Tuesday, April 28, 2009

யாழ்பாணத் தமிழ் நடுத்தரவர்க்கத்தின் ஏகாதிபத்தியமோகம். கம்பர்மலை-அழகலிங்கம் (ஜேர்மனி)

புகலிட நாடுகளில் யாழ்ப்பாண நடுத்தர வர்க்கம் வரலாற்றில் என்றுமில்லாத அளவுக்கு ஏகாதிபத்திய ஏஜண்டுகளாகச் செயற்படுகின்றன. இலங்கைத் தொழிலாளி வர்க்கமும் வறிய விவசாயிகளும் பகீரதப் பிரயத்தனப்பட்டு அகற்றிய பிரித்தானிய ஏகாதிபத்தியத்தின் கொடியை வெட்கமில்லாமல் தூக்கிக் கொண்டு லண்டனில் உள்ள தமிழர்கள் ஊர்வலம் வைக்கிறார்கள். அந்தக் காட்சிகளைப் பார்த்தாலே சமுதாய உணர்மையுள்ளவர்களுக்கு இதயம் வெடிக்கிறது.

சில கிழமைகளுக்கு முன்னதாக ஜெனிவாவில் நடந்த தமிழர்கள்களின் ஊர்வலத்தில் ஜேர்மன் ஏகாதிபத்திய சான்சலரான அங்கேலா மேர்கலின் படத்தையும், பிரெஞ்சு ஏகாதிபத்திய ஜனாதிபதியான சாக்கோசியின் படத்தையும், பிரித்தானிய ஏகாதிபத்தியப் பிரதமரான கோர்டன் பிறவுணின் படத்தையும், கூடவே அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவின் படத்தையும் தூக்கிக் கொண்டு ஊர்வலம் செய்தனர். மீண்டும் இலங்கையை ஏகாதிபத்தியக் காலனியாக்கும்படி இவர்கள் கோருகிறார்களா? என்று அரசியல் உணர்மையுடையவர்கள் விசனப்பட்டார்கள்.

24.4.2009 அன்று பெர்லினிலுள்ள சீனத்தூதரகத்திற்குப் புலிப்பாசிவாதிகள் முட்டை எறிந்து ஆர்ப்பாட்டமும் செய்துள்ளனர். சீனத்தூதரகத்திற்கு முட்டை எறிந்தது போன்ற ஏகாதிபத்தியத்தை மகிழவைக்கும் சம்பவம் வேறு ஏதும் இருக்க முடியாது. இன்றுவரை ஜேர்மனியர்கள்கூட சீனாவுக்கு எதிராக ஒர் ஊர்வலத்தையும் நடாத்தியது கிடையாது.

மேற்குலகத்தால் தோற்றுவிக்கப்பட்ட புலிகளின் ஆயுதப் பயங்கரவாதம் தோற்றதற்கான ஒரேயோரு காரணம், புலிகளின் ஏகாதிபத்தியத்திற்கு அடிமையாகிப் போன அரசியற் கொள்கையாகும். பூகோளமயமான இன்றய சகாப்தத்தில் முதலாளித்துவத் தேசிய அரசுகள் பொருளாதார விதிகளின் அழுத்தங்கள் காரணமாக ஒன்றுபடும் நிகழ்வுப் போக்குகள் நிகழ்ந்து கொண்டிருக்கையில் இலங்கையைத் துண்டாடி, ஒரு ஏகாதிபத்திய அடிவருடி முதலாளித்துவ தமிழ்ஈழ அரசை உண்டாக்கும் கொள்கையைத் தமிழ் நடுத்தரவர்க்கம் முன்னெடுத்ததாலேயே அவர்களது அத்தனை பிரயத்தனங்களும் தியாகங்களும் அவமாகிப் போனது.

"முதலாளித்துவ உற்பத்திமுறையும் சர்வதேச வர்த்தகமும் உலகச் சந்தையும் முதலாளித்தவத் தேசியத்திலும் பார்க்க பல்தேசியக் குணாம்சத்தையே வெளிப்படுத்துகின்றன.", என்றார் மாக்ஸ்.

இன்றய உலக அபிவிருத்தியோ மாக்ஸ் காலத்து மட்டத்திலல்ல. இந்திய உபகண்டமே ஏன முழு ஆசியாவுமே ஐக்கியப்படும் வளர்ச்சிப்போக்குகள் நடந்;துகொண்டிருக்கும் இக்காலத்தில் இந்த ஆசியஅபிவிருத்திகளை நிர்மூலமாக்கவே மேற்குலக ஏகாதிபத்தியங்கள் புலியை உருவாக்கி உரமூட்டி வளர்த்தன. இதுவரை அதைக் காப்பாற்றவும் முனைகின்றன.

புலியின் ஏகாதிபத்திய அடிமைத்தனக் கொள்கை மிகவும் அம்மணமானது, ஒளித்து மறைக்க முடியாதது. 2002 இல் வன்னியில் நடைபெற்ற ஒரேயோரு உலக ஊடகவியலாளர் மகாநாட்டில் பிரபாகரனும் பாலசிங்கமும் தமது பொருளதாரக் கொள்கை சுதந்திர வர்த்தகமென்றே கூறினர். யாரோடு புலி என்ன வர்த்தகத்தை செய்யப் போகிறது??? உலகச் சந்தையில் சுதந்திரமாகப் போட்டி போடக் கூடிய ஏதாவது தொழிற்துறை, மற்றும் விவசாயப் பொருட்களைப் உற்பத்தி செய்யக் கூடிய தொழிற்துறைச் சாதனங்கள் எதையும் புலி ஏற்படுத்தி வைத்திருக்கிறதா?

புலிகளின் பிடியிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ள வன்னிக்குள் ஒரு பெட்டிக்கடைகூட இருந்ததற்கான சான்றுகள் எதுவும் வெளிவரவில்லை. மாறாக அழிவிற்கான ஆயுதக்கிடங்குகளே அங்கு காணப்படுகின்றன. மேற்குலக அகதித் தமிழ் மக்களிடமிருந்து கசக்கிப்பிழிந்து கறந்த காசுகளாலும் புலிகளின் மாபியா மண்கொள்ளைகளாலும் பெற்ற செல்வத்தால் ஒரு சின்னத்தொழிற்சாலையைக்கூடப் போட்ட அடையாளம் ஏதும் தெரிய வில்லை. சுனாமிப் புனருத்தாரணத்திற்கென்று கொடுத்த காசுமுழுவதிலும் ஒரு ஓலைக் கொட்டிலைக்கூடப் புலி தமிழ்ப்பகுதிகளில் போடவில்லை.

இப்படி நிலமை இருக்கும் பொழுது புலிக்கு ஏன் சுதந்திர வர்த்தகம்? ஓரேயொரு காரணம் தான். ஏகாதிபத்தியங்களுக்கு எமது உள்நாட்டுச் சந்தையைத் தடையின்றித் திறந்துவிடுவதைத்தவிர வேறு என்ன நோக்கமாக இருக்க முடியும்?

இன்று எந்தத் தேசிய விடுதலை இயக்கங்களும் முதலாளித்துவ முரண்பாடுகள் உள்ள முதலாளித்துவ அமைப்பு முறைக்குள் ஏதோ ஒரு முதலாளித்துவத்தைப் பற்றிப் பிடிக்காமல் வளர்ந்தது கிடையாது.

மேற்கு நாடுகளில் சிலபல கிழமைகளாக நடைபெற்ற ஆர்ப்பாட்டங்கள், தீக்குளிப்புப் போராட்டங்கள், மற்றும் உண்ணாவிரதப் போராட்டங்கள், இலங்கைத்தூதரகங்களை உடைத்தது, மற்றும் பேர்ளினிலுள்ள மக்கள் சீனத் தூதரகத்திற்கு முட்டை அடித்தது ஏதும் தற்செயல் நிகழ்ச்சியல்ல.

இத்துடன் இந்திய, ஜப்பானிய, இந்தோனேசிய, ஈரானிய, ரஸ்சிய எதிர்ப்புகளும் புலிப் பாசிச ஊடகங்களால் பேசப்பட்டன. இன்றய உலக வர்த்தகப் போட்டியில் சீனாவுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்வது மேற்கு ஏகாதிபத்தியங்களுக்குக் கிடைத்த வரப்பிரசாதமாகும். ஆசியர்களைக் கொண்டு ஆசியர்களையே எதிர்ப்பிக்கும் அரசியலாகும்.

யூகோஸ்லோவியாவை ஏகாதிபத்தியங்கள் ஆக்கிரமித்த போதும், மக்கள் சீனத் தூதரகத்திற்கு அமெரிக யுத்த விமானம் குண்டு வீசி தூதரக இராஜதந்தரிகள் கொல்லப்பட்டது வரலாறு. அந்த யுத்தத்தின்போது புலிகள் நேட்டோவுக்கு ஜே. கொசோவாவுக்கு ஜே என்றே வாய்கிழியக் கத்தி நேட்டோ ஆக்கிரமிப்பை ஆதரித்தனர். தற்போதும் கோசோவா போலத் தமிழ் ஈழத்தையும் இலங்கையிலிருநது நேட்டோ விடுதலை செய்ய வேண்டுமென்று தமிழ் ஊடகங்கள் பிரச்சாரம் செய்கின்றன.

பயங்கரவாத இயக்கமென்று தடைசெய்யப்பட்ட புலிகளியக்கத்தை மேற்குலகங்கள் எந்தவித பொலீஸ் அனுமதியுமில்லாமல் இவ்வாறான தொடர் போராட்டத்திற்கு எவ்வாறு அனுமதிப்பார்கள்? இன்றும் ஐரோப்பாவில் ஆர்ப்பாட்டம் செய்த குர்டிஸ்தேசிய விடுதலை இயக்கத்தின் அங்கத்தவர்கள் தடைசெய்யப்பட்ட தமது இயக்கத்தின் கொடியை வைத்திருந்த குற்றத்திற்காக சிறைகளில் வாடுகிறார்கள். அல்கைடா இயக்கத்தையும் காமாசையும் எந்த மேற்கு ஏகாதிபத்தியங்களும் இப்படி ஒரு ஆர்ப்பட்டத்தைச் செய்ய அனுமதிக்குமா என்று கேட்டுப் பார்த்தால் உண்மை விளங்கும்.

1983ல் புலிப் பாசிசவாதிகள் தின்னவேலியில் 13 இராணுவத்தைக் கொன்று ஆத்திரமூட்டி இனக்கலவரத்தைத் தொடக்கிவிட்டு சிங்களவன் அடிக்கிறான் என்று குய்யோ முறையோ என்று கூச்சல்போட்டுக் கொண்டு இந்திய முதலாளிகளிடம்; சரணாகதி அடைந்தார்கள். 1987 இல் இந்தியா அடிக்குதென்று சொல்லிக் கொண்டு பிரேமதாசாஊடாக அமெரிக்க ஏகாதிபத்தியத்திடமும் தஞ்சம் புகுந்தார்கள். 1995ல் யாழ்பாணத்தைவிட்டு வன்னிக்கு ஓடினார்கள். இன்று இதன்விழைவு பிரபாகரன் சுடுகிறான் என்று சொல்லிக்கொண்டு மீண்டும் இலங்கை ஆயுதப்படைகளிடம் ஓடுகிறார்கள். ஓடினார்கள் ஓடினார்கள் பிற்போக்கின் அந்தலைக்கே ஓடினார்கள்.

தமிழினத்தின் ஓட்ட அவலங்களை விபரிக்க முடியாத போதும் அதற்கான மூலகாரணம் நடுத்தரவர்க்கத் தமிழர்களால் கைவிடப்பட முடியாத ஏகாதிபத்தியத்தை அடிவருடும் மனப்பான்மைதான் என்றே கூறலாம்.

கடந்த மூன்று தசாப்தங்களாகச் செய்த தியாகங்களும் செலவழித்த காசுகளும் பலதரம் விடுதலையைப் பெறப் போதுமானதாகும். ஆனால் வரலாற்றைப் பின்நோக்கி இழுக்கும் அவர்களது அரசியலாலேயே இந்த ஒருபோதும் ஈடுசெய்ய முடியாத அவலங்கள் ஏற்பட்டுள்ளன. முழு இலங்கைத் தீவும் அதன் சகல இனமக்களும் புகலிடத்தமிழர்களின் நடவடிக்கைகளால் பயணம் வைக்கப்பட்டுள்ளனர்.

அடுத்துச் செய்வதென்ன?

தமிழ் மக்களுக்கென்று ஒரேயொரு ஆயுதந்தான் உள்ளது. அது சிங்கள முஸ்லீம் தமிழ் அனைத்து மக்களும் இணைந்த ஒரு புரட்சிகர அமைப்பைத் தோற்றுவிப்பது ஆகும். முதலாளித்துவ அமைப்புமுறை இருக்கும் வரைக்கும் ஒடுக்குமறை, சிறைவாசம,; இரத்த ஆறு, வறுமை, நோய,; வேலையில்லாத் திண்டாட்டம், கல்வியின்மை, வீடின்மை போன்ற இன்னோரன்ன துன்பங்களே நித்தியவரமாகக் கிடைக்கும்.

"ஆட்சிஅதிகாரத்திற்கான போராட்டத்தில் பாட்டாளி வர்க்கத்திற்கு அவர்களது புரட்சிகர ஸ்தாபனத்தைத் தவிர வேறு ஆயுதம் கிடையாது. முதலாளித்துவ உலகத்தில் உள்ள அராஜகப் போட்டியானது மூலதனத்தின் கட்டாயவேலையால் வீழ்ந்துபட்டு தொடர்ந்து பின்னுக்குத் தள்ளப்பட்டு ஆதரவற்று காட்டுமிராண்டித் தனத்துள் வீழ்ந்து உருக்குலைந்து போன பாட்டாளிவர்க்கம் தவிர்க்க முடியாமல் மாக்ஸ்சியவிதிக்கிரமங்களோடு தத்துவார்த்த ரீதியில் ஐக்கியப்பட்டு அதன் ஸ்தாபனத்தோடு சடத்துவரீதியில் பிணைக்கப்பட்டுக் கெட்டியாக்கப்பட்டால் மாத்திரம்தான், அதாவது மில்லியன் கணக்கான பாட்டாளிகளோடு ஸ்தாபனரீதியில் அணிவகுக்கப் பட்டால் மாத்திரம் தான் வெல்லமுடியாத சக்தியாக முடியும்." --என்று லெனின் „என்னசெய்ய வேண்டும்' என்ற நூலிற் குறிப்பிடடுள்ளார்.

மனிதவராலாற்றில் இன்றிருப்பது போல உள்முரண்பாடுகளும் சர்வதேச முரண்பாடுகளும் நிறைந்ததாக வரலாறு ஒருகாலமும் இருந்ததில்லை. பாராளுமன்ற ஜனநாயகமானது சுதந்திரமான வர்த்தகப் போட்டியோடும் சுதந்திரமான உள்நாட்டு வர்த்தகத்தோடும் நீக்கமறப் பிணைந்துள்ளது. இது சுமுகமாக நடைபெறுங்காலங்களில் முதலாளித்துவமானது சுதந்திரமாக வேலைநிறுத்தம் செய்வதையும, சுதந்திரமாகக் கூட்டங்கூடுவதையும் பத்திரிகைச் சுதந்திரத்தையும் சகிக்கும். அதாவது பொருளாதாரமானது மேல் நோக்கி வளரும்பொழுதும், வர்த்தகமானது மேலும் மேலும் வளர்ந்து செல்லும்பொழுதும் மாத்திரமே வெகுஜனங்களுக்கான சமூக சேவைகளை அரைகுறையாக வென்றாலும் அனுமதிக்கும். அப்பொழுது மாத்திரமே முதலாளித்துவ தேசங்கள் வாழும். மற்றவரையும் வாழவிடும். இப்பொழுதோ எல்லாமே தலைகீழாகவும் தவிடுபொடியாகவும் ஆகிவிட்டன. முதலாளித்துவப் பாதுகாப்பு வால்வுகளெல்லாம்(எயடஎந) வெடித்துச் சிதறிவிட்டன.

சர்வதேசரீதியாக மூலதன வங்கிகள் பல திவாலாகிவிட்டன. பல நட்டமடைந்து கொண்டிருக்கின்றன. பங்குச் சந்தைகள் பொறிந்து கொண்டே இருக்கின்றன. தொழிற்துறை உற்பத்திப் பொருட்கள் விற்கமுடியாமற் தேங்குகின்றன. தொழிற்சாலைகள் மூடப்படுகின்றன. வேலையில்லாத்திண்டாட்டம் தொடர்ந்து வளர்ந்து கொண்டே இருக்கின்றது. நுகர்திறனும் விலைக்குவாங்கும் சக்தியும் வீழ்ந்துவிட்டன. வளர்ச்சியடைந்த மேற்கு நாடுகளிலேயே மக்கள் வறுமைக்கோட்டிற்குக் கீழ் வாழ்கிறார்கள். உற்பத்திச் சக்திகள்பெருகி அதீத உற்பத்தியால் சந்தைகள் திமிறுகின்றன. மேற்கு நாடுகள் தமது தொழில்நுட்ப மேலாண்மையை இழந்ததால் பழைய காலனி நாடுகளுக்குத் தொழிற்துறைப் பொருட்களை ஏற்றுமதி செய்வதன் மூலம் சுரண்ட முடியவில்லை.

ஒட்டுமொத்த முதலாளித்துவ முறையே வெடித்துச் சிதறுகிறது. மூன்று சகாப்தத்திற்கு மேலான உள்நாட்டு யுத்தத்தால் இலங்கைத்தேசமே நிர்க்கதியாக இருக்கிறது. இத்தனை வரலாற்று மாற்றங்களையும் தமிழ்மக்களுக்கு விளங்கவிடாதபடிக்குச் செய்ததாலேயே இவ்வளவு அழிவுகள் ஏற்பட்டது என்பதே கடைசி ஆய்வில்வெளியாகும். உப்புக் கல்லை வைரமென்று சொன்னால் அதை ஒத்துக் கொள்ளும் மட்டத்திற்கே தமிழ்மக்களது சமுக உணர்வும் அறிவைப் பெறுவதற்கான அறிதிறனும் மழுங்கடிக்கடிக்கப்பட்டது.

கடந்த சில தினங்களாக அமெரிக்க ஐரோப்பிய ஏகாதிபத்தியங்கள் விடுத்த அறிக்கைகளை நடந்துமுடிந்த சரித்திரத்தோடு ஒப்பிட்டுச் சீர்தூக்கிப் பார்க்க வேண்டும். தமிழ் மக்களின் உடலங்கள் கிழிந்த அதே நேரத்திலேயே முதலாளித்துவங்களின் முகமூடிகளும் கிழிந்து அம்பலமாகின. 1971 முதல் லட்சக் கணக்கான தமிழ் முஸ்லீம் சிங்கள மக்களை இரைகொடுத்துத்தான் இலங்கையில் முதலாளித்துவம் தக்கவைக்கப்பட்டது.

2002 வன்னியில் நடந்த சர்வதேச ஊடகவியலாளர் மகாநாட்டில் பிரபாகரனும் பாலசிங்கமும் இதை நன்றாகவே தெளிவாக்கியிருந்தனர். உங்களது பொருளாதாரக் கொள்கை என்னவென்று கேட்ட கேள்விக்குப் பிரபாகரனும் பாலசிங்கமும் சுதந்திர வர்த்தகமென்றே மிகஅறுத்துறுத்திக் கூறினர். அதனோடு நில்லாது தமது கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் தொழிலாளிவர்க்க இயக்கங்களே இல்லையென்று மிகத் திமிரோடு கூறினார்.

இன்று மேற்குலகெங்கணும் தமிழர்களால் நடாத்தப் பெற்ற ஜனநாயக மனித உரிமைபேணல் கேலிக் கூத்துகளெல்லாம் ஓரளவுக்கு முடிவுக்கு வந்துள்ளன. எந்த மட்டத்திற்கு முக்கி முக்கி தமிழீழம் தாயகக்கோட்பாடு என்று கத்துகிறார்களோ அந்தமட்டத்திற்கு அவர்களுக்கு முதலாளித்தவத்தைக் காப்பாற்றும் விசர்பிடித்துள்ளது.

அன்றியும் அமெரிக்க, ஐரோப்பிய மேற்குலக ஏகாதிபத்தியநாடுகள் எல்லாம் இலங்கை அரசாங்கத்தை மிக மூர்க்கமாக எதிர்க்கும் பொழுதும், மிகச்சிறிய கடனாளியான இலங்கை அரசு யுத்தத்தில் வெல்வதன் ஒரே காரணம், வரலாறு கண்டு கேட்டிராத தமிழ் மக்கள் மேலான புலிப்பாசிசத்தின் ஒடுக்குமுறையானது தமிழ் மக்களை இலங்கை அரசாங்கத்தின் பக்கம் கொண்டு வந்துவிட்டுள்ளதாகும்.

புலிக்கட்டுப்பாட்டு நரகத்திலிருந்து வந்த தமிழ் மக்கள் இலங்கை இராணுவத்திடம் தண்ணிக்கும் உணவுக்கும் கையேந்துகின்ற உள்ளம் உருக வைக்கும் காட்சியானது , தமிழ் மக்களின் ஆத்மா எந்தமட்டத்திற்கு சாகடிக்கப்பட்டிருக்கிறது என்பதை சொல்லும். புலிகள் காலம் முழுதும் செய்த கொடுமைகள் எந்தப் பொய்ப்பிரசார மொங்கானாலும் சமரசப்படுத்த முடியாது.

புலியின் தோல்விக்கான ஒரேகாரணம் வன்னியிலுள்ள தமிழ்மக்களின் எந்த ஆதரவும் புலிப்பாசிசத்திற்கு இல்லை என்பதாகும். ஏகாதிபத்தியங்கள் புலிதான் தமிழ்மக்களின் பிரதிநிதி என்று சொல்வது மிக நகைப்புக்கிடமான செய்தி மாத்திரமல்ல அதை வரலாறும் ஏற்றுக் கொள்ளாது. ஓரு காலத்தில் வன்னியிலுள்ள ஒருபகுதித் தமிழ் மக்கள் புலியை ஆதரித்திருக்கலாம். அது செத்துப்போன வரலாறு. கறந்தபால் மீண்டும் முலை புகாதது போன்ற வரலாறு.

At a daily press briefing on Friday US State Department spokesman Robert Wood had stated, “”The Tamil Tigers must stop holding civilians and thus placing them in harm’s way. We call on the Tamil Tigers to lay down their arms and surrender to a third party.” Yet, the US State Department has not specified who the third party is, media reports stated.

அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் அரசாங்க பேச்சாளரான றோபேட் வூட் புலி களை மூன்றாவது தரப்பிடம் சரணடைய விடவேண்டும் என்று கேட்டுள்ளார். அது எந்த மூன்றாவது இடம் என்று கூடச் சொல்லவில்லை. அது நோர்வேயா? அமெரிக்காவா? இலங்கை அரசாங்கம் அல்கைடாவை இலங்கையிடம் சரணடைய விட வேண்டும் என்று கேட்டால் அதை அவர்கள் ஒத்துக் கொள்வார்களா? ஐறிஸ் பிரச்சனையில் இலங்கை தலையிட்டு சமாதானம் பேச பிரித்தானிய ஒத்துக் கொள்ளுமா? இதே பாணியிலேயே பிரத்தானிய பிரெஞ்சு ஏகாதிபத்தியங்களதும் தலையீடுகள் தர்க்கத்திற்கு ஒவ்வாததாக இருக்கிறது.

கொழும்பிலே லட்சக்கணக்கான தமிழ்மக்கள் வாக்களித்ததினாலேயே கொழும்பு மாவட்டத்தில் மக்கள் ஐக்கிய முன்னணி 42 ஆசனங்களில் 25ஐ கைப்பற்றியுள்ளது. காலங்காலமாகத் தமிழ் மக்களும் முஸ்லீம் மக்களும் வாழும் பிரதேசங்களில் யூஎன்பி வெல்வதுதான் வழமை. ஆனால் இம்முறை தமிழ் முஸ்லீம் மக்கள் மூன்றில் இரண்டுபகுதியுள்ள கொழும்பு மாவட்டத்தில் மக்கள் ஐக்கிய முன்னணி வெற்றியீட்டியுள்ளது. தேர்தல்கள் வர்க்கத் துருவப்படுத்தலை அளந்துகாட்டும் அளவுமானியாகும்.

புதிய உலக பொருளாதார நெருக்கடி தோற்றுவித்த தாக்கங்களால் பழைய சமுதாய உறவுகளானது குலுங்கிக் கொட்டுப்பட்டு சிதறடிக்கப்பட்டுள்ளது. சமூகம் மீண்டும் புதிய முறையில் தன்னைத் தகவமைத்துக் கொண்டுள்ளது. மேற்குலகங்களின் பொருளாதார அரசியற் தோல்வியே புலியைத்தோற்க வழிவகுத்தது.

பழைய புலியான கருணா சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் உபதலைவர் ஆனது ஏதும் தற்செயலான நிகழ்வுப் போக்கல்ல. இந்தப் புதிய வர்க்க தகவமைப்பின் ஒரு பகுதியாகவே இது நடைபெற்றது என்பதுவே இயங்கியலாகும்.

தமிழ் மக்கள் இந்த மூன்று சகாப்த அனுபவங்களால் எதையும் கற்றுக்கொள்ளவில்லை என்பது போலப் பாவனை செய்து அவர்களை மீண்டும் பழைய சிங்கள விரோத இனவாத அரசியலில் தள்ள முயல்பவர்கள் தோல்வியடைவர். மேற்குலக ஏகாதிபத்தியங்களே தமிழ்மக்களது இரட்சகர்கள் என்று கூறிய தமிழ் கூலிகளது பேச்சை உண்மையென்று நம்பியதாலேயே தமிழ் இனம் தன்னைத்தானே அழித்துக் கொண்டது.

புலி தோற்றது இலங்கை இராணுவத்தின் பலத்தினால் அல்ல. புலிக்குள்ளே ஏற்பட்ட உள் முரண்பாடே புலியை உள்ளுக்குள்ளிருந்தே அழுகச் செய்தது. வன்னியிலிருந்து தப்பி வரும் நெஞ்சைத் தீயவைக்கும் காட்சிகள் எவரையும் உருக வைக்கும். இந்த மக்களின் சொல்லவொண்ணாத் துயரங்கள் அவர்களை அடக்கியாண்ட புலி இயக்கத்திலே பிரதிபலித்ததால் ஏற்பட்ட சமுக நெருக்கடியாலேயே புலி தோற்றது.

யுத்தவரலாறுகளும் போற்கலை நுட்பங்களும் சமுகநெருக்கடி ஏற்படாமல் பேணப்படும்போதுதான் வெற்றியைப் பெற்றுத்தரும். மக்கள் ஆதரவு என்ற அத்திவாரம் இல்லாதாலேயே புலிப்பாசிசம் படுதோல்வி அடைந்துகொண்டிருக்கிறது.

1914, 1929 உலகபொருளாதார நெருக்கடிகள் எவ்வாறு முதலாம் உலக யுத்தத்தைத் தோற்றுவித்ததோ, அதே போலவே இன்றய உலக முதலாளித்துவ நெருக்கடியானது மூன்றாமுலக யுத்தத்தைத் தோற்றுவிக்கும் தறுவாயில் உள்ளது. இந்த நெருக்கடியிலிருந்து முதலாளித்துவத்தால் இலகுவில் மீளமுடியாது.

றோசா லுக்ஸ்சம்பேர்க் கூறியாங்கு முதலாளித்துவ சமுதாயத்தில் யுத்தம் வருவது தவிர்க்க முடியாத சமூக விதியாகும். முந்திய இரண்டு யுத்தங்களும் ஐரோப்பிய ஏகாதிபத்தியங்கள் காலனிகளை மறு பங்கீடு செய்வதற்கான யுத்தமாகவே தோன்றி முடிந்தன. தற்போதய யுத்தமானது ஆசிய முதலாளித்துவத்திற்கும் மேற்குலக முதலாளித்தவத்திற்குமிடையேயே தோன்றும். சனத்தொகை கூடிய, நுண்தொழில்நுட்பத்தைக் கற்றுக் கொண்ட மூலதனத்தைத் திரட்டிக் கொண்ட, மலிவு உற்புத்திசெய்யக் கூடிய ஆசிய உற்பத்திகளோடு மேற்குநாடுகள் சுதந்திர சந்தைப் போட்டியில் வெல்லமுடியாது. ஐரோப்பா ஏற்கனவே தனது நுகர்வுச் சக்தியை இழந்து கீழ்நோக்கி போய் கொண்டிருக்கிறது.

இதன் ஒரு பாகமாக ஈராக் ஆப்கானிஸ்தான் யுத்தங்கள் வெடித்தன. ஏற்கனவே அமெரிக்கப் படைகள் பாகிஸ்தானை ஆக்கிரமிக்கத் தொடங்கி விட்டன. அது மேலும் இந்தியாவக்குத் தொற்றுவது தவிர்க்க முடியாதது;. ஆதலால் ஆசியவை ஸ்த்திரமடைய விடாமல் வைத்திருப்பது மேற்குலக ஏகாதி பத்தியங்களின் கட்டாய தேவையாகும். இந்த முன்னோக்காலேயே மேற்கு ஏகாதிபத்தியங்கள் தங்களின் வாழையடிவாழையான ஏகாதிபத்திய ஏவல்சக்திகளான ஆங்கிலம்பேசும் யாழ்ப்பாண நடுத்தரவர்க்கத்தை முடுக்கிவிட்டு ஆர்ப்பாட்டங்களையும் செய்விக்கின்றன.

போதாதற்கு தமிழ்மக்களைக் கண்டுகேட்டிராத மட்டத்திற்கு ஒடுக்கும் புலிப் பாசிசத்தைக் காப்பாற்றப் பகீரதப் பிரயத்தனம் எடுக்கின்றன. இதற்காக சர்வதேச என்.ஜி.ஓக்கள் பூர்வாங்க வேலைகளைச் செய்துகொண்டிருகின்றன. புலி அரசியல்வானுக்கு வந்து மூன்று தசாப்தங்களாகத் தனது எதிர்ப்புரட்சிக் கைங்கரியத்தைப் பூர்த்திசெய்து திவாலாகிப் போய் அரசியல் வானைவிட்டு அகல இருக்கும் இந்தநிலையில் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் அரசாங்கப் பேச்சாளர் றொபேட் வூட் புலியை ஏதோ ஒரு மூன்றாம் தரப்பிடம் சரணடைய விடவேண்டும் என்று இறமையுள்ள இலங்கை அரசை நிர்ப்பந்திக்கின்றார்.

அதன்மூலம் புலிப் பாசிசத்தைக் காப்பாற்றி மீண்டும் அதன் எதிர்ப்புரட்சி ஏகாதிபத்திய வேலையத் தொடரச் செய்ய முயற்சிக்கின்றார். புலிப்பாசிவாதிகளையும் அதன் வெளிநாட்டு உள்நாட்டு ஏஜண்டுகளையும் இலங்கைமக்கள் நீதிவிசாரணைக் குழுவுக்கு முன்னால் நிறுத்த வரலாறு அவகாசம் வழங்காத துர் அதிஷ்டம்தான். ஆனால் ஏகாதிபத்திய்ங்களிடம் புலியை ஒப்படைபது புலியைப் பாதுகாத்து மேலும் எதிர்ப்புரட்சியைத்தொடரவிட வழிவகுப்பதாகவே முடியும்.

இலங்கைத்தொழிலாளி வர்க்கத்ஸ்தாபனங்கள் தமது பாட்டாளி வர்க்க சர்வதேசிய வாத முன்னோக்கைவிடுத்து தேசிய வேலைத்திட்டத்தினுள் மூழ்கித் தம்மைக் கெடுத்ததிலிருந்து மீண்டுள்ள இந்நிலையில் தமிழ் மக்களுக்கு மேலும் சிங்கள இனவாதிகளால் வரும் ஆபத்துக்கள் மருவிவிட்டன.

இப்பொழுது ஒன்றைமட்டும் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். சோஷலிச இயக்கங்கள் முதலாளித்துவ ஜனநாயகத்தோடு சோரம்போகமல் தமது வர்க்க சுயாதீனத்தை எப்பாடுபட்டும் பாதுகாக்க வேண்டும். ஆனால் ஜனநாயகத்தின் தலைவிதியானது சோஷலிசத்தின் வளர்ச்சியில் மாத்திரம்தான் தப்பிப்பிழைக்கும். தொழிலாளிவர்க்கம் தனது விடுதலைக்காகப் போராடாது விட்டால் ஜனனாயகம் என்பதை நினைத்தே பார்க்க முடியாது.

அதேநேரத்தில் சோஷலிச இயக்கங்கள் பலமடையும் பொழுது ஜனநாயகம் பலமடைவதற்கான சந்தர்ப்பங்கள் அதிகமாகும். எவர் ஜனநாயகத்தைப் பலமடையச் செய்ய விரும்புகிறார்களோ அவர்கள் சோஷலிசத்தைப் பலவீனமடையவிடாமல் மாறாகப் பலமடைய வைக்க வேண்டும். எவர் சோஷலிசத்திற்கான போராட்டத்தை உதறித்தள்ளுகிறார்களோ அவர்கள் ஜனநாயகத்தை உதறித்தள்ளுபவர்களாகும்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com