Wednesday, February 27, 2019

துஸ்பிரயோக குற்றச்சாட்டில் பாடசாலை அதிபர் கைது

பாடசாலை மாணவி ஒருவரை துஸ்பிரயோகம் செய்த அதிபர் ஒருவரை பொலிசார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் குளியாப்பிட்டி பகுதியிலுள்ள பிரபல பாடசாலை ஒன்றில் நிகழ்ந்துள்ளது.

குறித்த உயர்தர வகுப்பு மாணவியை பல்வேறு சந்தர்ப்பங்களில் அதிபர் துஷ்பிரயோகங்களுக்கு உட்படுத்தியுள்ளதாக குறித்த மாணவி, பொலிஸாரிடம் வழங்கிய வாக்குமூலம் தெரிவிக்கின்றது.

இதனைத் தொடர்ந்தே சம்பந்தப்பட்ட அதிபர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபரிடம் தொடர்ந்தும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிசார் குறிப்பிட்டுள்ளார்.

Read more...

இன்றும் அதிக மழை பெய்யும் - வளிமண்டலவியல் திணைக்களம்

மேல், சப்ரகமுவ, மத்திய, தென், மற்றும் ஊவா மாகாணங்களிலும் குருநாகல் மற்றும் அனுராதபுரம் மாவட்டங்களிலும் பிற்பகல் 2 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

ஊவா, சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் கேகாலை, ஹம்பாந்தோட்டை மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மில்லி மீட்டருக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களில் பல தடவைகள் மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. தென், மேல் மற்றும் கிழக்கு கரையோரப் பகுதிகளில் காலை வேளையிலும் சிறிதளவான மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. ஊவா மாகாணத்திலும் இரத்தினபுரி மாவட்டத்திலும் பலத்த மின்னல் தாக்கத்திற்கான சாத்தியம் காணப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

கொழும்பில் இருந்து ஹம்பாந்தோட்டை மற்றும் மட்டக்களப்பு ஊடாக திருகோணமலை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் பல இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

மன்னாரில் இருந்து காங்கேசந்துறை, திருகோணமலை மற்றும் பொத்துவில் ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் காற்றானது தென்கிழக்கு முதல் வடகிழக்கு வரையான திசைகளில் இருந்து வீசக்கூடுவதுடன் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 20-30 கிலோ மீற்றர் வரை காணப்படும்.

நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகளில் காற்றானது தென்மேற்கு முதல் வடமேற்கு வரையான திசைகளில் இருந்து வீசக்கூடுவதுடன் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 15-25 கிலோ மீற்றர் வரை காணப்படும் என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

Read more...

இலங்கை போக்குவரத்து சபைக்கு புதிய தலைவர் நியமனம்

இலங்கை போக்குவரத்து சபையின் (SLTB) தலைவர் ரமால் சிறிவர்தன தனது பதவியை இராஜினாமா செய்ததை தொடர்ந்து, அதன் புதிய தலைவராக சிரேஷ்ட நிர்வாகியான உபாலி மாரசிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.

அவர் உத்தியோக பூர்வமாக நியமிக்கப்பட்டதை அடுத்து இன்று தனது கடமைகளைப் பொறுப்பேற்கவுள்ளார்.

உபாலி மாரசிங்க இதற்கு முன்னர் கல்வி, சுகாதாரம் மற்றும் பெற்றோலியம் உள்ளிட்ட அமைச்சுக்களில் செயலாளராகவும் தேசிய உற்பத்தி திறன் செயலகத்தின் பணிப்பாளராகவும் கடமையாற்றியுள்ளார்.

முன்னதாக தனிப்பட்ட காரணங்கள் மற்றும் துறைசார் அமைச்சரின் அறிவுறுத்தலுக்கமைய ரமால் சிறிவர்தன தனது பதவியை இராஜினாமா செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது


Read more...

Tuesday, February 26, 2019

காணி விடுவிப்பும் காணாமல் ஆக்கப்பட்டோரும். 2009க்கு முன்னரும் 2009 இக்கு பின்னரும். தமிழ் நேசன்

30 வருடத்துக்கு மேற்பட்ட ஆயுதப் போராட்டத்தில் பலர் காணாமல் போனதும். காணி நிலங்கள் அபகரிக்கப்பட்டதும் மறுக்கமுடியாத உண்மை.

ஆனால் 2009 க்கு பின் உருப்பெறும் இவ் ஆர்ப்பாட்டங்களும் கண்டணங்களும் 2009 க்கு முன் வன்னியிலும், யாழ்குடாநாடானது புலிகளது கட்டுப்பாட்டில் இருந்தபோதும் ஒருமுறையேனும் நடைபெறாதது ஏன்.

தனியார் காணிகளை ஆக்கிரமித்தே புலிகளது அத்தனை முகாம்களும் இருந்தன. புலிகளது கட்டுப்பாட்டில் இருந்து வெளியேறுபவர்கள், குறிப்பாக புலம் பெயர்ந்து செல்பவர்கள் தங்களது சொத்துக்கள் அத்தனையும் புலிகளிடம் ஒப்படைத்தே ஆகவேண்டும்.

அவ்வாறு புலிகளிடம் ஒப்படைக்காமல் யாராவது வறுமைக்கோட்டிற்கு உட்பட்ட உறவினர்களுக்கு வழங்கினால் அவ்வாறு வழங்கிய சொத்துக்களை அவ் வறுமைக் கோட்டிற்குட்பட்ட உறவினர் குடும்பத்திடம் இருந்து வலுக்கட்டாயமாக சொத்துக்களை புலிகள் பறிமுதல் செய்த சம்பவங்கள் ஒன்றல்ல இரண்டல்ல.

இன்று காணி நில விடுவிப்புக்காக ஆர்ப்பரிக்கும் பல்கலைக்கழகமும், கண்டணம் தெரிவிக்கும் தேசியவாதிகளும், நீலிக்கண்ணீர் வடிக்கும் புலம் பெயர்ந்த தமிழரும், அன்று புலிகள் புலம் பெயர்ந்து சென்றவர்களிடம் சொத்துக்களை பறிமுதல் செய்யும்போதோ ! தனியார் காணிகளை ஆக்கிரமித்து முகாம்கள் அமைக்கும்போதோ ! கண்டனமோ, ஆர்ப்பாட்டமோ, செய்யாதது ஏன் ?

குறைந்தபட்சம். இதெல்லாம் ஒரு பிழையான செயற்பாடு என்றாவது சொல்லியிருக்கலாமல்லவா ?

அவ்வாறே கானாமல் ஆக்கப்பட்டோரும்.

மாற்றுக்கருத்தாளர்கள், மாற்றியக்க குடும்ப உறவினர்கள், புலிகளிடம் கேள்வி கேட்பவர்கள், கப்பம் கட்ட மறுப்பவர்கள், இயக்கத்துக்கு கட்டாயமாக பிடித்துச் செல்லப்பட்டவர்கள், இவ்வாறு அடுக்கிக்கொண்டே போகலாம்.

இந்திய இராணுவ காலத்தில் EPRLF இல் இருந்தவர்களையும் EPRLF ஆல் கட்டாயமாக இணைக்கப்பட்டவர்களையும் சரணடையுமாறு ஒலி பெருக்கிமுலம் புலிகள் அறிவித்ததைத்தொடர்ந்து தாய் தகப்பனோடு சரணடையச் சென்றவர்கள் அனைவரும் புதைக்கப்பட்ட சம்பவங்களை அன்றைய சூழலில் வாழ்ந்தவர்கள் மறந்திருக்கமாட்டார்கள்.

அவ்வாறான புதைகுழிகளில் ஒன்றுதான் மன்னார் புதைகுழி என்ற தகவல் புலிகளின் ஊதுகுழல்களின் இருட்டடிப்பில் தென்படுகின்றது.

புரிந்துணர்வு ஒப்பந்தவேளையில் A-9 பாதையால் சென்ற பலரை புலிகளது சோதனை சாவடியிலும், பேரூந்தை இடைநடுவே மறித்தும் இறக்கிசென்ற பலபேர் இன்றுவரை வீடு திரும்பவில்லை.

இன்று காணாமல் போனோருக்காக ஆர்ப்பரிக்கும் பல்கலைக்கழகமும், கண்டணம் தெரிவிக்கும் தேசியவாதிகளும், நீலிக்கண்ணீர் வடிக்கும் புலம் பெயர்ந்த தமிழரும், அன்று புலிகளால் கடத்திச் செல்லப்பட்டவர்களுக்காகவும், கைது செய்து கொண்டு சென்றவர்களுக்காகவும், மனைவியுடன் சென்று சரணடைந்தவர்கள் எங்கே என்றும், தாய் தகப்பன் கொண்டுசென்று ஒப்படைத்த பிள்ளைக்கு என்ன நடந்தது என்றும், கண்டனமோ, ஆர்ப்பாட்டமோ, செய்யாதது ஏன் ?

குறைந்தபட்சம், இதெல்லாம் ஒரு பிழையான செயற்பாடு என்றாவது சொல்லியிருக்கலாமல்லவா ?

இதிலிருந்து ஒரு உண்மை தெளிவாகிறது.

அரக்க கூட்டம் சிங்கள இராணுவம் என்று கூறினாலும் அவனுக்கு எதிராக ஆர்ப்பாட்டங்கள் ஊர்வலங்கள் கண்டணங்கள் என்று செய்யும் அளவிற்கு ஜனநாயகம் இருக்கிறது.

புலிகள் எமக்காக போராடுகிறார்கள் என்று கூறினாலும் அவார்களுக்கு எதிராக பெரிய அளவில் ஆர்ப்பாட்டமோ ஊர்வலமோ செய்யாவிட்டாலும் குறைந்த பட்சம் சரி தவறு என்று வாய் திறந்து கூறும் அளவிற்க்குகூட சுதந்திரம் இல்லை.

சிங்களவனிடம் ஜனநாயக முறையிலாவது போராடலாம்.

எம்மவரிடம் வாய் திறந்துகூட பேசமுடியாத அடக்குமுறைக்குள்தான் இருந்தோம் என்ற உண்மையை ஒத்துக்கொண்டேதான் ஆகவேண்டும்.

Read more...

விழிப்புணர்வூட்டும் குறுந்திரைப்பட விழா - மஹிந்த தேசப்பிரிய

ஜனநாயகம் தொடர்பான சமூக கலந்துரையாடல் ஒன்றை,  ஏற்படுத்துவதற்காக ‘பெளர’ என்ற பெயரிலான குறுந்திரைப்பட விழாவொன்றை ஏற்பாடு செய்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.தேர்தல்கள் ஆணைக்குழுவின் 2017 – 2020 மூலோபாயத் திட்டத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதை போன்று, இந்த விழா இடம்பெறவுள்ளதாக அவர் தெரிவித்தார்.

யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே, ஆணைக்குழுவின் தலைவர் இதனை தெரிவித்துள்ளார்.

களனி பல்கலைக்கழகத்தின் மக்கள் தொடர்பாடல் பிரிவு மற்றும் கல்வி அமைச்சு ஆகியன இணைந்து, ஜனநாயகம், மக்கள் இறைமை மற்றும் சர்வசன வாக்குரிமை தொடர்பில் மக்களை அறிவுறுத்துவதற்காக இந்த குறுந்திரைப்பட விழாவை நடாத்தவுள்ளன.

ஜனநாயகம், சர்வஜன வாக்குரிமை மற்றும் மக்கள் இறைமை தொடர்பாக பொதுமக்களிடத்தில் விழிப்புணர்வை மேம்படுத்துவதற்காகவே, இக் குறுந்திரைப்பட விழா இடம்பெறவுள்ளது.

இதன்போது குறித்த போட்டிக்கு மும்மொழி குறுந்திரைப்படங்களையும் சமர்ப்பிக்க முடியும் என்பதுடன், ஒவ்வொரு குறுந்திரைப்படமும் 5 நிமிடங்களுக்கு உட்பட்டதாக இருக்க வேண்டும்.

இந்த போட்டி இரண்டு பிரிவுகளில் நடத்தப்படவுள்ளதுடன், இதில் முதலாம் இடத்தை பெறும் படத்திற்கு 125,000 ரூபாயும் இரண்டாம் இடத்திற்கு 75,000 ரூபாயும், மூன்றாம் இடத்திற்கு 50000 ரூபாயும் வழங்கப்படவுள்ளது.

பாடசாலை பிரிவில் முதலாமிடம் பெறும் படத்திற்கு 50000 ரூபாயும் இரண்டாம் இடத்திற்கு 30000 ரூபாயும் மூன்றாம் இடத்திற்கு 20000 ரூபாய் பரிசில் தொகையும் வழங்கப்படவுள்ளது.

இதேவேளை இந்த போட்டியில் கலந்துகொள்பவர்கள் எதிர்வரும் மே மாதம் 15ஆம் திகதி வரையில் குறுந்திரைப்படங்களை சமர்ப்பிக்க முடியும்.

குறித்த போட்டியில் தேர்ந்தெடுக்கப்பட்ட குறுந்திரைப்படங்கள் எதிர்வரும் ஜூன் மாதம் 8ஆம் திகதி பிற்பகல் 3 மணிக்கு தேசிய திரைப்பட கூட்டுத்தாபனத்திற்குச் சொந்தமான, தரங்கனி திரையரங்கில் திரையிடப்படும். அன்றைய தினமே பரிசளிப்பு நிகழ்வும் நடைபெறும் என, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய குறிப்பிட்டார்.

Read more...

இலங்கை போக்குவரத்துச் சபையின் தலைவர் பதவி விலகல்

இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர், றமல் சிறிவர்தன தனது பதவியில் இருந்து விலகியுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன.

றமல் சிறிவர்தன தனது பதவி விலகல் கடிதத்தை, போக்குவரத்து அமைச்சின் செயலாளரிடம் இன்று கையளித்துள்ளார்.

எனினும், தனது பதவி விலகலுக்கான காரணத்தை அவர் இதுவரை வெளியிடவில்லை.

ஆனால், அமைச்சின் உயர் மட்ட அதிகாரிகளின் அழுத்தம் காரணமாகவே, அவர் பதவி விலகுவதாக இலங்கை போக்குவரத்து சபை தொழிற்சங்கங்கள் மற்றும் ஊழியர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read more...

மார்ச் 7 வரை ஜனாதிபதி ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யலாம்

சுகாதார அமைச்சில் முறைகேடுகள் இடம்பெற்றுள்ளதாக தெரிவித்து அரச வைத்திய அதிகாரிகள் சங்கம், ஊழல் மோசடிகள் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதுதவிர, பாடசாலை மாணவர்களுக்கான டெப் வழங்கும் திட்டம் மற்றும் கல்வி அமைச்சினூடாக முறைகேடுகள் இடம்பெற்றதாகத் தெரிவித்து முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. குறித்த முறைப்பாடுகள் நேற்று பதிவாகியுள்ளன. இவ்வாறு கிடைத்துள்ள முறைபாடுகளுக்கு அமைய, விசாரணைகளை முன்னெடுப்பதற்கு, ஜனாதிபதி ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது. இதன்படி, முதற்கட்டமாக தெரிவு செய்யப்பட்ட 4 முறைப்பாடுகள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்கவுள்ளதாக, ஜனாதிபதி ஆணைக்குழுவின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

அதன்படி கொலன்னாவ எண்ணெய் களஞ்சியசாலையின் உயரதிகாரி ஒருவர் உள்ளிட்ட சிலரினால் பில்லியன் கணக்கான நிதி மோசடி செய்யப்பட்டமை மற்றும் 13,200 லீற்றர் எண்ணைய் பவுசரை வௌியில் கொண்டுசென்று விற்பனை செய்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

மின்சக்தி மற்றும் மீள்புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சினால் மின் கொள்ளளவை அதிகரிப்பதற்காக மின்சாரத்தைக் கொள்வனவு செய்தமை தொடர்பில் கிடைத்துள்ள முறைப்பாடு மற்றும், ஶ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் இடம்பெற்றுள்ளதாக கூறப்படும் ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பிலேயே விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு இதுவரை, கடந்த 4 ஆண்டுகளில் இடம்பெற்றதாக கூறப்படும் 150 க்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. இந்தநிலையில், எதிர்வரும் மார்ச் மாதம் 7ஆம் திகதி வரை ஜனாதிபதி ஆணைக்குழுவில் முறைப்பாட்டாளர்களினால் முறிப்பாடுகளை முன்வைக்க முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Read more...

நாளை கொழும்பு விஹாரமகாதேவி பூங்காவிற்கு முன்பாக போராட்டம்

முகாமைத்துவ உதவியாளர்கள் தொழிற்சங்கத்தின் ஏற்பாட்டில் 13 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றித் தருவதன் அவசியத்தை வலியுறுத்தி போராட்டம் ஒன்றுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. நாளை, கொழும்பு விஹாரமகாதேவி பூங்காவிற்கு முன்பாக முன்னெடுக்கப்படவுள்ளதாக துண்டுப்பிரசுரம் ஊடாக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

''உரிமைகளை வென்றெடுக்க ஒரு நாள்'' எனும் தொனிப்பொருளில் இந்த போராட்டம் நடைபெறவுள்ளது.

அரசாங்க முகாமைத்துவ உதவியாளர்கள் நாளைய தினம் சுகயீன விடுமுறையை பெற்று பணிப்புறக்கணிப்பை மேற்கொண்டு, போராட்டத்திற்கு வலுச் சேர்க்குமாறு குறித்த துண்டு பிரசுரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நாளை நடைபெறவுள்ள போராத்தின் போது ஜனாதிபதி, பிரதமர் மற்றும் விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் ஆகியோரிற்கு தமது கோரிக்கைகள் அடங்கிய மனுவை கையளிக்கவுள்ளதாக போராட்டக்க்காரர்கள் தெரிவித்துள்ளார்கள்.


Read more...

போதைப் பொருள் கடத்தல் வலைப்பின்னலைக் கண்டுபிடிக்க, தொலைபேசி உரையாடல்களைத் தொடர்கிறது பொலிஸ்

அண்மையில் கைப்பற்றப்பட்ட பெருமளவான ஹெரோயினுடன் கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேகநபர்களின் தொலைபேசி கலந்துரையாடல் அறிக்கையை பெற்றுக்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, சந்தேகநபர்கள் பயன்படுத்திய தொலைபேசி சிம் அட்டைகளின் நிறுவனங்கள் ஊடாக, அவர்கள் மேற்கொண்ட உரையாடல்கள் கண்டறியப்படவுள்ளன.

உள்நாட்டு மற்றும் வௌிநாட்டில் செயற்படும் புலனாய்வுப் பிரிவினருடன் தகவல்களை பரிமாறி, விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சந்தேகநபர்களின் வாக்குமூலத்தின் அடிப்படையில், கொள்ளுப்பிட்டியில் கைப்பற்றப்பட்ட ஹெரோயின் தொகை, டுபாயிலுள்ள போதைப்பொருள் கடத்தல்காரரால், தெற்காசிய நாடொன்றைச் சேர்ந்த மற்றுமொரு கடத்தல்காரரூடாக இலங்கைக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இந்த கடத்தல்காரர் டுபாயில் உள்ளதாகவும் இந்தக் கடத்தலுடன், மாகந்துரே மதூஷின் குழுவினருக்கு தொடர்பில்லை என விசாரணைகளை முன்னெடுத்த பொலிசார் தெரிவிக்கின்றனர்.

கொள்ளுப்பிட்டி, வர்த்தக கட்டடத் தொகுதியின் கைப்பற்றப்பட்ட 294 கிலோ 490 கிராம் நிறையுடைய ஹெரோயின் போதை பொருளின் பெறுமதி 3,533 மில்லியன் ரூபா ஆகும்.

இந்த நிலையில், சந்தேகநபர்கள் இருவரையும் மார்ச் முதலாம் திகதி வரை தடுத்துவைத்து விசாரணை செய்வதற்கு பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப்பிரிவினருக்கு நீதிமன்றம் அனுமதியளித்தது.

Read more...

பொரளை அடுக்குமாடி குடியிருப்பில் தீ

பொரளை- ஷஹஸ்புர பகுதியிலுள்ள அடுக்குமாடி குடியிருப்பு கட்டத்தின் 11ஆம் மாடியில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

இன்று இந்த அசம்பாவிதம் நிகழ்ந்துள்ளது.
குறித்த தீ பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் தீயணைப்பு படையினர் மற்றும் பொலிஸார் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

எவ்வாறான போதிலும் தீ ஏற்பட்டமைக்கான காரணம் இதுவரை தெரியவில்லை. இந்த தீ காரணமாக ஏற்பட்ட சேத விபரங்கள் குறித்த தகவல்கள் இன்னும் வெளிவரவில்லை. பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Read more...

இலங்கைக்கு கால அவகாசம் வழங்கும் தீர்மானத்தில் பிரித்தானியா

இலங்கை அரசாங்கத்தின் மனித உரிமை நடவடிக்கைகளை பிரித்தானியா வரவேற்றுள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 40ஆவது கூட்டத்தொடரின் ஆரம்ப அமர்வில் உரையாற்றிய பொதுநலவாய மற்றும் ஐக்கிய நாடுகளுக்கான இராஜாங்க அமைச்சர் தரிக் அஹமட் இதனை தெரிவித்துள்ளார்.

அத்துடன் இலங்கையின் நல்லிணக்க செயற்பாடுகளை பிரித்தானியா ஊக்குவிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். இதன்போது கருத்து தெரிவித்த அவர், பொதுமக்களின் காணிகளை விடுவித்தல் மற்றும் இழப்பீடு வழங்குவதற்கான அலுவலகத்தை நிறுவுதற்கான இலங்கை அரசாங்கத்தின் தீர்மானம் போன்றன வரவேற்கத்தக்கது எனத் குறிப்பிட்டார்.

இதனிடையே, இலங்கை அரசாங்கத்திற்கு மேலதிக கால அவகாசம் வழங்கும் வகையிலான தீர்மானமொன்றை பிரித்தானியா இக்கூட்டத்தொடரில் முன்வைக்க தீர்மானித்துள்ளது. ஆனால், போரினால் பாதிக்கப்பட்ட மக்களோ, பிரித்தானியா மேலதிக கால அவகாசத்தை இலங்கைக்கு வழங்கக் கூடாது என்ற முடிவில் உறுதியாக இருந்து வருகின்றார்கள்.

Read more...

நாட்டில் உள்ள அதிவேக நெடுஞ்சாலையில் ஏற்படப் போகும் முக்கிய வளர்ச்சி

அதிவேக நெடுஞ்சாலையில், எதிர்வரும் காலங்களில் இலத்திரனியல் முறையில் பணம் செலுத்தும் முறையாக மேம்படுத்த, நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக அதிவேக வீதி பராமரிப்பு மற்றும் கண்காணிப்பு பணிப்பாளர் சமன் ஓப்பநாயக்க தெரிவித்தார்.

தற்போது கட்டுநாயக்க அதிவேக வீதியில் இலத்திரனியல் முறையில் பணம் செலுத்தும் முறை நடைமுறையில் உள்ளது. எதிர்வரும் காலங்களில் இந்த முறை நாட்டில் உள்ள சகல அதிவேக வீதிகளிலும் நடைமுறைக்கு கொண்டுவருவதே தமது எதிர்பார்ப்பாகும் என அவர் குறிப்பிட்டார்.

இலத்திரனியல் கொடுப்பனவு முறையை பயன்பாட்டுக்கு கொண்டு வருவதனால் பொதுமக்களுக்கு பல நன்மைகள் கிடைக்குமென அவர் தெரிவித்தார்.

இதற்காக விசேட காட் ஒன்றை அறிமுகப்படுத்தி இதனை அதிவேக வீதியை பயன்படுத்தும் சாரதிகளுக்கு விநிநோகிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் சமன் ஒப்பநாயக்க மேலும் தெரிவித்தார்.

Read more...

இராணுவ வீரர் தன்னைத்தானே சுட்டுத் தற்கொலை

இராணுவ வீரர் ஒருவர் தனது துப்பாக்கியால் தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பல்லேகல இராணுவ முகாமில் சம்பவித்துள்ளது.

26 வயதுடைய குண்டசாலை பிரதேசத்தையுடைய இராணுவ வீரரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த இராணுவ வீரர் எதற்காக தன்னைத் தானே சுட்டுக்கொண்டார் என்ற தகவல் இன்னும் வெளியாகவில்லை.

அவரது உடலம் கண்டி பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், பல்லேகல பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Read more...

குற்றமிழைத்தவர்கள் அமைச்சர்களாக இருந்தாலும் தண்டனையே - லக்‌ஷ்மன் கிரியெல்ல

நாடாளுமன்ற சிறப்புரிமையானது அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் பொதுவானது என்று அமைச்சரும் சபை முதல்வருமான லக்‌ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.ஹொரவப்பொத்தானை தொகுதி அமைப்பாளர் கூட்டத்தில் பங்கேற்றபோது அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

தற்போதுள்ள அமைச்சர்களுக்கு எதிராக வகை வகையான குற்றச்சாட்டுக்கள் தொடர்ந்தும் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது முன்வைக்கப்படும் குற்றச்சாட்டு பொய்யானது என்றால், அவர்களை பாதுகாக்க வேண்டியது சபை முதல்வரின் கடமையாகும். இருப்பினும் சில குற்றச்சாட்டுக்கள் சி.ஐ.டிக்கு கையளிக்கப்பட்டுள்ளன. ஆனால் நாடாளுமன்றத்தில் யாரும் கொலை செய்யப்பட்டிருந்தால் அதனை மூடி மறைக்க முடியாது.

அந்தவகையில், நாடாளுமன்றத்திலுள்ள சொத்துக்களுக்கு சேதம் ஏற்படுத்தியவர்கள் எவராக இருந்தாலும் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அவர்கள் அமைச்சர்களாக இருந்தாலும் சிறப்பு சலுகை வழங்க முடியாதென லக்‌ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.

ஆகவே கடந்த நவம்பர் மாதம் ஏற்பட்ட குழப்பத்தினால் ஏற்பட்ட சொத்துச் சேதங்களுக்கு காரணமானவர்களைத் தண்டிக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.

Read more...

கல்வியியல் கல்லூரிகளுக்கு விண்ணப்பித்த மாணவர்களின் முக்கிய கவனத்திற்கு

அடுத்த மாதம் இறுதி வாரத்தில் கல்வியியல் கல்லூரிகளுக்கு புதிய மாணவர்களை இணைத்துக் கொள்வதற்கான நேர்முகப் பரீட்சைகள்
ஆரம்பமாகும் என, ஆசிரியர் கல்விக் கல்லூரிகளுக்கான ஆணையாளர் கே.எம்.எச்.பண்டார அறிவித்துள்ளார்.

கல்வியியல் கல்லூரி அனுமதிக்காக விண்ணப்பிக்கப்பட்ட மாணவர்களின் விண்ணப்பங்களின் தகவல்கள், கணனியில் பதிவேற்றம் செய்யப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார். ஆகவே இந்த பதிவேற்ற பணிகள் நிறைவடைந்தவுடன் நேர் முகப் பரீட்சைக்கான அழைப்புக்கள் விடுக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.

இந்தத் தடவை முன்னெப்போதும் இல்லாத வகையில் எட்டாயிரம் மாணவர்கள் கல்வியியல் கல்லூரியில் கல்வி கற்கும் வாய்ப்பை பெறுகின்றார்கள்.

எதிர்வரும் மே மாதம் கல்வியியல் கல்லூரி பாட நெறிகளை ஆரம்பமாகவுள்ளன.

இதனிடையே, இம்முறை கல்வியியல் கல்லூரிகளுக்கு உயர் தரப் பரீட்சைக்குத் தோற்றிய இரு ஆண்டுகளைச் சேர்ந்த மாணவர்கள் ஒரே தடவையில் இணைத்துக் கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read more...

ஊடகவியலாளர்களின் வாழ்வை முன்னேற்றும் வகையில் நிவாரணங்களைப் பெற்றுக்கொடுப்பேன் - புதிய ஊடகத்துறை அமைச்சர்

ஊடகவியலாளர்கள் எதிர்கொள்ளும் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வுகண்டு ஊடகவியலாளர்களின் வாழ்வை முன்னேற்றும் வகையில் நிவாரணங்களைப் பெற்றுக்கொடுப்பதே தனது எதிர்பார்ப்பு என, புதிய ஊடகத்துறை அமைச்சரான ருவன் விஜேவர்த்தன தெரிவித்துள்ளார்.

ஊடகத்துறை அமைச்சில் தமது கடமைகளை உத்தியோகபூர்வமாகப் பொறுப்பேற்றுக் கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே புதிய ஊடகத்துறை அமைச்சர் ருவன் விஜேவர்த்தன குறிப்பிட்டார்.

ஊடகத்துறையை சிறந்த தொழிற் துறையாக கட்டியெழுப்புவதற்கு தான் ஊடகங்களுடனும் ஊடகவியலாளர்களுடனும் நெருக்கமாகச் செயற்படுவேன் என்றும் அமைச்சர் கூறினார். அத்துடன் ஊடகத்துறையில் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு சேவை ஆற்றுவேன் என்றும் ஊடகத்துறை அமைச்சரான ருவன் விஜேவர்த்தன தெரிவித்துள்ளார்.

Read more...

நீதிமன்ற அனுமதியுடன் முள்ளியவளை வெடி பொருள் அகற்றப்படும்

முல்லைத்தீவு - முள்ளியவளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஹீச்சிராபுரம் பகுதியில் வெடிக்காத நிலையில் வெடிபொருள் ஒன்று அவதானிக்கப்பட்டுள்ளது. தனியார் காணியில் குறித்த வெடி பொருள் கண்டறியப்பட்டுள்ளது.

இந்த நிலையில் காணி உரிமையாளர் தனது காணியில் வெடிபொருள் இருப்பதை முள்ளியவளை பொலிஸாருக்கு தெரியப்படுத்தியுள்ளார். இந்த தகவலின் பிரகாரம், பொலிஸார் குறித்த வெடிபொருளை பார்வையிட்டு இன்று நீதிமன்றில் அனுமதி கிடைத்ததும் அகற்றுவதாக தெரிவித்துள்ளனர்.

யுத்தம் நடைபெற்ற முல்லைத்தீவு மாவட்டத்தில் அவ்வப்பொழுது வெடிபொருட்கள் கண்டறியப்பட்டு அகற்றப்பட்டு வருகின்ற
ன . எவ்வாறான போதிலும் வெடிப்பொருள்கள் அகற்றிய பின்னர் மக்களை குடியேற்றிய நிலையில், தொடர்ச்சியாக வெடிபொருட்கள் மீட்கப்பட்டு வருகின்றமை மக்கள் மத்தியில் அச்சத்தை உருவாக்கி உள்ளது.

Read more...

யாழ்ப்பாணம் நோக்கிச் சென்ற கொழும்பு பேரூந்து விபத்து - 2 பலி - பலர் படுகாயம்

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி நேற்று இரவு பயணித்த சொகுசு பேரூந்து விபத்துக்குள்ளாகியதில் இரண்டு பேர் பலியாகியுள்ளார்கள்.

இந்த விபத்து முல்லைத்தீவு- மாங்குளம் பொலிஸ் பிரிவின் பனிங்கங்குளம் ஏ9 வீதியில், இன்று அதிகாலை 4 மணி அளவில் நேர்ந்துள்ளது. இந்த விபத்தில் பலர் படுகாயம் அடைந்துள்ளார்கள்.

யாழ் நோக்கி பயணிக்கும் திசையில் தரித்து நின்ற கல் ஏற்றிய டிப்பர் வாகனத்தில் மோதியே குறித்த சொகுசு பேரூந்து விபத்துக்குள்ளாக்கியதாக தெரிவிக்கப்படுகின்றது.

விபத்துக்குள்ளாகிய பேரூந்து அதி வேகமாக பயணித்தமையே விபத்திற்கான காரணம் என்றும் தெரிய வருகின்றது. சம்பவம் தொடர்பில் மாங்குளம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Read more...

காலநிலையில் பாரிய மாற்றம் - வளிமண்டலவியல் திணைக்களம்

இன்று முதல் நாளை வரை தென் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் மழையுடன் கூடிய வானிலை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

மேல், சப்ரகமுவ, மத்திய, தென், ஊவா மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அனுராதபுரம் மற்றும் வவுனியா மாவட்டங்களிலும் பிற்பகல் 2 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

இரத்தினபுரி, களுத்துறை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் சில இடங்களில் 150 மில்லி மீட்டருக்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. ஊவா மற்றும் மத்திய மாகாணங்களிலும் கேகாலை, கொழும்பு, கம்பஹா மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மில்லி மீட்டர் அளவான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது

மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களில் பல தடவைகள் மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. தென் கரையோரப் பகுதிகளில் சிறிதளவான மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. தென், சப்ரகமுவ, மத்திய, மேல் மற்றும் ஊவா மாகாணங்களில் பலத்த மின்னல் தாக்கத்திற்கான சாத்தியம் காணப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

கொழும்பில் இருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக மட்டக்களப்பு வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் பல இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

காங்கேசந்துறையில் இருந்து திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் காற்றானது வடகிழக்கு அல்லது கிழக்கு திசையில் இருந்து வீசக்கூடுவதுடன் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 25-35 கிலோ மீற்றர் வரை காணப்படும்.

நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகளில் காற்றானது மாறுபட்ட திசைகளிலிருந்து வீசக்கூடுவதுடன் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 15-30 கிலோ மீற்றர் வரை காணப்படும் என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது .

Read more...

கடுவெல வீதியை பயன்படுத்தும் வாகன சாரதிகளுக்கு

கடுவெல பாலத்தில் மேற்கொள்ளப்படும் திருத்தப் பணிகள் காரணமாக இன்று முதல் எதிர்வரும் 4 நாட்களுக்கு கடுவெல – பியகம வீதியுடனான போக்குவரத்து மட்டுப்படுத்தப்படவுள்ளதாக, பொலிஸார் அறிவித்துள்ளார்கள்.

இன்று முதல் மார்ச் மாதம் 2ஆம் திகதி வரை, இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை குறித்த வீதி உடனான போக்குவரத்து மட்டுப்படுத்தப்படவுள்ளது. எனவே, இந்த வீதியை பயன்படுத்தும் வாகன சாரதிகள், மாற்றுவீதியினூடாக அதிவேக வீதியைப் பயன்படுத்துமாறு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளார்கள்.

Read more...

Monday, February 25, 2019

கிளிநொச்சியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை அச்சுறுத்திய, கறுப்பு சட்டைக்காரர்கள்


கிளிநொச்சி கந்தசுவாமி ஆலைய முன்றலில், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் இன்று போராட்டமொன்றை முன்னெடுத்தனர்.

இந்த போராட்டத்தின் போது, நாடாளுமன்ற உறுப்பினரொருவரின் ஆதரவாளர்கள் என நம்பப்படும் நபர்களால், குழப்பம் விளைவிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆர்ப்பாட்டம் ஆரம்பமாக முன்னரே, குறித்த உறுப்பினரின் ஆதரவாளர்கள் கறுப்பு நிற சட்டை அணிந்து கொண்டு, ஆர்ப்பாட்டத்தை குழப்பும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த போராட்டத்தில், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் தலைமை தாங்கவோ, போராட்டத்தில் முன்னால் இருந்து குரல் கொடுக்கவோ ஏற்பாட்டாளர்கள் அனுமதிக்கவில்லை.

அப்போது, திடீரென வந்த சிலர், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் கைகளில் ஏந்தியிருந்த பதாகைகளை, மறைத்தவாறும் உறவுகளின் முன்பாக தாம் நின்று கோஷங்களை எழுப்பியவாறும் போராட்டத்தை குழப்பும் விதமாக செயற்பட்டுள்ளனர்.

குறித்த பேரணிக்கு முன்பாக முச்சக்கர வண்டியில் ஒலிபெருக்கி கட்டியவாறு பேரணியை வழிநடத்திக் கொண்டிருந்தவர்களிடம், நீங்கள் எங்களை வழிநடத்த வேண்டாம் எனக் கூறி முச்சக்கர வண்டி சாரதி மற்றும் அறிவிப்பை மேற்கொண்ட இளைஞன் மீது, தாக்குதலை மேற்கொண்டு ஒலிபெருக்கி சாதனத்தின் வயர்களை அறுத்துள்ளனர்.

இதனிடையே, இப்போராட்டத்தில் குழப்பங்களை ஏற்படுத்தி வந்த கறுப்பு சட்டை அணிந்தவர்கள் குறித்து, செய்தியறிக்கையிடும் நோக்குடன் ஊடகவியலாளர்கள் அவர்களை புகைப்படம் எடுக்க முற்பட்ட போது ஊடகவியலாளர்களுடன் அவர்கள் முரண்பட்டுள்ளனர்.

இதன்போது, ''போராட்டம் பின்னால் நடக்கும் போது, ஏன் எங்களை படம் எடுக்கிறீர்கள்? போராட்டத்தில் ஈடுபடுபவர்களை படம் எடுங்கள்'' எனக் கூறி, அவர்கள் ஊடகவியலாளர்களை மிரட்டினார்கள். அத்துடன் தொடர்ந்து ஊடகவியலார்களின் பணிக்கும் இடையூறுகளை விளைவித்து வந்தனர்.

மேலும், குழப்பத்தில் ஈடுபட்டவர்களை புகைப்படம் எடுத்த ஊடகவியலாளர்களை, தமது கைத் தொலைபேசிகளில் புகைப்படம் எடுத்து “எவரும் கிளிநொச்சியை தாண்டிப் போக மாட்டீர்கள்” என அச்சுறுத்தி, ஊடகவியலாளர்களின் புகைப்படக் கருவிகளையும் தட்டிவிட்டு, அவர்களைத் தாக்கவும் முற்பட்டார்கள்.

குறித்த கறுப்பு சட்டையுடன் குழப்பத்தில் ஈடுபட்டவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் ஆதரவாளர்கள் எனவும், தம்மால் முன்னெடுக்கப்படும் போராட்டங்களை குழப்பும் விதமாக பல தடவைகள் இவ்வாறு நடந்துள்ளார்கள் எனவும், சுதந்திர தினத்தின் போது முன்னெடுக்கப்பட்ட போராட்டத்திலும் இவ்வாறான குழப்பங்களை அவர்கள் செய்தனர் எனவும், பாதிக்கப்பட்ட மக்கள் குறிப்பிட்டுள்ளார்.

Read more...

மகிந்தானந்த அளுத்கமகேயின் புதல்வர் உள்ளிட்ட 07 பேருக்கு பிணை

கொழும்பு - பம்பலப்பிட்டி பகுதியில் பொலிஸ் உயர் அதிகாரி ஒருவரை, தனது வாகனத்தால், மோதிச் சென்ற சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்தானந்த அளுத்கமகேயின் புதல்வர் உள்ளிட்ட 07 பேர் பிணையில் விடுக்கப்பட்டுள்ளதாக, தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய நால்வர் இன்றைய தினம் அதிகாலையில் கைது செய்யப்பட்டு, நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போதே, இந்த பிணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை குறித்த வாகனத்தை செலுத்திய சாரதியை எதிர்வரும் மார்ச் 11 வரை விளக்கமறியல் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.


Read more...

யாழில் தேடுதல் வேட்டை ஆரம்பம்

அண்மைக்காலமாக யாழ்ப்பாணத்தின் பல இடங்களில், வன்முறைச் சம்பவங்கள் அதிகமாக இடம்பெற்று வருகின்றன. எனவே யாழ்ப்பாணத்தில் அதிகரித்து வரும் வன்முறைச் சம்பவங்களை தணிக்க, மீண்டும் வீதிச் சோதனை மற்றும் விசேட தேடுதல் நடவடிக்கைகளில் பொலிஸார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

வீசேடமாக கொக்குவில், இணுவில், தாவடி போன்ற பகுதிகளில் பொலிஸாரின் கண்காணிப்பு மற்றும் வீதிச் சோதனை நடவடிக்கைகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அத்துடன் காங்கேசன் துறை வீதி, பலாலி வீதி, மானிப்பாய் வீதி, பிறவுன் வீதி மற்றும் பருத்தித்துறை வீதிகளில் ஆங்காங்கே பொலிஸார் குவிக்கப்பட்டு கண்காணிப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் இடமேறும் வன்முறைச் சம்பவங்களால்,மக்கள் மிகுந்த அச்சத்துடன் இருந்த நிலையில், இந்த தேடுதல் வேட்டை ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read more...

கூட்டு ஒப்பந்தத்தை, இனி ஒருபோதும் மாற்ற முடியாது - முதலாளிமார் சம்மேளனம்

பெருந்தோட்ட தொழிலாளர்களுக்காக கைச்சாத்திடப்பட்டுள்ள கூட்டு ஒப்பந்தத்தை, இனி ஒருபோதும் மாற்றி அமைக்க முடியாதென முதலாளிமார் சம்மேளனம் அறிவித்துள்ளது.

முதலாளிமார் சம்மேளனத்தின் செயலாளர் லலித் ஒபேசேகர, அறிக்கை ஒன்றின் ஊடாக இதனை கூறியுள்ளார்.

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு, புதிய சம்பளத் தொகையை வழங்குவதற்கான எந்த நடவடிக்கைகளையும், தற்போது செய்து கொள்ளப்பட்ட கூட்டு ஒப்பந்தத்தின் கீழ் மேற்கொள்ளவில்லை என, அவர் தெரிவித்துள்ளார்.

பெருந்தோட்ட நிறுவனங்கள் மற்றும் தொழிற்சங்கங்களுக்கு இடையில், பெருந்தோட்ட தொழிலாளர்களின் எதிர்ப்புக்களையும் தாண்டி, கடந்த மாதம் 28 ஆம் திகதி கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.

இதில் 700 ரூபாய் அடிப்படை சம்பளத்துடன், 50 ரூபாய் மேலதிக கொடுப்பனவையும் சேர்த்து மொத்த சம்பளமாக 750 ரூபாய் வழங்கப்படுமென தீர்மானிக்கப்பட்டது.

எனினும் இந்த தொகைக்கு எதிர்ப்பு தெரிவித்து அடிப்படை சம்பளமாக 1000 ரூபாய் வழங்கப்பட வேண்டுமென தெரிவித்து, தொடர்ந்தும் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் பெருந்தோட்டத் துறையினருக்கு புதிய சம்பளத் தொகையை வழங்குவதற்கான எந்த நடவடிக்கைகளையும் தற்போது செய்துகொள்ளப்பட்ட கூட்டு ஒப்பந்தத்தின் கீழ் மேற்கொள்ள இயலாது என, லலித் ஒபேசேகர தெரிவித்துள்ளார்.

Read more...

மனித உரிமை விடயங்கள் வீழ்ச்சி கண்ட போதும், நம்பிக்கை இழக்கப்படவில்லை - ஆரம்ப உரையில் அன்டோனியோ குட்ரெஸ்

உலகம் முழுவதுமுள்ள பரந்த பகுதிகளில், மனித உரிமை விடயங்கள் வீழ்ச்சி கண்டுள்ள போதும், மனித உரிமையை நிலைநாட்டும் விடயத்தில், தான் இன்னும் நம்பிக்கை இழக்கவில்லை என, ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் அன்டோனியோ குட்ரெஸ் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 40ஆவது அமர்வு ஜெனீவாவில், இன்று ஆரம்பமாகியுள்ளது. இந்த அமர்வின் ஆரம்ப உரையை நிகழ்த்திய ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் அன்டோனியோ குட்ரெஸ் இவ்வாறு குறிப்பிட்டார்.

நெருக்கடிகளை தடுத்து, பதற்றங்களை தணித்து, நிலையான அபிவிருத்தி மற்றும் சமாதானத்தை ஏற்படுத்த, மனித உரிமையே வழிவகுக்கின்றது.

மனித உரிமையை .நிலை நாட்ட நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ள போதும், அதனை பாதுகாக்கவும், சமூக நீதிக்காகவும் வலிமையான பல செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன.

இதேவேளை குடியேற்றவாசிகள் தமது உரிமை தொடர்பில் இன்று உரக்கப் பேசும் நிலை ஏற்பட்டுள்ளமை, ஊடகவியலாளர்கள் அச்சமின்றி பணியாற்றும் நிலை ஏற்பட்டுள்ளமை மற்றும் பெருமளவான நாடுகள் மரண தண்டனையை அமுல்படுத்தாமல் உள்ளமை என்பன, மந்த உரிமைகளை நிரூபிக்கும் சிறந்த விடயங்கள் ஆகும்.

அத்துடன் பெண்கள் சுயாதீனமாக செயற்படும் நிலை, வறுமை நிலையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளமை போன்ற விடயங்களையும் உள்வாங்க வேண்டும்.

எனினும், மனித உரிமை விடயங்களில் சில சவால்கள் காணப்படுவது குறித்து அதிக கரிசனை உக்ள்ளது. பிரிக்க முடியாத மற்றும் ஒன்றுடன் ஒன்று தொடர்புபட்ட சிவில், அரசியல், சமூக மற்றும் கலாசார உரிமை தொடர்பில் கிக்கா கவனம் செலுத்துவது முக்கியமானதாகும்.

இதனிடையே தொழிநுட்பத்தை பயன்படுத்தியமையால், பேச்சு சுதந்திரத்திற்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக கடந்த மூன்று வருட காலத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊடகவியலாளர்களும், மனித உரிமை செயற்பாட்டாளர்களும் கொல்லப்பட்டுள்ளனர். கடந்த 2018 ஆம் ஆண்டு மாத்திரம் சுற்றுச் சூழலியலாளர்கள் நால்வர் கொல்லப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், அவ்வாறானவர்களை பாதுகாப்பதற்கு கூடுதல் நடவடிக்கை எடுப்பதோடு, பொறுப்புக்கூறுதல் அவசியமாகும்.

இதேவேகளை ஒட்டுமொத்த உலகையும் தற்போது அச்சுறுத்தும் ஒன்று காலநிலை மாற்றம் ஆகும். உலகில் 90 வீதத்திற்கும் அதிகமானோர், அசுத்தமான காற்றையே சுவாசிக்கின்றன.

இதனால் ஒவ்வொரு வருடமும் சுமார் 7 மில்லியன் மக்கள் உயிரிழக்கின்றனர். அவர்களில் 600,000 பேர் குழந்தைகளாவர். இந்த நிலையில், காலநிலை மாற்றம் தொடர்பான ஏதுவான செயற்பாடுகளை உலக நாடுகள் செயற்படுத்துவது அவசியம் என, ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் அன்டோனியோ குட்ரெஸ் தமது உரையில் குறிப்பிட்டுள்ளார்.

Read more...

விண்ணப்பங்களை ஏற்கும் இறுதி நாள் இன்று

கல்விப் பொது தராதர உயர்தர பரீட்சைக்கான விண்ணப்பங்களை ஏற்றுக் கொள்ளும் நடவடிக்கைகள், இன்றுடன் நிறைவு
பெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

2019 ஆம் ஆண்டு கல்வி பொதுத்தராதர உயர்தர பரீட்சைக்கான பாடசாலை விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்களை ஏற்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில், இன்றுடன் அவை நிறைவடைகின்றன. எவ்வாறாயினும் தனிப்பட்ட பரீட்சார்த்திகள், எதிர்வரும் முதலாம் திகதி வரை விண்ணப்பங்களை அனுப்பி வைக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை 2019 ஆம் ஆண்டு கல்வி பொதுத்தராதர உயர்தர பரீட்சைக்கான பாடசாலை விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்களை ஏற்றுக் கொள்ளும் திகதி, எந்த காரணத்திற்காகவும் நீடிக்கப்பட மாட்டாது என, பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read more...

வடக்கில் போட்டியிட்டாலும், தானே வெற்றி பெறுவேன் - பஷில் ராஜபக்ச நம்பிக்கை

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வடக்கு மாகாணத்தில் போட்டியிட்டாலும், தானே வெற்றிபெறுவேன் என, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும், முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சருமான பசில் ராஜபக்ஷ நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

ஜனாதிபதி தேர்தல் குறித்து கருத்து வெளியிட்ட போதே, அவர் இதனை தெரிவித்தார்.

அடுத்து இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பாளராக நியமிக்கப்பட்டால், அதனை நான் நிராகரிப்பேன்.

அதிகளவு பொறுப்புகளை நிறைவேற்ற வேண்டிய கடப்பாடுகள் இருப்பதால், ஜனாதிபதி வேட்பாளராகப் போட்டியிடும் எண்ணம், எனக்கு கிடையாது.

எனினும் ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பது குறித்து, எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ சரியான நேரத்தில் முடிவு செய்வார்.

நான் கட்சியின் உறுப்பினர் மட்டுமே. கட்சியின் எந்தப் பதவியிலும் நான் இல்லை. ஆனால், எனக்கு மக்களின் ஆதரவு இல்லை என்பதையோ, அங்கீகாரம் இல்லை என்பதையோ நான் நிராகரிக்கிறேன்.

தற்போது நான் வடக்கிலிருந்து போட்டியிட்டாலும், அதிக வாக்குகளை பெற்று என்னால் வெற்றி பெற முடியும் என, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும், முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சருமான பசில் ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.

Read more...

நாடாளுமன்ற உறுப்பினரின் மகன் கைது

கொழும்பு – பம்பலப்பிட்டியில் மோட்டார் சைக்கிளில் பயணித்த பொரள்ளை பொலிஸ் நிலைய போக்குவரத்து பிரிவின் பொறுப்பதிகாரியை டிபென்டர் ரக வாகனத்தில் மோதிவிட்டுத் தப்பிச்சென்ற சம்பவம் தொடர்பில், நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகேயின் மகன் ரனிஷ்க அளுத்கமகே கைது செய்யப்பட்டுள்ளார். .

குறித்த சம்பவம் தொடர்பில் டிபென்டர் வாகனத்தின் ஓட்டுனர் மற்றும் உரிமையாளர் ஆகியோரும் கைது செய்யப்பட்டுள்னர். குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய  நால்வர் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் ருவன் குணசேகர குறிப்பிட்டுள்ளார்.

பொலிஸ் அதிகாரி ஒருவரை மோதிச் சென்ற டிபென்டர் ரக வாகனம் பத்தரமுல்ல, காஹொட பூங்கா பகுதியில் வைத்து நேற்று கைப்பற்றப்பட்டது. எனினும் வாகனத்தால் மோதிய சாரதி தப்பியோடியிருந்த நிலையில் குறித்த வாகனத்தின் சாரதி மற்றும் அதன் உரிமையாளர் ஆகியோர் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Read more...

சிறந்த பொருளாதார வளர்ச்சியை எதிர்பார்ப்பதாக மத்திய வங்கியின் ஆளுனர் நம்பிக்கை

நடப்பாண்டில் சிறந்த பொருளாதார வளர்ச்சியை எதிர்பார்ப்பதாக மத்திய வங்கியின் ஆளுனர் கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமி தெரிவித்துள்ளார்.

இலங்கையின் தற்போதைய பொருளாதார வளர்ச்சி தொடர்பாக இடம்பெற்ற கலந்துரையாடலில் அவர் மேற்படி கூறினார்.

அண்மையில் ஏற்பட்ட அரசியல் நெருக்கடிகளினால் பொருளாதார வளர்ச்சி வேகம் மூன்று சதவீதம் வரை வீழ்ச்சி அடைந்திருந்தது. ரூபாவின் பெறுமதி சரிவை நோக்கி சென்றாலும் தற்போது ரூபாவின் பெறுமதி ஸ்திரத் தன்மையில் இருப்பதாகவும் கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமி கூறினார்.

இந்த நிலையில், இலங்கையின் பணவீக்கத்தை நான்கு சதவீதத்திற்கும் 6 சதவீதத்திற்கும் இடைப்பட்ட மட்டத்தில் பேண முடிந்திருக்கின்றது என்று மேலும் கூறினார்.


Read more...

பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் 10 பேருக்கு இடமாற்றம்

பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் 10 பேருக்கு தென் மாகாணத்தில் இடமாற்றம் வழங்குவதற்கு இலங்கை பொலிஸ் நடவடிக்கை எடுத்துள்ளது.

தென் மாகாண விசேட விசாரணை பிரிவிலுள்ள குறித்த 10 பேருக்கும் மாத்தறை பகுதிக்கு வௌியிலுள்ள பொலிஸ் நிலையம் ஒன்றுக்கு இடம் மாற்றம் வழங்குமாறு கோரி, பொலிஸ் மாஅதிபருக்கு எழுத்து மூலம் அறிவிக்கப்பட்டுள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரியொருவர் குறிப்பிட்டார்.

தென் மாகாண விசேட விசாரணை பிரிவில் கடமையாற்றும் 15 பேருக்கு கடந்த தினத்தில் பொலிஸ் மாஅதிபரினால் மேல் மாகாணத்திற்கு இடமாற்றம் வழங்கப்பட்டது.

இடமாற்றம் வழங்கப்பட்டவர்களில் 4 பேர் இதுவரை கடமைக்கு சமூகமழிக்கவில்லை. குறித்த நால்வரும் இதுவரை கடமைக்கு சமூகமளிக்காமை காரணமாக அவர்கள் சேவையிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பொலிஸ் அத்தியச்சகர் ருவண் குணசேகர குறிப்பிட்டார்.

இதேவேளை கடமைக்கு சமூகமளிக்காத பொலிஸ் உத்தியோகஸ்தர்களின் குடும்பத்தினரிடம் வாக்குமூலம் பெறப்படவுள்ளது.

இந்த நிலையில், காலி ரத்கமவில் வர்த்தகர்கள் இருவர் கடத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட தென் மாகாண விசேட விசாரணை பிரிவின் உப பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பொலிஸ் இன்ஸ்பெக்டர் கபில நிஷாந்த டி சில்வா மற்றும் உப பொலிஸ் இன்ஸ்பெக்டர் விராஜ் மதுஷங்க ஆகியோர் விளக்கமறியலில் வைக்ககப்பட்டுள்ளனர்.

Read more...

ரன்ஜன் ராமநாயக்கவின் வாக்கு மூல அறிக்கை பிரதமரிடம் கையளிப்பு

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் போதைப்பொருள் பயன்படுத்துவதாக இராஜாங்க அமைச்சர் ரன்ஜன் ராமநாயக்க முன்வைத்துள்ள குற்றச்சாட்டுக்களை விசாரித்த குழுவின் அறிக்கை, இன்று கையளிக்கப்படவுள்ளது.

ஐக்கிய தேசிய கட்சியினால் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தலைமையில் நியமிக்கப்பட்ட குறித்த குழுவில், அமைச்சர் இரான் விக்ரமரத்ன, நாடாளுமன்ற உறுப்பினர் ஆஷூ மாரசிங்க மற்றும் நிஷ்ஷங்க நாணயக்கார ஆகியோர் உறுப்பினர்களாக அங்கம் வகிக்கின்றனர்.

இந்த குழு முன்னிலையில் இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க வாக்குமூலமளித்திருந்தார். இந்த விசாரணைகளின் பிரகாரம், கொக்கெய்ன் பயன்படுத்தும் அமைச்சர்கள் தொடர்பில் ரஞ்சன் ராமநாயக்க வௌியிட்ட கருத்து தொடர்பில், தௌிவுப்படுத்தியுள்ளதாக குறித்த குழுவின் உறுப்பினரான நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஆஷூ மாரசிங்க, குறிப்பிட்டுள்ளார். அறிக்கை பிரதமரிடம் கையளிக்கப்பட்டதன் பின்னர், பிரதமரினால் மேலதிக நடவடிககைகள் எடுக்கப்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன் இந்த அறிக்கை குற்றத்தடுப்பு பிரிவினரிடமும் கையளிக்க உள்ளதாக தெரியவருகின்றது.

இந்நிலையில் கடந்த சனிக்கிழமை கண்டில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்ட அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல, தனது 30 வருட அனுபவத்தின்படி நாடாளுமன்றத்தில் கொக்கேன் பாவனையாளர் இல்லை எனத் தெரிவித்துள்ளார்.

இதேநேரம், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கொக்கேன் பயன்படுத்தும் அளவுக்கு அவர்களிடம் பொருளாதார வசதி இல்லையென நாடாளுமன்ற உறுப்பினர் துஷார இந்துனில் தெரிவித்தார்.நாடாளுமன்ற உறுபினர்கள் தமது வாகனத்துக்கு டீசல் அடிப்பதற்கே பணம் இல்லாது கஷ்டப்படுகின்றார்கள் எனவும் துஷார இந்துனில் மேலும் குறிப்பிட்டார்.

பொதுக் கூட்டமொன்றில் நேற்று உரையாற்றுகையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.


Read more...

மரண தண்டனையை நிறைவேற்றும் அலுகோசு பதவி வெளிநாட்டவருக்கு - பின்வாங்காத ஜனாதிபதி

இலங்கையில் மரண தண்டனையை நிறைவேற்றும் அலுகோசு பதவிக்காக, வௌிநாட்டவர் ஒருவரை நியமிப்பது தொடர்பில் அவதானம் செலுத்தி வருவதாக சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. அலுகோசு பதவிக்காக நாட்டில் உள்ளவர்களால் விண்ணப்பிக்கப்பட்ட விண்ணப்பங்களின் எண்ணிக்கை தொடர்பில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக அமைச்சின் உயர் அதிகாரியொருவர் குறிப்பிட்டார்.

இதன் காரணமாக வௌிநாட்டவரை அலுகோசு பதவிக்கு நியமிப்பதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். அத்துடன், அலுகோசு பதவிக்கான விண்ணப்பங்களை ஏற்றுக் கொள்ளும் காலப்பகுதி இன்று நண்பகல் 12 மணியுடன் நிறைவடைகின்றது.

இதனிடையே, போதைப்பொருள் தொடர்பில் மரண தண்டனை பெற்றுள்ள சுமார் 17 கைதிகளின் பெயர்பட்டியல் அண்மையில் ஜனாதிபதி செயலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஆனபோதிலும், மரண தண்டனை அமுலுக்கு உலக நாடுகள் கடும் எதிர்ப்பினை இலங்கைக்கு தெரிவித்து வருகின்றன.

சர்வதேச மன்னிப்புச் சபையினால் பகிரங்க அறிக்கை ஒன்று அண்மையில் வெளியாக்கப்பட்டது. அதில் மரண தண்டை நிறைவேற்றும் எண்ணத்தை விட்டுவிடும்படி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டது.

எவ்வாறான போதும் மரண தண்டனை நிறைவேற்றம் குறித்து ஜனாதிபதி உறுதியான நிலைப்பாட்டை கொண்டுள்ளார் என்று அமைச்சின் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இலங்கையில் இறுதியாக 1976 ஆம் ஆண்டு வெலிக்கடை சிறைச்சாலையில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Read more...

40ஆவது கூட்டத்தொடர் இன்று - வடக்கில் முழு அடைப்பு - கிளிநொச்சியில் ஆர்ப்பாட்டம்

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 40ஆவது கூட்டத்தொடர் ஜெனீவாவில் இன்று ஆரம்பமாகவுள்ளதோடு, மார்ச் மாதம் 22ஆம் திகதிவரை இதன் அமர்வுகள் தொடர்ந்து இடம்பெறவுள்ளன.

இதில் இலங்கை தொடர்பாக கொண்டு வரப்படவுள்ள தீர்மான வரைவு தொடர்பான முதலாவது கலந்துரையாடல் மார்ச் 5ஆம் திகதி இடம்பெறவுள்ளதுடன், மார்ச் 20ஆம் திகதி, இலங்கை தொடர்பான விவாதம் இடம்பெறும். ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் பிரதான பொறுப்பை பிரித்தானியா வகிக்கவுள்ள நிலையில், இலங்கை தொடர்பான கூட்டுத் தீர்மானமொன்றையும் பிரித்தானியா சமர்ப்பிக்கவுள்ளது. இதில் மனித உரிமைகள், பொறுப்புக்கூறல் மீளமைப்பு ஆகிய விடயங்கள் தொடர்பாக அவதானம் செலுத்தப்படும்.

இதனிடையே காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகளின் அழைப்பில், வட மாகாணத்தில் இன்று முழு அடைப்புப் போராட்டம் தொடக்கியுள்ளது. வடக்கிலுள்ள பாடசாலைகள், அரச செயலகங்கள், தனியார் நிறுவனங்கள், வணிக நிலையங்கள் என்பன பூட்டப்பட்டுள்ளதோடு, போக்குவரத்துச் சேவை முற்றாக முடங்கியுள்ளதாக அங்கிருந்தது கிடைக்கும் தகவல்கள் தேர்விக்கின்றன.

இது இவ்வாறு இருக்க கிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை காலை 10.00 மணிக்கு ஆரம்பிக்கவுள்ளனர். ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் அளித்திருந்த வாக்குறுதிகளை இலங்கை நிறைவேற்றத் தவறியுள்ளதை வெளிப்படுத்தியும், தமக்கு இன்னமும் நீதி வழங்கப்படாததைக் கண்டித்தும், இலங்கைக்கு இனிமேலும் கால அவகாசம் தேவையில்லை எனது தெரிவித்தும் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இந்த போராட்டத்திற்கு பல தரப்பில் இருந்தும் ஆதரவு கிடைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read more...
Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com