Thursday, February 21, 2019

நாடாளுமன்றத்தில் கம்மன்பில கொண்டுவரும் முக்கிய விடயம்

இன்றைய நாடாளுமன்ற அமர்வில் அரசியலமைப்புச் சபை சம்பந்தமான விவாதம் நடைபெறவுள்ளது.

காலை 10.30 மணி அளவில் நாடாளுமன்றம் கூடவுள்ளதுடன், ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் உறுப்பினர் உதய கம்மன்பில கூறியிருந்த அரசியலமைப்புச் சபை சம்பந்தமான விவாதம், இன்றைய தினம் ஒத்திவைப்பு பிரேரணையாக சபையில் சமர்ப்பிக்கபடும் என்று தெரிவிக்கப்படுகின்றது.

Read more...

எந்த அரசியல் குழுவுக்கும் சார்பாக செயற்பட மாட்டேன் - இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் புதிய தலைவர்

எந்தவொரு அரசியல் குழுவுக்கும் சார்பாக செயற்படாமல் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தை வழிநடத்தப் போவதாக புதிய தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி காலிங்க இந்திரதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

நேற்று நடைபெற்ற இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தேர்தலில் அதிகளவிலான வாக்குகளினால் காலிங்க இந்திரதிஸ்ஸ வெற்றி பெற்றார்.

இந்த நிலையில் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவராக தெரிவாகிய பின்னர் கருத்துத் தெரிவித்த அவர், நீதித்துறையின் கௌரவத்தைப் பேணும் வகையில் தான் செயற்படுவேன் என்று வாக்குறுதி வழங்கினார்.

இவருக்கு ஆதரவாக 4702 வாக்குகள் கிடைக்கப் பெற்றன. இவருடன் போட்டியிட்ட சட்டத்தரணி மஹிந்த லொக்குகே 1346 வாக்குகளைப் பெற்றுள்ளார்.

இதேவேளை, சட்டத்தரணிகள் சங்கத்தின் புதிய செயலாளராக சட்டத்தரணி கௌசல்ய நவரத்ன தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இதனிடையே இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் முன்னாள் தலைவராக யு.ஆர்.டி. சில்வா செயற்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Read more...

கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கான முக்கிய அறிவித்தல்

நடைபெறவுள்ள கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைக்கான விண்ணப்பப் படிவங்களைப் பெற்றுக்கொள்ளும், பாடசாலை மற்றும் தனிப்பட்ட பரீட்சாத்திகளின் இறுதித் திகதி அறிவிக்கப்பட்டுள்ளது.

பாடசாலை பரீட்சார்த்திகள் எதிர்வரும் 25 ஆம் திகதி வரையும், தனிப்பட்ட பரீட்சார்த்திகள் எதிர்வரும் மார்ச் மாதம் முதலாம் திகதி வரையும் தமது விண்ணப்பப் படிவங்களை சமர்ப்பிக்க முடியும் என்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பீ பூஜித்த தெரிவித்துள்ளார்.

இந்த அறிவித்தலை சம்பந்தப்பட்ட மாணவர்கள் மற்றும் பாடசாலை அதிபர்கள் ஆகியோர் கவனத்தில் எடுக்குமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Read more...

கொக்கேயின் விவகாரம் - அமைச்சு பதவிகளை இழக்கும் ரஞ்ஜன், பத்திரன

ரஞ்ஜன் ராமநாயக்க மற்றும் புத்திக பத்திரன ஆகியோரிடமிருந்து அமைச்சுப் பதவிகளை இல்லாமல் செய்யுமாறு, ஐக்கிய தேசிய முன்னணியின் சிரேஷ்ட உறுப்பினர் ஒருவர் ஆலோசனை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் அமைச்சர்கள் உள்ளிட்டவர்கள் கொக்கேன் பயன்படுத்துவதாக இராஜாங்க அமைச்சர் ரஞ்ஜன் ராமநாயக்க சமீபத்தில் தெரிவித்த கருத்து பெரும் சர்ச்சையான நிலைமை உருவாகியுள்ளது. இதேபோன்றே வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பால்மாவில் பன்றிக் கொழுப்பு கலந்திருப்பதாக பிரதி அமைச்சர் புத்திக்கபத்திரன நாடாளுமன்றத்தில் குற்றம்சாட்டியிருந்தார்.

இதன் காரணமாக., ராஜாங்க மற்றும் பிரதி அமைச்சுப் பதவிகளை வகிக்கும் இவர்கள் இருவரின் கருத்துக்களினாலும் அரசாங்கத்துக்கு நெருக்கடி நிலைமை ஏற்பட்டுள்ளதாக விமர்ச்சிக்கப் படுகின்றது. இந்த நிலைமைக்கு தீர்வு காணும் பொருட்டு சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்த இருவரையும் உடனடியாக அமைச்சுப் பதவிகளில் இருந்து நீக்குமாறு கட்சிக்குள் பரிந்துரை நடைபெறுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஒழுக்காற்றுக் குழுவின் அறிக்கை வரும் வரையில் காத்திருக்காமல் அவர்களை அப்பதவிகளிலிருந்து நீக்கிவிடுமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இதனிடையே, கொக்கேன் பயன்படுத்தும் அமைச்சர்கள் தொடர்பில் கண்டறிவதற்கு விசேட குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சி தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் நடைபெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுக் கூட்டத்தில் வைத்து இக்குழு அமைக்கப்பட்டுள்ளது. அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தலைமையில் நான்கு உறுப்பினர்கள் கொண்டதாக இக்குழு அமைக்கப்பட்டுள்ளது.

இக்குழுவின் அறிவிக்கை ஐ.தே.க.யின் நிறைவேற்றுக் குழுவிடம் கையளிக்கப்படவுள்ளதாகவும் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

Read more...

நீதிமன்றம் சென்றது பொலிஸ் மா அதிபரின் குரல் பதிவு

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ச ஆகியோர் மீதான கொலைச் சூழ்ச்சி தொடர்பில் முன்னெடுக்கப்படும் விசாரணைகளுக்கு அமைய, பொலிஸ்மா அதிபரிடம் பெறப்பட்ட குரல்பதிவு மாதிரியின் அறிக்கை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஜனவரி மாதம் 14 ஆம் திகதி முதற்தடவையாக அரச பகுப்பாய்வாளர் திணைக்களத்தில் முன்னிலையாகி இருந்த பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர, தனது குரல் பதிவுகளை வழங்க இருந்தார். நீதிமன்றம் வழங்கிய உத்தரவின் பேரிலேயே அவர் அரச பகுப்பாய்வு திணைக்களத்தில் ஆஜராகியிருந்தார்.

ஊழலுக்கு எதிரான அமைப்பின் நடவடிக்கை பணிப்பாளர் நாமல் குமார மற்றும் இந்தக் குற்றச்சாட்டு தெடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் பிரதிப் பொலிஸ்மா அதிபர், குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு தொலைபேசி உரையாடல்களை வழங்கி இருந்தனர்.

இந்த குரல் பதிவுகளில் பொலிஸ்மா அதிபரின் குரல் பதிவாகியுள்ளதா என்பது தொடர்பில் ஆராய்வதற்காக பொலிஸ்மா அதிபர் அரச பகுப்பாய்வு திணைக்களத்தில் ஆஜராகி குரல்பதிவை வழங்கியதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

Read more...

Wednesday, February 20, 2019

ரிசார்ட் பதுயூதீனின் பீடி-இலை மோசடி வியாபாரம்! நீதிமன்று அநீதிமன்றாகியது அம்பலம்.

வர்த்தக வாணிபத்துறை அமைச்சரான றிசார்ட் பதுயுதீன் அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்களை வைத்து இந்நாட்டின் சொத்துக்களை சூறையாடுகின்றார் என்றும் அமைச்சு பதவியை கொண்டு தன்னுடைய சட்ட விரோத வியாபாரங்களுக்கு வலுச்சேர்கின்றார் என்றும் பல தரப்பினரும் குற்றஞ்சுமத்தி வருகின்றனர்.

றிசார்ட் வர்த்தக வாணிபத் துறை அமைச்சராக பதவியேற்ற பின்னர், சுங்கத் திணக்களத்தினருக்கு தண்ணி காட்டி நாட்டுக்கு உரித்தாக வேண்டிய பல பில்லியன் கணக்கான ரூபாய்களை தனது பையினுள் போட்டுக்கொள்கின்றார் என சுங்க திணைக்களத்தின் தொழிற்சங்கங்கள் நேரடியாக சாடியுள்ளது.

இந்நிலையில் சுங்கத் திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்ட ரிசார்ட் பதுயுதீனின் சகா ஒருவர் சட்டத்திற்கு புறம்பாக நீதிமன்றினால் பிணையில் விடுவிக்கப்பட்ட பின்னர், அவ்விடயத்தில் சுங்கத் திணைக்களத்தினரும் எதிர்கட்சியினரும் நீதிமன்றின் செயற்பாட்டை கடுமையாக எதிர்த்தபோது தனது நிலைப்பாட்டை மாற்றி கொண்டு இழிபுகழ் பெற்று நிற்கின்றது கொழும்பு பிரதான மஜிஸ்றேட் நீதிமன்று.

இலங்கை-இந்திய ஒப்பந்தத்தின் ஊடாக இலங்கையில் தமிழ் மக்களுக்கு நன்மை கிடைத்ததோ அல்லவோ ரிசார்ட் பதுயுதீனின் காட்டில் பெருமழை. இலங்கை-இந்திய ஓப்பந்தத்தினூடாக இலங்கை விவசாயிகளுக்கு கிடைக்கப்பெற்ற வரிச்சலுகைகளை மோசடியான முறையில் பயன்படுத்தி விவசாயிகளை நிர்கதியாக்கியும், இலங்கையின் விவசாய உற்பத்தி பொருட்களின் சந்தை பெறுமதியையும் இல்லாதொழித்து வருகின்றார் ரிசார்ட் பதுயுதீன்.

கடந்த மார்கழி மாதம் 3ம் திகதி இத்தாலிக்கு கொண்டு செல்வதற்கு என இலங்கை இடைத்தங்கல் பகுதிக்குள் நுழைக்கப்பட்ட பிடி-இலை கொள்கலன்கள் வழமையான மோசடி முறையில் இடைத்தங்கல் கொள்கலன் பகுதியிலிருந்து வெளியே கொண்டு செல்லப்பட்டுள்ளது. இதை அறிந்த சுங்க அதிகாரிகள் குறித்த கொள்கலன்களை வத்தளைப் பிரதேசத்தில் வைத்து கைது செய்துள்ளனர்.

குறித்த 12 தொன் பிடி-இலை மோசடியால் மாத்திரம் நாட்டுக்கு கிடைக்கவேண்டிய சுங்கவரி 4 கோடி ரூபா கிடைக்காமல்போனமை வெளியாகியது.

தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் ரிசார்ட் பதுயுதீனின் உறவினரும் வர்த்தக சகாவுமான நூர்தீன் பசால் அகமெட் என்ற பெயர் கொண்ட நபரே குறித்த சட்டவிரோத செயற்பாடுகளை முன்னெடுத்துவந்த பிரதான நபர் என்பது தெரியவந்துள்ளது. இதை தொடர்ந்து குறித்த நபரை விசாரணைக்காக அழைத்தபோதும் அரசியல் பலம் காரணமாக விசாரணைகளுக்கு முகம்கொடுக்காது அதிகாரிகளை மிரட்டிவந்தார் பாசல்.

மிரட்டலுக்கு பணியாத சுங்க அதிகாரிகள் ரிசார்ட்டின் சகாவான நூர்தீன் பசால் அகமெட் டை கைது செய்து கொழும்பு புதுக்கடை நீதிமன்றில் ஆஜர் செய்தபோது, அவருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. சுங்க மோசடி சட்டவியல்கோவை 127(சி) யின் பிரகாரம் 10 லட்சம் ரூபாவிற்கு மேற்பட்ட பெறுமதியான பொருட்கள் தொடர்பான சுங்க மோசடி வழக்கொன்றின் சந்தேக நபர்களுக்கு பிணை வழங்கும் அதிகாரம் உயர் நீதிமன்றுக்கே உள்ள நிலையில் இவ்வாறு பிணை வழங்கப்பட்டமை நீதிமன்று அரசியல் அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ளது அல்லது அடிபணிந்துள்ளது என்ற குற்றச்சாட்டிற்கும் விமர்சனத்திற்கும் உள்ளானது.

மேலும் குறித்த மோசடி தொடர்பில் கைதான மூன்று சந்தேக நபர்கள் விளக்க மறியலிலுள்ள நிலையில் பிரதான சந்தேச நபர் பிணையில் விடுவிக்கப்பட்டிருப்பது, மேற்கொள்ளப்படும் விசாரணைகளுக்கு குந்தகமாக அமையலாம் என்று சுங்கத்திணைக்களத்தினர் அதிருப்தியை வெளியிட்டனர்.
அத்துடன் எதிர்கட்சியினர் குறித்த நீதிபதி தொடர்பில் சுயாதீன நீதிச்சேவைகள் ஆணைக்குழுவுக்கு முறைப்பாடு செய்ய தயாராகினர். இதை தொடர்ந்தே கொழும்பு பிரதான மஜிஸ்றேட் நீதிமன்று வழங்கிய பிணையை ரத்து செய்து பாசலை விளக்க மறியலில் அடைத்துள்ளது.

2018 ல் மாத்திரம் இந்தோனேசியா மற்றும் மலேசியாவிலிருந்து 2800 மெற்றிக்தொன் மிளகினை நாட்டுக்குள் கொண்டுவந்து மீண்டும் இந்தியாவிற்கு ஏற்றுமதி செய்துள்ளனர். இவ்விடத்தில் ரிசார்ட் பதுயுதீனின் சகோதரன் நேரடியாக தொடர்பு பட்டிருப்பதது தெரியவந்துள்ளதுடன் மேற்படி மோசடிக்கு வர்த்தக வாணிப அமைச்சின் அதிகாரங்கள் பயன்படுத்தப்படுகின்றமை கண்டுபிடிக்கபட்டுள்ளது.

மேற்படி மோசடிக்கு திருமதி சார்ள்ஸ் அவர்கள் இடமளியாத காரணத்தினாலேயே அவரை இடமாற்றுவதற்கு ரிசார்ட் பதுயுதீன் திரைமறைவில் நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தாக சுங்க தொழிலாளர்கள் சங்கம் நேரடியாக குற்றஞ்சுமத்தியிருந்தமை யாவரும் அறிந்தது.

ரிசார்ட் கும்பலின் மோசடி செயற்பாடுகளால் நாட்டுக்கு கடந்த வருடம் மாத்திரம் 1.8 பில்லியன் ரூபாய்கள் நஷ்டமேற்பட்டுள்ளதாக சுங்க திணைக்கள தகவல்கள் தெரிவிக்கின்றது. நாட்டுக்கு கிடைக்கவேண்டிய 1.8 பில்லியன் ரூபாவை ரிசார்த் கும்பல் மாத்திரம் தனது பையினுள் போட்டுக்கொண்டால், ஏனைய அரசியல்வாதிகளால் எவ்வளவு பணம் கொள்ளையிடப்படும் என்பதை கற்பனை செய்கின்றபோது, நாட்டினை கொண்டு செல்வதற்கு தேவையான பணத்தை பெற்றுக்கொள்வதற்காக மக்கள் மீது வரிச்சுமையை அதிகரிப்பதையும் வெளிநாட்டு கடன்களை பெறுவதையும் தவிர அரசிற்கு மாற்று வழி யாதுண்டு?

Read more...

என்னை சந்திக்கும் அரசியல்வாதிகள் தங்கள் தேவைகளையே கேட்கிறாா்கள், மக்களுடைய தேவைகளை கேட்டதில்லை..

வடமாகாண ஆளுநராக நான் பதவியேற்று 41 நாட்களில் 100ற்கும் மேற்பட்ட அரசியல்வாதிகளை சந்தித்திருக்கிறேன். அவா்கள் அனைவரும் மக்கள் நலன்சாா்ந்த விடயங்களை என்னிடம் கேட்கவில்லை.

மாறாக தங்களுடைய தேவைகளையும், தங்கள் நலன்சாா்ந்த விடயங்களையுமே எங்களிடம் கேட்டாா்கள் என ஆளுநா் சுரேன் ராகவன் கூறியுள்ளாா்.

மலையக தோட்ட தொழிலாளா்களின் சம்பள உயா்வு தொடா்பாக ஊடகங்கவியலாளா்களுக்கு கருத்து தொிவிப்பதற்கான ஊடகவியலாளா் சந்திப்பு ஒன்று வடமாகாண உள்ளுராட்சி அமைச்சின் கேட்போா் கூடத்தில் இன்று இடம்பெற்றிருந்தது. இதன்போது வடமாகாண ஆளுநராக பதவியேற்று 41 நாட்கள் நிறைவடையும் நிலையில், 4 மக்கள் சந்திப்புக்களை நடாத்தியுள்ளீா்கள். அவற்றில் கலந்து கொண்ட மக்கள் ஊடாக வடமாகாண மக்கள் எதிா்கொள்ளும் பிரச்சினைகள் குறித்த கணிப்பீடு எதனையாவது செய்துள்ளீா்களா? என ஊடகவியலாளா்கள் எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கையிலேயே அவா் மேற்கண்டவாறு கூறியுள்ளாா்.

இதன்போது மேலும் அவா் கூறுகையில் எம்மை சந்திக்க வரும் மக்கள் பல்வேறு பிரச்சினைகளை கூறுகிறாா்கள். குறிப்பாக காணி பிணக்குகள் இராணுவத்திவசம் உள்ள காணிகள், காணி அற்றவா்களுடைய பிரச்சினைகள் போன்றன வடக்கில் பாாிய பிரச்சினைகளாக இருக்கின்றது. மேலும் இடமாற்றம் சம்மந்தமான பிரச்சினைகளும் அதிகம் இருக்கின்றது.

எல்லோருக்கும் யாழ்ப்பாணத்தில் இருந்து பணியாற்றவே அதிகம் விருப்பமாக இருக்கின்றது. அந்த விடயம் தொடா்பாக நாங்கள் ஒரு நடவடிக்கையை மேற்கொள்ள திட்டமிட்டிருக்கின்றோம்.

அதாவது உதாரணத்திற்கு ஒரு அதிகாாி தொடா்ச்சியாக ஒரு இடத்தில் கடமையாற்றுவாராக இருந்தால் அவா் சிநேகபூா்வமாக தான் பெறவேண்டிய இடமாற்றத்தினை பெற்று செல்லலாம்.

அதனையும் செய்யாவிட்டால் அவா் தொடா்பான தகவலை வெளிப்படுத்துவதுடன் அவா் மீது நடவடிக்கையும் எடுக்கப்படும். அதற்கான நடவடிக்கைகளை நாங்கள் எடுத்திருக்கின்றோம்.

அதேபோல் வேலையற்ற பட்டதாாிகளுடைய பிரச்சினையும் இருக்கின்றது. குறிப்பாக நடுத்தர வா்க்கத்தை சோ்ந்த இளைஞா்கள் வடமாகாணத்தில் தங்கியிருக்க தயாராக இல்லை.

அவா்கள் வடமாகாணத்திற்கு வெளியே சென்று கொண்டிருக்கின்றாா்கள். ஆனால் வடமாகாணத்திற்கு வெளியே செல்ல முடியாமல் வேலைவாய்ப்புக்கள் இல்லாமல் இருந்து கொண்டிருக்கின்றாா்.

அவா்களுக்கு நாங்கள் நிச்சயமாக வேலைவாய்ப்புக்களை வழங்கவேண்டும். அதற்காக அவா்களிடம் அணுகி விவசாயம் உள்ளிட்ட சுயதொழில் வேலைவாய்ப்புக்களை தருவதாக கேட்டோம்.

அவா்கள் அதற்கு மறுத்துள்ளாா்கள். காரணம் அவா்கள் பட்டதாாி. மேலும் வடமாகாண ஆளுநராக பதவியேற்று 41 நாட்கள் நிறைவடையும் நிலையில் 4 பொதுமக்கள் சந்திப்புக்களை நடாத்தி அவற்றில் 1000ற்கும் மேற்பட்ட மக்களை சந்தித்திருக்கிறேன். அதேபோல் 100ற்கும் மேற்பட்ட அரசியல்வாதிகளை சந்தித்திருக்கிறேன்.

இதில் 100ற்கும் மேற்பட்ட அரசியல்வாதிகள் என்னை சந்தித்தபோதும் அவா்கள் யாரும் தமிழ் மக்களுடைய நலன்சாா்ந்த விடயங்களை என்னிடம் கேட்கவில்லை. மாறாக அவா்கள் தங்களுடைய தேவைகளையும் தங்கள் நலன்சாா்ந்த விடயங்களையுமே கேட்டிருக்கின்றாா்கள்.

அவ்வாறான நிலையே இங்கே இருந்து கொண்டிருப்பதை காணகூடியதாக இருக்கின்றது என்றாா்.

Read more...

பால்மாவில் மனிதனுக்கு ஒவ்வாத பதார்த்தங்கள் எதுவும் அடங்கவில்லை - விசேட வைத்திய நிபுணர்கள்!

இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் பால்மாவில் மனிதனுக்கு ஒவ்வாத சில பதார்த்தங்கள் அடங்கியுள்ளதாக வெளியான செய்தியில் உன்மதியில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை எந்தவொரு விஞ்ஞானபூர்வ பரிசோதனை முடிவுகளும், ஒவ்வாத பதார்த்தங்கள், பால்மாவில் உள்ளடங்கியுள்ளதாக கூறவில்லை என, சுகாதார அமைச்சின் விசேட வைத்திய நிபுணர்கள் சுட்டிக் காட்டியுள்ளனர்.

அத்துடன் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் பால்மா வகைகள் அனைத்தும், தரமானவையாகும் என்றும் அந்த வைத்திய நிபுணர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இலங்கைக்குள் இறக்குமதி செய்யப்படும் அனைத்து பால்மா வகைகளும் துறைமுகத்தில் வைத்து மாதிரிப் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகின்றன.

அதன் பின்னர் மீண்டும் இராசாயன ஆய்வுகூட பரிசோதனைக்கும் அந்த பால்மா வகைகள் உட்படுத்தப்படுவதுடன், ஏற்றுமதி செய்யப்படும் நாடுகளின் தரச் சான்றிதழும் பெற்றுக் கொள்ளப்படுவதாக, சுகாதார அமைச்சின் விசேட வைத்திய நிபுணர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தலைமையில், அரசாங்க தகவல் திணைக்கள கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே, விசேட வைத்திய நிபுணர்கள் இந்த தகவலை உறுதிபட குறிப்பிட்டனர்.

இது குறித்து கருத்து வெளியிட்ட சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன, பால்மா தொடர்பான பிரச்சினை விஞ்ஞானபூர்வமான ஒரு பிரச்சினையே அன்றி, அரசியல் பிரச்சினையல்ல எனக் குறிப்பிட்டார்.

அத்துடன் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் பால்மா தொடர்பான பிரச்சினையை பற்றி, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அமைச்சரவை கூட்டத்தின் போது எந்தவித கருத்தும் வெளியிடவில்லை என்றும், சுகாதார அமைச்சர் ராஜித்த சேனாரத்ன குறிப்பிட்டார்.

Read more...

பிழையான வரிக் கொள்கையால், நாட்டில் மதுபானம், புகையிலை பொருட்களின் பாவனை அதிகரிப்பு.

தற்போதைய அரசாங்கத்தின் பிழையான வரிக் கொள்கை காரணமாக, கடந்த 2017 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், 2018 ஆம் ஆண்டில் மதுபானம் மற்றும் புகையிலை பொருட்களை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தகவலை எடிக் என்ற , மது மற்றும் போதை பொருள் தடுப்பு நிலையம் தெரிவித்துள்ளது. இந்த அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட வரிச் சலுகை காரணமாக, கடந்த வருடத்தில் ஒட்டுமொத்த ஆண்களில், 33 வீதமானோர் மதுபானம் அருந்தியுள்ளனர். அத்துடன் 26 வீதமானோர் புகைத்தலில் ஈடுபட்டுள்ளதாக, மது மற்றும் போதை பொருள் தடுப்பு நிலையத்தின் செயற்பாட்டு அதிகாரி அசித தர்ஷன குற்றம் சுமத்தியுள்ளார்.

நாட்டின் எதிர்காலத்தை பாதாளத்திற்குள் தள்ளும், போதைப் பொருள், மதுபானம், புகையிலை பொருட்களின் பாவனை அதிகரித்திருப்பது, நாட்டு மக்களுக்கு பெரும் ஆபத்தாகும் என அவர் கூறினார்.

அத்துடன் பிழையான வரிக்கொள்கைகளை நீக்கி விட்டு, நாட்டுக்கு தேவையான வரிக்கொள்கைகளை பேணி, நாட்டு மக்களை இந்த அரசாங்கம் பாதுகாக்க வேண்டும் என, மது மற்றும் போதை பொருள் தடுப்பு நிலையத்தின் செயற்பாட்டு அதிகாரி அசித தர்ஷன கோரிக்கை விடுத்துள்ளார்.

Read more...

முச்சக்கர வண்டி சாரதிகள் இன்று ஆர்ப்பாட்டம்.

மட்டக்களப்பில் உள்ள முச்சக்கரவண்டி சாரதிகள் ஒன்றிணைந்து, இன்றைய தினம் ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாநகர சபையின் செயற்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தே, மட்டக்களப்பு நகர, முச்சக்கர வண்டி சாரதிகள் இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

மட்டக்களப்பு முச்சக்கரவண்டி சாரதிகள் நலன்புரி சங்கத்தினால், இந்த ஆர்ப்பாட்டம் மட்டக்களப்பு காந்தி பூங்காவுக்கு முன்பாக நடைபெற்றது.

கடந்த 30 வருடங்களாக, மட்டக்களப்பில் முச்சக்கரவண்டி சாரதிகள் நலன்புரி சங்கம் செயற்பட்டு வருகிறது.

இந்த நிலையில் அதன் செயற்பாட்டினை குழப்பும் வகையில் மட்டக்களப்பு மாநகரசபை முதல்வரும், ஆணையாளரும் செயற்படுவதாக, குறித்த சங்கத்தின் தலைவர் எஸ்.ஜேசுதாசன் தெரிவித்தார். அத்துடன் தமது பணிகளுக்கு இடையூறு விளைவித்தால், அதற்கான தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், அவர் எச்சரிக்கை விடுத்தார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில், முச்சக்கர வண்டி சாரதிகளுக்கு ஆதரவாக, பொது மக்களும் இணைந்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read more...

தங்கப் பாளங்களுடன், நாட்டுக்கு வருகை தந்த 9 பேர் கைது

தங்கப் பாளங்கள் மற்றும் தங்க ஆபரணங்களுடன், இலங்கைக்கு வந்த 9 பேர், கட்டுநாயக்க விமான நிலையத்தின் சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த 9 பேரும், டுபாயில் இருந்து இலங்கைக்கு விமானம் மூலம் சட்டவிரோதமாக வருகை தந்துள்ளனர்.

சுமார் ஒரு ​கோடியே 63 இலட்சத்து 44 ஆயிரம் ரூபா பெறுமதியுடைய தங்க ஆபரணங்கள் மற்றும் தங்க பாளங்களை, குறித்த நபர்கள், தமது பயணப் பொதிகளில் மறைத்து வைத்து கொண்டு வந்துள்ளனர்.

இவர்கள், மருதானை, நீர்கொழும்பு, சீதுவ, சிலாபம் மற்றும் கண்டி பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்று கண்டறியப்பட்டுள்ளது. இந்த நிலையில், சம்பவம் குர்தா மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.

Read more...

கார்பன் பரிசோதனை அறிக்கை தொடர்பான தகவல்களை வெளியிட முடியாது - நீதிமன்றம்

மன்னார் சதொச வளாகத்தில், அகழ்ந்தெடுக்கப்பட்ட மனித எச்சங்களின் மாதிரிகள் தொடர்பான கார்பன் அறிக்கை, உத்தியோகப்பூர்வமாக நீதிமன்றத்திற்கு வழங்கப்படும் வரையில், அந்த அறிக்கை தொடர்பான எந்த தகவல்களையும் வெளியிட முடியாது என, நீதிமன்றம் திட்டவட்டமாக அறிவித்துள்ளது.

மன்னார் நீதவான் ரீ.சரவணராஜா, நீதிமன்றத்தில் வைத்து இதனை தெரிவித்ததாக, காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்கள் சார்பாக மன்றில் முன்னிலையான சட்டத்தரணி வி.எஸ்.நிறஞ்சன் தெரிவித்துள்ளார்.

மன்னார் மனித புதைகுழியிலிருந்து மீட்கப்பட்ட எச்சங்களின் 5 மாதிரிகளின் கார்பன் பரிசோதனை அறிக்கை, கடந்த 16 ஆம் திகதி அகழ்வு பணிக்கு பொறுப்பான சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ஷவினால், அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள, பீட்டா ஆய்வுக் கூடத்தில் இருந்து, பெறப்பட்டிருந்தன.

இந்த அறிக்கையை இன்றைய தினம், சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ஷ மன்னார் நீதிமன்றத்தில் கையளித்திருந்தார்.

இந்த நிலையில், குறித்த அறிக்கை தொடர்பான விசாரனைகள், மன்னார் நீதவான் ரி.சரவணராஜா முன்னிலையில் இடம்பெற்றன. இதன்போது காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள், காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்கள் சார்பாக மன்றில் முன்னிலையாகும் சட்டத்தரணி வி.எஸ்.நிறஞ்சன் ஆகியோர், நீதிமன்றத்தில் முன்னிலையாகியிருந்தனர்.

இதன் போதே அறிக்கை தொடர்பான தகவல்களை வெளியிட முடியாதென, மன்னார் நீதவான் ரீ.சரவணராஜா தெரிவித்துள்ளதாக, சட்டத்தரணி வி.எஸ்.நிறஞ்சன் குறிப்பிட்டுள்ளார்.

Read more...

''பௌத்த மதத்தை பாதுகாப்பதே எனது பிரதான நோக்கம்'' - பிரதமர்

''பௌத்த மதத்தைப் பாதுகாப்பதே தமது பிரதானமான நோக்கம்'' என, பிரதமர் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.

பௌத்த விகாரை ஒன்றில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டதன் பின்னர், ஊடகங்களுக்கு கருத்துரைத்த போதே, பிரதமர் இதனை தெரிவித்தார். எனினும் இந்த விடயத்தை நாடு முழுவதும் பரப்புரை செய்வதற்கான அவசியம் எனக்கில்லை, எனவும் அவர் கூறினார்.

தம்மை சிங்கள பௌத்தர்களெனக் கூறிக் கொள்ளும் சிலர், அரசியல் நோக்கத்துக்காகவே அவ்வாறு கூறுவதாகவும், அவர்களது கருத்தில் எந்தவிதமான நேர்மையும் இல்லை எனவும், பிரதமர் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.

அரசியலமைப்பின் புதிய வரைபு இதுவரை தயாரிக்கப்படவில்லை. அத்துடன் ஐக்கிய தேசியக் கட்சி சமர்ப்பித்த பரிந்துரை, தற்போது மீளப் பெறப்பட்டு விட்டது என, பிரதமர் ரணில் விக்ரமசிங்க மேலும் தெரிவித்தார்.

Read more...

சிறுவர்களின் பாதுகாப்பு தொடர்பில், விசேட கவனம் - ஜனாதிபதி

இலங்கையில் உள்ள சிறுவர்களின் பாதுகாப்பு தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளார். இதன்படி சிறுவர்களின் பாதுகாப்பு தொடர்பான தேசிய நோக்கத்தை, எதிர்வரும் சில வாரங்களுக்குள் ஏற்படுத்தவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் தேசிய நோக்கத்துக்கான அனைத்து நடவடிக்கைகளையும், தற்பொழுது முன்னெடுத்துள்ளதாகவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் இன்று இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து வெளிட்ட போதே, அவர் இதனை தெரிவித்துள்ளார்.

சிறுவர்கள் தற்போது முகம் கொடுக்கும் பிரச்சினைகள் குறித்து தெளிவான அறிக்கை ஒன்றைப் பெற்று, நடைமுறையிலுள்ள வேலைத்திட்டங்களை பலப்படுத்துவது குறித்து, இந்த செயல்திட்டத்தை ஊடாக ஆராயப்படும் என்று ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டார்.

Read more...

பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்திற்கு எதிராக, கிளிநொச்சியில் ஆர்ப்பாட்டம்.

பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்திற்கு எதிராக, கிளிநாச்சியில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை மனித உரிமை செயற்பாட்டு இயக்கங்களின் ஏற்பாட்டில் இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றுள்ளது. இன்று முற்பகல் 10.30 அளவில் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இந்த ஆர்ப்பாட்டத்தில், தாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்ட மக்களும் கலந்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிளிநாச்சி பழைய மாவட்ட செயலகம் முன்பாக ஆரம்பிக்கப்பட்ட குறித்த போராட்டம், ஏ9 வீதியூடாக டிப்போ சந்தி வரை சென்று அங்கு கவனயீர்ப்பு போராட்டமாக முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தில் காணப்படும் பாதகமான விடயங்கள் தொடர்பாக, மக்களை விழிப்பூட்டும் வகையில் பல்வேறு பதாதைகளை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டக்காரர்கள் சத்தமாக கோஷம் எழுப்பினர்.

இலங்கையில் யுத்தம் நிறைவடைந்து, பல வருடங்கள் கடந்துள்ள நிலையில், பயங்கரவாத தடைச்சட்டம் முழுமையாக நீக்கப்பட வேண்டுமென, ஆர்ப்பாட்டக்காரர்கள் இதன்போது வலியுறுத்தல் விடுத்துள்ளனர்.

Read more...

கட்சித் தலைவர்கள் கூட்டத்தில், சட்டமா அதிபரையும் அழைக்க தீர்மானம் - மனோ கணேசன்.

எதிர்வரும் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் சட்டமா அதிபரையும் அழைப்பதற்கு, கட்சித் தலைவர்கள் தீர்மானித்துள்ளதாக, அரச கரும மொழிகள், இந்து சமய விவகார அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

மாகாண சபை தேர்தலை விரைவாக நடத்துவதற்கான சட்ட ஏற்பாடுகள் தொடர்பாக ஆலோசனை ஒன்றை பெற்றுக்கொள்வதற்காகவே, சட்டமா அதிபரை கட்சி தலைவர்கள் கூட்டத்திற்கு அழைக்கவுள்ளதாக அமைச்சர் மனோ கணேசன் குறிப்பிட்டார்.

ஏற்கனவே ஏழு மாகாணங்களுக்கான ஆட்சிக் காலம் நிறைவடைந்த நிலையில், அந்த மாகாணங்கள் ஆளுநரின் கட்டுப்பாட்டில் குறித்த செயற்பட்டு வருகின்றன. ஏனைய இரண்டு மாகாணங்களுக்கான ஆட்சிக் காலமும் விரைவில் நிறைவடையவுள்ளன.

இந்த நிலையில், விரைவாக மாகாண சபைத் தேர்ததலை நடத்துவது தொடர்பாக, விசேட கட்சித் தலைவர்கள் கூட்டம் ஒன்று இன்றைய தினம் இடம்பெற்றது.

சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் இடம்பெற்ற இந்த கூட்டத்தின் போது, இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக, அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

மாகாண சபை தேர்தலை நடத்துவது குறித்து, பல்வேறு தரப்பினர் மாறுபட்ட கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர். இதன் காரணமாக மாகாண சபை தேர்தலை நடத்துவதில், தொடர்ந்தும் இழுபறிநிலை நீடிக்கின்றது.

Read more...

பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு எதிராக, ஒழுக்காற்று நடவடிக்கை!

பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு எதிராக, ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக, செய்திகள் வெளிவந்துள்ளன.

ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்றக் குழு, இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள் மற்றும் கட்சிகள் மீது, பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க பல அவதூறான கருத்துக்களை வெளியிட்டுள்ளதாக அவருக்கு எதிராக குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன.

இதனை அடுத்து, சம்பவம் குறித்து, விரிவாக ஆராய்ந்து அறிக்கையை சமர்ப்பிக்க, அமைச்சர் லக்ஷ்மன் கிரியல்ல தலைமையில் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

இந்தக் குழு, சம்பவம் குறித்து ஆராய்ந்து, கட்சியின் அடுத்த செயற்குழு கூட்டத்தில் அறிக்கையை சமர்ப்பிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எவ்வாறாயினும் பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு எதிராக, ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என, அரசாங்க தரப்பு செய்திகள் தெரிவிக்கின்றன.

Read more...

சர்வதேச நாணய நிதியத்தின் கண்காணிப்பு அறிக்கை இன்று கையளிப்பு

ஐந்தாம் கட்ட கடன் தொகையை வழங்குவது தொடர்பான, சர்வதேச நாணய நிதியத்தின் கண்காணிப்பு அறிக்கை இன்று கையளிக்கப்படவுள்ளது.
இந்தத் தகவலை நிதி அமைச்சு வெளிப்படுத்தியுள்ளது.

குறித்த கடன் தவணை தொடர்பான பேச்சுவார்த்தையை மேற்கொள்வதற்காக இலங்கைக்கு விஜயம் செய்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் தலைமை அதிகாரிகள் மற்றும் நிதி அமைச்சர் மங்கள சமரவீரவுக்கும் இடையில் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்று இருந்ததுடன், இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் மற்றும் நிதி அமைச்சின் செயலாளர்களுடனும் கலந்துரையாடல்களை அவர்கள் மேற்கொண்டிருந்தனர்.

இந்த கலந்துரையாடல்களின் போது இலங்கையின் மறுசீரமைப்புப் பணிகள் தொடர்பான முன்னேற்றத்தை சர்வதேச நாணய நிதியம் பாராட்டியுள்ளதோடு, குறித்த பணிகளுக்கு தொடர்ந்து ஒத்துழைப்பு வழங்குவதாகவும் நிதியம் உறுதியளித்துள்ளது.


இதனிடையே 2016 ஆம் ஆண்டு இலங்கைக்கு அனுமதி வழங்கப்பட்ட மூன்று வருட கடன் திட்டத்தின் கீழ் இதுவரை நான்கு தவணைகளில் நிதி கிடைக்கப்பெற்றுள்ளது. எனினும், கடன் திட்டத்தின் இறுதி தவணைக்கான கொடுப்பனவு கடந்த நவம்பர் மாதத்தில் வழங்கப்பட வேண்டிய நிலையில், நாட்டில் ஏற்பட்ட அரசியல் நெருக்கடி நிலை காரணமாக அதனை நிறுத்தியிருந்தனர்.

எவ்வாறாயினும், கடந்த ஜனவரி மாதம் நிதி அமைச்சர் மங்கள சமரவீர உள்ளிட்ட குழுவினர் சர்வதேச முகாமைத்துவ பணிப்பாளர் கிறிஸ்டின் லகார்டுடன் மேற்கொண்ட கலந்துரையாடலின் பின்னர் கடனை மீண்டும் வழங்குவதற்கு சமிஞ்சை வெளியானது. இதன்போது ஏற்றுக்கொள்ளப்பட்ட விடயங்கள் தொடர்பில் ஆராய்வதற்காக பெப்ரவரி மாதம் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் இலங்கைக்கு வருவதாக குறிப்பிடப்பட்டிருந்தது. இதன் பிரகாரம், இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எவ்வாறாயினும், இலங்கை அரசாங்கம் வறிய மக்கள் தொடர்பில் கவனம் செலுத்தாமல், சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளை நடைமுறைப்படுத்துவதாக ஐக்கிய நாடுகள் சபையின் விசேட பிரதிநிதி யுவான் பெப்லோவை மேற்கோள் காட்டி ”த ஐலன்ட்” பத்திரிகை செய்தி வௌியிட்டிருந்தது.

Read more...

பாடசாலைப் புத்தகங்களைப் விநியோகிக்கும் நடவடிக்கைகள் தற்போதுவரை நிறைவுறவில்லை - இலங்கை ஆசிரியர் சங்கம்

இந்த ஆண்டுக்கான இலவசப் பாடசாலைப் புத்தகங்களைப் விநியோகிக்கும் நடவடிக்கைகள் தற்போதுவரை நிறைவுறவில்லை என, இலங்கை ஆசிரியர் சங்கம் குற்றஞ்சுமத்தியுள்ளது.

இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின், பாடசாலைகளில் இலவசப் பாடப்புத்தகங்கள் இன்னமும் பகிர்ந்தளகிக்கப்படவில்லை என தமக்கு முறைப்பாடு கிடைக்கப்பெற்றுள்ளதாக, குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் கல்வி அமைச்சு அவதானம் செலுத்த வேண்டும். மாணவர்களுக்கான பாடப்புத்தகங்கள், கடந்த நவம்பர் மாதமளவில் விநியோகிக்கப்பட்டிருக்க வேண்டிய நிலையில் இன்னமும் விநியோகிக்கப்படாமல் இருப்பது கண்டிக்கத்தக்கது.

மக்களின் வரிப்பணத்தில் அச்ச்சிடப்படும் பாடப்புத்தகங்களை விநியோகிக்காமை மாணவர் ஆசியர்களுக்கு பாரிய பிரச்சினை எனவும் பாடசாலைப் புத்தகங்களை தனிப்பட்ட முறையில் பெற்றுக் கொள்வதற்கான மாற்றீடு இல்லாத நிலையில் பாடசாலைப் புத்தகங்களை விநியோகிக்காமை தொடர்பில் ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் கல்வி வௌியீட்டுத் திணைக்களத்திடம் ஊடகம் ஒன்று வினவியபோது, பாடசாலைப் புத்தகங்களை பகிர்ந்தளிக்கும் நடவடிக்கைகள் தற்போது நிறைவுற்றுள்ளதாக, சம்மந்தப்பட்ட பாடசாலைப் புத்தகங்களை பகிர்ந்தளிக்கும் பிரிவுக்கு பொறுப்பான பிரதி ஆணையாளர் லால் சந்திரசிறி பதிலளித்துள்ளார்.

சுமார் 40 மில்லியன் புத்தகங்கள் இதுவரை அதிபர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் இதற்காக 3,800 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளதாகவும் லால் சந்திரசிறி மேலும் சுட்டிக்காட்டினார்.

Read more...

பின் வாங்கும் ஆளும் கட்சி - மகிழ்ச்சியில் மஹிந்த அணி

இவ்வாரம் நடைபெறும் நாடாளுமன்ற அமர்வில் கூட்டரசாங்க பிரேரணை விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட மாட்டாது என்று சபைத் முதல்வரும் அமைச்சருமான லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.

ஊடகம் ஒன்றிற்கு கருத்துத் தெரிவிக்கையில் அமைச்சர் இதனைக் கூறினார். நாடாளுமன்ற நிகழ்ச்சி நிரலில் கூட்டரசாங்க பிரேரணை
உள்வாங்கப்பட்டிருந்த போதிலும், விரைவாக விவாதத்திற்கு எடுத்துக் கொள்ள முடியாத ஒரு நிலைமை காணப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

புதிய கூட்டரசாங்க யோசனை குறித்து கட்சித் தலைவர்களுடன் தொடர்ந்தும் கலந்துரையாடலில் ஈடுபட்டு வருவதாகவும், பிரதமரின் முடிவின் பின்னர் நாடாளுமன்றத்தில் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படும் எனவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

புதிய கூட்டரசாங்க யோசனை பிற்போடப்படுவதனாது மஹிந்த அணியினர் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெரும்பாலான கட்சிகளின் எதிர்ப்பை சம்பாதித்துள்ள கூட்டரசாங்க யோசனை ஆளும் கட்சியினாலும் நிறுத்தப்படுவதற்கான ஏது நிலை அதிகம் காணப்படுவது குறிப்பிடத்தக்கது.

Read more...

இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தேர்தல் ஆரம்பம்

இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தேர்தல் இன்று நடைபெற்று வருகின்றது. நாடு முழுவதிலுமுள்ள 85 நிலையங்களில் இந்த தேர்தல் நடைபெற்று வருவதாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் உப செயலாளர் சட்டத்தரணி சமல் பெர்னாண்டோ அறிவித்துள்ளார்.

இந்த தேர்தலின் போது தலைவர் செயலாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இந்த நிலையில் காலை 8.00 மணிக்கு ஆரம்பமாகியுள்ள இலங்கை சட்டத்தரணிகள் சங்க தேர்தலில், 16 ஆயிரம் சட்டத்தரணிகள் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர். இன்று நடை பெறும் தேர்தலில் தலைவர் பதவிக்கும் செயலாளர் பதவிக்கும் இரண்டு பேர் வீதம் போட்டியிடுகின்றனர்.

வாக்களிக்கும் சந்தர்ப்பம் மாலை 5.00 மணியுடன் நிறைவுபெறும்.

வாக்களிப்பின் பின்னர் பிராந்தியங்களிலுள்ள வாக்குகள் எண்ணப்பட்டு கொழும்பிலுள்ள பிரதான வாக்கெண்ணும் நிலையத்தினுாடாக முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளதாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் உப செயலாளர் சட்டத்தரணி சமல் பெர்னாண்டோ மேலும் கூறினார்

Read more...

இன்று நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் காற்றின் வேகம் அதிகரிக்கும்

வடக்கு, வட மத்திய, மத்திய மற்றும் தென் மாகாணங்களில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 40–45 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது வடகிழக்கு திசையில் இருந்து வீசக்கூடுவதுடன் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 20-30 கிலோ மீற்றர் வரை காணப்படும்.

மன்னாரில் இருந்து புத்தளம் ஊடாக கொழும்பு வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் காற்றானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50 கிலோ மீற்றர் வரை அதிகரித்து வீசக்கூடுவதுடன் அவ்வேளைகளில் கடல் ஓரளவு கொந்தளிப்பாகவும் காணப்படும்.

காங்கேசந்துறையில் இருந்து திருகோணமலை ஊடாக மட்டக்களப்பு வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளிலும் காலியில் இருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளிலும் காற்றானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40-45 கிலோ மீற்றர் வரை அதிகரித்து வீசக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

Read more...

பிரதமர் மற்றும் தமிழ் அரசியல்வாதிகள் மீது கடும் கண்டனம் வெளியிட்டுள்ள காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள்

அண்மையில் கிளிநொச்சிக்கு விஜயம் மேற்கொண்ட பிரதமர், இறுதி போர் தொடர்பில் வெளியிட்ட கருத்துக்களுக்கு காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் கண்டனம் தெரிவித்துள்ளதுடன், தமிழ் அரசியல்வாதிகள் பிரதமரின் கருத்து தொடர்பில் மௌனமாக இருப்பதாக, அவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

கிளிநொச்சியில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர்கள் தமது ஆதங்கத்தை தெரிவித்துள்ளனர்.

பிரதமர் ரணில்விக்கிரம சிங்க, பழையதை மறப்போம் மன்னிப்போம் என கூறியிருந்தார். இக்கருத்து, பாதிக்கப்பட்டவர்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. கிளிநொச்சிக்கு முன்பு ஒரு சந்தர்ப்பத்தில் விஜயம் செய்த பிரதமர், எங்கள் பிள்ளைகள் ரகசிய முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர் என்றும், தன்னை பதவியில் அமர்த்தினால் அந்த முகாம்களை இனம்கண்டு அவர்களை விடுவிப்பேன் என கூறியிருந்தார்.

எமக்கு தீர்வு பெற்று தருவதாக கூறிய அவர் பதவி கிடைத்ததும், பலாலியில் வைத்து, எமது மண்ணில் உங்கள் பிள்ளைகள் கொல்லப்பட்டுள்ளனர். அவர்கள் உயிரோடு இல்லை என தெரிவித்திருந்தார். இவ்வாறு கூறிய பிரதமர் ரணில் விக்ரமசிங்க, தற்பொழுது மறப்போம் மன்னிப்போம் என கூறுகின்றமை ஏற்றுக்கொள்ள முடியாத கருத்தாகும் என்று காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் கண்டனம் வெளியிட்டு உள்ளனர்.

Read more...

இன்றைய நாடாளுமன்ற கூட்டத்தில் கவனம் செலுத்தப்படும் விடயங்கள் இவைதான்

நாடாளுமன்றம் இன்று நண்பகல் 1 மணியளவில் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் கூடவுள்ளது. இன்றைய அமர்வில் ஏற்றுமதி கட்டளைச் சட்டத்தின் இரண்டு கோவைவிதிகள் தொடர்பில் விவாதிக்கப்படவுள்ளது.

இதேவேளை, இன்று மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் கட்சித் தலைவர்களின் விசேட கூட்டத்தில் கடந்தாலோசிக்கப்படவுள்ளது. ஆளும் கட்சியின் பிரதம கொறடாவும் அமைச்சருமான கயந்த கருணாதிலக இதனை தெரிவித்துள்ளார்.

இதனிடையே, நாடாளுமன்றம் கூடுவதற்கு முன்னர் நண்பகல் 12 மணியளவில் ஆளும் கட்சியின் உறுப்பினர்களுக்கு இடையிலான சந்திப்பு ஒன்றும் இடம்பெறவுள்ளது.

இது தவிர, போதைப்பொருளை பயன்படுத்துபவர்கள் நாடாளுமன்றத்தில் உள்ளார்கள் என்றால் அவர்கள் தொடர்பில் எழுத்து மூலம் அறிவிக்குமாறு சபாநாயகர் கரு ஜயசூரிய, இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவிற்கு அறிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் ரஞ்சன் ராமநாயக்க தொலைபேசி ஊடாக சபாநாயகருக்கு நேற்று முன்தினம் அறிவித்திருந்த போதிலும், தொலைபேசியூடாக அறிவிக்காமல் எழுத்து மூலம் அறிவிக்குமாறு சபாநாயகர் தெரிவித்ததாக பாராளுமன்றத்தின் சிரேஸ்ட ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டார்.

எழுத்து மூலம் கிடைக்கப் பெறும் முறைப்பாடுகள் தொடர்பில் கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் கலந்துரையாடி இந்த பிரச்சினைக்கு
நடவடிக்கை எடுப்பதற்கு சபாநாயகர் தயாராக இருப்பதாகவும் அவர் கூறினார்.


Read more...

Tuesday, February 19, 2019

சுவிஸ் ஒடவிருந்த மதுஷ், மனைவிக்காக 700 கோடி பெறுமதியான இரத்தினக்கல்லை கொள்ளையடித்தான் - ஸ்பெஷல் ரிப்போர்ட் -Sivaraja

மாக்கந்துர மதுஷ் உட்பட்ட சகாக்கள் டுபாயில் கைது செய்யப்பட்டு - அவர்கள் அனைவரும் தனித்தனியாக தடுத்து வைக்கப்பட்டுள்ள அதேசமயம் இங்கே இலங்கையில் மதுஷுக்கு எதிரான குழுக்கள் தமது எதிரிகளை வேட்டையாட ஆரம்பித்துள்ளன.

கொஸ்கொட சுஜி தலைமையிலான குழு மதுஷின் ஆதரவாளர்களை போட்டுத் தள்ள துவங்கியுள்ளது. மறுபுறம் எதிரியின் எதிரி என் நண்பன் என்று அமைதியாக அதனை பார்த்துக் கொண்டிருக்கிறது காவல்துறை...
மதுஷ் வசமிருந்த ஆயிரம் கோடி ரூபா பணம் - அவர் விசாரணைக்காக விசேட குழு ஒன்று டுபாய் செல்கிறது என்றெல்லாம் வந்த செய்திகள் தவறானவை.

மதுஷை விசாரிக்கும் விடயத்தில் ஒத்துழைக்க உதவ முடியுமெனக் கூறி டுபாய் வர அனுமதி கேட்டு இலங்கை பாதுகாப்பமைச்சு முன்னதாக கடிதம் ஒன்றை மின்னஞ்சலில் அனுப்பியிருந்த போதிலும் அது இப்போதைக்கு தேவையில்லை- நீதிமன்ற உத்தரவு ஒன்றின் பின்னர் அப்படியானதை பரிசீலிக்கலாம் என்று பதில் வழங்கியிருந்தது டுபாய் பாதுகாப்புத்துறை.

அதேசமயம் இங்கிருந்து அதிகாரிகள் செல்வது மற்றும் மதுஷ் தரப்பினரை நாடுகடத்தும் சட்ட விடயங்கள் பற்றி கொழும்பில் சட்ட மா அதிபர் திணைக்கள அதிகாரிகளும் - சி ஐ டி அதிகாரிகளும் ஆராய்ந்த போதும் - டுபாய் அரசு அனுமதி கொடுக்காத காரணத்தினால் அந்த பேச்சுக்கள் இடைநடுவில் நிற்கின்றன.

இந்த நிலைமையில் அங்கு சென்று வீணாக நேரத்தையும் பணத்தையும் செலவிடுவதில் அர்த்தம் இல்லை என்பதால் டுபாய் நீதிமன்ற தீர்ப்பு வந்த பின்னர் அவற்றை பார்க்கலாமென ஜனாதிபதியும் பணிப்புரை விடுத்துள்ளார்..

அநேகமாக வரும் 28 ஆம் திகதி மதுஷ் மற்றும் சகாக்கள் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படலாம்.

ஏற்கனவே மதுஷ் தரப்பு நீதிமன்றத்தில் ஆஜராக இந்தியா -பாகிஸ்தான் -எகிப்து ஆகிய நாடுகளின் முன்னணி சட்டத்தரணிகள் பேசப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது..

தேடுதல் வேட்டை..!

மறுபுறம் இங்கே இலங்கையில் தேடுதல் வேட்டை தொடர்கிறது. கடந்த வருடம் கொள்ளையடிக்கப்பட்ட இரத்தினக்கல் தொடர்பில் இன்றும் ஒருவரை கைது செய்தது பொலிஸ் விசேட அதிரடிப்படை.

நேற்றுமுன்தினம் பம்பலப்பிட்டியில் ஒருவரை பொலிஸ் கைது செய்ததல்லவா.? அவரிடம் இருந்தும் பல முக்கிய தகவல்களை பொலிஸ் கறந்து வருவதாக சொல்லப்படுகிறது.

அதிகாலை வேலை ஹோட்டலுக்குள் சென்ற அவரை சந்திக்க பெண் ஒருவரும் வந்துவிட்டு சென்றுள்ளார். காலை எட்டு மணிபோல் அதிரடியாக சுற்றிவளைத்த அதிரடிப்படை அவரை கைது செய்தது.

அதிரடிப்படை அவரை கைது செய்த சமயம் அவர் இந்தியாவில் உள்ள பாதாள உலக முக்கியஸ்தர் ஒருவருடன் தொலைபேசியில் பேசி இருந்தமை அறியப்பட்டதை நேற்று கூறியிருந்தேன்.

புதிய தகவல்கள் !


டுபாயில் நடந்த விருந்துக்கு பிரான்சில் இருந்து வந்து கலந்து கொண்ட முக்கியஸ்தர் யார் என்பது குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

ஏற்கனவே ஜனாதிபதி கொலைச்சதி விவகாரத்தை வெளிப்படுத்திய நாமல் குமார - தமக்கு நிதி உதவிகளை செய்த நபர் பிரான்சில் இருப்பதாக கூறியிருந்தார். அந்த நபர் தானா இவர் என்பதை தேடும் பணியில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.

டுபாய் பொலிஸார் நடத்திய விசாரணைகளின்போது சம்பந்தப்பட்ட விருந்து பிறந்த நாளுக்கான ஏற்பாடு என்று மதுஷ் மட்டுமே கூறியுள்ளதாக தகவல். சீனியர் டீ ஐ ஜீ லத்தீப் ஓய்வுபெறுவதை முன்னிட்டே இது நடந்ததென்று இதர பலர் தெரிவித்திருப்பதாக சொல்லப்படுகிறது.

டீ ஐ ஜி லத்தீப்பின் பதவிக்காலம் முடிவடைந்து ஓய்வில் செல்லவுள்ளாரென்றும் அவருக்கு பதவி நீடிப்பு கிடைக்காமல் இருக்க ஏற்பாடுகளை செய்து பெரும்தடையை நீக்கியுள்ளதால் இந்த நிகழ்வு நடத்தப்படுவதாகவும் விருந்துக்கு அழைத்த தனது நண்பர்களிடம் முன்கூட்டியே மதுஷ் மகிழ்ச்சியுடன் கூறியிருப்பதாக பொலிஸ் தகவல்.

இதேவேளை இரத்தினக்கல் கொள்ளை குறித்து பொலிஸார் நடத்திய விசாரணைகளுக்கு வருமாறு விடுத்த அழைப்பை மறுத்து அவசர வேலையாக வெளிநாடு செல்லவிருப்பதாக தெரிவித்து இப்போது டுபாயில் சிக்கியிருக்கும் நடிகர் ரயனுக்கும் கொழும்பில் கைது செய்யப்பட்ட அமெரிக்கப் பிரஜைக்கும் நீண்ட நாள் நட்பு இருந்தமையும் அவர்களின் பல இரகசிய செயற்பாடுகளும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இரத்தினக்கல் கொள்ளையிடப்பட்ட பின்னர் அதன் படம் மதுஸுக்கு அனுப்பப்பட்டது முதல் தொலைபேசியில் இமோ செயலி ஊடாக மதுஷுடன் இங்கிருந்து பலர் பேசியது வரை அனைத்து விபரங்களையும் பொலிஸார் அறிந்துள்ளனர். இன்று கைது செய்யப்பட்டவர் மூன்றாவது சந்தேக நபர். இன்னும் பலர் தேடப்படுவதாக தகவல்..

மதுஷின் இரண்டாவது மனைவிக்கு இந்த இரத்தினக்கல் அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

மதுஷுக்கு கிட்டத்தட்ட 25 ற்கும் மேற்பட்ட வங்கிக் கணக்குகள் டுபாயிலும் இலங்கையிலும் இருப்பதாக தெரியவந்தாலும் அவை வெவ்வேறு பெயர்களில் உள்ளன . அவற்றின் முழு விபரங்களை பெறுவதாயின் நீதிமன்றம் செல்லவேண்டும். டுபாயில் அஜித் என்ற பெயரில் மதுஷ் வைத்திருக்கும் சொத்துக்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. ஆனால் அவற்றை முடக்க நீதிமன்றத்தின் அனுமதி வேண்டும். அது இப்போதைக்கு நடக்காது. ஏனெனில் இலங்கைக்கே மதுஷ் விவகாரம் பெரியது. அவர்களைப் பொறுத்தவரை ( Dubai) இது பத்தோடு பதினொன்று..

இலங்கையில் மதுஷ் பல குற்றச் செயல்களை புரிந்தாலும் ஐ ஆர் சி பட்டியலில் அவரின் பெயர் இதுவரை இடம்பெறவில்லை. ஐ ஆர் சி பட்டியலில் 40 ஆயிரம் பேர் உள்ளனர் . சிறுவர்கள் 608 பேரும் பெண்கள் 1200 பேரும் இருப்பதாக சொல்லப்படுகிறது.

மறுபுறம் இலங்கையில் மதுஸுடன் தொடர்புகளை வைத்திருந்த அரசியல்வாதிகள் குறித்து பகிரங்க கருத்து வெளியிட்டுள்ள ரஞ்சன் ராமநாயக்க எம் பி , அந்த அரசியல்வாதிகள் குறித்து ஒரு பட்டியலை சபாநாயகரிடம் கையளிக்க ஏற்பாடுகளை செய்துள்ளார்.

முன்னதாக அந்த அரசியல்வாதிகள் குறித்து அரச புலனாய்வுத்துறையும் இரகசிய விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

தேர்தல் ஒன்று வரும் என எதிர்பார்க்கப்படுவதால் இந்த அரசியல்வாதிகள் பெரும் சிக்கலில் மாட்டியிருப்பதாக சொல்லப்படுகிறது.

இவற்றைவிட..

இந்த விபரங்களை விட இன்னும் முக்கியமான சில விடயங்களை குறிப்பிட்டு இன்றைய பதிவை முடிக்க நினைக்கிறேன்..

ஜனவரி இரண்டாம் வாரம் டுபாயில் ஒரு பார்ட்டி நடத்தினார் மதுஷ் .. அதற்கு சென்றோரும் இப்போது தேடப்படுகின்றனர்..

சுவிஸுக்கு சென்று அங்கு சில காலம் வாழவும் சுவிஸ் வங்கியில் தனது பணத்தை வைக்கவும் மதுஷ் திட்டமிட்டு நிரந்தர விசாவுக்கு விண்ணப்பம் செய்ய தயாராகியிருந்ததாக தகவல்..

இரத்தினக்கல் கொள்ளை தொடர்பான சர்வதேச கொள்ளைச் சம்பவம் ஒன்றை பின்பற்றியே மதுஷ் கொழும்பு இரத்தினக்கல் கொள்ளையை நடத்தியுள்ளதாக தெரியவந்துள்ளது.

2013 ஆம் ஆண்டு பெல்ஜியம் பிரசல்ஸ் விமான நிலையத்தில் இருந்து சுவிஸ் சூரிச் விமான நிலையத்திற்கு செல்லவிருந்த விமானத்திற்குள் அதிரடியாக புகுந்த கொள்ளையர்கள் 5 நிமிடத்திற்குள் 50 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான இரத்தினக்கற்களை கொள்ளையிட்டிருந்தனர். விமான நிலைய பாதுகாப்பு வேலிகளை அறுத்து அதிரடியாக பாதுகாப்பு தரப்பின் சீருடையில் புகுந்த கும்பலே அப்போது கொள்ளையை நடத்தியது..

அதே பாணியில் இங்கு கொள்ளையை நடத்திய மதுஷ் , தான் ஏற்பாடு செய்து அழைத்து வந்த வெளிநாட்டுப்பிரஜையை கூட கொள்ளை நடக்க முன்னர் இரத்தினக்கல் உரிமையாளரது பன்னிப்பிட்டிய இல்லத்தில் வைத்து கைது செய்து - வந்தது பொலிஸ் தான் என்பதைக் காட்டியமை இங்கு குறிப்பிடத்தக்கது.

Read more...

மரண தண்டனையில் எந்தவித மாற்றமும் இல்லை - நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சு.

இலங்கையில் போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள குற்றவாளிகளுக்கு, உறுதியாக மரண தண்டனையை நிறைவேற்ற முடியும் என, நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

எனினும் போதைப்பொருள் கடத்தல் தொடர்பில் மரண தண்டனை விதிக்கப்பட்ட 17 பேரில் நால்வர், வௌிநாட்டுப் பிரஜைகள் என்பதால், ஏனைய 13 பேருக்கு மாத்திரமே மரண தண்டனையை நிறைவேற்ற முடியும் என, நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சின் உயர் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த குற்றவாளிகளின் பட்டியலில் 4 பாகிஸ்தானிய பிரஜைகளின் பெயர்கள் உள்ளடங்கியுள்ளன. குறித்த நால்வரையும் விடுவிக்குமாறு பாகிஸ்தானிய அரசாங்கத்திடமிருந்து பல்வேறு சந்தர்ப்பங்களில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளதாக, குறித்த உயர் அதிகாரி குறிப்பிட்டார்,

போதைப்பொருள் கடத்தல் தொடர்பில் 48 பேருக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ளதுடன், இவர்களில் 30 பேர் மேன்முறையீடு செய்துள்ளதால் அவர்களுக்கு மரண தண்டனையை நிறைவேற்ற முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறு மரண தண்டனை விதிக்கப்பட்ட 17 பேரின் பெயர்கள் அடங்கிய பெயர்ப்பட்டியல், அண்மையில் ஜனாதிபதி செயலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை மரண தண்டனை விதிக்கப்பட்ட அனைத்து குற்றவாளிகளும், 50 வயதுக்கு குறைவானவர்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Read more...

ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு பொதுமக்களுக்கு விடுத்த முக்கிய அறிவிப்பு

ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு பொதுமக்களுக்கு வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளது.

அரச நிறுவனங்களில் இடம்பெற்றதாகக் கூறப்படும் இலஞ்சம், ஊழல் தொடர்பான குற்றச்சாட்டுக்கள், அரச சொத்துக்களை முறைக்கேடாக பயன்படுத்தியமை தொடர்பான முறைப்பாடுகளை மாத்திரம், தமது ஆணைக்குழுவில் முன்வைக்குமாறு குறித்த வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

இதுவரை கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளை ஆராய்ந்த போது அவற்றில் அதிகளவான முறைப்பாடுகள் தேவையற்ற தொடர்பில்லாத முறைப்பாடுகளாக கிடைத்துள்ளன என்று ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது. பெரும்பாலானவை தொடர்பற்ற முறைப்பாடுகளாக காணப்படுவதன் காரணமாக, அரச நிறுவனங்களில் இடம்பெற்றதாகக் கூறப்படும் இலஞ்சம், ஊழல் தொடர்பான குற்றச்சாட்டுக்கள், அரச சொத்துக்களை முறைக்கேடாக பயன்படுத்தியமை தொடர்பான முறைப்பாடுகளை மாத்திரம் மேற்கொள்ளுமாறு, ஆணைக்குழு கேட்டுக்கொண்டுள்ளது.

இந்த நிலையில் முறைப்பாடுகளை பொறுப்பேற்கும் இறுதி திகதி, மார்ச் மாதம் 07 ஆம் திகதியுடன் நிறைவுபெறுவதாகவும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

Read more...

இன்று இரவு, கொழும்பில் போக்குவரத்து மட்டுப்படுத்தப்படும் - காவல்துறை

கொழும்பு - கொம்பனி வீதி சந்தியில் இருந்து பித்தளை சந்தி வரையிலான பகுதியில் இன்றைய தினம் போக்குவரத்து மட்டுப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு – ஹூணுப்பிட்டி கங்காராம விகாரையின் நவம் பெரஹெராவில் இன்று இரவு விசேட வீதியுலா இடம்பெறவுள்ளது.

இதனை முன்னிட்டு, இந்த விசேட போக்குவரத்து ஒழுங்குகளும் முன்னெடுக்கப்படவுள்ளன.

இதன்படி கொழும்பின் ஜேம்ஸ் பீரிஸ், கொம்பனி வீதி சந்தியில் இருந்து பித்தளை சந்தி வரையில் பயணிக்கும் வாகன சாரதிகள், மாற்று வழிகளை பயன்படுத்துமாறு காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

Read more...

வர்த்தகர்கள் கடத்தல் விவகாரத்தில் கபில நிசாந்தவை விளக்கமறியலில் வைக்க உத்தரவு

வர்த்தகர்கள் இருவர் காணாமல் போனமை தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட தென் மாகாண விஷேட விசாரணை பிரிவின் பொலிஸ் பரிசோதகர் கபில நிசாந்தவை, விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

காலி - ரத்கம - உதாகம பிரதேசத்தை சேர்ந்த 31 வயதுடைய ரிஷீன் சிந்தக மற்றும் 33 வயதுடைய மஞ்சுள அசேல ஆகியோர் கடந்த 23 ஆம் திகதி வேன் ஒன்றில் வந்த குழு ஒன்றினால் கடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பில் தென் மாகாண விஷேட விசாரணை பிரிவின் பொலிஸ் பரிசோதகர் கபில நிசாந்தவை குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் நேற்று கைது செய்திருந்தனர்.

குறித்த வர்த்தகர்கள் இருவரையும் பொலிஸ் உடையில் வந்த சிலர் கடத்திச் சென்றதாக அவர்களின் உறவினர்கள் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


Read more...

மறப்போம், மன்னிப்போம் - மீண்டும் வலியுறுத்திய பிரதமர்

நாட்டில் நடந்த பழையவற்றை மறந்து, மன்னித்து அனைவரும் புதிய வழியில் செல்வோமென, பிரதமர் ரணில் விக்ரமசிங்க மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

வடக்கிற்கு மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்ட பிரதமர் ரணில் விக்ரமசிங்க, யாழ்ப்பாணத்தில் வைத்து, ''அனைவரும் பழையதை மறப்போம், மன்னிப்போம்'' என கூறியிருந்தார். பிரதமரின் இந்த கருத்து பாதிக்கப்பட்ட மக்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.

இவரது கருத்துக்கு எதிராக பல அரசியல் தலைவர்களும் தமது அதிருப்தியை வெளியிட்டிருந்தனர். இந்த நிலையில், கொழும்பில் உள்ள முக்கிய ஊடகம் ஒன்றுக்கு கருத்து வெளியிட்ட பிரதமர், அனைத்தையும் மறந்து, மன்னித்து ஒரே பாதையில் பயணிக்க வேண்டும் என, குறிப்பிட்டார்.

“நாட்டை சிறந்த முறையில் கட்டியெழுப்ப வேண்டுமென்றால், பழைய விடயங்களை மறந்து புதிய பாதையை நோக்கி செல்வதற்கு தமிழ் மக்கள் முன்வர வேண்டும். தற்போதைய சூழ்நிலையில் அனைத்து இன மக்களும் ஒரே பாதையில் செல்ல வேண்டியது அவசியமாகும்.

அத்துடன் எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ, போர்க்குற்றங்கள் இடம்பெறவில்லையென பொய்யுரைத்தமையால் தான், அவர் தனது ஜனாதிபதி பதவியை இழக்க நேரிட்டது. மேலும், யுத்தத்தில் இராணுவத்தினர் மாத்திரம் போர்க்குற்றங்களை புரியவில்லை. விடுதலைப்புலிகளும் போர்க்குற்றம் இழைத்துள்ளனர்.

ஆகையால், இந்த விடயங்களை பற்றியே எந்நாளும் கூறிக்கொண்டு இருப்பதை கைவிட்டு, நாட்டின் எதிர்காலத்தை சிறந்த முறையில் கொண்டு செல்வதற்காக பழையவற்றை மறந்து, புதிய பாதையை நோக்கி பயணிக்க வேண்டும் என ரணில் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

Read more...

ரஞ்சன் ராமநாயக்க வெளியிட்ட கருத்து குறித்து ஜனாதிபதி நடவடிக்கை ?

அண்மையில் இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க வெளியிட்ட கருத்து குறித்து அவரிடம் விசாரணை நடத்த வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பத்தரமுல்லையில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போது, ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி இவ்விடயம் குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு கோரிக்கை விடுத்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் பியல் நிஷாந்த தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர்களில் சுமார் 25 பேர் அளவில் கொக்கெயின் போதைப்பொருள் பயன்படுத்துகின்றார்கள் என்ற பகிரங்கமான குற்றச்சாட்டை, ரஞ்சன் ராமநாயக்க அண்மையில் ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தார்.

ஆகவே, மக்கள் பிரதிநிதிகள் மீது இத்தகையதொரு குற்றச்சாட்டை முன்வைத்துள்ள ரஞ்சன் ராமநாயக்கவின் கருத்து குறித்து ஆராய வேண்டும். இதனால், அவரிடம் விசாரணை நடத்துவதற்கு ஜனாதிபதி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பியல் நிஷாந்த கோரிக்கை விடுத்துள்ளார்.

Read more...

மொரட்டுவ கழிவுநீர் முகாமைத்துவத்திற்காக இலங்கைக்கு பிரான்ஸ் 75 மில்லியன் யூரோ கடன் உதவி

இலங்கை அரசாங்கத்துக்கும் – பிரான்ஸ் அபிவிருத்தி முகவர் பிரிவுக்குமிடையில் கடன் வழங்கல் ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது.

ஊடகத்துறை அமைச்சில் இடம்பெற்ற இந்த ஒப்பந்த கைச்சாத்திடலில், நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சின் செயலாளர் கலாநிதி ஆர்.எச்.எஸ்.சமரதுங்க மற்றும் பிரான்ஸ் அபிவிருத்தி முகவர் பிரிவின் இலங்கைக்கான பணிப்பாளரும் இலங்கைக்கான பிரான்ஸ் நாட்டு தூதுவருமான மார்டின் பேரன்ட் ஆகியோர் கைச்சாத்திட்டனர்.

குறித்த ஒப்பந்தத்தில் 75 மில்லியன் யூரோ கடனை இலங்கை அரசாங்கத்திற்கு வழங்க பிரான்ஸ் அரசாங்கம் இணைகியுள்ளது. இரத்மலானை மொரட்டுவ பகுதிகளில் கழிவுநீரை அகற்றுவதற்கான திட்டத்தின் முதற்கட்டத்தில் இரண்டாவது பிரிவு நடவடிக்கைக்காக இந்த நிதி பயன்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read more...

அடுத்த ஜனாதிபதி, கோட்டாபய ராஜபக்சவே என, முடிவு செய்து விட்டனர் - உதய கம்மன்பில

இலங்கையின் அடுத்த ஜனாதிபதியாக, முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவே, இருப்பார் என, தேசியவாதிகளும், இடதுசாரிகளும் கூறி வருவதாக, பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு, கருத்து வெளியிட்ட போதே அவர் இதனை தெரிவித்தார்.

முன்னதாக, ஜனாதிபதி தேர்தலில் கோட்டாபய ராஜபக்ஷவை களமிறக்குவது தொடர்பாக. இந்த இரு தரப்பினரும் வெவ்வேறு கருத்துக்களைக் கூறினார்கள்.

எனினும், தற்போது முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவே, ஜனாதிபதி தேர்தலுக்கான மிகப் பொருத்தமான வேட்பாளர் என்று இரண்டு தரப்புகளும் குறிப்பிட்டுள்ளன.

அதன் காரணமாக இலங்கையின் அடுத்த ஜனாதிபதி, கோட்டாபய ராஜபக்ஷவே என்று, தேசியவாதிகளும், இடதுசாரிகளும் முடி செய்து விட்டனர்.

எவ்வாறாயினும் இது குறித்த இறுதி முடிவு, எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவின் கைகளிலேயே உள்ளது என்று , நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில கூறியுள்ளார்.

Read more...
Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com