Friday, June 5, 2009

ஒரு பாசிஸ்ட்டின் மரணம். -தமிழரசன் பேர்ளின்- பகுதி 4

அரசியலோ பொது அறிவோ இல்லாதவராக, எந்தநூலையும் வாசித்திராதவராக எழுதுவதோ பேச்சாற்றலோ இல்லாதவராகப் பிரபாகரன் இருந்தார். விளையாட்டிலோ படிப்பிலோ வேறு எந்தத் துறையிலோ பிரகாசித்திருந்திராத மனிதனாக மெச்சத்தக்க மனிதப் பண்புகளோ ஒருவிடயத்திலாவது விசேடகவனமோ இல்லாதவர். ரசனையோ மென் உணர்வோ இயற்கை சார்ந்த ஈர்ப்போ இல்லாத வறண்டமனிதர். அக உலகம் இருளடைந்த பிறவியாக உலாவியவர். இளம் வயதுமுதல் யாருடனும் அதிகம் சேராதவராக நண்பர்களைப் பெற்றிராத தனித்தமனிதனாக ஒதுங்கி வாழ்ந்தவர். அதிகம் பேசாத கேட்டதற்கு மட்டும் பதில் சொல்லும் அம்மமுண்டியாக இருந்தவர். பிற்காலத்தில் எவ்வாறு கொடூரமான ஆட்கொல்லியாக மாறியகாரணிகளை இக்கால வளர்பருவத்தில் காணமுடியும். இவர் தமையனான மனோகரனை வல்வெட்த்துறைச்சனங்கள் 'லேடி மனோகரன்' என்று அழைத்தபோது பிரபாகனைப் 'பெட்டையன்'; என்றே ஊர்ச்சனம் பேரிட்டிருந்தது. பிறரின் ஆழுமைக்கு எளிதில் ஆட்படுபவராக எங்கும் எவரையாவது சார்ந்து நிற்கும் தன்மை வாய்ந்தவராக இவர் இளமைப் பருவம் இருந்தது.

பிரபாகரன் ஒரு பிலிஸ்டைன். சுயநலம் பயம் தன்னம்பிக்கை, கோழைத்தனம் இவைகளின் கூட்டுநபராவார். இத்தகையவர் அதிகாரமும் வாய்ப்பும் கிட்டும்போது கனவிலும் எண்ணியிராத கொடுங்கோலர்களாகப் பாசிசப்பண்பு படைத்தவராக மாறுவர். தம் கடந்த காலத்திய சமூகக் கீழ்நிலைக்கு ஒடுங்கி உள்ளிழுத்து ஓட்டுள்பதுங்கி வாழ்ந்த நிலைக்கு பழிஎடுக்கும் இயல்பினராக மாறுவர். பிரபாகரனுக்கு ஆளம்பு சேனை வாய்த்தபோது பாசிஸ்டகளுக்கே உரித்தான எதிர்க்கருத்தோ ஜனநாயகமோயற்ற, தானே ஏகப்பிரதிநிதி ஏகத்தலைவன் ஏகஇயக்கம் என்ற கருதுகோள்களை இலகுவாக வந்தடைந்தார். பிரபாகரனுக்கு இருந்த ஒரே தகுதி நன்றாகச் சுடத்தெரிந்ததாகும்.

அண்மையில் குமுதம் சஞ்சிகையில் பிரபாகரன் பற்றி வந்த கட்டுரையொன்றில் ராகவன் என்பவர் பிரபாகரன் இளமையில் கிட்லரின் மையின் காம்ப் (ஆநin முயஅpக) நூலைப் படித்திருந்ததாக எழுதியுள்ளார். அக்காலகட்டத்தில் 1970பதுகளில் வடபகுதியில் தமிழிலோ ஆங்கிலத்திலோ மைன்காம்ப் (ஆநin முயஅpக) யாராலும் படிக்கப்பட்டது, வாசிப்போர் மத்தியில் உலாவியது அல்லது தமிழ் இளைஞர்களுக்கு அறிமுகமாகி இருந்தது என்பதற்கு எந்தவித ஆதாரமும் இல்லை. அது தடைசெய்யப்பட்டு இருந்ததுடன் இலங்கைப் பல்கலைக்கழக அரசியல் விஞ்ஞான நூலகங்களிற்கூட இருக்கவில்லை. இது கற்பனை என்பதைவிடப் பிரபாகரனின் மாவீரர் இருப்புக்குச் செய்யும் துணைச்செயலாகும். கிட்லர், பாசிசம் இவர்களைப் பற்றி கொம்யூனிஸ்டுகள் மட்டுமே உணர்வுள்ளவர்களாக இருந்தனர். கொல்வின் ஆர் டி சில்வா, பிலிப் குணவர்த்தனா போன்றவர்களது பேச்சிலும் எழுத்திலும் இவை பெருமளவு வெளிப்பட்டன. தமிழ் தேசியவாதிகளினால் செல்வனாயகம் ஜீ.ஜீ பொன்னம்பலம் ,அமிர்தலிங்கம் போன்றவர்கள் பாசிம் அல்லது பாசிச எதிர்ப்பு போன்றவை சார்ந்த படிப்போ பேச்சோ எழுத்துக்களுடனோ தொடர்பில்லாதவர்கள் என்பது மட்டும் உறுதி.

பிரபாகரனின் ஆடம்பரவிருப்பு- சொகுசு, புகழ்விருப்பு, தன்னைப்பரப்புவதில் அக்கறை, அதிகாரவெறி , அதீதமான சுயநலம் என்பன சமுதாயவயப்படாத பாசிசக் குணாம்சகளாகும். பிரபாகரன் தமிழர்களுக்காகப் போராடினார் என்ற சொற்சுலோகங்கள் பிரபாகரனின் தனிப்பட்ட இயல்புகள், அவர் பிரதிநிதித்துவப்படுத்திய வர்க்கம் இவைகளை ஆய்வுக்குட்படுத்த முடியாதவர்களின் விளக்கமாகும். எல்லோரையும் தனக்குக் கீழ்ப்படுத்துதல் தன்னுடன் உடன்படாதவர்களை எதிரியாகப் பிரகடனப்படுத்தி அழித்தல் பழி எடுக்கும் குணம் அரசியலுக்கு வெளியேயான தனிப்பட்ட வன்மங்கள் இவைகள் பிரபாகரனின் இயல்பாகும்.

யாழ் நடுத்தரவர்க்கத்தின் அரசியல் என்பது ஆயுதக் கலாச்சாரமாக கொலைப் பண்பாடாக மாற்றம் பெற்றது. பிரபாகரன் யாழ் நடுத்தரவர்க்கத்தின் புதல்வன் என்ற வகையில் அவர் கொடுங்கோலனாக மாறத்தக்க தமிழ்த்தேசியவாதத்தின் கருத்தோட்டங்கள் சமூகநிலமைகளுள் இருந்தன. புலிகளின் துரோகி ,எட்டப்பன், காக்கைவன்னியன், காட்டிக் கொடுத்தவன,; இனவிரோதி என்ற கருத்தாக்கங்கள் புலிகட்கு முந்திய தமிழரசுக்காலத்திற்கு உரியவையாகும்.

ரெலோ உறுப்பினர்கள் 800 பேர்வரை சுட்டுக்கொலை செய்யப்பட்டபோது யாழ் நடுத்தரவர்க்கம் அதை வீரக் காட்சியாகக் கண்டது. 100 இயக்கங்கள் தேவையில்லை ஒரு பலமான இயக்கம் இருந்தாற் போதுமென்று கருதியது. ரெலோ தாக்கப்பட்டபோது புலிகளுக்குச் சோடா கொடுத்து உபசரிக்கப்பட்டதாகவும் வெடிகள் கொழுத்தி மகிழ்ச்சி தெரிவிக்கப்பட்டதாகவும் வந்த செய்திகள் அரசியல் உணர்வு பெற்றதாகக்கருதும் யாழ் நடுத்தரவர்க்கம் எதிர்கருத்தற்ற பாசிசமயமாகும் சமிக்ஞையை வெளியிட்டதற்கான அடையாளமாகும். சாதாரண கருத்து வித்தியாசங்கள் சமூக யதார்த்தமாகக் கொள்ளப் படாமல் துரோகமாகக் காட்டிக்கொடுப்பாக விளக்கப்பட்டமை தமிழரசுக்காலத்தில் தொடங்கியது.

பிரபாகரன் தன் வாழ்நாளில் ஒருபோதும்; நண்பர்களைப் பெற்றிராதவர். நண்பர்களாக நம்பப்பட்டவர்களை துரோகி, உளவாளி என்று கொன்றார். தன்னைச் சுற்றியுள்ள எல்லோரையும் காலத்துக்காலம் பயன்படுத்திவிட்டுப் பின்பு கழுவில் ஏற்றினார். 'ஒன்றுமே தெரியாதவனுக்கு எல்லாவற்றிலும் சந்தேகம்' என்ற கூற்றிற்கு உதாரணமான மனிதர். தன்னைப் பொலீஸ் தேடும்போது காப்பாற்றியவர்கள், ஒழித்துவைத்துச் சாப்பாடு போட்டவர்கள், வீட்டில் அடைக்கலம் கொடுத்தவர்கள் எல்லாம் இவரின் கையாற்சூடுவாங்கிச் செத்தார்கள்.

தன் சொந்தப் பாதுகாப்பில் கண்ணுங்கருத்துமாக இருந்த பிரபாகரன் தனக்கு என்று ஆரம்பகாலத்திலேயே இந்தியாவுக்கு தேவைப்படும்போது தப்பிச்செல்ல தனி வள்ளமும்; தனக்கென்று ஓட்டியும் இரகசியமாக வைத்திருந்தார். யாழ்பாணத்தில் பொலீஸ் பொடியங்களைத் தேடினால் எமது தேசியத்தலைவர் இந்தியாவுக்கு வல்வெட்டித்துறையிலிருந்து வள்ளமேறிவிடுவார்.

சிலர் தமிழ்தேசியம், புலிப்பாசிசம் இரண்டையும் பிரித்துநோக்கினர். பாலையும் நீரையும் பிரித்து அருந்தும் அன்னப் பறவையென்று தம்மை கருதிக்கொண்டனர். தமிழரசுக் கட்சி கிளப்பிய தமிழரது தேசியவாதமே புலிப்பாசிசமாக இறுதியில் பரிணாமம் பெற்ற வளர்ச்சிப்போக்கை இவர்கள் கவனியாததோடு இவை அனைத்துமே மேற்குலக அரசியலால் வழிநடத்தப்பட்டவை என்பதைக் கணக்கில் எடுக்கவில்லை. புலிப்பாசிசம் என்பது தமிழ் தேசியத்தின் தொடர்ச்சி அதன் இறுதிக்கட்ட வளர்ச்சியாகும். ஏதிர்ப்புரட்சித்தன்மை வாய்ந்ததாகும்.

பிரபாகரனின் இறப்பின் பின்பு பிரபாகரனுக்குச் சில புகலிட ஜனனாயகவாதிகள் மாவீர மரியாதையையும்; அஞ்சலியையும் தெரிவிக்க முனைகிறார்கள். கிட்லரை எதிர்த்துப் போரிட்ட பாசிச எதிர்ப்பாளர்கள் அவன் இறந்த பின்பு அவனுக்கு அஞ்சலி செலுத்தும் அரசியல் அதிசயம் நிகழமுடியுமா? அதுபோல புலிப்பாசிசத்தாற் பாதிக்கப்பட்டவர்கள் தமிழ்மக்களுக்கு ஜனனாயகம் வேண்டும் என்று போரிட்டவர்கள் பிரபாகரனுக்கு அஞ்சலி செலுத்த முடியுமா? கொன்றவனுக்கும் கொல்லப்பட்வனுக்கும் ஒன்றாக அஞ்சலி செலுத்த இயலுமா? பாதித்தவனுக்கும் பாதிக்கப்பட்டவனுக்கும் ஒன்றுசேர அனுதாபக் கூட்டம் கூட முடியுமா? காந்தியவாதிகள் கோட்சேக்குத் தூக்குத் தண்டனை விதித்த தினத்தை துயரநாள் என்று பிரகடனப் படுத்துவார்களா? புலிப்பாசிசமா, இலங்கை முதலாளியஅரசா, என்பதில் புலிப்பாசிசம் என்னவகையிலும் அழியவேண்டும் என்ற அரசியல்நிலை எடுக்காமல் தமிழ் சிங்கள இனவாத வேலிகளுள் கட்டுப்படுபவர்கள் இறுதியில் பாசிசத்திற்கு உதவுவதிலேயே முடிவுறுவர்.

பிரபாகரனும் புலிகளும் இல்லாமற் போனால் தமிழ்மக்கள் நிலை என்னவாவது என்ற கேள்விகள் புலிகள் அல்லாதவர்களிடமிருந்தும் கிளப்பப்படுகிறது. எப்படிக் கிட்லரின் வருகையின் முன்பும் அதன் பின்பும் ஜேர்மானிய மக்கள் வாழ்ந்தார்களோ தமதுவழியிற் போரிட்டார்களோ அதேபோல் தமிழ்மக்களும் பிரபாகரனின் சாவின் பின்பும் சமூகவிடிவுக்காக சிங்கள முஸ்லீம் மக்களின் பொதுப்போராட்டத்தோடு இணைந்து அரசியல் செய்யப் பழகுவார்கள். பிரபாகரன் தமிழ் மக்களை ஏனய இலங்கை மக்களுடன் இணையவிடாமல் ஏற்படுத்திய அரசியற் தடைகளை கடந்துசெல்வார்கள்.

இலங்கைத் தீவில் தமிழ் மக்களின் அரசியல் என்பது நாடுதழுவியதாக மாறி ஆசியாதழுவியதாக அதிலிருந்து உலகார்ந்ததாக வளர்ந்து செல்லும். புகலிட நாடுகளிலுள்ள மேற்குலகசார்பு தமிழ் என்..ஜி.ஓக்கள் ஜனனாயகம் பேசும் தமிழ் இனவாதக் குழுக்கள் இவர்களின் அரசியற் தொல்லைகளிலிருந்தும் கருத்தியல் ஆக்கிரமிப்புகளிலிருந்தும் விலகித் தமது சொந்த அரசியலைப் படைத்துக்கொள்வார்கள். தமக்குத்தாமே தலைமைதருவார்கள். இவை இலங்கை முழுவதும் ஒரு சோஷலிச சமுதாயம் வரும்வரை தொடரும். தமிழரசு, தமிழர் விடுதலைக்கூட்டணி, தமிழீழ ஆயுத இயக்கங்களின் கழிவுப் பொருட்களான ஈ.பி.ஆர்.எல்.எப், புளொட், ரெலோ, ஈரோஸ் போன்ற சகல குழுக்களையும் மக்கள் தலை முழுகுவார்கள். அதன் பின்பே அவர்கள் சோஷலிசத்திற்கான முதற்தரிசனங்களை எட்டுவார்கள்.

இது மேலே தொடர் கட்டுரைகள் பிரிவில் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஏனைய பாகங்கள் தொடரும் .. ..T111

0 comments :

எம்மை தொடர்பு கொள்ள

Name

Email *

Message *

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com