Tuesday, February 19, 2019

இலங்கையின் புதிய வரைபடத்தை தயாரிக்கும் பணிகள் ஆரம்பம்

இலங்கையின் புதிய வரைபடத்தை அறிமுகப்படுத்துவதற்காக நாட்டின் நிலப்பரப்பபை மீண்டும் அளவீடு செய்வதற்கு, இலங்கை நில அளவீட்டுத் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. இந்தத் தகவலை நில அளவைத் திணைக்கள பணிப்பாளர் ஜீ.எம்.ஜீ. உதயகாந்த தெரிவித்துள்ளார்.

சமீப காலத்தில் இலங்கையின் கரையோரப் பகுதியிலுள்ள மாற்றங்கள் மற்றும் கொழும்பு நகரின் நகர நிர்மாணத்தினால், அதிகரித்துள்ள நிலப்பரப்பு போன்றவை தற்போது மேற்கொள்ளப்படும் நில அளவீடு மூலம் சரியான அளவை உறுதிப்படுத்தலாம் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Read more...

இராணுவத்தினரின் சுயகௌரவத்தை பாதுகாக்கும் வகையிலான ஜெனீவாத் தீர்மானமொன்றை கொண்டுவருவோம் - ஜி.எல். பீரிஸ்

இவ்வருட இறுதிக்குள் ஸ்தாபிக்கப்பட்டவுள்ள மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்தின் ஊடாக, புதிய ஜெனிவாத் தீர்மானமொன்றைக் கொண்டுவர நாம் நடவடிக்கை எடுத்துள்ளோம் என்று கொழும்பில், இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது ஜி.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.

ஜெனிவா, மனித உரிமைகள் பேரவையின் 40 வது அமர்வு இம்மாதம் 25 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. இதன்போது இலங்கை தொடர்பான விடயங்களை கலந்துரையாடுவதற்கு இதற்கு இலங்கை அரசாங்கமும் தயார் நிலையில் இருப்பதாகத் தெரியவந்துள்ளது. இலங்கை அரசாங்கத்தின் இந்தச் செயற்பாடானது தேச துரோகமானது என்பதே எமது கருத்தாகும்.

கடந்த 2015, 2017 ஆம் ஆண்டுகளில் ஐக்கிய தேசியக் கட்சி, எந்தவொரு பின்விளையும் யோசிக்காமல்தான் சர்வதேசத்துக்கு வாக்குறுதிகளை வழங்கியிருந்தது. எனினும் அவற்றை நிறைவேற்றிக்கொள்ள இன்னும் அரசாங்கத்தால் முடியாதுள்ளது. இவ்வாறு அரசாங்கத்தினால் ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட இந்தப் பிரச்சினையால் இராணுவத்துக்குத் தான் தற்போது ஆபத்து ஏற்பட்டுள்ளது.

அது மாத்திரமன்றி இராணுவத்துக்கு எதிராக வழக்குகளைத் தொடுக்கவும் அரசாங்கம் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த செயற்பாடுகளில் பின்னணியில் புலம் பெயர் தமிழ் அமைப்புக்கள் செயல்படுகின்றதா? எனும் சந்தேகமும் எமக்கு ஏற்பட்டுள்ளது. மேலும், உண்மையை கண்டறியும் ஆணைக்குழுவொன்றை ஸ்தாபிக்கவும் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இவ்வாறான செயற்பாடுகள் எல்லாம் எமது நாட்டுக்குப் பொருத்தம் இல்லாத ஒன்றாகும். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடந்த வருட ஜெனிவாக் கூட்டத்தொடரின்போது சர்வதேச விசாரணைக்கு ஒருபோதும் அனுமதியளிக்கப் போவதில்லை என்றுத் தெரிவித்திருந்தார்.

இது இந்த அரசாங்கத்தில் நிறைவேற்றப்பட்ட ஜெனிவா பிரேரணையை விட முற்றிலும் மாறப்பட்டதாகும். தேசியம் மற்றும் இராணுவத்தினரின் சுயகௌரவம் மற்றும் உரிமைகளை பாதுகாக்கும் வகையிலேயே இந்த புதிய பிரேரணை அமையும். இதன் ஊடாக நாம் நல்லிணக்கத்துக்கு எதிராக செயற்படுகிறோம் என்று அர்த்தமில்லை என்று ஜி.எல். பீரிஸ் கூறினார்.

Read more...

வெளிநாட்டவர்களின் வருகையில் அதிகரிப்பு

நாட்டில் அண்மைக்காலத்தில் ஏற்பட்ட குழப்ப நிலைமை காரணமாக சடுதியாக குறைவடைந்திருந்த வெளிநாட்டவர்களின் வருகை, மீண்டும் அதிகரித்துள்ளது.

ஜனவரி மாதம் இலங்கை வந்த வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. அதன்படி 2018ம் ஆண்டு ஜனவரி மாதம் சுமார் இரண்டு இலட்சத்து 40 ஆயிரம் சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வந்துள்ளார்கள். இம்முறைவந்தவர்களின் எண்ணிக்கை இரண்டு இலட்சத்து 44 ஆயிரமாகும். இது இரண்டுசதவீதத்திற்கு மேலான வளர்ச்சி என்று அவதானிக்கப்பட்டுள்ளது. இவர்களில் இந்தியாவிலிருந்து கூடுதலான வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளமை கண்டறிப்பட்டுள்ளது.


Read more...

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை ரத்து செய்ய வேண்டிய நேரம் இது- அமைச்சர் ரவி

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை ரத்து செய்வோம் என பொதுமக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்று மின்வலு, எரிசக்தி மற்றும் தொழில்துறை அபிவிருத்தி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

ஊடகவியாளர்களை சந்தித்து கருத்துரைத்த அவர், நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை ரத்து செய்ய வேண்டிய நேரம் இது எனக் கூறினார். அத்துடன் நாட்டின் அரசியலில் தீவிர மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும் எனவும் கருத்து வெளியிட்டு உள்ளார்.

இதேவேளை, 71 ஆண்டுகால சுதந்திரத்தை நினைவூட்டுவதால், உண்மையான பொருளாதார சுதந்திரத்தை நாடு அனுபவித்து வருகிறதா ? என அமைச்சர் இதன்போது கேள்வி எழுப்பினார்.


Read more...

கொக்கேன் பயன்படுத்தும் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 24 பேரின் தகவல் வெளியாகியது

இராஜாங்க அமைச்சர் ரஞ்ஜன் ராமநாயக்க பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். கொக்கேன் உட்பட போதைப் பொருள் பயன்படுத்தும் அமைச்சர்கள்
மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாட்டில் உள்ளார்களா என்ற கருத்து பெரும் சர்ச்சையை உருவாக்கி உள்ளது. மாதிவெலயில் உள்ள அவரது இல்லத்தில் ஊடகவியலாளர்களை சந்தித்தபோது அவர் இந்த விடயம் தொடர்பில் தெரிவித்துள்ளார்.

கொக்கேன் உட்பட போதைப் பொருள் பயன்படுத்தும் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 24 பேரின் தகவல்களை தான் சபாநாயகருக்கும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கும் ஒப்படைத்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் ரஞ்ஜன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில், கபினட் அமைச்சர்கள், இராஜாங்க, பிரதி அமைச்சர்கள் உள்ளிட்ட மாகாண மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள் ஆகியோர் கொக்கேன் போன்ற போதைப் பொருட்களைப் பயன்படுத்துகின்றனர். இவர்கள் மாத்திரமின்றி இவர்களோடு பணி புரியும் உறுப்பினர்களும் உயர் பதவிகளிலுள்ளவர்களும் கூட இந்த போதைப் பொருளைப் பயன்படுத்துகின்றனர்.

இவர்களின் விபரங்களை இப்போதைக்கு வெளிப்படுத்தவில்லை. காரணம் விசாரணைகளுக்கு தடையாக அமையும் என்பதனால் அவர்களது பெயர்களை வெளியிடவில்லை என்று இராஜாங்க அமைச்சர் ரஞ்ஜன் ராமநாயக்க பரபரப்பு கருத்தை வெளியிட்டுள்ளார்.

Read more...

சுகாதார அமைச்சருக்கு வந்த தலையிடி

சுகாதார அமைச்சை உடனடியாக ஜனாதிபதி தனது பொறுப்பின் கீழ் எடுக்க வேண்டும் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் டொக்டர் சமந்த ஆனந்த வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறினார். அண்மையில் நாடாளுமன்றத்தில் பால்மா தொடர்ப்பில் கடும் விவாதம் நடைபெற்று இருந்தது. இந்த நிலையில் இறக்குமதி செய்யப்படும் பால்மாவைப் பரிசோதனை செய்வதற்கு எமது நாட்டில் போதுமான உபகரணங்கள் இல்லையென்றிருக்கையில், சுகாதார அமைச்சர் ராஜித்த சேனாரத்ன எப்படி நாடாளுமன்றத்தில் பகிரங்கமாக இறக்குமதி செய்யப்படும் பால்மாவுக்கு சான்றிதழ் வழங்குவார் என்று அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் டொக்டர் சமந்த ஆனந்த கேள்வி எழுப்பினார்.

சுகாதார அமைச்சு என்பது விளையாட்டுக்குரிய ஒன்று அல்ல. சுகாதார அமைச்சு மிகவும் பொறுப்பு வாய்ந்த ஒன்றாகும். உயிர்களை காப்பாற்றும் அமைச்சாக சுகாதார அமைச்ச்சு இருக்கவேண்டுமே தவிர, நோயாளர்களை உருவாக்குகின்ற அமைச்சாக அது இருக்கக் கூடாது எனவும் அவர் இதன்போது குறிப்பிட்டார்.


Read more...

வர்த்தகர்கள் காணாமல் போனமை தொடர்பில் விஷேட விசாரணை பிரிவின் பொலிஸ் பரிசோதகர் கைது

இரண்டு வர்த்தகர்கள் காணாமல் போன சம்பவம் தொடர்பில் தென் மாகாண விஷேட விசாரணை பிரிவின் பொலிஸ் பரிசோதகர் கபில நிசாந்த, குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

காலி - ரத்கமயில் வர்த்தகர்கள் இருவரும் காணாமல் போய் இன்றுடன் 27 நாட்கள் ஆகின்றன. 31 வயதுடைய ரசேன் சிந்தக என்ற ரத்கம - உதாகம பிரதேசத்தை சேர்ந்த ஒருவரும், 33 வயதுடைய மஞ்சுள அசேல ஆகியோர் , கடந்த 23 ஆம் திகதி வான் ஒன்றில் வந்த குழு ஒன்றினால் கடத்தப்பட்டதாக முறைப்பாடு பதிவாகியுள்ளது. குறித்த இரண்டு போரையும் பொலிஸ் உடையில் வந்த சிலர் கடத்திச் சென்றதாக அவர்களின் உறவினர்கள் தெரிவித்திருந்தனர்.

உறவினர்களின் வாக்கு மூலத்தின் பிரகாரம், சம்பவம் தொடர்பில் தென் மாகாண விஷேட விசாரணை பிரிவின் பொலிஸ் பரிசோதகர் கபில நிசாந்த கைது செய்யப்பட்டுள்ளார்.

Read more...

Monday, February 18, 2019

பிரபாகரன் ஒரு மோடன், தமிழ் மக்கள் சமஸ்டி கோரவில்லை. ஆவா குழு உறுப்பினர் அருண்.

„ஆவா" வந்துவிட்டோம்! இது சில காலத்திற்கு முன்னர் இலங்கையை அல்லோலகல்லோலப் படுத்திய சொல். யாழ் மாவட்டம் எங்கும் வாரம் ஒரு முறையாவது எதேனும் ஒரு வன்முறை இடம்பெற்றுக்கொண்டிருந்தது. அவ் வன்முறைகளுக்கு ஆவா பொறுப்பேற்றுள்ளதாக ஊடகங்கள் செய்திகளையும் வெளியிட்டிருந்தது.

ஆவா குழு தொடர்பில் ஊடகங்கள் பல விதமான அர்த்தம் கற்பித்தல்களுடன் செய்திகளை எழுதிக்கொண்டிருந்தனர். இலங்கை இராணுவத்தினரால் உருவாக்கப்பட்டதுதான் இந்த ஆவா என ஒரு தரப்பினர் தெரிவிக்க மறுபுறத்தில்; புலிகள் வந்துவிட்டார்கள் என்றனர்.

இந்நிலையில் சிங்கள ஊடகங்களில் ஆவாவின் உறுப்பினர் என தன்னை அறிமுகம் செய்துகொண்டு தற்போதைய பேசுபொருளாக மாறியுள்ளார் அருளானந்தம் அருண். அருண் என்பது தனது இயற்பெயர் எனக் குறிப்பிடும் குறித்த நபர், தான் கௌதம புத்தரின் போதனை நூலாகிய „தம்மபதம்' என்ற நூலின் தமிழாக்கத்தை வாசித்துக்கொண்டிருந்தபோது, தனக்கோர் புத்திரன் கிடைக்கப்பெற்றதாகவும் அவருக்கு சித்தார்த் மைத்ரேயன் என புத்தரின் நாமத்தை சூடியுள்ளதுடன் தன்னையும் அருண் சித்தார்த்த மைத்ரேயன் என அழைக்கப்படுவதை விரும்புவதாகவும் கூறுகின்றார்.

அவர் அண்மையில் விஷ்வ கர்ம என்ற சமூகவலையமைப்பில் பிரபல்யமான ஊடகம் , அததெரணவில் சத்துரவுடன் , ஹிரு ரிவி யில் எல்லைகளை தாண்டி என்கின்ற நிகழ்சிகளில் கலந்து கொண்டு பிரபாகரன் ஒரு மோடன் என்றும் தமிழ் மக்கள் ஒருபோதும் அரசியல் தீர்வொன்றை வேண்டவில்லை என்றும் அரசியல் தீர்வு என்பது அரசியல்வாதிகள் தமது இருப்புக்காக பயன்படுத்திக்கொள்ளும் ஆயுதம் என்றும் தெரிவித்துள்ளார்.


ஹிருரிவி யில் எல்லைகளைத் தாண்டி எனும் விவாத நிகழ்சியில் வட மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் சிவாஜிலிங்கத்துடன் கலந்து கொண்டு பேசிய அருண் சித்தார்த் மைத்ரேயன் பேசுகையில் :



2009 இற்கு பின்னர் எல்ரிரிஈ , ஈபிடிபி , புளொட் , ஈபிஆர்எல்எப் , ரெலோ போன்ற திட்டமிட்டு செயற்படும் கிறிமினல் குழுக்கள் எதுவும் யாழ்பாணத்தில் இல்லையென்றாலும் மட்டக்களப்பில் புலிகள் அமைப்பிலிருந்து பிரிந்து சென்ற புலிகளின் முன்னாள் தளபதி கருணா அம்மானிடம் ஆயுதங்கள் உண்டெனவும் வன்செயல்களின் பின்னணியில் அவரே உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.


உண்மையான போராட்டம் என்பது வன்செயல்கள் அற்றதாக இருக்கவேண்டும் என்றும் அங்கு வன்முறைகள் மேற்கொள்ளப்பட்டால் மக்கள் புரட்சியாளர்களிடமிருந்து விலத்தி செல்வார்கள் என்ற சேகுவராவின் வாக்கியங்களை நினைவு படுத்திய அருண் இலங்கையில் இடம்பெற்றது ஒரு போராட்டமே அல்ல என அர்த்தப்படுத்தினார். பிரபாகரன் மாத்திரமல்ல ஜேவிபியின் தலைவர் ரோகண விஜயவீரவும் வன்செயலையே கையாண்டதாகவும் அவர் குறிப்பிடத்தயங்கவில்லை.

சிவாஜிலிங்கம் தமிழ் மக்களின் பிரதிநிதியாக சமஸ்டி ஆட்சி வேண்டும் என்கின்றார். தமிழ் பிரஜையான உங்களுக்கு சமஸ்டி வேண்டுமா என ஊடகவியலாளர்கள் கேட்டபோது, „எவரும் உங்களுக்கு சுதந்திரத்தையோ, சமத்துவத்தையோ, நீதியையோ அன்றில் எதையோ வழங்க முடியாது, அதற்கான வழியை நீங்களே தேடிக்கொள்ளவேண்டும்' என்ற மல்கம் அவர்களின் வார்த்தையை பதிலாக வழங்கி தனக்கு சமஸ்டி வேண்டியது இல்லை என்று கூறியதுடன் தனக்கு வேண்டியது எல்லாம் தனது தாய்நாட்டுக்கு தலைவணங்குவதே என்றார். அதன்போது குறுக்கிட்ட ஊடவியலாளர்கள் இந்த குறிக்கோளுடன்தானா உங்களது „சமூக நீதிக்கான இளைஞர் அமைப்பு' என்ற அமைப்பை உருவாக்கியுள்ளீர்கள் என்றபோது, ஆம் என பதிலளித்தார்.

மேலும் சமஸ்டி வேண்டுபவர்களை குருடர்களுக்கு ஒப்பிட்ட அவர் குட்டிக்கதை ஒன்றை கூறினார். அதாவது குருடன் ஒருவர் வெளிச்சம் என்ற ஒன்று உலகில் இல்லை என்று வாதிட்டபோது, அவரை ஜீவகர் என்ற வைத்தியரிடம் அனுப்பி புத்த பெருமான அவருக்கு பார்வையை கொடுத்தாராம். அதன் பின்னர் இப்போது விவாதிக்கலாமா என கேட்டபோது எதை விவாதிப்பது வெளிச்சம் இருக்கின்றது தானே என்றாராம் குருடர். அதாவது குருடனுக்கு வெளிச்சம் என்பது தெரியாதது போலவே சமஸ்டி கேட்பவர்களும் என்றார் அருண்.

எனவே இவர்கள் குருடர்களாயின் தமிழ் சமூகத்தில் ஜீவகர்கள் இல்லையா என்றபோது, இருக்கின்றார்கள் ஆனால் தமிழ் அரசியல்வாதிகள் கண்ணை திறக்க விரும்புகின்றார்கள் இல்லை என்றார்.

நாட்டில் இடம்பெற்றதாக கூறப்படுகின்ற யுத்தக்குற்றங்கள் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்வதற்கு சர்வதேச நீதிபதிகள் வேண்டும் என்று சிவாஜிலிங்கம் கோரியபோது அவ்வேண்டுதலை மறுத்துரைத்த அருண் இலங்கையில் சர்வதேச நீதிபதிகள் முன்னிலையில் விசாரணைகள் இடம்பெறுவதாயின் அமெரிக்காவினால் துருக்கியில், இராக்கில், எகிப்தில் வட அமெரிக்காவில் மேற்கொள்ளப்பட்ட குற்றங்கள் தொடர்பில் விசாரணை செய்துவிட்டு இங்கு வரலாம் என்று கூறினார்.

மேலும் யாழ்பாணத்தில் மிக அவசரமான பிரச்சினை யாதெனில் யாழ் மக்களுக்கு சிங்கள மொழி விளங்காமையாகும் எனவே அதற்கு ஒரு தீர்வு வேண்டும், அதற்கு தீர்வை பெற்றுக்கொள்ளாது நிரந்தர தீர்வு வேண்டுவது முழு ஏமாற்று வித்தையாகும் என்றும் கூறினார். அத்துடன் தமிழ் மக்களின் அவசர பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு வேண்டும் என கேட்கும் எமது அரசியல்வாதிகள் தங்களுக்கு கிடைக்கு சலுகைகளுக்கு முண்டியடிக்கின்றனர். அதற்கு உதாரணமாக இறுதி நேரத்தில்கூட விக்கினேஸ்வரன் தீர்வை அற்ற வாகனத்திற்காக அரசுடன் முரண்பட்ட விடயத்தை எடுத்துரைத்தார். தங்களுடைய சலுகைகளை பெற்றுக்கொள்ளும் தமிழ் அரசியல்வாதிகள் மக்களுக்கு வருகின்ற சலுகைகளை திருப்பி அனுப்புகின்றனர் என்ற குற்றச்சாட்டையும் முன்வைத்தார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் செல்வாக்கு தமிழ் மக்களிடையே குறைந்து செல்வதையும் அவர்களால் தொடர்ந்து தமிழ் மக்களை ஏமாற்ற முடியாது என்ற நிலை உருவாகியுள்ளதையும் ஏற்றுக்கொள்கின்றீர்களா என சிவாஜிலிங்கத்திடம் கேட்டபோது, சில கருத்துக்களை ஏற்றுக்கொள்ள முடியாது என அவர் பதலளித்தார்.

அப்பதில் தொடர்பில் கருத்துரைத்த அருண் பிரபாகரன் தமிழ் மக்களின் கருத்து சுதந்திரத்தை மறுத்து ஏகபிரதிநிதியாக செயற்பட்டதாகவும் புலிகளின் பிரதிநிதிகளான தமிழ் தேசியக் கூட்டமைப்பு இன்று எவ்வாறு அப்படி பேசமுடியும் எனக்கேட்டார்.

அததெரணவில் தன்னை ஆவா குழு உறுப்பினர் என்று அறிமுகம் செய்துகொண்ட அருண் சித்தார்த் மைத்திரேயன் ஹிரு ரிவியில் பேசும்போது, ஊடக செய்திகளின் பிரகாரம் ஆவா என்கின்ற அமைப்பு புலம்பெயர் புலிகளினால் நிர்வகிக்கப்படுகின்ற அமைப்பாகவே நான் கருதுகின்றேன் என்றார்.

Read more...

புலிகளும் போர்க்குற்றம் புரிந்தார்கள் என்பதை ஏற்றுக்- கொண்டால்தான் நியாயத்தை பெற்றுக்கொள்ள முடியும். சுமந்திரன்.

எங்கள் பக்கத்திலிருந்து இழைக்கப்பட்ட அநீதி குற்றங்களை ஏற்றுக்கொண்டால் மாத்திரமே இந்த பொறிமுறையில் வெற்றியடையலாம் எனக் கூறியிருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடைாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் போரின்போது ஒரு தரப்பினர் மட்டும்தான் குற்றமிழைத்தார்கள் என குற்றஞ்சாட்ட முடியாது என்றும் கூறியிருக்கிறார்.

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் இளைஞர் முன்னணி மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு மேலும் குறிப்பிட்ட அவர்,

“தற்போது இந்த உண்மையை ஏற்றுக்கொள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு என்ன உணர்வு ஏற்பட்டதோ தெரியவில்லை. அவருக்கு குற்ற உணர்வு ஏற்பட்டதோ? சர்வதேச அழுத்தம் அதிகரித்துள்ளதால் உண்மையை ஒத்துக்கொள்ளவேண்டிய நிலை ஏற்பட்டதோ தெரியவில்லை.

போர்க்குற்றங்கள் இழைக்காமல் உலகத்தில் எந்த போரும் நடப்பதில்லை. சுத்தமான போர் என்று எங்கும் எப்போதும் சரித்திரத்தில் நடைபெறவில்லை. அது மட்டுமல்ல போரின் போது ஒரு தரப்பினர் மட்டும்தான் குற்றம் இழைத்தார்கள் என்றும் எங்கும் நடக்கவில்லை.

தென்னாபிரிக்காவைபோல உண்மைக்கும் நல்லிணக்கத்திற்குமான ஆணைக்குழுவை நிறுவி உண்மையை சொல்லலாம் என்ற யோசனையை பிரதமர் கூறியிருப்பார்.

குற்றமிழைத்தவர்களே முன்வந்து இதை நாங்கள் செய்தோம் என அவர்கள் ஒப்புக்கொள்ள வேண்டும். உண்மையை பகிரங்கப்படுத்த வேண்டும். தென்னாபிரிக்காவில் நடந்தது அதுதான்.

படையினரும் குற்றமிழைத்திருக்கலாம் என மஹிந்த ராஜபக்ச சொன்னதையோ கிளிநொச்சியில் பிரதமர் மறப்போம் மன்னிப்போம் என்று சொன்னதையோ ஆதரிக்க முடியாது.

இதை பிரதமருக்கு தெளிவாக சொல்லிவிட விரும்புகிறோம். உண்மை கண்டறியப்பட வேண்டும். பிரதமருக்கு இதை அழுத்தம் திருத்தமாக சொல்லும் அதேவேளை எங்கள் தரப்பிற்கும் இதை சொல்லிக் கொள்ள வேண்டும்.

எங்கள் பக்கத்திலிருந்து இழைக்கப்பட்ட அநீதி குற்றங்களை ஏற்றுக்கொண்டால் மாத்திரமே இந்த பொறிமுறையில் வெற்றியடையலாம்.” என்றும் சுமந்திரன் கூறினார்.

Read more...

இராணுவமோ, புலிகளோ தவறிழைத்துள்ளதை தேடிக்கொண்டிருப்பது, அர்த்தமற்றது - திலங்க சுமதிபால

இலங்கையில் இடம்பெற்ற யுத்தத்தின் போது, இலங்கை இராணுவமோ, தமிழீழ விடுதலை புலிகளோ தவறிழைத்துள்ளதை தேடிக் கொண்டிருக்காமல், நாட்டின் முன்னேற்றத்தை கருத்தில் கொண்டு செயல்பட வேண்டும் என, நாடாளுமன்ற உறுப்பினர் திலங்க சுமதிபால குறிப்பிட்டுள்ளார்.

யுத்தம் இடம்பெற்று, பல வருடங்கள் உருண்டோடி விட்டன.
இந்த நிலையில் பேசியத்தையே, மீண்டும் மீண்டும் பேசி, இந்த நாட்டில் பிரச்சினைகளை ஏற்படுத்துவது சிறந்ததல்ல என்றும் அவர் கூறினார்.

பிரதமர் ரணில் விக்ரமசிங்க கடந்த வாரம் கிளிநொச்சியில் வைத்து ஆற்றிய உரையில், தமிழீழ விடுதலை புலிகளுடனான யுத்தத்தின் போது இடம்பெற்ற இரு தரப்பு தவறுகளையும் மறந்து மன்னித்து முன்னோக்கி செல்ல வேண்டும் என தெரிவித்திருந்தார்.

பிரதமரின் இந்த கருத்து தொடர்பில், தமிழ் தேசிய கூட்டமைப்பு மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் வேறுபட்ட கருத்துக்களை முன்வைத்துள்ளனர். இந்த நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர் திலங்க சுமதிபால மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை இராணுவமோ அல்லது தமிழீழ விடுதலை புலிகளோ தவறிழைத்தது என்பதைத் தேடிக் கொண்டிருக்காமல், எங்கு தவறு ஏற்பட்டது என்பதைக் கண்டறிந்து அவற்றுக்கான தீர்வினை வழங்குவதற்கு அரசாங்கம் முயற்சிக்க வேண்டும் என, அவர் கூறினார்.

Read more...

காங்கேசன்துறை துறைமுக அபிவிருத்திக்காக, 48 மில்லியன் டொலர்கள் கடனுதவி.

இந்தியாவிடம் இருந்து கடன் அடிப்படையில், காங்கேசன்துறை துறைமுக அபிவிருத்திக்காக 48 மில்லியன் டொலர்களை பெற்றுக் கொள்ளவுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

இந்த திட்டத்துக்காக ஏற்கனவே அமைச்சரவையின் அங்கீகாரம் கிடைத்துள்ளதாக அரசாங்க தரப்பு செய்திகள் தெரிவித்துள்ளன.

இந்த நிலையில், குறித்த அபிவிருத்தி பணிகளை முன்னெடுக்கும் வகையில், இந்திய அதிகாரிகளுடன் முக்கிய பேச்சுவார்த்தைகள் நடத்தப்படவுள்ளதாக, இலங்கையின் அரசாங்க உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை பலாலி விமான நிலைய அபிவிருத்திக்காக இரண்டு பில்லியன் ரூபாய்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனைக் கொண்டு இரண்டாயிரத்து 600 மீற்றர் விமான ஓடுபாதை அபிவிருத்தி செய்யப்படவுள்ளது.

இதற்கான பணிகள் துரிதமாக முன்னெடுக்கப்படும் என, அரசாங்கம் அறிவித்துள்ளது. இதேவேளை சர்வதேச நாணய நிதியத்தின் முக்கிய பிரதிநிதிகள் குழு, இலங்கை அதிகாரிகளை சந்தித்து பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெகு விரைவில் சர்வதேச நாணய நிதியம், இலங்கைக்கான அடுத்த கட்ட கடனை வழங்கும் என, எதிர்பார்க்கப்படுகின்றது.

Read more...

உலக காலநிலை மற்றும் வானிலை, பாரியளவில் பாதிப்படையும் நாடுகளில் இலங்கைக்கு இரண்டாவது இடம்

உலக காலநிலை மற்றும் வானிலை பாரியளவில் பாதிப்படையும் நாடுகளின் பட்டியலில், இலங்கை இரண்டாவது இடத்தை பிடித்துள்ளதாக, சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

காலியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட பின்னர், ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட போதே, சபாநாயகர் இதனை கூறியுள்ளார்.

இத்தகைய பாரிய பாதிப்புக்களை குறைக்க, நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என, சபாநாயகர் இதன்போது கோரிக்கை முன்வைத்தார்.

இலங்கையை ஆட்டிப்படைக்கும் இந்த பேரழிவுகளை தடுத்து நிறுத்துவதற்கு, அனைத்து அரசியல்வாதிகளும் முன்வர வேண்டும்
நமது சுற்றுச்சூழல், காடுகள் மற்றும் வளங்கள் ஆகியவற்றை பாதுகாப்பதற்கு அனைவரும் ஒன்றிணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அத்துடன் இந்த விடயம் தொடர்பில் முன்வைக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கு, அண்மையில், அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக தெரிவித்த சபாநாயகர் கரு ஜெயசூரிய, இது குறித்து அனைவரும் பொறுப்புடன் செயல்பட வேண்டும் என, கோரிக்கை விடுத்தார்.

Read more...

பிரதமர் ரணில், இந்த நாட்டையே காட்டிக்கொடுத்து விட்டார் - மஹிந்த ராஜபக்ச

பிரதமர் ரணில் விக்ரமசிங்க, இலங்கையில் போர்க்குற்றம் இடம்பெற்றதாக கூறி, சர்வதேச சமூகத்திடம், எமது நாட்டைக் காட்டிக் கொடுத்து விட்டதாக, எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ச குற்றம் சுமத்தியுள்ளார்.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் 22 ஆவது பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்துரைத்த போதே, அவர் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

இலங்கையில் இடம்பெற்ற யுத்தத்தின் போது, எந்தச் சந்தர்ப்பத்திலும் போர்க்குற்றம் எதுவும் இடம்பெறவில்லை. ஒரு சில சந்தர்ப்பங்களில் தனிப்பட்ட நபர்களால் சில குற்றங்கள் இடம்பெற்றிருப்பின், அதற்கு நாம் நடவடிக்கை எடுக்க தயாராக உள்ளோம். எனினும் இவற்றை போர்க்குற்றங்களில் உள்ளடக்க முடியாது.

வடக்கில் மூன்று நாள் விஜயம் மேற்கொண்டு, தமிழ் மக்கள் மத்தியில் போர்க்குற்றம் இடம்பெற்றதாக பிரதமர் ரணில் கூறியமை, எமது நாட்டை சர்வதேச சமூகத்திடம் காட்டிக் கொடுத்தமைக்கு நிகரானதாகும்.

கடந்த நான்கு ஆண்டுகள் இருந்த நல்லாட்சியின் தலைமைத்துவத்தை வைத்து கொண்டு, எந்தவித ஊழல் மோசடிகளையும் தடுக்க முடியாத காரணத்தினால் தான், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, எதிர்க் கட்சியுடன் கைகோர்த்து ஐக்கிய தேசிய கட்சிக்கு எதிராக போராடி வருகின்றார்.

இப்போது நாட்டின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எமது பக்கம் வந்து விட்டார் என, எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ச கூறினார்.
இந்த நிகழ்வில் ஜனாதிபதியும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Read more...

அமல், நதீமால் ஆகியோருக்கு எதிராக குற்றப்பத்திரிகை - சட்டத்தரணி ஷாப்திக வெல்லபிலி

அண்மையில் பாதாள உலக குழுவினருடன் கைது செய்யப்பட்ட இலங்கையின் பிரபல பாடகர் அமல் பெரேரா மற்றும் அவரது புதல்வர் நதீமால் பெரேரா ஆகியோருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதற்கு துபாயின் குற்றவியல் திணைக்களம் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருவதாக, சட்டத்தரணி ஷாப்திக வெல்லபிலி தெரிவித்துள்ளார்.

தற்போது டுபாயிலுள்ள சிறைச்சாலையில் இவர்கள் விளக்கமறியிலில் வைக்கப்பட்டுள்ளனர். இந்த இரண்டு சந்தேக நபர்களின் மருத்துவ அறிக்கையை அடிப்படையாக கொண்டு, குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்வதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக, சட்டத்தரணி ஷாப்திக வெல்லபிலி தெரிவித்துள்ளார். தற்போது இவர்களது மருத்துவ அறிக்கை தயாராகி வருவதாகவும் அவர் கூறினார்.

இதேவேளை பிரபல போதைப்பொருள் கடத்தல்காரரான மாகந்துரே மதூஷுடன் நெருங்கிய தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் மேலும் சில பாதாள குழு உறுப்பினர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக, பொலிஸ் விசேட அதிரடிப்படை தெரிவித்துள்ளது.

பொலிஸ் விசேட அதிரடிப்படையின், திட்டமிட்ட குற்றச் செயல்களை தடுக்கும் பிரிவினால் இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்த சம்பவம் குறித்த சந்தேக நபர்களை கைது செய்வதற்காக, 24 மணித்தியாலங்கள் தொடர்ச்சியாக பொலிஸார் கடமைகளில் ஈடுபடவுள்ளதாக, பொலிஸ் விசேட அதிரடிப்படையின் உயர் அதிகாரியொருவர் குறிப்பிட்டார்.

கொழும்பு மாவட்டத்தை மையமாக கொண்டு இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கைகள முன்னெடுக்கப்படவுள்ளன.

மாகந்துரே மதூஷ் உள்ளிட்ட குழுவினர் துபாயில் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்புகளில், பாதாள குழு உறுப்பினர்கள் 6 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read more...

தமிழ் தேசிய கூட்டமைப்பு முன்மொழியும் நல்லிணக்கத்தை, ஒருபோதும் ஏற்க மாட்டோம் - ஜீ.எல்.பீரிஸ்

இலங்கையில் இடம்பெற்ற யுத்தத்திற்கு பின்னர், ஏற்படக்கூடிய நல்லிணக்கத்தை தமிழ் தேசிய கூட்டமைப்பு மற்றும் புலம்பெயர் அமைப்புகளின் தேவைக்கு ஏற்ப முற்னெடுப்பதை, நாம் ஏற்க மாட்டோம் என, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர், பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கருத்துரைத்த போதே, அவர் இதனை கூறியுள்ளார்.

தற்போது 11 இராணுவ வீரர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்ய அரசாங்கம் முயற்சித்து வருகின்றது. இதனை தமிழ் தேசிய கூட்டமைப்பு மற்றும் புலம்பெயர் அமைப்புகளின் விருப்பத்திற்கு அமைய முன்னெடுக்க அரசாங்கம் முற்படுகின்றது.

தற்போது வேறு ஒரு யோசனையை முன்வைப்பதே எமது நோக்கம். குறிப்பாக இந்த நாட்டின் தேவைக்கு ஏற்ப அது முன்வைக்கப்பட வேண்டும் என்பதே எமது அது முக்கியமான நோக்கம்.

யுத்தத்திற்கு பின்னர் ஏற்படக்கூடிய நல்லிணக்கத்தை, தமிழ் தேசிய கூட்டமைப்பு மற்றும் புலம்பெயர் அமைப்புகளின் தேவைக்கு ஏற்ப முற்னெடுப்பதை நாம் ஏற்க போவதில்லை.

மாறாக இலங்கை மக்களை ஒன்றிணைத்தே, இந்த நடவடிக்கைகளை முன்னெடுப்போம் என, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

Read more...

புலிகளின் ஆயுத கிடங்கில் இருந்து, இதுவரை ஆயுதங்கள் எவையும் மீட்கப்படவில்லை.

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு செம்பியன்பற்று மாமுனை கடற்கரையை அண்மித்த பகுதியில், இன்று ஆயுதங்களை மீட்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டன. எனினும் அந்த ஆயுதக் கிடங்கில், ஆயுதங்கள் எவையும் மீட்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாரிய ஆயுத கிடங்கு என்று அடையாளம் காணப்பட்ட குறித்த பகுதி, பளை பொலிஸ் மற்றும் விசேட அதிரடிப் படையினரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டு, இன்று அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டன.

எனினும் ஆயுதங்கள் எவையும் அந்த இடத்தில் மீட்கப்படவில்லை. அத்துடன் குறித்த கிடங்கிலிருந்து தண்ணீர் வெளிவந்த நிலையில், அகழ்வுப் பணிகள் தற்போது கைவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த காலத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் நிலை கொண்டிருந்ததாக கூறப்படும் அந்த பகுதியில், பாரிய ஆயுதக்கிடங்கு உள்ளதாக, கடந்த தினம் பளை பொலிஸாருக்கு இரகசிய தகவல் வழங்கப்பட்டது.

இந்த ரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட தேடுதலின் போது, இந்த ஆயுதக்கிடங்கு அடையாளம் காணப்பட்டது.

இந்த பகுதியில் தற்போது பளை பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப் படையினர், அகழ்வு பணிகளில் ஈடுபட்ட நிலையில், தற்போது அந்த பணிகளை கைவிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read more...

முகாமைத்துவ உதவியாளர்கள் சங்கம், இன்று கவனயீர்ப்பு போராட்டம்

முகாமைத்துவ உதவியாளர்கள் சங்கத்தினர் இன்றைய தினம், கவனயீர்ப்பு போராட்டமொன்றை முன்னெடுத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கவனயீர்ப்பு போராட்டம், மட்டக்களப்பு காந்திபூங்கா முன்பாக முன்னெடுக்கப்பட்டது.

முகாமைத்துவ உதவியாளர்கள், உத்தியோஸ்தர்கள் என 10க்கு மேற்பட்ட தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து, அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் முகமாக இந்த கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன்போது அரசுக்கு எதிரான பல வாசகங்களையும், தமது கோரிக்கைகளையும் உள்ளடக்கிய பதாதைகளை கையில் ஏந்தியவாறு, போராட்டக்காரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அரசினால் தொடர்ச்சியாக கண்டுகொள்ளாமல் விடப்படும் தொழில் உரிமைகளான, தரம் 1,2,3 முகாமைத்துவ உதவியாளர்களுக்கு எம்.என்.4 சம்பளத்திட்டத்தின் அடிப்படையில் சம்பளம் வழங்கப்பட வேண்டும்,

பரீட்சை முறையிலான பதவி உயர்வுகள், முகாமைத்துவ உதவியாளர் சேவையைச் சேர்ந்தவர்களின் கடமைப் பொறுப்புக்களை முகாமைத்துவச் சேவையை சேர்ந்தவர்களுக்கு மாத்திரம் வழங்குதல் தவிர்க்கப்பட வேண்டும்.

முகாமைத்துவ உதவியாளர் சேவை என்பதை முகாமைத்துவ உத்தியோகஸ்தர் சேவை என பெயர் மாற்றம் செய்தல் உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து, இந்த கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Read more...

பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் தொடர்பாக, மட்டக்களப்பில் விசேட கலந்துரையாடல்

பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் தொடர்பான விசேட கலந்துரையாடல் ஒன்று இன்றைய தினம், மட்டக்களப்பில் இடம்பெற்றுள்ளது.

இந்த கலந்துரையாடல் “பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் வேண்டாம். குற்றவியல் சட்டங்களே போதும்” எனும் தொனிப்பொருளில் நடைபெற்றது.

இதில் பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்குப் பதிலாக கொண்டுவரப்படவுள்ள, பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தின் குறைபாடுகள் மற்றும் அதன் பாதகத் தன்மைகள் தொடர்பாக இந்த கலந்துரையாடலில் விரிவாக ஆராயப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கலந்துரையாடல் மட்டக்களப்பு மாநகரசபை மண்டபத்தில், மட்டக்களப்பு அரச சார்பற்ற நிறுவனங்களின் ஒன்றியமான இணையம் அமைப்பின் தலைவர் ச.சிவயோகநாதன் தலைமையில் இடம்பெற்றது.

அத்துடன் கரிதாஸ் எகெட் நிறுவனத்தின் பல்சமய ஒன்றியம் உட்பட மட்டக்களப்பு மாவட்ட பெண்கள் செயற்பாட்டு வலையமைப்பு ஆகியவற்றின் இணை ஏற்பாட்டில் இக்கலந்துரையாடல் நடைபெற்றது.

இந்த கலந்துரையாடலில், மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் தி.சரவணபவன், பிரதி முதல்வர், மாநகரசபை உறுப்பினர்கள், மட்டக்களப்பு மாவட்ட உள்ளூராட்சி மன்றங்களின் தவிசாளர்கள், பிரதித் தவிசாளர்கள், உறுப்பினர்கள், சர்வமதப் பிரதிநிதிகள், சமூக செயற்பாட்டாளர் ருக்கி பெர்னாண்டோ, இணைச் செயற்பாட்டாளர் சட்டத்தரணி சுவஸ்திகா அருளிங்கம் மற்றும் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், பொதுமக்கள் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

இதன்போது உள்ளுராட்சி மன்றங்களில் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் தொடர்பான பிரேரணை கொண்டுவரப்பட்டு இச்சட்டத்தை எதிர்ப்பதற்கான வெளிப்படுத்தல்களை சர்வதேசத்திற்கும், அரசாங்கத்துக்கும் தெரியப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.

அதனைத் தொடர்ந்து இந்த சட்டத்தின் பாதகத் தன்மைகளை உணர்ந்து இதனை நிராகரிப்பதற்கான நடவடிக்கைகளை அனைத்து சபைகளூடாகவும் மேற்கொள்வதற்கு. தமது தரப்பு தயாராகவே இருப்பதாகm மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் தெரிவித்தார்.

Read more...

தேர்தல் ஆணையத்திற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் - பிரேமநாத் டொலவத்த

தேர்தல் ஆணையகத்திற்கு எதிராக, உயர் நீதிமன்றத்தில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல்கள் ஆணைகுழு மாகாண சபைத் தேர்தலை தாமதப்படுத்தும் நோக்கில் பல செயல்பாடுகளை முன்னெடுத்து வருவதாக தெரிவித்தே, இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த மனுவை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் சட்டத்தரணி பிரேமநாத் டொலவத்த தாக்கல் செய்துள்ளார்.

சட்டத்தரணி பிரேமநாத் டொலவத்தயின் சத்தியகவேச கயோ அமைப்பால், இந்த மனு உயர் நீதிமன்றில் இந்த மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Read more...

பெருந்தோட்ட மக்களை பணயம் வைத்து, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பிழைப்பு நடத்துகிறது - வேலுகுமார்

ஐக்கிய தேசிய முன்னணிக்குள் நுழைந்து, பதவிகளைப் பெற்றுவிட வேண்டும் என்பதே, இலங்கை தொழிலாளர் காங்கிரசின் முக்கிய இலக்கு என, ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதித் தலைவர் வேலுகுமார் குற்றம் சுமத்தியுள்ளார்.

நாவலப்பிட்டிய ரிலாகல பகுதியில் நிர்மாணிக்கப்பட்டுள்ள நடேசன்புரம் வீடமைப்புத் திட்டத்தின் திறப்பு விழா, இன்றைய தினம் இடம்பெற்றது. இந்த விழாவில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட போதே, அவர் இதனை தெரிவித்துள்ளார்.

பல்வேறுபட்ட அரசியல் இலாபங்களுக்காக, பெருந்தோட்டத் தொழிலாளர்களை பணயம் வைத்து, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், தொழிற்சங்க பிழைப்பு நடத்தி வருகின்றது.

கைச்சாத்திடப்பட்ட கூட்டு ஒப்பந்தத்தின் ஊடாக, பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு இந்த முறை, முறை விடுதலைப் பெற்றுக்கொடுத்து விட்டது போல், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் மார்தட்டிக் கொள்கின்றது.

அத்துடன் தமது கட்சியே, மலையக மக்களின் ஏகப்பிரதிநிதிகள் என்ற தொனியிலும் அந்த கட்சியின் உறுப்பினர்களால் மலையகத்தில், தீவிரமாக பிரசாரங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

90 காலப்பகுதியிலேயே கூட்டு ஒப்பந்தத்தின் ஊடாக பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை நிர்ணயிக்கும் முறைமை அறிமுகப்படுத்தப்பட்டது.

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ், ஆரம்பம் முதல் நியாயமான விகிதத்தில் சம்பள உயர்வை பெற்றுக்கொடுத்திருக்குமானால் தற்போது பெருந்தோட்ட மக்களின் அடிப்படை சம்பளம் 1000 ரூபாய்க்கும் அதிகமாக வழங்கப்பட்டிருக்கும்.

ஆனால், குறுகிய அரசியல் இலாபங்களுக்காகவும், குறுக்கு வழி அரசியலுக்காகவும் பெருந்தோட்டத் தொழிலாளர்களை பணயம் வைத்து தொழிற்சங்க பிழைப்பு நடத்திய, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், பெருந்தோட்ட மக்கள் எதிர்பார்த்த நியாயமான சம்பளத்தை ஒருபோதும் பெற்றுத்தரவில்லை, என்று ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதித் தலைவர் வேலுகுமார் மேலும் குறிப்பிட்டார்.

Read more...

இந்திய உயர்ஸ்தானிகரை சந்தித்தார் வடக்கு ஆளுநர்

வடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன், இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் தரன்ஜித் சிங் சந்துவை நேற்று சந்தித்தார். கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகரின் உத்தியோகபூர்வ இல்லமான இந்தியா இல்லத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றது.

வட மாகாணத்தில் இந்திய அரசாங்கம் நடைமுறைப்படுத்திவரும் செயற்திட்டங்கள் மற்றும் உதவித்திட்டங்கள் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டத்துடன் எதிர்காலத்தில் வடக்கில் மேற்கொள்ள உள்ள திட்டங்கள் தொடர்பிலும் இதன்போது ஆராயப்பட்டது.

இந்த சந்திப்பில் கருத்து தெரிவித்த இந்திய உயர்ஸ்தானிகர் , தற்போது போலவே எதிர்காலத்திலும் தொடர்ச்சியாக இந்திய அரசாங்கத்தின் உதவித்திட்டங்கள் வட மாகாணத்தில் நடைமுறைப்படுத்தப்படுமென உறுதியளித்தார். இதன்போது, வடக்கு மாகாண ஆளுநர், வட மாகாணத்தில் செயற்திட்டங்களையும் உதவித்திட்டங்களையும் வெற்றிகரமாக நடைமுறைப்படுத்திவரும் இந்திய அரசாங்கத்திற்கு நன்றியினை
தெரிவித்தார்.

இச்சந்திப்பினை நினைவுகூரும் வகையில் வடக்கு ஆளுநர் நாக மரக்கன்றுஒன்றினை உயர்ஸ்தானிகரிடம் கையளித்தமையும் குறிப்பிடத்தக்கது.

Read more...

வாகன இறக்குமதியில் பாரிய வீழ்ச்சி - வாகன இறக்குமதியாளர் சங்கம்

வாகன இறக்குமதி 90 சத வீதத்தால் வீழ்ச்சி அடைந்துள்ளதாக இலங்கை வாகன இறக்குமதியாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

வாகன இறக்குமதியாளர் சங்கத்தின் தலைவர் இந்திக சம்பத் தெரிவிக்கையில், வாகன இறக்குமதி 90 சதவீதம் வீழ்ச்சியடைந்துள்ளதுடன் வாகன விற்பனை 70 சதவீதமாக வீழ்ச்சியடைந்துள்ளதென தெரிவித்துள்ளார்.

வாகன இறக்குமதி தொடர்பில், அரசாங்கத்தால் பல சந்தர்ப்பங்களில் விதிக்கப்பட்ட கட்டுபாடுகளே இந்த வீழ்ச்சிக்கான காரணமென்றும் அவர் சுட்டிக் காட்டினார்.


Read more...

கொழும்பின் போக்குவரத்தில் மாற்றம்

கொழும்பின் கிங்சி வீதி சுற்றுவட்டத்தில் இருந்து கேரி கல்லூரி சுற்றுவட்டம் வரையிலான வீதி போக்குவரத்து ஒருவழிப் போக்குவரத்தாக மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இன்று முதல் வாரநாட்களில் இந்த போக்குவரத்த்து நடைமுறையில் இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஹோட்டர்ன் பிரதேசம், கிங்சி வீதி சுற்றுவட்டத்தில் இருந்து கேரி கல்லூரி சுற்றுவட்டம் வரையிலான பகுதியில் காலை 7 மணி முதல் இரவு 8 மணி வரை ஒருவழிப் போக்குவரத்து அமுலில் இருக்கும் என்று பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது. ஆயுர்வேத சுற்றுவட்டத்தில் இருந்து கொழும்பு நோக்கி பயணிக்கும் வாகனங்களின் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் நோக்கில் இந்த திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

சிங்ஸி சுற்றுவட்டத்தில் இருந்து கேரி கல்லூரி சுற்றுவட்டம் வரை பயணிக்கும் வாகனங்கள் மருதானை, பொரளை வீதிகளின் இரு மருங்கிலும் அல்லது கிங்சி பகுதியினூடாக வோர்ட் பிளேஸின் இரு மருங்கிலும் பயணிக்க முடியும் என பொலிஸார் வாகன சாரதிகளை அறிவுறுத்தியுள்ளனர்.


Read more...

நாடாளுமன்ற குழப்ப நிலை அறிக்கை 20 ல் சமர்ப்பிப்பு - பிரதி சபாநாயகர்

நாடாளுமன்றத்தில் ஏற்பட்ட குழப்ப நிலை தொடர்பான அறிக்கையை எதிர்வரும் புதன் கிழமை சமர்ப்பிக்கவுள்ளதாக, பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் கடந்த நவம்பர் மாதம் 15, 16 ஆம் திகதிகளில் ஏற்பட்ட குழப்ப நிலை தொடர்பில் விசாரணைகளை முன்னெடுப்பதற்கு பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறியின் தலைமையில் குழுவொன்று நியமிக்கப்பட்டிருந்தது. இந்த குழுவின் அறிக்கையே எதிர்வ௫ம் 20 ம் திகதி நாடாளுமன்ற சபையில் சமர்ப்பிக்க உள்ளதாக பிரதி சபாநாயக்கர் தெரிவித்துள்ளார். இந்த விடயம் தொடர்பில் சபாநாயகர் கருஜயசூரியவுடன் கலந்துரையாடியுள்ளதாக அவர் மேலும் கூறியுள்ளார்.

இதனிடையே நாடாளுமன்றத்தில் ஏற்பட்ட குழப்ப நிலை தொடர்பில குற்றப்புலனாய்வு திணைக்களமும் விசாரணைகளை முன்னெடுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Read more...

பிரதமர் மீது ஆவேசம் கொள்கிறார் எதிரிகட்சித் தலைவர்

பிரதமர் ரணில் விக்ரமசிங்க நாட்டைக் காட்டிக் கொடுத்துள்ளார் என எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ குற்றம் சுமத்தியுள்ளார். கொழும்பில் இடம்பெற்ற ஐக்கிய மக்கள் முன்னணியின் 22 ஆவது பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இந்த குற்றச்சட்டை முன்வைத்தார்.

அண்மையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, தமிழர்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட போர்க்குற்றங்களுக்காக மன்னிப்புக் கோரும் வகையில் கிளிநொச்சியில் கருத்துக் வெளியிட்டு இருந்தார். பிரதமராது கருத்தானது இலங்கை அரசாங்கம் தனது போர்க்குற்றங்களை தானே ஒப்புக்கொள்ளும் செயற்பாடாகும். இதன்மூலம் பிரதமர் நாட்டிற்குத் துரோகம் இழைத்துள்ளார்.

பிரதமர் சர்வதேசத்திற்கும் புலம்பெயர் தமிழர்களுக்கும் தனது கருத்துக்களால் போர்க்குற்றம் தொடர்பாக தெளிவாகக் கூறியுள்ளார். ஆகவேபிரதமரது கருத்தானது நாட்டினைக் காட்டிக்கொடுக்கும் செயலுக்கு ஒப்பானது என, எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Read more...

தமிழ்த் தலைமைகள் தொடர்பில் வரதராஜப் பெருமாள் பாரிய குற்றச்சாட்டு

தமிழ் மக்கள் அழிந்து போனமைக்கு முக்கிய காரணம் தமிழ்த் தலைமைகள்தான் என, முன்னாள் வட.கிழக்கு மாகாணத்தின் முதலமைச்சர் வரதராஜப் பெருமாள் கருத்து வெளியிட்டுள்ளார். வவுனியாவில் நிகழ்வொன்றில் கலந்து கொண்டபோது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்த் தலைமைகள் புலிகளின் பெயரைச் சொல்லி தங்களுடைய பதவிகளைக் காப்பாற்றி வருகின்றார்கள். இவர்கள் முன்னாள் போராளிகளின் வாழ்வாதாரத்திற்காக எந்த முயற்சியினையும் ஏற்படுத்தாதவர்கள். சுமார் நான்கு வருடமாக, அபிவிருத்தி தொடர்பில் நாம் பேசப் போவதில்லை. மாறாக நாம் பேசினோமானால் உரிமைகள் கிடைக்காது என்று கூறிவிட்டு தற்போது, உரிமை கிடைத்தது போல ஓடுப்பட்டுத் திரிகின்றார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.

இவர்கள் அமைச்சர்கள் வந்தால் அவர்களோடு புகைப்படம் எடுத்துக் கொள்கிறார்கள். ஆனால் மக்களிடம் தாம் விட்ட பிழைக்கு மன்னிப்பு இவர்கள் கோரவேண்டும். அவ்வாறு அவர்கள் செய்யவில்லை. அரசாங்கத்தோடு சேர்ந்தால் துரோகி, அமைச்சர்களுடன் நின்றால் ஒட்டுக்குழு என்று கூறிவிட்டு அண்மைய நாட்களில் இவர்கள் எங்கே போய் நிற்கின்றார்கள்?

இந்தியாவுடன் எங்களுக்கு வெறுப்பு இந்தியா எங்களுக்கு உதவி செய்யாது என்றால் இந்தியாவின் உதவிகளை முற்றாக மறப்பதுதானே?
என்றும் முன்னாள் முதலமைச்சர் வரதராஜப் பெருமாள் கேள்வி எழுப்பியுள்ளார்.


Read more...

வவுனியாவில் இருந்து சென்ற பேருந்து மின்மாற்றியில் மோதி 4 பேர் பலி

சிலாபம், மஹாவெவ பகுதியில் சம்பவித்த வாகன விபத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளதுடன் பலர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வவுனியாவில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த பேருந்து ஒன்று மின்மாற்றி ஒன்றில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இன்று அதிகாலை சம்பவித்த விபத்தில் சுமார் 19 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.

சாரதியின் கட்டுப்பாட்டையிழந்து மின்மாற்றி ஒன்றில் பேருந்து மோதியதாலேயே இந்த விபத்து சம்பவித்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்த விபத்தில் காயமடைந்த 19 பேரும் மாரவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் இந்த கோரா விபத்து தொடர்பில் பொலீஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


Read more...

பாரிய இலஞ்ச ஊழல் மோசடிகளை விசாரிக்க, மேலுமொரு நீதிமன்றம்

புதுக்கடை நீதிமன்ற மண்டப இலக்கம் 01 இல், பாரிய லஞ்ச ஊழல் மோசடி தொடர்பில் விசாரணை செய்யும் இரண்டாவது விசேட நீதிமன்றத்தை அமைப்பதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக நீதி அமைச்சின் சிரேஷ்ட அதிகாரியொருவர் கூறியுள்ளார்.

1978 ஆம் ஆண்டு 2 ஆம் இலக்க நீதிமன்ற சேவை அமைப்பின் சட்டத்தின் கீழ் நீதி அமைச்சருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின் கீழ் இந்த நீதிமன்றம் அமைக்கும் பணி முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Read more...

கம்பஹா கிராம சக்தி மக்கள் இயக்கத்தின் செயற்குழுக் கூட்டத்தில் ஜனாதிபதி

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று கம்பஹா – ஹேனகம பகுதியில் கிராம சக்தி மக்கள் இயக்கத்தின் செயற்குழுக் கூட்டம் நடைபெறவுள்ளது. தனியார் துறையின் பங்களிப்புடன் தற்போது இந்த திட்டம் நாடளாவிய ரீதியில் வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தப்படுவதன் நோக்கம் மக்களை, தங்கி வாழும் மனநிலையிலிருந்து சுயமாக எழுவதற்கு உதவுவது ஆகும்.

மக்களின் வாழ்வாதார வழிகளை அபிவிருத்தி செய்வதற்காக கிராம சக்தி மக்கள் இயக்கத்தின் மூலம் பல்வேறு திட்டங்கள் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. இந்த நிலையில் இவ்வாறன திட்டங்களின் முன்னேற்றம் மற்றும் எதிர்கால திட்டங்கள் குறித்து இன்று இடம்பெறவுள்ள செயற்குழுக் கூட்டத்தில் விரிவாக கலந்துரையாடப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

2018 ஆம் ஆண்டு கம்பஹா மாவட்டத்திற்கு 39 மில்லியன் ரூபா கிராமசக்தி சங்கங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

சுமார் 2,373,000 மக்கள் தொகையைக் கொண்ட கம்பஹா மாவட்டத்தின் வறுமையின் அளவு 2.0% ஆவதுடன், 1,281,000 மக்கள் தொகையைக் கொண்ட களுத்துறை மாவட்டத்தின் வறுமையின் அளவு 2.9% ஆகும்.

மாகாணத்தின் அரசியல் தரப்பு மற்றும் அரச அதிகாரிகள் ஆகிய இருதரப்பினரின் பங்களிப்பில் இடம்பெறவுள்ள இக்கூட்டத்தில் மேல் மாகாண மக்கள் முகங்கொடுத்துவரும் ஏனைய பிரச்சினைகள் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டு சாத்தியமான துரித தீர்வுகளை வழங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

மேல் மாகாண கிராமசக்தி சங்கங்கள் மற்றும் சில தனியார் நிறுவனங்களுக்கிடையே கிராமசக்தி சங்கங்களிலிருந்து புதிய உற்பத்திகளை கொள்வனவு செய்வது தொடர்பில் சில உடன்படிக்கைகள் இன்று கைச்சாத்திடப்படவுள்ளன.

இதுவரை செயற்படுத்தப்பட்ட சமூக நலன்புரி வேலைத்திட்டங்களுடன் ஒப்பிடுகையில் கிராமசக்தி வேலைத்திட்டத்தில் பல சிறப்பம்சங்களை காணக்கூடியதாக உள்ளது. ஜனசவிய, சமுர்த்தி, திவிநெகும ஆகிய வேலைத்திட்டங்களை நுட்பமாக அவதானித்ததன் பின்னர் கிராமசக்தி வேலைத்திட்டம் உருவாக்கப்பட்டது. அந்த வேலைத்திட்டங்கள் அனைத்தையும் விட முற்போக்கானதும் மக்கள் நலன் சார்ந்த வேலைத்திட்டமாக கிராமசக்தி செயற்பட்டு வருகிறது.

முதன்முறையாக அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகளுக்கு கீழ்ப்படியாமலும் கிராமிய மக்கள் ஒன்றிணைந்து, ஒற்றுமையாக முடிவெடிக்கும் சந்தர்ப்பத்தை கிராமசக்தி மக்கள் செயற்திட்டம் ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. கிராமத்தின் அபிவிருத்தி தொடர்பான அனைத்து முடிவுகளும் கிராமசக்தி சங்கங்களினாலேயே மேற்கொள்ளப்படுகின்றன.

அரச துறை, தனியார் துறை மற்றும் மக்கள் ஆகிய முத்தரப்பையும் ஒன்று சேர்க்கும் மக்கள் இயக்கமாக கிராமசக்தி திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.

இளைஞர்களுக்கும் யுவதிகளுக்கும் முக்கியத்துவமளித்து உருவாக்கப்பட்ட முதலாவது தேசிய ரீதியான பொருளாதார நலன்புரி வேலைத்திட்டமும் கிராமசக்தி மக்கள் செயற்திட்டமேயாகும்.

உற்பத்திகளை மேம்படுத்துதல், கீழ் மட்ட வறுமையிலிருந்து விடுபடுதல் ஆகிய இரண்டு விடயங்களும் ஒரே கண்ணோட்டத்தில் கிராமசக்தி செயற்திட்டத்தின் ஊடாக நிறைவேற்றப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Read more...

Sunday, February 17, 2019

மட்டக்களப்புபில் புதையல் தோண்டிய புலிகளின் பெண் தளபதி உள்ளிட்ட 8 பேர் கைது

மட்டக்களப்புபில் இயந்திரம் மூலம் புதையல் தோண்டிய முன்னாள் விடுதலைப் புலிகளின் மகளீர் அணி தளபதி ஒருவர் உட்பட 8 பேரை பொலீசார் கைது செய்துள்ளனர். கரடியனாறு பொலிஸ் பிரிவிலுள்ள காரைக்காடு காட்டுபகுதியில் குறித்த எண்மரும் நேற்று இரவு கைது செய்யப்பட்டதுடன் இயந்திரம் ஒன்றை மீட்டுள்ளதாக கரடியனாறு பொலிஸார் தெரிவித்தனர்.

பொலிஸ் புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து மேற்கொண்ட விசாரணைகளின் போதே இவ்வர்கள் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்களில் அதே பகுதியைச் சேர்ந்த முன்னாள் விடுதலைப் புலிகளின் மகளீர் அணி தளபதி ஒருவரும், சிங்களவர் ஒருவர் உள்ளிட்ட 5 பேர் ஏறாவூர் பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அத்தோடு இவர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Read more...

மாந்தை உப்புக் கூட்டுஸ்தாபனத்திற்கு சென்றார் பிரதி அமைச்சர் புத்திக பத்திரன

மன்னார் மாந்தை உப்புக்கூட்டுஸ்தாபனத்திற்கு பிரதி அமைச்சர் புத்திக பத்திரன விஜயம் செய்துள்ளார். மன்னார் மாந்தை உப்புக் கூட்டுஸ்தாபனத்திற்கு சென்ற கைத்தொழில் மற்றும் வர்த்தக பிரதி அமைச்சர் புத்திக பத்திரன அங்குள்ள நிலமையினை நேரடியாக அவதானித்திருந்தார்.

மேலும் உப்புக் கூட்டுஸ்தாபனத்தின் முகாமையாளர் உள்ளிட்ட அதிகாரிகளைச் சந்தித்து உரையாடியதோடு, அங்குள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்ய நடவடிக்கைகளை மேற்கொள்ளுவதாக பிரதி அமைச்சர் வாக்குறித்து வழங்கினார். அமைச்சர் றிஸாட் பதியுதீனின் பிரத்தியேக செயலாளர் றிப்கான் பதியுதீனின் வேண்டுகோளுக்கு அமைவாக அமைச்சர் மன்னாருக்கான விஜயத்தினை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Read more...

நாட்டை யாரிடம் நாம் ஒப்படைக்கப்போகிறோம் என்பதை மக்கள் தான் தீர்மானிக்க வேண்டும் - ஜனாதிபதி

கொழும்பில், இன்று இடம்பெற்ற மகஜன எக்சத் பெரமுன கட்சியின் தேசிய மாநாட்டில் கலந்து கொண்டிருந்த ஜனாதிபதி, பலமான கூட்டணியொன்றை அமைத்து தேர்தலில் களமிறங்கினால் மட்டுமே வெற்றிபெற முடியும் என்று தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன தலைமையிலான பொதுஜன ஐக்கிய முன்னணியின் 22 ஆவது தேசிய மாநாடு கொழும்பு புதிய நகர மண்டபத்தில் இன்று முற்பகல் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் உரையாற்றிய ஜனாதிபதி, புதிய அரசாங்கத்தின் புதிய வேலைத்திட்டம் என்ற தினேஷ் குணவர்த்தனவின் யோசனைக்கு தான் முழுமையாக ஆதரவளிப்பதாக தெரிவித்தார். இந்த நாட்டில் சில முக்கியமான தருணங்களின்போது, கட்சி, சின்னங்களையெல்லாம் கடந்துதான் நாம் முக்கியமானத் தீர்மானங்களை எடுத்துள்ளோம் என்றும் கூறினார்.

நாட்டை யாரிடம் நாம் ஒப்படைக்கப்போகிறோம் என்பதை மக்கள் தான் தீர்மானிக்க வேண்டும். நாட்டை அடிப்படைவாதிகளுக்கு வழங்கப்போகிறோமா அல்லது நாட்டை நேசிக்கும், பிரச்சினைகளுக்காக தீர்வை முன்வைக்கும் தரப்புக்கு வழங்கப்போகின்றோமா என்பதை மக்கள் தமது மனச்சாட்சியின்படி முடிவு செய்ய வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேலும் குறிப்பிட்டார்.

எமது அரசியல் தீர்மானங்கள் முழு நாட்டுக்காகவுமே எடுக்கப்பட்டுள்ளன. இந்தநிலையில், பலமான அணியொன்றை தற்போது ஸ்தாபிக்க வேண்டிய நிலைமையில் இருக்கிறோம். அத்தோடு, இந்த வருடம் தேர்தல் நடைபெறும் வருடமாகும். எப்படியும் புதிய அரசாங்கம் ஒன்று ஸ்தாபிக்கப்படும். இதனை நாம் மறந்துவிடவில்லை என்றும் ஜனாதிபதி கூறினார்.

இந்த கூட்டத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, எதிர்க் கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ, முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ ஆகியோர் பிரதம அதிதிகளாக கலந்துகொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read more...

4 இலட்சத்திற்கு அதிகமான போலி நாணயத்தாள்களுடன் ஒருவர் கைது - கஞ்சா தோட்டம் செய்த மற்றுமொருவரும் கைது

4 இலட்சத்திற்கு அதிகமான போலி நாணயத்தாள்களுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஒழுங்கமைக்கப்பட்ட குற்ற ஒழிப்புப் பிரிவுக்கு கிடைத்த இரகசியத் தகவலையடுத்து மேற்கொள்ளப்பட்ட சுற்றி வளைப்பின் போது குறித்த நபர் பியகம, பேரகஸ்ஹந்திய பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

40 வயதான சந்தேகநபர், மல்வானை பிரதேசத்தைச் ​சேர்ந்தவர் என்று தெரிவிக்கப்படுகின்றது. கைது செய்யப்பட்டவரிடம் இருந்து முப்பது எட்டு, 5,000 ரூபா போலி நாணயத்தாள்களும்,1,000 ரூபா போலி நாணயத்தாள்கள் 300 ம் , 500 ரூபா போலி நாணயத்தாள்கள் 165 ம் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சந்தேக நபரை மஹர நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலீசார் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை, கொஸ்லந்த, மஹலந்த அம்பகொலஆர காட்டுப்பகுதியில் பயிரிடப்பட்டிருந்த கஞ்சா தோட்டம் ஒன்றை பொலிஸார் சுற்றி வளைத்து சந்தேக நபர் ஒருவரையும் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Read more...
Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com