதரர் ) கொட்டிலில் சோமபானம் அருந்திக் கொண்டிருப்பர். எஸ் வீ ஓள் ஆர் சக்களத்திகள்.

இந்த சக்களத்தி சண்டைகளையும், நண்பர்கள் சண்டையையும். மச்சான் மச்சினன் சண்டையையும் ஊதிப்பெருப்பித்த புண்ணியம் கிழக்கு மாகாணத்தில் 1979ல் வீசிய புயல், வெள்ளத்தையே சாரும். அன்று கிழக்கில் மருதமுனை, நீலாவணை, பெரிய கல்லாறு, கோட்டைக்கல்லாறு, ஓந்தாச்சிமடம், களுவாஞ்சிகுடி, களுதாவளை, பெரிய போரதீவு, கோயில் போரதீவு போன்ற இடங்களில் பாரிய சேதங்கள் ஏற்பட்டது. இப்பகுதி முழுக்க முழுக்க தமிழ் சகோதர, சகோதரிகள் வாழும் பகுதிகள். உடனடியாக அன்று பிற்பகலே பொத்துவில் தொடக்கம் கல்முனை வரையுள்ள முஸ்லீம் இளைஞர்கள் புஸ்பைக்கிலிலும், கால்நடையாகவும் சென்று அவர்களுக்கு எவ்வளவோ உதவிகள் செய்தார்கள். செய்தோம். ( இப்போதும் வன்னி புனிதர்களுக்கு, சட்டி பானையுடன் ஓடிப்போய் முதல் சோறு போட்டவனும் இந்த காத்தான்குடி சோனிகள்தான். திஸ் இஸ் இஸ்லாம். வட் ஹெப்பன் ரு வணங்கா மண். தற் இஸ் பக்கா கெப்பிற்றலிஷம். தற்ஸ் வை ரூ லேட் போர் எவ்ரிதிங் ) அப்போது, ஒருவாரத்தின் பின் யாழ்ப்பாணத்திலிருந்து பல இளைஞர்கள் இவர்களுக்கு உதவி செய்கின்றொம் பேர்வழி எனக்கூறிக் கொண்டு வந்து, உதவியுடன் உபத்திரவத்துக்கும் பிள்ளையார் சுழிபோட்டார்கள்.

அடியாத மாடு படியாது, அடி உதவுகின்றாப் போல் அண்ணன் தம்பி உதவமாட்டான், யாமிருக்கப் பயமேன் என ஆரம்பித்து, எங்களை, ஒன்றாக, ஒரு தாய் பிள்ளைகளாக வாழ்ந்த எங்களை, கொத்தி கூறு போட்டு, கொத்து பராட்டா போட்டு, கொக்கரித்து, கொந்தளிக்க வைத்து, டேய் காக்கா வாறான், காக்கா வாறான் கதையை நிற்பாட்டு, ஏதோ றெக்கி எடுக்கத்தான் வாறான் என்ற அளவுக்கு எங்கள் நண்பர்களை, எங்களுடன் வாழ்ந்தவர்களை, எங்களுடன் ஒன்றாக உறங்கியவர்களை கிள்ளி தொட்டிலையும் ஆட்டி, திரும்பவும் ஆட்ட நினைக்கின்றீர்களே, இது தகுமா, இது தருமமா. கோவலனை கண்ணகி மாதவி விடயத்தில் மன்னிக்கவில்லையா, நடுக்காட்டில் தன்னை விட்டு விட்டு ஓடிய நளனை தமயந்தி மன்னிக்கவில்லையா, தன்னை வைத்து சூதாடிய அயோக்கியன் தருமனை பாஞ்ஞாலி என்ற பதிவிரதை மன்னிக்கவில்லையா. பிளீஸ் எங்களை கொஞ்சம் பழையபடி சேர்ந்து வாழத்தான் விடுங்களேன். வீ ஆர் ஸ்ரில் திங்கிங் எபவுட் அவர் ஓல்ட் கல்ச்சர்.

1981இல் கிழக்கு மாகாணம் அக்கரைப்பற்றைச் சேர்ந்த பாறூக். வீட்டில் தனது குடும்பத்தாருடன் ஏற்பட்ட சிறு பிரச்சனையில் மட்டக்களப்பிலும், யாழ்ப்பாணத்திலும் அலைந்து திரிந்தார். அச்சமயங்களில் இவர் யாழ் பாணத்திலுள்ள டவுண் பள்ளி வாசலில்தான் ( இப்போதைய ஈபிஆர்எல்எப் ஒபீஸ் அருகில் உள்ள பள்ளி வாசல் ) தங்கினார். ஒரு சில நாட்கள் சுபாஸ்கபேயில் வேலையும் செய்தார். பின்னர் யாழ் பஸ் நிலையத்தில் ஒரு கூவி விற்கும் வியாபாரியுடன் சேர்ந்து சிறு சிறு வியாபாரம் செய்தார். 1982 கடைசியில் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த சில ஈபிஆர்எல்எப் முஸ்லீம் இளைஞர்களின் துணையுடன் யாழ்ப்பாணம் ஐந்து சந்தி பள்ளியில் தங்கியிருந்தார். அப்போது இவர் ஈபிஆர்எல்எப் இல் இணைய முயற்சி செய்தார். இவரது நடவடிக்கைகள் சிறப்பாக இல்லாததால் அவரை இணைத்துக் கொள்ளவில்லை. பின்னர் அவர் ஐந்து சந்தியில் உள்ள ஒரு இறைச்சிக் கடையில் வேலை செய்தார்.

அதன் பின் இவர் பருத்தித்துறையைச் சேர்ந்தவரும், புலிகள் இயக்கத்தவருமான கெப்டன் நரேஷ் ( இவர் இப்போது இங்கிலாந்தில் இருக்கின்றார் ) அவர்களூடாக 1984 முற்பகுதியில் புலிகள் இயக்கத்தில் இணைந்து கொண்டார் அல்லது இணைக்கப்பட்டார். இவரது வேகமான வளர்ச்சி, இறைச்சிக்கடை அனுபவம் புலிகளை மலைக்க வைத்தது. இவரது வெட்டுக்குத்துகளைப் பார்த்த கிட்டண்ணா இவரை தனது மெய்பாதுகாவலராக இணைத்துக் கொண்டார். ஒருசில நேரங்களில் இவரது வளர்ச்சியில் லெப்.கேணல்.ராதாவுக்கு, வளர்த்த கடா மார்பில் பாய்ந்துவிடுமோ என்ற ஒரு மன உளர்ச்சி, தளர்ச்சி இருந்தது. ஆம் அது 07-01-1987ல் சிங்கள கூலிப்படை கொன்றது என்ற பெயரில் பிற்பகல் 5.55க்கு கே.கே.எஸ்.வீதியில் ராதா தலைமையில் அரங்கேறியது. அக்கரைப்பற்று ( அக்கு, ஆர், அரை, பற்று )பெற்றெடுத்த ஒரு மறவன் செஞ்சோற்றுக்கடன் தீர்க்க சேராத இடம் சேர்ந்து, வஞ்சத்தில் வீழ்ந்தானடா, கர்ணா எய்தவன் கர்ணனடா, கர்ணா எய்தவன் ராதாவடா. இது பாறூக்கின் சரித்திரத்தில் ஒரு துளி.

முகமட் ஹாசீம் முகமட் ராபி, இவர் அட்வகேட் ஹாசீம் பி.எஸ்சி (இந்தியா) அவர்களின் இரண்டாவது மகன். கேட் முதலியார் எம்.எஸ்.காரியப்பரின் ( அமைச்சர், எம்பி )பேரன். இவர் அக்ரைப்பற்று சென்றல் கொலேஜ்ஜில் ஓஎல் வரை படித்து, ஏஎல் யாழ். மகஜனாவில் படித்தவர். 1983 ஆரம்பத்தில் பரீட்சை முடிவை எதிர்பார்த்து அக்கரைப்பற்றில் இருந்தார். அப்போது 1983 ஜூலை கலவரம் வெடித்து, குட்டிமணி, தங்கத்துரை எல்லாம் பனாகொடையில் கொல்லப்பட, தமிழ் சிறைக்கைதிகளை மட்டக்களப்பு சிறைக்கு மாற்றினார்கள். மட்டக்களப்பு சிறையுடைப்புக்கு ஆயுதப் பற்றாக்குறை ஏற்பட, அக்கரைப்பற்றில் உள்ள முஸ்லீம் இளைஞர்களும், தமிழ் இளைஞர்களும் சேர்ந்து 1983 செப்டம்பரில் திருக்கோவில், தம்பிலுவில் கிராமங்களில் பொதுமக்களின் ஆயுதங்களை கொள்ளையிட்டார்கள். சிலதை உரிமையாளர்களின் ஒப்புதலுடன் பெற்றார்கள்.

அப்போது, முஸ்லீம் இளைஞர்கள் இந்த மொகமட் ராபியையும் அந்நிகழ்வுக்கு அழைத்து வந்திருந்தார்கள். முகமட் ராபி பங்கு பற்றிய முதல் நிகழ்வு இது. அதன் பின் இவர் பல முறை ஈபிஆர்எலஎப் இல் இணைய முயற்சித்தார். அப்போது இந்திய அரசும், இந்திய ரோவும் இணைந்து தமிழ் அமைப்புகளுக்கு பயிற்சி வழங்க முன் வந்திருந்தது. இச்செய்தி பத்மநாபா ஊடாக முதல் முதலில் கிழக்கு மாகாணத்துக்கு அறிவிக்கப்பட்டது. உடனடியாக அடுத்த வாரமே கிழக்கு மாகாணத்தில் இருந்து 67 இளைஞர்கள் அனுப்பப்பட்டார்கள். இதில் இந்த முகமட் ராபியும் ஒருவர். இவர் ஒருவர்தான் முஸ்லீம் இளைஞர். யாழ்ப்பாணத்தில் ஈபிஆர்எல்எப்புக்கு அப்போது பொறுப்பாக இருந்த தோழர்கள் அவரை மட்டும் திருப்பி அனுப்பிவிட்டு, மற்றவர்களை மயிலிட்டி ஊடாக இந்தியாவுக்கு அனுப்பி வைத்தார்கள். ஆம் தடங்கல் அப்போதே ஆரம்பித்து விட்டது. என்றாலும் அப்போது ஈபிஆர்எல்எப்பில் கிழக்கு மாகாணத்தில் எடுபிடியாக இருந்த ஒருவரின் ( எல்லா இயக்கங்களுமே முஸ்லீம்களை எடுபிடியாகத்தான் பாவித்தார்களா என்பது கடவுளுக்கே வெளிச்சம் ) நச்சரிப்பில், அவரே நேரடியாக யாழ். வந்து தோழர்களை உண்டு இல்லை என பண்ணி, முகமட் ராபியை மயிலிட்டியில் படகில் ஏற்றிக்கொண்டு வேதாராண்யம் ஊடாக மெட்ராஸ் சூழைமேடுவரை வந்து ராபியை, நாபாவின் ஆசீர்வாதத்துடன் உத்தரப்பிரதேசம் அனுப்பி வைத்தார்.

1984 பெப்ரவரிக்குப் பின் கிழக்கு கிழக்காக இல்லை. தடி எடுத்தவன், தண்ணி அடித்தவன், மச்சான் போட்டு பேசியவன், படலைக்குள் புகுந்து மையிறு புடுங்கியவர்கள் எல்லோரும் தடியுடன் இருந்தார்கள். இது கொஞ்சம் வித்தியாசமான தடி. இவனை பார்த்தால் கோழிக் கள்ளன் போல் இருக்கின்றான் மச்சான். போடு, போடு போட்டுத்தள்ளு என போட்டுத்தள்ளிக் கொண்டிருந்தார்கள். நண்பர்கள், சகோதரர்கள், ஒன்றாக எங்களை செக்கண் சோவுக்கு அழைத்துச் சென்றவர்கள், வா மச்சான், வாடா காக்கா என அன்பாக அழைத்த நண்பர்கள். வாடா காக்கா என, அடிநாக்கு நாசியையும், தொண்டையையும் ஒட்டுற மாதிரி அழைத்தார்கள். அதில் அன்பில்லை. ஆக்ரோஷம் இருந்தது. பள்ளி வாசல்கள், கடைத்தொகுதிகள், வயல்வெளிகள் எல்லாமே அழிந்து போயின. ஒரு தாய் வயிற்றுப்பிள்ளைகள் போல் இருந்த நாங்கள், ஒருவரை ஒருவர் பார்க்க வெட்கப்பட்டோம். வேதனைப்பட்டோம். கையில் தடி வைத்திருந்தவர்கள் தவிர, மற்ற அனைத்து சோனிகளும், தமிழனும் வாழ்வாதாரத்துக்கு கஸ்டப்பட்டார்கள். கஸ்டப்பட்டோம். கூலித்தொழிலாழிகள் ஒரு வேளை உணவுக்கு அல்லாடினர்.

இதில் இரு பகுதியினரையும் குறை சொல்ல வேண்டியுள்ளது. தமிழ் இளைஞர்கள் ஆயுதங்களுடன் இருந்து திட்டமிட்டு செய்தார்கள். மூஸ்லீம் இளைஞர்கள் எவ்வித ஆயுதமயப்படுத்தலுமின்றி கூட்டம், கூட்டமாக சென்று சில அநாகரிக செயல்களை அரங்கேற்றினர். இதற்கு அரசும் பின்னால் நின்று நெய்யூற்றியது. இவற்றின் உச்சக்கட்டம்தான் சிறிலங்காவில் ஜிஹாத் அமைப்பு தோன்ற வழி வகுத்தது. ஆம் 1984 ஜூன் 17ல் ஜிஹாத் உருவானது. முழு சிறிலங்காவிலுமிருந்து 40 நலன்விரும்பிகளின் ஒத்துழைப்புடன் அது தொடங்கியது. காலி கோட்டை, வேருவளை தொடங்கி யாழ். நயினாதீவு வரையுள்ள மனிதாபிமானிகளின் உளப்பூர்வமான செயல்பாட்டுடன் அது தொடங்கியது.

அது அக்கரைப்பற்றில்தான் உருவானது. உருவாகி அடுத்த தினமே நாடுமுழுக்க துண்டுப்பிரசுரங்களும், கையேடுகளும் வினியோகித்தது. நாங்கள் ஆள வந்தவர்களல்ல. வாழவந்தவர்கள். பிளீஸ் எங்களை விட்டுடுங்கோ என கரம் கூப்பி சகோதர இனங்களை மன்றாடியது. அதன் பின், இனி எம் பகுதியில் நடக்கும் அத்து மீறல்களை நாங்கள் தட்டி கேட்போம் என சிறிலங்கா முழுக்க பறை சாற்றியது. அதன் பின் நடந்த, ஆள் கடத்தல், வரி, கப்பம், கொலைகளுக்கெல்லாம் ஜிஹாத் உரிமையுடன் நடவடிக்கை எடுத்தது. 1985 இல் பயிற்சி முடித்துக் கொண்டு முகமட் ராபி சிறிலங்கா வந்து திருக்கோயில் பகுதியில் ஈபிஆர்எல்எப் அமைப்புடன் தங்கியிருந்தார். இவரும் ஜிஹாத்துடன் இணைந்து விடுவாரோ என்ற பயத்தில் இவரை திருக்கோவிலில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு கடத்த ஒரு தமிழ் அமைப்பு முடிவெடுத்து, இவரை சங்கிலியால் கட்டி 1985 ஜனவரியில் ஒரு கொரளா காரில் கடத்திச் சென்றார்கள். ஆம் ஜிஹாத் அமைப்பின் ஒரு அதிரடி நடவடிக்கையின் மூலம், எவ்வித சிராய்ப்புமின்றி முகமட் ராபி நிந்தவூர் பிரதான வீதியில் ஒரு அதிகாலைப் பொழுது மீட்கப்பட்டார். திஸ் ஒப்பரேஷன் புறம் சிறிலங்கன் ஜிஹாத்.

அன்று முதல் அவர் ஜிஹாத் அமைப்பின் இராணுவ தளபதியாக செயல்பட்டார் ( இவர் எக்காலத்திலும் புலிகள் அமைப்பில் இருக்கவில்லை ). ஜிஹாத் அமைப்பின் வளர்ச்சி கண்ட அப்போதைய பாதுகாப்பு அமைச்சர் லலித் அத்துலத் முதலி நேரடியாக இவர்களை அழைத்து, இரண்டு மூன்று பேச்சு வார்த்தைகள் நடாத்தி, ஆயுத உதவி செய்வதாக உறுதியளித்தார். ஆம் பயிற்சியும் வளங்கப்பட்டது. ஜிஹாத் பல முறை புலிகளுடன் அக்கரைப்பற்றிலும், காரைதீவிலும், மூதூரிலும் பேச்சு வார்த்தை நடாத்தியுள்ளது. ஜிஹாத் அமைப்பின் மிக, மிக பொறுப்பானவர்கள் எவ்வித உயிரச்சமுமின்றி புலிகள் சொன்ன இடங்களுக்கு சென்று பேச்சு வார்த்தைகள் நடாத்தியுள்ளனர். பேச்சு வார்த்தைகளுக்கு சென்றவர்களை கடத்த முயன்னற போதும், வார்த்தை ஜாலங்களால் தப்பி வந்ததுமுண்டு.

ஆம் 1985 மே 21ம் திகதி இரவு 7.15க்கு ராபி கிழக்கு மாகாண ஈரோஸ் அமைப்பினரால் நெஞ்சில் 27 துப்பாக்கி சன்னங்கள் விளாச சுட்டுக் கொல்லப்பட்டார். அவரை கொன்ற அக்கரைப்பற்றைச் சேர்ந்த அவ்விளைஞர் கடந்த 12 வருடங்களாக பிரான்சில் இருந்து, போன வருடம் இங்கிலாந்துக்கு மலையேறியுள்ளார் என்பதையும் தாழ்மையுடன் கூறிக்கொள்ளலாம். அக்கொலைக்கு கட்டளை இட்டவர் இப்போது முஸ்லீம் சகோதரர்களுடன் வியாபாரங்கள் செய்கின்றார். ஆம் மன்னிப்பை விட உயர்ந்த பண்பு இந்த உலகத்தில் வேறு என்ன மண்ணாங்கட்டி இருக்கின்றது.

இந்த ஜிஹாத் அமைப்பு அரசு செய்த சில கூலிக்கு மாரடிக்கும் வேலைகளை செய்ய மறுத்தது. ஆம் சகோதர இனத்தை இரத்த வெறி கொண்டு தாக்குவதை ஜிஹாத் குழுவினர் அங்கீகரிக்க மறுத்ததின் பயனாய், அரசு கட்டாக்காலிகளை அழைத்து துப்பாக்கிளை கொடுத்து என்னென்னவோ செய்ய தூண்டியது. கூலிக்கு மாரடிக்கும் அக்குழு நிறைய செய்தது. அவை அனைத்தும் ஜிஹாத் அமைப்பின் தலையில் கட்டப்பட்டது. ஆம் இவ்வாறு ஒன்று நடந்தால் எப்படி சமாளிப்பது என ஜிஹாத் அமைப்பினர் ஆரம்பத்திலேயே திட்டமிட்டனர். ஆம். ஜிஹாத் அமைப்பிலிருந்து பலர் மறைமுகமாக தெரிவு செய்யப்பட்டு, அல்பத்தாஹ் என்ற அமைப்பு கட்டப்பட்டது. இதுவும் 1984 ஒக்டோபரில் உதயமானது. அல்பத்தாஹ். நிறைய மார்க்க , சன்மார்க்க பணிகள் மற்றும் விதவைகளுக்கு உதவுதல், நோயாளிகளுக்கு, பாடசாலைக்கு செல்ல வழியில்லாதவர்களுக்கு உதவுதல் எனவும் செயல்பட்டதுடன், சில நாகரிக நடவடிக்கைகளிலும் இறங்கியது. ஆம் 1985 மே 21ல் சுட்டுக் கொல்லப்பட்ட ராபியின் ஞாபகார்த்தமாக, அக்கொலைக்கு துணைபோன சகலரையும் 1985 ஜூன் 21 இரவு 7.15 க்கும், 1986 மே 21 இரவு 7.15 க்கும் கழுவிலேற்றியது. இறுமாப்புடன் உரிமையும் கோரியது.

ராபி மரணமாகி இரண்டு மணி நேரத்தில் சிறிலங்கா முழுக்க ஒண்ணரை லட்சம் துண்டுப்பிரசுரங்கள் வெளியாகியது. அல்பத்தாஹ் என்ற தலைப்பில், அல்லாஹ் அக்பர், அல்பத்தாஹ் அமைப்பின் இராணவத் தளபதியும், முகமட் ஹாசீம் அவர்களின் மகனுமான முகமட் ராபி, 1985-05-21 இரவு 7.15 க்கு தமிழ் பயங்கர வாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டு, மேலும் பல ஆயிரம் ராபிக்கள் உருவாக வழி வகுத்துள்ளனர் என்பதை, மிக, மிக பெருமையுடன் அறியத்தருகின்றோம். அல்பத்தாஹ், மத்திய செயற்குழு என நாலுக்கு நாலங்குலத்தில் அது வெளியாகி அரபு நாட்டு எம்பஸிகளின் கதவுகளையும் தட்டியது.

1985 மே 21 ராபி மரணமாகி இரண்டு மணி நேரத்தில் சிறிலங்காவின் முழு பாதுகாப்பு தலைமைகளும் அக்கரைப்பற்றில் நின்றன. அம்பாரையில் இருந்தும், கொண்டைகட்டுவான் இராணுவ முகாமில் இருந்தும் ஆயுதங்கள் வந்து கொண்டிருக்கின்றன. தயாராகுங்கள். அழியுங்கள் தமிழர்களின் குடியிருப்புக்களையும், வரலாறுகளையும் என்றார்கள். ஆம் உடனடியாக ஜிஹாத், அல்பத்தாஹ் பொறுப்பாளர்கள் கூடி இது தருணமல்ல, இது பொருத்தமுமல்ல, இது நாகரிகமும் அல்ல என முடிவெடுத்தார்கள். அரசுடன் ஒத்துழைப்பதில்லை என ஒரு சேர அத்தனை மத்திய குழு உறுப்பினர்களும் முடிவெடுத்தார்கள் ( சம்மாந்துறையைச் சேர்ந்த, மறைந்த அன்வர் இஸ்மாயீல் எம்பி அவர்கள் அல்பத்தாஹ் அமைப்பில் மத்திய செயற் குழு உறுப்பினராக இருந்தவர்களில் ஒருவர் என்பதை இங்கு பெருமையுடன் சொல்லலாம். ) பாதுகாப்பு பிரிவும், கொஞ்சம் ரத்தம் துடிப்பவர்களும் எவ்வளவோ தலையணை மந்திரங்கள் ஓதினார்கள். ஆனால் அன்பு, மனிதாபிமானம், பொறுப்புணர்ச்சி, எதிர்காலம் என்பதில் முழு நம்பிக்கை கொண்ட சிறிலங்கா ஜிஹாத் அமைப்பு, எய்தவனிருக்க அம்பை நோக வைக்க விரும்பவில்லை. ஆனால்,

ஆயுதம் தருகின்றோம், கொழுத்து முஸ்லீம்களின் பள்ளிவாசல்களை என்றதும் கொழுத்தியவர்களும், ஆயுத கப்பலே அனுப்புகின்றோம் விரட்டு சோனிகளை என்று இஸ்ரேல் சொன்னதும் ஒரு மாவட்ட முஸ்லீம்களின் வரலாறையே அழிக்க முற்பட்டவர்கள்தான் இந்த தமிழீழ விடுதலைப் புலிகள் என்றால் அது மிகையாகாது. ஆனால் அமைப்பு ரீதியாக செயல்பட்ட எந்த முஸ்லீம்களும் எக்காலத்திலும் கூலிக்கு மாரடிக்கவில்லை. மாரடிக்கவும் மாட்டான். தற் இஸ் இஸ்லாம்.

இந்த அல்பத்தாஹ் அமைப்பின் செயல்பாடுகளில்தான் அனைவரும் அக்காலங்களில் கவனம் செலுத்தினர். யார் இவர்கள். எங்கிருந்து தொழில்படுகின்றார்கள் என கண்ணுக்குள் விளக்கெண்ணை போட்டு தேடினார்கள். அதன் ஒரு வெளிப்பாடுதான் பிற்காலங்களில். ஓ இப்படியும் ஒரு ஆள்மாறட்டம் செய்யலாமோ என தோன்றிய சங்கிலியன் படை. ஆம் 1991 முஸ்லீம்கள் யாழ்ப்பாணத்தை விட்டு வெளியேறியதும், முஸ்லீம்களின் வீட்டுத் தொகுதியொன்றை விடுதலைப்புலிகள் தமது அச்சகமாக பாவித்தார்கள். அந்த அச்சகத்துக்கு வே.பிரபாகரன் அவர்கள் வந்து போவது வழமை. ஆனால் ஒரு நாள் தலைவர் வந்து ஒரு முக்கால் மணி நேரத்தின் பின் வெளியேறி இரண்டு நிமிடத்தில் அவ் அச்சகம் வெடித்துச் சிதறியது. அதற்கும் இந்த அல்பத்தாஹ்வுக்கும் தொடர்பு இருக்குமோ என்ற போர்வையில், யாழ்ப்பாணத்தில் ஆங்காங்கே அக்காலங்களில், தமிழ் பெண்களை திருமணம் செய்து கொண்டிருந்த முஸ்லீம் சகோதரர்களை இந்த சங்கிலியன் படை வறுத்தெடுத்ததாகவும் அப்போது பட்சிகள் பேசிக்கொண்டன.

இப்போது சிறிலங்காவில் ஜிஹாத் இருக்கிறதா, இயங்குகின்றதா என்பதுதான் அனைவரின் கேள்வியும். ஜிஹாத் என்பது வாழ்க்கையுடன், வாழ்க்கைக்காக போராடுவது. அடுத்தவனைப் போய் வம்புக்கிழுப்பதல்ல. வம்புக்கிழுக்க இஸ்லாம் எந்த இடத்திலும் கூறவில்லை. அப்போதைய ஜிஹாத்தை சிலர் வம்புக்கிழுத்து, வம்பில் மாட்டிவிட நினைத்தனர். அதனால் நடப்பது தர்மயுத்தம், தமிழ் பேசும் தமிழ் மக்களுக்கும், சிங்கள அரசுக்கும் இடையில் ஒரு தர்மயுத்தம், அது தன் வழியில் நடக்கட்டும், நாம் முதலில் எம்மை புடம் போட்டுக் கொள்வோம். இக்கால கட்டங்களில் எம்மிடமும் ஆயுதம் இருந்தால் அது வேறு, வேறு பின் விழைவுகளை ஏற்படுத்தும் என்பதை பல மார்க்க அறிஞர்களும், புத்தி ஜீவிகளும் எடுத்துரைக்க, ஜிஹாத், அல்பத்தாஹ் அமைப்புக்களின் பைல்கள் மூடப்பட்டு அனைவரும் 1987 டிசம்பரில் நாடு கடந்தனர். கடந்து, முஸ்லீம்களின் கல்வி, வியாபார விடயங்களில் 100 வீத கவனம் செலுத்தினர். செலுத்திக் கொண்டுமிருக்கின்றனர். அதன் பயன்தான் இன்றைய முஸ்லீம்களின் கல்வி, வியாபார எழுச்சிகளெல்லாம். இல்லாவிட்டால், இன்றைய எமது முஸ்லீம் இளைஞர்கள் எங்கேயோ அகதி அந்தஸ்துக்கு விண்ப்பித்துக் கொண்டிருப்பர்.

இனி ஒரு ஜிஹாத்தோ, ஒரு அல்பத்தாஹ்வோ சிறிலங்காவில் தோன்றவும் கூடாது, தோன்றவும் மாட்டாது. இப்போது அனைவருக்கும் தேவை ஒரு பொருளாதாரப் புரட்சி. அந்தப் புரட்சி வெடிக்க நிச்சயம் சிறிலங்கா ஜிஹாத் கொடிபிடிக்கும். அதற்காக புலிகளுடனும், வன்னி மக்களுடனும் நிச்சயம் கொடிபிடிக்கும். அப்புறம் மகிந்தவின் காதையோ, ரணிலின் காதையோ, சரத்பொன்சேகாவின் காதையோ கடித்து, மானில சுயாட்சியாவது எங்களுக்கு தாங்கோ மக்காள் என கேட்போம். ஒன்று பட்டால்தால் உண்டு வாழ்வு. ( இதில் உள்ள தகவல்கள் எமது உள்ளக் கிடக்கைகளின் ஒரு பனித்துளி அன்பின் பக்ஷீர் காக்கா. இவ்வாறு ஆயிரம் கோடி பனித்துளிகள் வன்னியில் உறங்கிக் கிடக்கின்றன சகோதரர்களே. இனி இவைகளை மறந்துவிட்டு நல்லதோர் உலகம் செய்வோம் )


05-11-2009. VIII


1 comments :

Ram November 6, 2009 at 8:15 PM  

Firstly the cyclone was in 1978 not in 1979.even before this the general feeling of the batticaloa and ampara tamil's was that don't trust the jaffna man and the muslim man (paaniyaum sooniyaum nampathe)because most of the govt officers were from jaffna and most of the land were cultivated by the welthy muslims.It is a long history between the tamils and muslims proplems as told by the writer.it it is not correct to put all the things on jaffna men.until the muslim native were sent out of jaffna by force the north tamils and the muslims had very good life there with out any problem. it was LTTE's east man KARIKALAN who forsed to sent the muslims out of north. in this event you can see how you people misunderstood the real jaffna people. we allways for the unity of the tamils and muslims.unfortunatly the guns silent our voice when the muslims were fosibly sent out of north.

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com