Wednesday, March 6, 2019

பட்ஜெட்டை செயற்படுத்த புதிதாக காசு அச்சிட வேண்டும் - குமார வெல்கம

வரவு செலவுத் திட்ட நிதி ஒதுக்கீட்டுப் பிரேரணைக்கு வாக்களிப்பதில்லையெனக் கூறுபவர்கள், போதைப் பொருட்கள் ஒழிப்புக்கு எதிர்ப்புத் தெரிவிப்பவர்களே என மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். நிதி அமைச்சினால் நேற்று நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட 2019 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் குறித்துக் கருத்துத் தெரிவிக்கையில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மஹிந்த அமரவீர இதனைத் தெரிவித்தார்.

ஜனாதிபதியின் கீழ் உள்ள பாதுகாப்பு மற்றும் பொலிஸ் திணைக்களம் என்பனவற்றை சிறப்பாக முன்னெடுப்பதற்காகவே ஜனாதிபதியின் அமைச்சு, வரவு செலவுத் திட்ட பிரேரணைகளை முன்வைத்துள்ளது எனவும் மேலும் அவர் குறிப்பிட்டார். இதனிடையே ஐக்கிய தேசியக் கட்சியின் பின்னாசன எம்.பிக்கள் ஜனாதிபதியின் வரவு செலவுத் திட்டப் பிரேரணைகளுக்கு எதிராக வாக்களிக்கத் தீர்மானித்துள்ளதாக அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேநேரம், இந்த வருடத்தின் வரவு செலவுத் திட்ட யோசனைகளை செயற்படுத்துவதற்கு அரசாங்கம் பணத்தை அச்சிட வேண்டும் என ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ் நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்தார்.

உண்மையில் வரவு செலவுத் திட்டம் சகல பகுதிகளையும் உள்ளடக்கியிருக்கின்றது என்பதை மறுப்பதற்கில்லை. இருப்பினும், இந்தத் திட்டங்களை இவ்வருடம் முடியும் வரையில் செயற்படுத்த அரசாங்கத்திடம் பணம் இல்லை என்பதே மறுக்க முடியாத உண்மையாகும் எனவும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

Read more...

இன்றைய வானிலை அறிக்கை

சப்ரகமுவ, மத்திய மற்றும் மேல் மாகாணங்களிலும் பதுளை, காலி, மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர், மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. தென்மேற்கு கரையோரப் பகுதிகளில் காலை வேளையிலும் மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

கொழும்பிலிருந்து காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது தென்மேற்கு அல்லது மாறுபட்ட திசைகளிலிருந்து வீசக்கூடுவதுடன் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 20-30 கிலோ மீற்றர் வரை காணப்படும்.
இடியுடன் கூடிய மழை பெய்யும் நேரங்களில் கடற்பகுதிகளில் அவ்வப்போது பலமான காற்று வீசுவதுடன் அக்கடற்பிரதேசங்கள் கொந்தளிப்பாகவும் காணப்படும்.

Read more...

ஆசிரியர் கலாசாலை​ பஸ் விபத்து - ஒருவர் பலி - 35 பேர் வைத்தியசாலையில்

நேற்று இரவு 9.15 அளவில் மாவனெல்லை – பஹல கடுகன்னாவ இபெரனி அம்பலம பகுதியில், பஸ் ஒன்று விபத்துக்குளாகியதில் ஒருவர் பலியாகியதுடன் 35 பேர் அளவில் காயமடைந்துள்ளார். அக்கரைப்பற்று – அட்டாளைச்சேனை ஆசிரியர் கலாசாலை​யை சேர்ந்தோர் மாணவ ஆசிரியர்களை கொழும்பிற்கு அழைத்துச் சென்ற பஸ்சே, மின்கம்பமொன்றின் மீது மோதியதில் இந்த விபத்து சம்பவித்துள்ளதாக பொலீசார் தெரிவிக்கின்றார்கள்.

உயிரிழந்தவர் அக்கரைப்பற்றை சேர்ந்த 32 வயதுடைய பஸ்ஸின் நடத்துனரே என்று தெரியவருகின்றது. காயமடைந்தவர்கள் கண்டி மற்றும் பேராதனை போதனா வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காயமடைந்தவர்களில் பஸ்ஸின் சாரதியும் அடங்குகின்றார். விபத்து இடம்பெறும் சந்தர்ப்பத்தில் ஆசிரியர் கலாசாலையின் 54 மாணவர்கள் பஸ்ஸில் இருந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read more...

இன்று வடக்கில் மேரி ஆன் ஹாகன்

இலங்கைக்கு உத்தியோக பூர்வ விஜயம் மேற்கொண்டு வந்துள்ள நோர்வே வௌிவிவகார அமைச்சின் செயலாளர் மேரி ஆன் ஹாகன் இன்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.

இவர் நேற்றைய நாளில் நோர்வே வௌிவிவகார அமைச்சின் செயலாளர், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் அமைச்சர் மங்கள சமரவீர உள்ளிட்ட சில அமைச்சர்களுக்கிடையிலான சந்திப்பை மேற்கொண்டிருந்தார். அத்துடன், இலங்கையின் மனித உரிமைகள் ஆணைக்குழு மற்றும் காணாமல் போனோர் அலுவலகத்தின் அதிகாரிகளுடன் நோர்வே வௌிவிவகார அமைச்சின் செயலாளர் ஹாகன் கலந்துரையாடியுள்ளதாக நோர்வே உயர்ஸ்தானிகராலயம் குறிப்பிட்டுள்ளது.

இந்தநிலையில், நோர்வே வௌிவிவகார அமைச்சின் செயலாளர் மேரி ஆன் ஹாகன் , இலங்கையில் கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கைகள் தொடர்பில் அவதானம் செலுத்துவார் என்று, இலங்கைக்கான நோர்வே உயர்ஸ்தானிகராலயம் கூறியுள்ளது. நாட்டில் புதைக்கப்பட்டுள்ள கண்ணிவெடிகளை மீட்கும் மற்றும் அப்புறப்படுத்தும் பணிகளுக்கு சுமார் 7 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியை வழங்குவதற்கு, நோர்வே அரசாங்கம் எண்ணம் வெளியிட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Read more...

Tuesday, March 5, 2019

புலம்பெயர் தமிழர் வியர்வை சிந்தி உழைத்த பணம் கண்ணகி நகர் கழிவு நீர் ஆற்றில் கண்டு பிடிப்பு.

விடுதலைப் போராட்டத்திற்கென புலம்பெயர் தமிழ் மக்கள் தமது வியர்வை சிந்தி உழைந்த பணத்தை வாரி வழங்கினர். புலிகள் மேற்கொண்ட யுத்தத்திற்கு இப்பணத்தை கொண்டு ஆயுதங்கள் கொள்வனவு செய்யப்பட்டது.

கொள்வனவு செய்யப்பட்ட ஆயுதங்களில் பெரும்பகுதி இறுதியாக இலங்கை இராணுவம் கைப்பற்றிக் கொண்டது யாவரும் அறிந்த விடயம். அதற்கும் அப்பால் புறமுதுகு காட்டி ஓடிய புலிகள், ஆயுதங்களை ஆற்றிலும் குளத்திலும் கடலிலும் வீசு விட்டு ஓடித்தப்பினர்.

அவ்வாறு வீசி ஏறியப்பட்ட வெடிமருந்து மற்றும் ஆயுதங்கள் சில இன்று கிளிநொச்சி அக்கராயன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கண்ணகி நகர் கழிவு நீர் செல்லும் ஆற்றுப்பகுதியில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

வெடி பொருட்கள் இருப்பதை அவதானித்த கிராம மக்கள் அக்கராயன் பொலிஸாருக்கு தகவல் வழங்கியதையடுத்து அக்கராயன் பொலிஸ் அதிகாரிகள் குழு நீதிமன்ற அனுமதியை பெற்று விசேட அதிரடிப்படையினர் மூலம் வெடிப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளது.

எல்எம்ஜி ரவைகள் ஒரு தொகுதி, மோட்டார் எறிகனை ஒன்று என்பன மீட்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

புலம்பெயர் தமிழ் மக்களின் வியர்வையை கொண்டு புலிகள் ஆயுதங்களை கொள்வனவு செய்து அவ்வாயுதங்களை பயன்படுத்துவதற்காக வன்னி மற்றும் படுவான்கரை பிரதேச சிறார்களை பலாத்காரமாக படையில் இணைத்தனர். ஆனாலும் அவ்விளைஞர்கள் யுத்தம் வந்தபோது ஆயுதங்களை வீசிவிட்டு ஓடித்தப்பினர் என்பதற்கான சாட்சியங்களே இவையாகும்.



Read more...

முஸ்லிம் பெண்களின் திருமண வயதெல்லைப் பிரச்சினையும் அமைச்சர் ஹக்கீமின் கருத்துக்களும். வை எல் எஸ் ஹமீட்

அண்மைய நிகழ்வு ஒன்றில் அமைச்சர் ஹக்கீம் உரையாற்றுகின்றபோது சமகால முஸ்லிம் பெண்களின் திருமண வயதெல்லை தொடர்பாக தெரிவித்த சில கூற்றுக்கள் இவ்விடயத்தில் அவர் தானும் குழம்பி மற்றவர்களையும் குழப்ப முற்படுகிறார்; என்பதைத் தெளிவாக காட்டியது.

இது தொடர்பாக அங்கு அவர் தெரிவித்த முதலாவது கூற்று “ திருக்குர்ஆனில் எந்த இடத்திலும் பெண்களுக்கு திருமண வயதெல்லை குறிப்பிடப்படவில்லை. எனவே நாம் ஒரு திருமண வயதெல்லையைக் குறிப்பிடுவதில் தவறில்லை;” என்பதாகும்.

முதலாவது “இஸ்லாம் வயதெல்லை குறிப்பிடவில்லை” என்றால் நாம் எவ்வாறு ‘திருமண வயதெல்லை’ குறிப்பிடலாம்? இஸ்லாத்தை இறக்கிவைத்த இறைவனைவிட ரவூப் ஹக்கீம் புத்திசாலியா? அல்லாஹ் சிந்திக்காமல் அல்லது தவறுதலாக வயதெல்லை குறிப்பிடாமல் விட்டுவிட்டான்; எனவே மனிதன் குறிப்பிடலாம்; என்கின்றாரா?

படைத்தவன் குறிப்பிடாத ஒன்றைக் குறிப்பிடுவதற்கு நாம் யார்? அவன் அறியாதவற்றை நாம் அறிந்திருக்கிறோமா? எல்லாக்காலத்திற்கும் பொருத்தமானதாகத் தானே அல்லாஹ் குர்ஆனை இறக்கி வைத்திருக்கின்றான். பிற்காலத்தில் வயதெல்லை அவசியமென்றிருந்தால் அதனை அவனோ அவனது திருத்தூதர் (ஸல்) அவர்களோ குறிப்பிட்டிருக்க மாட்டார்களா?

ஹக்கீமின் உள்ளார்ந்த வாதம்

இஸ்லாத்தில் தடைசெய்யப்படாத ஒன்று நமக்கு அனுமதியாகும். எனவே, இன்றைய காலசூழ்நிலை மாற்றங்களைக் கருத்தில்கொண்டு நாம் வயதெல்லை குறிப்பிடுவதை இஸ்லாம் தடுக்க இல்லை; என்பது அவரது உள்ளார்ந்த வாதம் என்பது அவரது பேச்சில் இருந்து புரிந்தது.

அவரது இந்த சிந்தனைதான் அவரது குழப்பத்தின் அடிப்படையாகும். தடைசெய்யாதது ஆகுமானதாகுமே தவிர, தடைசெய்யாயததை தடைசெய்வதல்ல, இஸ்லாம். இங்கு எழுகின்ற கேள்வி திருமணவயதெல்லை என்பதன் பொருள் “

இத்தனை வயதானதும் கட்டாயம் திருமணம் முடிக்க வேண்டும்; அதற்குமுன் முடிக்கலாம் அல்லது முடிக்காமல் இருக்கலாம்; என்பதா அல்லது இத்தனை வயது வரும்வரை திருமணமே முடிக்கக்கூடாது; என்பதா?

இஸ்லாத்தில் திருமணம் பர்ளு இல்லை. ஆனால் திருமணம் என்பது ஒரு மிகப்பெரும் சுன்னா? சுன்னா என்றால் அங்கு ‘கட்டாயம்’ என்கின்ற ஒன்று இல்லை. அதேநேரம் அல்லாஹ் ஹலாலாக்கிய, அவனது திருத்தூதரின் (ஸல்) மிகப்பெரும் சுன்னாவாகிய ஒரு விடயத்திற்கு கட்டுப்பாடு போடுவதற்கு, குறிப்பிட்ட வயதுவரை அதனை ஹறாமாக்குவதற்கு நீங்கள் யார்?

நீங்களும் உங்களைப்போன்று வாதிடுகின்றவர்களும் புரியத்தவறுகின்ற விடயம் பருவ வயதை அடைந்த ஒரு ஆணுக்கோ, பெண்ணுக்கோ படைத்தவன், எல்லாம் அறிந்தவன் ஹலாலாக்கிய ஒன்றை குறிப்பிட்ட காலம்வரை ஹறமாக்க முனைகின்றீர்கள் ஆனால் அவ்வாறு ஹறாமாக்காமல் ஹலாலாக்குவதற்காகத்தான் அல்லாஹ் வயதெல்லை குறிப்பிடவில்லை; என்பதாகும்.

நடைமுறைப் பிரச்சினை

சரி நடைமுறைப் பிரச்சினைக்கு வருவோம். சிறுவயதில் திருமணமுடித்துக் கொடுப்பதால் பல பிரச்சினைகள் எழுகின்றன; என்று சில NGO க்களின் கருத்தை நீங்களும் முன்வைக்கிறீர்கள். எத்தனை விகிதம் இளவயதுத் திருமணம் நடைபெறுகிறது; என்பதற்கு ஏதாவது புள்ளிவிபரம் உங்களிடமோ, இந்த NGO க்களிடமோ இருக்கின்றதா?

அது மிகச்சிறிய விகிதம் என்று நீங்களே குறிப்பிடுகின்றீர்கள். இலங்கையில் இளவயது திருமணம் என்பது விதிவிலக்காக எங்காவது நடைபெறுகின்றதே தவிர விதியாக அவ்வாறு நடைபெறுவதில்லை; என்பதுதானே அதன் பொருள்.

அவ்வாறு விதிவிலக்காக ஒரு சிறிய விகிதத்தில் அது இடம்பெறுகிறது; என்றால் அதற்கு ஏதாவது விசேட/ விதிவிலக்கான காரணம் இருக்கவேண்டும். நீங்கள் ஒரு சமூகத்தின் தலைவர், அதன் அமானிதத்தை சுமக்கின்ற ஒருவர், அதிகாரத்தில் இருக்கின்ற ஒருவர்- எப்பொழுதாவது இந்த விதிவிலக்கிற்கான விசேட காரணத்தை ஆராய்ந்திருக்கின்றீர்களா? சமூகத்தின் எந்தமட்டத்தில் இது நடைபெறுகின்றது; என்ற தகவல் உங்களிடம் இருக்கின்றதா?

காரணங்கள்

இளவயது திருமணத்தால் பல பாதிப்புக்கள் ஏற்படுவதாகக் குறிப்பிட்டீர்கள். ஆம் இந்த NGO க்களும்தான் குறிப்பிடுகின்றார்கள். அதில் முக்கியமான ஒன்று, அவர்களின் கல்வி பாதிக்கப்படுகின்றது என்பதாகும்.

ஆம் கல்வி பாதிக்கப்படுகின்றது. மறுக்கவில்லை. இங்கு இளவயதில் திருமணமுடித்ததால் கல்வி பாதிக்கப்படுகிறதா? கல்வி பாதிக்கப்பட்டதால் இளவயதுத் திருமணம் நடைபெறுகிறதா? வசதியுள்ள எந்தவொரு தந்தையோ, தாயோ தன்பிள்ளையின் கல்வியை பாதியில் நிறுத்திவிட்டு திருமணமுடித்துக் கொடுக்கமாட்டார்கள்; அதைவிட வேறு முக்கிய காரணிகள் இருந்தாலேயொழிய.

எனவே, இங்கு கல்வி பாதிக்கப்படுவது இளவயதுத் திருமணத்திற்கு ஒரு காரணம் என்றால் அங்கு ஆராயவேண்டியது; ஏன் அவர்களின் கல்வி பாதிக்கப்படுகிறது; என்பதாகும். எப்போதாவது ஆராய்ந்திருக்கிறீர்களா? நியாயம் பேசுகின்றீர்கள்.

அவர்களின் கல்வி பாதிக்கப்படுகின்றது; என்றால் அங்கு பெரும்பாலும் வறுமை தாண்டவமாடுகின்றது; என்பது பொருளாகும். பிள்ளையை பாடசாலைக்கு அனுப்பவும் முடியாது; வீட்டில் வைத்து பராமரிக்கவும் முடியாது; பெற்றோர் கூலித்தொழிலுக்காக வெளியே செல்லும்போது அப்பிள்ளையின் பாதுகாப்புக் கேள்விக்குறியாகின்றது. அந்நிலையில் அப்பிள்ளையை திருமணமுடித்துக் கொடுக்காவிட்டால் அப்பிள்ளையின் வாழ்வே வழிதவறிப்போகலாம். போனால் பதில் சொல்வீர்களா?

நமது திருமலை மாவட்டத்தில் ஓர் இளவயது சகோதரி வயதை கூடுதலாக குறிப்பிட்டு சவூதிக்கு தொழிலுக்கு சென்று தன் உயிரையே பலிகொடுத்த அந்த துயர சம்பவம் நினைவிருக்கின்றதா? நீங்கள் இளவயது திருமணத்தைப்பற்றிப் பேசுகிறீர்கள். ஆனால் இளவயதில் தொழில் தேடி அக்குழந்தை வெளிநாடு சென்றதே! ஏன்? வறுமை காரணமில்லையா?

இவ்வாறு எத்தனையோ அபலை இளவயதுப் பெண்கள் வறுமையின் கொடுமையில் வாடிவதங்கி கல்வியிழந்து தவிக்கும்போது சிலருக்கு திருமணவாழ்வு எனும் அதிஷ்டம் அடிக்கின்றபோது உங்களைப்போன்ற மேட்டுக்குடியைச் சேர்ந்தவர்களும் மேற்கத்திய பணத்திற்காக பெண்ணியம் பேசுபவர்களும் அவர்களை சட்டத்தின் மூலம் தடுத்தால் சீரழியப்போவது அவர்கள் வாழ்க்கைதான்.

இன்னும்பல குடும்பங்களில் தந்தை இருக்க மாட்டான், அல்லது பொறுப்பற்றவனாக இருப்பான். தாய் வெளிநாடு சென்றிருப்பாள். குழந்தைகள் பாட்டியிடமோ உறவினர்களிடமோ வளரும். பிள்ளை வயதுக்கு வந்ததும் அதன் பாதுகாப்பு அவர்களுக்கோர் பாரதூரமான பிரச்சினையாக மாறும். அந்நிலையில் யாராவது புண்ணியவான் அப்பிள்ளையை திருமணம் முடிக்க கேட்கும்போது அதைவிட சிறந்த முடிவினை அவர்கள் எடுக்க முடியுமா? அம்முடிவை எடுக்காவிட்டால் அப்பிள்ளையின் கல்விமட்டுமல்ல, எதிர்காலமே அழிந்துபோகலாம்.

இவையெல்லாம் அறிந்தவன் படைத்தவன் என்பதால்தான் அவன் வயதெல்லைக் கட்டுப்பாட்டை வைக்கவில்லை. நீங்கள் அவனைவிட புத்திசாலியாக முயற்சிக்காதீர்கள். முடிந்தால் நீங்களும் உங்கள்மீது கருத்தியல் தாக்கம்செலுத்தும் NGOக்களும் முதலில் எங்கெல்லாம் இளவயதுத் திருமணம் நடைபெறுகின்றன? அவற்றின் பின்னணிகள் என்ன? என்பதை ஆராய்ந்து அவற்றை நீக்க வழிபாருங்கள். தானாக இன்று நடைபெறுகின்ற மிகச்சிறிய விகிதத்திலான இளவயதுத் திருமணமும் மறைந்துவிடும். மாறாக சட்டத்தை மாற்றி அவர்களின் வாழ்வை சாக்கடையாக்கிவிடாதீர்கள். அவர்களுக்கு உங்களால் உதவிசெய்ய முடியாவிட்டாலும் உபத்திரவம் செய்துவிடாதீர்கள்.

நீங்களும் இரண்டு பெண்பிள்ளைகளைப் பெற்றவன் என்ற முறையில் இந்த திருமண வயதெல்லையை உயர்த்தாமல் இருப்பதையிட்டு கவலையடைவதாகத் தெரிவித்திருக்கிறீர்கள்.

நீங்கள் இரண்டு பெண்பிள்ளையின் தந்தையென்ற முறையில் எவ்வாறு கவலைகொள்ள முடியும்? 12 வயதையடைந்ததும் கட்டாயம் திருமணமுடித்துக் கொடுக்கவேண்டும்; என்று சட்டம் உங்களை வற்புறுத்துகின்றதா? என்ன கவலை உங்களுக்கு.

மாறாக, இவ்வாறு இளவயதுத் திருமணம் நடக்கக்கூடிய பெண்பிள்ளைகளின் குடும்பங்களைப்பற்றி ஒரு மனிதனாக, ஒரு சமூகத்தலைவனாக கவலைப்படுங்கள். அவர்களது வாழ்க்கைத்தரத்தை உயர்த்த முயற்சியெடுங்கள். அவர்களை இளவயதுத் திருமணத்திற்குள் தள்ளும் புறக்காரணிகளை அகற்றுவதற்கு என்ன செய்யமுடியும்; என்று யோசியுங்கள்.

முஸ்லிம் தனியார் சட்டம் சம்பந்தமாக இன்னும் பல பிரச்சினைகள் இருக்கின்றன. அவற்றிற்கும் திருத்தங்கள் தேவை; என்று கூறினீர்கள். ஆம். உங்கள் சிந்தனைமீது செல்வாக்குச் செலுத்துகின்ற மேற்கத்திய சக்திகளும் அவர்களது உள்நாட்டு முகவர்களும் இஸ்லாம் அனுமதித்த பலதார திருமணத்தை தடைசெய்யச் சொல்கிறார்கள்.

நீங்கள் ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும். அவர்கள் ஒன்றை மனதில் வைத்துக்கொண்டு ‘ திருமணம்’ என்கின்றார்கள். நாம் இன்னுமொன்றை திருமணமென்கின்றோம். உதாரணமாக ஒரு தரப்பு பாகிஸ்தானிலுள்ள “ இஸ்லாமாபாத்தை” இஸ்லாமாபாத் என்னும்போது அடுத்த தரப்பு கல்முனையிலுள்ள இஸ்லாமாபாத்தை மனதில் வைத்துக்கொண்டு இஸ்லாமாபாத் என்பது போன்றதாகும். எனவே, முதலில் எந்த இஸ்லாமாபாத்தை யார் குறிப்பிடுகின்றார்; என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்.

இஸ்லாத்தில் ஒரு ஆணுக்கு நான்கு திருமணமுடிக்க அனுமதி உண்டு. ஆனால் அதற்கு பல கட்டுப்பாடுகளும் உண்டு. இஸ்லாம் அனுமதித்த கட்டுப்பாடுகளைக் கொண்டுவருவதில் பிரச்சினை இல்லை. ஆனால் ஒரு பெண் இஸ்லாத்தில் சமகாலத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட திருமணமுடிக்க முடியாது.

மேற்கத்தைய நாடுகளில் மட்டுமல்ல, மேற்கத்தைய சட்டத்தைப் பின்பற்றுகின்ற இலங்கை, இந்தியாபோன்ற நாடுகளிலும் ஒரு ஆண் எத்தனை பெண்ணை வேண்டுமானாலும் திருமணமுடிக்கலாம் ( polygamy). அதேபோல் ஒரு பெண் ஒரே சமயத்தில் எத்தனை ஆணை வேண்டுமானாலும் திருமணமுடிக்கலாம் ( polyandry). எதுவித சட்டப்பிரச்சினையுமில்லை; என்பதைப்பற்றி சிந்தித்திருக்கிறீர்களா? என்பது தெரியவில்லை.

ஒரேயொரு வித்தியாசம். அவர்கள் கடதாசியில் எழுதுவதை திருமணமென்கிறார்கள். நாம் ஒரு ஆணும் பெண்ணும் சேருவதற்கான அனுமதியை திருமணமென்கின்றோம். அவர்களைப் பொறுத்தவரை ஒரு ஆணும் பெண்ணும் சேருவது தனிமனித சுதந்திரம். குழந்தைகூட பெறலாம், தப்பேதுமில்லை. ஆனால் ஒருவருடான உறவை மட்டும்தான் கடதாசியில் ‘திருமணம்’ என்று எழுதலாம். ஒன்றுக்குமேல் எழுதினால் தண்டனைக்குரிய குற்றமாகும்.

இந்த அடிப்படையில்தான் உதாரணமாக தமிழ்நாட்டில் முன்னாள் முதலமைச்சர்கள் எம் ஜி ஆர், கருணாநிதி போன்றோர் ஒன்றுக்குமேற்பட்ட திருமணம் முடித்தார்கள்.அவை அனைத்தும் அவர்களின் சமய, கலாச்சாரப்படி முறையான திருமணங்களே! தவறேதுமில்லை. ஆனால் ஒன்றைத்தான் கடதாசியில் எழுதிவைத்துக்கொண்டார்கள். அதனால் அவர்களை சட்டம் கண்டுகொள்ளவில்லை. இரண்டையும் எழுதியிருந்தால் நிலைமையேவேறு.

நாம் ஹலாலாக, நம்மைப் படைத்தவன் சொல்முறையில் உரிய நிபந்தனைகளைப் பூர்த்திசெய்து அத்திபூர்த்தாப்போல் எங்காவது ஒன்றிரண்டு பல்தார திருமணம் நடந்தால் அது நியாயமற்றது; என்கிறார்கள், இந்த மேற்கத்தைய சக்திகள். நீங்களும் அதை ஏற்றுக்கொள்கிறீர்களா?

இதேபோன்றுதான் பெண்காதி நியமிக்கவேண்டும்; என்று கேட்கிறார்கள். அதுதொடர்பாக, ஏற்கனவே விரிவான கட்டுரை எழுதியிருக்கின்றேன்; வாசித்துப் பாருங்கள்.

எனவே, மக்களின் வாக்குகளைப்பெற்ற ஒரு சமூகத்தலைவன் என்றவகையில் அம்மக்களின் மார்க்க, சமூக, கலாச்சார பாரம்பரியங்களையும் விழுமியங்களையும் பாதுகாப்பதும் அதைப்புரியாத மேற்கத்தைய முகவர்கள் செய்யும் விமர்சனங்களுக்கு காத்திரமான பதில் கொடுப்பதும்தான் உங்கள் கடமையே தவிர அவர்கள் விமர்சிக்கிறார்கள்; வாருங்கள் சட்டத்தை மாற்றுவோம்; என்று கூறுவதல்ல.

ஒவ்வொருவரும் தம்பொறுப்புகளை, கடமைகளை தெரிந்துகொண்டு, புரிந்துகொண்டு இறைவனைப்பயந்து நடந்தால் சமூகம் எங்கேயோ போயிருக்கும்.

Read more...

திருக்கேதீச்சரம் - கத்தோலிக்கரின் வருத்தம் தெரிவிப்பை ஏற்போம். சிவசேனை மறவன்புலவு க. சச்சிதானந்தன் அறிக்கை.

மன்னார் திருக்கேதீஸ்வர ஆலய வளைவு விடயத்தில் ஏற்பட்ட சர்ச்சையையடுத்து யாழ் மறை மாவட்ட ஆயர் விடுத்துள்ள அறிக்கை மற்றும் மன்னிப்பு கோரல் தொடர்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள சீவசேனை மறவன்புலவு சச்சிதானந்தம் அவர்களது வருத்தம் தெரிவிப்பை ஏற்றுக்கொள்வோம் என்று தெரிவித்துள்ளார்.

அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது :

திருக்கேதீச்சரத்தில் 03.03.2019 நிகழ்ந்தன தொடர்பாக, யாழ்ப்பாண மறை மாவட்டக் குரு முதல்வர் அருட்தந்தை பி. யோ. செபரட்ணம் எழுதிய கடிதம் படித்தேன்.

அருள் பெருக்கும் திருநோக்கம் கொண்ட அக் கடிதத்தைப் படித்த உடனேயே என் உள்ளத்தில் பாரம் இறங்கியது. கவலை பறந்தது. இன்றைய மகாசிவராத்திரி நாளில் சைவர்களுக்குச் சிவபெருமான் தந்த அருட் செய்தியாகப் போற்றினேன்.

அந்தக் கருத்தை மாற்ற நான் விரும்பவில்லை. ஏனெனில் உள்ளத்தில் தேனாக வந்து பாயும் சிவனின் அருளைப் போக்க விரும்பவில்லை.

ஆனாலும் அருட்தந்தை பி. யோ. செபரட்ணம் அவர்களே மன்னார் மாவட்டக் குரு முதல்வர் அருட்பணி அ. விக்ரர் சோசை அவர்கள் எழுதியன படித்தீர்களா?

நீங்கள் எழுதியதில் "ஒரு கத்தோலிக்கக் குருவின் வழிகாட்டலில் கத்தோலிக்க மக்களால் சேதமாக்கப்பட்ட நிகழ்வு பற்றி ஊடகங்களில் வெளியான செய்திகள்" என்றீர்கள்.

மன்னார் மாவட்டக் குரு முதல்வர் அருட்பணி அ. விக்ரர் சோசை அவர்கள் எழுதியதில் "படங்களில் தெரிவிக்கப்பட்டது போல எதுவும் இடித்துத் தகர்க்கப்படவில்லை. புதிதாகப் பலவந்தமாகக் கொன்கிறீட் இட்டுப்போடப்பட்ட கம்பிகளே பிடுங்கப்பட்டன. இந்த சம்பவம் நிகழும் பொழுது எந்த ஒரு அருட்பணியாளர்களும் அந்த இடத்தில் இருக்கவில்லை" என்கிறார்.

நீங்கள் எழுதியது நம்பத் தக்கதா? அருட்பணி அ. விக்ரர் சோசை அவர்கள் எழுதியது நம்பத் தக்கதா? சமூக ஊடகங்களில் வெளிவந்த படங்கள், காணொலிகள் சொல்பவை என்ன?

என் வேண்டுகோள் இதுவே. நடந்தவை நடந்தவையாகப் போகட்டும். நடப்பவை நல்லவையாகட்டும். பல்லாயிரம் ஆண்டு பழமையான திருக்கோயிலுக்குச் சாலை முனையில், சந்திப்பில் வரவேற்பு வளைவை நீங்களே அமைத்துத் தாருங்கள்.

சைவர்களுடன் நல்லிணக்கமாக வாழ இதைவிட வேறென்ன வேண்டும்.

சைவர்கள் உங்களின் 4.3.19 கடிதக் கண்ணோட்டம் உடையவர்கள் என்பதற்கான காட்டு இதோ..

சிலாபம் அருகே உடைப்பு நகரில் உள்ள பழமை வாய்ந்த கத்தோலிக்க St. Francis Xavier’s Church Udappuwa தேவாலயத்தைப் புதுப்பித்துப் பல்லாண்டுகளாகப் பராமரிப்பவர்கள், சைவர்களான உடைப்பு அருள்மிகு திரௌபதை அம்மன் கோயிலார் என்பதை நீங்கள் அறியாதவரல்ல.

'யாதொரு தெய்வம் கொண்டீர் அத்தெய்வமாகி ஆங்கே மாதொரு பாகனார்தாம் வருவர்' என்பதே சைவர்களின் கண்ணோட்டம். அகத்தே அருள் நெறியாகப் புறத்தே 'மதமாக' எவரும் வாழக்கூடாது.

உங்களின் 4.3.19 கடிதக் கண்ணோட்டத்தை அனைவரும் கொண்டால் சைவமும் கத்தோலிக்கமும் அருள் நோக்கு மட்டுமே கொண்ட சமயங்களாாகும்.04. 03. 2019

திருக்கேதீஸ்வரம் வீதி வளைவு சேதமாக்கப்பட்ட நிகழ்வுக்கு எமது அதிர்ச்சியையும், கவலையையும், கண்டனத்தையும் தெரிவிக்கின்றோம்

எமது இந்து மத சகோதரர்களின் மிகவும் பழமைவாய்ந்த, சரித்திரப் பிரசித்திபெற்ற திருத்தலமாக விளங்குகின்ற திருக்கேதீஸ்வரம் ஆலய வீதியில் அமைக்கப்பட்டிருந்த வளைவு ஒரு கத்தோலிக்கக் குருவின் வழிகாட்டலில் கத்தோலிக்க மக்களால் சேதமாக்கப்பட்ட நிகழ்வு பற்றி ஊடகங்களில் வெளியான செய்திகள் எமக்கு ஆழ்ந்த அதிர்ச்சியையும், கவலையையும் ஏற்படுத்தியுள்ளன. கத்தோலிக்கர் என்ற வகையில் நாம் வெட்கித் தலைகுனிவதோடு எமது வன்மையான கண்டனத்தையும் தெரிவிக்கின்றோம்.

தமது சிவராத்திரி விழாவை அனுஷ்டிக்கும் தருணத்தில் நடந்த இத்தகாத நிகழ்வினால் மனமுடைந்து காணப்படும் இந்து மத சகோதரர்களுக்கு எமது ஆழ்ந்த கவலையைத் தெரிவிக்கின்றோம். எல்லா மதங்களையும், மதத்தவர்களளையும் அன்பு செய்யவேண்டும். மதிக்கவேண்டும் என்றுதான் கத்தோலிக்க திரு அவை எமக்குப் போதிக்கிறது. இந்நிலையில், இச்செயலை எவ்வகையிலும் நியாயப்படுத்த முடியாது. தமிழர்களாகிய நாம் மதவேறுபாடுகளின்றிச் சகோதரத்துவத்தில் வளரவேண்டியது மிகவும் இன்றியமையாததாக இருக்கும் இந்நிலையில் இப்படியான வேண்டத்தகாத நிகழ்வுகள் எதிர்காலத்தில் நடைபெறாது இருக்கவும், நடைபெற்ற செயலுக்குப் பிராயச்சித்தம் செய்யவும் சம்பந்தப்பட்டவர்கள் முன்வரவேண்டுமென்று வினயமாகக் கேட்டுக்கொள்கிறோம்.

இயேசுவின் வாழ்வாலும் போதனையாலும் நாம் பெற்றுக்கொண்ட அன்பு, மன்னிப்பு, விட்டுக்கொடுப்பு, தியாகம், புரிந்துணர்வு, சகோதரத்துவம், குழும வாழ்வு ஆகிய எமது கத்தோலிக்க மதத்தின் அடையாளங்களை நாம் இழந்துவிடாமல் பாதுகாப்போம். இப்படியான நிகழ்வுகளால் எமது கத்தோலிக்க மதத்தின் பரிசுத்தத்தனத்துக்கு ஏற்படும் களங்கங்களுக்காக நாம் மனம் வருந்திப் பிராயச்சித்தம் செய்யவேண்டும்.

தவிர்க்கமுடியாத காரணங்களால் மதங்களுக்கிடையே அவ்வப்போது ஏதாவது கருத்துவேறுபாடுகள் ஏற்படும் பட்சத்தில் ஆரோக்கியமான பேச்சுவார்த்தைகள் மூலமாக அவற்றைத் தீர்த்துவைக்க முயற்சி செய்யவேண்டுமேயொழிய வன்முறைகளிலும், அடாவடித்தனங்களிலும் ஈடுபடவே கூடாது.

அருட்தந்தை பி. யோ. ஜெபரட்ணம் குரு முதல்வர் யாழ்ப்பாணம் மறைமாவட்டம்

Very Rev. Fr. P. Josephidas Jebaratnam

Vicar General, Diocese of Jaffna, Bishops House, Jaffna, Sri Lanka.


மாசி 20, 2050 திங்கள் (04.03.2019).

Read more...

வெள்ள பாதிப்புக்கு உள்ளான பாடசாலைகள், விரைவில் அபிவிருத்தி செய்யப்படும் - ஆளுநர் சுரேன் ராகவன்

கடந்த தினங்களில் நாட்டில் நிலவிய சீரற்ற காலநிலையில் போது, ஏற்பட்ட வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட வட மாகாண பாடசாலைகள், விரைவில் அபிவிருத்தி செய்யப்படும் என, மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் இராகவன் தெரிவித்துள்ளார்.

இதன் முதல் கட்ட நடவடிக்கைகளுக்காக 315 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு மாவட்டத்தில் எட்டு பாடசாலைகளும், கிளிநொச்சி மாவட்டத்தில் 11 பாடசாலைகளும் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளன.

இதன் காரணமாக குறித்த பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகளுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எனவே பாதிக்கப்பட்ட பாடசாலைகளை விரைவில் அபிவிருத்தி செய்வதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுப்பதாக, வட மாகாண ஆளுநர், கலாநிதி சுரேன் ராகவன் குறிப்பிட்டார்.

Read more...

நான்கு பெண்கள், ஹெரோயினுடன் கைது - காவல்துறை தலைமையகம்

ஹெரோயின் போதைப்பொருளுடன் நான்கு பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள். அனுராதபுரம், கிரேன்ட்பாஸ், அங்குலான ஆகிய பகுதிகளில் வைத்து இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் கைது செய்யப்பட்டவர்கள் 26, 35, 49 மற்றும் 68 வயதுகளை உடையவர்கள் என தெரிவிக்கப்படுகிறது. கைது செய்யப்பட்ட பெண்களிடம் தற்போது தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.

அத்துடன் சந்தேக நபர்கள் இன்று நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக காவல்துறையினர் மேலும் குறிப்பிட்டனர்.

Read more...

மஹிந்தவின் ஆட்சிக்காலத்தில், போதைப் பொருள் வர்த்தகர்கள், அரசியல் வாதிகளுடன் நெருங்கிச் செயல்பட்டனர் - நளிந்த ஜயதிஸ்ஸ

மஹிந்த ராஜபக்சவின் நிர்வாக காலத்தில் போதைப் பொருள் வர்த்தகர்கள் அரசியல் வாதிகளுடன் மிகவும் நெருங்கிச் செயற்பட்டதாக, பாராளுமன்ற உறுப்பினர் நளிந்த ஜயதிஸ்ஸ குற்றம் சுமத்தியுள்ளார்.

ஜேவிபியின் பண்டாரகம தொகுதி அமைப்பாளர் கூட்டத்தில் கலந்து கொண்ட அவர் இதனைத் தெரிவித்தார். கடந்த அரசாங்கம் போதைப் பொருள் வர்த்தகத்தைக் கட்டுப்படுத்த உரிய நடவடிக்கையை மேற்கொள்ளவில்லை. அதற்கு பிரதான காரணம், அப்போதைய போதைப்பொருள் வர்த்தகர்கள், அரசியல் வசதிகளுடன் நெருக்கமான உறவை பேணி வந்தமையாகும்.

அரசியல் பின்புலத்துடன் போதைப்பொருள் கடத்தலை மேற்கொண்டு, தம்மை பாதுகாத்துக் கொள்வதற்காகவே, போதைப்பொருள் கடத்தல்காரர்கள் இவ்வாறு அரசியல்வாதிகள் இந்த நட்பை கொண்டிருந்தனர் என, பாராளுமன்ற உறுப்பினர் நளிந்த ஜயதிஸ்ஸ குறிப்பிட்டுள்ளார்.

Read more...

மாகந்துரே மதுஷின் வழிநடத்தலின் கீழ் கொள்ளையிடப்பட்ட வைரம், கண்டுபிடிக்கப்பட்டது - ருவான் குணசேகர

டுபாயில் வைத்து கைது செய்யப்பட்ட, பிரபல பாதாள உலக குழு தலைவர் மாகந்துரே மதுஷின் வழிநடத்தலின் கீழ் இடம்பெற்றதாக கூறப்படும் பாரிய கொள்ளை சம்பவம் குறித்து, இன்றைய தினம் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த தினம் பன்னிப்பிட்டி பகுதியில் உள்ள வைர வியாபாரியிடம் இருந்து, 500 கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியுடைய வைரம் கொள்ளையிடப்பட்டது. இதனை அடுத்து குறித்த சம்பவம் தொடர்பில் காவல் நிலையத்தில் முறைப்பாடு அளிக்கப்பட்டதை அடுத்து, தொடர்ந்தும் விசாரணைகள் இடம்பெற்றன.

இதன்போது, கொள்ளையடிக்கப்பட்ட பெறுமதியான வைரத்துடன், ஒருவர் இன்றைய தினம் கைது செய்யப்பட்டார். பேலியகொட குற்றத்தடுப்புப் பிரிவு அதிகாரிகளால், பாணந்துறை – வாழைத்தோட்டம் பகுதியில் வைத்து குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் கைது செய்யப்பட்ட சந்தேக நபரின் வீட்டை சோதனையிட்டபோது, அங்கு சுமார் ஒன்றரை கோடி ரூபா பணமும் கைப்பற்றப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

இதனிடையே கைது செய்யப்பட்ட சந்தேக நபர், மாகந்துரே மதுஷின் நெருங்கிய நண்பர் என்பதுடன், மதுஷின் தந்தை மரணித்த போது, அவரது இறுதி கிரியைகளில் கலந்து கொண்டிருந்ததாக காவல்துறை ஊடக பேச்சாளர் ருவன் குணசேகர மேலும் தெரிவித்துள்ளார்.


Read more...

கொழும்பில் வாழும் வீடற்றவர்களுக்கு, நிலையான மாடி வீட்டுத் திட்டம்

கொழும்பில் வாழும் வீடற்றவர்கள் கௌரவமாக வாழ்வதற்காக எதிர்வரும் 2024ஆம் ஆண்டளவில் நிலையான மாடிவீட்டுத் திட்டமொன்று அமைத்துக் கொடுக்கப்படும் என, மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பு நகரில் மத்திய தர வர்க்கத்தினர் வசதியற்ற நிலையில் வாழ்ந்து வருகின்றார்கள். இவர்களும் அந்த வீட்டுத் திட்டத்தில் உள்ளடக்கப்படுவார்கள் என, அமைச்சர் குறிப்பிட்டார். மத்திய கொழும்பு அபிவிருத்தி தொடர்பான கூட்டத்தில் கலந்து கொண்ட அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

அத்துடன் கொழும்பு மெனிங் சந்தைத் தொகுதி அடுத்த வருடம் பேலியகொடவிற்கு மாற்றப்படும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

Read more...

பொலிஸ் அதிகாரிகளின் சுக, துக்கங்கள் குறித்த விசேட கலந்துரையாடல்

பொலிஸ் அதிகாரிகளின் சுக, துக்கங்களை ஆராய்ந்து அதற்கு தீர்வு காணும் விசேட கலந்துரையாடல் ஒன்று பத்தரமுல்ல - சுஹூறுபாயாவில் அமைந்துள்ள பாதுகாப்பு அமைச்சின் சட்டம் மற்றும் ஒழுங்கு தொடர்பான பிரிவில் இன்று இடம்பெறவுள்ளது.

ஜனாதிபதி அலுவலகத்தின் பிரதானி எச்.எம்.பி.ஹிட்டிசேகர தலைமையில் இந்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பணிப்புரைக்கமைய பொலிஸ் அதிகாரிகளின் சுக துக்கங்களை கேட்டறிந்து அதற்கு தீர்வுகளைக் காணும் வகையில் இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுகிறது.

ஜனாதிபதி அலுவலகத்தின் பிரதானி எச்.எம்.பி.ஹிட்டிசேகர தலைமையில் ஐந்து பேர் கொண்ட குழு இதற்காக நியமிக்கப்பட்டுள்ளது. குறித்த குழு தமது கலந்துரையாடலை அடுத்து, பொலிஸ் அதிகாரிகளின் சுக, துக்கங்களை விரைவாக நிவர்த்திப்பதற்கான பணிகளை முன்னெடுக்கும் என, குறிப்பிடப்பட்டுள்ளது.

Read more...

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, இலங்கையின் பல இடங்களில் விசேட நிகழ்வுகள் இடம்பெறும்.

எதிர்வரும் வெள்ளிக்கிழமை சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில் மகளிர் தின தேசிய நிகழ்வுகள் இம்முறை அனுராதபுரத்தின் சல்காது விளையாட்டரங்கில் இடம்பெறவுள்ளது.

இந்த தேசிய நிகழ்வில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க, அமைச்சர் சந்திராணி பண்டார உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் கலந்து கொள்கின்றனர்.

அத்துடன் அகில இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தும் பல மகளிர் அமைப்புக்கள் இந்த தேசிய நிகழ்வில் கலந்து கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read more...

இந்த ஆண்டுக்கான வரவு - செலவு திட்டம் குறித்த முதலாம் வாசிப்பு, தற்போது ஆரம்பம்

2019 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவு திட்டம் குறித்த முதலாம் வாசிப்பு தற்போது, நிதி அமைச்சர் மங்கள சமரவீரவால் நாடாளுமன்றத்தில் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் கூடிய அமைச்சரவை கூட்டத்தின் போது, 2019 ஆம் ஆண்டுக்கான பாதீட்டு அறிக்கையை முன்வைப்பதற்கான யோசனைக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டதாக, சபை முதல்வர் லக்ஷ்மன் கிரியெல்ல குறிப்பிட்டிருந்தார். இதன் பிரகாரம் இந்த ஆண்டுக்கான பாதீடு மீதான முதலாம் வாசிப்பு நாடாளுமன்றத்தில் தற்போது இடம்பெற்று வருகின்றது.

''மக்களை வலுவூட்டல், மற்றும் ஏழைகளை ஊக்குவித்தல்'' என்ற தொனிப்பொருளில், இந்த ஆண்டுக்கான பாதீடு தயாரிக்கப்பட்டுள்ளது. இன்றைய முதலாம் வாசிப்பை அடுத்து, பாதீட்டின் இரண்டாம் வாசிப்பு எதிர்வரும் 12 ஆம் திகதி, நாடாளுமன்றத்தில் இடம்பெற்று அன்றைய தினமே வாக்கெடுப்பும் நடத்தப்படும். இந்த நடவடிக்கையை அடுத்து மூன்றாம் வாசிப்பும், குழுநிலை விவாதமும் இடம்பெறும் என்று நிதி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இந்த புதிய பாதீட்டின் படி, மொத்த செலவு 4550 பில்லியன் ரூபாய்களாகும். அத்துடன் மொத்த வருமானமாக 2400 பில்லியன் ரூபாய்கள் கணிப்பிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read more...

கிளிநொச்சியில் ஒருவர் கொலை. குடும்பத் தகராறு காரணம்.

கிளிநொச்சி உதயநகர் பகுதியில் ஒருவர் இன்று கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ்சார் தெரிவித்துள்ளனர். கொலை செய்யப்பட்ட நபர் கிளிநொச்சியில் உள்ள காப்புறுதி நிறுவனமொன்றில் முகாமையாளராக கடமையாற்றி வருகின்றார். குறித்த நபர் ஒரு பிள்ளையின் தந்தையான 33 வயதுடைய காந்தலிங்கம் பிரேம ரமணன் என்பவர் என, கண்டறியப்பட்டுள்ளது.

இவர் குடும்ப தகராறு காரணமாகவே கொலை செய்யப்பட்டதாக பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணையிலிருந்து தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொலையுண்டவருக்கும் அவரது மைத்துனருக்கும் இடையில் ஏற்பட்ட சண்டையில் அவரது மைத்துனரே அவரை அடித்து கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

உயிரிழந்தவரின் சடலம் தற்போது கிளிநொச்சி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். இந்த அசம்பாவிதம் காரணமாக அப்பகுதியில் பதற்றமான சூழல் உருவாகியுள்ளது.


Read more...

கொழும்பிற்கு செல்லும் ரயிலில் தாமதம் - நள்ளிரவு முதல் தொடர் பணிப்பகிஷ்கரிப்பு

இன்று நள்ளிரவு முதல் தொடர் பணிப்பகிஷ்கரிப்பு நடவடிக்கையை ஆரம்பிக்கவுள்ளதாக ரயில்வே என்ஜின் ஊழியர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

ரயில்வே திணைக்களத்தின் சட்ட திட்டங்களுக்குப் புறம்பாக ரயில் சாரதிகள் நியமனம் இடம்பெற்றுள்ளமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தே இந்த பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்படுவதாக அச்சங்கத்தின் செயலாளர் இந்திக தொடங்கொட தெரிவித்துள்ளார்.

இதனிடையே, ரம்புக்கனை - கடிகமுக ரயில் நிலையங்களுக்கு இடையில் ரயில் ஒன்றில் தொழில்நுட்பக்கோளாறு ஏற்பட்டமையால், கண்டியில் இருந்து கொழும்புக்கு பயணிக்கும் அனைத்து ரயில் சேவைகளிலும் தாமதம் ஏற்படும் என்று ரயில்வே கட்டுப்பட்டுச்சபை அறிவித்துள்ளது.


Read more...

இன்று காலை வெளியாகிய வானிலை அறிக்கை

சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மாத்தறை மற்றும் களுத்துறை மாவட்டங்களிலும் பல இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது என்று வளிமண்டலவியல் திணைக்களம் இன்று காலை வெளியிட்டுள்ள வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊவா மாகாணத்திலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் பல தடவைகள் மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்படுகின்றது.

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்பிற்கான வானிலை முன்னறிவிப்பு

கொழும்பிலிருந்து காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. காலியிலிருந்து மாத்தறை ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் சில இடங்களில் பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது தென்கிழக்கு அல்லது மாறுபட்ட திசைகளிலிருந்து வீசக்கூடுவதுடன் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 20-30 கிலோ மீற்றர் வரை காணப்படும் என்றும் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Read more...

இலங்கை தொடர்பான முதலாவது ஆலோசனை கூட்டம் இன்று

இலங்கை தொடர்பில் ஜெனீவாவில் முன்வைக்கப்படவுள்ள பிரேரணை தொடர்பான முதலாவது ஆலோசனை கூட்டம் இன்று நடைபெறவுள்ளது. ஜெனீவா மனித உரிமைகள் பேரவையின் குழு அறையில் இடம்பெறவுள்ள இந்த ஆலோசனை கூட்டத்தை பிரித்தானியா, கனடா மற்றும் ஜேர்மன் உள்ளிட்ட நாடுகள் ஏற்பாடு செய்துள்ளன.

இதில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகளும் பங்கேற்கவுள்ளனர். அத்துடன் இலங்கை சார்பிலும் அதிகாரிகள் பங்கேற்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த மூன்று நாடுகளுமே தற்போதைய நகல் பிரேரணையை தயாரித்திருக்கின்றன.
இன்று பிரித்தானியா, கனடா மற்றும் ஜேர்மன் உள்ளிட்ட நாடுகள் ஒன்று சேர்ந்து தயாரித்த இலங்கை குறித்த பிரேரணையின் நகல்வரைவு தொடர்பாக ஆராயப்படவுள்ளன.

விசேடமாக இந்த பிரேரணையில் புதிதாக விடயங்கள் சேர்க்கப்படவேண்டுமா? அல்லது முன்னர் பிரேரணையில் உள்ள விடயங்களை திருத்தத்திற்கு உட்படுத்த வேண்டுமா? போன்ற விடயங்கள் தொடர்பாக விரிவாக ஆராயப்படவுள்ளது. இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்கும் உறுப்பு நாடுகள் தமது யோசனைகளை முன்வைக்க சந்தர்ப்பம் காணப்படுகின்றன.

இந்த நிலையில் இலங்கை தொடர்பான பிரேரணை குறித்த தமது நிலைப்பாட்டை இலங்கை அதிகாரிகள் இந்த கலந்துரையாடலில் முன்வைப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Read more...

போதைப்பொருள் நடவடிக்கையை கண்டறிய விசேட மோப்ப நாய்கள்

நாட்டில் கடத்தப்படுகின்ற அல்லது விற்பனை செய்யப்படுகின்ற கொக்கெய்ன், ​ஹெரோயின் ஆகிய போதைப்பொருள்களை கண்டறிவதற்கு பொலிஸ் மோப்பநாய்கள் பயிற்றுவிக்கப்பட்டுள்ளதாக பொலீஸார் தெரிவித்துள்ளனர். இந்த விசேட நடவடிக்கைக்காக சுமார் 70 பொலிஸ் மோப்பநாய்ககள் பயிற்றுவிக்கப்பட்டுள்ளதாக, பொலிஸார் கூறுகின்றனர்.

இலங்கை பொலிஸாரின் கடமைகளுக்கு துணையாக பொலிஸ் மோப்பநாய்கள் பிரிவில் 222 நாய்கள் செயற்பட்டுவரும் நிலையில், போதைப்பொருள் கடத்தல்களை தடுப்பதற்காக 70 பொலிஸ் மோப்பநாய்ககள் பயிற்றுவிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். இலங்கைப் பொலிஸ் படைக்கு 60 மோப்ப நாய்கள் வெளிநாடுகளிலிருந்து வருவிக்கப்பட்டு நாட்டில் விசேட பயிற்சிகள் அளிக்கப்பட்டுள்ளன.

இதனிடையே, விமானம் மூலம் நாட்டிற்கு கொண்டுவரப்படும் போதை பொருட்களை தடுப்பதற்கு, கட்டுநாயக்க விமான நிலையத்தில்
பொலிஸ் மோப்பநாய் பிரிவு செயற்படுத்தப்படுகின்றது. அதேபோன்று கொழும்பு துறைமுகம் மூலம் இரகசியமாக நாட்டிற்குக் கொண்டுவரப்படும் போதைப்பொருளை கைப்பற்றுவதற்கு உதவும் வகையில், துறை முகத்திலும் பொலிஸ் மோப்பநாய் பிரிவு செயற்படுத்தப்படுகின்றது.

மேலும் எதிர்காலத்தில் காலி மற்றும் ஹம்பாந்தோட்டை துறைமுகங்களிலும், மத்தள விமான நிலையத்திலும் பொலிஸ் மோப்பநாய் பிரிவொன்று ஸ்தாபிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Read more...

Monday, March 4, 2019

ஜனாதிபதி ஆணைக்குழுவின் முறைப்பாடுகளை ஏற்கும் காலம், எதிர்வரும் வியாழக்கிழமையுடன் நிறைவடையும்.

அரச நிறுவனங்களில் இடம்பெற்ற கருதப்படும் ஊழல் மோசடிகள் தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் முறைப்பாடுகளை ஏற்கும் காலம் எதிர்வரும் வியாழக்கிழமையுடன் நிறைவடைகிறது.

இன்று வரையில் இந்த ஆணைக்குழுவிற்கு 295 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளன. 2015 ஆம் ஆண்டு ஜனவரி 15 ஆம் திகதியில் இருந்து 2018ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் அரச நிறுவனங்களில் இடம்பெற்ற ஊழல் மற்றும் மோசடிகள் தொடர்பாக ஆராய்வதற்காக ஜனாதிபதி ஆணைக்குழு நியமிக்கப்பட்டது.

இந்த நிலையில், கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளை ஆராய்ந்து, குறித்த ஆணைக்குழு தமது அறிக்கையை விரைவில் சமர்ப்பிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Read more...

மாலைதீவில் கைது செய்யப்பட்ட இலங்கை மீனவர்களை விடுவிக்க, உரிய நடவடிக்கை ஆரம்பம் - கல்யாணி ஹேவா பத்திரன

மாலைதீவில் கைது செய்யப்பட்ட இலங்கை மீனவர்கள் 25 பேரையும் விடுதலை செய்ய உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, மீன்பிடி மற்றும் நீரியல்வள அபிவிருத்தி திணைக்களத்தின் வழிநடத்தல் பணிப்பாளர் கல்யாணி ஹேவா பத்திரன தெரிவித்துள்ளார்.

சிலாபத்தில் இருந்து இரண்டு படகுகளில் தொழிலுக்காக சென்ற இவர்கள், மாலைதீவு கடல் எல்லையில் அத்துமீறிய நிலையில் மாலைதீவு கடலோர பாதுகாப்பு படையினரால் கடந்த சனிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர்.

அந்த மீனவர்கள் குறித்த தகவல்கள் வெளிவிவகார அமைச்சின் ஊடாக மாலைதீவில் உள்ள இலங்கைத் தூதுவராலயத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாக, வழிநடத்தல் பணிப்பாளர் தெரிவித்தார். குறித்த மீனவர்கள் தாய்நாட்டுக்க திரும்பியவுடன் மேலதிக விசாரணைகள் நடத்தப்படும் என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.

Read more...

பொகவந்தலாவை தோட்ட குடியிருப்பு இடிந்து வீழ்ந்தும், இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை

பொகவந்தலாவ டின்சின் தோட்டப்பகுதியில், 15ஆம் இலக்க லயன் குடியிருப்பின் ஒரு பகுதி, சரிந்து விழுந்துள்ள போதும் இது தொடர்பில் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என குடியிருப்பாளர்கள்; கவலை தெரிவித்துள்ளனர்.

குறித்த லயன் குடியிருப்பில் ஏற்பட்ட வெடிப்புகள் மற்றும் குடியிருப்பு தாழிறக்கம் காரணமாக, அதில் வசித்து வந்த 12 குடும்பங்கள் உறவினர்களின் வீடுகளில் தங்கியுள்ளனர்.

இது தொடர்பில் சம்மந்தப்பட்டவர்களுக்கு அறிவித்தும் இதுவரை உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை அந்த மக்கள் கவலை தெரிவித்துள்ளனர். இந்த விடயத்தில் அதிகாரிகள் விரைவாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என, குடியிருப்பிலுள்ள மக்கள் வலியுறுத்தல் விடுத்துள்ளனர்.

Read more...

யாழில் படையினரிடம் உள்ள காணிகளை விடுவிப்பதற்கான நடவடிக்கைகளை விரைவுபடுத்த ஆளுநர் கோரிக்கை

யாழ் மாவட்டத்தில் படையினரின் வசமுள்ள தனியார் காணிகளை விடுவிப்பதற்கான நடவடிக்கைகளை விரைவுபடுத்துமாறு ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இன்று யாழ் மாவட்ட பாதுகாப்பு படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சிவிடம் இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

யாழ் மாவட்ட பாதுகாப்பு படைகளின் தலைமையகத்திற்கு இன்று முற்பகல் விஜயம் மேற்கொண்ட வடக்கு ஆளுநர், யாழ் மாவட்ட கட்டளைத்தளபதியுடன் கலந்துரையாடல் ஒன்றில் ஈடுபட்டார். இந்த சந்திப்பில், யாழ் மாவட்டத்தின் தற்போதைய பாதுகாப்பு நிலைமைகள் மற்றும் நல்லிணக்க ரீதியில் இராணுவத்தினரால் முன்னெடுக்கப்படும் மனிதாபிமான செயற்பாடுகள் தொடர்பாகவும் பேசப்பட்டன.

மேலும், ஜனாதிபதி மேற்கொண்டுவரும் நல்லிணக்க செயற்பாடுகளுக்கமைவாக பொதுமக்களின் காணிகள் படிப்படியாக விடுவிக்கப்பட்டு வருவதையும் குறிப்பாக யாழ் மாவட்டத்தில் படையினரால் பெருமளவிலான காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளதை பாராட்டிய ஆளுநர், மேலதிகமாக தற்போது பாதுகாப்பு படையினரிடம் இருக்கும் தனியார் காணிகளை விடுவிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதோடு, பாதுகாப்பு கேந்திர ஸ்தானத்தில் அக்காணிகள் இருக்கும் பட்சத்தில் காணி உரிமையாளர்களுடன் கலந்துரையாடி அவற்றிற்கு மாற்றீடான நடவடிக்கைகளை மேற்கொண்டு யாழ் மாவட்டத்தில் காணப்படும் குறித்த காணிப்பிரச்சனைகளை விரைவில் முடிவிற்கு கொண்டுவருமாறும் கட்டளைத்தளபதியிடம் கோரிக்கை விடுத்தார்.


Read more...

இன்றும் 20 ஏக்கர் மக்கள் காணிகள் விடுவிப்பு

யாழ் - வலிகாமம் வடக்கில் இராணுவத்தின் பிடியில் இருந்த 20 ஏக்கர் காணிகள் இன்று விடுவிக்கப்பட்டுள்ளன. குறித்த காணிகள் படையினரின் தேவைகளுக்காக பயன்படுத்தப்பட்டு வந்தநிலையில், தெல்லிப்பழை பிரதேச செயலகத்தில் வைத்து யாழ் மாவட்ட இராணுவத் தளபதி தர்சன கெட்டியாராச்சியினால்அவற்றிக்கான காணிப்பத்திரம் யாழ். மாவட்ட அரசாங்க அதிபரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

தெல்லிப்பழை பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட ஜே 251, 253, 246 ஆகிய கிராம சேவகர் பரிவிலுள்ள காணிகளே இவ்வாறு விடுவிக்கப்பட்டுள்ளன. இதனிடையே, நீண்ட காலமாக படையினர் வசமிருந்த காணிகளை விடுவிக்கும் செயற்பாடு நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Read more...

இந்தியாவில் மறைந்து வாழ்ந்த கொலை குற்றவாளி புளூமென்டல் சங்க கைது

புளூமென்டல் சங்க எனும் டி.சங்க என்பவரும் மற்றுமொரு இலங்கையரும் இந்தியாவின் தமிழ்நாட்டில் கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

தமிழ்நாடு ராமநாதபுரம், தங்கப்பா நகர்ப் பகுதியில் உள்ள வீடு ஒன்றில், அறிமுகமில்லாத சிலர் தங்கியிருப்பதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்த நிலையில், உடனடியாக சுற்றிவளைப்பில் ஈடுபட்டபோதே குறித்த இரண்டுபேருடன் மேலும் ஒரு இந்திய பிரஜையும் கைது செய்யப்பட்டுள்ளதாக, குறித்த செய்திகள் தெரிவிக்கின்றன. முதலில் இவர்கள் குடிவரவு மற்றும் குடியகல்வு சட்டத்தை மீறி, தங்கியிருந்த குற்றச்சாட்டிற்காகவே கைது செய்யப்பட்டிருந்தனர்.

புளூமென்டல் சங்க தனது பெயரை குமார் என்றும், தனது வசிப்பிடம் திண்டுகல் எனவும் குறிப்பிட்டு அடையாள அட்டை ஒன்றை வைத்திருப்பது விசாரணையில் வெளிவந்துள்ளது. ஆனால் கைதானவர்தான் கொழும்பைச் சேர்ந்த 33 வயதுடைய டி. சங்க மற்றும் 28 வயதடைய சப்ராஸ் மொஹமட் என்பது கண்டறியப்பட்டுள்ளது. குறித்த இருவரும் கொலைச் சம்பவம் ஒன்றில் ஈடுபட்டுவிட்டு, தப்பித்து இந்தியாவில் வாழ்கின்றமை கண்டறியப்பட்டுள்ளதாக இந்திய பொலீசார் தெரிவிக்கின்றனர்.

Read more...

புலிகளின் பிரித்தானிய பெரும்புள்ளி ஒன்று அரசின் பின்கதவை தட்டுகின்றது.

70 களின் பிற்பகுதி மற்றும் 80 களின் ஆரம்பத்தில் மேற்குலக நாடுகளில் குடியேறிய பல படித்த மேதாவிகள் கண்மூடித்தனமாக புலிகளை ஆதரித்தார்கள் என்பது யாவரும் அறிந்த விடயம். விடுதலைப் போராட்டம் ஆரம்பமானபோது ஆதரித்ததில் ஒரு நியாயம் இருந்தது.

ஆனால் 85 ம் ஆண்டிற்கு பின்னர் புலிகள் இயக்கம் தனது பாசிஸ கோரமுகத்தை காண்பித்து, ஏகபிரதிநிதித்துவம் என்ற சர்வாதிகாரக் கொள்கையை பிரகடணப்படுத்திய பின்னரும் அவ்வியக்கத்திற்கு ஆதரவு நல்கிய படித்த மேதாவிகள் இன்றுவரை தங்களது வரலாற்றுத் தவறு தொடர்பில் எவ்வித ஆய்வையும் மேற்கொள்ளவில்லை.

தமது பிரபல்யத்திற்காகவும் , தாங்கள் ஆரம்பித்த வியாபாரத்தை தமிழ் மக்களின் அடிமட்ட வர்க்கத்திடம் கொண்டுசெல்வதற்காகவும் அவர்கள்கள் அவ்வாறு பயங்கரவாதத்தை ஆதரித்தார்கள்.

அவ்வாறானவர்கள் புலிகளியக்கம் அழித்தொழிக்கப்பட்ட பின்னர் நாயிலிருந்து உண்ணி வெளியேறும் பாணியில் வெளியேறி எதுவுமே தெரியாத அப்பிராணிகள் போன்று செயற்படுகின்றனர். சாதாரண மக்களுக்கு புலிப்போதை ஏற்றிய மேற்படி மேற்தட்டு வர்க்கத்தினர் தாம் வழிகாட்டிய பாதையில் சென்ற மக்கள் பாதை தவறி நிற்கின்றனர் என்பதை மறந்து விட்டனர்.

அத்துடன் நின்றுவிடாது இலங்கை அரசின் பின்கதவால் உள்நுழைந்து தங்களது காரியங்களை செய்து கொள்கின்றனர். இலங்கை பிரஜைகளாக அரசுடன் இணைவதில் எந்த தவறும் இல்லை. ஆனால் அவர்களால் நிறைவேற்றப்படவேண்டிய பாரிய பணி ஒன்று இன்றுவரை கிடப்பில் போடப்பட்டுள்ளது. அப்பணி யாதெனில், இந்த மேதாவிகள் தமிழ் மக்களின் மனங்களில் பிரிவினைவாதத்தை விதைத்து ஒன்றுபட்ட இலங்கைக்குள் தமிழ் மக்கள் வாழ முடியாது என ஊட்டிய விஷத்தை இறக்கவேண்டியதாகும்.

இப்பணியை நிறைவேற்றாது தங்களது கடமைகளை நிறைவேற்றிக்கொள்ள இலங்கை அரசுடன் பின்கதவால் இணைவது வஞ்சகமானது. அந்த வரிசையில் லண்டனில் ஆலயமொன்றின் ஸ்தாபகர் ஒருவர், முன்னொருகாலத்தில் புலிகளின் தீவிர ஆதரவாளராக இருந்தவர் தற்போது ஐ.நா வின் ஸ்தாபனம் ஒன்றின் உயர் பதவிக்காக தன்னை இலங்கை அரசினூடாக சிபார்சு செய்து கொள்வதற்கு முயற்சித்து வருவதாக இலங்கைநெட் அறிகின்றது.

இலங்கை பிரஜையாக அவர் ஐ.நா வில் இலங்கை பிரதிநிதியாக பதவி வகிப்பதில் எமக்கு எந்த ஆட்சேபனையும் கிடையாது. ஆனால் அவர் கடந்தகால மனநிலையிலிருந்து மீண்டுள்ளார் என்பதற்கு இங்கே உறுதி தேவைப்படுகின்றது. 1 லட்சம் ஸ்ரேலிங் பவுண்டுகளை புலிகளுக்கு வழங்கி தமிழ் மக்களிடம் பிரிவினைவாதத்தை விதைக்க உதவிய அவர், அந்த பிரிவினைவாத போதையிலிருந்து பிரிதானியாவில் வாழும் தமிழ் மக்கள் விடுபடுவதற்கும், ஐக்கிய இலங்கைக்கு எதிரான கோஷங்களை கைவிடுவதற்கும் உழைக்கவேண்டும். அவ்வாறு அவர் பொதுவெளியில் இலங்கை நாட்டின் மீதுள்ள பற்றினை வெளிப்படுத்தும்போது, அவர் இலங்கையின் பிரதிநிதியாக செயற்படுவதற்கு தகுதியை பெறுகின்றார்.

புலிகள் இயக்கம் அழித்தொழிக்கப்பட்ட பின்னர் புலிகளின் முக்கிய தளபதிகள் மற்றும் முன்னணி ஆதரவாளர்கள் அரசுடன் இணைந்து கொண்டது யாவரும் அறிந்து கொண்ட விடயம். இருந்தபோதும் அவர்களது செயற்பாடானது இதயசுத்தியுடன் அமைந்துள்ளதாக என்ற கேள்வி இங்கு எழுகின்றது. தமது சுயலாபங்களுக்காக அவ்வாறு இணைந்து கொண்ட அவர்கள் தொடர்ந்தும் பிரித்தாளும் சூத்திரத்தையே கையாண்டு வருகின்றனர் என்பது வேதனைக்குரிய பாடத்திலிருந்து இப்பதிவு பதிவாகின்றது.

Read more...

தேர்தல்கள் ஆணைக்குழுவின் இணையத்தளத்தில் உள்ளடக்க எதிர்பார்க்கும் புதிய விடயங்கள்

அரசியல் கட்சிகள் தொடர்பான முழுமையான தரவுகளை தேர்தல்கள் ஆணைக்குழுவின் இணையத்தளத்தில் உள்ளடக்குவது தொடர்பில், அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் எம்.எம். மொஹம்மட் தெரிவித்துள்ளார். இந்த புதிய யோசனைக்கு கட்சிகளின் கருத்துக்களும் பெறப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில், கட்சி யாப்பு, கணக்காய்வுக்கு உட்படுத்தப்பட்ட கணக்கறிக்கை மற்றும் கட்சிகளின் அதிகாரிகள் குழு தொடர்பான தகவல்களை இணையத்தளத்தில் தரவேற்றவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இது தவிர கட்சிகளினால் தெரிவிக்கப்படும் விடயங்களுக்கு ஏற்ப
அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம். மொஹம்மட் மேலும் தெரிவித்துள்ளார்.


Read more...

வர்த்தகர்கள் கொலை தொடர்பில் நேற்று கைதாகிய இருவருக்கும் விளக்கமறியல்

ரத்கம - உதாகம பிரதேசத்தில் இரண்டு வர்த்தகர்கள் காணாமல் ஆக்கப்பட்டு கொலை செய்யப்பட்டமை தொடர்பில் நேற்று கைது செய்யப்பட்ட இருவரும், எதிர்வரும் 13 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

கடந்த ஜனவரி மாதம் 23 ஆம் திகதி மஞ்சுள அசேல மற்றும் ரஷீன் ஷிந்தக எனப்படும் இரண்டு வர்த்தகர்கள் கடத்தி கொலை செய்யப்பட்டு, பின்னர் எரிக்கப்பட்டமை தொடர்பிலான விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன. இந்தநிலையில், குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் இருவரும் இன்று காலி நீதவான் ஹர்ஷன கெக்குனவல முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில், இந்த விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

குறித்த கொலைச் சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் பொலிஸ் கான்ஸ்டபிள் மற்றும் வன இலாகா அதிகாரி ஆகியோர் நேற்று கைதாகினர்.
இவர்களில் வாக்குமூலமொன்றை வழங்குவதற்காக குற்றப்புலனாய்வுத் திணைக்களத்துக்கு சென்றிருந்தபோதே, தென் மாகாண விசேட விசாரணைப் பிரிவின் பொலிஸ் கான்ஸ்டபிள் கைதாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

Read more...

மன்னார் கிறிஸ்தவர்களின் அராஜகத்திற்கு நீதிமன்று தற்காலிக தீர்வு. அடைக்கலநாதனின் பின்னணி அம்பலமாகுமா?

கிறிஸ்தவ பாதிரி ஒருவர் தலைமையில் மன்னார் திருக்கேதீஸ்வரம் சிவன் ஆலயத்துக்குச் செல்லும் வீதியில் அமைக்கப்பட்ட வீதி வளைவு உள்ளுர் காடையர் காடைச்சிகளால் உடைத்து வீழ்த்தப்பட்டு, அகற்றப்பட்டது.
இலங்கையில் ஏற்பட்ட இனமுரண்பாட்டின் விளைவுகள் தந்த வேதனையிலிந்து நாடு மீள முடியாது தவிக்கையிலையே புதியதோர் மத வன்முறைக்கு இச்செயற்பாடு வித்திடப்பட்டுள்ளது.

இந்துக்களின் பிரதான விரதங்களில் ஒன்றான சிவராத்திரி விரதத்திற்காக நாட்டின் சகல பாகங்களிலுருந்தும் இந்துக்கள் மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்திற்கு செல்வது வழமை. அவ்வாறு நாட்டின் பல்வேறு பிரதேசங்களிலிருந்தும் வருகின்ற மக்களுக்கு வழிகாட்டியாக மன்னார் மாந்தை சந்தியிலிருந்து திருக்கேதீஸ்வரம் சிவன் ஆலயத்துக்குச் செல்லும் கோயில் வீதியில் அமைக்கப்பட்டிருந்த வளைவே உடைக்கப்பட்டுள்ளது.



இந்நிலையில் திருக்கேதீஸ்வர ஆலய நிர்வாகத்தினர் பொலிஸாருடாக விடயத்தினை நீதிமன்றுக்கு கொண்டு சென்றுள்ளனர். விடுமுறைதினமான இன்று விடயம் நீதிபதியின் வாசஸ்தலத்தில் விசாரணை செய்யப்பட்டு, குறித்த வளைவை உடனடியாக திருத்தி அமைக்குமாறும் அதனை எதிர்வரும் நான்கு நாட்களுக்கு அவ்விடத்தில் வைப்பதற்கு அனுமதியளிப்பதாகவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

இந்த உடைப்பு விடயத்திற்கு ஸ்தலத்தில் தலைமை தாங்கிய கிறிஸ்தவ தந்தையான மார்கசு என்பவர் செல்வம் அடைக்கலநாதனின் தீவிர ஆதரவாளர் என்றும் தேர்தல் காலங்களில் அடைக்கலநாதனுக்கு வாக்கு சேகரிக்கும் பேர்வழி என்றும் அறியமுடிகின்றது.

ஆனால் தமிழ் தேசியம், தமிழர் ஒற்றுமை என முழக்கமிடும் செல்வம் இதுவரை மேற்குறித்த பாதிரியின் இழிசெயல் தொடர்பில் கப் என்று இருக்கின்றமை யாவரையும் விசனம் கொள்ள வைத்துள்ளது. இவர்கள் தமது இருப்புக்காக இந்நாட்டில் இன மத மோதல்களை உருவாக்கி குளிர் காய்கின்றனர் என்பது இவ்விடயத்தில் அம்பலமாகின்றது.

இச்சம்பவம் குறித்து சிவசேனை இந்துக்கள் அமைதி காக்க வேண்டும் எனக் கோரியுள்ளது. இது தொடர்பில் சிவசேனை விடுத்துள்ள செய்தியில் கீழ்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

சைவப் பெருமக்களே, சைவ இளைஞர்களே, சைவத் தாய்மார்களே!

திருக்கேதீச்சரத்தில் கோயிலார் அமைத்த வரவேற்பு வளைவு துருப்பிடித்தது. எழுத்துகள் மங்கின. மகாசிவராத்திரி நாள். இரண்டு இலட்சம் சைவர்கள் இலங்கை, இந்தியா மற்றும் புலம்பெயர் நாடுகளில் இருந்து வருவார்கள்.

வளைவைத் திருத்துவோம். மங்கிய எழுத்துகளைப் புதுப்பிப்போம். பொலிவு கண்டு ஆர்ப்போம். அடியார்களுக்கு அருள் பெருக்கும் சூழலை உருவாக்குவோம் எனக் கோயிலார் முயன்றனர். ஆவன செய்தனர்.

சட்டங்களுக்கு மதிப்பளித்தனர். நெடுஞ்சாலை வளர்ச்சித் துறை, வட்ட ஆட்சியர் விதிகள், பிரதேச சபை விதிகள் எவற்றையும் மீறாமல் தமக்குள்ள எல்லைக்குள் தொண்டாகச் செய்தனர்.

வங்காலையில் இருந்து வந்தவனைப் பங்குத் தந்தை என்கின்றனர். புனை துகில் கிறித்தவரான புற உடையில் கிறித்தவரான மார்க்கசு என்ற பெயர் அவனுக்கு. அவனது தொலைப்பேசி +94772881878. எத்தன், ஈனன் எனத் திருஞானசம்பந்தர் 1400 ஆண்டுகளுக்கு முன்னரே இவனைப் போன்றவர்களை அழைத்தார்.

கிறித்தவரான மார்க்கசு கிறித்தவக் குண்டர்களையும் கோடர்களையும் அழைத்துவந்தார். சட்டத்தைக் கையில் எடுத்தார். அரச சட்டங்களை மீறினார். தன்னுடன் வந்தோரை ஏவினார். கோயிலாரை நோக்கி மிரட்டினார். சைவத் தொண்டரை விரட்டினார். படப் பதிவுகள் உள்ளன. காணொலிப் பதிவுகள் உள்ளன.

கோடன் மார்க்கசு தலைமையில் வந்த குண்டரும் கொடியரும் நெடுங்காலம் அங்கிருந்த சைவ வளைவைத் தகர்த்தனர். தரைமட்டமாக்கினர். எம்பெருமானின் வாகனம் நந்தி. அதுவே சைவரின் கொடி. நந்தியெம்பெருமானைக் காலால் மிதித்தனர். காறித் துப்பினர். காழ்ப்பில் திளைத்தனர்.

சைவ உலகமே கலங்காதே. திருப்பித் தாக்காதே. தேவாலயங்கள் மீது கல் வீசாதே. சிலுவைகளைப் புடுங்காதே. கிறித்தவ வளைவுகளை உடைக்காதே. சட்டத்துக்கு மதிப்புக் கொடு.

பாலாவியின் கரைமேல் அடாத்தாகக் கட்டிய உலூர்தம்மாள் தேவாலயத்தைப் பாரிய பெக்கோ எந்திரம் கொண்டு தரைமட்டமாக்கவேண்டும் என நினைக்கிறாய். அது மிக மிகத் தவறு. சட்டத்தை மதித்து நட.

ஆட்சியில் உள்ளவர்கள் சட்டத்தைப் பேணுவார்கள் என நம்பு. அவர்களிடம் முறையிடு.

திருக்கேதீச்சரப் பெருமானின் திருவிளையாடல் ஈதாம். அவரிடம் முறையிடு.

மன்னார் சிவ பூமி. 2000 சதுர கிமீ பரப்பளவு. ஓரிலட்சம் மக்கள். அவர்களுள் சிறுபான்மையாய்ச் சைவ உலகம். ஏனையோர் வந்தேறிய வாழ்வியலினர்.

வந்தேறிகள் உள்ளூரவரை உதைக்கின்றனர். நீ திருப்பி உதைக்காதே. உன் மரபு அதுவல்ல. நாகரீகமாக நடப்பதே சைவ மரபு. சிவ சேனையின் மரபு.

மன்னார் சிவ பூமியாகும் நாள் மலரும். திருப்பித் தாக்காமல், கிறித்தவத் தேவாலயங்களை உடைக்காமல், கிறித்தவ வளைவுகளைச் சேதமாக்காமல், கிறித்தவ சொருபங்களை அகற்றாமல், அறங்காக்கும் கிறித்தவரை மதித்து, கோடன் எத்தன் ஈனன் மார்க்கசு போன்றோரையும் அவனின் தவறான வழிநடத்தலில் வந்த குண்டர்களையும் கொடியோரையும் புறந்தள்ளி, சைவ மரபு பேணுவாயாக. திருக்கேதீச்சரப் பெருமானின் பேரருள் நின்னதாகும்.

அதேநேரம் மன்னார் சம்பவத்திற்கு வெட்கி தலை குனிவதாக யாழ்.மறை மாவட்டம் அறிவித்துள்ளது. அதுவும் மத குருவொருவர் தலைமையில் நடந்த இச்சம்பவத்தினால் மனம் வருந்தியுள்ள இந்து உறவுகளிடம் மன்னிப்பு கோருவதாக யாழ் மறைமாவட்டத்திற்கான குரு முதல்வர் ப. யோ. ஜெபரட்ணம் தெரிவித்துள்ளார்.


Read more...

இந்த அரசாங்கத்திற்கு சர்வதேச விமான நிலையத்தை நிறுவுவதற்கான திறன் கிடையாது - எதிர்க்கட்சித் தலைவர்

பலாலியில் புனரமைக்கப்படவுள்ள விமான நிலையம், சர்வதேச விமான நிலையம் என, அரசாங்கம் போலியான தகவல்களை வெளியிட்டு வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ குற்றம் சுமத்தியுள்ளார். அநுராதபுரத்தில் வைத்து அவர் இதனைத் கூறினார்.

இந்திய அரசாங்கத்தின் நிதி உதவியுடன் யாழ் - பலாலியில் உள்ள விமான நிலையம் புனரமைப்பு செய்யப்படவுள்ளது. இந்த நிலையில் குறித்த சந்தர்ப்பத்தில் கருத்து வெளியிட்ட எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச, ஹம்பாந்தோட்டை - மத்தல சர்வதேச விமான நிலையத்தை அபிவிருத்தி செய்ய முடியாத அரசாங்கத்தினால், மற்றுமொரு சர்வதேச விமான நிலையத்தை நிறுவுவதற்கான திறன் கிடையாது என தெரிவித்துள்ளார்.

அத்துடன், நாட்டில் தற்போது கடத்தல் சம்பவங்கள் பல அரங்கேறி வருவதாக குறிப்பிட்ட எதிர்க்கட்சி தலைவர், மீண்டும் வன்முறையுடனான காலப்பகுதியொன்று உருவாகி வருவதாக குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் யுத்தம் நிறைவுக்கு கொண்டு வரப்பட்டமை மாத்திரமன்றி, தெற்கு மற்றும் வடக்கு மக்களுக்கு எவ்வித அச்சமும், சந்தேகமும் இன்றி வாழ்வதற்கான சூழலை, தமது அரசாங்கம் அன்றே ஏற்படுத்திக் கொடுத்ததாகவும் அவர் இதன்போது நினைவூட்டியுள்ளார்.

இலங்கை மக்களுக்கு நன்மை கிடைக்க வேண்டும் என்ற எண்ணத்துடனேயே யுத்தம் நிறைவுக்கு கொண்டு வரப்பட்டதாக ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

மேலும், ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தினால் வர்த்தகர்களுக்கு நன்மை கிடைக்கும் என்ற எண்ணம், தற்போது கனவாகியுள்ளதாகவும் மஹிந்த ராஜபக்ஷ இதன்போது கூறியுள்ளார்.

Read more...

உத்தேச சுதந்திர வர்த்தக உடன்படிக்கை எதிர்காலத்தில் நன்மை அளிக்கும் - ரேணுகா ஜயமான்ன

பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்த இலங்கைக்கும் பங்களாதேஷிற்கும் இடையிலான உத்தேச சுதந்திர வர்த்தக உடன்படிக்கை எதிர்காலத்தில் நன்மை அளிக்கும் என்று, பங்களாதேஷ் வர்த்தகப் பேரவையின் தலைமைப் பொறுப்பை ஏற்றுள்ள ரேணுகா ஜயமான்ன தெரிவித்துள்ளார். இலங்கை, பங்களாதேஷ் வர்த்தகப் பேரவையின் வருடாந்தப் பொதுக்கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டார்.

இரண்டு நாடுகளுக்கிடையிலான இராஜதந்திர உறவுகள் சுமார் 45 வருட காலமாக காணப்படுகின்றது. இந்த நிலையில் இலங்கைக்கும் பங்களாதேஷிற்கும் இடையிலான உத்தேச சுதந்திர வர்த்தக உடன்படிக்கை, எதிர்காலத்தில் பொருளாதார ஒத்துழைப்பு வலுப்பெற வழிவகுக்குமென அவர் கூறினார்.

Read more...

பிரதமரை விசாரணை செய்யுங்கள், ஆதாரம் தருகின்றோம் - ஜனநாயக இடதுசாரி முன்னணி

கடந்த 4 வருடங்களில் அரச நிறுவனங்களில் இடம்பெற்ற முறைகேடுகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் பிரதமரை விசாரிக்கவேண்டும் என்று முறைப்பாடு ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளது. குறித்த முறைப்பாட்டை ஜனநாயக இடதுசாரி முன்னணியின் உறுப்பினர் ஒருவர் முன்வைத்துள்ளதாக ஆணைக்குழுவின் உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

மத்திய வங்கியின் முறிகள் மோசடியுடன், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கும் தொடர்பிருப்பதாக பலராலும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு வருகின்றது.

இந்தநிலையில், இந்த பிணை முறி மோசடியுடன் தொடர்புடைய பிரதமரிடம் விசாரணைகளை முன்னெடுக்குமாறு குறித்த முறைப்பாட்டில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பிரதமரிடம் விசாரணைகளை மேற்கொள்ளத் தேவையான எல்லாத்
தரவுகளையும் கையளிப்பதற்கு தாம் ஆயத்தமாகவுள்ளதாக அந்த முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் உறுப்பினர் மேலும் குறிபிட்டார்.

பிரதமருக்கு எதிரான விசாரணையை கோரி ஜனநாயக இடதுசாரி முன்னணியின் உறுப்பினர் ஒருவரால் முன்வைக்கப்பட்டுள்ள குறித்த முறைப்பாடு, ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைவர் ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதியரசர் உபாலி அபேரத்ன உள்ளிட்ட குழுவினருக்கு எதிரிவரும் வாரமளவில் கையளிக்கப்படும் எனவும் அவர் கூறினார். இதன்பின்னரே பிரதமரிடம் விசாரணையை முன்னெடுப்பதா? என்பது தொடர்பில் தீர்மானம் எட்டப்படும் எனவும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் உறுப்பினர் மேலும் தெரிவித்துள்ளார்.


Read more...
Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com