Monday, February 25, 2019

பேராதனை பல்கலைக்கழகம் இனி மாலைதீவிலும்

மாலைதீவு நாட்டில் இலங்கையின் பேராதனை பல்கலைக்கழக கிளையொன்றை நிறுவ நடவடிக்கை எடுத்துள்ளதாக பல்கலைக்கழகத்தின் உப வேந்தர் பேராசிரியர் உபுல் பி. திசாநாயக்க அறிவித்துள்ளார். வெளிநாட்டு மாணவர்கள் பேராதனை பல்கலைக்கழகத்திடமிருந்து பட்டங்களைப் பெறுவதற்கு ஏதுவாகவே மாலைதீவில் கிளை பல்கலைக்கழகத்தை அமைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்த தீர்மானத்தின் பிரகாரம் உரிய ஏற்பாடுகள் குறித்த ஆவணங்கள் பரீசீலனைக்காக சட்டமா அதிபருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் பல்கலைக்கழகத்தின் உப வேந்தர் பேராசிரியர் உபுல் பி. திசாநாயக்க கூறியுள்ளார்.


Read more...

வௌிநாட்டு மீனவர்கள் மீதான சட்டத்தை இன்னும் கடுமையாக்க எண்ணம்

இலங்கையில் அமுலில் உள்ள கடல் எல்லையை மீறும் வௌிநாட்டு மீனவர்கள் மீதான சட்டத்தை இன்னும் கடுமையாக்கவுள்ளதாக, கடற்றொழில் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதற்காக 2 சட்டமூலங்களில் திருத்தங்களை மேற்கொள்ளவுள்ளதாக, திணைக்களத்தின் தேடுதல் பிரிவின் பணிப்பாளர் கல்யாணி ஹேவாபத்திரண குறிப்பிட்டுள்ளார். கடந்த மாதத்தில் மாத்திரம் 7 படகுகளுடன் 15 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன், கைப்பற்றப்பட்ட 7 படகுகள் மீதும் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அத்துடன், கைது செய்யப்பட்ட 15 இந்திய மீனவர்களை, அவர்களது நாட்டுக்கு அனுப்புவதற்கான பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், வௌிநாட்டு மீனவர்கள் தொடர்பில் தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள சட்டத்தினால், தற்போது இந்திய மீனவர்களின் அத்துமீறிய வருகை குறைவடைந்துள்ளதாக கடற்றொழில் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.


Read more...

Sunday, February 24, 2019

கடத்திக்கொல்லும் கலாச்சாரத்தை உருவாக்கியவர்கள் தமிழ் ஆயுத போராட்ட இயக்கங்களே! சாடுகின்றது உலாமா கட்சி.

இந்த நாட்டின் யுத்த வரலற்றில் அப்பாவி மக்களை கடத்திக்கொல்லும் வரலாற்றை ஆரம்பித்தது தமிழ் ஆயுத போராட்ட இயக்கங்களாகும் என உலாலா கட்சி தெரிவித்துள்ளது.

காணாமல் போனோருக்காக வடக்கில் நடத்தப்படும் போராட்டம் தொடர்பாக கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு தெரிவித்துள்ள அக்கட்சி அப்போராட்டமானது தமிழ் ஆயுத இயக்கங்களால் கடத்தப்பட்டு காணாமல் போன முஸ்லிம் உறவுகள் பற்றியதாகவும் இருக்கும் வகையில் தமிழ் முஸ்லிம் கட்சிகள் கவனத்தில் எடுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளது.

இது பற்றி உலமா கட்சித்தலைவர் முபாறக் அப்துல் மஜீத் இன்று (24) மேலும் தெரிவித்ததாவது,

இந்த நாட்டின் யுத்த வரலற்றில் அப்பாவி மக்களை கடத்திக்கொல்லும் வரலாற்றை ஆரம்பித்தது தமிழ் ஆயுத போராட்ட இயக்கங்களாகும். 1984 முதல் கிழக்கில் பல முஸ்லிம்கள் பணத்துக்காக கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டனர்.

அதே போல் 90ல் மிக அதிகமான முஸ்லிம் இளைஞர்கள் விடுதலைப்புலிகளால் கடத்தப்பட்டு அவர்களின் சிறைகளில் அடைத்தனர். பின்னர் அவர்களுக்கு என்ன நடந்தது என்று இது வரை தெரியவில்லை.

கடத்தப்பட்டோர் விடயத்தில் வடக்கில் பாரிய எதிர்பு போராட்டம் முன்னெடுப்பதை உலமா கட்சி வரவேற்கிறது. அதேவேளை கடத்தப்பட்டோர் என்பது அரச படைகளால் கடத்தப்பட்டோரை மட்டும் கருத்தில் எடுப்பது ஒரு வகை இனவாத போக்காகவே நாம் கண்கிறோம்.

கடத்தப்பட்டோர் சம்பந்தமாக முன்னெடுக்கப்படும் அனைத்து போராட்டங்களும் ஒருதலைப்பட்சமாகவே உள்ளதை தொடர்ந்தும் கண்டு வருகிறோம். தமது தமித்தரப்புக்கள் செய்த மிகப்பெரும் கடத்தல்கள் பற்றி அலட்டிக்கொள்ளாத நிலை கவலைக்குரியதாகும்.

ஆகவே வடக்கில் முன்னெடுக்கப்படும் கடத்தப்பட்டோர் சம்பந்தமான போராட்டத்தில் தமிழ் இயக்கங்களால் கடத்தப்பட்ட முஸ்லிம்களுக்கு என்ன நடந்தது என்றும் பேசப்பட வேண்டும். அதற்குரிய வாய்ப்புக்களை தமிழ் முஸ்லிம் கட்சிகள் ஏற்படுத்துவதே நீதியானதாகும்.

Read more...

போதையை குழிக்குள் புதைத்திடுவோம். வெலிகம வில் ஆர்ப்பாட்டம்.

இலங்கையில் போதைப்பொருள் பாவனையை ஒழிப்பதற்காக நாட்டின் பல பாகங்களிலும் பல்வேறு நிகழ்வுகள் மேற்கொள்ளப்பட்டுவருவதும் வரலாறு காணத அளவில் அண்மைக்காலமாக போதைப்பொருட்கள் மீட்டகப்பட்டுவருவதும் யாவரும் அறிந்தது.

அந்த வரிசையில் இன்று வெலிகம பிரதேசத்தில் போதையை குழிக்குள் புதைத்திடுவோம், நாம் போதையினுள் புதையாமல் இருந்திடுவோம் எனும் தொனிப்பொருளில் ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றிருந்தது.

போதைப்பொருள் பாவனை அதனால் ஏற்படும் விளைவுகள் தொடர்பில் இளைஞர் யுவதிகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் பிரதேசத்திலுள்ள இளம் புத்திஜீவிகள் சிலரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இவ் ஆர்ப்பாட்டத்தில் அரசியல் இயக்க வேறுபாடின்றி பிரதேச மக்கள் ஆர்வத்துடன் கலந்திருந்தனர்.

இந்நிகழ்வில் வெலிகம உப பொலிஸ் பரிசோதகர், வைத்தியர் பியசிரி, சட்டத்தரணி ரமீஸ் பசீர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.






Read more...

ஆசிரியர் சங்கம் மீண்டுமோர் போராட்டத்திற்கு தயாராகின்றது.

இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் அதிபர் ஆசிரியர்களின் முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து போராட்டம் ஒன்றை மேற்கொள்ள ஆயத்தமாகி உள்ளது.

* 22 வருடங்கள் பிற்போடப்பட்ட சம்பள முரண்பாட்டை நீக்கி சம்பளத்தை உயர்த்து!
*கொள்ளையடிக்கப்பட்ட 30 மாத கால நிலுவை சம்பளத்தை உடன் வழங்கு!
*படிவங்கள் நிரப்புதல் உட்பட மேலதிக வேலைகளை நிறுத்தி கற்பிக்க ஆசிரியர்களுக்கு இடம் கொடு!
*நீக்கப்பட்ட ஓய்வூதிய சம்பளத்தை மீண்டும் பெற்றுக் கொடு!
*பாடசாலைகளில் ஒழுக்கத்தை பேணுகின்ற ஆசிரியர்களின் பாதுகாப்பை உறுதி செய்!

மேற்கூறப்பட்ட கோரிக்கைகளை வென்றெடுப்பதற்கான எதிர்வரும் 26 ஆம் திகதி வடமாகாண ஆசிரியர் அதிபர்களின் சார்பாக யாழ்ப்பாண பேருந்து நிலையத்திற்கு முன்பாகவும். தேசிய ரீதியிலான போராட்டம் 28 ஆம் திகதி கொழும்பு கல்வி அமைச்சுக்கு முன்பாக போராட்டம் நடைபெற இருப்பதால் அனைத்து அதிபர் ஆசிரியர்களையும் கட்சி பிரதேசம் தொழிற்சங்க பேதங்களை மறந்து எமது உரிமைகளை வென்றெடுப்பதற்காக அனைவரையும் ஒன்றிணைய வேண்டும் என இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் உப தலைவர் சுந்தரலிங்கம் பிரதீப் அழைப்பு விடுத்துள்ளார்.



S. Pradeep
0713280729
0773080729

Read more...

வெளிநாட்டு சிகரட்களுடன் ஒருவரும் ஆமை முட்டைகளுடன் மற்றொருவரும் கைது

ஒருதொகை வெளிநாட்டு சிகரட்களுடன் சந்தேக நபர் ஒருவர் நேற்று கற்பிட்டியில் கைது செய்யப்பட்டுள்ளார். சட்டவிரோதமாக இலங்கைக்கு கொண்டுவரப்பட்டு கற்பிட்டி நகரில் உள்ள மருந்தகம் ஒன்றில் வெளிநாட்டு சிகரட் விற்பனை செய்யப்படுவதாக பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவல் ஒன்றின் அடிப்படையில், குறித்த மருந்தக உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபரிடம் இருந்து 45 பாக்கெட்ரில் அடைக்கப்பட்ட 900 வெளிநாட்டு சிகரட்களை கற்பிட்டி பொலிஸார் கைப்பற்றி உள்ளார்கள்.

இதனிடையியேவ், 60 ஆமை முட்டைகளை தம் வசம் வைத்திருந்த ஒருவர் தெவிநுவர, வெல்லமடம பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். கடற்படையினரின் தகவலுக்கு அமைய கந்தர பொலிஸார் நேற்று சுற்றிவளைப்பொன்றை மேற்கொண்டு 50 வயதுடைய சந்தேகநபரை ஆமை முட்டைகளுடன் கைது செய்துள்ளனர். இது குறித்த மேலதிக விசாரணைகளை கந்தர பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Read more...

கொள்ளுப்பிட்டி ஹெரோயினை பாரவையிட்டார் ஜனாதிபதி - சந்தேக நபர்களுக்கு தடுப்புக்காவல்

கொள்ளுப்பிட்டியில் போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேக நபர்களையும் மார்ச் மாதம் 1 ஆம் திகதி வரை தடுப்புக்காவலில் வைத்து விசாரணை செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

சுமார் 07 நாட்களுக்கு குறித்த இருவரையும் தடுத்து வைத்து விசாரணை நடாத்த, பொலிஸ் போதைப் பொருள் ஒழிப்புப் பிரிவுக்கு, புதுக்கடை மேலதிக மஜிஸ்ட்ரேட் நீதவான் லோசனா அபேவிக்ரம இன்று உத்தரவிட்டார். சுமார் 2945 மில்லியன் ரூபாய் பெறுமதியுடைய நாட்டில் கைப்பற்றப்பட்ட மிகப் பாரியளவான ஹெரோயின் தொகையுடன் குறித்த இரண்டு பேரும் கைதாகி இருந்தனர்.

இந்த நிலையில், கொள்ளுப்பிட்டியில் கைப்பற்றப்பட்ட பாரிய அளவிலான ஹெரோயின் போதைப்பொருட்களை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேரில் சென்று பார்வையிட்டுள்ளார்.

இதன்போது, குறித்த போதை பொருளை கண்டுபிடித்த பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினர் மற்றும் விசேட அதிரடிப் படையினர் ஆகியோருக்கு ஜனாதிபதி பாராட்டி பேசியுள்ளார்.

இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கை எதிர்கால சந்ததியினருக்காக ஆற்றிய உன்னத பணி என்று தெரிவித்த ஜனாதிபதி, இவ்வகையான செயற்பாடுகளுக்கு தனது பூரண ஆசீர்வாதமும் ஒத்துழைப்பும் எப்போதும் உண்டு எனவும் மேலும் தெரிவித்துள்ளார்.

Read more...

மாகாண ஆளுநர்கள் சந்திப்பும் அரசாங்கத்திற்கு விடுத்த பகிரங்க எச்சரிக்கையும்

மாகாண சபை ஆளுநர்கள் இணைந்து காலியில் நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் மாகாண சபையைச் செயலிழக்கச் செய்து மாகாண சபைகளின் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு அச்சுறுத்தல் விடுக்கப்படுமானால் அரசாங்கத்துக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க நேரிடும் தெரிவித்துள்ளனர்.

இந்த சந்திப்பில் கலந்துகொண்டிருந்த மத்திய மாகாண ஆளுநர் மைத்திரி குணரத்ன, மாகாணங்களில் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடி தொடர்பில் கருத்து வெளியிட்டு இருந்தார்.

ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் மாகாண சபைத் தேர்தலை விரைவுபடுத்த வேண்டும் என மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி குறிப்பிட்டுள்ளார். தென் மாகாண ஆளுநரும் இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்துள்ளார்.

இது இவ்வாறு இருக்க, கிழக்கு மாகாணத்தில் உல்லாசப் பயணத்துறையை ஊக்குவிப்பதற்காக பல செயற்திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளதாக கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லாஹ் அவரது அலுவலகத்தில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

ஐரோப்பா உள்ளிட்ட வெளிநாடுகளைச் சேர்ந்த உல்லாசப் பயணிகளை இலக்காகக் கொண்டு இவ்வாண்டு பாசிக்குடா, தொப்பிகல, மற்றும் மட்டக்களப்பு வெபர் விளையாட்டரங்கு ஆகிய பிரதேசங்களை மையப்படுத்தி திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன.

மட்டக்களப்பின் இயற்கையினை ஐரோப்பா உள்ளிட்ட வெளிநாடுகளைச் சேர்ந்த உல்லாசப் பயணிகளுக்கு அறிமுகப்படுத்தும் வகையில் இவ்விடயம் தொடர்பான விளம்பரங்களை ஐரோப்பிய நாடுகளில் வழங்கும் வகையிலும் விஷேட ஏற்பாடுகள் இடம் பெறவுள்ளன.

இந்த நிலையில், நடைமுறை படுத்தவுள்ள இவ்வாறான திட்டங்களுக்கு அனைத்து திணைக்களங்களும் தமது ஒத்துழைப்புக்களை வழங்க வேண்டும் என கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லாஹ் மேலும் குறிப்பிட்டுள்ளார்.


Read more...

இலங்கையில் அமையப்பெறவுள்ள “ஒற்றுமை பாடசாலை” - ரவூப் ஹக்கீம்

“ஒற்றுமை பாடசாலை” எனும் வேலைத் திட்டத்தை நாடுதழுவிய ரீதியில் அமைப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நகர திட்டமிடல், நீர் வழங்கல் மற்றும் உயர் கல்வி அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

உடுகொட அரபா மகா வித்தியாலயத்தின் வகுப்பறைக் கட்டிட திறப்பு விழா​வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

நாட்டில் உள்ள மூவின மாணவர்களையும் இத்திட்டத்தின் ஊடாக இணைத்து, இன நல்லிணக்கத்தை மேம்படுத்தப் போவதாக என்று அவர் கூறினார். நாட்டின் மூவினங்களைச் சேர்ந்த மாணவர்களை சம அளவில் சேர்த்துக்கொண்டு இன நல்லிணக்கத்தை கட்டியெழுப்பும் நோக்கில் “ஒற்றுமை பாடசாலை” திட்டத்தை நாடு தழுவிய ரீதியில் அமைப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இத்திட்டம் சகல தரப்பினருக்கும் வெற்றியளிக்குமென எதிர்பார்க்கப்படுகின்றது என்றும் அமைச்சர் கூறினார்.

இதுவரை நிறைவு செய்யப்படாத மெளலவி ஆசிரியர் நியமனம் தொடர்பில் பிரதமருக்கு ஞாபகப்படுத்தியுள்ளோம். குறைந்தது 600 பேருக்காவது இந்த வருட இறுதிக்குள் மெளலவி ஆசிரியர் நியமனத்தை வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளோம்.

இரண்டாம்தர கல்வி கற்கின்ற மாணவர்களுக்கும், மூன்றாம்தர கல்விக்கு நுழையவுள்ள மாணவர்களுக்கும் நாட்டிலுள்ள கற்கைநெறிகள் தொடர்பில் போதிய தெளிவில்லாமல் இருக்கிறது. கற்கைநெறிக்கு ஏற்றவாறு பாடங்களை தெரிவுசெய்வதிலும் அவர்களுக்கு போதிய வழிகாட்டால் இல்லாமல் இருக்கின்றன. இதுகுறித்து அவர்களுக்கு பூரண தெளிவூட்டல் வழங்கப்பட வேண்டும்.

தமது நண்பர்களை பின்பற்றும் மாணவர்கள் உயர்தரப் பரீட்சையில் ஒரே விதமான பாடங்களையே தெரிவுசெய்கின்றனர். பின்னர் பல்கலைக்கழக நுழைவு என்று வருகின்றபோது, போதிய இஸட்–புள்ளி இல்லாமல் தடுமாறுகின்றனர். எவ்வாறு இஸட்–புள்ளி இடப்படுகிறது என்பது குறித்து உயர்தர மாணவர்களுக்கு போதிய தெளிவு இல்லாமல் இருக்கின்றது.

உயர்தரத்தில் எப்படியான பாடங்களை தெரிவுசெய்வது, தொழில்வாய்ப்புக்கு ஏற்ற மேற்படிப்பு எது என்பது தொடர்பில் மாணவர்களுக்கு தேவையான விளக்கங்களை வழங்கவுள்ளோம். மகாபொல நிதியத்தின் மூலம் வலயக் கல்வி அலுவலகங்கள் ஊடாக இந்த தொழில் வழிகாட்டல் திட்டத்தை நாடளாவிய ரீதியில் செயற்படுத்துவதற்கு தீர்மானித்திருக்கிறோம்.

பாடசாலை அபிவிருத்திக்கான நிதியை அரசாங்கம் மூலம் பெற்றுக்கொள்வதில் சிக்கல்கள் வருகின்றபோது, செல்வந்தர்கள் கட்டிடங்களை அமைத்துக்கொடுப்பது போன்ற செயற்பாடுகளில் ஈடுபடுவது வரவேற்கத்தக்க விடயம் என்றும் அவர் கூறினார்


Read more...

திருகோணமலையில் மீண்டும் மணல் அகழ்வதற்கான அனுமதிப் பத்திரத்தை விநியோகிக்கும் நடவடிக்கை விரைவில்...

திருகோணமலை மாவட்டத்தில் மீண்டும் மணல் அகழ்விற்கான அனுமதி பத்திரங்களை விநோயோகிக்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி எதிர்வரும் மார்ச் முதலாம் திகதி முதல், மணல் அகழ்வதற்கான அனுமதிப் பத்திரத்தை விநியோகிக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது.

திருகோணமலை மாவட்டத்தில் மணல் அகழ்விற்கான அனுமதிப்பத்திரங்களை கடந்த 15 ஆம் திகதியிலிருந்து, 28 ஆம் திகதி வரை தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.

திருகோணமலையில் சட்டவிரோதமாக முன்னெடுக்கப்படுகின்ற மணல் அகழ்வைத் தடுப்பதற்காகவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருந்தது.

அத்துடன் திருகோணமலை மாவட்டத்தின் மணல் அகழ்வதற்கான அனுமதிப்பத்திரங்கள், கடந்த சில தினங்களாக ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டதாக புவிசரிதவியல் மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது.

மத்திய சுற்றாடல் அதிகார சபை, புவிசரிதவியல் மற்றும் சுரங்கப் பணியகம் ஆகியவற்றின் 2 குழுக்களினால் 500 பகுதிகளில் இந்த ஆய்வுகள் முன்னெடுக்கப்பட்டன.

இதன் அறிக்கை நாளை அல்லது நாளை மறுதினம் கொழும்பில் நடைபெறவுள்ள கலந்துரையாடலில் பரிசீலிக்கப்படவுள்ளதாகவும் குறித்த பணியகம் தெரிவித்துள்ளது.

எதிர்வரும் 28 ஆம் திகதி திருகோணமலை மாவட்ட செயலகத்தில் நடைபெறவுள்ள இறுதிக் கூட்டத்தில், அனுமதி வழங்கக்கூடிய பத்திரங்களுக்கு மாத்திரம் மீண்டும் அனுமதியை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என, புவிசரிதவியல் மற்றும் சுரங்கப் பணியகத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, மணல் அகழ்வதற்கான அனுமதிப்பத்திரங்களுக்கு மேலதிகமாக 1,500 விண்ணப்பங்கள் கிடைத்துள்ளதாக புவிசரிதவியல் மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read more...

18 ஆவது அரசியல் அமைப்புத் திருத்தத்தினால் அரச சேவைகள் அரசியல் மயப்படுத்தப்பட்டன - பிரதமர்

19 ஆவது அரசியல் அமைப்புத் திருத்தம் வரலாற்றுச் சிறப்பு மிக்க சட்டமாகும் என்று, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

புத்தளம் ஆனமடுவப் பிரதேசத்தில் முன்னெடுக்கப்பட்ட அபிவிருத்தித் திட்டங்களை நேற்று திறந்து வைத்ததன் பின்னர், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இதனைத் தெரிவித்துள்ளார். கட்சி வேறுபாடு இன்றி நாட்டின் ஜனநாயகத்தை உறுதிப்படுத்துவதற்காக நிறைவேற்றப்பட்டது 19 ஆவது அரசியல் அமைப்புத் திருத்தம் என்றும் பிரதமர் இதன்போது தெரிவித்துள்ளார்.

18 ஆவது அரசியல் அமைப்புத் திருத்தத்தினால், சுயாதீன நிறுவனங்கள் அனைத்தும் செயலிழந்ததாக சுட்டிக்காட்டி பிரதமர் ரணில் விக்கிரம சிங்க, முக்கியமாக பொலிஸ் அரச சேவை என்பன அரசியல் மயப்படுத்தப்பட்டதாகவும் கூறினார். இந்த நிலையில்தான் நாட்டின் ஜனநாயகத்தை உறுதிப்படுத்த 19ஆவது அரசியல் அமைப்புத் திருத்தத்தின் தேவையின் முக்கியத்துவத்தை உணர முடிந்தது என்று பிரதமர் தெரிவித்தார்.

இவற்றின் காரணமாக பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்தி ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெற்றதன் பின்னர் 19 ஆவது அரசியல் அமைப்புத் திருத்தத்தை நிறைவேற்ற நடவடிக்கை எடுத்ததாகவும் பிரதமர் கூறினார்.



Read more...

மாகாண சபை தேர்தல் குறித்து விசேட கட்சித் தலைவர்கள் கூட்டம்

மாகாண சபை தேர்தல் குறித்து விசேட கட்சித் தலைவர்கள் கூட்டம் இடம்பெறவுள்ளதாக, பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரஸ்ரீ குறிப்பிட்டுள்ளார். இந்த கட்சி தலைவர்கள் கூட்டத்தின் போது, மாகாண சபை தேர்தல் இடம்பெறும் தினம் குறித்து தீர்மானிக்கப்படும் என, எதிர்பார்க்கப்படுகின்றது.

அதன்படி இந்தக் கூட்டம் அடுத்த வாரம் இடம்பெறவுள்ளதாக பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி தெரிவித்துள்ளார்.

அதற்கான ஏற்பாடுகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தக் கூட்டத்தில், புதிய முறையில் தேர்தலை நடத்துவதற்குள்ள பிரச்சினைகள் மற்றும் பழைய முறையில் விரைவில் நடத்துவது குறித்தும் ஆராயப்படவுள்ளது.

இந்த கட்சி தலைவர்கள் கூட்டத்தில் சட்டமா அதிபர் ஜயந்த ஜயசூரிய மற்றும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேஷப்பிரிய ஆகியோர் கலந்துகொள்வதற்கான இணக்கபாடு, கடந்த புதன்கிழமை இடம்பெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் எட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Read more...

இந்த நாட்டில் ஸ்திரமான அரசாங்கம் என்ற ஒன்று இல்லை - கோட்டாபய ராஜபக்ச

இந்த நாட்டில் தற்போது ஸ்திரமானதும், பலமானதுமான அரசாங்கம் என்ற ஒன்று இல்லை என, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார். இதன் காரணமாக இலங்கைக்கு வெளிநாட்டு முதலீடுகளை கொண்டுவர முடியாதுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இந்த நிலைமை மேலும் தொடருமானால், நாட்டில் அபிவிருத்திப் பணிகளை மேற்கொள்வது மிகவும் கடினமானது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

திவுலபிட்டியவில் இடம்பெற்ற எளிய அமைப்பின் நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட போதே, அவர் இதனை தெரிவித்துள்ளார்.

எவ்வாறானதொரு நாட்டை எதிர்க்காலத்தில் ஸ்தாபிக்க வேண்டும் என்பதில், நாம் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும்.

கடந்த காலங்களில் பலமான அரசாங்கம் என்ற ஒன்று இருந்தமையாலேயே, வெளிநாட்டு முதலீடுகள் இங்கு கொண்டு வரப்பட்டன. வெளிநாட்டு முதலீட்டாளர்கள் அச்சமின்றி இருந்தார்கள்.

ஆனால், இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தவுடன் அனைத்தும் நிறுத்தப்பட்டுள்ளன. அரசாங்கங்கள் மாறியவுடன் அபிவிருத்தி செயற்பாடுகள் நிறுத்தப்பட்டன. அதன் பின்னர் நிச்சயமாக இலங்கையில் முதலீடுகளை செய்ய முதலீட்டாளர்கள் எவரும் முன்வர மாட்டார்கள்.

இதன் விளைவாகவே 4 வருடங்கள் கடந்தும், இந்த அரசாங்கத்தால் எந்தவித அபிவிருத்திப் பணிகளையும், மேற்கொள்ள முடியாது உள்ளது என்று, முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

Read more...

விடுதலை புலிகளே மிக மோசமான யுத்த குற்றங்களை செய்தார்கள், இணை அனுசரணை வாபஸ் - ஜனாதிபதி

ஜெனிவாவில் ஐநாவின் 40ஆவது அமர்வு நாளை ஆரம்பமாகவுள்ள நிலையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று அறிவிப்பு ஒன்றை விடுத்துள்ளார்.

ஐநாவின் மனித உரிமைகள் தீர்மானத்திற்கு வழங்கப்பட்ட இணை அனுசரணையில் இருந்து விலக ஆராய்ந்து வருவதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளதாக அதிகாரி ஒருவர் கூறினார் என்ற செய்தி வெளிவந்துள்ளது.

குறித்த விடயம் தொடர்பிலான பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பபடுவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

நடைபெறவுள்ள ஜெனிவா அமர்விற்கு நாங்கள் தயாராகி வருகின்றோம். அதற்கான முன்னேற்றங்களை நாம் காண்பித்துள்ளோம். இலங்கை ராணுவத்தினர் யுத்த குற்றங்களில் ஈடுபடவில்லை. மாறாக, விடுதலை புலிகளே மிக மோசமான யுத்த குற்றங்களில் ஈட்டுபட்டார்கள் என்பதை ஜெனிவா அமர்வில் எடுத்துரைப்போம் என்று ஜனாதிபதி கூறியதாக குறித்த அதிகாரி தெரிவித்துள்ளார்.

இதனிடையே மனித உரிமைகள் தீர்மானத்தில் இருந்து விலகுவது குறித்த சாதக பாதக நிலைமை தொடர்பில் ஆலோசித்து வருவதாக வெளிவிவகார அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

இலங்கை மனித உரிமைகள் தீர்மானத்தில் இருந்து விலக்கிக்கொள்ள தீர்மானித்துள்ளமையால் கடந்த 2015 ஆண்டு செம்டம்பர் 20 ல் இலங்கை கடைப்பிடித்து வந்த உத்தியோக பூர்வ நிலைப்பாட்டில் பாரிய மாற்றம் ஏற்படும் என்றும் குறித்த அதிகாரி சுட்டிக்காட்டினார் .

எவ்வாறான போதிலும் ஜனாதிபதி எடுக்க இருக்கும் இந்தத் தீர்மானம் சர்வதேச அளவில் பெரும் பிரச்சினைகளை உருவாக்கும் என்று அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.


Read more...

மீண்டும் பயங்கரவாதத்திற்கு இடமில்லை - பிரதமர் திட்டவட்டம்

இலங்கையில் மீண்டும் பயங்கரவாதம் தோன்றுவதற்கு, ஒருபோதும் இடமளிக்கப்பட மாட்டாது என, பிரதமர் ரணில் விக்ரமசிங்க திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். கந்தளாய் - கல்பொகுணு ரஜமஹா விஹாரையில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட போதே, அவர் இதனைக் குறிப்பிட்டார்.

சட்டம் மற்றும் ஜனநாயகத்தின் வழியிலான அரசியலில், எந்தவொரு தரப்பினருக்கும் செயற்பட முடியும். அதனை விடுத்து நாட்டில் பயங்கரவாதத்தை தோற்றுவிக்க எவரேனும் முயற்சிகள் எடுப்பதற்கு, ஒருபோதும் இடமளிக்கப்பட மாட்டாது.

ஜனநாயக ரீதியில் பயணித்து, மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதுடன், இந்த நாட்டின் அனைத்து மக்களுக்குமான சுதந்திரத்தை உறுதிப்படுத்துவதே, தமது முக்கிய நோக்கம். அதற்கான அனைத்து வித நடவடிக்கைகளையும் முன்னெடுத்து வருவதாக, பிரதமர் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.

Read more...

கண்டியில் நாளை மறுதினம் நீர்வெட்டு அமுலாக்கப்படும்.

கண்டி மாவட்டத்தின் பல இடங்களில் நாளை மறுதினம் செவ்வாய்க்கிழமை நீர்வெட்டு அமுல்படுத்தப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது. கண்டி நீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு உட்பட்ட கஹவத்த நீர்ப்பாய்ச்சும் நிலையத்தில் மேற்கொள்ளப்படவுள்ள திருத்தப் பணிகளிகள் காரணமாகவே, இந்த நீர் விநோயோகத் தடை அமுலாக்கவுள்ளது.

இதன்படி எதிர்வரும் செவ்வாய்க்கிழமை காலை 8 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை, கண்டி மாவட்டத்தின் கஹவத்த, முல்லேகம, அம்பத்தென்ன, பொல்லேகொட, போகலவல, இராக்கடுவ, ஜம்புஹகபிற்றிய, அம்பேபொல, அக்குரண கசாவத்த போன்ற இடங்களில் நீர்விநியோகம் தடைப்படும் என, தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.

நீர்வெட்டு அமுலாக்கப்பட்டுள்ள நேரங்களில், மக்கள் நீரை சேமித்து வைக்குமாறும் அந்த சபை அறிவுறுத்தியுள்ளது.

Read more...

நாடாளுமன்ற உறுப்பினர்களில், ஒருவரேனும் போதைப்பொருளை பயன்படுத்துவதாக நான் நினைக்கவில்லை - ரவி கருணாநாயக்க

போதைப்பொருள் பயன்படுத்தும், நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளதாக, ராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க கருத்து வெளியிட்டதை அடுத்து, பெரும் சர்ச்சை தோன்றியுள்ளது. இவரது கருத்துக்கு பல அரசியல் பிரமுகர்கள் கடும் கண்டனத்தை வெளியிட்டு வருகின்றனர்.

ரஞ்சன் ராமநாயக்கவின் கருத்து தொடர்பில், மின்வலு, எரிசக்தி மற்றும் தொழில்துறை அபிவிருத்தி அமைச்சர் ரவி கருணாநாயக்கவும் தனது கண்டனத்தை வெளியிட்டுள்ளார். நாடாளுமன்றத்தில் போதைப்பொருள் பயன்படுத்துவதாக பெயர் குறிப்பிடாது, உறுப்பினர்கள் மீது குற்றஞ்சாட்டுவதற்கு ஒருபோதும் இடமளிக்க முடியாதென மின்வலு, எரிசக்தி மற்றும் தொழில்துறை அபிவிருத்தி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

எனவே போதைப்பொருள் பயன்படுத்துவதாக கூறப்படும் அமைச்சர்கள் அல்லது நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெயர்களை வெளியிட்டு உறுதிப்படுத்த வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.

கித்துல்கல யட்டிபேரிய பகுதியில் நிர்மாணிக்கப்பட்டுவரும் புரோட்லேன்ட் நீர்மின் உற்பத்தி நிலையத்தினை நேற்றைய தினம் நேரில் சென்று பார்வையிட்ட அமைச்சர் ரவி கருணாநாயக்க ஊடகவியலாளர்கள் மத்தியில் உரையாற்றுகையிலேயே இதனை கூறினார்.

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அவதூறு ஏற்படுத்துவதை நான் முற்றாக நிராகரிக்கின்றேன்.

நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒருவரேனும் போதைப்பொருளை பயன்படுத்துவதாக நான் நினைக்கவில்லை. அவ்வாறு பயன்படுத்துவார்களாயின் பெயர் குறிப்பிட்டு அதனை நிரூபிக்க வேண்டும்.

அப்படியில்லாமல், நாடாளுமன்ற உறுப்பினர்களின் விம்பத்தை இல்லாது செய்வதற்கு, ஒருபோதும் இடமளிக்க முடியாது என, மின்வலு, எரிசக்தி மற்றும் தொழில்துறை அபிவிருத்தி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

இதேவேளை பாராளுமன்றத்திற்குள் போதைப் பொருள் பயன்படுத்துவோர் இருந்தால், அவர்களுக்கு இரத்தப் பரிசோதனை செய்ய முடியும் என்று, நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா கூறியுள்ளார்.

கம்பஹா பிரதேசத்தில் வைத்து ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட போதே, அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

போதைப் பொருள் பயன்படுத்தியவர்கள் போன்று, சிலர் பாராளுமன்றத்திற்குள் செயற்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

எனினும் அரசாங்கத்தில் உள்ள எந்தவொரு அமைச்சரும் போதைப் பொருள் பயன்படுத்துவதாக தான் நம்பவில்லை என்றும், அது தொடர்பில் நாய் போன்று மோப்பம் பார்த்து கூற முடியாது என்றும் கூறியுள்ளார்.

எனினும் சந்தேகம் இருந்தால் இரத்தப் பரிசோதனை செய்து அறிக்கை ஒன்றை பெற்றுக் கொள்ள வேண்டும் என்று, நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா கூறியுள்ளார்

இதனிடையே ஐக்கிய தேசியக் கட்சியில் போதைப்பொருள் பயன்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்கள் இருக்கின்றார்களா? எனக் கண்டறிவதற்கு குழு அமைத்ததே, ரஞ்ஜன் ராமநாயக்கவின் குற்றச்சாட்டை ஏற்றுக் கொண்டதற்கு சமனாகும் என, பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அலுத்கமகே தெரிவித்தார்.

ஆனால், பொதுஜன பெரமுனவில் கொக்கேன் பயன்படுத்தும் எவரும் இல்லை என அவர் மேலும் குறிப்பி்ரட்டுள்ளார்.

இதேவேளை கொக்கைன் போதைப் பொருள் உட்பட ஆபத்தான ரக போதைப் பொருட்களைப் பயன்படுத்தும் எவரும் பாராளுமன்றத்தில் இல்லையென, சபை முதல்வர் அமைச்சர் லக்ஷ்மன் கியெல்ல தெரிவித்துள்ளார்.

கண்டி, பாததும்பர பிரதேசத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையில், அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

''நான் 30 வருடங்களுக்கு மேலாக பாராளுமன்றத்தில் இருக்கிறேன். பாராளுமன்ற உறுப்பினர்களை நன்றாக ஆய்வு செய்துள்ளேன். இந்தப் பாராளுமன்றத்தில் கொக்கேன் பயன்படுத்தும் எவரும் இல்லையென்பதை மனதில் கையை வைத்துக் கொண்டு, கூற முடியும்'' எனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

Read more...

நாளை முதல் மழை - வளிமண்டலவியல் திணைக்களம்

நாளை முதல் தொடர்ந்து சில நாட்களுக்கு நாட்டின் தென் அரைப்பாகத்தில் குறிப்பாக ஊவா மாகாணத்தில் மாலையில் இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் உயர்வாகக் காணப்படுகின்றது என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 40 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது வடகிழக்கு திசையிலிருந்து வீசக்கூடுவதுடன் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 30-40 கிலோ மீற்றர் வரை காணப்படும்.

காலியிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளிலும் மன்னாரிலிருந்து புத்தளம் ஊடாக கொழும்பு வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளிலும் காற்றானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50 கிலோ மீற்றர் வரை அதிகரித்து வீசக்கூடுவதுடன் அவ்வேளைகளில் கடல் ஓரளவு கொந்தளிப்பாகவும் காணப்படும் என்றும் nவளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.

Read more...

பிரதமர் ரணில், மலையகத்திற்கு விஜயம்

பிரதமர் ரணில் விக்ரமசிங்க, மலையகத்திற்கான விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளதாக, தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி இன்றைய தினம் காலை 10 மணிக்கு பிரதமர் பொகவந்தலாவைக்கு விஜயம் செய்யவுள்ளார்.

பொகவந்தலாவையில் அமைக்கப்பட்டுள்ள புதிய வீடுகளை மக்களிடம் பாரப்படுத்தும், நிகழ்வில் கலந்து கொள்வதற்காகவே அவர் இந்த பயணத்தை மேற்கொள்ளவுள்ளார்.

இந்திய அரசாங்கத்தின் நிதி ஒதுக்கீட்டின்கீழ் 155 மில்லியன் ரூபாய் செலவிலும், தோட்ட உட்கட்டமைப்பு, சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரத்தின் 20 மில்லியன் ரூபாய் நிதியொதுக்கீட்டின் மூலம் இந்த வீடுகள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த நிகழ்வில் பிரதமருடன், மலைநாட்டு புதிய கிராமங்கள் அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொள்ளவுள்ளனர்.

Read more...

2,945 மில்லியனுக்கும் அதிக பெறுமதியுடைய ஹெரோயின், கொள்ளுப்பிட்டியில் கண்டுபிடிப்பு

கொழும்பு – கொள்ளுப்பிட்டியில் 2,945 மில்லியன் ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடைய ஹெரோயினை பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப்பிரிவு மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கைப்பற்றியுள்ளனர்.

கொழும்பு – கொள்ளுப்பிட்டியில் அமைந்துள்ள வர்த்தக கட்டடத் தொகுதியின் வாகனத் தரிப்பிடத்தில் விற்பனைக்காக கொண்டுவரப்பட்டபோதே இவை கைப்பற்றப்பட்டதாக, பொலிசார் குறிப்பிட்டுள்ளனர். இந்த சுற்றிவளைப்பில், 294 கிலோ 490 கிராம் ஹெரொயின் கைப்பற்றப்பட்டுள்ளது.

இதேவேளை, இலங்கையில் கைப்பற்றப்பட்ட பாரியளவான போதைப்பொருள் தொகை இதுவென்று, பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார். இரண்டு வான்களில் 5 பாரிய பொதிகளில் வைக்கப்பட்டிருந்த 272 சிறு பொதிகள் இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளன. குறித்த ஹெரோயின் கைபட்டப்பட்டபோது இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் பாணந்துறை பகுதியை சேர்ந்த 43 வயதான மொஹமட் பஷீர் மொஹமட் அச்மிர் மற்றும் 32 வயதான மொஹமட் ரிலா அஹமட் ருஸ்னி ஆகியோர் என்று பொலிசார் கூறுகின்றனர். சந்தேகநபர்கள் இரண்டு போரையும் தடுத்துவைத்து விசாரணைகளை முன்னெடுத்து வரும் நிலையில், இன்று கோட்டை நீதவான் முன்னிலையில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


Read more...

Saturday, February 23, 2019

ஜனாதிபதி பதவி விலகுவதே சாலச் சிறந்தது - பிமல் ரத்நாயக்க

எதிர்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு ஆதரவாக செயற்படும் நோக்கத்தில், அரசியலமைப்பு பேரவை மீது குற்றம் சுமத்தும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பதவி விலகுவதே சாலச் சிறந்தது என, மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.

அரசியலைப்பு பேரவை தொடர்பாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்த கருத்து தொடர்காக கருத்து தெரிவிக்கும் போதே, பிமல் ரத்நாயக்க இதனை தெரிவித்தார்.

அரசியலமைப்பு பேரவையினை விமர்சிக்கும் தகைமை ஜனாதிபதிக்கு கிடையாது. இவரது கருத்துக்கள் அனைத்தும் ஏற்றுக்கொள்ள முடியாதவையாகும்.

அரசியலமைப்பு பேரவை நூறு சதவீதம் சிறப்பானது அல்ல. ஒரு சில குறைப்பாடுகள் அதிலும் காணப்படுகின்றன.

அவற்றை சுட்டிக்காட்டியே மஹிந்த ராஜபக்ஷவின் தரப்பினர் இன்று கடுமையான எதிர்ப்பினை வெளிப்படுத்துகின்றனர்.

கடந்த காலங்களில் அரசியலமைப்பினை தொடர்ச்சியாக துஷ்பிரயோகம் செய்தமையினையும், அதனை உயர் நீதிமன்றம் உணர்த்தியமையினையும் ஒருபோதும் மறந்து விட கூடாது.

ஆகவே அரசியலமைப்பு பேரவை நீக்கப்பட வேண்டியது அல்ல. அதனை பலப்படுத்த வேண்டும். அதுவே சிறந்த தீர்வாக அமையும் என, மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.

Read more...

ஐக்கிய நாடுகள் கூட்டத்தொடர் திங்கட்கிழமை ஆரம்பம்...

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடர் நாளை மறுதினம் திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ளது.

சுவிஸ்சர்லாந்தில் இடம்பெறவுள்ள இந்தக் கூட்டத்தொடர், எதிர்வரும் மார்ச் மாதம் 22 ஆம் திகதிவரை இடம்பெறவுள்ளது.

நாளை மறுதினம் திங்கட்கிழமை ஆரம்பிக்கவுள்ள இந்தக் கூட்டத் தொடர், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 40 ஆவது அமர்வாகும்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையிலிருந்து அமெரிக்கா வெளியேறிய பின்னர், அதன் பிரதான பொறுப்பை பிரித்தானியா ஏற்கவுள்ளது.

இந்த நிலையில் ஆரம்பிக்கப்படவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரில், இலங்கை தொடர்பான கூட்டுத் தீர்மானமொன்றை பிரித்தானியா சமர்ப்பிக்கவுள்ளது.

மனித உரிமைகள், பொறுப்புக்கூறல் மீளமைப்பு ஆகிய விடயங்கள் தொடர்பில் இந்தத் தீர்மானத்தில் கவனம் செலுத்தப்படும் என கூறப்படுகின்றது.

இலங்கை தொடர்பாக பிரித்தானியா கொண்டுவரும் இந்த தீர்மானத்திற்கு கனடா, ஜேர்மனி உள்ளிட்ட பல்வேறு நாடுகள் ஆதரவளிக்கவுள்ளன.

இதேவேளை, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் முன்வைக்கப்பட்ட பரிந்துரைகளில் பெரும்பாலானவற்றை அரசாங்கம் ஏற்கனவே நடைமுறைப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான சரத் வீரசேகர இந்தக் கருத்தைத் தெரிவித்திருந்தார்.

அரசியலமைப்பில் கொண்டு வரப்பட வேண்டிய புதிய திருத்தம் மட்டுமே, இன்னமும் அமுல்படுத்தப்பட வேண்டிய பரிந்துரையாகுமென அவர் குறிப்பிட்டிருந்தார்.

இது குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவுக்கு தாம் தெரிவித்துள்ளதாகவும் சரத் வீரசேகர கூறியுள்ளார்.

Read more...

படைப்புழு தாக்கத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு, எதிர்வரும் 10 ஆம் திகதி முதல், இழப்பீடு - விவசாய அமைச்சு

நாட்டின் பல மாவட்டங்களில், படைப்புழுவினால் அழிவடைந்த செய்கைகளுக்காக இழப்பீடு வழங்கும் நடவடிக்கைகள், எதிர்வரும் 10 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்தது.

படைப்புழுவினால் சுமார் 12,000 ஏக்கர் செய்கை நிலங்கள் முழுமையாக சேதமடைந்துள்ளதாக, அமைச்சின் செயலாளர் கே.டி.ருவன்சந்திர குறிப்பிட்டார்.

அத்துடன் பல செய்கைகள் பகுதியளவிலும், பாதிக்கப்பட்டுள்ளதாக மதிப்பீடு செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

இந்த நிலையில் பாதிக்கப்பட்ட படைப்புழுவால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நட்டஈடு வழங்கப்படும் என, விவசாய அமைச்சு முன்னர் அறிவித்திருந்தது.

அதன்படி அடுத்த மாதம் 10 ஆம் திகதி, பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்கப்படும் என, விவசாய அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

படைப்புழுவின் தாக்கத்தால், நாட்டின் பல பகுதிகளில், சோளம், வாழை உள்ளிட்ட பல பயிர் செய்கைகள் பாதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Read more...

அரச நிறுவனங்களுக்கு எதிராக, இரண்டே வாரங்களில் 185 முறைப்பாடுகள் பதிவு

அரச நிறுவனங்களுக்கு எதிராக, கடந்த நான்கு வருட காலப் பகுதியில் மட்டும் 185 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரச நிறுவனங்களில் இடம்பெற்றதாக கூறப்படும் ஊழல்களை விசாரிப்பதற்கு நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு, இரண்டு வாரங்களுக்குள் இந்த முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.

கடந்த 2015 ஜனவரி 14 ஆம் திகதி முதல், டிசம்பர் 31 ஆம் திகதி வரையான 4 வருடங்களுக்குள் அரச நிறுவனங்களில் இடம்பெற்றதாகக் கூறப்படும் ஊழல் செயற்பாடுகள், நிறுவன நம்பிக்கையை மோசடி செய்தல், முறையற்ற வளப் பாவனை தொடர்பில் மக்களின் முறைப்பாடுகளைப் பெற்று, அவை தொடர்பில் விசாரித்தல் என்பன ஜனாதிபதி ஆணைக்குழுவின் பொறுப்பாகும்.

இதற்கமைய ஆணைக்குழுவுக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகள் குறித்து, உரிய விசாரணைகள் இடம்பெற்று தகுந்த தண்டனை வழங்கப்பட வேண்டும் என, முறைப்பாட்டாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Read more...

நாடு பூராகவும் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் 3711 பேர் கைது!

நாடு பூராகவும் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பில், 3711 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளார். இந்த விசேட சுற்றிவளைப்பு 24 மணிநேரம் நீடித்ததாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த சுற்றிவளைப்பின் போது கைது செய்யப்பட்டவர்களில், 938 பேருக்கு ஏற்கனவே பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடக பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

மேலும் கைது செய்யப்பட்டவர்களில் 768 பேர் மதுபோதையில் வாகனத்தை செலுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர தலைமையில் 17,213 பொலிஸ் அதிகாரிகள் மேற்கொண்ட நடவடிக்கையில், போக்குவரத்து விதிகளை மீறியதற்காக 5818 பேர் கைது செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Read more...

வர்த்தகர்களின் கொலையை கண்டித்து, முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்டது.

ரத்கம உதாகம பகுதியில் இரண்டு வர்த்தகர்கள், கொலை செய்யப்பட்டமையை கண்டித்து, முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆர்ப்பாட்டம் சற்று முன்னர் கைவிடப்பட்டதாக ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவத்தில் சம்பந்தப்பட்ட பொலிஸ் அதிகாரிகளை பொலிஸார் கைது செய்தமையினை அடுத்தே, குறித்த போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது.

அண்மையில் கடத்தப்பட்டு  இரண்டு வர்த்தகர்கள், இன்றைய தினம் கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Read more...

போதைப்பொருள் பாவனையில் ஈடுபட்டால் நாடாளுமன்ற உறுப்புரிமை நீக்கம்: மஹிந்த அமரவீர

நாடாளுமன்ற உறுப்பினர்கள், போதைப்பொருள் பயன்படுத்துவார்களாயின், அவர்களின் நாடாளுமன்ற உறுப்புரிமை நீக்கப்பட வேண்டும் என, ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மஹிந்த அமரவீர குறிப்பிட்டுள்ளார்.

அண்மையில் இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க அமைச்சர்கள் சிலரும், போதைப்பொருள் பயன்படுத்துவதாகத் தெரிவித்திருந்தார்.

இந்த விடயம் தொடர்பாக ஊடகங்களுக்கு பதிலளித்த போதே பொதுச் செயலாளர் மஹிந்த அமரவீர இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அமைச்சர்கள் யாராவது போதைப்பொருள் பயன்படுத்துவது ஆதரங்களுடன் நிரூபிக்கப்பட்டால், அவர்களை அமைச்சுப் பதவியிலிருந்து மட்டுமல்லாமல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்தும் நீக்க வேண்டும்.

கடந்த கால ஆட்சியாளர்களினால் போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடைய பிரதான சூத்திரதாரிகளை கைது செய்யும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவில்லை.

நாட்டினது அரசியல்வாதிகளே போதைப்பொருள் பாவனையாளர்களாக காணப்பட்டால் நாட்டின் எதிர்கால நிலைமை என்னவென்பது கேள்விக்குறியான விடயமாகும் என சுதந்திர கட்சியின் பொது செயலாளர் மஹிந்த அமரவீர மேலும் குறிப்பிட்டார்.

Read more...

ஹட்டனில் தடைசெய்யப்பட்ட பெருந்தொகை புகையிலை தூளுடன் ஒருவர் கைது

ஹட்டனில் உள்ள வீடு ஒன்றில் இருந்து புகையிலை தூள் அடைக்கபட்ட 750 ரின்களுடன் ஒருவர் கைது செய்யபட்டுள்ளதாக, ஹட்டன் குற்றத் தடுப்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த கைது நடவடிக்கை நேற்று இடம்பெற்றுள்ளது.

ஹட்டன் பொலிஸ் அத்தியட்சகர் ரவிந்திர அம்பேபிட்டியவின் பணிப்புரைக்கு அமைய மேற்க்கொண்ட சுற்றிவளைப்பு போதே, இந்த கைது இடம்பெற்றுள்ளதாக ஹட்டன் குற்றத் தடுப்பு பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து விற்பனை செய்வதற்காக புகையிலை தூள் அடைக்கபட்ட ரின்கள் வைக்கபட்டிருந்ததாக ஹட்டன் குற்றத்தடுப்பு பொலிஸார் மேற்கொண்ட ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. புகையிலை தூள் அடைக்கபட்ட ரின்கள் இலங்கையில் தடை செய்யபட்டிருந்தாலும் இவை நாட்டில் அதிகமாக விற்பனை செய்யபடுவதாகவும் தெரிவிக்கபடுகின்றது.

இதன்போது, என்சி பெட்டிகளில் ஒரு பெட்டியில் 25 டின்கள் படி 30 பெட்டிகள் மீட்கப்பட்டுள்ளதாக ஹட்டன் குற்றத் தடுப்பு பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.


Read more...

வர்த்தகர்கள் கொலை தொடர்பில் ரத்கமவில் ஆர்ப்பாட்டம்

ரத்கம - காலி வீதியில் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்படுகின்றது. இந்த எதிர்ப்பு நடவடிக்கை காரணமாக அவ்வீதி ஊடான போக்குவரத்து முற்றாக பாதிப்பு அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ரத்கம - உதாகம பிரதேசத்தை சேர்ந்த இரண்டு வர்த்தகர்கள் அண்மையில் காணாமல் போயிருந்தனர். பின்னர் அவர்கள் கொலை செய்யப்பட்டு இருந்தனர். இதன் காரணமாக உயிரிழந்தவர்களின் உறவினர்கள் மற்றும் ஊர் மக்கள் இணைந்து இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை நடத்துகின்றனர்.

கடந்த ஜனவரி 23ம் திகதி குறித்த இரண்டு வர்த்தகர்களும் கடத்திச் செல்லப்பட்டுள்ளதுடன், இருவரினதும் சடலங்கள் தீயிட்டு எரிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கூறியிருந்தார்.

இதனிடையே, வர்த்தகர்கள் இருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக மேலும் சிலர் கைது செய்யப்படவுள்ளதாக, குற்றத்தடுப்பு விசாரணை திணைக்களம் தெரிவித்துள்ளது. கொலை செய்யப்பட்ட வர்த்தகர்களுடையதென சந்தேகிக்கப்படும் மனித எச்சங்கள் நேற்று மீட்கப்பட்டதுடன், அவை மரபணு பரிசோதனைக்காக அனுப்பப்படவுள்ளதாக குற்றத்தடுப்பு விசாரணை திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில், தென் மாகாண விசேட விசாரணை பிரிவின் உப பொலிஸ் பரிசோதகர் ஒருவர் நேற்று கைது செய்யப்பட்டார்.

அவரிடம் மேற்கொள்ளப்பட்ட ஆரம்பகட்ட விசாரணைகளிலிருந்து, குறித்த வர்த்தகர்கள் இருவரும் கடத்தப்பட்டு அக்மீமன – கொனாமுல்ல பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் வைத்து கொலை செய்யப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது. அத்தோடு கொலை செய்யப்பட்ட பின்னர், அவர்களது உடல்கள் வலஸ்முல்ல – மெதகம்கொட – கனுமுல்தெனிய வனப்பகுதியில் எரிக்கப்பட்டுள்ளதாக பொலிஸாரின் விசாரணைகள் மூலம் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், வர்த்தகர்கள் கொலை செய்யப்பட்டதாக சந்தேகிக்கப்படும் கொனாமுல்ல பிரதேசத்தில் உள்ள வீடொன்றை காலி பிரதான நீதவான் மற்றும் காலி உதவி சட்ட மருத்துவ அதிகாரி ஆகியோர் பரிசோதனைக்கு உட்படுத்தியுள்ளனர். இதே நேரம், குறித்த வீட்டின் உரிமையாளரிடம் குற்றத்தடுப்பு விசாரணை திணைக்கள அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

எவ்வாறான போதிலும் இரண்டு வர்த்தகர்களும் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டமைக்கான காரணம், இதுவரையில் கண்டறியப்படவில்லை என பொலிஸ் ஊடக பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

Read more...

தெங்கு தொழிற்துறை வருமானத்தில் சடுதியான அதிகரிப்பு

95 பில்லியன் ரூபாவை வருமானமாக தெங்கு தொழிற்துறை ஈட்டியுள்ளது. இது கடந்த வருடத்தில் தெங்கு ஏற்றுமதி ஊடாக கிடைத்த வருமானம் ஆகும்.

இந்த வளர்ச்சி காரணாமாக, எதிர்வரும் 2020ஆம் ஆண்டளவில் இந்த வருமானத்தை 2 மடங்காக அதிகரிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக தெங்கு அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

இதனிடையே கடந்த 2014ஆம் ஆண்டில் தெங்கு தொழிற்துறை மூலம் பெறப்பட்ட வருமானம் 73 பில்லியன் ரூபாவாகும். 2018ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த வருமானம் 22 பில்லியன்களாக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read more...

செஹான் சேமசிங்க கூறுகிறார், அரசியலமைப்பு பேரவையின் உறுப்பினர்கள் பதவி விலக வேண்டும்

அரசியலமைப்பு பேரவையின் உறுப்பினர்கள் அனைவரும் சுயமாக பதவி விலகிக் கொள்ள வேண்டும் என்று செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

எதிர்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்,ஷ அரசியலமைப்பு பேரவையில் உறுப்பினராக இருந்தும் எவ்வித கடமைகளையும் இதுவரையில் பொறுப்பேற்காத நிலையில், பேரவையின் உறுப்பினர்கள் அனைவரும் சுயமாக பதவி விலகிக் கொள்ள வேண்டும் என அவர் கூறினார்.

பொதுஜன பெரமுனவின் தலைமையகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

எதிர் தரப்பில் இருக்கும் நாம் அரசியலமைப்பு பேரவையின் உறுப்பினர்கள் தெரிவிற்கு ஆரம்பத்தில் இருந்து எதிர்ப்பினையே தெரிவித்து வந்தோம். அரசியல்வாதிகளினை பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர்கள் தெரிவு இடம்பெறும்பொழுது அங்கு சுயாதீனத்தன்மை காணப்படாது.

பிரதமர் தனக்கும் தனது கட்சிக்கும் ஆதரவானவர்களை முக்கிய பொறுப்புகளை வகிக்கும் சந்தர்ப்பத்தை வழங்கினார். பிரதமரை போன்றே சபாநாயகரும் நடந்து கொண்டார். இவர்களின் இந்த மாதிரியான செயற்பாடு ஜனாதிபதியை அதிருப்தி அடைய வைத்தது.

எனவே அரசியலமைப்பு பேரவையினை உருவாக்கியதன் நோக்கம் நிறைவேற்றப்படவில்லை என்பதனால், அரசியலமைப்பு பேரவையினால் எவ்விதமான பயனும் இல்லை என்றும் செஹான் சேமசிங்க தெரிவித்தார்.

Read more...

எதிர்வரும் திங்கட்கிழமைக்கு முன்னர் விண்ணப்பிக்கலாம்

2019 ஆண்டுக்கான உயர்தர பரீட்சைக்காக விண்ணப்பிப்பதற்கு வழங்கப்பட்டுள்ள கால எல்லை, எதிர்வரும் திங்கட்கிழமை நிறைவடைவதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித தெரிவித்துள்ளார்.

தனிப்பட்ட பரீட்சாத்திகளுக்குரிய மாதிரி விண்ணப்பப்படிவம் கடந்த 13ம் திகதி வெளியான தினகரன் பத்திரிகையில் வெளியிடப்பட்டிருக்கிறது.

அத்தோடு, பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்திலும் மாதிரி விண்ணப்பப்படிவதை தரவிறக்கம் செய்து கொள்ள முடியும்.

தனிப்பட்ட பரீட்சார்த்திகளுக்கு எதிர்வரும் மார்ச் மாதம் முதலாம் திகதி வரை விண்ணப்பங்களை அனுப்பி வைக்க முடியும் என்றும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித மேலும் குறிப்பிட்டுள்ளார்.


Read more...

பன்னிப்பிட்டியில் கொட்டாஞ்சேனை நபரின் சடலம் மீட்பு

கொழும்பு - பன்னிப்பிட்டிய, அரலியஉயன பிரதேசத்தில் துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த நபர் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக
பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், 35 வயதுடைய கொட்டாஞ்சேனை பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரின் சடலமே இவ்வாறு கண்டெடுக்கப்பட்டுள்ளது. நேற்று இரவு 11.45 மணியளவில் சடலம் கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். கொட்டாவை – பொரளை வீதி தெபானம உயன சந்தியில், இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் குறித்த நபர் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது

Read more...
Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com