Saturday, March 9, 2019

இலங்கைத் தேயிலைக்கு, ஆப்கானிஸ்தானில் அதிக கிராக்கி நிலவுகிறது - ஆப்கானிஸ்தான் தூதுவர்

இலங்கை அரசாங்கத்துடனும், தனியார் துறையினருடனும் அதிக வர்த்தக ஒத்துழைப்புக்களை கட்டியெழுப்ப ஆப்கானிஸ்தான் தயாராக இருப்பதாக, இலங்கைக்கான ஆப்கானிஸ்தான் தூதுவர் தெரிவித்துள்ளார்.

இதற்காக இலங்கையுடன் சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை கைச்சாத்திட எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஆப்கானிஸ்தான் இதுவரையும் எந்தவொரு நாட்டுடனும் இவ்வாறு ஒப்பந்தம் மேற்கொள்ளவில்லை.

இந்த நிலையில், இரு நாட்டு ராஜதந்திர உறவுகள், சிறந்த தேயிலை வர்த்தக கொடுக்கல் வாங்கலினால் நீண்டகாலம் நிலைத்திருக்கும் என்று தூதுவர் தெரிவித்தார். அத்துடன் இலங்கைத் தேயிலைக்கு ஆப்கானிஸ்தானில் அதிக கிராக்கி நிலவுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Read more...

வரலாற்று பாடங்களை கற்றுக்கொண்டு, சமூகத்தை வெற்றி கொள்ள வேண்டும் - சஜித் பிரேமதாஸ

வரலாற்று பாடங்களை கற்று, அதன் அனுபவங்களை கொண்டு அரசியல், பொருளாதாரம் மற்றும் சமூகத்தை வெற்றி கொள்ள அனைவரும் செயற்பட வேண்டும் என அமைச்சர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் வலிகாமம் மேற்கில் அமைக்கப்பட்டுள்ள பொன்னொளி நகர் வீட்டுத்திட்டத்தை மக்கள் பாவனைக்கு கையளிக்கும் நிகழ்வு நேற்று இடம்பெற்றது.

இதன்போது அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 66 வீடுகளை கொண்ட இந்த மாதிரி கிராமத்திற்காக 623 இலட்சம் ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. இது அரசாங்கத்தின் 176வது மாதிரி கிராமமாகும்.

இதேவேளை மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏறாவூர்பற்று சவுக்கடியில் நிர்மாணிக்கப்பட்டுள்ள கற்பகத்தரு, நெய்தல் கிராமங்கள் இன்று அமைச்சர் சஜித் பிரேமதாஸவினால் திறந்து வைக்கப்படவுள்ளன. இவை அரசாங்கம் முன்னெடுக்கும் கம் உதாவ - அனைவருக்கும் வீடு என்ற வேலைத்திட்டத்தின் 177 மற்றும் 178 ஆவது மாதிரிக் கிராமங்களாகும். இரு கிராமங்களிலும் 50 வீடுகள் அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read more...

அசுத்தமான தேங்காய் எண்ணெயை உற்பத்தி செய்யும் இடங்கள் குறித்து முறையிட, விசேட தொலைபேசி இலக்கங்கள் அறிமுகம்

தேங்காய் எண்ணெயின் தரம் தொடர்பில் சான்றிதழை விநியோகிக்க தெங்கு அபிவிருத்தி அதிகார சபை நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்கீழ், ஆய்வுகூட பரிசோதனைகளுக்கு அமைய தரமான தேங்காய் எண்ணெய்க்காக முத்திரை ஒட்டப்படவுள்ளது.

தேங்காய் எண்ணெய் தொழில்துறையை மேம்படுத்தும் நோக்கில் இந்த வேலைத்திட்டத்தை தெங்கு அபிவிருத்தி சபை மேற்கொள்வதாக அதிகார சபையின் தலைவர் உதய ரூபசிங்க தெரிவித்தார்.

அத்துடன் அசுத்தமான தேங்காய் எண்ணெய்யை உற்பத்தி செய்யும் இடங்கள் தொடர்பில் 0112 50 25 01 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அறிவிக்க முடியும் என அவர் குறிப்பிட்டார். அவ்வாறான உற்பத்திகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

அத்துடன் மனித நுகர்வுக்கு பொருத்தமல்லாத தேங்காய் எண்ணெயை விற்பனை செய்த 60 பேருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். பண்டிகை காலத்தை முன்னிட்டு நாடாளவிய ரீதியில் விசேட சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அதிகார சபையின் தலைவர் மேலும் கூறினார்.

Read more...

மன்னாரில் 1000 கிலோகிராமிற்கும் அதிகமான பீடி இலைகள் மீட்பு

மன்னார் பேசாலை பிரதேசத்தில் நேற்று மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின் போது ஆயிரம் கிலோகிராமிற்கும் அதிகமான பீடி இலைகள் மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.

கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் சுமார் ஆயிரத்து 400 கிலோகிராம் பீடி இலைகள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டிருந்தன. இவை பொதிகளாக இந்தியாவில் இருந்து இலங்கைக்கு கொண்டு வரப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

இதனை அடுத்து சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மன்னார் காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

Read more...

போதைப்பொருள் ஒழிப்புக்காக, ஏப்ரல் மூன்றாம் திகதியின் பின்னர், பலமான பங்களிப்புக்கள் கிடைக்கும் - ஜனாதிபதி

போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் கட்டுப்படுத்தல் நடவடிக்கைகளுக்காக முன்னெடுக்கப்படும் நிகழ்ச்சித்திட்டங்களுக்கு எதிர்வரும் ஏப்ரல் மூன்றாம் திகதியின் பின்னர் பொலிஸாருடன் முப்படையினரும் பலமான பங்களிப்புகளை வழங்கவுள்ளதாக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார்.

ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற ஆளுநர்களுடனான சந்திப்பின் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார். போதைப்பொருள் பாவனையிலிருந்து இளம் தலைமுறையினரை பாதுகாப்பதற்காக எதிர்காலத்தில் நடைமுறைப்படுத்தப்படவுள்ள ''சுஜாத தருவோ'' என்ற கண்ணியமான பிள்ளைகள் நிகழ்ச்சித்திட்டம் பற்றியும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.

கல்வி, சுகாதாரம், பொதுநிர்வாகம், விளையாட்டுத்துறை உள்ளிட்ட அரசாங்கத்தின் முக்கிய அமைச்சுக்கள் மற்றும் நிறுவனங்களின் உதவியையும் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளுக்கு பெற்றுக்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கவுள்ளதாக ஜனாதிபதி இதன்போது தெரிவித்தார்.

போதைப்பொருள் ஒழிப்பு நிகழ்ச்சித்திட்டத்தின் முக்கியமானதொரு நிகழ்ச்சித்திட்டமாக போதைப்பொருட்களுக்கு எதிராக முழு நாடும் உறுதிமொழி எடுக்கும் நிகழ்வு எதிர்வரும் ஏப்ரல் மூன்றாம் திகதி காலை 08 மணிக்கு இடம்பெறவுள்ளது.

அனைத்து பாடசாலை பிள்ளைகள் தமது பாடசாலைகளிலும், அரச ஊழியர்கள் தங்களது சேவை நிலையங்களிலும் உறுதிமொழி எடுக்கவுள்ள இந்த நிகழ்வை முன்னிட்டு, கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் இடம்பெறும் நிகழ்வில் கலந்துகொள்ளுமாறு கட்சி பேதமின்றி பிரதமர், எதிர்க் கட்சித் தலைவர் உள்ளிட்ட அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு தான் அழைப்பு விடுப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதன்போது தெரிவித்தார்.

Read more...

படைப்புழுவால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு, நட்டஈடு வழங்கும் வேலைத்திட்டம் நாளை ஆரம்பம்.

படைப்புழு தாக்கத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நட்ட ஈடு வழங்கும் முதல் கட்ட வேலைத்திட்டம் நாளை அம்பாறையில் ஆரம்பமாகவுள்ளது. அம்பாறை மாவட்ட செயலாளர் அலுவலகத்தில் இந்த நிகழ்வு இடம்பெறும்.

முழுமையாக பாதிக்கப்பட்ட 307 விவசாயிகளுகளுக்கு இதன்போது நட்டஈடு வழங்கப்படவுள்ளது. பாதிப்புக்குள்ளான ஒரு ஏக்கருக்கு 40 ஆயிரம் ரூபா வீதம் நட்டஈடு வழங்கப்படவுள்ளது.

இதற்காக 16 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. விவசாய காப்பறுதி சபை, விவசாய திணைக்களம், விவசாய அபிவிருத்தி திணைக்களம் என்பன இணைந்து இதனை முன்னெடுக்கின்றன. இந்த வேலைத்திட்டத்தின் முதற்கட்டமாக அம்பாறை, அனுராதபுரம், மொனராகலை மாவட்ட விவசாயிகளுக்கு நட்டஈடு வழங்கப்பட்வுள்ளது. இதற்காக 250 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த வேலைத்திட்டத்தின் மூலம், படைப்புழுவால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் நன்மை அடைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

Read more...

Friday, March 8, 2019

கொன்று வீசப்பட்ட ஈழத்து பெண் ஆளுமைகள்- எழுகதிரோன்

சர்வதேச பெண்கள் தினத்தில் ஈழம் இழந்துபோன பெண் ஆளுமைகள் பற்றிய சில நினைவுகள் வந்து செல்கின்றன. அவர்களில் ராஜனி திரணகம, செல்வி, சிவரமணி, சரோஜினி யோகேஸ்வரன், மகேஸ்வரி வேலாயுதம், ரேலங்கி செல்வராஜா..... ...... என்று நீண்டதொரு பட்டியலுக்கு நாம் சொந்தகாரர்களாயுள்ளோம். இந்த இழப்புகள் இயற் கையில் வந்தவையல்ல. தவிர்த்திருக்க முடியாதவையுமல்ல. ஆனால் கடந்த காலத்தில் இலங்கையில் கோலோச்சிய வன்முறை சூழலும் அதன் மீதான கண்மூடித்தனமான வழிபாட்டு கலாசாரமுமே நாம் இழந்துபோன இந்த ஆளுமைகளை தீர்த்து கட்டியிருந்தது. இன்று பெண்களை பாதுகாப்போம், பெண்களை மீட்டெடுப்போம், பெண்களுக்கு சுதந்திரம் வழங்குவோம் என்று நாம் ஒவ்வொருவரும் கோசங்களை உச்சரித்துக்கொண்டிருக்கிறோம். ஆனால் எம்மால் பல பெண் ஆளுமைகளின் இருப்புகளை கடந்த காலங்களில் காப்பாற்ற முடியவில்லை.எமது சமூகத்தை வழிநடத்தும் மிகப்பெரும் திறமைகளை தன்னகத்தே கொண்டிருந்த அந்த பெண்களை இன்று நாம் இழந்து நிற்கின்றோம். அதன் பிரதிபலனானாகவே எமது பெண்சமூகம் இன்று மீளமுடியாத அகலபாதாலத்துக்கு சென்று கொண் டிருக்கிறது எனலாம்.

ராஜினி திரணகம

இலங்கையில் எழுத்துக்காக கொல்லப்பட்ட முதல் பெண்.யாழ்ப்பாண பல்கலை கழகத்தின் உடல்கூற்றியல் விரிவுரையாளராக கடமை´யாற்றியவர். சமூகம் சார் சிந்தனையை மாணவர்களிடையே உருவாக்க வேண்டுமென்பதில் தீராது அக்கறையுடன் செயல்பட்டவர். அவர் பற்றி அவரது மாணவனொருவர் பின்வருமாறு எழுதுகிறார்.

"அவர் வெறும் உடற்கூற்றியல் விரிவுரையாளராக மட்டும் இருக்கவில்லை. அவரின் வகுப்புகள் எப்போதும் மிக உற்சாகம் நிறைந்ததாகவே இருக்கும். தனது அன்றாட விரிவுரைகளுக்கு அப்பால் எமது சமூகப் பிரைச்சினைகளைப் பற்றி சிந்திக்கும் திசையிலும் மாணவர்களை மிகத் திறமையாக அவர் எடுத்து செல்வார். அப்போது அவரின் பரந்த அறிவையும் ஆழமான சமூக உணர்வையும் நாம் கண்டோம். எமக்கு அவற்றை புரிய வைப்பதற்காக சிறந்த திரைப்படங்கள் நாவல்கள் அவர் படித்து ரசித்த கவிதைகள் பலரின் உலக அனுபவங்கள் என சகலவற்றையும் எந்தவித தடங்கலும் இன்றி மள மளவென எம்முன் எடுத்துச் சொல்வார்".

தமிழீழ விடுதலைபோராட்டத்தின் தோல்வியை முன்னறிவித்த "முறிந்த பனை" என்னும் வரலாற்றுதொகுப்பின் ஆசிரியர்களில் ஒருவராக பணியாற்றியவர். புலிகளின் உளவுப்பிரிவில் பணியாற்றிய வரும் கொலையாளியுமான பொஸ்கோ என்பவனின் கரங்களால் 1989 செப்டெம்பர் 21ம் திகதியன்று யாழ் பல்கலைகழக வளாகத்தில் 2வது எம்.பீ.பீ.எஸ் பரீட்சையின் இறுதி அங்கம் முடிவடைந்து வெளியே வரும் போது சுட்டுகொல்லபட்டார்.அவரை சைக்கிளில் பின் தொடர்ந்த கொலையாளி அவரது தலையின் வலப்பக்கத்தில் முதல் வேட்டைத் தீர்த்தான். பின்னர் அவர் கீழே விழுந்ததும் இன்னும் இரண்டு தடவைகள் அவர் தலையில் சுட்டுவிட்டுச் சென்றான். கொல்லப்பட்ட மறுதினம் அவரின் உடல் மருத்துவ பீடத்திற்கு கொண்டு வரப்பட்ட பொழுது யாழ். பல்கலைக்கழகத்தின் பல மூத்த விரிவுரையாளர்கள் அங்கு சமூகமளிக்கவில்லை. ஏன்..? காரணம் அவர்களுக்கும் இக்கொலையை செய்த வர்கள் யார் என்று நன்றாக தெரியும். ஆனால் அனைவரும் மௌனம் காத்தனர்.

கவிஞை செல்வி


பெண்ணியவாதியான இவர் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் நாடகமும் அரங்கியலும் எனும் துறையின் இறுதியாண்டு மாணவி.தோழி இதழின் ஆசிரியராக இயங்கியவர்.தனது கல்வி செயற்பாடுகளுக்கு அப்பால் சமூகம் சார்ந்து தீராது உழைத்தவர். யாழ்ப்பாண பெண்கள் ஆய்வுவட்டம், பூரணி பெண்கள் நிலையம் என்று பலவிதத்திலும் பெண்களின் மேம்பாட்டுக்காக அயராது பாடுபட்டவர். 1991ம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் புலிகளால் கடத்தப்பட்ட இவரை விடுவிக்க கோரி சர்வதேச மனித உரிமை அமைப்பு பலவாறு முயன்றது. தனது இதழான Focus செல்வியைப் பற்றி 1994ம் ஆண்டு மார்ச் இதழில் விடுதலையைக் கோரி எழுதியது. புலிகள் எதற்கும் செவி சாய்க்கவில்லை. இந்த இக்கட்டான காலகட்டத்தில்தான் உலகப் புகழ்பெற்ற ‘Poetry International Award’ கவிதைக்கான சர்வதேச விருது ((Poets Essayists and Novelists) PENஅமைப்பினால் செல்விக்கு வழங்கப்பட்டது. இவ் விருதானது தங்களுடைய நம்பிக்கைகளுக்காகவும் இலட்சியத் திற்காகவும் எழுத்துத் தளத்திலும் கலைத்தளத்திலும் படைப்புக்களை உருவாக்கியவர்களுக்கு வழங்கப்படுவதாகும். செல்வி ஈழத்தின் நெருக்க டியான போராட்ட வழ்நிலையில் இத்துறைகளில் சேவை புரிந்தமைக்காக இவ்விருது வழங்க ப்பட்டது. இவரை புலிகள் இறுதிவரை விடுதலை செய்யவேயில்லை.

சரோஜினி யோகேஸ்வரன்

1997 ஆம் ஆண்டில் இவர் யாழ்ப்பாண நகர முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். சரோஜினி இலங்கைத் தமிழ் அரசியல்வாதியும், தமிழர் விடுதலைக் கூட்டணி உறுப்பினரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வெ. யோகேஸ்வரனின் மனைவியும் ஆவார். திருமதி யோகேஸ்வரன் 1998 மே 17 ஆம் நாள் யாழ்ப்பாணத்தில் உள்ள அவரது வீட்டில் வைத்து புலிகளால் ஐந்து முறை துப்பாக்கியால் சுடப்பட்டு மருத்துவ மனைக்குக் கொண்டு செல்லப்படும் வழியில் மரணமானார். தமிழீழ விடுதலைப் புலிகள் இவரது கணவர் வெ. யோகேசுவரனை 1987 ஆம் ஆண்டில் கொழும்பில் வைத்து சுட்டுக் கொன்றனர். இன்று யாழ்மாநகர சபையும் வட மாகாண சபையும் ஒரு ஜனநாயக சூழலுக்குள் இயங்குவதற்கு உரமாக தன்னுயிரை தந்தவர்.

சிவரமணி
இவ்வுலகில் வாழமுடியாது தன்னைத் தானே மாய்த்துக்கொண்டவர். எமது தமிழ் சூழலின் ஆணாதிக்க வெறிகளும் வன்முறை கலாச்சாரமும் இவரது தற்கொலைக்கு காரணமாயின. 1991 மே மாதம் இவர் சிறுவயதில் இறந்து போனாலும் அவரது கவிதைகள் இன்றைய பெண்ணிய கவிதைகளின் மூலவேர்களாக இன்றுவரை ஜீவிக்கின்றன.

மகேஸ்வரி வேலாயுதம்

1983 ன் பின்னர் இனக்கலவரங்களால் பாதிக்கப்பட்டு இந்தியாவுக்கு ஓடிச்சென்ற தமிழ் மக்களுக்கு ஒரு கலங்கரை விளக் கமாக நின்று உதவிகரம் நீட்டியவர். அகதிகளின் வாழ்வில் ஓடியோடி பங்கெடுத்து அயராது உழைத்தவர். நமது முதலமைச்சர் விக்கினேஸ்வரன் ஸ்ரீலங்கா அரசின் விசுவாசமான ஊழியனாய் உச்சநீதிமன்றில் இருந்துகொண்டு இருந்து எமது இளைஞர்களுக்கு ஐந்துவருடம் பத்து வருடம் என்று சிறைவாச சாபம் கொண்டி ருந்த வேளைகளில் இலங்கை சிறைகளில் வாடிய ஆயிர கணக்கான தமிழ் அரசியல் கைதிகளுக்கு இலவச வழக்காடி அவர்களின் வாழ்வில் ஒளியேற்றியவர். மனித உரிமை சட்டத்தரணியான 53வயதுடைய மகேஸ்வரி வேலாயுதம் அவர்கள் சுகயீனமுற்றுள்ள தனது தாயாரான ஆசிரியை ஈஸ்வரி வேலாயுதம் அவர்களை பார்ப்பதற்காக தனது சொந்த ஊருக்கு சென்றிருந்த சமயம் 2008 மே மாதம் சுட்டு கொலை செய்யப்பட்டார்

ரேலங்கி செல்வராஜா

இலங்கையில் இருந்த முன்னணி தமிழ் வானொலி மற்றும் தொலைக்காட்சி அறிவிப்பாளர் ஆவார். தொடக்க நாட்களில் திரைப்பட நடிகையாகவும் இருந்த இவர் தனது கணவருடன் சேர்த்து ஆகஸ்ட் 12 , 2005 கொழும்பில் வைத்து புலிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார். இவர்களின் கொலையின்போது ஒரு வயதும் அடையாத அவர்களது குழந்தை தெய்வாதீனமாக உயிர் தப்பியது.

இப்படி இன்னும் பலர் துரோகிகள் என்ற முத்திரை குத்தப்பட்டு கொன்று வீசப்பட்டனர். போர் தின்ற மாந்தர்களான இந்த மாபெரும் பெண் ஆளுமைகளை இந்த சர்வதேச பெண்கள் தினபொழுதுகளில் நினைவுகூருவோம்.

நன்றி : உண்மைகள்

Read more...

புதைகுழிக்கும் சங்கிலி மன்னனுக்கும் தொடர்புகள் உண்டா? காரணமானவர்கள் யார்? கொன்று புதைக்கப்பட்டவர்கள் யார்?

மன்னார் சதோச வளாகத்தில் சமீபகாலமாக அகழப்பட்டுவந்த மனித எலும்புக்கூடுகளின் றேடியோ காபன் அணுப்பரிசோதனை முடிவு இன்றைய தினம் உத்தியோகபூர்வமாக வெளிவந்து பல சர்ச்சைகளையும் சந்தேகங்களையும் தோற்றுவித்திருக்கிறது.

புளோரிடாவில் இருந்து கிடைக்கப்பெற்ற காபன் அறிக்கையில் அந்த மனித எச்சங்களின் காலம் கி.பி 1450 தொடக்கம் கி.பி 1650 வரைக்கு இடைப்பட்டதென்று கூறப்பட்டுள்ளது. மன்னார் புதைகுழி மிகச்சமீப காலத்துக்குறியதாக இருக்கும் என்று நினைத்துக்கொண்டிருந்தவர்களுக்கு இது அதிர்ச்சியையும் தமிழர்களின் தொல்லியல் வரலாறு தொடர்பான ஆராட்சியில் ஈடுபடுபவர்களுக்கு இது ஆர்வத்தையும் கொடுத்திருக்கிறது.

இந்த காபன் ஆய்வினை வைத்து பல தரப்புக்களாக இங்கு கருத்துக்கள் பகிரப்படுகின்றது அவை பற்றியும் அவற்றின் சாதக பாதகங்கள் பற்றியும் ஒவ்வொன்றாக பார்ப்போம்...

1, இக்காபன் அறிக்கை நம்பிக்கையானது இல்லை இது போலியானது இலங்கை அரசுக்கு சார்பாக இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டிருக்கிறது அல்லது இலங்கை பிழையான மாதிரிகளை வேண்டுமென்றே மாற்றி அனுப்பியிருக்கும் என்ற வாதம்...

உண்மையில் இந்த வாதம் அவ்வளவு ஏற்புடையது கிடையாது ஏனெனில் குறித்த பரிசோதனையை செய்த நிறுவனம் சர்வதேச நிறுவனம் மிக முக்கியமான ஆய்வுகளில் ஈடுபடும் நிறுவனம் அந்த நிறுவனம் தம் நம்பிக்கையை சிதறடித்துக்கொள்ளும் விதமாக ஒரு போலியான அறிக்கையினை வழங்கி இருக்காது. ஏனெனில் குறித்த மாதிரிகளை வேறு ஒரு நிறுவனத்தின் மூலம் ஆய்வு செய்தால் உண்மை தெரியவரும் அதனால் தம் நற்பெயருக்கும் நம்பிக்கைக்கும் களங்கம் ஏற்படும் என்பதை குறித்த நிறுவனம் அறிந்தே இருக்கும். இந்த சிறு விடயத்திற்காக அது தன்னை தற்கொலைக்கு உற்படுத்திக்கொள்ளாது.

அத்தோடு அவ்வாறு அந்நிறுவனம் போலியான அறிக்கையினை வழங்க கூடியதாக இருப்பின் இலங்கை அரசாங்கம் குறித்த பகுதியில் தமிழ் ஆயுதக்குழுக்கள் நிலைகொண்டிருந்த காலத்தை குறிப்பிட்டு ஒரு அறிக்கையினை பெற்று புதைகுழிகளுக்கு காரணம் தமிழர்களே என கதையை முடித்திருக்கும். இலங்கை அனுப்பிய மாதிரிகள் பிழையானவை என்ற கருத்திற்கும் இதுவே பதில் பிழையான மாதிரியினை கொடுக்கவேண்டுமெனில் அதை 500 வருடங்களுக்கு முந்தியதாக கொடுக்காமல் மேலே குறிப்பிட்டதுபோல தமிழ் ஆயுதக்குழுக்கள் நிலைகொண்டிருந்த காலத்தின் மாதிரியை மாற்றி அனுப்பி முடிவை தனக்கு சார்பாக பெற்றிருக்கும்.

2, 500 ஆண்டுகால புதைகுழிக்குள் 1996 ஆம் ஆண்டு திகதி குறிப்பிட்ட பிஸ்கட் பைக்கட் எப்படி வந்தது? காலில் உள்ள இரும்பு வளையம் 500 ஆண்டுகளாக உக்காமல் இருக்குமா என்ற அதிபுத்திசாலிகளின் வாதங்கள்...

உண்மையில் இதுவோர் மொக்குத்தனமான மற்றும் சிறுபிள்ளைத்தனமான வாதம். ஒரு பொலித்தீன் உறை மண்ணின் உள்ளே பல்வேறு சந்தர்ப்பங்களில் போகும் மழை பெய்யும் போது மண்ணரிப்பில் நீரோடு உள்ளே சென்றிருக்கலாம் அல்லது அந்த இடத்தில் குப்பைகளை கொட்டும் போது அதிலிருந்து நிலத்தின் கீழே படிப்படியா கீழிறங்கி இருக்கலாம் அல்லது அந்த புதைகுழியின் மீது இயல்பாக இருந்த பள்ளத்தில் வீழ்ந்து அதன் பின் அதன் மீது மண் நிரம்பி இருக்கலாம் பிஸ்கட் உறை இருந்தது அடி ஆழத்தில் இல்லை ஓரளவு மேலாகவே. அதனால்தான் அதனை ஆய்வு செய்தோர் பெரிய விடயமாக கணிக்கவில்லை. அத்தோடு பிஸ்கட் உறையை வைத்து காலத்தை கணித்தால் அது சமீபகாலமாக இருக்கும் சமீப காலத்தில் புதைக்கப்பட்டிருப்பின் ஆடைகள் தலைமயிர் போன்றவற்றின் எச்சங்கள் கட்டாயம் இருந்திருக்கும் அவை எதுவும் இப்புதைகுழியில் இல்லை.

அடுத்து 500 வருடமாக மண்ணுக்குள் ஒரு உலோக வளையம் எப்படி உக்காமல் இருக்கும் என்பதற்கான பதில் உலோகம் 500 அல்ல 1000 ஆண்டுகளுக்கும் உக்காமல் இருக்கும். அது உலோகத்தின் தன்மையை பொறுத்தது. அகழ்வுகளின் மூலம் கண்டெடுக்கப்பட்ட மன்னர் காலத்து வாள்கள் , கத்திகள் , ஈட்டிகள் என்பன இன்னும் உக்காமல்தான் இருக்கின்றன. தற்போது நீங்கள் அன்றாடம் பாவிக்கும் இரும்பு தனியாக பிரித்தெடுக்கப்பட்ட இரும்பு அது இலகுவில் துருப்பிடிக்கும் அதில் இருக்கும் பெறுமதியான மற்றும் தரமான உலோகங்கள் தனித்தனியாக பிரித்தெடுக்கப்பட்டு தேவைக்கேட்ப மீண்டும் கலக்கப்பட்டு வலிமையான மற்றும் மென்மையான இரும்புகள் உருவாக்கப்படுகின்றன ஆனால் ஆரம்ப காலங்களில் இரும்பு என்பது கலப்பு உலோகமாகவே இருந்தது அதனால்தான் அவை இலகுவில் துருப்பிடிகாமல் நீண்டகாலம் நிலைத்து பாவித்தது. அதேபோன்ற ஒரு கலப்பு உலோகத்தால் ஆனதாககூட அந்த இரும்பு வளையம் இருக்கக்கூடும் அது இன்னும் ஆய்வு செய்யப்படவில்லை அதற்கு முன்பதாகவே அது சாதாரண இரும்பு என்ற முடிவுக்கு வந்தது அபத்தம்.

3, யாழ் இராசதானியின் சங்கிலி மன்னன் 1540 களில் மன்னாரில் மதமாற்றத்தில் ஈடுபட்ட பாதிரியார் உற்பட 600 கத்தோலிக்கர்களை அரச தண்டனைக்கு உற்படுத்தி கொலைசெய்ததாக ஓர் வரலாற்றுச்சம்பவம் உண்டு. அந்த 600 க்கு மேற்பட்டவர்களின் எச்சங்களே இது என்ற வாதம்...

மேற்படி இச்சம்பவம் இடம்பெற்றது உண்மையென வரலாற்று ஆய்வாளர்கள் மற்றும் போர்த்துக்கேயர்களின் குறிப்பில் தெளிவாகவே குறிப்பிடப்பட்டிருக்கிறது. எனவே அந்த சம்பவத்தில் கொல்லப்பட்டவர்களின் உடல்களே இதுவென்று ஒரு முடிவுக்கு வருவது இயல்பானதே எனினும் உண்மை அதுவல்ல.

மேற்படி சங்கிலி மன்னனுக்கும் இந்த புதைக்குழிக்கும் சம்பந்தம் உண்டு என்ற கருத்துக்கள் வலுப்பெற்ற நிலையில் யாழ் இராசதானியின் ஆரிய சக்கரவர்த்திகளின் வாரிசும் யாழ் சங்கிலி மனையின் வாரிசுதாரருமான Raja Remigius Kanagarajah Jaffna என்னை தொடர்புகொண்டு பலவிடயங்களை பேசினார் யாழ் இராச்சியத்தின் வரலாற்று குறிப்பில் உள்ள சங்கிலி மன்னன் தொடர்பான தகவல்களை சுட்டிக்காட்டிய அவர் இந்த மன்னார் புதைகுழிக்கும் சங்கிலி மன்னனுக்கும் எந்த தொடர்புகளும் இல்லையென்றும் சங்கிலி மன்னன் குழந்தைகளை கொன்றதாக எந்த குறிப்புக்களும் இல்லையென்றும் குறிப்பிட்டார்.

ஆம் இந்த மன்னார் சதோச வளாக புதைகுழிக்கும் சங்கிலி மன்னனுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை அவனோடு தொடர்புபட்ட சம்பவம் இடம்பெற்றது பேசாலைப்பகுதியின் தோட்டவெளியென்று கூறப்படும் இடத்திலாகும் அது ஏறக்குறைய இந்த சதோச புதைகுழி இருக்கும் இடத்தில் இருந்து 20 கிலோமீட்டர்களுக்கும் அப்பால் உள்ளது. அங்கே இந்த சம்பவத்தை நினைவு கூறும் முகமாக அச்சம்பவம் இடம்பெற்ற இடத்தில் கல்லறைகள் நிர்மாணிக்கப்பட்டு "மன்னார் தோட்டவெளி வேதசாட்சிகளின் அன்னை ஆலயம்" என்ற பெயரில் பெரும் தேவாலயம் அமைக்கப்பட்டிருக்கிறது. சங்கிலி மன்னன் அதைத்தவிர வேறு இடத்தில் கத்தோலிக்கர்களை சிரச்சேதம் செய்ததாக எந்த குறிப்புக்களும் இல்லை.

#இப்போது இருக்கும் கேள்வி அப்படியெனில் இந்த புதைகுழிக்கு யார் காரணமாக இருக்கக்கூடும்?

தடயவியல் நிபுணர்களின் தகவல் அடிப்படையில், இதுவரை மொத்தமாக 323 எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டு உள்ளன. இதில் 28 சிறுவர்களின் என்புக்கூடுகளும் அடங்கியுள்ளன.
இங்கே மீட்கப்பட்டிருந்த என்பு கூடுகள் இருவகையான முறையில் புதைக்கப்பட்டு இருந்தன அவையாவன,
ஒழுங்கு முறையில் புதைக்கப்பட்ட முழுமையான உடல்கள், ( தலைகள் எல்லாம் ஒரேதிசையிலும், பாதங்கள் மறு திசையிலும், உடல்களுக்கு இடையில் குறித்த இடைவெளியும்)
ஒழுங்கற்ற முறையில் புதைக்கபட்ட பகுதியான என்பு குவியல்கள் ( இங்கு பல மனித என்புகள் குவியலாக காணப்படுகின்றன )
இங்கு முதலாம் வகையினை நோக்குகையில் அது ஒரு மயானமாக இருக்குமோ என்ற ஊகத்தினை தோற்றுவிக்கின்றது.
ஆனால் இரண்டாம் வகையானது சாதரணமாக படுகொலைகளின் பின்னர் உடல்களை விரைவாக மறைப்பதற்கு படுகொலையினை மேற்கொண்ட தரப்பு ஒரே குழியில் எல்லா உடல்களையும் ஒன்றாக போட்டு மூடுவது போன்றே மூடப்பட்டுள்ளது எனவே அவ்வகையில் நோக்கினால் இதுவோர் படுகொலை களமாக இருப்பதற்குறிய சந்தர்ப்பங்கள் அதிகம்.
எனினும் வேறு பல சந்தர்பங்களிலும், இவ்வாறு என்புக்குவியல்கள் ஒன்றாக காணப்பட முடியும்,

1. மயானங்களில் திருத்த வேலைகள்,
2. கட்டட தேவைகளுக்காக மயானங்களை இடம் மாற்றல்,
3. அனர்த்தங்களின் போதும், கொள்ளை நோய்களின் போதும் அதிகளவானவர்கள் ஒரே நேரத்தில் இறக்கும் போது,
இவ்வாறு குவியல்களாக எலும்புக்கூடுகள் இருக்க வாய்ப்புக்கள் உண்டு.

இங்கு பிரச்சனைக்கு உரிய சில விடயங்கள் உள்ளன,

1. முதலில் இங்கு மயானம் இருந்ததற்கான ஆதாரம் மன்னார் மாவட்ட பதிவுகளில் இல்லை, மேலும் இங்கு இருக்கும் முதியவர்களுக்கும் அங்கு மயானம் இருந்ததாக ஞபகம் இல்லை என்றே கூறுகின்றனர், இவற்றை வைத்து பார்க்கும் போதும் காபன் அறிக்கையின் முடிவின் படியும் இது மயானமாக இருப்பின் தொன்மையான மயானமாக இருக்கவே வாய்ப்புண்டு.

2. இப்புதைகுழிக்குள் ஆடைகளோ அல்லது வேறு ஏதாவது உடமைகளோ மீட்கப்பட வில்லை, தொன்மை காரணமாக அவை அழிந்து போயிருக்கலாம்.

3. காலில் இரும்பு வளையம் உள்ள என்பு - இது சாதாரண உடல்கள் இருக்கும் பகுதியில் இருந்து தான் மீட்க பட்டுள்ளது, மேலும் அது ஒரு காலில் மட்டுமே உள்ளது.

4.சில எலும்புக்கூடுகள் காயங்களுக்குறிய அடையாளங்களுடன் மீட்கப்பட்டுள்ளன, ஆனால் இன்னமும் அது என்னவகையான காயம் என ஆய்வு செய்யப்படவில்லை.

சங்கிலி மன்னனோடும் சமீபகாலத்தோடும் முடிச்சிடாமல் வேறுவகையில் இதனை நோக்கினால் இதன் பின்னணியில் போர்த்துக்கேயர்கள் இருப்பது புலனாகிறது.

போர்த்துக்கேயர் மன்னாரை கைப்பற்றியது 1560 ஆம் ஆண்டு. மன்னாரை கைப்பற்றியவுடன் அங்கு ஒரு கோட்டையை அவர்கள் நிர்மாணித்தார்கள் அந்த கோட்டை இப்போதும் அங்கு இருக்கிறது. அந்த கோட்டைக்கு அருகில்தான் குறித்த புதைகுழியும் உள்ளது. புதைகுழியில் மீட்கப்பட்ட எச்சங்களின் காபன் அறிக்கை காலமும் கோட்டை அமைக்கப்பட்ட காலமும் சம காலமாகும்.

இதனடிப்படையில் ஆராய்ந்தால் மேலே உள்ள சில கேள்விகளுக்கு விடைகிடைக்கும்

1,வரிசையாக புதைக்கப்பட்டிருந்த உடல்கள்.

இது கோட்டை கட்டுமானத்தின் போது இறந்தவர்களின் உடல்களாக இருக்கலாம் கால்களில் இருந்த வளையம் கைதிகளை பிணைத்துவைக்க பயன்பட்ட வளையமாக இருக்கலாம் அக்காலத்தில் அடிமைகளுக்கு கால்களிலும் கைகளிலும் இரும்பு வளையங்களை மாட்டி அதில் சங்கிலியை கோர்த்தே வேலை வாங்கினர். அப்படியான ஒரு போர்க் கைதியின் அல்லது அடிமையின் உடலாக அந்த காலில் வளையம் உள்ள உடல் இருக்ககூடும் அவன் இறந்தபின் அந்த வளையத்தை ஏதோவோர் சந்தர்ப்பம் காரணமாக கழட்டியெடுக்கமுடியாமல் போயிருக்கலாம் அதனோடு அவன் புதைக்கப்பட்டிருக்கலாம்.

2, குவியலாக கண்டுபிடிக்கப்பட்ட எழும்புக்கூடுகள்.

இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்ட எலும்புக்கூடுகளில் தான் காயங்களும் இருக்கின்றன சிறுவர்களின் எலும்புக்கூடுகளும் இருக்கின்றன இவர்கள் போர்த்துக்கேயர்களால் மதமாற்றம் செய்யப்படும்போது அதற்கு மறுப்புத்தெரிவித்தவர்களாக இருக்கக்கூடும் அதனால் அவர்களை குடும்பத்தோடு கொன்று ஒரே குழியில் புதைத்திருக்கலாம் அத்தோடு போர்க்கைதிகளாக அகப்பட்ட குடும்பங்களின் பெண்கள் சிறுவர்களை பராமரிக்க முடியாமை காரணமாக கொன்று புதைத்திருக்கலாம்.

அத்தோடு கோட்டைக்குள் வைத்து சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்ட போர்க்கைதிகளையும் கோட்டைக்கு சமீபமாக இருக்கும் இந்த இடத்தில் புதைத்தும் வந்திருக்கலாம்.
ஆக மொத்தத்தில் மன்னார் சதோச வளாகத்தில் மீட்கப்பட்டுள்ள எலும்புகள் சங்கிலி மன்னனால் கொல்லப்பட்ட கத்தோலிக்கர்களின் எலும்புக்கூடுகள் அல்ல போர்த்துக்கேயர்களால் கொல்லப்பட்ட தமிழ்ச் சைவர்களினது என்பது தெட்டத்தெளிவாக புலனாகிறது.

ஒல்லாந்தர் காலத்தில் கத்தோலிக்கர்கள் டச்சுக்காரர்களால் படுகொலைக்கு ஆளாகி இருந்தனர் ஆனால் அவர்களின் காலம் 1650 க்கு பிற்பட்டதே காபன் அறிக்கை 1650 க்கு முற்பட்டதென்று தெளிவாக குறிப்பிடுகின்றது. எனவே சங்கிலி மன்னனின் பெயரால் பேசாலையில் வேதசாட்சிகள் ஆலயம் அமைத்ததுபோல் இதன் பழியையும் அவனிலோ அல்லது ஒல்லாந்தரிலோ சுமத்தி இங்கும் ஓர் தேவசாட்சிகளின் கல்லறை அமைக்க முயற்சிக்காது 500 ஆண்டுகளுக்கு முன்பு போர்த்துக்கேயரால் இரக்கமின்றி கொன்று குவிக்கப்பட்ட எம் உறவுகளின் சொந்தங்கள் யாரென்று மரபணு பரிசோதனைகள் மேற்கொண்டு கண்டுபிடிப்பதோடு படுகொலையான அவர்களின் நினைவாக அங்கு ஓர் நினைவுச்சின்னம் அமைக்க முயற்சிப்போம்.





சு.பிரபா வின் முகப்புத்தகத்திலிருந்து
08/03/2019

Read more...

நாலக்கவின் பிணை கோரிக்கை நிராகரிப்பு - நீதிமன்றம்

பயங்கரவாத விசாரணைப் பிரிவின் முன்னாள் பணிப்பாளரும் முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபருமான நாலக்க டி சில்வா முன்வைத்த பிணை கோரிய மனு நிராகரிக்கப்பட்டுள்ளதாக, நீதிமன்றம் அறிவித்துள்ளது.

ஜனாதிபதி மற்றும் முன்னாள் பாதுக்காப்புச் செயலாளர் ஆகியோரை கொலை செய்வதற்கு சதித்திட்டம் தீட்டிய குற்றச்சாட்டின் பேரில் இவர் கைது செய்யப்பட்டிருந்தார்.

இதனை அடுத்து இவரை தொடர்ந்தும் தடுத்து வைத்து விசாரணை செய்ய உத்தரவிடப்பட்டது. இந்த நிலையில் குறித்த கொலை சதித்திட்ட வழக்கு இன்றைய தினம் விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்பட்டது.

கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மஞ்சுள திலகரத்ன முன்னிலையில், இதன்போது, நாலக்க டி சில்வா முன்வத்த பிணை கோரிய மனு பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட இந்த பிணை கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது.

சந்தேகநபர் சார்பில் முன்வைக்கப்பட்ட பிணை கோரிக்கையை கோட்டை நீதவான் நீதிமன்றம் கடந்த டிசம்பர் மாதம் 19ஆம் திகதி நிராகரித்து உத்தரவிட்டது. மேற்படி உத்தரவைத் திருத்தி பிணையில் விடுவிப்பதற்கு கோட்டை நீதவானுக்கு உத்தரவிடுமாறு கோரி நாலக்க டி சில்வா தாக்கல் செய்த மனுவை ஆராய்ந்த நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்தார்.

Read more...

''பொறுமை காத்தது போதும்'' - மஹிந்த தலைமையில் பொங்கியெழுந்த மக்கள்

பொறுமை காத்தது போதும் என்ற தொனிப்பொருளில் இன்றைய தினம் கண்டியில் பாரிய மக்கள் கூட்டம் ஒன்று அணிதிரண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ச தலைமையில் இந்த மக்கள் கூட்டம் ஒன்று கூடியுள்ளது.

ஐக்கிய தேசியக்கட்சி அரசாங்கத்தின் செயல்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், மக்களுக்கு விழிப்பூட்டும் நோக்கிலும் குறித்த கூட்டம் நாடு முழுவதும் இடம்பெறும் என, எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ச அண்மையில் குறிப்பிட்டிருந்தார்.

அதற்கமைவாக இதன் முதலாவது கூட்டம் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஸ தலைமையில் கண்டியில் நடைபெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒன்றிணைந்த எதிர்க்கட்சியை பிரிதிநிதித்துவப்படுத்தும் அரசியல்வாதிகள், பொதுஜன பெரமுன உறுப்பினர்கள் உள்ளிட்ட பல அரசியல் முக்கியஸ்தர்கள், இந்த கூட்டத்தில் கலந்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read more...

எதிர்வரும் 15 ஆம் திகதி, கச்சத்தீவு திருவிழா ஆரம்பம்

வருடம் தோறும் கொண்டாடப்படும் கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழா குறித்த பேச்சுவார்த்தைகள் தற்போது இடம்பெற்று வருகின்றன.

வரலாற்று சிறப்புமிக்க கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழாவில் கலந்து கொள்வதற்காக பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் இந்த வருடமும் ஒன்று திரண்டு அங்கு வருகை தரவுள்ளனர்.

இந்த நிலையில், கச்சத்தீவு திருவிழா குறித்த ஆலோசனைக் கூட்டம் யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் இன்று இடம்பெற்றுள்ளது.

மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் தலைமையில் இந்த கூட்டம் இடம்பெற்றுள்ளது. இந்த கூட்டத்தில் கடற்படை அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை – தமிழக கடற்தொழிலாளர்களின் ஒற்றுமையை தெரியப்படுத்தும் இந்த விழா, எதிர்வரும் 15 மற்றும் 16 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது.

இதனிடையே கச்சத்தீவு திருவிழாவிற்கான முன்னேற்பாடுகளை இலங்கை கடற்படை தற்போது தீவிரமாக முன்னெடுத்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read more...

கம்பெரலிய வேலைத் திட்டத்தின் மூலம் சிறந்த அபிவிருத்தி திட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன - தலதா அத்துகோரல

கம்பெரலிய வேலைத் திட்டத்தின் கீழ் இரத்தினபுரி மாவட்டத்தில் 171 அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன. அது தொடர்பான உத்தியோகபூர்வ நிகழ்வு அமைச்சர் தலதா அத்துகோரல தலைமையில் இடம்பெற்றது.

வீதி அபிவிருத்தி, வழிபாட்டுத் தலங்களின் புனர்நிர்மாணம், விளையாட்டு மைதானங்களை அமைத்தல், மின்சார விநியோகம் போன்ற வேலைத்திட்டங்களும் இதில் உள்ளடங்குகின்றன. இதற்கொன இரண்டாயிரத்து 40 இலட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை லக்கல புதிய மாதிரிக் கிராமம் புகையிலைப் பொருள் மற்றும் பொலித்தீன் அற்ற வலயமாக மாற்றுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நரகத்தில் புகையிலைப் பொருள் விற்பனை செய்வதைத் தடுக்கும் வேலைத்திட்டத்திற்க வியாபார சமூகத்தினரின் சிறந்த ஒத்துழைப்பு கிடைக்கப் பெறுவதாக லக்கல பிரதேச சபையின் செயலாளர் எஸ்.டி.பி.ஜயசூரிய தெரிவித்தார்.

லக்கல நகரத்தில் அரச நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து நிறுவனங்களும்; புகையிலைப் பொருள் பாவனையற்ற நிறுவனமாக மாற்றப்படவுள்ளன. குறிப்பாக எதிர்காலத்தில் பொலித்தீன் பாவனையற்ற வலயமாகவும் நரகத்தை மாற்ற திட்டமிடப்பட்டுள்ளதாக பிரதேச சபையின் செயலாளர் எஸ்.டி.பி.ஜயசூரிய தெரிவித்தார்.

Read more...

வரலாற்றில் அதிகளவிலான மின்சாரப் பாவனை நேற்று பதிவானது - மின்சக்தி மற்றும் சக்திவலுத்துறை அமைச்சு

நாட்டில் நேற்றைய தினமே வரலாற்றில் அதிகளவிலான மின்சாரப் பாவனை பதிவாகியிருப்பதாக மின்சக்தி மற்றும் சக்திவலுத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. நேற்றுக் காலை 6 மணி தொடக்கம் இன்று காலை 6 மணிவரையில், 47 தசம் 4 கிஹாவோட்ஸ் மின்சாரம் பயன்படுத்தப்பட்டிருப்பதாக அமைச்சின் பணிப்பாளரும், ஊடகப் பேச்சாளருமான சுலக்ஷன ஜயவர்த்தன தெரிவித்துள்ளார்.

நாள் ஒன்றுக்கு அண்ணளவாக 40 தொடக்கம் 42 கிஹாவோட்ஸ் மின்சாரமே பயன்படுத்தப்படுகிறது. மழை காலங்களில் அது 35 கிஹாவோட்ஸ்சாக குறைவடையும்.

நாட்டில் தறபோது நிலவும் உலர் காலநிலை காரணமாகவே மின்சாரப் பாவனை அதிகரித்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இலங்கையில் பொதுவாக மார்ச் மாத இறுதிப் பகுதியிலும், ஏப்ரல் மாத முதல் பகுதி அளவிலேயே அதிகளவிலான மின்சாரப் பாவனை பதிவாகும் என, சுலக்ஷன ஜயவர்த்தன குறிப்பிட்டார்.

இதேவேளை, சுற்றாடலுக்கு ஏற்ற வகையில் புதுப்பிக்கக்கூடிய வலு சக்தியை பயன்படுத்தி மின்சாரத்தை உற்பத்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 24 மணித்தியாலமும் தடையின்றி மின்சாரத்தை விநியோகிப்பதற்கான வாய்ப்பு இதன் மூலம் கிடைக்கும்.

இது தொடர்பான ஆலோசனை சேவைகளையும், பயிற்சி செயலமர்வுகளையும் நடத்த, உலக வங்கி இணக்கம் தெரிவித்துள்ளது. இதன் மூலம் குறைந்த செலவில் மின்சாரத்தை பெற்றுக் கொள்ளும் வாய்ப்பு, மின் பாவனையாளார்களுக்கு கிடைக்கும் என்று சக்திவலுத்துறை அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

Read more...

இன்று தமிழ் ஊடகங்கள் சிலவற்றில் வெளிவந்திருக்கும் செய்தி தொடர்பான விளக்கம்

இன்றைய தினம் தமிழ் ஊடகங்கள் சிலவற்றில் வெளிவந்திருக்கும் 'காணமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் ஆளுநரை சந்திக்க முயற்சித்த போதும், அவரை சந்திக்க முடியவில்லை' என்ற செய்தி தொடர்பான விளக்கம் வட மாகாண ஆளுநர் அலுவலகத்தால் வழங்கப்பட்டுள்ளது.

வடகிழக்கு மாகாணங்களில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் நேற்று முன்தினம் ஆளுநரை சந்திப்பதற்கு நேரத்தினை ஒதுக்கித் தருமாறு யாழ் பல்கலைக்கழக சட்டத்துறை விரிவுரையாளர் குமாரவடிவேல் குருபரன் ஊடாகவும், ஊடகவியலாளர் ஒருவர் ஊடாகவும் கோரிக்கையினை விடுத்திருந்தனர்.

ஆனாலும் நேற்று முன்தினம் ஆளுநர் கொழும்பில் இருந்தமை காரணமாக அன்றைய தினத்தில் நேரத்தை ஒதுக்க முடியவில்லை. இதன் காரணமாக நேற்று காலை 9:45மணிக்கு அவர்களை சந்திப்பதற்கான நேரத்தினை வட ஆளுநர் அவர்கள் ஒதுக்கியிருந்ததுடன், அதற்காக யாழ்ப்பாணத்திற்கு ஆளுநர் சுரேன் ராகவன் வருகை தந்திருந்தார்.

முதலில் அவர்கள் ஆளுநரை சந்திப்பதற்கு வருவதாக உறுதிப்படுத்திய போதிலும் இறுதி நேரத்திலேயே வடகிழக்கு மாகாணங்களில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் தாம் ஆளுநரை சந்திக்க வரவில்லையென அறிவித்திருந்தனர்.

இதன் காரணமாக ஆளுநரால் அவர்களை சந்திக்க முடியவில்லை என்பதோடு அவர்களின் கோரிக்கைகள் தொடர்பிலும் கேட்டறிந்துகொள்ள முடியவில்லை.

இதேவேளை யாழ் மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் பிரதிநிதிகளை ஏற்கனவே மூன்று முறை சந்தித்துள்ள ஆளுநர், அவர்களுடைய கோரிக்கைகள் வேண்டுகோள்கள் தொடர்பில் கவனம் செலுத்தியிருக்கின்றார் என்பதுடன் வடகிழக்கு மாகாணங்களில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களையும் சந்தித்து அவர்களுடைய கோரிக்கைகளையும் பெற்றுக்கொள்ள வேண்டுமென்ற நிலைப்பாட்டிலே உள்ளார் என, வடக்கு ஆளுநரின் ஊடகப் பிரிவு தகவல் வெளியிட்டுள்ளது.

Read more...

நாட்டை நேசிக்கின்றவர்களினாலேயே, நாட்டைக் கட்டியெழுப்ப முடியும் - ஜனாதிபதி

வெளிநாட்டு வீட்டுப் பணிகளின் போது பாதிக்கப்படும் பெண்களுக்காக குரல் கொடுப்பதற்கு பலமானதொரு அமைப்பாக முன்வருமாறு சுதந்திரக் கட்சி மகளிர் அமைப்புக்கு ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளார்.

இன்று நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு தேவையாக இருப்பது எந்த கட்சி, எந்த நபர் என்பதன்றி நாட்டை நேசிக்கின்ற நாட்டைப் பற்றிய உணர்வு உள்ளவர்களேயாகும் என்று, ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன குறிப்பிட்டார்.

இதற்கு ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தலைமைத்துவத்தை வழங்க வேண்டுமென்றும் ஜனாதிபதி தெரிவித்தார். சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு இன்று கொழும்பு விஹாரமகாதேவி பூங்காவில் இடம்பெற்ற ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி மகளிர் தின நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

வெளிநாட்டு வீட்டுப் பணிகளின் போது பல்வேறு துன்புறுத்தல்களுக்கு உள்ளாகும் நாட்டின் பெண்களுக்காக குரல் கொடுப்பதற்கான பலமான அமைப்பாக அனைத்து பெண்களும் முன்வர வேண்டும்.

வெளிநாட்டு பணிப் பெண்களாக உள்ள எமது தாய்மார்கள், சகோதரிகள் முகம்கொடுத்திருக்கும் கஷ்டங்கள் மற்றும் சோகமான நிகழ்வுகள் பற்றி மகளிர் உரிமைகளுக்காக குரல் கொடுக்கின்ற, அதற்காக பெரும் நிதியை ஈட்டுகின்ற எந்தவொரு அமைப்பும் கவனம் செலுத்தாது இருப்பது தற்போது கவலையளிப்பதாக, ஜனாதிபதி தெரிவித்தார்.

அத்துடன் இந்த விடயம் தொடர்பில் பொறுப்புக்கூற வேண்டிய அனைவரும் விரைவாக கவனம் செலுத்த வேண்டும் என்று குறிப்பிட்ட ஜனாதிபதி, இந்த விடயத்தில் நாட்டை நேசிக்கும் மக்கள் நேய கட்சியான ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மகளிர் அமைப்புக்கு பாரிய பொறுப்பை நிறைவேற்ற முடியுமென்று குறிப்பிட்டார்.

இன்றைய தினம் அனுஷ்டிக்கப்படும் மகளிர் தினம் வெறுமனே கொண்டாட்டத்துடன் மட்டுப்படுத்தக்கூடிய ஒன்றல்ல என்றும், பாதிக்கப்பட்ட பெண்களின் உரிமைகளுக்காக குரல் கொடுக்கக்கூடிய தினமாக இந்த தினத்தை மாற்ற வேண்டுமென்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

'போதைப்பொருளற்ற தேசம் – மகிழ்ச்சி நிறைந்த வீடு' என்ற கருப்பொருளின் கீழ் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி மகளிர் தின நிகழ்வு பெரும் எண்ணிக்கையான பெண்களின் பங்குபற்றுதலுடன் இடம்பெற்றது.

விசேட திறமைகளை வெளிப்படுத்திய பெண்களுக்கு விருதுகள் மற்றும் சான்றிதழ்கள் ஜனாதிபதியால் வழங்கிவைக்கப்பட்டது.

போதைப்பொருள் ஒழிப்பு பணியகத்தின் மகளிர் பொலிஸ் பரிசோதகர் நிலுகா பெரேரா மற்றும் வானியல் துறையில் திறமைகளை வெளிப்படுத்திய தில்ருக்ஷி சந்தரேகா குமாரசிங்க உள்ளிட்டவர்களுக்கு விருதுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டன.

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, நிமல் சிறிபால டி சில்வா, தயாசிறி ஜயசேகர, திலங்க சுமதிபால, சாந்த பண்டார, ஷியானி விஜேவிக்ரம, ஆரியவத்தி கலபத்தி, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி மகளிர் முன்னணியின் தலைவி பிரியங்கனி அபேவீர, செயலாளர் சந்திரிகா த சொய்சா உள்ளிட்ட ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி மகளிர் அமைப்பின் பிரதிநிதிகள் பெருந்திரளானோர் இந் நிகழ்வில் கலந்து கொண்டனர்.

Read more...

லஞ்சம் பெற்ற குற்றத்தடுப்பு விசாரணை திணைக்கள அதிகாரி விளக்கமறியலில் வைக்கப்பட்டார்

குற்றப்புலனாய்வு அதிகாரியொருவர் லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட நிலையில், அவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இலஞ்சம் பெற்ற குற்றம் தொடர்பாக கைது செய்யப்பட்ட குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரியை எதிர்வரும் 22 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கொழும்பு நீதிமன்றில் இன்றைய தினம் குறித்த வழக்கு தொடர்பான விசாரணைகள் இடம்பெற்ற போது, நீதவான் லங்கா ஜயரத்ன இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

குறித்த குற்ற புலனாய்வு அதிகாரி, காசோலை மோசடி குறித்த சட்ட நடவடிக்கை எடுக்கப்படுவதை தடுக்கும் பொருட்டு, வர்த்தகர் ஒருவரிடம் இருந்து 80000 ரூபாவை கையூட்டலாக பெற்றதாக தெரிவித்து கைது செய்யப்பட்டார்.

இந்த நிலையில், இன்றைய தினம் குறித்த அதிகாரி நீதிமன்றத்தில் முன்னிலைப்படத்தப்பட்ட போதே, நீதவான் மேற்கண்ட உத்தரவை பிறப்பித்தார். இந்த சம்பவம் குறித்த விசாரணைகளை தொடர்ந்தும் முன்னெடுத்து வருவதாக, காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.

Read more...

இராணுவ முகாம், உடன் அகற்றப்பட வேண்டும் - மட்டக்களப்பு மக்கள்

இராணுவம் அமைத்துள்ள முகாம், உடன் அகற்றப்பட வேண்டும் என்று வலியுறுத்தி இன்றைய தினம் மட்டக்களப்பில் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. மட்டக்களப்பு முறக்கொட்டான் சேணை இராணுவ முகாமினை அகற்றுமாறு கோரியே குறித்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

அத்துடன் குறித்த முகாமினுள் உள்ள பாடசாலை கட்டடத்தை உடன் விடுவிக்க வேண்டும் என, பொது மக்கள் இதன்போது கோரிக்கை முன்வைத்தனர். இராணுவ முகாமுக்கு முன்பாக ஒன்று திரண்ட மக்கள், இன்றைய தினம் பிற்பகல் குறித்த ஆர்ப்பாட்டத்தை நடத்தினார்கள்.

முறக்கொட்டான் சேணை மற்றும் தேவபுரம் கிராம சமூக அமைப்புக்களின் ஒன்றியத்தினால் குறித்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

Read more...

இலங்கையில் இடம்பெற்ற யுத்த மீறல்களுக்கான விசாரணைகளில், சர்வதேசத்திற்கு இடமில்லை - லக்ஷ்மன் கிரியெல்ல

இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் யுத்த விதிமுறை மீறல்களுக்கான விசாரணைகளில், சர்வதேசம் தலையிடுவதற்கு ஒருபோதும் அனுமதி வழங்கப்படாது என, அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல குறிப்பிட்டுள்ளார்.

இன்றைய தினம் நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற வாய்மொழி மூலமான கேள்விக்கு பதில் வழங்கிய போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். எதிர்வரும் 2015 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகளுக்கு இலங்கை வழங்கிய இணை அனுசரணையில் இருந்து விடுபடுவதற்கான பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பதற்கான நடவடிக்கைகள் தற்போது இடம்பெறுகின்றன.

இலங்கை இராணுவத்தினருக்காக தற்பொழுது அதிக கரிசனைக் காட்டியவர்கள் அன்று இராணுவத் தளபதியாக இருந்த சரத் பொன்சேகாவை சிறைபிடித்ததை ஒருபோதும் மறந்து விட முடியாது.

அத்துடன் இலங்கையில் இடம்பெற்ற யுத்த குற்றங்கள் குறித்த உள்ளக விசாரணைக்கான அனைத்துவித ஒத்துழைப்புக்களை எம்மால் வழங்கப்படும். எனினும் சர்வதேச விசாரணைகளுக்கு நாம் ஒருபோதும் அனுமதி வழங்க மாட்டோம் என, அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல குறிப்பிட்டுள்ளார்.

ஜெனீவாவில் வழங்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்ற நாம் கடமைப்பட்டுள்ளோம். எனினும் எமக்கான தனித்துவமான அங்கீகாரம் ஒன்று உள்ளது என, அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல கூறினார்.

Read more...

மன்னார் மனித புதைகுழி அகழ்வு பணிகள் நிறுத்தப்பட்டன

மன்னார் மனித புதைகுழி அக்கவு பணிகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன. கடந்த வருடத்தில் ஆரம்பிக்கப்பட்ட இந்த அகழ்வு பணிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

இந்த நிலையில் மீட்கப்பட்ட மனித எச்சங்கள் கார்பன் பரிசோதனை அறிக்கையின் மூலம், அவை 500 ஆண்டுகள் பழமையானவை என கண்டறியப்பட்டது.

போர்த்துக்கேயர்களுக்கும், ஒல்லாந்தர்களுக்கும் இடையில் இடம்பெற்ற சண்டையில் கொல்லப்பட்டவர்களின் மனித எச்சங்களே, மன்னார் புதைகுழியில் இருந்து மீட்கப்பட்டுள்ளதாக, பல செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளன.

இந்த நிலையில் தொடர்ந்தும் மன்னாரில் அகழ்வுப் பணிகளை முன்னெடுப்பது தொடர்பாக ஆலோசனைகள் இடம்பெற்று வந்த நிலையில், இன்றைய தினம் குறித்த அகழ்வுப் பணிகளை இடைநிறுத்துமாறு மன்னார் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Read more...

வரவு செலவு திட்டம், மக்களின் நலனை அடிப்படையாக கொண்டுள்ளது - மங்கள சமரவீர

இலங்கை இன்று பொருளாதார நெருக்கடிகளை அன்றி பொருளாதாரத்தின் முன்னிலையிலான சவால்களையே எதிர்கொள்கிறது என நிதியமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

தேர்தலை இலக்காகக் கொண்டு வரவு செலவுத் திட்டத்தை எந்த சந்தர்ப்பத்திலும் சமர்ப்பிக்கவில்லை என நிதியமைச்சர் கூறினார். எதிர்வரும் ஒக்டோபருக்கு முன்னர் ஜனாதிபதித் தேர்தல் பற்றி அறிவிக்க வேண்டும்.

2020ம் ஆண்டுக்கு முன்னர் பொதுத் தேர்தலை நடத்தக்கூடிய வாய்ப்பு உள்ளது என அமைச்சர் குறிப்பிட்டார். இவ்வாண்டு செலுத்த வேண்டிய மொத்தக் கடன்தொகை 5 தசம் 9 பில்லியன் டொலராகும். இதில் 2 பில்லியன் டொலர் செலுத்தி முடிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கடன் சுமைக்கு மத்தியிலும் மக்களை வலுவூட்டி வறியவர்களைப் பாதுகாக்கக்கூடிய யோசனைகளை வரவு செலவுத் திட்டத்தில் சேர்த்துள்ளதாக நிதியமைச்சர் கூறினார்.

Read more...

அடுத்த உயர்தர பரீட்சையில் சித்தியடையும் மாணவர்களுக்கு, சிறந்த சலுகைகள் வழங்கப்படும்.

எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள கல்வி பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையில் மிகச் சிறப்பாக சித்தி பெறும் 14 பேருக்கு வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் கல்வி கற்க வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கப்படும் என, அரச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

ஐந்து பிரதான துறைகளிலும், ஒன்பது மாகாணங்களிலும் சிறப்பு சித்தி பெற்ற மாணவர்கள் புலமைப்பரிசில்களைப் பெறுவார்கள். இதற்காக வரவு செலவுத் திட்டத்தின் மூலம் 50 கோடி ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு புலமைப்பரிசில்களின் எண்ணிக்கை 30 ஆக அதிகரிக்கப்படும்.

இதன்மூலம் இலங்கையின் கல்வித் திறனை அதிகரிக்க முடியும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Read more...

நாட்டில் ஆரோக்கிய சீர்கேடுகள் ஏற்படும் அபாயம் உள்ளது - சுகாதார அமைச்சு

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் தற்போது சுற்று சூழல் வெப்பநிலை அதிகரித்துள்ளதால், ஆரோக்கிய சீர்கேடுகள் ஏற்படலாம் என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. இந்தச் சீர்கேடுகளை தவிர்ப்பதற்கான ஆலோசனைகளை சுகாதார மேம்பாட்டுப் பணியகம் வழங்கியுள்ளது.

இதன் பிரகாரம், உடலை மூடும் வகையில் இளம் நிறங்களுடன்கூடிய இலேசான ஆடைகளை அணிவது சிறப்பானது. குறிப்பாக விவசாய, கட்டுமானப் பணிகளில் ஈடுபடுகையில் சூரியக் கதிர்களின் நேரடித் தாக்கத்தைத் தவிர்க்க வேண்டும். தினந்தோறும் குளிப்பது பொருத்தமானது என சுகாதார மேம்பாட்டுப் பணியகம் அறிவித்துள்ளது.

அதிக சூரிய வெளிச்சம் இருக்கும் சந்தர்ப்பத்தில் பிள்ளைகள் திறந்த வெளிகளில் விளையாடுவதைத் தவிர்ப்பது நல்லது. கூடுதலான வெப்பநிலை நிலவும் சந்தர்ப்பங்களில் பிள்ளைகளை தனியே வாகனங்களில் விட்டுச் செல்ல வேண்டாம் என மக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இனிப்பும், மதுசாரமும் செறிந்த பானங்களைத் தவிர்ப்பது ஆரோக்கியமானதாகும்.

இதேவேளை ஊவா, சப்ரகமுவ, மத்திய மாகாணங்களிலும், காலி, மாத்தறை, களுத்துறை மாவட்டங்களிலும் சில இடங்களில் இன்றைய தினம் மாலை வேளைகளில் மழையோ, இடியுடன் கூடிய மழையோ பெய்யலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

வளிமண்டலவியல் திணைக்களம் அறிக்கையொன்றின் ஊடாக இதனை குறிப்பிட்டுள்ளது.

Read more...

சர்வதேக மகளிர் தினத்தை முன்னிட்டு, நாடு முழுவதும் பல்வேறு நிகழ்வுகளுக்கு ஏற்பாடு

இன்று சர்வதேச மகளிர் தினமாகும். இந்தத் தினத்தை முன்னிட்டு இலங்கை முழுவதும் பல நிகழ்ச்சிகள் ஏற்பாடாகி உள்ளன. இதன் பிரதான வைபவம் அனுரதாபுரம் சல்காது மைதானத்தில் இடம்பெறும்.

''திறன்மிக்க பெண்மணியும் அழகான உலகமும்'' என்ற தொனிப்பொருளில் தேசிய நிகழ்ச்சி ஏற்பாடாகி உள்ளது. இந்த நிகழ்ச்சியில் ஜனாதிபதி பிரதம அதிதியாக கலந்து கொள்வார். அத்துடன் பிரதமர், மகளிர் அலுவல்கள் அமைச்சர் ஆகியோரும் நிகழ்வில் பங்கேற்பார்கள்.

இதேவேளை கொழும்பு பங்கு பரிவர்த்தனையில் நேற்று விசேட நிகழ்ச்சி ஒன்று இடம்பெற்றது. உலக வங்கிக் குழுமத்தில் அங்கம் வகிக்கும் சர்வதேச நிதி கூட்டுத்தாபனம் கொழும்பு பங்கு பரிவர்த்தனையுடன் சேர்ந்த தொடர்ந்து நான்காவது தடவையாகவும் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தது.

உலக பொருளாதாரத்தில் பெண்களின் பங்களிப்பை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் இந்த உலகளாவிய முன்முயற்சி முன்னெடுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Read more...

குறிஞ்சாக்கேணி பொது நூலகத்தில், போதிய வசதிகள் இல்லை - பொதுமக்கள்

கிண்ணியா பிரதேச சபை நிர்வாகத்திற்கு உட்பட்ட குறிஞ்சாக்கேணி பொதுநூலகம் போதிய வசதிகள் இன்றி செயற்படுவதாக பொது மக்கள் குறை கூறுகிறார்கள். இந்த நூலகம் பழைமை வாய்ந்த கட்டிடத்தில் இயங்கி வருகின்றது.

இந்த ஒத்து நூலகத்தில் மாணவருக்கான பகுதி, உசாத்துணைப் பகுதி, நாளாந்தப் பத்திரிகைப் பகுதி என்ற சகல பிரிவுகளும் ஒரே இடத்தில் இயங்கி வருகின்றன. இதற்கு இடப் பற்றாக்குறையே காரணம் என கருதப்படுகின்றது.

இந்த நிலையில் குறித்த நூலகத்தின் பௌதீக வளங்களை அபிவிருத்தி செய்து, போதியளவு நூல்களை சேர்க்குமாறு, அப்பகுதியிலுள்ள பொது மக்கள் பரவலாக கோரிக்கை விடுக்கிறார்கள்.

இது குறித்து கிண்ணியா பிரதேச சபையின் தலைவர் உள்ளிட்ட சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரியுள்ளனர்.

Read more...

கண்டியில் ஒருவழி போக்குவரத்து திட்டம் நிறுத்தப்பட்டுள்ளது - காவல்துறையினர்

கடந்த சில நாட்களாக கண்டி மாநகரில் அமுலான ஒருவழி போக்குவரத்து திட்டம் நிறுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர். கண்டி - கொழும்பு பிரதான வீதிகளில் கண்டியிலிருந்து கெட்டம்பே வரையான ஒருவழி போக்குவரத்து திட்டமே இவ்வாறு நிறுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில் குறித்த பகுதிகளில் தற்போது சீரான முறையில் இருவழி போக்குவரத்து இடம்பெறுவதாக கண்டி பொலிஸ் நிலையத்தில் போக்குவரத்து பிரிவுக்கு பொறுப்பான பிரதான இன்ஸ்பெக்டர் குறிப்பிட்டார்.

இதேவேளை போக்குவரத்து சேவைகள் மற்றும் விமான சேவைகள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க, விசேட திட்டமொன்றை இன்று அமுலாக்கியுள்ளார்.

தொடரூந்துகளில் பயணிக்கும் பெண்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, ''மகளிருக்கு மட்டும்'' எனும் திட்டத்தை அவர் அமுல்படுத்தியுள்ளார்.

இதன் மூலம், தொடரூந்துகளில் பெண்கள் பயணிப்பதற்கான தனியான பயண பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன. பல்வேறு வகையில் தொடரூந்தில் பயணிக்கும் பெண்கள் துன்பப்படுகின்றனர்.

இந்த நிலையில் சர்வதேச மகளிர் தினமான இன்று, குறித்த திட்டம் அமுலாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read more...

Thursday, March 7, 2019

ஓப்xராம் வட மாகாண சபையின் கல்வித் திணைக்களச் செயலாளர் சத்தியசீலன்.

வட மாகாணத்தின் கல்வி பண்பாட்டலுவல்கள் , விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் செயலாளர் சகல வலையக் கல்விப் பணிப்பாளர்களுக்கும் „ஓப்பாராம்" என்று கடதமூலம் அறிவித்துள்ளார்.

சிவராத்திரிக்கு மறுநாள் ஆளுனரால் வழங்கப்பட்ட விடுமுறைக்கு மாற்று பாடசாலை நாளை அறிவிக்கும் பொருட்டு வலயக் கல்விப்பணிப்பாளர்களுக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே அவர் இந்த மிரட்டலை விடுத்துள்ளார்.

தமிழ் மொழி எங்கள் மூச்சு என்கின்ற எமது அரசியல்வாதிகளும் அரச உத்தியோகித்தர்களும் தமிழை வைத்தே காலத்தை கடத்திக்கொண்டிருக்கின்றார்கள். இலங்கையிலே அரச கரும மொழியான தமிழ் மொழிக்கு எங்காவது பிசகு ஏற்பட்டு விட்டுவிடுமானால் அதை வைத்து அரை ஆண்டுகள் காலம் ஓட்டுவார்கள்.

மேலும் காலியில் மாத்தறையில் எங்காவது ஓர் பெயர்ப்பலகையில் எழுத்துப்பிழை ஏற்படுமாயின், தமிழை சிங்களவன் கொன்றுவிட்டான் என உலகம் பூராகவும் அந்தியேட்டி கிரிகைகளை செய்வார்கள்.

இந்நிலையில் வட மாகாணத்தின் கல்வி பண்பாட்டலுவல்கள் , விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சினால் அனுப்பப்பட்டுள்ள கடிதத்தில் தமிழ் கொல்லப்பட்டுள்ள விதத்தினை இங்கு காணலாம்.



அத்துடன் வடமாகாண கல்வி மற்றும் பண்பாட்டலுவல்கள் அமைச்சு சைவ சமயத்திற்கு பதிலாக புதிய சமயம் ஒன்றை கண்டுபிடித்துள்ள விவகாரத்தையும் கடிதத்தின் ஊடாக அறிந்து கொள்ள முடிகின்றது.


அண்மையில் சிங்கள பொலிஸ் கொஸ்தாபல் ஒருவர் குற்றப்பற்றுச்சீட்டு தமிழ் மொழியில் வழங்காகததால் மனித உரிமை மீறல் வழக்கு வரை சென்று தமிழின் காவலர்களாக தங்களை உயர்த்திய காட்டிய உத்தமர்கள் பற்றியும் இங்கு குறிப்பிட்டாகவேண்டும்.

குறித்த செயலாளருக்கு எதிராக தமிழை கொன்ற வழக்கு தொடரப்படுமா?

Read more...

இலங்கையில் உள்ள பெற்றோர்களின் கவனத்திற்கு...

குழந்தைகள் வளர்ந்து பாடசாலைகளுக்குச் செல்வதற்கு முன்னர் அவர்கள் முன்பள்ளிகளுக்கு தற்போது முக்கியத்துவம் பெற்ற ஒன்றாக மாறியுள்ளது. இந்த நிலையில் இலங்கையில் குறிப்பாக கொழும்பை அண்டிய பகுதிகளில் காணப்படும் முன்பள்ளிகளில் சிறுவர்களுக்காக விளையாட்டு மைதானம் இல்லை என்று பெற்றோர் குற்றம் சுமத்தியுள்ளனர்.

சிறுவர்களுக்கு விளையாட்டே முக்கிய அம்சமாக இருக்கும் நிலையில் அவர்கள் விளையாடுவதற்கு மைதானம் ஒன்று இல்லாமை பாரிய பாதிப்பு என, நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். இந்த விடயம் தொடர்பில் உரிய தரப்பினர் கூடிய கவனம் செலுத்த வேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கையாகும்.

இதேவேளை நாட்டில் நிலவும் அதிக வெப்பமான காலநிலையால் சிறுவர்கள் பெரிதும் பாதிக்கப்படும் அபாயம் உள்ளதாக, மருத்துவர்கள் குறிப்பிடுகின்றனர்.

வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் புத்தளம் மற்றும் ஹம்பந்தோட்டை மாவட்டத்தில் நாளைய தினம் வெப்பமான காலநிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

வெப்பமான வானிலையினால், அதிக களைப்பு உள்ளிட்ட உடலில் மாற்றங்கள் ஏற்படக்கூடும் என்பதனால், போதுமான அளவு நீரை அருந்துமாறும், வெயிலில் அதிகம் இருப்பதை தரித்திருத்துக்குமாறு சுகாதாரத் துறையினர் அறிவுறுத்தியுள்ளதாக என காலநிலை அவதான நிலையம் குறிப்பிட்டுள்ளது.

குறிப்பாக சிறுவர்கள் மற்றும் நோயாளிகள் இந்த நிலைமை குறித்து அவதானத்துடன் இருக்க வேண்டும் என்றும் காலநிலை அவதான நிலையம் அறிவுறுத்தல் விடுத்துள்ளது.

எனவே பெற்றோர்கள் தமது பிள்ளைகளின் உடல் நிலை குறித்து மிகுந்த கவனம் செலுத்த வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Read more...

இந்திய மண்ணில், கிளிநொச்சி உருத்திரபுர மாணவிகள் சாதனை

கிளிநொச்சி - உருத்திரபுரத்தை சேர்ந்த செல்வி தினகராசா சோபிகா மற்றும் செல்வி நடராசா வினுசா ஆகிய மாணவிகள், தேசிய றோல் போல் அணியில் தெரிவாகி விருது பெற்றுள்ளமை, இலங்கைக்கு மிகப்பெரும் பெருமையை பெற்றுத் தந்துள்ளது.

கடந்த 21.02.2019 தொடக்கம் 24.02.2019 காலப்பகுதியில் இந்தியாவில் இடம்பெற்ற இந்த ஆசிய கிண்ணபோட்டியில் விளையாடி இவர்கள் தமது திறமைகளை வெளிப்படுத்தியுள்ளனர்.

இந்த போட்டியில் இலங்கை அணி மூன்றாம் இடத்தை பெற்றதுடன், செல்வி நடராசா வினுசா, சிறந்த பந்து காப்பாளர் என்ற விருதை தட்டிச் சென்றார். இந்த நிலையில், குறித்த இரு மாணவிகளுக்கும் சிறப்பான பயிற்சிகளை வழங்கிய கிளிநொச்சியை சேர்ந்த திரு. விக்ரர் சுவாம்பிள்ளைக்கு, கிளிநொச்சி மாவட்டம் சார்பாக கிளிநொச்சி அரசாங்க அதிபர் திரு சுந்தரம் அருமைநாயகம் தமது பாராட்டுகளை தமது அலுவலகத்தில் வைத்து நேரில் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.



Read more...

இலங்கை - ஐரோப்பிய ஒன்றிய முதலீட்டாளர்களுக்கு இடையில், முக்கிய பேச்சுவார்த்தை

இலங்கை மற்றும் ஐரோப்பிய ஒன்றிய முதலீட்டாளர்களுக்கு இடையே பேச்சுவார்த்தை ஒன்று இடம்பெற்றுள்ளது. அமைச்சர் மலிக் சமரவிக்ரம தலைமையில் இந்த பேச்சுவார்த்தை இடம்பெற்றது.

இந்த பேச்சுவார்த்தையில் ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கைக்கான தூதுவரும் கலந்துக் கொண்டிருந்தார். அத்துடன் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் பொருளாதார நிபுணர்களும் வர்த்தக பிரதிநிதிகளும் இதில் கலந்துக் கொண்டிருந்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்வதற்கு ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் முதலீட்டாளர்களை ஊக்குவிப்பது தொடர்பில் இதன்போது ஆராயப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read more...

வரவு - செலவு திட்டத்தின் இலக்கு, விரைவில் வெற்றிகொள்ளப்படும் - மங்கள சமரவீர

ஜனநாயகம், நம்பகத்தன்மை, நல்லிணக்கம், சுபீட்சமான சமூகம் என்பனவற்றை இம்முறை வரவு செலவுத்திட்டம் இலக்கு வைத்திருப்பதாக நிதியமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். அத்துடன் வரவு - செலவு திட்டத்தின் முக்கிய இலக்கு விரைவில் வெற்றி கொள்ளப்படும் எனவும் அவர் கூறினார்.

வரவு செலவுத்திட்டம் தொடர்பாக சர்வதேச நிறுவனம் ஒன்று ஒழுங்கு செய்திருந்த நிகழ்வில் அமைச்சர் உரையாற்றினார். இதன்போது வர்த்தகம், சுதந்திர, தொழில் முயற்சி, பூகோள பொருளாதாரச் சந்தை போன்ற துறைகள், மீது கவனம் செலுத்தப்பட்டதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

இந்து சமுத்திரத்தின் கேந்திர மத்திய நிலையமாக இலங்கையை மாற்றியமைப்பது அரசாங்கத்தின் இலக்காகும். இதேவேளை என்டப்பிரைஸ் ஸ்ரீலங்கா வேலைத் திட்டத்துடன் இணைந்து கொள்பவர்களுக்கு தேவையான வசதிகளை வழங்கும் நிறுவனங்களை தொடர்புபடுத்துவதற்கான புதிய கட்டமைப்பு ஒன்று விரைவில் தயாரிக்கப்படுமென்று அமைச்சர் மங்கள சமரவீர சுட்டிக்காட்டியுள்ளார்.

Read more...

மன்னார் மனித புதைகுழியில் இருந்து மீட்கப்பட்ட மனித எலும்பு கூடுகள், 500 ஆண்டுகள் பழமையானவை

பலராலும் தீவிரமாக கண்காணிக்கப்பட்ட மன்னார் மனித புதைகுழி விவகாரம் குறித்த செய்தியொன்று வெளிவந்துள்ளது. மன்னார் நகர நுழைவாயிலில் புதைக்கப்பட்ட எலும்புக் கூடுகள், சுமார் 300 தொடக்கம் 500 ஆண்டுகள் பழமையானவை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மன்னார் மனித எலும்பு கூடுகள் குறித்த மாதிரிகளின் கார்பன் அறிக்கைப்படி, 1499 தொடக்கம் 1719 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் புதைக்கப்பட்ட மனித உடலங்களின் எச்சங்களே மன்னாரில் இருந்து மீட்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மனித புதைகுழியில் இருந்து மீட்கப்பட்ட 335 எலும்புக்கூடுகளில், 6 எலும்பக்கூடுகளின் மாதிரிகள் மாத்திரம் அமெரிக்காவின் புளோரிடாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டன.  கார்பன் அறிக்கையை  பெற்று கொள்ளும் நோக்கில் இந்த எலும்பு கூடுகள் அங்கு அனுப்பி வைக்கப்பட்டன.

இந்த ஆய்வு முடிவுகள் அதிகாரபூர்வமாக மன்னார் நீதிவான் நீதிமன்றத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையிலேயே குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

Read more...

இலங்கை பெண், அமெரிக்காவில் கௌரவிக்கப்படுகின்றார்.

உலகம் முழுவதும் தெரிவு செய்யப்பட்ட தலை சிறந்த பத்துப் பெண்களுக்கு கௌரவம் அளிக்கும் நிகழ்வு அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தில் இடம்பெறவுள்ளது. இந்த நிகழ்வில் ராஜாங்க செயலாளர் மைக் பெம்பியோ பிரதம அதிதியாக கலந்து கொள்ளவுள்ளார்.

வருடாந்தம் இந்த விருது வழங்கல் விழா, அமெரிக்க அரசாங்கத்தினால் சிறப்பாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இந்த விழாவில் இலங்கை சார்பாக மரினி டி லிவேரா விருது வழங்கி கௌரவிக்கப்படவுள்ளார்.

இந்த நிகழ்வில், அமெரிக்காவின் முதல் பெண்மணி மெலானியா ட்ரம்ப் விசேட உரையாற்றவுள்ளார். சமாதானம், மனித உரிமைகள், பால்நிலை சமத்துவம், மகளிர் வலுவூட்டல், சமத்துவம் ஆகிய துறைகளுக்கு பங்களிப்பு வழங்கியவர்கள் குறித்த நிகழ்வில், விருது வழங்கி கௌரவிக்கப்படவுள்ளனர்.

இலங்கையில் பெண்களையும். சிறுவர்களையும் பாதுகாக்க மகத்தான சேவைகளை ஆற்றி தம்மை அர்ப்பணித்த மரினி டி லிவேராவிற்கு அமெரிக்காவின் மகத்தான விருது கிடைக்கின்றமை, இலங்கையர்கள் மத்தியில் பெரும் கௌரவத்தை ஏற்படுத்தியுள்ளது.

Read more...

கிராம உத்தியோகத்தர்களுக்கு சிறந்த சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன - வஜிர அபேவர்த்தன

கிராம உத்தியோகத்தர்களுக்கு பல்வேறு சலுகைகளை அரசாங்கம் வழங்கியிருப்பதாக அமைச்சர் வஜிர அபேவர்த்தன தெரிவித்துள்ளார். அவர்களின் அடிப்படைச் சம்பளம் 28 ஆயிரத்து 940 ரூபா வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. அத்துடன் அலுவலக செலவு போக்குவரத்து செலவு, எழுது கருவிகளுக்கான செலவு என்பனவற்றுக்கான கொடுப்பனவுகளும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

இதேவேளை கிராம உத்தியோகதர்களுக்கு உத்தியோகபூர்வ அறைகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கணிகளை வழங்குவது பற்றியும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

நாடு முழுவதுமுள்ள 14 ஆயிரம் கிராம உத்தியோகத்தர்களின் எண்ணிக்கையை ஏழாயிரம் வரை குறைக்க கடந்த அரசாங்கம் முயன்றது. எனினும் அதற்கு எதிராக, ஐக்கிய தேசிய கட்சி குரல் குடுத்து வருவதாக, அமைச்சர் வஜிர அபேவர்தன சுட்டிக்காட்டினார்.

Read more...
Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com