Friday, September 6, 2019

கோதாபாயவுக்கு ஐந்து இடதுசாரிகள் ஆதரவு?

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோதாபாய ராஜபக்ஷவுக்கு முழுமையான ஆதரவை வழங்குவதற்கு 5 இடதுசாரி கட்சிகள் தீர்மானித்துள்ளன.

விமல் வீரவன்ச தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணி, தினேஷ் குணவர்தன தலைமையிலான மஹஜன எக்சத் பெரமுன, வாசுதேவ நாணயக்கார தலைமையிலான ஜனநாயக இடதுசாரி முன்னணி, உதய கம்பன்பில தலைமையிலான பிவிதுரு ஹெல உறுமய மற்றும் பேராசிரியர் திஸ்ஸ விதாரண தலைமையிலான லங்கா சமசமாஜக் கட்சி ஆகியவையே கோதாபாயவிற்கு ஆதரவளிக்கத் தீர்மானித்துள்ளன.

அதற்கமைய சகல பிரதேசங்களிலும் ' தேசத்தின் உயர் சக்தி : கோதாபயவை வெற்றி பெறச் செய்வோம் ' என்ற தொனிப் பொருளின் கீழ் கூட்டங்களை நடத்துவதற்கும் இக் கட்சிகள் தீர்மானித்துள்ளன. பாராளுமன்ற உறுப்பினரும் மஹஜன எக்சத் பெரமுனவின் தலைவருமான தினேஷ் குணவர்தன , நாட்டை வீணடித்துள்ள ஐக்கிய தேசிய கட்சி ஆட்சியைக் கவிழ்த்து நாட்டில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவதற்காகவே நாம் ஒன்றிணைந்து இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச குறிப்பிடுகையில், ஆட்சிக்கு வந்து ஒருவருட காலத்திற்குள் மத்திய வங்கி ஊழலில் ஈடுபட்டு நாட்டை ஸ்திரமற்ற நிலைக்கு இந்த அரசாங்கம் தள்ளியுள்ளது என்பது மறுக்க முடியாத விடயமாகும். இவ்வாறான ஸ்திரமற்ற தன்மையிலிருந்து நாட்டை மீட்கக் கூடிய நபர் கோதாபய என்பது அனைவரும் அறிந்த விடயமாகும். எனவே தான் நாம் அவருக்கு எமது முழுமையான ஆதரவை வழங்க தீர்மானித்துள்ளோம். எமக்கு மாத்திரமின்றி சகல இன மக்களும் இது போன்ற பொறுப்பு காணப்படுகின்றது என்றார்.

Read more...

பலாலிக்காக சுவீகரிக்கப்பட்ட காணிகளுக்கு நட்டஈடு - அர்ஜுன ரணதுங்க

பலாலி விமான நிலைய விஸ்தரிப்புக்காக சுவீகரிக்கப்பட்ட காணிகளுக்கான உரித்துக்களை உறுதிப்படுத்தினால் அதற்கான தக்க இழப்பீடுகளை வழங்கத் தயாராக இருப்பதாக போக்குவரத்து மற்றும் சிவில் விமானச் சேவைகள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க பாரளுமன்றில் தெரிவித்தார்.

அத்துடன் யாழ்ப்பாணம் பலாலி விமான நிலையத்தின் முதற்கட்ட அபிவிருத்திப் பணிகளை விரிவுபடுத்தும் நோக்கில் 349 ஏக்கர் பொது மக்களின் காணிகள் 1950 – 1960 ஆம் ஆண்டு காலப்பகுதியில் சுவிகரிக்கப்பட்டன.716 பேர் இக்காணிகளின் உரிமையாளர்களாக இருந்துள்ள நிலையில், அவர்களில் 215 பேருக்கு மட்டுமே இழப்பீடுகள் வழங்கப்பட்டுள்ளன. ஏனையவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதா இல்லையா என்பதற்கான  சான்றுகள் இல்லை. இக்காணிகளுக்கான உரித்தை உரியவர்கள் உறுதிப்படுத்தினால் இழப்பீடுகளை வழங்க நான் தயார்.

மேலும், பலாலி விமான நிலையத்தின் இரண்டாம் கட்ட அபிவிருத்திப் பணிக்கென 1984 ஆம் ஆண்டு 397 உரிமையாளர்களது 64 ஏக்கர் காணிகள்  சுவீகரிக்கப்பட்டன, இவர்களுக்கான இழப்பீடுகள் உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில், இதுவரையில் அவர்களுக்கான இழப்பீடுகள் வழங்கப்படவில்லை  காணி சுவீகரிப்பு நடவடிக்கைகள் இறுதி செய்யப்பட்டதும் இவர்களுக்கான  இழப்பீடுகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார

Read more...

கோப் குழுவின் முன் வெட்கித் தலைகுனிந்து நின்ற ரை-கோட் அணிந்த கொள்ளையர்கள்.

இலங்கையின் இன்றைய ஊழல் நிறைந்த ஆட்சிக்கும் பொருளாதார வீழ்சிக்கும் பிரதானமான காரணமாக அமைந்துள்ளவர்கள் அரச உத்தியோகித்தர்கள். இவர்கள் மக்களின் பணத்தில் ஊதியத்தை பெற்றுக்கொண்டு மக்களின் வாழ்விற்கே வினை வைத்து வருகின்றனர். ரை-கோட் அணிந்த இக்கொள்ளையர்களால் இந்நாட்டின் சொத்துக்கள் முற்றிலும் சுரண்ப்படுகின்றது.

இவ்வாறு மக்கள் வங்கியின் பொது முகாமையாளரான வசந்தகுமாரின் பெயரால் சுமார் 52 மில்லியன்கள் அநாவசியமாக செலவிடப்பட்டுள்ளமையும் அவர் ஓய்வு பெற்றுச்செல்லும்போது 15 மில்லியன் பெறுமதியான பென்ஸ் கார் ஒன்றை வீட்டுக்கு கொன்று சென்றுள்ளமையும் கோப் குழு முன்னிலையில் அம்பலமாகியுள்ளது.

மக்களின் உதிரத்தைக் குடிக்கும் கயவர் கும்பல் நேற்று கோப்குழு முன்னிலையில் ஆஜராகியிருந்தது. வங்கியின் இயக்குனர்சபை அடங்கியிருந்த கும்பலிடம் 'இதையெல்லாம் அனுமதிக்க உங்களிற்கு வெட்கமாக இல்லையா?' என கோப் குழு கறாராக வினவ, தலையை குனிந்துகொண்டு உட்கார்ந்திருந்தனர்.

மக்கள் வங்கியின் முன்னாள் பொது முகாமையாளருக்கு ஆறு மாத சேவை நீடிப்பு வழங்கக்கூடாது என ஏற்கனவே கோப் குழு அறிவித்திருந்த நிலையில், அதை புறந்தள்ளி வங்கியின் இயக்குனர்சபை அவருக்கு ஆறு மாத சேவைநீடிப்பு வழங்கியிருந்தது. இதை கோப் குழு காரசாரமாக விமர்சித்தது. அவருக்கு சேவை நீடிப்பு வழங்கியதன் மூலம் அரச செலவில் ஏற்படுத்தப்பட்ட 100 மில்லியன் நட்டஈட்டை இயக்குனர் சபையிலுள்ளவர்களே செலுத்த வேண்டுமென்றும் பரிந்துரைத்துள்ளது.

நேற்றைய கோப்குழு விசாரணைக்காக மக்கள் வங்கி தலைவர் ஹேமசிறி பெர்னாண்டோ, மேலதிக செயலாளர் ஆர்.சேமசிங்க, தற்போதைய பொது முகாமையாளர் ரசிதா குணவர்தன, நிதியமைச்சின் செயலாளர் ஆர்.எச்.எஸ்.சமரதுங்க ஆகியோர் முன்னிலையகியிருந்தனர்.

கோப் குழுவின் முந்தைய விசாரணையில் வசந்குமாருக்கு 2.1 மில்லியன் ரூபா மாதாந்த சம்பளம் வழங்கப்படுவது தெரிய வந்தது. இதையடுத்தே அவருக்கு சேவை நீடிப்பு வழங்க வேண்டாம் என கோப் பரிந்துரைத்திருந்தது. இதற்கு லக்ஷ்மன் கிரியெல்ல, நிதியமைச்சர் மங்கள சமரவீர ஆகியோர் ஒப்புதல் அளித்திருந்தனர். ஆனால் அதை மீறி அவருக்கு சேவை நீடிப்பு வழங்கப்பட்டிருந்தது. இரண்டு அமைச்சர்களையும், அதிகாரிகள் தவறாக வழிநடத்தியுள்ளனர் என கோப் குழு கண்டித்தது.

வசந்குமார் ஓய்வுபெறவிருந்தபோது, அவரது பதவிக்கு நியமிக்கப்படும் துணை அதிகாரியை பயிற்றுவிக்க வசந்தகுமாரின் சேவை ஆறு மாதங்கள் தேவையென குறிப்பிட்டே, அவருக்கு சேவை நீடிப்பு வழங்கப்பட்டார்.

வங்கியின் தற்போதைய பொது முகாமையாளர் ரசிதா குணவர்தனவிடம் இதுபோன்ற எந்தவொரு பயிற்சியும் பெற்றாரா என்று கோப் குழு தலைவர் சுனில் ஹந்துன்நெத்தி கேட்டார்.

வங்கியில் எவ்வளவு காலம் பணியாற்றி வருகிறார் என்று வினவியபோது, 38 ஆண்டுகள் என்றார் ரசிதா குணவர்தன.

கோப் குழுவின் அங்கத்தவரான குரநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜெயசேகர, வசந்த குமாருக்கு நீட்டிப்பு வழங்க இது ஒரு 'இட்டுக்கட்டப்பட்ட காரணம்' என்று குறிப்பிட்டார்.

மக்கள் வங்கி பொது முகாமையாளரின் சம்பளம் நாட்டின் பிற வங்கிகளின் பொது முகாமையாளர்களின் நிலையான சம்பளத்தை விட மிக அதிகம் என்று ஹந்துன்நெத்தி சுட்டிக்காட்டியிருந்தார். ஆறு மாத சேவை நீட்டிப்பு வழங்கியதன் மூலம், 15 மில்லியனையும், மேலும் 37 மில்லியனையும் வசந்த குமாருக்கு நிலுவைத் தொகையாக செலுத்தியது. கூடுதலாக, அவருக்கு 16.6 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள பி.எம்.டபிள்யூ கார் ஒன்றை வாங்கியது. வசந்த குமார் இரண்டு வாகனங்களுடன் ஓய்வு பெற்றார் என்று அவர் மேலும் கூறினார்.

'இரண்டு கார்களுடன் ஒரு அதிகாரி வீட்டிற்கு செல்வதை உலகத்தில் எங்கே காணலாம்?' என்று ஹந்துன்நெத்தி வினவினார். 'இந்த வகையான மோசடியை நீங்கள் எவ்வாறு அனுமதிப்பீர்கள்?' என கேட்க, வங்கியின் தலைவர் நிசங்க நாணயக்கார, அவர் அப்போது தலைவர் இல்லை என்று கூறினார். ஆனால் ஓய்வுபெற்ற தலைமை நிர்வாக அதிகாரியின் குறிப்புக்களின்படி, அந்த கார்களில் ஒன்றிற்கு ஒரு சென்டிமென்ட் மதிப்பைக் கொண்டிருந்தார் என்றும் அதைக் கேட்டதாகவும் ஒரு ஆவணம் உள்ளது என்றார்.

'இந்த காரணங்கள் என்ன?' என்று கோப் அங்கத்தவர் லக்ஷ்மன் செனவிரத்ன எம்.பி கேட்டார். 'இந்த சாக்குகளை வழங்குவதன் மூலம் தவறான செயலை நியாயப்படுத்த முடியும் என்று நீங்கள் எப்படி நினைக்கிறீர்கள்? நீங்கள் பொதுப் பணத்துடன் விளையாடியுள்ளீர்கள். இயக்குநர்கள் குழு பொறுப்பேற்க வேண்டும்' என்றார்.

அமைச்சர்கள் லக்ஸ'மன் கிரியெல்லா மற்றும் மங்கள சமரவீர ஆகியோரை அவர்கள் தவறாக வழிநடத்தியதாக கோப் தலைவர் ஹந்துன்நெத்தி தெரிவித்தார்.

இயக்குநர்கள் குழு பொறுப்பற்ற முறையில் நடந்து கொண்டதாக அவர் மேலும் கூறினார். அவர்கள் கோப் கொடுத்த உத்தரவை மீறி அதன் மூலம் பாரிய இழப்பை ஏற்படுத்தியுள்ளனர். 'ஆறு மாத முன்கூட்டியே பணிநீக்கம் செய்யப்பட வேண்டிய நபருக்கு ஆறு மாத சேவை நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது. நீங்கள் வெட்கப்பட வேண்டும்' என்றார்.

'அதிகாரிகள் பொது நிதியை இந்த முறையில் வீணடிப்பதைப் பார்க்கும்போது வருத்தமாக இருக்கிறது. பல்வேறு வழிகளில் வங்கியை மோசடி செய்த ஒரு நபரின் நிலையை கற்பனை செய்து பாருங்கள். அவற்றில் ஒன்றுக்கு சென்டிமென்ட் மதிப்பு இருப்பதாகக் கூறி இரண்டு கார்களுடன் வீட்டிற்குச் செல்கிறீர்களா? இதுபோன்ற காரியங்களைச் செய்யக் கூட கனவு காணாத பல அரசு அதிகாரிகள் உள்ளனர்' என்றார் ஹந்துன்நெத்தி.

Read more...

எல்பிடியில் பஸ் ஒன்றுக்கு துப்பாக்கிச் சூடு! ஸ்தலத்திலேயே ஒருவர் பலி!

எல்பிடிய - அழுத்கம பிரதான வீதியில் அழுத்கமவிலிருந்து எல்பிடிய வரை பயணித்த இபோச பஸ் வண்டியில் பயணித்த பயணியொருவருக்கு அதே வண்டியில் பயணித்த மற்றொருவர் துப்பாக்கிச் சூடு நடாத்தியுள்ளார் என எல்பிடிய பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இன்று காலை எல்பிடிய அட்டகோட்டை பாழடைந்த இடமொன்றிலேயே இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

ஊரகஸ்மங்ஹந்திய வல் இங்குருகெட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த ரஞ்சித் ஜயவர்தன (41) என்பவரே இவ்வாறு துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி இறந்துள்ளார். வழக்கொன்றிற்காக இறந்த நபரும் அவரது மனைவியும் எல்பிடிய நீதிமன்றத்திற்குச் செல்லும் போதே இந்த சூட்டுச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.

இந்நிகழ்வின் பின்னர் துப்பாக்கிச் சூட்டினை நடாத்திய சந்தேகநபர் பஸ்ஸிலிருந்து இறங்கி, பஸ் வண்டியின் பின்னால் வந்துகொண்டிருந்த மோட்டார் சைக்கிளில் வந்த நபரொருவருடன் வேகமாக சென்று தலைமறைவாகியுள்ளார் எனவும், குறித்த சந்தேக நபர் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

Read more...

போரா சம்மேளத்தில் கலந்துகொள்வோருக்காக அறுக்கப்படுகின்றன ஆயிரமாயிரம் பசுக்கள்! மிருக அகிம்சாவாத தேசிய அமைப்பு விசனம்

இலங்கையில் தற்போது இடம்பெற்றுவருகின்ற போராக்களின் சம்மேளத்தில் கலந்துகொள்வோரின் உணவுத் தேவைக்காக, ஒரு தடவையில் அறுக்கப்படுகின்ற பெருமளவு மாடுகள் தொடர்பில் 'மிருக அகிம்சாவாத தேசிய அமைப்பு' அதுதொடர்பில் தகவல்களை வெளியிட்டுள்ளது.

'மிருக அகிம்சாவாத தேசிய அமைப்பு'ஊடகங்களுக்கு அனுப்பிவைத்துள்ள கடிதத்தில் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளது. கொழும்பை மைய இடமாகக் கொண்டு நடாத்தப்பட்டுவரும் போரா அமைப்பின் பாரிய சம்மேளனத்திற்காக பல்வேறு நாடுகளிலும் இருந்து இருபத்தோராயிரத்திற்கும் மேற்பட்டோர் வருகை தந்துள்ளதாக ஊடகங்களில் செய்திகள் பிரசுரமாகியிருந்தன. கொழும்பு நகரில் விஷேடமாக கொள்ளுப்பிட்டியிலிருந்து கல்கிஸ்ஸ வரையிலான பிரதேசங்களில் இருக்கின்ற ஓட்டல்களும், வாடிவீடுகளும் அவர்களுக்காக ஒதுக்கப்பட்டு அவர்கள் அவற்றில் இருக்கின்றார்கள் எனவும் பத்திரிகை மற்றும் சமூக வலைத்தள ஊடகங்களில் செய்திகள் வெளியாகி இருந்தன.

பத்து நாட்கள் வரை நடைபெறும் இந்தச் சம்மேளனத்தில் பங்குபற்றுகின்ற மக்கள் கூட்டத்தினருக்கு வழங்கப்படுகின்ற முக்கிய உணவாக மாட்டிறைச்சி வழங்குவதற்காக அதிகளவிலான மாடுகள் நாளாந்தம் ஒரே தடவையில் அறுக்கப்படுவதாக எங்களுக்கு நம்பகத்தன்மை வாய்ந்த தகவல்கள் மூலம் தெரியவந்துள்ளன.

சட்ட ரீதியாக அன்றி, மாடறுத்தல் சட்டதிட்டங்களுக்கு அப்பாற்சென்று, கொலை செய்யப்படுகின்ற இந்த செயற்பாட்டின் பின்னணியில் இந்த அரசாங்கத்தின் முக்கிய அமைச்சர்களும் இருக்கின்றார்கள் எனத் தெரியவருகின்றது.

கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் கட்டாக்காலிகளாக அலைந்து திரிகின்ற மாடுகள், அவற்றின் குட்டிகள், குட்டி ஈனும் தருவாயிலுள்ள மாடுகள், நோயுடன் உள்ள பசுக்கள் என்பன சட்டரீதியாக அன்றி, தடிகளினாலும் கூரிய ஆயுதங்களினாலும் மனிதாபிமானமற்ற முறையில் தாக்கப்பட்டு, இம்சைப்படுத்தப்பட்டு வேன்களிலும், சிறிய வாகனங்களிலும் ஏற்றப்பட்டு தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள மாடறுக்கும் இடங்களுக்கு இரவோடு இரவாக கள்ளத்தனமாகக் கொண்டுசெல்லப்படுகின்றன எனவும் தெரியவருகின்றது.

மாடறுப்பு சம்பந்தமாக தற்போது நடைமுறையிலுள்ள சட்ட திட்டங்களை கணக்கிற்கொள்ளாது, அப்பாவி மாடுகள் கொலை செய்யப்படுவதற்கு காரணமாக உள்ள இந்தச் சம்மேளனத்திற்காக ஒத்துழைப்பு வழங்கியுள்ள அரசியலாளர்கள், அந்நிகழ்ச்சிக்கு அநுசரணை வழங்கியுள்ள போரா நதியில் மீன் பிடிக்கின்ற சில வியாபாரிகள் மட்டுமன்றி, இந்தப் பாவச் செயலுக்காக பல்வேறு வழிகளிலும் உதவியோர் அனைவருக்கும் இயற்கையின் சீற்றத்திற்கு ஆளாவார்கள் என்பது உறுதி என்பதை நாங்கள் கூறிக்கொள்ள விரும்புகின்றோம்.


கலாநிதி டிக்கிரி பண்டார எட்டிபொல
இணைச் செயலாளர்
மிருக அகிம்சாவாத தேசிய அமைப்பு

Read more...

Thursday, September 5, 2019

எங்கும் சஜித் அலையே வீசுகிறது.... கோத்தா பாவம்! -

கோத்தபாய ராஜபக்ஷவுக்கு மக்கள் அலை வீசுவதில்லை என்றும், அவர் ஜனாதிபதி வேட்பாளராக நியமிக்கப்பட்ட நாளிலிருந்து மக்கள் ஆதரவோ கூட்டங்களுக்கு வருகின்ற மக்களின் தொகையோ இன்றுவரை அதிகரிக்கவில்லை என அமைச்சர் சுஜீவ சேனசிங்க குறிப்பிடுகிறார்.

சஜித் பிரேமதாசவிற்கான அனைத்துக் கூட்டங்களும் வெற்றியின் எல்லையை அடைந்திருப்பதாகவும், மக்கள் திரண்டிருப்பது அவருக்காகவே என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஜனாதிபதி வேட்பாளராக பிரேமதாசவின் பெயர் குறிப்பிடப்பட்டதன் பின்னர், தாமரை மொட்டின் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலர் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணையவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

விழாவொன்றின் இறுதி நிகழ்ச்சியின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

Read more...

பாராளுமன்ற உறுப்பினர்கள் எவருக்கும் மதுபானசாலைக்கான அனுமதி வழங்கப்படவில்லை - நிதி அமைச்சு

தற்போதைய பாராளுமன்ற உறுப்பினர்கள் எவருக்கும் மதுபானசாலைக்கான அனுமதிப்பத்திரம் வழங்கப்படவில்லை என்று நிதி அமைச்சு தெரிவித்துள்ளது. 2015 ஆம் ஆண்டுக்கு பின்னர் சுற்றுலாத்தொழிற்துறையை மேம்படுத்துவதற்காக சுற்றுலா சபையின் அங்கீகாரத்துடன் ஹொட்டேல்களுக்கு மாத்திரம் இந்த அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டுள்ளது என்று நிதி அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

நாட்டில் 4,919 அனுமதிபெற்ற மதுபான சாலைகள் உண்டு, இவற்றுள் 1,100 சில்லறை விற்பனை நிலையங்களாகும். 1,567 ஹொட்டேல்களும், 554 விடுதிகளும் அடங்குகின்றன. கலால் திணைக்களத்தினால் 368 அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன.

இதில் வைன் மற்றும் பியர் விற்பனை நிலையங்கள் அடங்கியுள்ளன.  இதே போன்று 200 விடுதிகளுக்கு கள் விற்பனைக்கான அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன. இதற்கு மேலதிகமாக திணைக்களம் வெளிநாட்டு மதுபான விற்பனைக்காக 1,080 அனுமதிப்பத்திரங்களை வழங்கியுள்ளது.

எவரேனும் ஒருவருக்கு மதுபான விற்பனை அனுமதிப்பத்திரத்தை பெற்றுக்கொள்ளவேண்டுமாயின் அது தொடர்பாக கலால்; திணைக்களத்தின் நிபந்தனைகள் மற்றும் விதிகளுக்கு உடன்பட வேண்டும்.

அனுமதிப்பத்திரத்தை பெற்றுக்கொள்வதற்காக விண்ணப்பிக்கும் ஒருவர் கடந்த 5 வருட காலப்பகுதிக்குள் எந்தவெரு குற்றச்செயல்களிலும் தொடர்புபட்டிருக்க கூடாது. அத்தோடு சம்பந்தப்பட்டவர் வரி செலுத்துபவராக இருக்க வேண்டும். பாடசாலை, வழிபாட்டுத் தலங்கள் உள்ளிட்ட இடங்களுக்கு அப்பால் அனுமதிபெற்ற மது விற்பனை நிலையங்களை அமைக்கவேண்டும் என்பது மற்றுமொரு விதியாகும்.


காலால் திணைக்களத்தின் விதிகள் மற்றும் ஏற்பாடுகளுக்கு அமைவாக விண்ணப்பப் பத்திரத்தை சமர்ப்பித்த பின்னர் அது தொடர்பான விபரங்கள் பிரதேச செயலாளர். பொலிஸார் ஊடாக உறுதி செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
மதுபான சாலைக்கு அனுமதிப்பத்திரத்தை பெற்றவர்களின் பெயர் விபரங்கள் கலால் திணைக்களத்தின் இணையத்தளத்தில் இடம்பெற்றிருப்பதாகவும் நிதி அமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Read more...

எல்பிடிய உள்ளுராட்சித் தேர்தல் முடிவு ஜனாதிபதித் தேர்தலுக்கு எவ்விதத்திலும் தாக்கம் செலுத்தாது! சம்பிக்க

எல்பிடிய உள்ளுராட்சித் தேர்தலில் முடிவு ஜனாதிபதித் தேர்தலுக்கு எவ்விதத்திலும் பாதிப்பினைச் செலுத்தாது என மேல்மாகாண மற்றும் மாநகர அபிவிருத்தி அமைச்சர் பாட்டாலி சம்பிக்க ரணவக்க குறிப்பிட்டார்.

'பிற்போன பிரதேச சபைத் தேர்தலினால் எவ்வாறு அனைத்து முடிவுகளையும் கணிப்பது? 2014 ஆம் ஆண்டு ஊவா மாகாண சபைத் தேர்தல் நடைபெற்றது. அதில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வெற்றியீட்டியது. ஆனாலும் சில மாதங்களுக்குப் பின்னர் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் தோல்வியைத் தழுவியது.

'அது எவ்வாறு ஜனாதிபதித் தேர்தலில் தாக்கம் செலுத்தும்? ஜனாதிபதித் தேர்தல் என்பது முழு நாட்டு மக்களும் ஒன்றிணைந்து ஒன்றாக வாக்கினைப் பயன்படுத்துவதாகும். எல்பிடிய தேர்தல் என்பது அப்பிரதேசத்தை அபிவிருத்தி செய்வதற்கான தேர்தலாகும். எல்பிடியத் தேர்தல் ஜனாதிபதித் தேர்தலில் எவ்விதத்திலும் தாக்கம் செலுத்தாது.' எனவும் அவர் குறிப்பிட்டார்.

Read more...

மாவை சேனாதிராஜாவுக்கு முன் பாதிக்கப்பட்ட சுகாதார தொண்டர் ஒருவர் தற்கொலை முயற்சி

அரசியல் தலையீடுகள், ஆளுநரின் உணர்ச்சி வசப்பட்ட தீர்மானங்கள் மற்றும் அதிகாரிகளின் பொறுப்பின்மை காரணமாக முறைகேடான வகையில் வடக்கு மாகாண சுகாதார தொண்டர்களுக்கு வழங்கப்படவிருந்த நியமனங்கள், பிற்போடப்பட்டுள்ளது இதன் போது பாதிக்கப்பட்ட சுகாதார தொண்டர்களில் ஒருவர் மாவை சேனாதிராஜாவுக்கு முன் தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார். குறித்த சம்பவம் இன்று சாவகச்சேரி நகர சபை மண்டபத்தில் இடம்பெற்றது. .

சாவகச்சேரி நகரசபை மண்டபத்தில் இன்று (வியாழக்கிழமை) காலை சுகாதார தொண்டர்கள் 454 பேருக்கு நியமனங்கள் வழங்கப்படவிருந்தன.< இந்நிலையில் நியமனங்களில் முறைகேடுகள் இடம்பெற்றுள்ளதால், மீள்பரிசீலனை செய்யுமாறு வலியுறுத்தி புறக்கணிக்கப்பட்ட தொண்டர்கள் நேற்று முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

அவர்களின் போராட்ட இடத்திற்கு சென்ற மாவை அங்கு பேச்சுவார்த்தையில் ஈடுப்பட்டார் இதன் போதே பாதிக்கப்பட்ட தொண்டர்களில் ஒருவர் தனக்குத் தானே மண்ணெண்ய் ஊற்றி தற்கொலைக்கு முயற்சித்த போது ஏனையவர்கள் அவரை காப்பாற்றி அங்கிருந்து அகற்றிச் சென்றனர் அத்தோடு, போராட்டக்காரர்களின் கோரிக்கையை ஏற்று நியமனம் வழங்குவதை பிற்போடுமாறு பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜாவும் ஆளுநரிடம் வலியுறுத்தியிருந்தார்.இதனையடுத்து நேர்முகத்தேர்வுக்கு தோற்றியும் இந்த நியமனம் தொடர்பாக பெயர் குறிப்பிடப்படாதவர்களின் மாவட்ட பிரதிநிதிகள் வடக்கு ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனை ஆளுநர் செயலகத்தில் சந்தித்து கலந்துரையாடினர்.

அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க நேர்முகத்தேர்வில் பங்குபற்றிய அனைவரது புள்ளிவிபரங்களும் அடங்கிய பட்டியல் குறித்த பிரதிநிதிகளிடம் வழங்கப்பட்டது.இதனைத்தொடர்ந்து அமைச்சினால் வழங்கப்பட்ட நியமங்களுக்கு மாறான அல்லது தவறான முறையில் நியமனங்கள் வழங்கப்பட்டிருக்குமாயின், அவை தொடர்பான விபரங்களை 24 மணித்தியாலங்களுக்குள் சமர்ப்பிக்குமாறு ஆளுநர் கேட்டுக்கொண்டுள்ளார். விசாரணைகள் முடியும் வரையில் வடக்கு மாகாண சுகாதார தொண்டர்களுக்கு வழங்கப்படவிருந்த நியமனங்கள் பிற்போடப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Read more...

மாற்றத்தை விரும்புகின்றவர்கள் ஜேவிபியுடன் கைகோருங்கள் - ரில்வின் சில்வா

மஹிந்த, கோத்தாபய, ரணில் மற்றும் மைத்திரிபால சிறிசேன ஆகியோரது பிரதிநிதிகளை தோல்வியடையச் செய்து இலங்கை அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்று விரும்புபவர்கள் எம்முடன் கைகோர்க்குமாறு மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.

இலங்கையின் கடந்த 71 வருட கால அரசியல் வரலாற்றை நோக்கும் போது மஹிந்த ராஜபக்ஷ தரப்பினருக்கோ அல்லது ஐக்கிய தேசிய கட்சிக்கோ நாட்டை கட்டியெழுப்ப முடியாது என்பது உறுதியாகியுள்ளது.

மனித உரிமை மற்றும் ஜனநாயகம் என்பவற்றைக் கூட தங்களால் பாதுகாக்க முடியாது என்பதையும் அவர்கள் உறுதிப்படுத்தியுள்ளார்கள். இந்த இருதரப்பினரதும் அரசியல் முன்னெடுப்புக்கள் பூச்சியமாகியுள்ளன.

முன்னரைப் போன்றே மீண்டும் இவ்விரு கட்சிகளிலும் கட்சித் தாவல்கள் ஆரம்பித்துவிட்டன. எஸ்பி.திஸாநாயக்க போன்றோர் என்ன செய்கிறார்கள் என்று அவர்களுக்கே புரியவில்லை. கடந்த 2015 ஆம் ஆண்டு தேர்தலின் போது மஹிந்த ராஜபக்ஷவை கைவிட்டு அவரையும் கோத்தாபய ராஜபக்ஷவையும் முடிந்த வரை தூற்றினார்கள். தற்போது மீண்டும் அவர்களுடன் இணைந்து கொண்டு கோத்தாவையும், பசில் ராஜபக்ஷவையும் புகழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இவர்களுக்கு அரசியல் ஒழுக்கம் என்பது சிறிதளவேனும் இல்லை.

எவ்வாறு எஸ்.பி.திஸாநாயக்க போன்றோருக்கு அரசியல் ஒழுக்கம் கிடையாதோ , அதே போன்று அவர்களை சேர்த்துக் கொள்பவர்களுக்கும் அரசியல் ஒழுக்கம் கிடையாது. இது போன்ற ஒழுக்கமற்றவர்களை இணைத்துக் கொள்ளுமளவிற்கு அந்த கட்சியின் நிலைமை காணப்படுகிறது என்றால் , இவ்வாறானவர்களுக்கு எவ்வாறு நாட்டில் ஒழுக்கத்தை கட்டியெழுப்ப முடியும் என்றும் கேள்வி எழுப்பினார்.

பத்தரமுல்லையில் உள்ள ஜே.வி.பி தலைமையகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

Read more...

2020 இற்கான வரவு செலவு திட்டம் இல்லை? ரணில்

இவ்வருட இறுதியில் ஜனாதிபதி தேர்தல் நடைபெறவிருப்பதால் 2020 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை 2019 ஆம் ஆண்டில் முன்வைக்காதிருக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

ஜனாதிபதி தேர்தலுக்குப் பின் பாராளுமன்றம் கலைக்கப்படுவது தொடர்பில் கட்சி தலைவர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களே தீர்மானிக்க வேண்டும் என்றும் பாராளுமன்றத்தில் பிரதமர் நேற்று கூறினார்.


இதேவேளை, 2020 ஆம் ஆண்டிற்கான செலவுக்களுக்காக இடைக்கால ஒதுக்கீட்டு சட்டமூலம் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்படும் என்றும் பிரதமர் கூறினார்.

தேவையற்ற செலவினங்களைக் குறைத்து ஆரம்ப மிகைப் பெறுமானத்துடன் எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தை முன்னெடுத்துச் செல்வதற்கு அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்படும். நாட்டின் சிக்கல் நிலைமைகளை மிகவும் வினைத்திறனாக சமாளிக்க அரசாங்கத்தால் முடிந்திருப்பதாக பிரதமர் குறிப்பிட்டார்.

நாட்டின் பொருளாதார நிலை தற்போது பாதுகாப்பாகவும் நல்ல நிலைமையிலும் இருப்பதாக பிரதமர் சுட்டிக்காட்டினார்.

Read more...

இன்று முதல் கொழும்பிலிருந்து யாழ்பாணத்திற்கு செல்கிறாள் ஸ்ரீதேவி

கொழும்பில் இருந்து வவுனியா வரை பயணித்த கடுகதி (இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ்) ரயில், இன்று (05) முதல் காங்கேசந்துறைவரை “ஸ்ரீதேவி இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ்” ஆக தனது சேவையை ஆரம்பித்துள்ளது.

கொழும்பு,கோட்டையிலிருந்து மாலை 3.55 மணிக்கு புறப்பட்டு யாழ்ப்பாணத்தை இரவு 10.00 மணிக்கு சென்றடையும், அங்கிருந்து காங்கேசந்துறைக்கு இரவு 10.16 மணிக்கு குறித்த ரயில் சென்றடையும்.

பொல்கஹவெல, குருநாகல், மாஹோ, கல்கமுவா, தம்புத்தேகம, அநுராதபுர புதிய நகரம், அநுராதபுரம், மதவாச்சி, வவுனியா, அறிவியல் நகர், கிளிநோச்சி, கொடிகாமம், யாழ்ப்பாணம், காங்கேசந்துறை ஆகிய இடங்களில் குறித்த ரயில் நிறுத்தப்படும்.

குறித்த ரயிலானது காங்கேசந்துறையில் இருந்து அதிகாலை 3.45 மணிக்கு புறப்பட்டு, யாழ்ப்பாணத்தை வந்தடைந்து,யாழ்ப்பாணத்தில் இருந்து அதிகாலை 4.05 மணிக்கு புறப்பட்டு கொழும்பு கோட்டைக்கு முற்பகல்10.24 மணிக்கு சென்றடையவுள்ளது.

Read more...

ASP இற்கு எச்சரிக்கை விடுத்தார் அஸாத் ஸாலி - ஜயந்த

மாவனல்லை புத்தர் சிலையை உடைத்தமை தொடர்பான தகவல்களை வெளிக்கொணர்ந்த உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் காமினி தென்னகோனுக்கு, முன்னாள் மேல் மாகாண ஆளுநர் அஸாத் ஸாலி எச்சரிக்கை விடுத்துள்ளதாக மக்கள் சுதந்திர முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் ஜயந்த சமரகோன் பாராளுமன்றில் குறிப்பிட்டுள்ளார்.

புத்தர் சிலையை உடைத்தமை தொடர்பிலான விசாரணைக் குழுவின் முதன்மையாளரான மேற்படி உதவிப் பொலிஸ் அத்தியட்சகருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளமை தொடர்பில் அஸாத் ஸாலி கைது செய்யப்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

'மாவனல்லைச் சம்பவத்தின் முக்கிய சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டிருந்தால், உயிர்த்த ஞாயிறு தினத்தன்றைய நிகழ்வு நடவாமல் காத்திருக்கலாம். அவர்கள் கைதுசெய்யப்படாமைக்குக் காரணமாக இருந்தவர் அஸாத் ஸாலியே. குறைந்தளவு அவர்களிடமிருந்து ஒரு வாய்மொழி கூடப் பெறப்படவில்லை. உயிர்த்த ஞாயிறன்று இடம்பெற்ற தாக்குதல் தொடர்பாக கருத்துரைப்பதற்காக அவரைப் பாராளுமன்றத் தேர்வுக் குழுவின் முன் அழைக்குமாறு நாங்கள், சபாநாயகரைக் கேட்டுக் கொண்டோம். என்றாலும் அவர் அழைக்கப்படவில்லை.

அஸாத் ஸாலி பற்றிய தகவல்கள் ஏன் மக்கள் மத்தியில் முன்வைக்கப்பட்டது எனக்கேட்டே எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அஸாத் ஸாலியின் இந்த படுமோசமான செயலை நான் வன்மையாகக் கண்டிக்கின்றேன். மிக விரைவாக அஸாத் ஸாலி கைது செய்யப்பட வேண்டும். அவ்வாறு செய்தால் வஹாப்வாத அடிப்படைவாதிகள் பற்றிய அனைத்து விடயங்களையும் வெளிக்கொணரலாம். அவர்கள் சென்றுள்ள இடங்கள் பற்றித் தேட வேண்டும். அவர்களுக்கும் சர்வதேசத்திற்கும் இடையிலுள்ள தொடர்புபற்றித் தேட வேண்டும். தேசியமாக அவர்கள் எங்கெல்லாம் பரந்து இருக்கின்றார்கள்? அவர்களுடைய அடுத்த இலக்கு என்ன? என்பன பற்றித் தேட வேண்டும்' எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Read more...

Wednesday, September 4, 2019

நிறைவேற்று அதிகார முறையை இல்லாதொழிப்பேன் - ரணில்

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை இல்லாதொழிப்பதற்காக தொடர்ந்தும் தான் செயற்படுவேன் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க குறிப்பிடுகிறார்.

மாலைதீவிற்கு சுற்றுலா சென்றுள்ள பிரதமர், மாலை தீவுப் பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே இவ்வாறு குறிப்பிட்டு்ளளார்.

19 ஆவர் திருத்தச் சட்டத்தின் மூலம் ஜனாதிபதி முறையின் பலமான அதிகாரங்கள் குறைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி முறையை இல்லாதொழிப்பதற்காக சென்ற வாரம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் பிரதமர் இதுதொடர்பில் பேசியிருந்தார் என்பதை இலங்கைநெட் சுட்டிக்காட்டியிருந்தது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

Read more...

உயிர்த்த ஞாயிறன்று நடாத்திய தேடுதலை விட கோத்தபாய பற்றிய தேடலே அதிகம்! - மகிந்த

உயிர்த்த ஞாயிறு தினத்தன்று மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத தாக்குதலைப் பற்றி ஆராய்ந்ததை விடவும் பன்மடங்கு ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடவுள்ள, ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ஷவின் பெயர் 2005 ஆம் ஆண்டு வாக்காளர் பெயர்ப்பட்டியில் உள்ளடங்கியுள்ளதாக என்பதை ஆராய்வதற்காக குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளுக்குத் தேவைப்பாடாக உள்ளது என எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டார்.

அதுதொடர்பில் ஆராய்ந்து பார்ப்பதற்காக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திலிருந்து 20 இற்கும் மேற்பட்ட அதிகாரிகள் ஹம்பாந்தோட்டை நகருக்கு வந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்:

இப்பொழுதெல்லாம் வெளிச்சத்திலேயே மக்கள் காெலை செய்யப்படுகிறார்கள். அவை பற்றி யாரும் கருத்திற் கொள்வதில்லை. குற்றங்கள் பற்றித் தேடாமல், காேத்தபாயவின் பெயர் 2005 ஆம் ஆண்டு வாக்காளர் பெயர்ப்பட்டியலில் இருக்கின்றதா என்பதைத் தேடுவதே குற்றப் புலனாய்வு உறுப்பினர்களுக்கு மிகவும் தேவைப்பாடாக உள்ளது. இந்நாட்களில் அவர்களுக்கு இருக்கின்ற பாரிய பொறுப்பு அதுதான். அதுமட்டுல்ல, அவர் வெளிநாட்டுக் கடவுச் சீட்டினை மாற்றிக்கொண்டாரா இல்லையா என்பது தொடர்பிலும் அறிக்கையொன்று தயாரிக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் குறிப்பிட்டார்.

கொழும்பு கண்காட்சி மற்றும் சம்மேளன மத்திய நிலையத்தில் நேற்று இடம்பெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் அவ்வாறு தெரிவித்தார்.

Read more...

JVP யுடன் TNA இணைந்தால் நல்ல மாற்றம் வரும் - எம்.ஏ.சுமந்திரன்

JVP யுடன் TNA இணைந்தால் நல்ல மாற்றம் வரும் இருப்பினும் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் எந்த அரசியல் கட்சி வேட்பாளருக்கு ஆதரவளிப்பது குறித்து இதுவரை தீர்மானிக்கவில்லை என தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. அக்கட்சியின் ஊடக பேச்சாளர், பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் இதனை தெரிவித்துள்ளார்.

அனைத்து கட்சிளும் தமது ஜனாதிபதி வேட்பாளர் குறித்து அறிவிக்கும் வரையில் தமது கட்சியின் தீர்மானம் அறிவிக்கப்படாது
பெயரிடப்படும் வேட்பாளர்கள் மற்றும் அவர்களின் தேர்தல் விஞ்ஞாபனம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதன் பின்னர் ஆதரவு அளிக்கும் கட்சி தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பு தீர்மானம் ஒன்றை மேற்கொள்ளும் என "த ஹிந்து" பத்திரிக்கைக்கு வழங்கிய நேர்க்காணலின் சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

2015 ஆம் ஆண்டு சில வாக்குறுதிகளின் அடிப்படையில் வேட்பாளர் ஒருவருக்கு ஆதரவு அளித்ததாக சுட்டிக்காட்டிய சுமந்திரன், தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வினை பெற்றுக் கொள்வது போன்று நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை ரத்துச் செய்தல். அவற்றில் பிரதானமானவை என தெரிவித்தார்.

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை ரத்துச் செய்வதற்காக 1994 ஆம் ஆண்டு தொடக்கம் பொதுமக்களால் தெளிவான முடிவு வழங்கப்பட்டுள்ள நிலையில், இரண்டு கட்சிகள் அதற்கு இணக்கம் தெரிவித்திருந்ததால், இம்முறை நிறைவேற்று ஜனாதிபதி முறைமை கட்டாயமாக ரத்துச் செய்யப்படும் என நம்பியிருந்ததாகவும், அது இடம்பெறவில்லை எனவும் தெரிவித்திருந்தார்.

அதன்படி, இம்முறை ஜனாதிபதி தேர்தலில் முன்னிறுத்தப்படும் அனைத்து ஜனாதிபதி வேட்பாளர்களினதும் தேர்தல் விஞ்ஞாபனம் தொடர்பில் ஆராய்ந்து தனது கட்சியின் தீர்மானம் அறிவிக்கப்படும் என தெரிவித்த சுமந்திரன், தனது கட்சிக்கு எவ்வித அவசரமும் இல்லை எனவும் குறிப்பிட்டிருந்தார்.

ஒக்டோபர் 26 ஆம் திகதியின் பின்னர் தமிழ் தேசிய கூட்டமைப்பு, மக்கள் விடுதலை முன்னணியுடன் இணைந்தால் நல்ல மாற்றம் ஏற்படும் என பலர் தெரிவித்திருந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். இம்முறை ஜனாதிபதி தேர்தலில் மக்கள் விடுதலை முன்னணியுடன் இணைவது தொடர்பில் உறுதியாக கூறமுடியாது எனவும் நீண்டகாலத்தில் இது தான் சிறந்த முறை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இருப்பினும் பிரதான இரு கட்சிகளுடன் தான் தொடர்பில் இருக்க வேண்டி ஏற்பட்டுள்ளதாகவும் ஏனெனின் அவர்களே ஆட்சியில் இருந்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

உண்மையான மாற்றம் ஏற்பட வேண்டுமாயின் மக்கள் விடுதலை முன்னணி போன்று ஏனைய கட்சிகளுடன் தமிழ் தேசிய கூட்டமைப்பு இணைந்து செயற்பட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

Read more...

இராணுவத்திடம் உள்ள தனியார் காணிகள் துரித கதியில் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்படும் - ஆளுநர்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் துரிதப்படுத்தப்பட்ட திட்டத்தின் கீழ் வட மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனினால் படைத்தரப்பு மற்றும் பொலிஸாரால் பயன்படுத்தப்படும் யாழ் மாவட்டத்தில் உள்ள தனியார் காணிகளை அடையாளம் கண்டு அவற்றை துரிதகதியில் மீள கையளிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்த திட்டத்தின் அடிப்படையில் யாழ் மாவட்டத்தில் முப்படையினர் மற்றும் பொலிஸார் நிலைகொண்டுள்ள தனியார் காணிகள் தொடர்பான விபரங்களை காணிகளின் உரித்தாளர்கள் அறியத்தருவதன் மூலம் அக்காணிகள் அடையாளப்படுத்தப்பட்டு உரிமைகோருபவர்களிடம் மீளக்கையளிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

இதனடிப்படையில் இதற்காக தயாரிக்கப்பட்ட விசேட விண்ணப்பப்படிவத்தை பூர்த்தி செய்து உரிமைகோரலுக்கான தகுந்த ஆதாரத்துடன் அல்லது தகுந்த விளக்கத்துடன் மீளப்பெற்றுக்கொள்வதற்கான நடவடிக்கையினை மேற்கொள்ளுமாறு காணி உரிமையாளர்களை கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

குறித்த விண்ணப்பப் படிவத்தினை ஆளுநர் செயலகம், யாழ் மாவட்ட செயலகம், பிரதேச செயலகம் மற்றும் வடமாகாண சபையின் இணையத்தளத்திலும் பெற்றுக்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

காணி உறுதியின் பிரதியுடன் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பபடிவங்களை இணைத்து எதிர்வரும் செப்டம்பர் மாதம் 09 ஆம் திகதிக்கு முன்னர் ‘காணி கோரல் ‘ வட மாகாண ஆளுநர் செயலகம், பழைய பூங்கா, சுண்டுக்குளி , யாழ்ப்பாணம் என்னும் முகவரிக்கு அனுப்பிவைக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

Read more...

சஜித்தை தமிழ் மக்கள் நம்புகின்றனர் சொல்கிறார் சிறிதரன்

சஜித் பிரேமதாச தொடர்பில் தமிழ் மக்கள் மத்தியில் நம்பிக்கை ஏற்பட்டிருக்கின்றது. அதனால் வீடமைப்பு திட்டத்தில் காட்டுகின்ற செயற்பாட்டை கலாசார நிதியத்திலும் தமிழ் மக்கள் திருப்தியடையும்வகையில் செயற்படும் என எதிர்பார்க்கின்றோம் என தமிழ்த் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர் எஸ். சிறிநேசன் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று எதிர்க்கட்சியினால் கொண்டுவரப்பட்டிருந்த மத்திய கலாசார நிதியம் தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

எமது நாடு பல்லின மக்கள் வாழும் நாடு என்பதால் பல கலாசாரங்களை பின்பற்றக்கூடியவர்கள் இருக்கின்றனர். அதனால் நாட்டில் இருக்கும் பிரதான 4மதங்களின் கலாசார அமைப்புக்களுக்கும் மத்திய சலாசார நிதியத்தின் நிதி பகிரப்படவேண்டும். கடந்த காலங்களில் அவ்வாறான நடவடிக்கைகளை காணக்கூடியதாக இருக்கவில்லை.

அத்துடன் பல கலாசாரங்களை பின்பற்றும் எமது நாட்டில் ஒருசாரால் மற்றுமொரு இனத்தவரின் கலாசாரம் அவமதிக்கப்படும் பட்சத்தில்தான் இன,மத பிரச்சினைகள் இன நல்லிணக்கத்துக்கான பாதிப்புக்கள் ஏற்படுகின்றன.

இவ்வாறான நிலைமைகளை கடந்த காலங்களில் எமது நாட்டில் நாங்கள் கண்டிருக்கின்றோம். அவ்வாறான நிலைமை எதிர்காலத்தில் இடம்பெறாமல் இருக்கும்வகையில் நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என அவர் தெரிவித்தார்.

Read more...

Tuesday, September 3, 2019

துயரத்திலிருந்து அதிகம் அதிகம் கற்றுக்கொண்டாராம் ரணில் விக்கிரமசிங்கே.

கடந்த உயிர்த்த ஞாயிறு தினத்தில் மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத தாக்குதலால் ஏற்பட்ட துயரமான அனுபவத்தில் இருந்து இலங்கை அதிகமாக கற்றுக்கொண்டதாக, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

மாலைதீவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அந்நாட்டு நாடாளுமன்றில் இன்று (03) விசேட உரையாற்றினார்.

அதன்போது, இந்த விடயங்களை கூறிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில், “பயங்கரவாதத்தால் 25 வருடங்கள் நாங்கள் துன்பத்தை அனுபவித்தோம்.

ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பால் வழிநடத்தப்பட்ட உயிர்த்த ஞாயிறு தாக்குதலானது, வழமையான பயங்கரவாத தாக்குதலை விட பாரிய வேறுபாடுகளை கொண்டுள்ளது. இந்த துயரமான அனுபவத்தில் இருந்து நாங்கள் அதிகமாக கற்றுக்கொண்டோம்.

ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதத்துக்கு முகங்கொடுப்பதற்கு பிராந்தியம் என்ற ரீதியில் அனைத்து தரப்பினருடன் இணைந்து செயற்பட இலங்கை தயாராக உள்ளது.

காலநிலை மாற்றத்தின் தாக்கம் இன்று நம் அனைவருக்கும் பெரும் அச்சுறுத்தலாக உள்ளது. உங்கள் தீவு நீரில் மூழ்கும் அபாயம் உள்ளது.

கடல் மட்ட உயர்வு மற்றும் பச்சை வீட்டு விளைவுக்கு எதிராக போராடும் உங்களுக்கு எங்களால் முடிந்த அனைத்தையும் செய்ய நாங்கள் தயாராக உள்ளோம் என்று நான் உறுதியளிக்கிறேன்.

இந்த விடயம் தொடர்பில் சர்வதேச மாநாட்டில் கவனம் செலுத்துமாறு மாலைதீவு ஜனாதிபதி சோலிக்கு நான் முன்மொழிகிறேன்.” என்றார்.

Read more...

படகு பயணம் மூலம் அவுஸ்ரேலிய செல்வது பயனற்றது.- மேஜர் ஜெனரல் க்ரெய்க் பியூரினி

அவுஸ்திரேலியாவின் கடுமையான எல்லைப் பாதுகாப்புக் கொள்கைகளின் பிரகாரம், படகுகளின் ஊடாக சட்டவிரோதமாகப் பயணஞ்செய்பவர்கள் அவுஸ்திரேலியாவில் வாழ்வதற்கோ அல்லது தொழில் புரிவதற்கோ ஒருபோதும் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று அவுஸ்திரேலியா எச்சரித்திருக்கிறது.

சட்டவிரோத படகுமூல பயணம் என்பது அர்த்தமற்றதும் ஆபத்தானதும் எனும் அதேவேளை, தமது நாட்டிற்குள் சட்டவிரோதமாகக் குடியேறுவதற்கான எவ்வித வாய்ப்புக்களும் இல்லை என்றும் அவுஸ்திரேலிய அரசாங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

அவுஸ்திரேலியாவின் சுயாதிபத்திய எல்லைகள் என்ற திட்டத்தின் பொறுப்பதிகாரயான மேஜர் ஜெனரல் க்ரெய்க் பியூரினி இலங்கைக்கு விஜயமொன்றினை மேற்கொண்டிருக்கிறார்.

இந்நிலையில் இன்று நீர்கொழும்பு மீன்பிடித் துறைமுகத்திற்கு விஜயம் செய்த அவர், அங்கு ஊடகவியலாளர்களைச் சந்தித்துப் பேசியபோதே இவ்வாறு குறிப்பிட்டார்.

Read more...

சஹ்ரானின் மகளை அம்மம்மாவின் பொறுப்பில் ஒப்படைக்க நீதிமன்றம் உத்தரவு

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சந்தேகநபராக கருத்தப்படும் மொஹமட் சஹ்ரான் ஹசீமின் மகளை அவரின் மனைவியின் பெற்றோரிடம் ஒப்படைக்க கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சஹ்ரானின் மனைவி தற்போது குற்றப்புலனாய்வுத் திணைக்கள பொறுப்பில் உள்ளதால், அவரின் மகளை சிறுவர் சீர்த்திருத்த நிலையத்திற்கோ அல்லது உரிய பொறுப்பாளருக்கோ ஒப்படைக்குமாறு குற்றப்புலனாய்வுத் திணைக்களம் நீதிமன்றில் விடுத்திருந்த கோரிக்கையை ஆராய்ந்த கோட்டை நீதவான் ரங்க திஸாநாயக்க இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

கட்டுபொத பிரதேசத்தில் வசிக்கும் சஹ்ரானின் மனைவியின் பெற்றோரை தவிர்த்து வேறு எந்த தரப்பினருக்கும் நீதிமன்ற அனுமதியின்றி சிறுமியை ஒப்படைக்க வேண்டாம் என நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

அதேபோல்,. நான்கு வயதுடைய சிறுமி தொடர்பில் உரிய கண்காணிப்பில் இருக்குமாறு குளியாப்பிட்டி சிறுவர் சீர்த்திருத்த அதிகாரிகளுக்கும் நீதவான் இதன்போது உத்தரவிட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

Read more...

கிளிநொச்சி மாவட்ட செயலகத்தை முற்றுகையிட்ட தமிழ் இளைஞர் யுவதிகள்!

இன்றைய தினம் கிளிநொச்சி மாவட்டச் செயலகத்திற்கு படையெடுத்து கிளிநொச்சி முல்லைத்தீவு இளைஞர்கள் யுவதிகள் வேலை வாய்ப்பினை பெற்றுக்கொள்வதற்காக பதிவுகளை மேற்கொண்டுள்ளனர்.தமிழ் அரசியல் பிரதிநிதிகளின் கையாலாகதனத்தால் வேலையற்றவர்களின் எண்ணிக்கை வடக்கில் நாளாந்தம் அதிகரித்து செல்கிறது.

வேலையற்ற இளைஞர் யுவதிகளுக்கு தொழில் வாய்ப்பினை பெற்றுக்கொடுப்பதற்கு தமிழ் மக்களின் பிரதிநிதிகள் எவ்வித நடவடிக்கையினையும் மேற்கொள்ளவில்லை எனவும் மாறாக அவர்கள் தங்களின் பிள்ளைகளுக்கு மத்திய வங்கியிலும், வெளிநாட்டு தூதரகங்களிலும் வேலைவாய்ப்பினை பெற்றுக்கொடுத்துள்ளனர் எனவும் தொழிற்சந்தையில் கலந்துகொண்டவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

கிளிநொச்சி,முல்லைத்தீவு மாவட்டங்களில் காணப்படும் தொழிலின்மை நிலையினை கருத்தில் எடுத்து இரண்டு மாவட்டங்களுக்குமான தொழிற்சந்தை ஒன்று இன்று(03-09-2019) கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்றது.

இன்று காலை ஒன்பது மணி முதல் பிற்பகல் இரண்டு மணி வரை இந் நிகழ்வு இடம்பெற்றது. மனித வலு வேலைவாய்ப்புத் திணைக்களம்,கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்ட செயலகங்கள் பிரதேச செயலகங்கள் இணைந்து இத் தொழிற் சந்தையினை நடாத்தியிருந்தனர்.

கிளிநொச்சி முல்லைத் தீவு மாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான இளைஞர் யுவதிகள் கலந்துகொண்டிருந்தனர். இதில் 40 க்கு மேற்பட்ட நிறுவனங்களும் பங்குபற்றியிருந்தன.

இலங்கையில் வறுமையில் கிளிநொச்சி மாவட்டம் முதலிடத்திலும், முல்லைத்தீவு மாவட்டம் இரண்டாம் இடத்திலு் காணப்படுகின்றன. இவ்விரு இரண்டு மாவட்டங்களிலும் வேலையில்லாப் பிரச்சினை அதிகளவில் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Read more...

கிளிநொச்சியில் கடும் வறட்சி 34785 ஆயிரம் போ் பாதிப்பு, பயன்தரு மரங்கள் அழிவு

கிளிநொச்சியில் ஏற்பட்டுள்ள கடும் வறட்சி காரணமாக பொது மக்கள் குடி நீர் தேவையை உள்ளிட்ட நீர்த் தேவையினை பூர்த்தி செய்துகொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளதோடு, பயன்தரும் மரங்களும் அழிவடைந்து வருகின்றன மாவட்டத்தில் 9933 குடும்பங்களைச் சேர்ந்த 34785 பேர் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது.

இதன்படி கண்டாவளை பிரதேசத்தில் 666 குடும்பங்களைச் சேர்ந்த 2533 பேரும், கரைச்சியில் 4145 குடும்பங்களைச் சேர்ந்த 14780 பேரும், பூநகரியில் 4185 குடும்பங்களைச் சேர்ந்த 14634 பேரும், பளையில் 937 குடும்பங்களைச் சேர்ந்த 2838 பேரும் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது.

அத்தோடு கால்நடைகளும் குடிநீரின்றி அலைவதனையும், பயன்தரு மரங்கள் நூற்றுக்கணக்கில் அழிவடைந்தும் காணக்கூடியதாக உள்ளது. கிளிநொச்சி மலையாளபுரத்தில் தனியார் காணி ஒன்றில் காய்க்கும் பருவத்தில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட தென்னைகள் வட்டுகள் சரிந்து வீழ்ந்துள்ளன. தங்களின் இந்த நிலைமையினை இதுவரை எந்த அதிகாரிகளும் வந்த பார்வையிடவி்லலை என காணி உரிமையாளர் கவலை தெரிவித்துள்ளார்.

இவ்வாறு மாவட்டத்தின் பல இடங்களில் தென்னைகள் உள்ளிட்ட மரங்கள் வறட்சியால் அழிந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. எனவே வருகின்ற சில மாதங்களுக்கு இந்த வறட்சியை எதிர்கொள்கின்ற அளவுக்கு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் பொது மக்கள் அதிகாரிகளிடம் கோரியுள்ளனர்.

Read more...

Monday, September 2, 2019

சரியான பதிலடியை, மக்கள் வழங்க வேண்டும் - சஜித்

எதிர்வரும் நவம்பர் மாதத்தில் உங்களுக்கான பலப்பரீட்சை, இந்த நாட்டை நடத்திச் செல்லக்கூடிய ஒருவரை தெரிவு செய்யக்கூடிய சந்தர்ப்பம் உங்களை நாடிவருகின்றது என அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

நாசகார செயல்களை செய்யும் கொலைகார கூட்டத்திற்கு சரியான பதிலடியை மக்கள் வழங்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.

மட்டக்களப்பு - மண்முனை, தாந்தாமலை, மாவடி முன்மாரி ஆகிய பகுதிகளில் அமைக்கப்பட்ட 269ஆவது, 270ஆவது வீடமைப்பு திட்டங்களை மக்களிடம் கையளிக்கும் நிகழ்வு இன்று நடைபெற்றுள்ளது.

இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில்,

நாங்கள் முதற்கட்டமாக இந்த மாத இறுதிக்குள் 2500 வீடுகளை கட்டி முடிப்பதற்கு திட்டமிட்டிருந்தோம். எமது நிறுவனத்திற்குள் காணப்படுகின்ற மிகவும் திறமையான அதிகாரிகள் அதனை ஜூலை மாதம் 15ஆம் திகதிக்கு முன்பதாகவே 2500 வீடுகளை ஆரம்பித்து முடித்துவிட்டார்கள் என்பதை மகிழ்ச்சியுடன் கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.

2025ஆம் ஆண்டிற்குள் 20000வீட்டுத் திட்டங்களை உருவாக்கி இந்நாட்டிலே வீடுகள் இல்லாது தவிக்கின்ற ஏழைகளுக்கு வழங்குவதற்கு நடவடிக்கைகளை மேற்கொள்வேன் என உறுதியளிக்கின்றேன்.

இந்நாட்டிலே கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கின்ற காட்டுமிராண்டித்தனங்கள், அத்துமீறல்கள் ஏழைகளின்பால் தொடுக்கப்பட்டிருக்கின்ற பிழையான செயற்பாடுகளை நாங்கள் கண்டறிந்தோம்.

இந்த நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு அலங்கரிக்கப்பட்டிருந்த பதாதைகளை கிழித்தெறிந்திருக்கின்றார்கள். என்னுடைய புகைப்படத்தைக்கூட கிழித்திருக்கின்றார்கள்.

நாங்கள் வந்தால் தேசிய பாதுகாப்பைத் தருவோம் என்கின்றார்கள். நாட்டைப் பாதுபாப்பதாக கூறுபவர்கள் செய்கின்ற வேலைகள் உங்களுக்குப் புரிகின்றதா? இந்தப் பகுதிக்கு வந்து நேற்று நள்ளிரவில் இதனை செய்திருக்கின்றார்கள்.

எனது முகத்தினை நீங்கள் கிழித்தெறியலாம். ஆனால் இந்தப் பகுதியிலுள்ள ஏழைமக்களின் பால் நான் கொண்ட மோகத்தையோ எனது செயற்பாடுகளையோ முடக்க முடியாது.

என்னுடைய புகைப்படங்களை கிழிப்பதனால் எனது பயணத்தை உங்களால் நிறுத்த முடியாது. ஏழை எளிய மக்களுக்காக பணி செய்பவன் சஜித் பிரேமதாச என்பதை நான் உங்களுக்கு கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.

இந்த நாசகரமான செயலை செய்தவர்கள் இந்தப் பகுதியில்தான் இருக்கின்றார்கள். இவர்கள் கடந்த காலங்களில் இந்தப் பகுதியில் வாழ்ந்த மக்களுக்கு இடையூறாக கூலிப்படையாக செயற்பட்ட கொலைகாரக் கூட்டமாகும். இந்த கொலைகாரக்கூட்டம் அனைத்து பாகங்களிலும் காணப்படுகின்றனர்.

அவர்களால் நாசகரமான செயல்களை மாத்திரம் செய்யமுடியுமே தவிர நல்ல செயல்களை செய்ய முடியாது.

எதிர்வரும் நவம்பர் மாதத்தில் உங்களுக்கான பலப்பரீட்சை,இந்த நாட்டை நடத்திச்செல்லக்கூடிய ஒருவரை தெரிவு செய்யக்கூடிய சந்தர்ப்பம் உங்களை நாடிவருகின்றது.

அதன் மூலம் நீங்கள் சரியான முடிவை எடுக்கும்பொழுது நாங்கள் சரியான முடிவை வழங்க இருக்கின்றோம். இப்படியான நாசகார செயல்களை செய்யும் கொலைகாரகூட்டத்திற்கு சரியான பதிலடியை தருவோம் எனத் தெரிவித்துள்ளார்.
(JM)

Read more...

செப்டம்பர் 15 இற்குப் பின்னர் தேர்தலுக்கான அறிவிப்பு வெளியிடப்படும்! - மகிந்த

எதிர்வரும் செப்டம்பர் மாதம் 15ஆம் திகதிக்குப் பின்னர் ஜனாதிபதித் தேர்தலுக்கான அறிவிப்பு வெளியிடப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

செப்டம்பர் 15ஆம் திகதிக்குப் பின்னர் ஜனாதிபதித் தேர்தல் அறிவிப்பை தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிடுவதற்கான சட்ட அங்கீகாரம் உள்ளது.

தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்ட நாளிலிருந்து 44 நாட்களுக்குப் பின்னரும்,65 நாட்களுக்கு உள்ளாகவும், ஒரு நாளில் தேர்தல் நடத்தப்படும்.

தேர்தலுக்கு முன்னர், தேர்தல் வன்முறைகளை தடுப்பது குறித்து நாடெங்கும் கருத்தரங்குகள் நடத்தப்படும்.

அதேவேளை, ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர், மாகாணசபைத் தேர்தல்களை நடத்துவதற்கு வாய்ப்பு இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Read more...

மாட்டுக்கூட்டங்களுக்குக் கூட தலைவன் உண்டு...ஆனால் சிங்களவர்களுக்கு மட்டும் தலைமைத்துவம் இல்லை....- ஞானசாரர்

இலங்கையை இன்னுமே வெள்ளையர்கள் ஆட்சி செய்வார்களாக இருந்தால், இந்நாட்டின் செல்வம் பிறநாடுகளுக்குச் செல்லாதிருந்திருக்கும் என பொதுபல சேனாவின் செயலாளர் நாயகம் கலகொட அத்தே ஞானசார தேரர் குறிப்பிட்டார்.

நாவலப்பிட்டி பவ்வாகம ஸ்ரீ தர்மராஜ மகா பிரிவினவில் நேற்று இடம்பெற்ற உபன்னியாச நிகழ்வின்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்:

கட்சிகளுக்குத் தலைவர்கள் இருந்தாலும் அந்தத் தலைவர்கள் எமது நாட்டின் வளங்களை பிற நாடுகளுக்கு தாரை வார்க்கவே செய்கிறார்கள். அந்தத் தலைவர்களினால் எமது நாட்டின் சமயம், மதம் மற்றும் கலாச்சாரம் - பண்பாடு என்ற அனைத்தும் முழுமையாக மாற்றமடைந்து ஒன்றுமே இல்லாதுள்ளது.

''48 காலப் பகுதியிலிருந்து இன்று வரை நாங்கள் முன்னேறிச் செல்லவில்லை. மாறாக பின்னடைவையே நாேக்கிச் செல்கிறோம். வெள்ளையர்கள் இருந்திருந்தால் மிகச் சிறப்பாக இருந்திருக்கும்.

வெள்ளையர்கள் இருக்கும்போது கொழும்புத் துறைமுகத்தின் தென்பகுதியை விற்கவில்லை.

துறைமுகத்தின் ஒரு பகுதி விற்கப்பட்டுள்ளது. ஆனால் பணமும் இல்லை அபிவிருத்தியும் இல்லை.

ஹம்பாந்தோட்டைத் துறைமுத்தை விற்றார்கள்.. பணமும் இல்லை.. செய்த காரியங்கள் ஏதுமில்லை...

வெள்ளையர்கள் இருந்திருந்தால் சிறப்பாக இருந்திருக்கும். அன்று இந்த வளங்கள் ஏதும் விற்கப்படவில்லையே...

போட்டி மனப்பான்மையே எங்கும் காணப்படுவதால் மனிதர்களிடமிருந்த மனிதாபிமானம் இல்லாதொழிந்தது...''

Read more...

ஜனாதபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவே என்பது உறுதி கட்சியே காலத்தை கடத்துகிறது -அஜித் பி. பெரேரா

ஐக்கிய தேசிய முன்னணியின் சார்பில் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தளில் அமைச்சர் சஜித் பிரேமதாசவை வேட்பாளராக களமிறக்குவதில் தாங்கள் உறுதியாக இருப்பதாகவும் வேட்பாளர் நியமனம் குறித்து தீர்மானம் எடுப்பதில் கட்சியே கால தாமதத்தை செய்கிறது

எது எவ்வாறாயினும் வேட்பாளர் விவகாரத்துக்கு மிக விரைவில் முடிவு கிட்டும் என்று தாங்கள் எதிர்பார்ப்பதாகவும் அமைச்சர் அஜித் பி. பெரேரா தெரிவித்தார்.

அமைச்சர் சஜித்துக்கான மக்கள் ஆதரவை திரட்டும் பணிகளின் தொடச்சியான பேரணியை எதிர்வரும் வியாழக்கிழமை குருணாகலையில் நடத்தவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் நியமனம் தொடர்பில் நிலைப்பாட்டை வினவியப் போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

Read more...

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மாலைதீவுக்கு பயணம்

மாலைதீவு ஜனாதிபதி இப்ராஹீம் மொஹமட் சோலியின் அழைப்பை ஏற்று மாலைதீவுக்கு மூன்று நாட்கள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு அங்கு சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது.

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இருந்து யூ.எல் - 101 விமானத்தில் பிரதமர் உள்ளிட்ட குழுவினர் இன்று (02) காலை புறப்பட்டுச்சென்றனர்.

மாலே சர்வதேச விமான நிலையத்தை சென்றடைந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு அந்நாட்டு வெளிவிவகார அமைச்சர் அப்துல்லா ஷாஹிட் சிறந்த வரவேற்பு அளித்தார்.

இதேவேளை, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் மாலைதீவு ஜனாதிபதி இப்ராஹீம் மொஹமட் சோலி ஆகியோருக்கு இடையில் இருதரப்பு பேச்சுவார்த்தை இடம்பெறவுள்ளது.

அத்துடன், இரு நாடுகளுக்கும் இடையிலான நான்கு ஒப்பந்தங்களும் கைச்சாத்திடப்படவுள்ளன.

பிரதமருடன், அமைச்சர்களான ரவூப் ஹக்கீம், தயா கமகே, அனோமா கமகே மற்றும் வஜிர அபேவர்தன ஆகியோர் சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read more...

சியோன் தேவாலய தற்கொலை குண்டுதாரியின் உடற்பாகங்கள் தோண்டி எடுக்கப்பட்டுள்ளன

மட்டக்களப்பு- கள்ளியன்காடு இந்து மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டிருந்த சீயோன் தேவாலையத்தில் தற்கொலை தாக்குதலை மேற்கொண்ட தற்கொலை தாரியின் தலை மற்றும் உடற்பாகங்கள் தோண்டி எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பரிவு தெரிவித்தது.

இன்று மட்டகளப்பு நீதிவான், சட்டவைத்தியர் மற்றும் குற்றப் புலனாய்வு பிரிவினரின் முன்னிலையில் தோண்டி எடுக்கப்பட்ட தற்கொலை தாரியின் உடற்பாகங்கள் மட்டக்களப்பு வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்ட நிலையில் , அவை தற்போது வைத்தியசாலையின் பிரேத அறையில் பொலிஸாரின் பாதுகாப்பிற்கு மத்தியில் வைக்கப்பட்டுள்ளன.

ஏப்ரல் 21 தாக்குதல்களின் போது மட்டகளப்பு சீயோன் தேவாலயத்தில் தற்கொலை தாக்குதலை மேற்கொண்டு உயிரிழந்த , தற்கொலை தாரியான மொஹமட் நசார் மொஹமட் அசாரின் தலை மற்றும் உடற்பாகங்கள் கடந்த மாதம் 26 ஆம் திகதி கள்ளியன்காடு இந்து மயானத்தில் புதைக்கப்பட்டதை தொடர்ந்து பிரதேசவாசிகளால் பாரிய எதிர்ப்புகள் தெரிவிக்கப்பட்டு வந்த நிலையிலே, இந்த உடற்பாகங்கள் இவ்வாறு மீண்டும் தோண்டி எடுக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் இவ்வாறு தோண்டி எடுக்கப்பட்ட உடற்பாகங்களை மட்டகளப்பு மாவட்ட செயலாளரின் ஆலோசனைக்கு அமைய , வேறொரு இடத்தில் அடக்கம் செய்ய நடவடிக்கை எடுப்பதாகவும் பொலிஸ் தலைமையகம் மேலும் தெரிவித்துள்ளது.

அதேவேளை தற்கொலை தாரியின் உடற்பாகங்களை இந்து மயானத்தில் புதைத்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்து மட்டகளப்பில் ஹர்தால் ஒன்றையும் மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டிருந்தது. பின்னர் குறித்த உடற்பாகங்களை தோண்டி எடுக்க மட்டகளப்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டதை தொடர்ந்து ஹர்தால் கைவிடப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Read more...

இரு T56 துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் இருவர் கைது

இரவு நேர ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்ட பொலிஸ் அதிகாரிகள் குழுவினர் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையில் மோட்டார் சைக்கிளில் சென்ற இருவரிடமிருந்து ரி56 வகை துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன.

கடந்த சனிக்கிழமை (31) இரவு 11.40 மணியளவில், குருணாகல், குடா கல்கமுவ வீதியில் கோவா கொட்டுவ சந்திக்கு அருகில் வைத்து, மோட்டார் சைக்கிளில் சென்ற இருவரை சோதனை செய்யப்பட்டுள்ளனர். இதன் போது மோட்டார் சைக்கிளை செலுத்திய நபர் அணிந்திருந்த ஜெகட்டினுள் (Jacket) இருந்து ரி56 வகை துப்பாக்கி ஒன்று மற்றும் 10 தோட்டாக்கள் கொண்ட அதற்கான மெகசின் ஒன்றையும் பொலிசார் மீட்டுள்ளனர்.

இதனையடுத்து பொலிஸார் குறித்த ஆயுதங்களுடன் இருவரையும் மோட்டார் சைக்கிளுடன் கைது செய்துள்ளனர்.

இதனையடுத்து நேற்று (01) பிற்பகல், வெடிபொருட்கள் தொடர்பில் பயிற்றப்பட்ட நாயை பயன்படுத்தி, குறித்த சந்தேகநபர்களின் வீடுகளை சோதனையிட்டபோது, மோட்டார்சைக்கிளை ஓட்டிச் சென்ற நபரின் வீட்டிலிருந்து மேலும் ஒரு ரி56 வகை துப்பாக்கி ஒன்றும் அதனை சுத்தப்படுத்தும் தொகுதியொன்றும், இத்தாலியில் தயாரிக்கப்பட்ட வாயு ரைபில் ஒன்றும், துப்பாக்கிகளுக்கு பயன்படுத்தப்படும் தூரநோக்கி ஒன்றும், 12 போர் துப்பாக்கிக்கு பயன்படுத்தப்படும் வெற்று தோட்டாக்கள் 06, இராணுவத்தினர் பயன்படுத்தும் உபரண பொதிகள் 02, ஹனஸ் தொகுதி 01, பெல்ட் ஓடர் 02, பூச்சஸ் 02, ஆயுத பட்டி 04, தண்ணீர் போத்தல் 02, ஹெல்மெட் 01, கறுப்பு இடுப்பு பட்டி 01, தொப்பி 01, காலுறை 01 டின், ஒயில் போத்தல் 01, பிஸ்டல் மெகசினை இடும் ஹோஸ்டர் 01, ரப்பர் முத்திரை 01, உபகரணங்களை இடும் பச்சை நிற பைகள் 02 ஆகியன மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

கைது செய்யப்பட்ட இருவரில் ஒருவர் இராணுவப் படைவீரர் என்பதோடு, மற்றைய நபர் இராணுவ சிவில் ஊழியர் எனவும் தெரியவந்துள்ளது.

மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்றவர், 46 வயதான, குலதுங்க முதியன்சலாகே துஷார சந்திமால் எனவும், இவர் தாஹிகமுவ, குருணாகல் பிரதேசத்தைச் சேர்ந்தவர் எனவும் அடையாளம் காணப்பட்டுள்ளார். குறித்த நபர், புத்தள இராணுவ முகாமில் கடமையாற்றும் இராணுவ சிப்பாய் ஆவார்.

குறித்த நபரின் வீட்டிலிருந்து ரி56 வகையிலான ஆயுதம், பகுதி வாயு துப்பாக்கி ரி56 ரவைகள் 10, மெகசின் ஒன்று, இராணுவச் சீருடைகள் உள்ளிட்ட ஒரு தொகை பொருட்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன.

மோட்டார் சைக்கிளின் பின்னாலிருந்து வந்த நபர், 37 வயதான, கருணாதிபதி தேவலாகே சமிந்த சிறிஜயலத் எனவும் இவர் குடா கல்கமுவ பிரதேசத்தைச் சேர்ந்தவர் எனவும் இவர் இராணுவ சிவில் ஊழியர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இவரது இல்லத்தை பொலிஸார் பரிசோதனை செய்த போது ரி56 வகையிலான துப்பாக்கியின் வெற்றுத் தோட்டாக்கள் 04, இத்தாலியில் உற்பத்தி செய்யப்பட்ட வாயுத் துப்பாக்கி மற்றும் இராணுவத்தினர் பயன்படுத்தும் உபகரணங்கள் அங்கிருந்து கைப்பற்றப்பட்டுள்ளது என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

நேற்றைய தினம் (01) குறித்த இருவரும் குருணால் நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டு 48 மணி நேரம் தடுத்து வைத்து விசாரணை செய்தவற்கான உத்தரவு பெறப்பட்டுள்ளதோடு, இன்றைய தினம் (02) மீண்டும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்திருந்தனர்.

சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் கபில அதிகாரியின் நடவடிக்கையின் மூலம் குற்ற விசாரணையிப் பிரிவின் தற்காலிப் பொறுப்பதிகாரி சுஜீவ சமன்த தலைமையில் பொலிஸ் அதிகாரிகளான சேனாநாயக, துசாந்த, ரசிக, காரிப்பெருவ, விஜயவர்தன ஆகியோர்கள் சந்தேகநபர்களுடன் ஆயுதப் பொருட்களை கைது செய்துள்ளனர்.

Read more...

ஒரு பரசூட் வீரரின், மரண பாய்ச்சல்..

20ம் திகதி நேரம் காலை 7.45. அம்பாறை உகனை விமான படை ஒடுதளத்திலிருந்து மேலேழும்பிய வை 12விமானத்தில் பரசூட் வீரர்கள் சிலர் பயணித்தார்கள். அது வானில் சாகசமிடும் சீ ஆர் டபிள்யூ என்னும் பரசூட் பயிற்சி பெறும் அணியாகும். பயிற்சி ஆலோசகர் இராணுவ விசேட அதிரடி படையணியின் அதிகாரம் பெற்ற அதிகாரி சம்பிக்க குமாரசிறி.

நிலத்திலிருந்து பத்தாயிரம் அடி உயரத்தில் விமானம் பறக்ைகயில் அந்த அதிகாரி விமானத்திலிருந்து குதித்துள்ளார். நடந்தது என்னவென்று யாரும் அறிந்து கொள்வதற்கு முன்னரேயே அவர் நிலத்தில் மோதி விழுந்தார்! பரசூட்டில் பாயும் போது, குமாரசிறியிடம் பயிற்சி பெற்றுக் கொண்டிருந்த கமாண்டோ படையணியின் கோப்ரல் சுதேஷ் குமாரவின் பரசூட்டும் குமாரசிறியின் பரசூட்டும் ஒன்றுடன் ஒன்று சிக்கிக் கொண்டுள்ளன. இது பற்றி சிறிதளவாவது சொல்லத் கூடியவர் சுதேஷ் மாத்திரமே.

“அன்று நாம் பன்னிரெண்டு பேர் ஜம்ப் பண்ணச் சென்றோம். முதலில் நான்கு பேர் குதித்தார்கள். அதன் பின்னர் என் முறை. பின்னர் குமாரசிறி சேர் குதித்தார். அவர் தான் அதிக அனுபவம் வாய்ந்த ஜம்பர்! பாய்ந்த இரண்டு விநாடிகளில் பரசூட்டை விடுவிக்கும்படி என்னிடம் கூறினார். அவர் ஒரு விநாடியில் விடுவிப்பதாகக் கூறினார்.

பின்னர் நாம் இருவரும் வானில் சாகசம் செய்யத் தயாராகும். அவ்வேளையில் குமாரசிறி சேரின் பரசூட்டும் எனது பரசூட்டும் ஒன்றுடன் ஒன்று பின்னிக் கொண்டன.

அப்போது அவர் “சுதேஷ், பதற்றப்படாமல் இரு. நான் ஏதாவது செய்கின்றேன்” என்று கூறினார். திடீரென சேரின் பரசூட் கயிறு எனது உடம்பில் சிக்கி கழுத்தை இறுக்கியது. சேர் எனக்கு பின்னால் இருந்தார். நான் சேர் சேர் எனக் கத்தினேன். ஆனால் அவர் எதுவும் கூறவில்லை. ஒன்றரை விநாடிகள் நாம் சிக்கியிருந்தோம். சேரிடமிருந்து எந்தவொரு பதிலும் அவ்வேளையில் கிடைக்காததால் பரசூட் பயிற்சியில் வழங்கப்படும், அறிவுரைபின்படி நான் செயல்பட்டேன்.” என்று அன்றைய சம்பவத்தை சுதேஷ் விவரிக்கிறார்.

அவ்வாறான சந்தர்ப்பங்களில் பரசூட் வீரர்கள் செய்வது என்னவென்றால் சிக்கியுள்ள கயிறை வெட்டிவிடுவதாகும். அதனால் சுதேஷ் அந்த முறையை பின்பற்றி தன்னிடமிருந்த கத்தியால் சிக்கியிருந்த குமாரசிறியின் இரண்டு கயிறுகளை வெட்டி தன்னை விடுவித்துக் கொண்டார்.

அப்போது குமாரசிறி விரிந்த பரசூட்டுடன் கீழே சாதாரண பரசூட் வீரரைப் போலே விழுந்துள்ளார். ஆனால் அவரிடமிருந்த பரசூட்டை கட்டுப்படுத்தும் திறன் காணப்படவில்லை. அவர் கட்டுப்பாடின்றி பரசூட்டுடன் கீழேவிழுவதை கீழே நின்றிருந்த பரசூட் வீரர்கள் கண்டுள்ளார்கள்.

விமானப்படை முகாமின் கீழிறங்க வேண்டிய வலயத்தைவிட்டு காட்டுப்பகுதியிலேயே குமாரசிறி பரசூட்டுடன் விழுந்து கிடந்துள்ளார். அவரின் உடம்பின் வெளிபுறத்தில் எவ்வித பாதிப்பும் இருக்கவில்லை. ஆனால் அவர் மரணித்துக் கிடந்தார்.

உண்மையில் அவருக்கு நடந்ததென்ன? இந்நாட்டின் அனுபவம் வாய்ந்த பரசூட் வீரரான மேஜர் ஜெனரல் நிர்மால் தர்மரத்ன என்ன கூறுகிறார் என்று பார்ப்போம். குமாரசிறி எம்மிடையே இருந்து திறமையான பரசூட் வீரர்.

இச் சம்பவம் நடைபெறுவதற்கு சில நாட்களுக்கு முன் அம்பாறையில் நானும் குமாரசிறியும் ஜம்ப் செய்து வானத்தில் சாகசம் செய்தோம். சீ.ஆர்.டபிள்யூ என்பது அவதானம் மிகுந்த வேலையாகும். பரசூட் விரிந்திருக்கும் வேளையில் ஒருவரையொருவர் பிடிக்க முனையும் போது பரசூட் சிக்கிக்கொள்ளும், ஆனால் அனுபவமுள்ளவர்கள் அந்த சிக்கலை கவனமாக விடுத்துக்கொள்வார்கள். அந்த நம்பிக்கையில் தான் குமாரசிறி சீ.ஆர். டபிள்யூ பாய்ச்சலுக்கு புதியவரான கோப்ரலை அமைதியாக இருக்குமாறு கூறியுள்ளார். ஆனால் என்ன நடந்தது என்று எண்ணவே முடியாமலுள்ளது.

இந்த பரசூட்டில் ஒரு லைனில் (கயிறில்) மேலே அதிகளவு வலு இருக்கும். சாதாரணமாக கழுத்தில் சிக்கினால் மிகவும் ஆபத்தாகும். அவ்வாறான சம்பவம் தான் குமாரிசிறிக்கு ஏற்பட்டுள்ளது. சில மாதங்களுக்கு முன்னரும் எம்மிடையே உள்ள அனுபவம் வாய்ந்த இருவர் சிக்கிக் கொண்டார்கள். ஆனால் இருவரும் பின்னர் பரசூட் இரண்டையும் கட்வே (கட்வே என்பது திறந்தபடியுள்ள பரசூட்டை கழற்றி விட்டு மேலதிக பரசூட்டை திறப்பது) செய்தார்கள். குமாரிசிறியும் பரசூட்டை கட்வே செய்துள்ளார். கழுத்தில் சுற்றியிருந்ததால் பரசூட் கழன்று செல்லவில்லை என்று எண்ணலாம்.

680 பரசூட் பாய்ச்சலை நடத்தியுள்ள இராணுவத்தின் 3ஆவது விசேட படையணியின் அதிகாரம் பெற்ற அதிகாரியான சம்பிக்க குமாரசிறி விசேட படையணியிலுள்ள பரசூட் வீரர்களில் அதிகளவு பாய்ச்சலை நிகழ்த்திய வீரர் எனப் பெயர் பெற்றவர்.

2010ம் ஆண்டு விமானப்படையிலுள்ள சிறந்த பரசூட்காரரான ஓய்வுபெற்ற விங் கமாண்டர் ஹரிஸ்சந்திர ஹேரத்தின் கண்காணிப்பில் குமாரசிறி கட்டுநாயக்கவில் பரசூட் வீரராக பயிற்சி பெற்றுள்ளார். ப்ரீஸ்டைல் பரசூட்காரரொருவர் செய்யும் சீ.ஆர்.டபிள்யூ விங்சூட் போன்ற அனைத்து பாய்ச்சல்களிலும் நிபுணரான குமாரசிறி, மிகப்பயங்கரமான பரசூட் பாய்ச்சலான பேஸ் ஐம்ப் பாய்ச்சல் புரியும் மூவரில் ஒருவர்.

இரண்டு வருடங்களுக்கு முன்னர் சம்பிக்க குமாரசிறி பரசூட் வாழ்க்கையின் அனுபவங்கள் பற்றி பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்:

“பேஸ் ஜம்ப் பாய்ச்சல் என்பது புதுமையான அனுபவம். கண்ணிமைக்கும் நேரத்தில் கீழே இருப்போம். நான் ஒஸ்ரியாவில் கன்பனாரில் அதிவேகப் பாதையிலுள்ள பாலமொன்றின் மீதிருந்தே பாய்ந்து பயிற்சி பெற்றேன். இத்தாலியில் ‘ஆர்கோ’ என்னும் பிரதேசத்திலுள்ள மலை மீதிருந்தே பாய்ந்தேன். 2500அடி உயரத்திலிருந்து கற்பாறையின் மேலேயே பரசூட் மூலம் இறங்கினேன். அந்த இடம் முடிவே தெரியாத இடமாக காணப்பட்டது. கொஞ்சம் தவறினாலும் உயிர் போய் விடும்.” அன்று அவ்வாறு அவர் கூறினாலும் அந்த தவறு தன்கையால் இடம்பெறுமென்று ஒரு போதும் அவர் எண்ணியிருந்த மாட்டார்.

முப்படைகளில் பணிபுரியும் நான்கு சகோதர சகோதரிகளை கொண்ட குடும்பத்தின் மூத்த புதல்வர். வீர அன்னையாக அரச விருது பெற்ற குமாரசிறியின் தாயார் மகனின் உடலருகே கண்ணீரும் கம்பலையுமாக அமர்ந்திருந்தார். அவரால் பேசக் கூட முடியவில்லை.

“எனது கணவர் பாம்பு தீண்டி இறக்கும் போது, எனது மகனுக்கு 17வயது. மகன்தான் வயல் வேலை, கூலி வேலை செய்து முழு குடும்பத்தையுமே காப்பாற்றினான். அதன் பின்னர் இராணுவத்தில் இணைந்து கொண்டான்.” இரண்டு வருடங்களுக்கு முன்னர் இராணுவ சேவையிலிருந்து விருப்ப ஓய்வு பெறும் சந்தர்ப்பம் கிடைத்தும் திறமையான பரசூட் வீரர் என்பதால் அவர் பரசூட் அணியின் அத்தியாவசியமான வீரராக இருந்தான். அதனால் அவர் தொடர்ந்தும் இராணுவ சேவையில் ஈடுபட வேண்டிய சந்தர்ப்பம் ஏற்பட்டது. மாத்தறை, கம்புறுபிட்டிய, புகுள்வெல்ல என்ற இடத்தில் வசித்தவரான 42வயதுடைய குமாரசிறி, இரண்டு பிள்ளைகளின் தந்தையாவார். அவரது மனைவி நிரோஷா பிரியர்தர்சனி தற்போது மூன்றாவது குழந்தைக்கு தாயாகவுள்ளார்.

பரசூட்டில் குதித்து மக்களை மகிழ்ச்சிப்படுத்திய இலங்கை பரசூட் அணியில் சிறப்பாக சேவை புரிந்த திறமையான ஒரு வீரரை நாம் இழந்திருக்கிறோம்.

அமில மலவிசூரிய
தமிழில்: வீ. ஆர். வயலட்.

Read more...

மனித உரிமைகள் ஆணையாளருக்கு எதிராக ஐ.நா வில் முறையிடுகின்றது உலக இலங்கையர் பேரவை.

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையின் தலைவர் மிகைல் பக்லட் இலங்கையின் இறையாண்மையை நிராகதித்து உள்நாட்டு விவகாரங்களில் தலையிடுவதாக உலக இலங்கையர் பேரவை ஐ.நா சபையின் செயலாளர் நாயகம் அந்தோணியோ குட்ரெரஸ் இடம் முறையிட்டுள்ளது.

இலங்கையின் இராணுவத் தளபதி நியமன விடயத்தில் நேரடியாக மனித உரிமைகள் பேரவையின் தலைவர் தலையிட்டுள்ளதாகவும் அச்செயற்பாடான ஐக்கிய நாடுகள் சபையின் செயற்திட்டத்திற்கும் கொள்கைகளுக்கும் முரணானது என்றும் முறைப்பாட்டில் குறிப்பிட்டுள்ளது.

அத்துடன் மனித உரிமைகள் பேரவையினால் இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்பட்ட தீர்மானத்திற்கு இலங்கையின் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் இணை அனுசரணை வழங்கியமையானது இலங்கையின் நீதிக்கு முரணானது என்றும் அவ்வாறு இணை அனுசரணை வழங்குவதாயின் அதற்கு நாட்டின் ஜனாதிபதியே கையொப்பம் இடவேண்டும் என்றும் குறித்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read more...

பேராசிரியர் காலோ பொன்சேகா காலமானார். உடல் ராகம மருத்துவ பீடத்திற்கு.

புகழ்பெற்ற மருத்துவரும் மருத்துவப் பேராசிரியருமான காலோ பொன்சேகா அவர்கள் தனது 86 வது வயதில் இன்று நண்பகல் அன்னாரில் வீட்டில் வைத்து மரணமடைந்துள்ளார்.

அன்னாரது உடலம் அவரின் விருப்பிற்கிணங்க இறுதி மரியாதைகளின் பின்னர் ராகம மருத்துவ பீடத்திடம் கையளிக்கப்படும் என குடும்பத்தினர் அறிவித்துள்ளனர்.

களனி பல்கலைக் கழகத்தின் மருத்துவபீடத்தின் பீடாதிபதியாக செயற்பட்ட அவர் இலங்கை வைத்திய சபையின் தலைவராகவும் செயற்பட்டுள்ளார்.

ட்ரொக்சிய வாதியான பேராசிரியர் லங்கா சம சாமாஜ கட்சியின் ஊடாக தீவிர அரசியலில் ஈடுபட்டதுடன் அக்கட்சியின் மத்திய குழு உறுப்பினரும் ஆவார்.

இலங்கையில் தனியார் மருத்துவக்கல்லூரிகளுக்கு எதிரான திடமான கொள்ளை கொண்டிருந்த பேராசிரியர் காலோ பொன்சேகா 1980 களில் இதற்கு எதிராக பெருமெடுப்பிலான போராட்டங்களில் ஈடுபட்டவர்.

மருத்துவ துறையிலன்றி கலைத்துறையிலும் மிகுந்த ஆர்வம் காட்டிய அவர் ஓர் இசையமைப்பாளர் என்பதுடன் பல்வேறு பாடல்களுக்கு இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Read more...
Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com