Saturday, March 2, 2019

இரணைதீவு மக்களை, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு நேரில் சென்று பார்வையிட்டது.

இரணைதீவு மக்களை, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு நேரில் சென்று பார்வையிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள்ளது. அங்கு குடியேறியுள்ள பொதுமக்கள் முகங்கொடுக்கும் பிரச்சனைகளை கேட்டு அறிந்து, அதற்கான தீர்வுகளை பெற்றுக் கொடுக்கும் நோக்கிலேயே குறித்த ஆணைக்குழு இந்த திடீர் விஜயத்தை மேற்கொண்டுள்ளது. யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி கிளை மனித உரிமைகள் ஆணைகுழுவின் ஆணையாளர் திரு.கனகராஜ் தலைமையில் இந்த குழு, அங்கு சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனம் முன்வைத்த முறைப்பாடு மற்றும் ஊடகங்கள் மூலம் வெளியான மக்களின் பிரச்சனைகளை ஆராய்ந்து, விரைவாக தீர்வுகளை வழங்க தமது ஆணைக்குழு தயாராக உள்ளதாக, மனித உரிமைகள் ஆணையார் இதன்போது குறிப்பிட்டார்.

இந்த சந்திப்பின் போது, இரணைதீவில் குடியேறியுள்ள பொதுமக்கள், அதிகாரிகளிடம் தமது வாழ்வாதாரம் உள்ளிட்ட பல பிரச்சனைகள் குறித்து விளக்கியுள்ளனர். இந்த பகுதியில் குடியறி சுமார் ஒரு வருடம் கடந்துள்ள போதிலும், தாங்கள் உரிய முறையில் பல இன்னல்களுக்கு முகங்கொடுத்துள்ளோம். இது குறித்து சம்மந்தப்பட்ட அதிகாரிகள் தமது கவனத்திற்கு கொண்டு வந்து, எமக்கு உதவ வேண்டும் என, இரணைதீவில் குடியேறியுள்ள மக்கள் ஆணைக்குழுவின் அதிகாரிகளிடம் கோரிக்கை முன்வைத்தனர்.

இந்த மக்களின் பிரச்சனைகளை கேட்டறிந்து கொண்ட இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு, இரணதீவில் உள்ள பாடசாலை, வழிபாட்டுத் தலங்கள்,வீடுகள் என்பவற்றையும் நேரில் சென்று பார்வையிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read more...

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை இருக்க வேண்டும் என்பதே, எனது நிலைப்பாடு - அமைச்சர் மனோ

இலங்கையில் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை ஒருபோதும் ஒழிக்கப்பட கூடாது என்று, அரச கரும மொழிகள் மற்றும் இந்து சமய விவகார அமைச்சர் மனோ கணேசன் குறிப்பிட்டுள்ளார். நேற்றைய தினம் தலைநகர் கொழும்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வொன்றில் கலந்து கொண்டதன் பின்னர், ஊடகங்களுக்கு கருத்துரைத்த போதே, அமைச்சர் மனோ கணேசன் இந்த கருத்தை முன்வைத்தார்.

இலங்கையில் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை அகற்றுவதாக வாக்குறுதி அளித்தே, அனைத்துக் கட்சிகளும் தேர்தலில் போட்டியிட்டு ஆட்சிப் பீடம் ஏறின. எனினும் மக்களுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகள் இதுவரை அமுலுக்கு வரவில்லை.

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை ஒருபோதும் ஒழிக்கப்படக் கூடாது என்ற எண்ணத்திலேயே, எமது தரப்பு உள்ளது. எனினும் தற்போது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையில் உள்ள தன்னிசையான அதிகாரங்கள், பெருமளவு குறைக்கப்பட வேண்டும்.

இதன் ஒரு கட்டமாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன 19 ஆவது திருத்தத்தின் மூலம், இலங்கையின் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையில் உள்ள பல சரத்துகளை குறைத்துள்ளார்.

எனவே எதிர்வரும் 2020 ஆம் ஆண்டு ஆட்சி அதிகாரித்தைக் கைப்பற்றும் ஜனாதிபதிக்கு, இப்போதுள்ள நிறைவேற்று அதிகாரங்கள் மிக குறைவானதாகவே இருக்கும். எனினும் இந்த நாட்டில் நல்லிணக்கத்தை கட்டியெழுப்புவதற்கான முதல் குடிமகனே தேவைப்படுகிறார்.

அதற்கு இலங்கையில் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை இருக்க வேண்டும். இதற்காக எமது தரப்பு மக்கள் விடுதலை முன்னணியுடன் கலந்துரையாடத் தயாராகவே உள்ளது என, அரச கரும மொழிகள் மற்றும் இந்து சமய விவகார அமைச்சர் மனோ கணேசன் குறிப்பிட்டுள்ளார்.

Read more...

வெங்கடாச்சலபதி தரிசனத்திற்காக, பிரதமர் இந்தியாவிற்கு விஜயம்

திருப்பதி வெங்கடாச்சலபதி ஆலய தரிசனத்திற்காக, பிரதமர் ரணில் விக்ரமசிங்க இந்தியாவுக்கு விஜயம் செய்யவுள்ளதாக, பிரதமர் ஊடக பிரிவு குறிப்பிட்டுள்ளது. அதன்படி அவர் இன்று பிற்பகல் வேளையில் திருப்பதிக்கு விஜயம் செய்யவுள்ளார். திருப்பதி வெங்கடாச்சலபதி ஆலயத்தில் இடம்பெறவுள்ள விசேட வழிபாடுகளில் பங்கெடுத்து, இறையருள் பெறவே பிரதமர் இந்த விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார்.

இரண்டு நாட்கள் விஜயமாக அங்கு செல்லும் பிரதமருடன், அவரது பாரியாரும் உடன் செல்வார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னைக்கு விஜயம் செய்த பின்னர், அங்கிருந்து சிறப்பு விமானம் மூலம், மாலை 4.30 அளவில் பிரதமர் திருப்பதியைச் சென்றடைவார். 

பின்னர் அங்கிருந்து, பிரதமர் ரணில் விக்ரமசிங்க திருமலைக்கு சென்று, சொகுசு விடுதியில் இரவு தங்கியிருந்து பின், நாளை அதிகாலை ஆலயத்தில் இடம்பெறும் வழிபாடுகளை முடித்துக் கொண்டு, இலங்கைக்கு திரும்பவுள்ளார்.

இந்த நிலையில் பிரதமரின் வருகையை முன்னிட்டு திருமலையில் விசேட பாதுகாப்பு முன்னேற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Read more...

கே.டி. லால்காந்த, இன்று நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படுவார் - காவல்துறை

ஜே.வி.பி. யின் அரசியல் குழு உறுப்பினர் கே.டி.லால்காந்த காவல்துறையினரால் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டார். மது போதையில் வாகனத்தை செலுத்தி விபத்தை ஏற்படுத்திய குற்றச்சாட்டின் பேரில், இவரை அனுராதபுரம் - புத்தளம் புதிய சிறைச்சாலைக்கு அருகில் வைத்து, காவல்துறையினர் நேற்று மாலை கைது செய்தனர்.

கே.டி.லால்காந்த மது போதையுடன் வாகனத்தை செலுத்திச் சென்ற வேளையில், எதிரே வந்த உந்துருளி ஒன்றுடன் மோதியுள்ளார். இதன் காரணமாக உந்துருளியில் பயணித்த இரு பெண்கள் காயமடைந்து அனுராதபுரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை அடுத்து கே.டி.லால்காந்த உடன் கைது செய்யப்பட்டதுடன், அவரை இன்றைய தினம் அனுராதபுரம் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, காவல்துறை ஊடக பேச்சாளர், காவல்துறை அத்தியட்சகர் ருவான் குணசேகர குறிப்பிட்டார்.

Read more...

மர்மமான முறையில் இரு உடலங்கள் மீட்பு

வெலிகம பகுதியில் மர்மமான முறையில் இரண்டு உடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக, காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர். இந்த உடலங்கள் வெலிகம - தெனிப்பிட்டிய பகுதியில் உள்ள பணியிடத்தில் இருந்து மீட்கப்பட்டன.

அந்த பணியிடத்தல் கடமையாற்றிய ஊழியர்கள் இருவரே இவ்வாறு உடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அப்பகுதி மக்கள் பெரும் பீதியில் உள்ளனர்.

இதேவேளை இந்த சம்பவம் குறித்த விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read more...

நோர்வூட் பகுதியில் சட்டவிரோத மாணிக்கக்கல் அகழ்வு

நோர்வூட் கெசல்கமுவ ஓயாவை அகலபடுத்துவதாக கூறி சட்டவிரோதமாக மாணிக்ககல் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காசல் ரீ நீர்தேக்கத்திற்க்கு நீர் ஏந்தி செல்லும் நோர்வூட் பகுதியில் உள்ள கெசல்கமுவ ஒயாவை அகலப்படுத்தும் போர்வையில், ஊழியர்கள் இந்த நடவடிக்கையை மேற்கொள்கின்றனர்.

அத்துடன் இந்த சட்டவிரோத மாணிக்கக்கல் அகழ்வு நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, பிரதேச மக்கள் நேற்றைய தினம் பாரிய ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்துள்ளதுடன், நோர்வூட் பொலிஸ் நிலையத்தில் முறைபாடு ஒன்றையும் பதிவு செய்துள்ளனர்

மழைக் காலங்களில், கெசல்கமுவ ஓயா பெருக்கெடுத்து, நோர்வூட் பகுதியில் உள்ள குடியிருப்புகளுக்கு, வெள்ள நீர் உள்நுழைவதால், கடந்த நான்கு மாதங்களாக கெசல்கமுவ ஓயாவினை அகலப்படுத்த, அம்பகமுவ பிரதேச செயலாளர் காரியாலத்தின் ஊடாக அனுமதி வழங்கபட்டு, கெசல்கமுவ ஓயாவை அகலப்படுத்தும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையிலேயே பிரதேச மக்கள் குறித்த குற்றசாட்டை முன்வைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Read more...

போதைப்பொருள் குற்றங்களுடன் தொடர்புடைய வழக்குகளை விசாரிக்க, தனியான நீதிமன்றம் - ஜனாதிபதி

போதைப்பொருள் குற்றங்களுடன் தொடர்புடைய வழக்குகளை விசாரிக்க தனியான விசேட நீதிமன்றம் ஒன்றை அமைக்கவுள்ளதாக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன குறிப்பிட்டார். இந்த விடயம் தொடர்பாக, தாம் அடுத்த அமைச்சரவை கூட்டத்தில் கலந்துரையாடவுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

போதைப்பொருட்களை கட்டுப்படுத்துதல், குற்றங்களை குறைத்தல் தொடர்பான சட்ட வரைபுகள் தொடர்பாக நேற்று பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

போதைப்பொருள் குற்றங்கள் தொடர்பாக விசாரணை செய்வதற்கு நீண்டகாலம் செல்கின்றமையால், போதைப்பொருள் ஒழிப்புக்காக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள நிகழ்ச்சித் திட்டங்களை விரைவாக செயல்படுத்த முடிவதில்லை. இந்த நிலைமை விரைவில் சரி செய்யப்பட வேண்டுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சுட்டிக் காட்டினார்

தற்போதுள்ள உயர் நீதிமன்ற கட்டிடத் தொகுதியிலேயே இந்த புதிய நீதிமன்றத்தையும் ஸ்தாபிப்பது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

போதைப்பொருட்களுடன் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்குவது தொடர்பாக இன்று நாட்டின் அனைத்து மக்களும் கவனம் செலுத்தி வருகின்றனர்.

இதேநேரம் கைப்பற்றப்படும் போதைப்பொருட்களை அழிப்பது தொடர்பான முறைமைகளை திருத்த வேண்டியதன் அவசியம் குறித்தும் இந்த கலந்துரையாடலின் போது கவனம் செலுத்தப்பட்டதுடன், இது தொடர்பில் நடைமுறையில் உள்ள சட்ட ஏற்பாடுகள் குறித்தும் விரிவாக ஆராயப்பட்டது.

போதைப்பொருட்களுக்கு அடிமையானவர்களுக்கு புனர்வாழ்வு அளிப்பதற்காக, புனர்வாழ்வு அதிகார சபை ஒன்றை ஸ்தாபிப்பதற்கான நடவடிக்கைகள் ஜனாதிபதியின் தலையீட்டில் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இந்த அதிகார சபையை ஸ்தாபிக்கும் வரை, குறித்த திட்டங்களை தயாரிப்பதற்கு நிர்வாக சபை ஒன்று ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ளதுடன், அதன் செயற்பாடுகள் குறித்தும் இதன்போது ஆராயப்பட்டது.

பாடசாலை மாணவர்கள் பாபுல் போன்ற போதைப் பொருட்களுக்கு அடிமையாகின்ற நிலைமை தற்போது அதிகரித்து வருகின்றது. முறையான சட்ட ஏ ற்பாடுகள் இல்லாமையினால்,போதை பொருளுக்கு எதிரான சட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியாதுள்ளது. இது குறித்து பல பாடசாலை அதிபர்கள் மற்றும் பொலிஸ் அதிகாரிகள் தன்னிடம் முறைப்பாடு தெரிவித்துள்ளதாக ஜனாதிபதி குறிப்பிட்டார்.
அத்துடன் இதற்கான சட்ட திருத்தங்களை மேற்கொள்வது குறித்து அதிகாரிகள் அதிக கவனம் செலுத்த வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்தார்.

இதேவேளை குறித்த கலந்துரையாடலில், சிறைச்சாலைகளின் பாதுகாப்பு மற்றும் அவற்றில் இடம்பெறும் குற்றங்களை தடுப்பது குறித்தும் விசேடமாக கவனம் செலுத்தப்பட்டதுடன், வெலிக்கடை சிறைச்சாலையில் உள்ள பாரதூரமான குற்றவாளிகளை பூசா சிறைச்சாலைக்கு மாற்றுவது தொடர்பிலும், இதற்கான நடவடிக்கைகளை விரைவுபடுத்துமாறும், உரிய தரப்பினருக்கு ஜனாதிபதி பணிப்புரை விடுத்தார்.

இந்த நடவடிக்கைகளின் முன்னேற்றத்தை கண்டறியும் கலந்துரையாடல், எதிர்வரும் ஏப்ரல் மாதம் 02 திகதி இடம்பெறவுள்ளது.

இந்த கலந்துரையாடலில், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் நிறுவனங்களின் தலைவர்களும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Read more...

பாடசாலை கல்வியை முடித்தவர்களுக்கு, விசேட ஆங்கில மொழி பேச்சு பயிற்சி - தேசிய இளைஞர் சேவைகள் மன்றம்

பாடசாலை கல்வியை நிறைவு செய்த 18 தொடக்கம் 35 வயதிற்குட்பட்ட இளைஞர் யுவதிகளுக்காக, விசேட ஆங்கில மொழி பேச்சு பயிற்சி வழங்கப்படவுள்ளது. இந்த பயிற்சி, ஆறு மாத காலத்திற்கு வழங்கப்படும். தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் ஏற்பாட்டில், நாடளாவிய ரீதியில் இந்த பயிற்சிகள் வழங்கப்படவுள்ளன.

இந்த விசேட பயிற்சிகள், எதிர்வரும் பத்தாம் திகதி தொடக்கம் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் பிற்பகல் 2.30 தொடக்கம் 5.30 வரை, மஹரகம தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் கேட்போர் கூடத்தில் இடம்பெறவுள்ளது.

இந்த பயிற்சிகளில் வெளிமாவட்டத்தில் உள்ள, பாடசாலை கல்வியை முடித்தவர்களும் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.

முற்றிலும் இலவசமாக நடத்தப்படும் இந்த பயிற்சிகளில், மாணவர்கள் பங்கு பற்றி, பயன் பெற வேண்டும் என, ஏற்பாட்டாளர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

Read more...

அபிநந்தன் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

பாகிஸ்தானினால் விடுதலை செய்யப்பட்ட இந்திய விமானியான அபிநந்தன், தற்போது மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானின் வான் எல்லைக்குள் தனது நாட்டு விமானம் மூலம் தாக்குதல் நடத்த முயற்சித்த வேளையில், அபிநந்தன் அந்நாட்டு இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டார்.

இதனை அடுத்து அவரை விடுவிக்க வேண்டும் என, இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் பாகிஸ்தானுக்கு அழுத்தம் கொடுத்து வந்தன. இதன்போது பாகிஸ்தான் நாடாளுமன்ற கூட்டத்தில் கலந்து கொண்ட அந்த நாட்டின் பிரதமர் இம்ரான் கான், இந்திய விமானி அபிநந்தனை விடுவிப்பதாக அறிவித்தார்.

நல்லெண்ண அடிப்படையில் விமானி அபிநந்தனை விடுப்பதாக இம்ரான் கான் குறிப்பிட்டார். இவரது அறிவிப்பை அடுத்து உலக நாடுகள், பாகிஸ்தானுக்கு பெரும் வரவேற்பை தெரிவித்த நிலையில், அபிநந்தன் நேற்றைய தினம் பாதுகாப்பாக இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டார்.

இந்த நிலையில் தற்போது விமானி அபிநந்தன் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக, இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Read more...

கொழும்பின் பல பகுதிகளில் இன்று நீர்வெட்டு

கொழும்பின் பல பகுதிகளில், இன்று இரவு 9 மணி முதல் நாளை பிற்பகல் 3 மணி வரை நீர்விநியோகத் தடை அமுல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை இதனை அறிவித்துள்ளது.

இதன்படி கொழும்பின் கொட்டாஞ்சேனை, கிரான்பாஸ், மட்டக்குளி ஆகிய பிரதேசங்களுக்கான நீர் விநியோகம் இந்தக் காலப்பகுதியில் தடைபடும். இதேவேளை, கொழும்பு கோட்டை, புறக்கோட்டை ஆகிய பிரதேசங்களுக்கான நீர் விநியோகம் குறைந்த அழுத்தத்தில் இடம்பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே குறித்த பிரதேசங்களில் வசிக்கும் மக்கள், நீரை சேமித்து வைத்துக் கொள்ளுமாறு, அந்த சபை அறிவுறுத்தல் விடுத்துள்ளது.

Read more...

Friday, March 1, 2019

அரசாங்கம் பாரிய அரசியல் குற்றம் புரிந்துள்ளது. சம்பிக்க ரணவக்க

ஐக்கிய நாடுகள் சபையில் இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்பட்ட தீர்மானத்திற்கு இணை அனுசரணை வழங்கியதன் ஊடாக அரசாங்கம் பாரிய அரசியல் குற்றம் புரிந்துள்ளது என அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் மேற்கண்டவாறு தெரிவித்த அவர் தொடர்ந்து கூறுகையில், பிரித்தானியா மற்றும் ஜேர்மன் போன்ற நாடுகள் இணைந்து மேற்குறித்த தீர்மானத்தை நீடிப்பதற்கான பிரேரணை ஒன்றை கொண்டுவரவுள்ளதாக ஊடகங்கள் மூலமாக அறியக்கூடியதாகவுள்ளது. இலங்கையில் யுத்தம் முடிவுற்ற 10 வருடங்களில் நாட்டில் தமிழ் சிங்கள மக்களுக்கிடையில் எவ்விதமானதோர் இனரீதியான வன்செயல்களும் பதிவாகியிராத நிலையில் இவ்வாறான பிரேரணைகளும் நீடிப்புக்களும் அவசியமற்றதாகும் என கூறினார்.

யுத்த காரணங்களுக்காக கைது செய்யப்பட்டுள்ள புலிகள் மற்றும் இராணுவத்தினர் ஆகிய இருதரப்பினருக்கும் பொதுமன்னிப்பளிப்பதே சிறந்தாகும் என்றும் அவர் தெரிவித்தார்.

Read more...

இந்திய விமானி விடுவிக்கப்பட்டு இந்தியா சென்றடைந்தார்.

பாகிஸ்தான் ராணுவத்திடம் சிக்கிய இந்திய விமானப்படையின் விங் கொமாண்டர் அபிநந்தன் வெள்ளிக்கிழமை இரவு 9.20 மணியளவில் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

இந்திய எல்லையான வாகா வுக்கு அவரை அழைத்துவந்த இந்திய தூதரக அதிகாரிகள் மற்றும் பாகிஸ்தான் பாதுகாப்பு வீரர்கள் கைதிகள் பாரமளிப்பு விதிகளை பின்பற்றி ஆவணங்களை சரிபார்த்து கையெழுத்திட்டுக்கொண்டனர்.

அபிநந்தன் விடுவிப்பு குறித்து பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், 'பிடிக்கப்பட்ட இந்திய விமானப்படை விங் கமாண்டர் அபிநந்தன் வர்தமானன் இந்தியாவுக்கு இன்று திரும்பினார் என்று குறிப்பிட்டுள்ளது.

பாகிஸ்தான் விமானப்படையினால் சுட்டு வீழ்த்தப்பட்ட ராணுவ ஜெட் மிக்-21 விமானத்தின் விமானியான அபிநந்தன் பிப்ரவரி 27, 2019 அன்று பாகிஸ்தான் வான்வெளி விதிமுறைகளை மீறியதற்காகக் கைது செய்யப்பட்டார் என்பது யாவரும் அறிந்தது.

கைதுக்குப் பிறகு அவர் பன்னாட்டுச் சட்ட விதிமுறைகளுக்கு இணங்க மரியாதையாக நடத்தப்பட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேநேரம் அவரை விடுதலை செய்து தனது நல்லெண்ணத்தை வெளிப்படுத்தி பாக்கிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் உயர்ந்து நிற்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவை அடைந்த விங்கொமாண்டர் ஊடகங்களுக்கு 'திரும்பியதில் மகிழ்ச்சி' என்ற ஒற்றை வசனத்தை மாத்திரம் தெரிவித்தார்.

பாக்கிஸ்தானில் இருந்தபோது வீடியோ பதிவு ஒன்றினூடாக மக்களுக்கு செய்தி சொன்ன விங் கொமாண்டர் „பாக்கிஸ்தான் இராணுவத்தினர் தன்னை கௌரவமாக நடாத்தினர் என்றும் இதையே தனது இராணுவமும் செய்யவேண்டும் எனக் வேண்டிய அவர் இந்தியாவிற்கு சென்ற பின்னரும் இதையே தான் கூறுவேன்' என்று தெரிவித்திருந்தார்.

இந்திய விமானப்படை செய்தித் தொடர்பாளர் ஒருவர் அபிநந்தனை வரவேற்றார். அவர் முறையான வழக்கப்படி அபிநந்தன் ஒப்படைக்கப்பட்டதாகத் தெரிவித்தார்.



Read more...

பிரியங்க பெர்னாண்டோ குறித்த தீர்ப்பை நீதிமன்றம் அறிவித்தது

புலம்பெயர் தமிழர்களை அச்சுறுத்தும் வகையில், அவர்களின் கழுத்தை அறுக்கும் சைகையை காண்பித்த செயலானது, இலங்கை இராணுவ அதிகாரியான பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவின் கடமையுடன் தொடர்புடையதல்ல என வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.

வெஸ்ட்மின்ஸ்டர் நீதவான் நீதிமன்ற தலைமை நீதிபதி எமா ஆபத்நொட், பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவிற்கு இராஜதந்திர தண்டனை செல்லுபடியாகாது என இன்று மன்றில் வைத்து அறிவித்தார்.

‘கழுத்தை அறுக்கும்’ சைகையை காண்பித்து புலம்பெயர் தமிழர்களை அச்சுறுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவிற்கு, இராஜதந்திர தண்டனை முக்தி இருப்பதாக இலங்கை அரசாங்கம் தொடர்ச்சியாக தெரிவித்து வந்த நிலையிலேயே லண்டன் வெஸ்ட்மினிஸ்டர் நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்தார்.

லண்டனிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகர் அலுவலகத்தில் இலங்கையின் 70ஆவது சுதந்திரத் தினம், 2018 ஆம் ஆண்டு பெப்ரவரி 04 ஆம் திகதி கொண்டாடப்பட்டன. இதன்போது புலம்பெயர் தமிழர்கள் அங்கு கூடி கண்டனப் போராட்டமொன்றை நடத்தியிருந்தனர்.

இதன்போது லண்டனுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் பாதுகாப்பு ஆலோசகராக கடமையாற்றிய இலங்கை இராணுவ அதிகாரியான பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோ, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த புலம்பெயர் தமிழர்களை ‘கழுத்தை அறுக்கும்’ சைகையை காண்பித்து அச்சுறுத்தல் விடுத்திருந்ததாக கூறப்பட்டது.

இது தொடர்பான காணொளி சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சை ஏற்பட்டிருந்த நிலையில், இலங்கை அரசாங்கம் பிரிகேடியர் பிரியங்கவை மீள நாட்டுக்கு அழைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Read more...

யாழ் மீனவர்கள் இந்தியாவில் வைத்து கைது

அத்துமீறி இந்திய கடற்பரப்புக்குள் நுழைந்து மீன் பிடித்த குற்றச்சாட்டில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இரு மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்திய கரையோர காவல் பிரிவினரால் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் – தொண்டைமனாறு பெரியகடற்கரை பகுதியைச் சேர்ந்த சிவலிங்கம் மோகனராசா மற்றும் ராசலிங்கம் ராசசிறி ஆகியோரே தமிழகத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களின் சிறியரக படகொன்றும் இந்திய அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளதாக, இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Read more...

எதிர்க்கட்சி தலைவருக்கும், இந்திய உயர்ஸ்தானிகருக்கும் இடையில் சந்திப்பு

எதிர்க்கட்சி தலைவர்  மஹிந்த ராஜபக்சவுக்கும், இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் தரன்ஜித் சிங் சந்துவுக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

இந்த சந்திப்பு இன்று விஜயராமவில் உள்ள மஹிந்த ராஜபக்ஷவின் உத்தியோகப்பூர்வ இல்லத்தில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது இரண்டு நாட்டு இராஜதந்திர உறவுகள் மற்றும் தற்போதைய அரசியல் நிலவரம் குறித்து ஆராயப்பட்டதாக கூறப்படுகிறது.

Read more...

இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கு, வடக்கின் பங்களிப்பு அவசியம் - ரிஷாட் பதியுதீன்

இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கு வடக்கு மாகாணம் 4 சதவீதம் பங்களிப்பை வழங்கி வருவதாக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

வவுனியா மாவட்ட செயலகத்தில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து வெளிட்ட போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

தற்போதைய அரசாங்கம் குறுகிய காலத்திற்குள்ளேயே பல சவால்களுக்கு முகங்கொடுத்து வடமாகாணத்தில் பாரிய அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது.

10 இலட்சம் மக்கள் வாழ்கின்ற வடக்கு மாகாணம், தேசிய பொருளாதார வளர்ச்சிக்கு 4 சதவீதம் பங்களிப்பை வழங்கி வருகின்றது.

இலங்கையில் அரங்கேறிய யுத்தத்தால், பெரிதும் பாதிக்கப்பட்ட பிரதேசத்தில் பல சவால்களுக்கு முகம் கொடுத்து, குறுகிய காலத்திற்குள் பாரிய அபிவிருத்தி திட்டங்களை, அரசாங்கம் என்ற ரீதியில் நாம் மேற்கொண்டு வருகின்றோம்.

யுத்தத்தினால் வடக்கு மாகாணம் மிக மோசமான அழிவுகளை சந்தித்துள்ளது. இதன் காரணமாக அடிப்படை வசதிகள் கூட இல்லாமல் மக்கள் துன்பங்களை சந்தித்து வருகின்றனர்.

நமது இளைஞர், யுவதிகள் படித்து விட்டு தொழிலின்றி அவதியுறுகின்றனர். வன்னி மாவட்டத்தில் பல்வேறு துறைகளில் திறமை உள்ளவர்களும் ஆற்றல் படைத்தவர்களும் இருக்கின்றனர்.

வளங்களும், மனித வலுவும் நிரம்பிக் காணப்படுகின்றன. இந்த மாவட்டத்தில் நமக்கு கிடைத்த இந்த அரிய சந்தர்ப்பத்தை உரிய முறையில் பயன்படுத்த வேண்டும். இந்த மாவட்டத்தின் பொருளாதார வளத்தை சிறப்பாக பெருக்க வேண்டும்.

வெறுமனே உற்பத்தியாளர்களாக மட்டும் நாம் இருக்காமல் நாட்டின் பொருளாதாரத்திற்கு ஏற்ற பங்களிப்பை நல்கும் ஏற்றுமதியாளர்களாக நாம் மாற வேண்டும்.

இந்த நன்நோக்கத்திலேயே, வன்னியிலும் இந்த ஊக்குவிப்பு திட்டம் அறிமுகப்படுத்தபடுகின்றது என, அமைச்சர் ரிஷாட் பதியுதீன் குறிப்பிட்டார்.

Read more...

இம்ரான் கானைப் போல, எமது நாட்டு தலைவர்களும் செயல்பட வேண்டும் - இராதாகிருஷ்ணன்

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானிடம் இருக்கும், மனிதாபிமானமும், பெருந்தன்மையும் இலங்கை அரசியல் தலைவர்களிடம் சற்றேனும் இருந்திருந்தால், இனப்பிரச்சனைக்கான தீர்வு எப்போதோ கிடைத்திருக்கும் என, அமைச்சர் இராதாகிருஸ்ணன் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் தற்போதும் காலம் கடக்கவில்லை, இலங்கை அரசியல் தலைவர்கள் விட்டுக் கொடுப்புடன் செயற்பாட்டால், விரைவில் பிரச்சனைகளுக்கான தீர்வினை எட்டிவிடலாம் என்று இராதாகிருஸ்ணன் குறிப்பிட்டுள்ளார்.

நுவரெலியா கொத்மலை லபுக்கலை தமிழ் மகா வித்தியாலயத்தில் புதிதாக அமைக்கப்பட்ட தொழில்நுட்ப கட்டடத்தை இன்று திறந்து வைத்ததன் பின்னர் உரையாற்றிய போதே, அவர் இதனை கூறியுள்ளார்.

தமது எதிரி நாடான இந்தியாவிலிருந்து சிறைபிடிக்கப்பட்ட இந்திய விமானி அபிநந்தனை விடுதலை செய்யக்கூடிய பெருந்தன்மை, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானிடம் இருந்தது. இந்த செயல்பாட்டின் மூலம் சர்வதேச நாடுகளின் வாழ்த்துக்களையும், வரவேற்பையும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் பெற்று விட்டதாக, அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சர் வேலுசாமி ராதாகிருஷ்ணன் குறிப்பிட்டார்.

Read more...

உடுவே தம்மாலோக தேரர் ஒரு நிரபராதி - நீதிமன்றம் அறிவிப்பு

சட்டவிரோதமான முறையில் யானைக்குட்டி ஒன்றை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் பேரில், உடுவே தம்மாலோக தேரர் கைது கடந்த ஆண்டு கைது செய்யப்பட்டிருந்தார்.

குறித்த யானைக் குட்டியை சட்டவிரோதமான முறையில் விகாரையில் வளர்த்து வந்ததாக, கொழும்பு உலன் மெதினியாராமயவின் விகாராதிபதி தம்மாலோக தேரருக்கு எதிராக குற்றம் சாட்டப்பட்டது.

இது தொடர்பிலான வழக்கு விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வந்தன. எனினும் நீதிமன்றத்தில் உடுவே தம்மாலோக தேரருக்கு எதிராக போதிய ஆதாரங்கள் முன்வைக்கப்படவில்லை.

இந்த நிலையில் குறித்த விசாரணை இன்று கொழும்பு மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்பட்டது.

இந்த விசாரணையின் போதே உடுவே தம்மாலோக தேரர், ஒரு நிரபராதி என நீதிமன்றம் அறிவித்துள்ளது.

Read more...

கடந்த வருட இறுதியில் பிறந்த குழந்தைகளுக்கு, சர்வதேச தரம் வாய்ந்த சிறப்புச் சான்றிதழ்கள்

கடந்த 2018 ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் 31ஆம் திகதி, நள்ளிரவு 12 மணியின் பின்னர் பிறந்த சகல பிள்ளைகளுக்கும், சர்வதேச தரம் வாய்ந்த பிறப்புச் சான்றிதழ்கள் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பதிவாளர் நாயகம் என்.சி.விதானகே இதனை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான உத்தியோகபூர்வ நிகழ்வு எதிர்வரும் 16 ஆம் திகதி கொழும்பில் இடம்பெறவுள்ளதாக அவர் தெரிவித்தார். இந்த நடவடிக்கையின் முதற் கட்டமாக, தெரிவு செய்யப்பட்ட பத்து பிள்ளைகளுக்கு விசேட பிறப்புச் சான்றிதழ்கள் வழங்கப்படவுள்ளன.

அடுத்த கட்டமாக ஏனைய பிள்ளைகளுக்கும் இந்த சர்வதேச தரம் கொண்ட பிறப்புச் சான்றிதழை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என, பதிவாளர் நாயகம் என்.சி.விதானகே தெரிவித்துள்ளார்.

Read more...

மனித எச்சங்கள் குறித்த தீர்ப்பு ஒத்திவைப்பு

மன்னார் திருக்கேதீஸ்வரம் பகுதியில் உள்ள மனித புதைகுழியில் இருந்து, அகழ்ந்து எடுக்கப்பட்ட மனித எச்சங்களின் மாதிரி தொடர்பான வழக்கின் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி எதிர்வரும் ஏப்ரல் மாதம் 22ஆம் திகதி வரையில், குறித்த வழக்கின் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

மன்னார் திருக்கேதீஸ்வரம் மனித புதைகுழியிலிருந்து மீட்கப்பட்ட மனித எச்சங்கள் தொடர்பான வழக்கு இன்று நீதிமன்றத்தில் விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டது.

எனினும் மன்னார் நீதவான் இ.கயஸ் பெல்டானோ, இன்று மன்னார் நீதிமன்றத்திற்கு முன்னிலையாகாத காரணத்தினால், இந்த வழக்கின் விசாரணைகள் மன்றில் இடம்பெறவில்லை.

இதன் காரணமாக இந்த வழக்கின் தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டதாக, காணாமல் போனவர்களின் உறவினர்கள் சார்பாக நீதிமன்றத்தில் முன்னிலையான சிரேஷ்ட சட்டத்தரணி வி.எஸ்.நிறஞ்சன் தெரிவித்துள்ளார்.

Read more...

யுத்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களின் கருத்துக்களையாவது செவிமடுக்கவேண்டும் - அமெரிக்க தூதுவர்

யுத்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களின் கருத்துக்களையாவது செவிமடுக்கவேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபைக்கான முன்னாள் அமெரிக்க தூதுவர் சமந்தா பவர் தெரிவித்துள்ளார். நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் மங்கள சமரவீரவின் 30 வருட கால அரசியல் பயண பூர்த்தியை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்விலேயே அவர் இவ்வாறு கூறினார்.

இலங்கையில் காணாமல் போனோர் அலுவலகம் உருவாக்கப்பட்டு நல்லிணக்க செயற்பாடுகளும் இடம்பெற்று வருகின்றன. ஆனாலும், காணாமல் போனோரின் உறவினர்கள் தமது சொந்தங்களின் புகைப்படங்களுடன் தற்போதும் வீதியில் காத்திருக்கின்றனர். இந்த நிலையில் யுத்தத்தில் பாதிக்கப்பட்டவர்களின் பொருளாதாரத்தை பலப்படுத்துவது மிகவும் அவசியமாகும்.

கடந்த காலங்களில் இலங்கை, அமெரிக்கா, ஆகிய இரு நாடுகளுமே ஜனநாயக ரீதியான சிக்கல்களை எதிர்நோக்கியிருந்தன. இதன்போது ஜனநாயகத்தை நிலைநாட்டுவதற்காக கட்சி அல்லது மதம், இனம் என தனிப்பட்ட ரீதியில் போராட்டங்கள் முன்னெடுக்கப்படவில்லை. சுயாதீனமாக செயற்பட்ட நீதித்துறை ஜனநாயகத்தை நிலைநாட்டியது.

ஆகவே தற்போதைய சூழ்நிலையில் ஜனநாயக அமைப்புக்களை மேலும் வலுப்படுத்துவதன் ஊடாகவே இரு நாடுகளிலுமுள்ள பிரச்சினைகளுக்கும் தீர்வை பெறமுடியும் என சமந்தா பவர் தெரிவித்துள்ளார்.

Read more...

மாணவர்களை உள்வாங்கும் திட்டங்களிலும் பாரிய மோசடி - நீதிமன்றம் செல்வேன் - விஜேதாஸ ராஜபக்‌ஷ

அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட முக்கிய வேலைத்திட்டங்களில் பாரிய மோசடி இடம்பெற்றுள்ளதாக விஜேதாஸ ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார். இலங்கை மன்றக் கல்லூரியில் வைத்து அவர் இதனைக் கூறியுள்ளார்.

மஹாபொல பொறுப்பு நிதியம், சீருடை வவுச்சர் வழங்கும் திட்டம் , சுரக்‌ஷா காப்புறுதித் திட்டம் என்பவற்றில் பாரியளவில் மோசடிகள் நடைபெற்றுள்ளன. இந்த மோசடிகள் தொடர்பில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முறையிட இருப்பதாக அவர் கூறினார். இலஞ்ச ஊழல் ஆணைக்குழு முறையான நடவடிக்கை எடுக்காவிட்டால் அதற்கு எதிராக நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்யப்போவதாகவும் விஜேதாஸ ராஜபக்‌ஷ மேலும் குறிப்பிட்டுள்ளார்.


Read more...

நாட்டின் தற்போதைய தேவை பொருளாதார முன்னேற்றமே - பிரதமர்

இலங்கையின் பொருளாதாரத்தை எவ்வாறு முன்னோக்கி எடுத்துச் செல்வது என்பது தொடர்பிலேயே அனைத்து தரப்பினரும் சிந்தித்துச் செயற்பட வேண்டியுள்ளது என, பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

அமைச்சர் மங்கள சமரவீரவின் 30 வருட கால அரசியல் வாழ்வின் நிறைவினையொட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விசேட நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். நாட்டின் பொருளாதாரத்தை முன்னேற்றும் பணி சவாலானதாக இருந்தாலும் கூட, அதனை ஏற்று முன்னோக்கி பயணிக்க வேண்டும். அதுவே நாட்டின் தற்போதைய தேவையாகும் எனவும் பிரதமர் கூறினார்.

மேலும் பிளவடைந்துள்ள நாட்டை ஒன்றிணைக்க வேண்டுமென்றால் அரசியல் தீர்வு அவசியமென குறிப்பிட்ட பிரதமர், இதற்காக பல முக்கிய சவால்களை எதிர்கொள்ள வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.


Read more...

வடக்கில் 850 தமிழ் பொலிஸாரை புதிதாக இணைக்க நடவடிக்கை

வடக்கில் 850 தமிழ் பொலிஸார் புதிதாக இணைக்கப்படவுள்ளதாக, வடக்கு மாகாண சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் கணேசநாதன் தெரிவித்துள்ளார். யாழ்.மாவட்டச் செயலகத்தில் மாவட்ட சிவில் பாதுகாப்பு குழுக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதன்போதே அவர் மேற்படி தெரிவித்தார்.

வடக்கில் அதிகரிக்கும் குற்றச் செயல்களை கட்டுப்படுத்த தமிழ் இளைஞர்கள் யுவதிகளை பொலிஸ் சேவையில் உள்வாங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் இதன்போது கூறினார். இதற்காக வட மாகாணத்தில் 850 தமிழ் பொலிஸார்கள் இணைக்கப்படவுள்ளனர். அவர்கள் 18 வயதிலிருந்து 28 வயதுக்கு இடைப்பட்ட 5 அடி 4 அங்குலம் உயரமுடைய இளைஞர், யுவதிகளாக இருக்கவேண்டும்.

நாட்டின் சனத்தொகை 2 கோடியே 30 இலட்சமாக இருக்கும் நிலையில் வெறுமனே 85 ஆயிரம் பொலிஸாரும், 10 ஆயிரம் விசேட அதிரடிப் படையினரும் நாட்டில் சேவையாற்றி வருவதாக அவர் கூறினார்.

ஆகவே நாட்டில் பொலிஸாரின் தேவை அதிகம் காணப்படுகின்றது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

இதனிடையே, இன்று வட மாகாண ஆளுநர் சுரேன் ராகவனுடன் இணைந்து பொலிஸ்மா அதிபருடன் சந்திப்பை மேற்கொள்ளும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் கணேசநாதன், அவரிடம் வடமாகாணத்தில் தேவையாகவுள்ள தமிழ் பொலீசார் தொடர்பில் கலந்துரையாடவுள்ளதாக கூறினார்.

Read more...

மன்னார், மாத்தறை மாவட்டங்களில் கிளைகளை நிறுவ காணாமல் போனோர் அலுவலகம் நடவடிக்கை

காணாமல் போனோர் தொடர்பான அலுவலகத்தின் இரண்டு கிளைகள் மன்னார், மாத்தறை மாவட்டங்களில் இந்த மாதம் திறக்கப்படவுள்ளன.

காணாமல் போனவர்கள் தொடர்பான அலுவலகம் ஸ்தாபிக்கப்பட்டு ஒரு வருடம் நிறைவடைந்துள்ளது. இந்த நிலையில் பல்வேறு நிகழ்ச்சிகள் ஒழுங்கு செய்யப்பட்டிருப்பதாக அலுவலகத்தின் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரனி சாலிய பீரிஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான பிரதான நிகழ்வு இந்த மாதம் 9 ஆம் திகதி கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெறவுள்ளது என்பதையும் சாலிய பீரிஸ் தெரிவித்துள்ளார்.

Read more...

ரவிராஜை கொலை செய்ய 5 கோடி ரூபாய் கோட்டபாயவினால் கருணாவிற்கு வழங்கப்பட்டது.

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டபாய ராஜபக்ஷவினால் யாழ்ப்பாண மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜை கொலை செய்ய 5 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளது. குறித்த தொகை கருணா தரப்பினருக்கு வழங்கப்பட்டது என்று புலனாய்வு தகவல் பிரிவின் முன்னாள் பொலிஸ் உத்தியோகஸ்தர் லியனாராச்சிகே அபயரத்ன தெரிவித்துள்ளார்.

ரவிராஜ் கொலை சம்மந்தமான பதிவு செய்யப்படாத வழக்கு விசாரணை கொழும்பு மேலதிக நீதவான் திலின கமகே முன்னிலையில் நடைபெற்றது. இதன் போது அபயரத்ன என்பவர் சாட்சியமளித்துள்ளார்.

கடந்த அரசாங்கத்தின் சூழ்ச்சியால் நடராஜ ரவிராஜ் கொலை செய்யப்பட்டார் என்றும், அவரை கொலை செய்ய பாதுகாப்பு அமைச்சின் வசந்த என்பவர் ஊடாக கருணா தரப்புக்கு பணம் வழங்கப்பட்டது என்றும் தெரிவித்துள்ளார். நடராஜ ரவிராஜ் கொலை தொடர்பான விடயங்கள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் கீர்த்தி கஜநாயக்க, அரச புலனாய்வு சேவையின் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் டூல் மற்றும் கருணா தரப்பு ஆகியோருக்கு தெரிந்தே மேற்கொள்ளப்பட்டன.

கருணா தரப்புக்கு 5 கோடி ரூபாய் கொலை நிறைவேறிய பின்னர் வழங்கப்பட்டது என்பதை கொலையுடன் சம்மந்தப்பட்ட கருணா தரப்பை சேர்ந்தவர்கள் தன்னிடம் கூறியதாகவும் அவர் சாட்சியம் அளித்தார்.

இந்தநிலையில் ரவிராஜ் கொலை தொடர்பிலான வழக்கு விசாரணையை நாளை வரை ஒத்திவைத்த பதில் நீதவான், அதுவரை சந்தேக நபர்களை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார். கொலை நடந்த சம்பவத்தை நேரில் கண்ட சாட்சியாளரான ஹென்ஜலோ ரோய் என்பவரையும் நாளை நீதிமன்றத்தில் ஆஜராகுமாறும் நீதவான் உத்தரட்டுள்ளார்.

Read more...

அரசாங்கத்திற்கு மாகாண சபைத் தேர்தல் மீது பீதி உள்ளது - எதிர்கட்சித் தலைவர்

மாகாண சபைத் தேர்தல் இந்த வருடம் நடைபெறும் என்பது தமக்கு சந்தேகமாக உள்ளது என்று முன்னாள் ஜனாதிபதியும் எதிர்க் கட்சித் தலைவருமான மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். எல்பிட்டி பிரதேசத்தில் வைத்து அவர் இதனை ஊடகங்களிடம் தெரிவித்தார்.

அரசாங்கத்துக்கு மாகாண சபைத் தேர்தல் மீது பீதி உள்ளது. அதனாலேயே மாகாண சபைத் தேர்தலை அரசாங்கம் ஒத்திவைத்து வருகின்றது. ஆனால் ஜனாதிபதித் தேர்தல் மாத்திரம் எப்படியாவது இவ்வருடத்தில் நிச்சயம் நடைபெறும் என்று தாம் எதிர்பார்ப்பதாகவும் எதிர்கட்சித் தலைவர் மேலும் குறிப்பிட்டார்.

இதனிடையே அரசியலில் நல்ல அனுபவங்களை பெற்றுக்கொள்ள எதிர்க்கட்சி உறுப்பினராக முதலில் இருந்திருக்க வேண்டுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். அமைச்சர் மங்கள சமரவீரவின் 30 வருட கால அரசியல் பயண பூர்த்தியை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டபோதே ஜனாதிபதி இதனைக்கூறினார்.

நாடாளுமன்றத்திற்கு முதல் முறையாக பிரவேசிப்பவர்கள் எதிர்க்கட்சி உறுப்பினர்களாக செல்ல வேண்டும். அப்போதுதான் பல்வேறு அனுபவங்களை பெற்று, சிறந்த அரசியல் பயணத்தை அவர்களால் மேற்கொள்ள முடியும். அதன்பின்னர் ஆளுங்கட்சி அதிகாரம் கிடைக்கும்போது பல தகுதிகளை வளர்த்து, மக்களுக்கான சிறந்த சேவைகளையும் தடையின்றி வழங்க முடியும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

Read more...

மாகாணங்களுக்கு அதிகாரங்களை வழங்க ஜனாதிபதி இணக்கம் - MA சுமந்திரன்

தமிழர்கள் விடயங்களுக்கு தீர்வாக மாகாணங்களுக்கு அதிகாரங்களை வழங்க ஜனாதிபதி இணக்கம் தெரிவித்துள்ளதாக கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் MA சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார். புதிய அரசியலமைப்பு தொடர்பாக ஜனாதிபதி பிரதமர் மற்றும் பல அரசியல் கட்சித் தலைவர்களுக்கிடையில் நேற்று, முக்கிய சந்திப்பு முன்னெடுக்கப்பட்டது.

இந்த சந்திப்பில் அவதானம் செலுத்தப்பட்ட விடயங்கள் தொடர்பில் ஊடகம் ஒன்று MA சுமந்திரனை தொடர்பு கொண்டு வினவியபோதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார். நான்கு பேர் உள்ளடங்கும் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ள நிலையில் குறித்த குழு மாகாணங்களுக்கு எவ்வாறன அதிகாரங்களை வழங்குவது என்பது தொடர்பாக ஆராய்ந்து அறிக்கையிடும் என்றும் அவர் கூறினார்.

அத்தோடு நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையினை ஒழித்தல் தொடர்பிலும் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. அதனுடன் தேர்தல் சீர்திருத்தம் தொடர்பாகவும் கருத்தாடல்கள் மேற்கொள்ளப்பட்டன. இந்த கலந்துரையாடலில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையினை ஒழித்தல் மற்றும் தேர்தல் சீர்திருத்தம் போன்றவற்றிற்கு பலரும் எதிர்ப்பை வெளியிட்டார்கள் எனவும் சுமந்திரன் இதன்போது சுட்டிக்காட்டினார்.

Read more...

Thursday, February 28, 2019

அலுகோசு பதவிக்கு இதுவரை 102 விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றுள்ளன - சிறைச்சாலைகள் திணைக்களம்

தூக்கு தண்டனை நிறைவேற்றும் அலுகோசு பதவிக்காக 102 விண்ணப்பங்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. அவற்றில் 101 விண்ணப்பங்கள் இலங்கையர்களிடமிருந்து கிடைக்கப் பெற்றதுடன், அமெரிக்கர் ஒருவரும் இந்தப் பதவிக்கு விண்ணப்பித்துள்ளார். இந்த நிலையில் நேர்முக பரீட்சையின் பின்னர் அலுகோசு பதவிக்கு இருவர் இணைத்துக் கொள்ளப்படுவர்.

அலுகோசு பதவியின் தன்மையை கருத்திற் கொண்டு நேர்கமுக பரீட்சைக்கு அழைக்கப்படுகின்றவர்கள் மற்றும் தெரிவு செய்யப்படுகின்றவர்கள் தொடர்பான விபரங்கள், பகிரங்கப்படுத்தப்பட மாட்டாது எனவும் சிறைச்சாலைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

Read more...

ஸ்திரமான அரசாங்கத்திற்கு, புதிய தேர்தல் முறையொன்று அவசியம் - தினேஷ் குணவர்தன

நாட்டில் ஸ்திரமான அரசாங்கத்தை அமைப்பதற்கு வழி வகுக்கும் புதிய தேர்தல் முறையொன்றுக்கு, விரைவாக செல்ல வேண்டும் என, மக்கள் ஐக்கிய முன்னணி தெரிவித்துள்ளது. கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான தினேஷ் குணவர்த்தன இதனைத் தெரிவித்தார்.

70 சதவீதம் தொகுதிவாரி முறையிலும், 30 சதவீதம் விகிதாசார முறையிலும் தேர்தல் நடத்துவதற்கான முறையை விரைவாக ஏற்படுத்த வேண்டும்.

நாட்டிலுள்ள மக்களுக்கு சிறந்த அரசாங்கமொன்று அவசியமாகும். காலம் தாழ்த்தாது ஸ்திரமான அரசாங்கத்தை அமைப்பதற்கு, புதிய தேர்தல் முறை அவசியமாகும் என பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன குறிப்பிட்டார்.

Read more...

''கண்ணியமான பிள்ளைகள்'' நிகழ்ச்சித்திட்டம், மார்ச் 15 ஆம் திகதி முதல் ஆரம்பம் - ஜனாதிபதி

புதிய தலைமுறையினரையும், பாடசாலை பிள்ளைகளையும் போதைப்பொருளிலிருந்து விடுவிப்பதற்காக போதைப்பொருள் ஒழிப்பு தேசிய நிகழ்ச்சித்திட்டத்தின் மற்றுமொரு முக்கிய நிகழ்ச்சித் திட்டமான ''கண்ணியமான பிள்ளைகள்'' நிகழ்ச்சித்திட்டம் மார்ச் 15 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவிருப்பதாக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார்.

இலங்கை ஊக்க மருந்து தடுப்பு முகவர் நிறுவனத்தின் புதிய கட்டிடத்தை திறந்து வைக்கும் நிகழ்வில், இன்று கலந்துகொண்டு உரையாற்றிய போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார். இந்த புதிய கட்டிடம் கொழும்பு சுகததாச விளையாட்டரங்கு வளாகத்தில் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.

நச்சுத்தன்மை வாய்ந்த போதைப்பொருட்களை, பல்கலைக்கழகங்கள் மற்றும் பாடசாலை பிள்ளைகளுக்கு மத்தியில் மிகவும் சூட்சுமமான முறையில் கொண்டு செல்லும் கடத்தல் நடவடிக்கை தீவிரமாக நாட்டில் இடம்பெறுகிறது. அதனை தடுப்பதற்காக மாணவர்களை அறிவூட்டும் விரிவான நிகழ்ச்சித்திட்டமொன்று 'சுஜாத தருவோ' என்ற கண்ணியமான பிள்ளைகள் நிகழ்ச்சித்திட்டத்தின் மூலம் நடைமுறைப்படுத்தப்படுகின்றது எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

கல்வி அமைச்சு, விளையாட்டுத்துறை அமைச்சு, சுகாதார அமைச்சு உள்ளிட்ட அமைச்சுக்களும் ஜனாதிபதி அலுவலகமும் இணைந்து முப்படையினர் மற்றும் பொலிசாரின் பங்குபற்றுதலுடன், வைத்திய நிபுணர்கள் குழுவொன்றையும் இணைத்துக்கொண்டு மிகவும் நட்புறவுடன் 'சுஜாத தருவோ' திட்டத்தை நாட்டின் பிள்ளைகளுக்கு மத்தியில் கொண்டு செல்லவுள்ளதாக ஜனாதிபதி இதன்போது தெரிவித்தார்.

Read more...

11 ஊழல் மோசடிகள் உள்ளிட்ட அறிக்கை ராஜித்தவிடம் கையளிப்பு

அரச வைத்திய அதிகாரிகளின் சங்கத்திற்கு எதிராகவும், அதன் தலைவருக்கு எதிராகவும், 11 ஊழல் மோசடிகள் உள்ளிட்ட அறிக்கை சுகாதார அமைச்சர்  ராஜித்த  சேனாரட்னவிடம் இன்று கையளிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கையை அரச வைத்திய அதிகாரிகளின் மன்றம் அமைச்சரிடம் கையளித்துள்ளது. கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அந்த மன்றத்தின் தலைவர் டொக்டர் ருக்ஷான் வெல்லன்ன இதனைத் தெரிவித்தார்.

இது தொடர்பில் பக்கச்சார்பின்றி விரைவாக விசாரணை மேற்கொண்டு, அது தொடர்பில் நாட்டு மக்களுக்கு வெளிப்படுத்த வேண்டும் என்றும் அமைச்சரிடம் கோரியுள்ளதாக அவர் தெரிவித்தார்.

அத்துடன் அரச வைத்திய அதிகாரிகளுக்கு அக்ரஹா காப்புறுதி திட்டத்தை அறிமுகப்படுத்த வாய்பிருந்த பொழுதிலும், வேறு காப்புறுதி முறையை அறிமுகப்படுத்த அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் நடவடிக்கை மேற்கொண்டது எனவும், டொக்டர் ருக்ஷான் வெல்லன்ன இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

Read more...

காணாமல் போனவர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கப்பட வேண்டும் - பாட்டலி சம்பிக்க ரணவக்க

காணாமல் போனவர்களுக்கான சான்றிதழை வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என, அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

காணாமல் போனவர்கள் தொடர்பாக புதிது புதிதாக ஆணைக்குழுக்களை அமைப்பதன் ஊடாக எந்தப் பலனும் இல்லை. பழைய தகவல்களுக்கு அமைய பரணகம மற்றும் உடலாகம ஆணைக்குழுவின் தகவல்களை பெற்று காணாமல் போனோருக்கான சான்றிதழை வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

இராணுவத்தினர் அனர்த்த நிலைமைகளின் போதே முகாம்களில் இருந்து வெளியே வந்து செயற்படுகின்றனர். வேறு தேவைகளுக்காக அவர்கள் வெளியே வர வேண்டிய அவசியம் இல்லாத நிலை தற்போது காணப்படுகிறது. இந்த நிலையில் புவியியல் ரீதியாக முகாம்களை அமைந்ததன் பின்னர், எஞ்சிய பகுதி காணிகளை பொதுமக்களிடம் கையளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அமைச்சர் சம்பிக்க ரணவக்க வலியுறுத்தல் விடுத்தார்.

ஐக்கிய நாடுகள் சபைக்கு இலங்கை சார்பான பிரதிநிதிகளை அனுப்பி, நடைமுறைக்கு சாத்தியப்படும் வகையிலான இரண்டு வருடகால செயற்றிட்டம் ஒன்றை அமைப்பது தொடர்பில் தெளிவுபடுத்த வேண்டும். அதன்மூலம் யுத்த பாதிப்புக்குள்ளான மக்களுக்கு ஒரு தீர்வை பெற்றுக்கொடுக்க முடியும் எனவும், அமைச்சர் சம்பிக்க ரணவக்க குறிப்பிட்டார்.

Read more...
Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com