Saturday, April 11, 2009

உண்மையை உரக்கச் சொல்வோம். -கிழக்கான் ஆதம்-

“அல்லாஹ் உங்களுக்கு உயிர் கொடுக்கிறான், பின்னர் அவனே உங்களை மரணம் அடையச் செய்கிறான், பின்னர் கியாம நாளன்று அவன் உங்களை ஒன்று சேர்ப்பான்- இதில் எவ்வித சந்தேகமில்லை. எனினும் மனிதரில் பெரும்பாலோர் (இதை) அறியமாட்டார்கள் என்று (நபியே!) நீர் கூறும்” அல்-குர்ஆன்-ஸூரத்துல் ஜாஸியா (45:26)

மானிட பிறப்புப் போலவே இறப்பைப் பற்றியும் அதற்கு உலகில் வாழும் மனிதர்கள் அனைவரும் எந்நேரத்திலும் தங்களை தயாராக வைத்துக் கொள்ளவேண்டும் என மிகவும் துல்லியமாக வலியுறுத்தும் மார்க்கங்களில் ஒன்று இஸ்லாம். அதன் வேதநூலாகிய புனித குர்ஆனில் இது சம்பந்தமாக அதிகமான வசனங்கள் காணப்படுகின்றன அவையனைத்தும் மனித வாழ்வின் யதார்த்த நிலையையும் மரணம் தங்களை வந்து சேரும்வரை அவர்கள் படைத்த நாயனாகிய அல்லாஹ்வைத் தவிர யாருக்கும் யாரும் தலைவணங்கவோ அல்லது பயப்படவோ கூடாது என்பதையே வலியுறுத்தி உள்ளன.

இவ்வாறான மிகவும் தெளிவான ஒரு வேதத்தைப் பின்பற்றுகின்ற இஸ்லாமிய மார்க்க அறிஞர்களில் ஒரு சாராராகிய அம்பாறை மாவட்ட பள்ளிவாசல்கள் சம்மேளனம் அண்மையில் புலிகளால் படுகொலை செய்யப்பட்ட மட்டக்களப்பு மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் மர்ஹூம் எச்.எல்.ஜமால்தீனுடைய தாக்குதலுக்கு விடுத்துள்ள கண்டன அறிக்கை மனவேதனையை அளிக்கிறது.

குறித்த கொலை நடந்த ஒரு சில மணிநேரத்திலேயே புலிகளினினால் நடாத்தப்படும் இணையத்தளங்கள் (சங்கதி, புதினம்) உற்பட புலிகளின் ஊடகங்கள் அனைத்தும் அக்கொலை புலிகளால் நடாத்தப்பட்டதாக உரிமை கோரியிருக்க. இந்த அறிக்கையை விடுத்த எம்.எல்.எம். ஜமால்தீன் (செயலாளர்,அம்பாறை மாவட்ட அனைத்துப் பள்ளிவாசல்கள் சம்மேளம், மருதமுனை மஸ்ஜிதுந்நூர் ஜும்ஆப்பள்ளிவாசல்) அது இனம் தெரியாதோரால் நடத்தப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார்.

இவ்வறிக்கையானது மிகவும் கண்டிக்கத்தக்கதும் பயங்கரவாதிகள் முஸ்லீம்கள் சமூகத்தின் மீது தொடர்ந்து நடாத்திவரும் கொலைகளை அங்கிகரிப்பதைப் போலவும் உள்ளது. இத்தகைய முஸ்லீம் அமைப்புக்கள் என்று கூறிக்கொள்பவை புலிகளின் இத்தகைய கண்டிகத்தக்க தாக்குதல்களின் போது புலிகளை மறைத்து அறிக்கைகள் விடுவது புலிகளுக்கு நமது சமூதாயத்தில் மறைந்து கொண்டே நமது புத்திசாலிகளை அழிக்க வழிசமைப்பதோடு சர்வதேசத்தில் பார்வைக்கு முஸ்லீம்கள் மீது புலிகள் புரிந்துவரும் படுகொலைகளை மறைக்க ஒரு வாய்ப்பாக அமைந்து விடும். மட்டுமல்லாது தற்போது இலங்கையில் வாழும் தமிழ் பேசும் தரப்பார் தொடர்பாக சர்வதேசமும் நாட்டை ஆளும் தரப்பும் எடுத்துவரும் தமிழ் பேசும் தரப்பாரினது நில, உரிமைப் பங்கீட்டு நடவடிக்கைகளில் பாதிப்புக்களை ஏற்படுத்தும்.

மிகவும் ஒரு முக்கியமான காலகட்டத்தை தற்போது முஸ்லீம் சமூகம் எதிர்நோக்கி உள்ளது. இத்தகைய சூழலில் பாஸிஸ புலிகள் முன்னெடுத்துவரும் கொலைகளையும் மற்றும் அவர்கள் இதுவரை புரிந்துவந்த இதர அடாவடித் தனங்களையும் வெளிக்கொணர்வதற்கான கடமை நம் முன் நிற்கின்றது. இந்த சமயத்தில் மிகவும் துணிச்சலாக நமது சமூகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைப்புக்கள் செயற்பட வேண்டும்.

இது மனிதநேயத்தை நேசிக்கிற ஒவ்வொருவரின் கடமை ஆகும். இத்தருனத்தில் நாங்கள் விடுகின்ற பிழைகள் பின்னால் எங்கள் சந்ததியினர் வாழ்வில் பாரிய வடுக்களாக மாறிவிடும் என்பதனை குறித்த தரப்பார் உணர்ந்து கொள்ள வேண்டும்.

இஸ்லாமிய சமூகத்தின் பெயரைச் சொல்லி இறைவனை மட்டும் பயப்படுவர்களாக நீங்கள் இருந்தால் உப்புச் சப்பையாக அறிக்கைகள் விடாமல் நேரடியாக தவறுகளை சுட்டிக் காட்டி கண்டனம் தெரிவியுங்கள். இல்லையேல் மௌனியாக இருந்து கொள்ளுங்கள் அந்தப் பொறுப்பை இன்னோர் சாரார் ஏற்றுக் கொள்ள தயாராக இருக்கிறார்கள்.

புலிகள் தங்களின் சர்வதிகார காலத்தில் முஸ்லீம் சமூகத்தில் இதுரை எத்தனை ஆயிரம் உயிர்களை கொலைசெய்து சொத்துக்களை அழித்து எத்தனையோ குடும்பங்களை நிர்கதியாக்கியுள்ளனர். நீங்கள் அவர்களை மன்னித்தாலும் அவர்கள் உங்களை தமிழ் பேசும் மக்களாக ஏற்றுக் கொள்ளத் தயாராக இல்லை. மன்னிப்பு என்பது கண்ணியமான மனிதர்களின் குணம் அதை புலிகளிடம் எதிர்பார்க்க முடியாது. ஆகவே நீங்கள் சமூகத்தின் சார்பில் சமூகத்திற்காக ஏதாவது செய்வதாயின் அதை பொறுப்புணர்ச்சியுடன் காத்திரமானதாக செய்யுங்கள் இல்லையென்றால் அவ்வாறான விடயங்களில் இருந்து தள்ளியிருங்கள். அவைகளை முன்னெடுக்க இறைவனுக்கு மாத்திரம் பயப்படுகின்ற சிலராவது நமது சமூகத்தில் உண்டு.

புலிகள் இதுரை காலமும் செய்துவந்த பிழைகளும் அதை ஆதரித்து வந்த கூட்டத்தின் ஆதரவுமே இன்று அந்த இயக்கத்தை இராணுவத்தைவிட அதிக தாக்கங்களை அவ்வமைப்புக்கு ஏற்படுத்தி புலிகளை நிர்மூலமாக்கியுள்ளது. இந்த நிலை நம் சமூகத்திற்கு வரவேண்டாம்.

காலாகாலமாக அரசியலிலும் மற்ற சகல துறைகளிலும் ஏமாற்றப்பட்டு வந்த நமது சமூகத்துக்கு ஒரு விடிவையும் விழிப்புணர்வையும் ஏற்படுத்தியவர் முஸ்லீம்களின் தன்னிகரில்லாத் தலைவர் மர்ஹூம் எம்.எச்.எம் அஸ்ரப் அவர்கள். தலைவர் சமூகத்திற்காக தன்னை அற்பனித்த போது அவரது உயிர் பல தமிழ் ஆயுத சக்திகளால் விலை பேசப்பட்டது அப்போதெல்லாம் தன்னுடன் தன்னை கபன் செய்யத் (இறந்தவரின் உடலை இறுதியாக சுற்றும் புடவை) தேவையான கபன் பிடவையை எந்நேரமும் எடுத்துச் சென்று மரணத்தை வென்ற தலைவர். அவர் காட்டித் தந்த வழியில் பயணிக்கும் நமது சமூகம் இவ்வாறான சில்லறைகளின் துப்பாக்கிகளுக்கு பயந்து அவர்களை மறைத்து அறிக்கைகள் விடுக்கப்படுவதை ஏற்றுக் கொள்ளாது என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

இதே போன்ற பல அச்சுறுத்தல்கள் தொடர்ந்தும் முஸ்லீம் சமூகத்தினருக்கு புலிகளால் விடுக்கப் படுகிறது. புலிகள் மிகவும் பலமாக கிழக்கின் ஆதிக்க சக்தியாக இருந்த காலத்திலேயே அவர்களை சார்ந்து செயற்பட தொடர்ந்து மறுத்த காரணத்தினாலும் புலிகளின் சர்வாதிகாரப் போக்கை தொடர்ந்து எதிர்த்ததாலும் பல உயிர்களையும் உடமைகளையும் அரசியல் தலைமைகளையும் படித்தவர்களையும் புத்திசாலிகளையும் இழந்தது நமது சமூதாயம். அவைகள் நமது சமுதாயத்திற்கு இழப்பாக அமையவில்லை மாறாக எழுச்சியாகவே அமைந்திருந்தது.

தற்போது இறுதி கால கட்டத்தில் இருக்கும் இந்த கொலைவெறிக் கூட்டம் இன்னும் பல இதுபோன்ற கொலைகளை நமது சமூகத்தில் மேற்கொள்ளும். காரணம் ஜனநாயக வாதிகளாக நிராயுத பாணிகளாக அமைதியை நம்பி வாழும் மக்களிடம்தான் அவர்களின் ஆயுத பலத்தை காண்பிக்க முடியும் இதையே அவர்கள் தங்களை நம்பிய வன்னி மக்களிடமும் தற்போது காண்பித்து வருகின்றனர்.

உண்மையில் இவர்கள் தமிழ் மன்னன் எல்லாளனின் வீரமுடையவர்கள் என்றால் அவர்களின் வீரத்தை மர்ஹூம் எம்.எம்.ஜமால்தீன் தனது சீருடையில், பணியில் இருக்கும் போதல்லவா காண்பித்திருப்பர். இலங்கை இராணுவத்தை மட்டுமல்ல முஸ்லீம்களின் எழுச்சியும் பாஸிஷ புலிகளுக்கு அதிகமான கிலியையும் தமிழ் பேசும் மக்களுக்கு அதிகமான நம்பிக்கையும் ஏற்படுத்தியிருக்கிறது. மிகவும் வாஞ்சையுடன் செயற்படும் இந்த இரண்டு சமூகத்தையும் குழப்பி கிழக்கின் இரத்த வெறியை ஏற்படுத்தவே புலிகளின் வால்கள் மிகவும் துடிக்கின்றன. இவர்களின் ஆசை மட்டுமல்ல துடிப்பும் மிக விரைவில் அடங்கிவிடும்.

அவர்கள் எத்தனை உயிர்களை வேண்டுமானாலும் இன்னும் இன்னும் கொலை செய்யட்டும். அவர்கள் நடாத்தும் படுகொலைகள் அவர்களின் வீழ்சியை உலகில் தீர்மானித்தது இன்னும் தீர்மானிக்கும்.

யா அல்லாஹ்! தங்கள் சமூகத்திற்காக தங்களை அழித்துக் கொண்ட சகல புனித ஆத்மாக்களின் பாவங்களையும் மன்னித்து அவர்களின் பிழைகளை நீ பொறுத்தருள்வாயாக.! ஆமீன்.

VIII

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com