Thursday, February 28, 2019

உலகளாவிய பொருளாதாரத்துடன் செயல்பட, புதிய தொழிநுட்பம் அவசியம் - பிரதமர் ரணில்

உலகளாவிய பொருளாதாரத்துடன் செயற்படுவதற்கு புதிய தொழில்நுட்பத்துடன் முன்னோக்கி செல்ல வேண்டும் என, பிரதமர் ரணில் விக்ரமசிங்க சுட்டிக்காட்டியுள்ளார். இதற்காக பாடசாலைகளில் ஸ்மார்ட் வகுப்பறைகளை ஏற்படுத்தி டிஜிட்டடில் பொருளாதாரத்திற்கு தேவையான டிஜிட்டல் கல்வி முறையினை ஆரம்பிக்க வேண்டும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டார்.

நாட்டின் சகல பாடசாலைகளினதும் உயர்தர மாணவர்களுக்காக டெப் கணனிகள் வழங்கும் வேலைத்திட்டத்திற்கு அமைச்சரவையின் அனுமதி கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். ''அருகிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை'' என்ற வேலைத்திட்டத்தின் கீழ், கம்பஹா கனேமுல்ல ஹேமமாலி வித்தியாலயத்தில் இரண்டு மாடி தொழில்நுட்ப கட்டிடடத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்ட பிரதமர் இதனைத் தெரிவித்தார்.

டிஜிட்டல் பொருளாதார முறையை அமுல்படுத்துவது தொடர்பில் அமைச்சரவையில் ஆலோசிக்கப்பட்டுள்ளதுடன், அதற்கு இணக்கமும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனை எவ்வாறு நடைமுறைப்படுத்துவது என்பது தொடர்பில் தற்போது ஆராயப்படுகிறது. டிஜிட்டல் பொருளாதாரத்தை அறிமுகப்படுத்துவதற்கு கல்வி முறையில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும். இதனூடாகவே டிஜிட்டல் பொருளாதாரம் சாத்தியமாகும்.

இவ்வாறான மேம்பட்ட பொருளாதார கொள்கையின் அடிப்படையிலேயே, இலங்கை பெற்ற கடனை மீளச் செலுத்த முடியும். இதன் மூலம் ஏற்றுமதியின் ஊடாக பத்தாயிரம் அமெரிக்க டொலர்களை வருமானமாக ஈட்டு முடியும். இந்தாண்டு அதிகளவிலான வெளிநாட்டு கடன்கள் செலுத்தப்பட்டுள்ளன. இனிவரும் காலங்களிலும் இலங்கை பெற்ற வெளிநாட்டு கடன்களை செலுத்த இவ்வாறான டிஜிட்டல் பொருளாதார முறை அவசியமாகிறது எனவும் பிரதமர் தெரிவித்தார்.

Read more...

19 க்கு எதிராக, தவறான கருத்துக்களை கட்டியெழுப்ப முயற்சி - முஜிபுர் ரஹ்மான்

இலங்கையின் 19 ஆவது திருத்தச் சட்டத்திற்கு எதிராக, மக்கள் மத்தியில் தவறான பல கருத்துக்களை கட்டியெழுப்புவதற்கு, எதிர்க்கட்சி தயாராகி வருவதாக, பாராளுமன்ற உறுப்பினர் முஜிபூர் ரஹ்மான் குற்றம் சுமத்தியுள்ளார். ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையமான சிறிகொத்தாவில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து அவர் இதனைத் தெரிவித்தார்.

எதிர்க்கட்சியினர் இன்று இரண்டு பிரதான விடயங்களை கையில் எடுத்துச் செயற்படுகின்றனர். ஒன்று சட்ட மா அதிபர் திணைக்களம், மற்றையது நீதிமன்றம். நல்லாட்சி அரசாங்கத்தின் கீழ் இவை இரண்டும் சுயாதீனமாக செயற்பட்டு வரும் நிலையில் கடந்த ஆட்சியில் மோசடி மற்றும் குற்றச்செயலில் ஈடுபட்ட எதிர்த் தரப்பினர் இவற்றுக்கு எதிரான கருத்துக்களை முன்வைத்து வருகின்றனர்.

மோசடிக்காரர்கள் அந்தக் குற்றச்சாட்டுகளிலிருந்து தப்பித்துக் கொள்ளவே இவ்வாறான வழிமுறைகளை கையாண்டு வருகின்றனர். எனவே மக்கள் இது குறித்து மிகுந்த அவதானத்துடன் இருக்க வேண்டும் என, பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் குறிப்பிட்டுள்ளார்.

Read more...

புதிய கூட்டணியை உருவாக்குவது தொடர்பில், தீர்க்கமான பேச்சுவார்த்தை - கனக ஹேரத்

புதிய கூட்டணியொன்றை ஏற்படுத்துவது குறித்த தீர்க்கமான பேச்சுவார்த்தை ஒன்று, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த கட்சியின் தவிசாளரும், பேராசிரியருமான ஜி.எல்.பீரிஸ் மற்றும் டளஸ் அழகப்பெரும உள்ளடங்கிய குழுவே இது குறித்த பேச்சுவார்த்தையை நடத்தியுள்ளது.

இலங்கையில் ஒரு பரந்த கூட்டணியை உருவாக்கும் பேச்சுவார்த்தைகள், தற்போது முன்னோக்கி நகர்கின்றன என நாடாளுமன்ற உறுப்பினர் கனக ஹேரத் தெரிவித்துள்ளார்.

குறித்த பேச்சுக்களை நடத்துவதற்கு பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ், டளஸ் அழகப்பெரும மற்றும் ஜகத் வெல்லவத்த ஆகியோர் கொண்ட குழு நேற்று நியமிக்கப்பட்டதாக கனக ஹேரத் மேலும் குறிப்பிட்டார்.

Read more...

தமிழீழ விடுதலைப் புலிகளே, வீரியமான தற்கொலை தாக்குதலை அறிமுப்பக்கப்படுத்தினர் - பாகிஸ்தான் பிரதமர்

கடந்த சில தினங்களாக இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையில் கடும் மோதல் நிலை நிலவி வருகின்றது. காஷ்மீர் - புல்வாமா தாக்குதலை அடுத்தே, இந்த இரண்டு நாடுகளுக்கும் இடையில் கடும் மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், பாகிஸ்தானில் சிறைபிடிக்கப்பட்டுள்ள இந்திய விமானி அபிநந்தனை, நாளை விடுதலை செய்வதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் நாடாளுமன்றத்தில் வைத்து அறிவித்தார்.

செப்டெம்பர் 11 தாக்குதலுக்கு முன்னதாகவே, இந்துக்களான விடுதலை புலிகள் வீரியமான தற்கொலை தாக்குதல் முறைமையை பயன்படுத்தி இருக்கின்றார்கள் என, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.

“தீவிரவாதத்திற்கு மதம் கிடையாது. தற்கொலை படை தாக்குதல்கள் மதத்தின் பெயரால் நடப்பது இல்லை. இரட்டை கோபுர தாக்குதலுக்கு முன்பாக, உலக அளவில் தற்கொலை படை தாக்குதலை இலங்கையின் தமிழீழ விடுதலை புலிகளே நடத்தினர்.

இதில் தாக்குதலை  நடத்தியவர்கள் அனைவருமே இந்துக்கள். ஆனால் மதத்தின் பெயரால் எந்த தாக்குதலையும் நடத்தவில்லை. மாறாக தங்களது விரக்தி மற்றும் கோபத்தின் விளைவாகவே, தமிழீழ விடுதலைப் புலிகள் தாக்குதலை நடத்தினார்கள் என, இம்ரான் கான் குறிப்பிட்டார்.

இந்த நிலையில், பாகிஸ்தான் வரலாற்றில், தற்போதைய பிரதமர் இம்ரான் கானின் பேச்சு, மிக முக்கியமானதாக அவதானிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Read more...

முக்கிய நாடாளுமன்ற உறுப்பினர்களின் சொத்து விபரம் வெளியானது

தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஐந்து பேர்,தமது சொத்து விபரங்களை, தாமாகவே முன்வந்து பொதுமக்களுக்காக வெளியிட்டுள்ளனர்.

நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், தாரக பாலசூரிய, விதுர விக்கிரமநாயக்க, இராஜாங்க அமைச்சர் எரான் விக்கிரமரத்ன மற்றும் வாசுதேவ நாணயக்கார ஆகியோரே தாமாகவே முன்வந்து, தமது சொத்து விபரங்களை இன்று வெளியிட்டுள்ளனர்.

ஊழலுக்கு எதிரான போராட்டத்தின் ஒரு பகுதியாக இதனை செய்துள்ளதாக, குறித்த ஐவரும் தெரிவித்துள்ளனர்.

இதற்கு முன்னர் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க, தனது சொத்து விபரங்களை அறிவித்திருந்தார்.

இதன்படி தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர், எம்.ஏ.சுமந்திரனின் மாதாந்த சம்பளம் – 51,285 ரூபாய், மேலதிக கொடுப்பனவு – 239,255 ரூபாய்

வாசுதேவ நாணயக்காரவின் மாதாந்த சம்பளம், மேலதிக கொடுப்பனவுடன் – 286,322 ரூபாய்

தாரக பாலசூரியவின் மாதாந்த சம்பளம் மேலதிக கொடுப்பனவுடன் – 275,788 ரூபாய்

விதுர விக்கிரமநாயக்கவின் மாதாந்த சம்பளம் – 51,285 ரூபாய் மேலதிக கொடுப்பனவு – 195,374.40 ரூபாய்

எரான் விக்கிரமரத்னவின் மாதாந்த சம்பளம் – 63,500 ரூபாய்

Read more...

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் மீது, கண்ணீர் புகைப் பிரயோகம்

இலங்கை ஆசிரியர் சங்கத்தின் ஏற்பாட்டில் பத்தரமுல்லை, பெலவத்தை பகுதியில் உள்ள கல்வி அமைச்சுக்கு முன்பாக, இன்று ஆசிரியர்கள் பலர் இணைந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டம் காரணமா,க குறித்த பகுதியில் பாரிய வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதுடன், பொதுமக்கள் பெரும் அசௌகரியத்திற்கு உள்ளாக்கியதாக காவல்துறையினர் குறிப்பிட்டனர்.

கடந்த 22 ஆண்டுகளுக்கு மேலாக கல்வி சேவையில் காணப்படும் சம்பள பிரச்சினைக்கு தீர்வு கோரியும், 30 மாத நிலுவை சம்பளத்தை வழங்க வலியுறுத்தியும் இப் போராட்டம் இடம்பெற்றது.

இந்த நிலையில் குறித்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் மீது காவல்துறையினரால் கண்ணீர்ப் புகை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

கல்வி அமைச்சின் முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு போக்குவரத்திற்கு தடை ஏற்படுத்தியவர்கள் மீது, ஏற்கனவே காவல்துறையினர் நீர்த்தாரை பிரயோகத்தை மேற்கொண்டிருந்தனர்.

எனினும் அதனை பொருட்படுத்தாது ஆர்ப்பாட்டம் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டமையால், ஆசிரியர்கள் மீது காவல்துறையினர் கண்ணீர்ப் புகைத் தாக்குதலை மேற்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read more...

நோயாளர் காவுகை வண்டிச் சேவையை விரிவுபடுத்த, நிதி ஒதுக்கீடு

நோயாளர் காவுகை வண்டிச் சேவையை விரிவுபடுத்துவதற்கு, புதிய வரவு - செலவு திட்டத்தில், 2 ஆயிரம் மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக, அமைச்சர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார். ‘சுவசெரிய' நோயாளர் காவுகை வண்டிச் சேவை, அமைச்சர்களான லக்ஷ்மன் கிரியெல்ல மற்றும் ஹர்ஷ டி சில்வா ஆகியோர் தலைமையில் கண்டியில் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் பங்கேற்று உரையாற்றுகையிலேயே, அவர் இவ்வாறு குறிப்பிட்டார். செல்வந்தர்களால் எந்த தொகைக்கும் நோயாளர் வண்டிச் சேவையை பெற்றுக் கொள்ளலாம். ஆனால், குறைந்த வருமானம் பெறுவோரின் நலன் கருதி நோயாளர்  காவுகை வண்டிச் சேவையை விரிவுபடுத்த வேண்டிய கடப்பாடு உள்ளது.

இத்தனைக் காலமும் ஒரு வைத்தியசாலையிலிருந்து இன்னொரு வைத்தியசாலைக்கு செல்வதற்கான நோயாளர் காவுகை வண்டிச் சேவை மாத்திரமே இயங்கி வந்தது.

எனினும் 1990 நோயாளர் காவுகை வண்டிச் சேவையின் மூலம் நோயாளி ஒருவரை, அவரது வீட்டிலிருந்து 12 நிமிடங்களுக்குள் வைத்தியசாலையில் அனுமதிக்கும் வகையில் சேவை விரிவுபடுத்தப்பட்டுள்ளது என்று, அமைச்சர் ஹர்ஷ டி சில்வா குறிப்பிட்டார்.

Read more...

120 மில்லியன் ரூபாவிற்கும் அதிக பெறுமதியான ஹொரோயினுடன் ஒருவர் கைது - கிரேண்ட்பாஸில் மேலும் இருவர் கைது

குளியாப்பிட்டிய பகுதியில் கும்புராபொல பகுதியில் 120 மில்லியன் ரூபாவிற்கும் அதிக பெறுமதியான ஹொரோயினுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார். 27 வயதுடைய நபர் ஒருவரே 1 கிலோ கிராம் ஹொரோயினுடன் மோட்டார் சைக்கிளில் சென்ற போது கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்திற்கு கிடைத்த தகவலுக்கமைய, இவர் கைதாகியுள்ளார். அவரிடம்
மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளை அடுத்து, அவரின் வீட்டில் மறைத்துவைக்கப்பட்டிருந்த 9 கிலோகிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளது.

இதேவேளை, கொழும்பு – கிரேண்ட்பாஸ் பகுதியில் 25 கிராம் 740 மில்லிகிராம் ஹெரோயினுடன் சந்தேகநபர்கள் இருவர் முச்சக்கரவண்டியில் பயணித்தபோது கைதாகியுள்ளனர். குறித்த இரண்டு சந்தேகநபர்களிடமிருந்து 2,40,000 ரூபா பணமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சந்தேகநபர்களை மாளிகாகந்த நீதவான் முன்னிலையில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Read more...

மாணவியை துஷ்பிரயோகம் செய்த குற்றத்தில் மாகாண சபை உறுப்பினர் கைது

16 வயது பாடசாலை மாணவி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் தென் மாகாண சபை உறுப்பினர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 26ம் திகதி குறித்த மாணவியை தென் மாகாண சபை உறுப்பினர் கிரிசாந்த புஷ்பகுமார என்பவர், பாலியல் துஷ்பிரயோகம் செய்தார் என்று குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இந்தநிலையில் குறித்த சந்தேக நபர் அக்மீமன பொலிஸ் நிலையத்தில் ஆஜரானதையடுத்து கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் உறுதிப்படுத்தியுள்ளது. குறித்த சந்தேகநபர் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பை அங்கத்துவப்படுத்தும் தென் மாகாண சபை உறுப்பினர் ஆவர்.

இந்த நிலையில் இன்று அவரை காலி நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Read more...

கூட்டமைப்பிற்கு தமிழர்களின் விடயத்தில் அக்கறையில்லை, வெறும் அரசியலே செய்கிறார்கள் - கெஹெலிய ரம்புக்வெல

கூட்டமைபிற்கு தென் பகுதியில் உள்ள மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் அக்கறையில்லை என, நாடாளுமன்ற உறுப்பினர் கெஹெலிய ரம்புக்வெல குற்றம் சுமத்தியுள்ளார். எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். கூட்டமைப்பிற்கு தமிழர்களின் விடயத்திலும் அக்கறையில்லை. ஏன் என்றால் அவர்கள் தமிழ் மக்களது பிரச்சினைகள் குறித்த தீர்விற்கான எந்த முயற்சிகளையும் மேற்கொள்ளவில்லை.

கூட்டமைப்பினர் தமிழ் மக்களின் பிரச்சினைகளை வைத்துக் கொண்டே வடக்கில் அரசியல் செய்கின்றார்கள். அவர்கள் தமது அரசியல் செயற்பாட்டிக்காக தமிழ் மக்கள் தொடர்பில் மாத்திரம் சிந்திப்பதால் அவர்களால் தெற்கு மக்களைக் குறித்து எந்த வழியிலும் சிந்திக்கப்போவதில்லை.

இந்த விடயங்களை எதிர்க்கட்சித் தலைவராக இரா.சம்பந்தன் இருந்தபோது அவதானிக்க முடிந்தது என்று, கெஹெலிய ரம்புக்வெல மேலும் குறிப்பிட்டுள்ளார்.


Read more...

இலங்கை ரூபாக்களை கடத்த முற்பட்டவர் கைது

சிங்கப்பூருக்கு இலங்கை ரூபாக்களை சட்டவிரோதமாக கடத்திச் செல்ல முற்பட்ட ஒருவர், இன்று அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். 46 வயதுடைய திருகோணமலை, தம்பலகாமம் பிரதேசத்தைச் சேர்ந்த ஒரேவரே இவ்வாறு கைதாகியுள்ளார். குறித்த சந்தேக நபர் சிங்கப்பூரில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருவதாக பொலீஸார் தெரிவிக்கின்றனர்.

அதிகாலை 03.30 மணியளவில் குறித்த நபர் சிங்கப்பூருக்கு பயணிக்க இருந்த நிலையில் சந்தேகத்தின் பேரில் அவர் விமான நிலைய சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதன்போது சந்தேகநபர் வைத்திருந்த பயணப் பொதியில் இருந்து 1000 ரூபா மற்றும் 5000 ரூபா நாணயத்தாள்கள் அடங்கிய 48 இலட்சத்து 99,000 ரூபா கைப்பற்றப்பட்டுள்ளது. இந்த நிலையில் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை விமான நிலைய சுங்கப் பிரிவினர் ஆரம்பித்துள்ளனர்.

Read more...

போதைப்பொருள் குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை வழங்க விசேட நீதிமன்றம் - பேராசிரியர் அகுரடியே நந்த நாயக தேரர்

போதைப்பொருள் குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனையைப் பெற்றுக்கொடுப்பதற்கு விசேட நீதிமன்ற கட்டமைப்பொன்றை உருவாக்க வேண்டும் என்று பேராசிரியர் அகுரடியே நந்த நாயக தேரர் தெரிவித்துள்ளார்.

இந்த விசேட நீதிமன்ற கட்டமைப்பு ஊடாக மக்கள் எதிர்பார்க்கும் தீர்ப்பினைப் பெற்றுக்கொடுக்க வேண்டுமென ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் தேரர் இதனைக் கூறியுள்ளார். போதைப்பொருள் குற்றவாளிகளுக்கு மிக இலகுவில் நீதிமன்ற தீர்ப்புக்களை நடைமுறைப்படுத்த முடியாது.

கடந்த காலங்களில் இல்லாத வகையில் போதைப்பொருள் பாவனை கட்டுபாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கைகள் இன்னும் திறம்பட முன்னெடுக்கப்பட வேண்டும். ஆகவே போதை பொருள் குற்றவாளிகளுக்கு தகுந்த தண்டனை பெற்றுக்கொடுக்க வேண்டியது அவசியமாகும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

Read more...

ஆயுத தளபாடங்களை பழுது பார்த்தல் மற்றும் புதுப்பித்துக் கொடுப்பதற்கு ரஷ்யா இணக்கம்

ரஷ்யாவின் உயர்மட்டப் பாதுகாப்பு அதிகாரிகள் குழுவினர் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டு பாதுகாப்புச் செயலர் ஹேமசிறி பெர்னாண்டோவை சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளனர்.

இதன்போது, இலங்கையின் பாதுகாப்பு உயர்மட்ட அதிகாரிகளுடன் பேச்சு நடத்தி வரும் குறித்த குழுவினர், இலங்கை படையினரிடம் உள்ள ரஷ்ய தயாரிப்பு ஆயுத தளபாடங்களை பழுது பார்த்தல் மற்றும் புதுப்பித்துக் கொடுப்பதற்கான தொழில்நுட்ப உதவிகளை வழங்குவதற்கு இணக்கம் தெரிவித்துள்ளனர்.

அத்துடன், ரஷ்யாவில் நடைபெரும் பயிற்சிகளில் இலங்கைப் படையினரும் பங்கேற்பதற்கு இந்தக் குழுவினர் அழைப்பு விடுத்துள்ளனர்.

இதேவேளை, இந்த சந்திப்பில் இறுதி யுத்தம் நிறைவுக்கு கொண்டுவருவத்திற்குய ரஷ்யா அளித்த பங்களிப்புக்கு இலங்கை இராணுவத் தளபதி தனது நன்றியைத் தெரிவித்துள்ளார்.

Read more...

நாட்டில் இன பேதங்கள் இல்லை- விமலதம்ம தேரர்

நாட்டிலுள்ள அனைவரும் தோழமையுடன் எவ்வித பிரச்சினையுமின்றி இருப்பதாக, மல்வத்து மகா விகாரை பிரவின் அநுநாயக்கர் திம்புல்கும்புரே விமலதம்ம தேரர் தெரிவித்துள்ளார். நட்புறவை வளர்த்துக் கொள்ளும் நோக்குடன் இலங்கைக்கு விஜயம் செய்த மியன்மார் ஊடகவியலாளர்கள் குழாம் நேற்று மல்வத்து மகா விகாரை பிரவின் அநுநாயக்கரை சந்தித்து கலந்துரையாடலொன்றை மேற்கொண்டபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

கடந்த கால யுத்தத்தின்போது இராணுவம், பொதுமக்கள் என இரு தரப்பிலும் உயிரிழப்புகள் ஏற்பட்டன.

ஆனால், சிலர் கூறுவது போன்று நாட்டிலுள்ள பல்வேறு சமூகங்களுக்கு இடையே எவ்வித பிரச்சினையும் இல்லை. மூவினத்தவர்களும்
இங்கு ஒத்துழைப்புடன் வாழ்ந்து வருகின்றனர். மாறாக சில இடங்களில் இடம்பெறும் சிறு சிறு இனவாத செயல்கள் காரணாமாக முழு நாட்டிற்கும் அவப்பெயர் ஏற்படுகின்றது என்று அவர் தெரிவித்துள்ளார்.

Read more...

புளூமென்டல் சன்கவின் உதவியாளர் ஹெரோயினுடன் கைது

கடந்த வாரம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற திருட்டு சம்பவத்துடன் தொடர்புடைய இரண்டு பேரை பொலீஸார் கைது செய்துள்ளனர்.

யாழ் - மடத்தடியில் வீடொன்றில் உரிமையாளர்கள் இல்லாத சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, மூன்று பவுண் தங்க நகை மற்றும் பணம் என்பவற்றை திருடியதாக யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது. அதற்கமைய குற்றப் புலனாய்வுப் பிரிவு பொறுப்பதிகாரி ஜெரோசன் தலமையிலான குற்றப்புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டனர். இதன்போது அவர்களுக்கு கிடைத்த தகவலுக்கு அமைவாக, நாவற்குழியைச் சேர்ந்த 22 மற்றும் 24 வயதுடைய இரண்டு இளைஞர்ககள் கைது செய்யப்பட்டனர்.

இதன்போது கொள்ளையிடப்பட்ட தங்க நகைகளையும் பொலிசார் மீட்டுள்ளனர்.

இதனிடையே பிரபல பாதாள உலக குழு தலைவர்களில் ஒருவரான புளூமென்டல் சன்கவின் உதவியாளர் என அறியப்படும் சியாம் நசூல் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸார் இதனைத் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்ட நேரத்தில் சந்தேக நபர் ஹெரோயின் வைத்திருந்தார் என்றும் பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.

Read more...

ஏப்ரல் மாதத்திலிருந்து புதிய விசா நடைமுறை

ஏப்ரல் மாதத்திலிருந்து புதிய விசா நடைமுறையை அரசாங்கம் முன்னெடுக்கவுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. சுற்றுலாப் பயணிகளை கவரும்விதமாக இந்த விசா நடைமுறை அறிமுகப்படுத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுற்றுலா அபிவிருத்தி வன ஜீவராசிகள் மற்றும் கிறிஸ்தவ மத அலுவல்கள் அமைச்சர் ஜோன் அமரதுங்க முன்வைத்த பரிந்துரைக்கு அமைவாக அமைச்சரவை இந்த அங்கீகாரத்தை வழங்கியுள்ளது. நாட்டிற்கு சுற்றுலா பயணிகளின் வருகை மூலம் பெருமளவிலான நிதி ஈட்டப் படுகின்ற நிலையில் அரசாங்ககம் இந்த புதிய நடைமுறையை அறிமுகப்படுத்தி அதிக வருவாயை பெற்றுக்கொள்ளும்ம் வேலை திட்டத்தை செய்யவுள்ளது.

இந்த புதிய நடைமுறையின்படி, ஏதிர்வரும் ஏப்ரல் மாதம் 1ஆம் திகதியிலிருந்து ஆறு மாதங்களுக்கு நடைமுறையில் இருக்கும் இந்த சலுகையில் பிரித்தானியா, கனடா, அவுஸ்ரேலியா உள்ளிட்ட நாடுகளின் சுற்றுலாப் பயணிகள் நுழைவிசா இன்றி இலங்கைக்கு பயணம் மேற்கொள்ள முடியும் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது. சில குறிப்பிட்ட காலப்பகுதியில் இலங்கைக்கான பயணங்களை மேற்கொள்ளும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை குறைவாக காணப்படும். இவ்வாறான சந்தர்ப்பங்களில் சுற்றுலா பயணிகளை பெருமளவில் நாட்டுக்கு அழைக்கும் வகையில் இந்த விசா நடைமுறையை முன்னெடுப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

வருடத்தின் ஏனைய நிகழ்ச்சி நிரலிற்கு அமைவாக ஏப்ரல் மாதம் தொடக்கம் ஒக்டோபர் மாதம் வரையிலான காலப்பகுதியில் சுற்றுலாப் பயணிகளின் வருகை குறைந்த வீதத்தை கொண்டிருப்பது அவதானிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத் தக்கது. .

Read more...

மார்ச் 5 ல் வரவு செலவு திட்ட 2ஆவது வாசிப்பு நடைபெறும்

2019ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்ட 2ஆவது வாசிப்பு எதிர்வரும் மார்ச் 5ஆம் திகதி நாடாளுமன்றத்தில் நிதி அமைச்சர் மங்கள சமரவீரவினால் சமர்பிக்கப்படவுள்ளது.

இது தொடர்பில் சமர்பிக்கப்பட்ட பத்திரத்திற்கு நேற்று அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது. இதற்கமைவாக வரவு செலவு திட்டத்தின் 2ஆம் வாசிப்பு மீதான விவாதம் 6 திகதி தொடக்கம் 12 திகதி வரை நடைபெறவுள்ளது.

இதேபோன்று குழுநிலை விவாதம் மார்ச்13 தொடக்கம் ஏப்ரல் 5 ம் திகதி வரை நடைபெறும். அத்துடன் வரவு செலவு திட்டம் மீதான வாக்கெடுப்பு ஏப்ரல் 5 ஆம் திகதி நடத்துவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த வரவு செலவு திட்டம் தொடர்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் பரிந்துரைக்கப்பட்ட விடயங்கள் அமைச்சரவை கவனத்தில் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Read more...

கொலை சதி முயற்சி தொடர்பில் கைதான இந்திய பிரஜை விடுதலை - பிறிதொரு குற்றச்சாட்டில் விளக்கமறியல்

பிரமுகர் கொலை சதி முயற்சி குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள இந்திய பிரஜையான மேர்சிலி தோமஸ் என்பவர் அந்த குற்றச்சாட்டில் இருந்து விடுவிக்கப்பட்டார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ச ஆகியோர் கொலை சதி முயற்சி தொடர்பான வழக்கு விசாரணைக்கு நேற்று நடைபெற்றது. இதன்போதே பிரமுகர் கொலை சதி முயற்சி குற்றச்சாட்டில் இருந்து அவர் விடுதலை பெற்றுள்ளார்.

எவ்வாறான போதிலும் கடந்த வருடம் செப்டம்பர் 21 ஆம் திகதியில் இருந்து குறித்த இந்திய பிரஜை வீசா முடிவுக்காலம் முடிந்த பின்னரும் நாட்டில் தங்கியிருந்தமையினால் அவரை எதிர்வரும் 13 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.


Read more...

இலங்கையில் இருந்து பாகிஸ்தானுக்கு எந்த விமானமும் பயணிக்காது

பாகிஸ்தானுக்கு செல்லும் விமானங்கள் இன்று இரத்து செய்யப்படுவதாக ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸ் அறிவித்துள்ளது.

பாகிஸ்தானின் வான்பரப்பில் விமானங்கள் பயணிக்க அந்தநாட்டு விமானப் போக்குவரத்து அதிகாரிகள் தடை விதித்துள்ளதால் இந்த விமானப் பயணங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளன. இதன்படி கராச்சி மற்றும் லாஹுர் விமான நிலையங்களுக்கான செல்லும் விமானங்கள் இன்று சேவையில் ஈடுபட மாட்டாது என்று ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸ் அறிவித்துள்ளது.

தொடர்ந்து சில நாட்களாக இந்திய மற்றும் பாகிஸ்தான் ஆகிய இருநாடுகளுக்கிடையில் மாறி மாறி இடம்பெற்று வரும் தாக்குதல்கள்
காரணமாக காஷ்மீர் எல்லைப்பகுதி உள்ளிட்ட பிரதேசங்களில் பதற்ற நிலை அதிகரித்துள்ளது. இதன் காரணமாகவே இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.


Read more...

86 KG மேற்பட்ட கேரளக்கஞ்சாவுடன் இருவர் கைது

வடக்கு கடற்பரப்பில் 86 KGகும் மேற்பட்ட கேரளக்கஞ்சாவை கடற்படையினர் நேற்று மேற்கொண்ட சுற்றிவளைப்பின் மூலம் கைப்பற்றியுள்ளதாக கடற்படை பேச்சாளர் லெப்டினன்ட் கமாண்டர் இசுரு சூரியபண்டார தெரிவித்தார்.

இதன்போது சந்தேக நபர்கள் இரண்டு பேரும் டிங்கி படகொன்றும் கைப்பற்றப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறினார்.

இதனிடையே 2019 ஆண்டின் முதல் இரண்டு மாதங்களில் மாத்திரம் வடக்கு கடற்பரப்பிலிருந்து 442 KG மேற்பட்ட கேரளக்கஞ்சா சிக்கியுள்ளதாக இலங்கை கடற்படை கூறுகின்றது.

இந்த நிலையில் எதிர்காலத்திலும் நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி கடல் பிரதேசங்கள் ஊடக நடைபெறும் போதைப்பொருள் வர்த்தகத்தை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் கடற்படை விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Read more...

முறிகள் மோசடியில் 6 வகையான கணக்காய்வுகளை மேற்கொள்ள சர்வதேச கணக்காய்வாளர்கள் நியமனம்

மத்திய வங்கியில் இடம்பெற்ற முறிகள் மோசடி தொடர்பில் ஆறு வகையான கணக்காய்வுகளை மேற்கொள்வதற்கு சர்வதேச கணக்காய்வாளர்கள் நியமிக்கப்படவுள்ளனர். குறித்த சர்வதேச கணக்காய்வாளர்கள் தடயவியல் கணக்காய்வை மேற்கொள்வதற்காக நியமிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் நியமிக்கப்பட்ட அமைச்சரவை விலைமனு கோரலுக்கான குழுவின் பணிகள், தற்போது நிறைவுக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் எதிர்வரும் சில வாரங்களில் இந்த நடவடிக்கையை மேற்கொள்ள எதிர்பார்த்துள்ளதாக, இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.

மத்திய வங்கியில் இடம்பெற்ற முறிகள் மோசடி தொடர்பில் தடயவியல் கணக்காய்வை மேற்கொள்வதற்காக சில சர்வதேச கணக்காய்வு சங்கங்கள் முன்வந்துள்ளன. அவற்றில் முதல்கட்டமாக தெரிவுசெய்யப்பட்ட சங்கங்களிலிருந்து தற்போது இறுதிக்கட்டத் தேர்வுகள் இடம்பெறுவதாக மத்திய வங்கியின் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே மத்திய வங்கியில் இடம்பெற்றதற்காக கூறப்படும் முறிகள் மோசடி தொடர்பில் ஆராய்வதற்கு கடந்த 2017 ஆம் ஆண்டு ஜனவரி மாத இறுதி பகுதியில் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு நியமிக்கப்பட்டது. இந்த ஆணைக்குழுவை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நியமித்தார். ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவினால் பரிந்துரைக்கப்பட்ட சிபாரிசுகளில், பேர்ப்பச்சுவல் ட்ரசரீஷ் நிறுவனத்துடன் மேற்கொள்ளப்பட்ட அனைத்து கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பிலும் தடயவியல் கணக்காய்வை மேற்கொள்ள வேண்டும் என்பதே பிரதான நோக்கமாகும்.

மத்திய வங்கியில் மோசடிகள் இடம்பெற்று முழுமையாக 4 வருடங்கள் நிறைவு பெற்றுள்ளன. இது நாட்டில் இடம்பெற்ற பாரிய மோசடியாக கருத்தப்படுகின்றது. ஆனால் இந்த முறி மோசடியில் ஈடுபட்ட பிரதான குற்றவாளியை ஆட்சியில் உள்ள அரசாங்கம் இன்னும் கைது செய்யாது உள்ளமை பரலரையும் விமர்சனம் கூற வைத்துள்ளது.

எவ்வாறான போதிலும் சுமார் ஒரு வருட காலம் இதனுடன் தொடர்புடைய அர்ஜுன் ஆலோசியஸ் மற்றும் காசும் பலிசேன ஆகியோர் அண்மையில்தான் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read more...

Wednesday, February 27, 2019

அமைச்சர்களின் போதைப்பொருள் பாவனை குறித்த விசாரணை அறிக்கை, செயற்குழு கூட்டத்தில் முன்வைப்பு

இலங்கையிலுள்ள அமைச்சர்கள் சிலர், கொக்கெய்ன் போதைப் பொருளை பயன்படுத்துவதாக, இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க வெளியிட்ட கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த கருத்தை அடுத்து இது குறித்து விசாரிப்பதற்கான நாடாளுமன்றத்தில் விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டது.

இந்த நிலையில் இந்த விடயம் தொடர்பான விசாரணை அறிக்கை, செயற்குழு கூட்டத்தில் வைத்து முன்வைக்கப்பட்டுள்ளது.
குறித்த விசாரணை குழுவின் தலைவரும், அமைச்சருமான லக்ஷ்மன் கிரியெல்லவினால் குறித்த அறிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய தேசிய கட்சியின் விசேட செயற்குழு கூட்டம் கட்சியின் தலைமையகமான ஸ்ரீகொத்தாவில் இன்று இடம்பெற்றது.

இந்த கூட்டம் கட்சியின் தலைவர் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில்பெற்றது. இதன்போதே குறித்த அறிக்கை முன்வைக்கப்பட்டது.

ரஞ்சன் ராமநாயக்கவினால் வழங்கப்பட்ட பெயர் பட்டியல் ஒன்றை மேலதிக விசாரணைக்காக குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு அனுப்பவும் இதன்போது தீர்மானிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை எதிர்காலத்தில் இடம்பெறவுள்ள தேர்தல் மற்றும் கட்சியின் எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பாகவும், இந்த கூட்டத்தில் கலந்துரையாப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

Read more...

இந்திய பாகிஸ்தான் மோதல் குறித்து இலங்கை கவலை

அண்மைக்காலமாக இடம்பெற்று வரும் இந்திய - பாகிஸ்தான் தாக்குதல் குறித்து உலக நாடுகள் பெரும் கவலை அடைந்துள்ளன. இந்த நிலையில், குறித்த நாடுகளுக்கு இடையிலான தாக்குதல் குறித்து இலங்கை கவலை வெளியிட்டுள்ளது.

ஒட்டுமொத்த பிராந்தியத்தின் பாதுகாப்பு, சமாதானம் மற்றும் ஸ்திரத்தன்மை ஆகியவற்றை உறுதிசெய்யக்கூடிய முறையில் செயற்படுமாறு இந்தியா மற்றும் பாகிஸ்தானிடம் இலங்கை வேண்டுகோள் விடுத்துள்ளது.

காஷ்மீர் - புல்வாமா பகுதியில் இந்திய பாதுகாப்பு அணி (CRPF) மீது நடத்தப்பட்ட கொடூரமான பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து இடம்பெற்று வரும் முரண்பாடுகள் தொடர்பாக இலங்கை கவலை வெளியிட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பாக வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு இன்றைய தினம் அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது.

இலங்கையானது, சுமார் மூன்று தசாப்தகால யுத்தத்தால் பாதிக்கப்பட்ட நாடு என்ற வகையில், புல்வாமாவில் இடம்பெற்ற இந்த தீவிரவாத தாக்குதலை தெளிவாக கண்டிப்பதுடன், தீவிரவாதத்திற்கு எதிரான அதன் எல்லா தோற்றங்கள் மற்றும் வடிவங்களுக்கு எதிராக உறுதியுடன் நிற்கின்றது.

தெற்காசிய பிராந்தியத்தில் சமாதானம் மற்றும் ஸ்திரத்தன்மை ஆகியவற்றை கட்டியெழுப்பவும், கலந்துரையாடல் மற்றும் நம்பிக்கை கட்டியெழுப்பல் ஆகியவற்றின் ஊடாக இரு தரப்பு பிரச்சினைகளை தீர்த்தல் உட்பட, பதற்றத்தை தணித்தல் தொடர்பாக அனைத்து முயற்சிகளுக்கும் இலங்கை வலுவான ஆதரவை தெரிவிக்கின்றது.

இந்த சூழ்நிலையில், ஒட்டுமொத்த பிராந்தியத்தின் பாதுகாப்பு, சமாதானம் மற்றும் ஸ்திரத்தன்மை ஆகியவற்றை உறுதி செய்யக்கூடிய முறையிலும் செயற்படுமாறு, இந்தியா மற்றும் பாகிஸ்தானிடம இலங்கை வேண்டுகோள் விடுக்கின்றது என, குறித்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Read more...

இலஞ்சம் பெற முயன்ற ஒருவர் கைது, மற்றொருவர் மடக்கிப் பிடிப்பு

மகவலி அதிகரசபையின் அங்குணுகொலபெலஸ்ஸ முரவெசிஹேன அலுவலகத்தின் முகாமையாளர் ஒருவர் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டுள்ளார்.

5000 ரூபா பணத்தை இலஞ்சமாக பெற்றுக் கொள்ள முயற்சித்த குற்றத்தில் நேற்று குறித்த நபர் கைதாகியதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மேலதிக விசாரணைகளுக்காக அங்குணுகொலபெலஸ்ஸ பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

இதேபோன்று, காலி பிரதான வீதியில் கடிகார விற்பனை நிலையம் ஒன்றில் கப்பம் பெற முயற்சித்த ஒருவர், பொலீஸாரில் ஒப்படைக்கப்பட்டுள்ளார். நேற்று மாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. கடைக்கு வந்த குறித்த நபர் கப்பம் பெற முயன்ற வேளையில் கடை உரிமையாளரால் தாக்கப்பட்டு மடக்கிப் பிடிக்கப்பட்டுள்ளார்.

இது குறித்த CCTV காணொளியும் பொலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

குறித்த நபர் நீண்ட நாட்களாக காலி பிரதேசத்தில் உள்ள வர்த்தக நிலையங்களில் கப்பம் பெற்று வந்துள்ளார். சம்பவம் நடைபெற்ற நேற்றை தினம், கத்தி ஒன்றை காண்பித்து கப்பம் பெற முயற்சித்துள்ளார். இதன்போது ஒருவர் கத்திக்கு இலக்காகி காயம் அடைந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்த நிலையில், காயமடைந்த நபர் கராப்பிடிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், காலி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Read more...

வர்த்தகர்கள் கொலை தொடர்பில் முறைப்பாடின்றி விசாரணை ஆரம்பம் - இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு

வர்த்தகர்கள் இரண்டு பேர் கடத்திச் செல்லப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக விசாரணை ஆரம்பிக்கப்பட்டிருப்பதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு கூறியுள்ளது. இது குறித்த முறைப்பாடு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் வழங்கப்படவில்லை. இந்த நிலையிலேயே மாத்தறை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அலுவலகத்தின் ஊடகா விசாரணை ஆரம்பிக்கப்பட்டிருப்பதாக தெரியவந்துள்ளது.

இதனிடையே எவராவது ரத்கம - உதாகம பிரதேசத்தை சேர்ந்த வர்த்தகர்கள் இருவர் கடத்திச் செல்லப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக முறைப்பாடு செய்தால் அது சம்பந்தமாக மற்றொரு விசாரணை ஆரம்பிக்கப்படும் என்று மனித உரிமைகள் ஆணைக்குழு கூறியுள்ளது.

Read more...

காத்தான்குடி கடற்கரையில் எரிந்த நிலையில் பெண் ஒருவரின் உடலம்

காத்தான்குடி - தாளங்குடா வேடன் கிராமத்தை அண்மித்த கடற்கரையில் பெண் ஒருவரின் உடலம் எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இந்த உடலம் இன்று காலை கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த பெண் தொடர்பில் இதுவரை எந்த தகவலும் கண்டறியப்படவில்லை. இந்த நிலையில் குறித்த பெண் கொலை செய்யப்பட்டாரா? அல்லது தற்கொலை செய்துள்ளாரா ? மற்றும் பெண்ணின் விபரங்களை பொலிசார் விசாரித்து வருகின்றார்கள்.


Read more...

இலங்கையின் செயற்பாட்டில் முன்னேற்றம் இல்லை - நெருக்கடியை கொடுக்கும் சர்வதேச தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள்

ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழு முன்வைத்துள்ள பரிந்துரைகளை இலங்கை நடைமுறைப்படுத்துவதற்கான அழுத்தத்தை சர்வதேச நாடுகள் வழங்க வேண்டும் என, சர்வதேச தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து கோரிக்கை விடுத்துள்ளதாக கூறப்படுகின்றது.

ஜெனீவாவில் ஆரம்பமாகியுள்ள 40ஆவது ஐ.நா மனித உரிமைகள் பேரவைக் கூட்டத் தொடர் நடைபெற்று வருகின்றது. இதில் சர்வதேச தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து இலங்கை தொடர்பில் அறிக்கை ஒன்றை முன்வைக்கவுள்ளன. குறித்த அறிக்கையிலேயே இந்தக் கோரிக்கை வலியுறுத்தப்பட உள்ளது.

காணாமல் போனோர் அலுவலகம் மிகவும் தாமதமாகாவே பல அழுத்தங்களின் மத்தியில் அமைக்கப்பட்டது. பயங்கரவாதத்தை மீளப்பெற்றுக் கொள்வதாக அரசாங்கம் வழங்கிய உறுதிமொழியை இலங்கை அரசாங்கம் நிறைவேற்றவில்லை. இவ்வாறான பின் தங்கிய போக்கில் இலங்கை அரசாங்கம் மனித உரிமைகள் விடயத்தில் செயற்படுவதனால், ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் எழுத்துமூல அறிக்கையொன்றை நடைபெற்றுவரும் அமர்வில் முன்வைக்க உள்ளார்.

ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரால் முன்வைக்கப்படவுள்ள குறித்த அறிக்கைக்கு சர்வதேச நாடுகள் தமது ஆதரவை தெரிவித்துள்ளன.

அத்துடன்அந்த அறிக்கையில் முன்வைக்கப்படும் பரிந்துரைகளை நிறைவேற்றுமாறு இலங்கைக்கு அழுத்தங்களைக் கொடுக்க வேண்டும் என்றும் சர்வதேச தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து கோரிக்கை விடுத்துள்ளன.


Read more...

2025ஆம் ஆண்டுக்கு முன்னர் ஏற்றுமதியில் வாசனைத் திரவியங்கள் முதலிடம் வகிக்கும் - அமைச்சர் தயா கமகே

இலங்கையின் பிரதான ஏற்றுமதிப் பொருளாக வாசனைத் திரவியங்களை 2025ஆம் ஆண்டுக்கு முன்னர் முதலிடத்திற்கு கொண்டு செல்வதே அரசாங்கத்தின் இலக்காகும் என்று அமைச்சர் தயா கமகே தெரிவித்துள்ளார்.

வாசனைத் திரவியங்களுக்கான முத்திரையை வெளியிடும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார். இலங்கையில் இருந்து வெளிநாடுகளுக்கு பிரதான வாசனை திரவியங்களான கறுவா, மிளகு, கராம்பு, சாதிக்காய் ஆகியன ஏற்றுமதி செய்யப்படுகின்றன. குறித்த கறுவா, மிளகு, கராம்பு, சாதிக்காய் ஆகிய நான்கு வாசனைத் திரவியங்களையும் உள்ளடக்கும் வகையில் தற்போது முத்திரை வெளியிடப்பட்டுள்ளது

இதனிடையே, உள்நாட்டு வாசனைத் திரவியங்களின் பெறுமதியை மேம்படுத்துவதற்காக ஏற்றுமதியாளர்களுக்கும் துறைசார் உற்பத்தியாளர்களுக்கும் உயர்ந்தபட்ச நிவாரணங்கள் வழங்கப்படுவதாகவும் அமைச்சர் தயா கமகே இதன்போது மேலும் குறிப்பிட்டார்.

Read more...

அரசியல்வாதிகளிடம் மக்கள் கேள்வி கேட்கவேண்டும் - யாழில் தேர்தல்கள் ஆணையாளர்

தேர்தல்களில் மக்களின் வாக்களிப்பு வீதம் குறைவதற்கான முக்கிய காரணம் அரசியல்வாதிகள் மீது மக்கள் கொண்டுள்ள அவநம்பிக்கையே என்று தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார். யாழ்.மாவட்டச் செயலகத்தில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மக்கள் நினைக்கின்றார்கள் தேர்தலில் அரசியல்வாதிகளை தெரிவு செய்த பின்னர், அந்த அரசியல்வாதிகள்தான் எல்லாவற்றையும் செய்ய வேண்டும் என்று. மக்களுக்கு எந்த வேலையும் இல்லை என்று எண்ணுகிறார்கள். மக்கள் இவ்வாறு நினைப்பது தவறானது.

மக்களால் தெரிவாகும் அரசியல்வாதிகள், மக்களின் தேவைக்கு ஏற்றபடி நடந்து கொள்ளாவிட்டால் அரசியல்வாதிகளிடம் கேள்வி கேட்க வேண்டும். இவ்வாறு அரசியல்வாதிகளிடம் மக்கள் கேள்வி கேட்கும் நிலை வந்தால்தான் தேர்தல் தொடர்பாக மக்களுக்கு நம்பிக்கை உருவாகும்.

இதேவேளை, இந்தியாவை பொறுத்தவரை தேர்தல் வாக்குச் சீட்டில் உள்ளவர்கள் எவரையும் விரும்பவில்லை என்று பதிவிடுவதற்கு ஒரு தெரிவு உள்ளது. இந்த முறை எமக்கு தேவையா? என்று நாங்கள் இங்கு கூறவில்லை.

ஆனால், மக்கள் அனைவரும் ஜனநாயகத்தின் பெறுமதியை தெரிந்து வைத்திருந்தால் எதிர்காலத்தில் வாக்களிப்பு வீதம் குறைவடையாது என்பதை எதிர்பார்க்கின்றோம் என்று தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.


Read more...

இணுவிலில் கத்தி குத்துக்கு இலக்காகிய முதியவர்

இணுவில் கிழக்குப் பகுதியில் முதியவர் ஒருவர் இளைஞர் ஒருவரால் கத்திக் குத்துக்கு இலக்காகி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

முதியவரின் வீட்டுக்குள் புகுந்த இளைஞர் ஒருவர், அங்கு வசித்துவரும் முதியவரை கத்தியால் குத்திவிட்டுத் தப்பிச் சென்றுள்ளதாக சுன்னாகம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்றைய தினம் 82 வயதையுடைய கே.குமாரசாமி என்ற முதியவரே இவ்வாறு கத்திக்குத்துக்கு இலக்காகியுள்ளார். கழுத்து மற்றும் நெஞ்சுப் பகுதியில் கத்தி குத்த்து தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பாக காயமடைந்த முதியவரிடமிருந்து தகவல்களைப் பெற்றுக்கொள்ள முடியாதுள்ளதாகவும் அவரது மனைவி வழங்கிய வாக்குமூலத்தின் அடிப்படையில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்தநிலையில், முதியவரின் மனைவி வழங்கிய வாக்கு மூலத்தின் அடிப்படையில் இளைஞர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த இரண்டு பேரும் முதியவரின் வீட்டில் வேலை செய்பவர்கள் என்பதோடு, அவர்களில் ஒருவரே மதுபோதையில் முதியவரைக் தாக்கி இருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். இந்த நிலையில் மேலதிக விசாரணைகளை சுன்னாகம் பொலிஸார் தொடர்ந்தும் மேற்கொண்டு வருகின்றனர்.


Read more...

முல்லைத்தீவில் கட்டுத்துவக்கு வெடித்ததில் ஒருவர் பலி

முல்லைத்தீவு அம்பாள்புரம் பகுதியில் கட்டுத்துவக்கு வெடித்ததில் ஒருவர் பலியாகியுள்ளார். முல்லைத்தீவு மாவட்டத்தின் மாந்தை கிழக்கு பிரதேச செயலக பிரிவுக்கு உட்பட்ட பகுதியிலே இந்த அனர்த்தம் சம்பவித்துள்ளது.

அம்பாள்புரம் பகுதியில் வசித்துவரும் நபர் ஒருவர், வவுனிக்குளம் அலைகரை பகுதியில் சென்றவேளை கட்டுத்துவக்கு இலக்காகி பலியாகியுள்ளார். சம்பவத்தில் உயிரிழந்தவர் அம்பாள்புரம் பகுதியை சேர்ந்த 35 வயதுடைய 4 பிள்ளைகளின் தந்தையான நல்லையா சதீஸ்குமார் என்று கண்டறியபட்டுள்ளது.

இந்த நிலையில் மாங்குளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Read more...

அமெரிக்க அதிபர் நாட்டிற்கு வருவார் - மங்கள சமரவீர

அமெரிக்க அதிபர் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்வார் என்று நிதியமைச்சர் மங்கள சமரவீர நம்பிக்கை வெளியிட்டுள்ளார். மாத்தறையில் அமெரிக்க மையத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

2016ஆம் ஆண்டு இலங்கைக்கு முன்னாள் அமெரிக்க அதிபர் விஜயம் மேற்கொள்ள திட்டமிட்டு இருந்தார். ஆனால் அவரால் வழங்கப்பட்ட தினத்திற்கு இலங்கை அரசுக்கு உடன்பாடு இல்லை. இதன் காரணமாகவே அந்தப் பயணம் சாத்தியமற்றுப் போனது. மாறாக அவர் நாட்டிற்கு விஜயம் விஜயம் மேற்கொண்டிருந்தால் அது நிச்சயமாக ஒரு வரலாற்றுப் பயணமாக அமைந்திருக்கும் என்றும் மங்கள சமரவீர தெரிவித்தார்.

எவ்வாறான போதிலும், எதிர்காலத்தில் அமெரிக்க அதிபர் நிச்சயமாக இலங்கைக்கு வருவார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Read more...

வடக்கில் 248 பாடசாலைகளை மூட நடவடிக்கை

வடக்கில் சுமார் 248 பாடசாலைகள் மூடப்படக் கூடிய அபாயத்தை எதிர்நோக்கியுள்ளதாக வடமாகாண கல்வித் திணைக்களம் தெரிவித்துள்ளது. குறித்த பாடசாலைகளில் சுமார் 10 ஆண்டுகளாக 50 மாணவர்களுக்கும் குறைந்த அளவிலேயே மாணவர்கள் கல்வி கற்று வருவதாக வடமாகாண கல்வித் திணைக்களம் சுட்டிக் காட்டியுள்ளது. எனவே குறித்த பாடசாலைகளை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஒன்றில், குறித்த பாடசாலைகளில் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லை என்றால் இந்த ஆண்டின் இறுதியில் குறித்த பாடசாலைகள் மூடப்படும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தவிர்க்க முடியாமல் இவ்வாறான பாடசாலைகளை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கும் வடமாகாண கல்வித் திணைக்களம், குறித்த பாடசாலைகளில் கல்வி கற்கின்ற மாணவர்கள் அருகில் உள்ள பாடசாலைகளுக்கு மாற்றப்படுவார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளது.

இதனிடையே, 50 மாணவர்களை விடவும் குறைந்த பாடசாலைகளை பராமரிப்பதற்கு பெருமளவு நிதி செலவிடப்பட்ட போதிலும் அதற்கான கற்பித்தல் பிரதிபலன்கள் கிடைக்கப் பெறுவதில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அண்மையில் கல்வி அமைச்சில் நடைபெற்ற கூட்டமொன்றில் இவ்வாறு 50 இற்கும் குறைந்த மாணவர்களை கொண்ட பாடசாலைகளை மூடுவது குறித்து இணங்கம் ஏற்பட்டுள்ளதாகவும் வட மாகாண கல்வித் திணைக்கள தகவல்கள் தெரிவிக்கின்றன.

Read more...
Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com