Wednesday, May 27, 2009

அன்பு யுத்தம் ஆரம்பிக்கட்டும் -புரட்சிதாசன் அகமட்-


சுமார் முற்பது ஆண்டுகள் புரையோடிப்போயிருந்த அகோர இனவெறியுத்தம் கடந்த பதினேழாம் திகதி மே மாதம் முடிவுக்கு வந்துவிட்டது. ஆம் இத்தினம் உலகத்தில் கின்னஸ் புத்தகத்தில் நினைவாக பொறிக்கப்படவேண்டிய பொன்நாளாகும்.

ஒன்றுக்குமே அடங்காமல் எதற்குமே தலையசைக்காமல் ஒரு தீர்வுக்குமே சம்மதிக்காமல் தனது முரட்டுச் சுபாவத்தினையும் ஒத்துக் கொள்ளாத தன்மையினையும் அரங்கேற்றி இலட்சக்கணக்கான உயிர்களை காவு கொண்டது மட்டுமல்லாமல் விலை மதிக்க முடியாத பெறுமதிகொண்ட சொத்துக்களும் உடமைகளும் அழிக்கப்படுவதற்கும் பிரதான காரணியாகவிருந்த அந்த முரட்டுப் புலி செத்துவிட்டது. அத்துடன் அதன் இளையதுகளும் செத்துமடிந்துவிட்டது

இனி இதனுடைய கொட்டமும் அடங்கிவிட்டது அடக்கப்பட்டும் விட்டது. என்றும் எப்போதும் அடாவடித்தனமும் அடக்குமுறையும் நிலைத்ததில்லை என்பதற்கு ஒரு மிகச் சிறந்த உதாரணமாக இந்த வெற்றியை நாம்கொள்ள முடியும். தற்போது ஒரு சுமூகமான நிலை எமது நாட்டில் தோன்றியுள்ளதை நாம் அறிவோம்.

நான்கு சுவர்களுக்குள் அடைக்கப்பட்ட ஒரு சிறைக் கைதியின் வாழ்கையினை அனுபவித்த வடபுல மக்கள் இன்று சின்னஞ் சிறிய கூடாரங்களிலும் மரநிழல்களிலும் வாழவேண்டிய நிர்க்கதி ஏற்பட்டுள்ளது. இவ் வாழ்க்கை முறை முன்னையதை விடவும் கஸ்டமாக இருந்தாலும் நிம்மதியாக இருக்கிறது என்று தங்களுக்குள் முனு முனுத்துக் கொள்கின்றனர். இதற்குக் காரணம் அடக்கு முறையின் கீழும் குறுகிய வட்டத்திற்குள்ளும் வாழ்ந்த இந்த மக்கள் இன்று நிம்மதிப்பெருமூச்சு விட்டு வாழ்கின்றனர்.

கொடூர இரத்த வெறிபிடித்த அரக்கர்கள்(புலிகள்) நிர்வாகத்தில் கைகட்டி வாய்பொத்தி தலையசைத்து தலை குனிந்து அடிமைகளாய் வாழ்ந்த இந்த தமிழ் சமூதாயம் இன்று பூரண சுதந்திரத்துடன் ஓரளவு நிம்மதி மூச்சுடன் அடக்குமுறை அதிகார வெறியிலிருந்து அகன்று அகதி முகாம்களிலும் நலன்புரி நிலையங்களிலும் வாழ்கின்றனர்.

புலிகளின் கொடூர யுத்தத்தில் அன்பு சாகடிக்கப்பட்டு தலைக் கனமும் முரட்டுத் தனமும் அடாவடித் தனமும் உயிர்பெற்றிருந்தது. ஆனால் இது பதினேழாம் திகதியுடன் முற்றாகத் துடைத்தெறியப்பட்டு மீண்டும் ஒரு புதிய உலகம் உருவாக்க அங்குரார்ப்பணம் செய்யப்பட்டுள்ளது.

ஒன்றுமே புரியாத அறியாத தெரியாத முட்டாள்கள் செய்த யுத்தத்தினால் முழு இலங்கை வாழும் எல்லா இன மக்களும் பெரும் பாதிப்புக்குள்ளாக்கப் பட்டனர்.

எல்லோரும் சிங்கபூர் நாட்டிலுள்ள வசதிகள் வாய்ப்புக்களை விடவும் அதிக வசதிவாய்புக்கள் எமக்கு கிட்டும் என்று கங்கணம் கட்டியிருந்த இலங்கைத் திருநாடு கொடூர யுத்தவெறியர்களின் ஆதிக்கத்தால் குட்டிச் சுவராகிவிட்டது. மட்டுமல்லாமல் சுக்குநூறாகியும் விட்டது. சர்வதேசத்திற்கு தலைக்கு இரண்டு இலட்சம் கடனாளியாக வாழ்கின்ற நிலையினை ஏற்படுத்திவிட்டு விட்டில் பூச்சியாக மடிந்த இந்தக் கொடிய மிருகங்கள் செய்த காட்டுமிராண்டித்தன நடவடிக்கைகளால் இன்று உயிருடன் வாழ்கின்ற அனைவரும் ஒரு மாபெரும் சுமையினை தலையில் சுமந்து கொண்டு வாழ வேண்டிய துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளது.

அடக்கு முறைக்காக ஏற்படுத்தப்பட்ட யுத்தம் முடிவுக்கு கொண்டு வருவதற்காக செய்த செலவுகளும் தியாகங்களும் தற்போது வாழ்கின்ற மக்களின் முன்னேற்றத்திற்கும் அபிவிருத்திற்கும் ஒரு பெரிய தடைகல்லாகவே இருக்கிறது என்பது யாவரும் அறிந்த உண்மையாகும்.

மனிதநேயம் விட்டுக் கொடுப்பு புரிந்துணர்வு ஒற்றுமை உடன்பாடு ஏற்றுக் கொள்ளும் தன்மை போன்ற விடயங்கள் புறக்கணிக்கப்பட்டதால் ஏற்பட்ட விரிசல்களால் உருவாக்கப்பட்ட இந்த யுத்தம் இன்று முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. எனினும் இதனால் பாதிக்கப்பட்ட மக்கள் பெரும் துன்பத்தையும் துயரத்தையும் இன்னல்களையும் தொடர்ந்து அனுபவித்துக் கொண்டே இருக்கின்றனர்.

ஒரு சமூதாயம் நிம்மதியுடனும் சுதந்திரத்துடன் தன்னாதிக்கத்துடனும் தனித்துவத்துடனும் வாழ்வதற்கு பல தியாகங்களைச் செய்தே ஆகவேண்டும் அந்தவகையில் இங்கு இடம்பெற்றவைகளெல்லாம் விளலுக்கு இறைத்த நீராகி விட்டது.

தற்போது கொடூர அரக்கர்களின் முரட்டு யுத்தம் முற்றுப்பெற்றிற்று ஆனால் இப்போது இங்கு அன்பு யுத்தம் அவசியமாயிற்று. ஒரு சமூதாயம் தோல்வியிலும் துன்பத்திலும் வாழ்கின்ற போது அவர்களை இழிவுபடுத்தாமல் இம்சைகுட்படுத்தாமல் அவர்கள் மீது கருணையும் அன்பு மழைகளையும் பொழிதல் வேண்டும். இதுவே மானிடர்களின் மாண்புமிகு பண்பாகும். மாறாக வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுதல் நன்றன்று.

நாம் எல்லோரும் இலங்கையர்கள் ஒருதாய் பெற்ற சகோதரசகோதரிகள் போல் வாழ்வதற்கான திடசங்கப்பம் பூண வேண்டும் இதற்கென நாங்கள் அனைவரும் உண்மையான அன்பு எனும் அந்த ஆயுதத்தை பிரயோகிக்கவேண்டும் அதற்கு இனிமேல் வேலை கொடுக்க வேண்டும்

மாறாக பழைமைவாய்ந்த குரோதம் வஞ்சகம் வைராக்கியம் போட்டி பொறாமை கபடம் ஏற்றத்தாழ்வு இன வேறுபாடு ஐக்கியமின்மை போன்றவைகளுக்கு சீ சொல்லி வழியனுப்பிவிட்டு புரிந்துணர்வு உண்மை அன்பு விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை ஒற்றுமை உதவிபுரியும் பெருந்தன்மை ஐக்கியம் உடன்பாடு பேன்றவைகளை உள்வாங்க வேண்டும் அப்போதுதான் எமது இளைய சமூகத்தினராவது ஒற்றுமையுடன் வாழ்வார்கள் என்பது கண்கூடு.

மான்ப்புமிகு ஜனாதிபதியவர்கள் ஒரு சிறந்த தலைவராக மிளிரவேண்டுமாயின் அவரது மேலான சிந்தனைகள் உயிர்வாழ வேண்டுமாயின் இந்த அன்பு யுத்த்திற்கு அவரே தானே தளபதியாக இருந்து செயற்பட வேண்டும்.

இந்த யுத்த்திற்கு பணம் செலவு செய்ய வேண்டிய அவசியமில்லை உண்மை அன்பையும் ஒற்றுமையையும்தான் மூலதனமாக செலவுகள் செய்ய வேண்டும். எனவே தற்போது இக் கொடூர யுத்தத்தால் சிக்குண்டு உருக்குலைந்து போன ஊனமுற்ற உள்ளங்களை உண்மை அன்பு யுத்தம் செய்து அவர்களை குணப்படுத்துவதோடு அவர்களின் உள்ளங்களையும் கொள்ளை கொள்ள வேண்டும்.

அவர்களுக்கு எல்லா விதங்களிலும் உதவிபுரிந்து சிங்களவர் தமிழர் முஸ்லீம்கள் கிறிஸ்தவர்கள் எனும் பேதமின்றி எல்லோரும் ஒருதாய் பெற்ற பிள்ளைகள் போல் ஒற்றுமையுடன் செயற்பட ஒத்தாசையும் உதவியும் புரியவேண்டும்.

இனிமேல் தமிழர்கள் என்றால் அவர்கள் புலிகள் எனும் கோதாவில் அனுக முற்படக் கூடாது. மாறாக அவர்கள் அனைவரையும் அன்பு எனும் அந்த விலைமதிக்க முடியாத அம்பால் ஏய்தி ஒற்றுமைப்படுத்த எல்லோரும் அயராது உழைக்க வேண்டும்.

இனிமேல் இராணுவம் என்றால் கொடுரமானவர்கள் பொலிசார் என்றால் அச்சம் கொடுப்பவர்கள் என்ற எண்ணம் எவருக்கும் வரவே கூடாது. அத்துடன் இவர்கள் எல்லோருடனும் மிகவும் நற்பாகவும் அன்பாகவும் பழகி அவர்களுக்கு மிகவும் ஆறுதல்களையும் உதவிகளையும் ஒத்தாசைகளையும் வழங்க முற்படவேண்டும் இனிவரும் காலங்களில் எந்த சந்தர்ப்பத்திலும் சமூகங்களுக்கிடையில் விரிசல்கள் ஏற்பட வழிவகை செய்ய முற்படக்கூடாது. இதற்கென்று ஒரு மாபெரும் வேலைத்திட்டத்தினை மாண்புமிகு ஜனாதிபதியவர்கள் வகுக்கவேண்டும்.

மேலும் ஊழழற்றதும் சிறப்பானதும் எல்லோராலும் ஏற்றுக் கொள்ளக்கூடிய அரசொன்றைத் தாங்கள் நிறுவி எமது திருநாட்டில் வாழ்கின்ற அனைத்து சமுகங்களும் சிறப்பாக பயன்பெறும் வகையில் திறன்பட ஆட்சிபுரியும் நன்நாள் வெகுதூரத்தில் இல்லை என்றே கூறலாம்.

இழந்துபோன சொத்துக்கள் உயிர்கள் எல்லாம் மீளவும் உயிர்ப்பித்துக் கிடைக்கும் வகையில் எமது அனைவரதும் நடவடிக்கைகள் இடம்பெறவேண்டும் இதற்காக நாம் அனைவரும் அன்பு மழையில் நனைய ஆயத்தமாகுவோம்.

எனக்கு நன்றாக ஞாபகமிருக்கிறது 1978 ஏப்ரல் பதினெட்டாம் திகதி நல்லூர் வீதி இருபதைந்தாம் இலக்திலுள்ள எனது பொருளியல் ஆசான் திரு. தனராஜா அவர்களின் வீட்டுக் சென்றேன் அப்போது நான் உயர்தரம் முதலாம் பிரிவில் கல்விகற்றுக் கொண்டிருந்தேன்.
அவ்வேளை எங்களின் பாடசாலைக்கு ஒரு மாத விடுமுறை வழங்கப்பட்டிருந்தது. அவ்விடுமுறையை எனது ஆசானுடன் சந்தோசமாக யாழ்பானத்தில் கழித்தேன். அன்று நான் அடைந்த இன்பம் என்னால் ஒருநாளும் இலகுவில் மறந்துவிட முடியாது.

மேலும் அவர்கள் நான் ஒரு முஸ்லீம் என்று என்னை எவ்வகையிலும் வேற்றுமைப் படுத்தவில்லை. அக்கால கட்டத்தில் நல்லூர் கோயிலில் பிரமாண்டமான திருவிழா ஒன்று ஆரம்பமாகியிருந்தது. நானும் சந்தனப் பொட்டுவைத்து வேட்டி கட்டி வெறும் உடலுடனும் வெறும் காலுடனும் அந்தக் கோயிலுக்குச் சென்று திருவிழாவிலும் பங்கெடுத்தேன்.

அது எவ்வளவு சந்தோசத்தையும் உவகையையும் எனக்குத் தந்தது என்பதை தற்போது மீட்டுப் பார்க்கிறேன். எனவே நாம் யுத்த்த்தில் வெற்றி பெற்றுவிட்டோம் இனி எவர் எப்படிப்போனாலும் எமக்குப் பரவாயில்லை என யாரும் பாராமுகத்துடன் இருந்துவிடக் கூடாது.

இப்போதுதான் உண்மையான புனித அன்பு யுத்தம் செய்ய எல்லோரும் கடமைப்பட்டுள்ளோம். எம்மால் முடிந்த அளவிற்கு இந்த யுத்த்தினால் பாதிக்கப்பட்ட அனைத்து சமூகத்தினருக்கும் இயலுமான உதவிகளையும் ஒத்தாசைகளையும் தொடர்ந்து வழங்க முனைவோமாக.

அத்துடன் யுத்தத்தில் வெற்றிகொண்ட வீரர்களின் ஆயுதங்களுக்கு பூரண ஓய்வு வழங்கி அவர்களின் அன்புக்கரங்களுக்கு ஆதரவு வழங்க முயற்சிப்போமாக.

இனிமேல் யாரையும் யாரும் வெறுப்புடனும் பிரிவுடனும் கபடத்துடனும் சந்தேகத்துடனும் பார்க்காமல். எல்லோரும் ஒரு தாய்பெற்ற பிள்ளைகள் என்ற உயரிய சிந்தனையில் ஒற்றுமையுடன் வாழ அன்பு யுத்தம்செய்யப் புறப்படுவோம் வாருங்கள் வடபுலத்திற்கு.


0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com