அரசியல் ஞானமற்றோர் எமது கட்சியை அரசுடன் மோதவிட முயற்சி : பிள்ளையான்
"அரசியல் ஞானம் இல்லாத ஒரு சிலர் எமது கட்சியையும் எமது ஆட்சியையும் அரசாங்கத்துடன் மோத விட்டு வேடிக்கை பார்ப்பதற்கான பிரயத்தனங்களில் ஈடுபட்டு வருகின்றனர்" என கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் கூறினார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் அரசியல் வேலைத்திட்டங்களைக் கிராமிய மற்றும் பிரதேச மட்டங்களில் விஸ்தரிக்கும் வேலைகளை ஆரம்பிக்கும் வகையில் வாகரைப் பிரதேசத்தில் நடைபெற்ற வைபவத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
கட்சியின் துணைவரும் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான நாகலிங்கம் திரவியம் (ஜெயம்) தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் வாகரைப் பிரதேசத்திலுள்ள கிராமங்களைச் சேர்ந்த பலரும் கலந்து கொண்டனர்.
அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,
"கிழக்கு மாகாணத்தில் தமிழர்களுக்கு என நிலையான அரசியல் கட்சியென்றால் அது தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் மட்டும் தான்.வாடகை வீட்டில் இருப்பது போல் இன்னொரு கட்சியில் இணைந்து செயல்படுவதன் மூலம் எமது மாகாணத்தின் தனித்துவத்தையோ, எமது மக்களின் தனித்துவத்தையோ ஒரு போதும் பாதுகாக்க முடியாது.அப்படிப் போராட்டம் நடத்தினால் அங்கிருந்து வெளியேற்றப்பட்டு விடுவார்கள்.
இப்படியான அரசியல் எமக்குச் சரிவராது என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
அரசாங்கத்துடன் நாம் கெளரவமான உறவினைப் பேணியே அபிவிருத்தி வேலைகளை முன்னெடுத்து வருகின்றோம். இப்படி செயல்படும் போது எமது மாவட்டத்தைச் சேர்ந்த அரசியல் ஞானம் இல்லாத சிலர் அரசாங்கத்தையும் எம்மையும் மோத விட முயற்சிக்கின்றார்கள்.
இதன் மூலம் அரசியல் லாபத்தை அடையலாம் என நினைக்கின்றார்கள். இதையெல்லாம் கண்டு நாம் அஞ்சப்போவதும் இல்லை அடி பணியப் போவதும் இல்லை.
அனைவருமே ஒருமித்து நின்று பேரம் பேசுகின்ற சக்தியாக மாறி அதனூடாக அபிவிருத்திகளை ஈட்ட வேண்டும். அதே போல் தமிழ் மக்கள் அனைவருமே நிதானமாகச் சிந்திக்கின்ற காலகட்டத்தில் நாம் அனைவரும் நிற்கின்றோம்.
எனவே எதிர்வரும் காலங்களில் எமக்கென்று பலம் சேர்ப்பதற்கும் அரசியலில் எமது மாகாணத்தின் இருப்பிடத்தை நிலைக்கச் செய்வதற்கும் நாம் அனைவரும் நிச்சயம் ஒற்றுமைப்பட வேண்டும்" என்று குறிப்பிட்டார்.
இந்நிகழ்வில் கட்சியின் பொதுச் செயலாளர் எட்வின் சில்வா கைலேஸ்வரராஜா வாகரைப் பிரதேச சபைத் தலைவர் எஸ்.கணேசன் ஆகியோரும் கலந்து கொண்டு உரையாற்றினர்.
நன்றி வீரகேசரி
0 comments :
Post a Comment