Sunday, February 17, 2019

மதூஷுடன் தொட​ர்புகளைப் கொண்டிருந்த பாதாளக் குழு உறுப்பினர்களை கைது செய்ய நடவடிக்கை

டுபாயில் கைதாகிய பிரபல போதைப்பொருள் கடத்தல்காரரான மாகந்துரே மதூஷுடன் தொட​ர்புகளைப் கொண்டிருந்த மேலும் சில பாதாளக் குழு உறுப்பினர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை பொலிஸ் விசேட அதிரடிப் படையின், திட்டமிட்ட குற்றச்செயல்களைத் தடுக்கும் பிரிவு முன்னெடுத்து வருகின்றது.

மாகந்துரே மதூஷ் உள்ளிட்ட குழுவினர் துபாயில் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்புகளில், கஞ்சிப்பானை இம்ரானின் உதவியாளர் உள்ளிட்ட பாதாளக் குழு உறுப்பினர்கள் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து ஹெரோயின், துப்பாக்கிகள் உள்ளிட்ட பொருட்களும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

இதேபோன்று போதைபொருள் கடத்தல்காரர்களை கைது செய்வதற்காக, பொலிஸார் 24 மணித்தியாலங்கள் தொடர்ச்சியாக
கடமைகளில் ஈடுபடவுள்ளதாக பொலிஸ் விசேட அதிரடிப்படையின் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார். இந்த நடவடிக்கையின் முதல் கட்டமாக கொழும்பு மாவட்டத்தை மையமாகக் கொண்டு சுற்றிவளைப்புக்களை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read more...

அதிகார பகிர்வை வடக்கின் அரசியல் தலைவர்களே எதிர்பார்க்கின்றார்கள் - அமைச்சர் ராஜித சேனாரத்ன

வடக்கிலுள்ள மக்கள் அதிகாரப் பகிர்வை எதிர்பார்க்கவில்லை என்று சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். பண்டாரகமயில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். அதிகார பகிர்வை வடக்கின் அரசியல் தலைவர்கள் எதிர்பார்க்கின்றார்களே தவிர வடக்கில் உள்ள தமிழ் மக்கள் அல்லர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

வடக்கில் வாழும் பெரும்பாலான தமிழ் மக்கள் பொருளாதார பிரச்சினைக்கு முகங்கொடுத்து வருகின்றனர். ஆகவே வடக்கு மக்கள் தமது வாழ்க்கையை விருத்தி செய்யும் சிறந்த அபிவிருத்தி திட்டங்களையே எதிர்பார்க்கின்றனர். தங்களது வாழ்க்கையை சிறந்த முறையில் அமைத்துக்கொள்வதற்கான செயற்பாடுகளை அரசு மேற்கொள்ள வேண்டுமென்பதே அவர்களின் எதிர்ப்பார்ப்பாக உள்ளதென அமைச்சர் ராஜித இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

Read more...

இலவச அஞ்சல் கொடுப்பனவை அதிகரிப்பதற்கான அதிவிசேட வர்த்தமானி வெளியாகியது

நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாகாண சபை உறுப்பினர்கள் ஆகியோரின் இலவச அஞ்சல் கொடுப்பனவை அதிகரிப்பதற்கான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல், தபால் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய அலுவல்கள் அமைச்சர் எம்.எச்.ஏ. ஹலீமின் கையொப்பத்துடன் வௌியாகியுள்ளது.

இதன்படி, நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு ஒரு வருடத்துக்கு வழங்கப்பட்டகொடுப்பனவு 1 லட்சத்து 75 ஆயிரம் ரூபாயிலிருந்து, 3 லட்சத்து 50 ஆயிரம் ரூபா வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கான இந்தக் கொடுப்பனவு 1,50,000 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

அதேபோன்று, மாகாண சபை ஊழியர் ஒருவருக்கு வழங்கப்பட்டு வந்த 24 ஆயிரம் ரூபா கொடுப்பனவில்அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. புதிய வர்த்தமானி அறிவித்தலின்படி, மாகாண சபை உறுப்பினர் ஒருவருக்கான இலவச தபால் கொடுப்பனவு 48,000 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read more...

சுமார் 900 KG போதைப்பொருள் கடந்த சில மாதங்களில் மாத்திரம் மீட்பு - பிரதிப் பொலிஸ்மா அதிபர் சஜீவ மெதவத்த

போதைப்பொருளை ஒழிப்பதற்கு முன்னெடுக்கப்படும் செயற்பாடுகளுக்கு, தொழில்நுட்ப வசதிகள் போதிய அளவு இல்லை என, பிரதிப் பொலிஸ்மா அதிபர் சஜீவ மெதவத்த தெரிவித்துள்ளார். பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப்பிரிவிற்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ்மா அதிபர் சஜீவ மெதவத்த ஊடகம் ஒன்றின் நிகழ்ச்சி ஒன்றில் கலந்திருந்தபோது இதனைத் தெரிவித்துள்ளார்.

கொள்கலன்கள் ஊடாகவும் விமானங்கள் ஊடாகவும் போதைப்பொருட்கள் கடத்தப்படுவதாக சுட்டிக்காட்டிய அவர், சுமார் 900 கிலோகிராம் போதைப்பொருள் கடந்த சில மாதங்களில் மாத்திரம் கைப்பற்றப்பட்டதாக அவர் இதன்போது கூறினார். எனினும், அவற்றினை கண்டறிவதற்குத் தேவையான நவீன உபகரணங்களுக்கு தட்டுப்பாடு நிலவுவதாகவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

இலங்கை தபால் சேவை ஊடாக கடத்தல் காரர்கள் போதைப் பொருளை கடத்துவதாக அவர் கூறியுள்ளார்.

போதுமான தொழில்நுட்ப வசதிகளைக் கொண்ட நவீன உபகரணங்கள் கிடைக்கப்பெறும் பட்சத்தில், போதைப்பொருள் கடத்தலை சுற்றிவளைக்கும் நடவடிக்கை மேலும் வெற்றியளிக்கும் எனவும் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப்பிரிவிற்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ்மா அதிபர் சஜீவ மெதவத்த குறிப்பிட்டுள்ளார்.


Read more...

பிரித்தானியாவில் தஞ்சம் கோரும் இலங்கை ஏதிலிகள் குறித்து, விசேட தீர்மானம் - பிரித்தானிய மேன்முறையீட்டு நீதிமன்றம்.

பிரித்தானியாவில் ஏதிலி அந்தஸ்த்து கோரி விண்ணப்பிக்கும் இலங்கையர்கள் தொடர்பாக, பிரித்தானிய மேன்முறையீட்டு நீதிமன்றம் முக்கிய தீர்ப்பொன்றை வழங்கியுள்ளது.

கிழக்கு லண்டனில் உள்ள யோர்க் சட்ட நிறுவனத்தினால் ஏதிலி அந்தஸ்த்து கோரிய விண்ணப்பதாரி ஒருவர் சார்பாக, அந்த நாட்டின் உள்நாட்டு செயலாளருக்கு எதிராக, பிரித்தானிய மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், முக்கிய சட்ட விதிகளை நீதிமன்றம் பரிந்துரை செய்துள்ளதாக, அந்த நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பிரித்தானியாவில் தஞ்சம் கோரும் இலங்கையர்களது விண்ணப்பங்களை பரிசீலனை செய்யும் போது, உள்நாட்டு திணைக்களம் மற்றும் கீழ் நிலை நீதிமன்றங்கள் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்து நீதிமன்றம் விரிவாக எடுத்துரைத்துள்ளது.

இதன்படி இலங்கையிலிருந்து வந்து ஏதிலி அந்தஸ்து கோரும் விண்ணபதாரிகளின் கோரிக்கையை பரிசீலனைக்கு எடுக்கும் போது, அவர்கள் இலங்கையில் எதிர்நோக்கும் உயிராபத்து மற்றும் சித்திரவதைகள் தொடர்பாக எவ்வாறான கோரிக்கையை முன்வைத்தாலும், அவை தொடர்பாக அவர்கள், எவ்வாறு பார்க்கப்படுகின்றார்கள்? என்பதே கருத்தில் கொள்ளப்பட வேண்டும் என, பிரித்தானிய மேன்முறையீட்டு நீதிமன்றம் எடுத்துரைத்துள்ளது.

அத்துடன், அவர்களால் சமர்ப்பிக்கப்படும் சான்றுகளை பரிசீலனை செய்யும் போது கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் பற்றியும் நீதிமன்றம் புதிய சட்ட விதிகளை விரிவாக எடுத்துரைத்துள்ளது.

அதன்படி சமர்ப்பிக்கப்படும் சான்றுகளை நிராகரிப்பதாயின், அதற்கான போதிய காரணங்களை எடுத்துக்கூற வேண்டுமெனவும், தவறும் பட்சத்தில் அந்த முடிவு சட்டத்தின் முன் செல்லுபடியாகாது எனவும் நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.

இதன்மூலம் உள்நாட்டு திணைக்களத்தினால் போதிய காரணம் தரப்படாமல் நிராகரிக்கப்படும் ஏதிலி அந்தஸ்து விண்ணப்பங்களை நீதிமன்றில், மேன்முறையீடு செய்து பரிகாரம் பெற்றுக் கொள்ளக் கூடிய நிலைமை ஏற்பட்டுள்ளது.

பிரித்தானிய மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பின் மூலம், இலங்கை எதிரிகளின் விண்ணப்பத்தில், பாரிய தாக்கம் ஏற்படுத்தப்படும், என எதிர்பார்க்கப்படுகின்றது.

Read more...

ஊழல் மற்றும் மோசடிக்கு எதிரான மக்கள் அமைப்பு விரைவில்.

பாரிய ஊழல்களுக்கு எதிராக, பொது மக்கள் சார்பில் முன்னிலையாவதற்கான அமைப்பொன்றை விரைவில் உருவாக்கவுள்ளதாக, ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. அதன் பொதுச் செயலாளர் மகிந்த அமரவீர இதனை தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு சுதந்திரம் கிடைத்து 71 வருடங்கள் ஆகியுள்ளன. தற்போது நாடு கடன் சுமைக்கு முகங்கொடுத்துள்ளது. இந்த நாட்டில் பிறக்கவுள்ள குழந்தை ஒன்று, நான்கு இலட்சம் ரூபாய் கடன் சுமைக்கு தள்ளப்படும் நிலை தோன்றியுள்ளது.

இவ்வாறு பெறப்படும் மக்களின் பணத்தை மோசடி செய்த குற்றத்திலிருந்து, எவரும் மீள முடியாது. எனவே எதிர்காலத்தில் பாரிய மோசடிகள் மற்றும் ஊழல்களுக்கு எதிராக, பொது மக்கள் சார்பில் முன்னிலையாவதற்கான அமைப்பொன்றை, தமது தரப்பு விரைவில் கட்டியெழுப்பவுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

Read more...

ஜனாதிபதி, உலக வங்கியின் துணைத்தலைவருடன் பேச்சுவார்த்தை.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தெற்காசிய பிராந்தியத்திற்கான உலக வங்கியின் துணைத் தலைவர் ஹார்ட்விக் ஸ்கேஃபருடன் சந்திப்பொன்றை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சந்திப்பு, இந்த ஜனாதிபதி செயலகத்தில் வைத்து, நேற்றைய தினம் இடம்பெற்றதாக, குறிப்பிட்டுள்ளது.

எனினும் இந்த சந்திப்பில் பேசப்பட்ட விடயங்கள் குறித்து, அதிகாரபூர்வமான தகவல்கள் எவையும் இதுவரை வெளியாகவில்லை. பெரும்பாலும் சமகால அரசியல் மற்றும் பொருளாதார விடயங்கள் குறித்து, இந்த சந்திப்பில் இரு தரப்பும் கலந்துரையாடியிருக்கலாம் என எதிர்பார்க்காடுகிறது.

இந்த சந்திப்பில் ஜனாதிபதியின் செயலாளர் உதய செனவிரத்ன, உலக வங்கியின் வதிவிட பிரதிநிதி, ஜனாதிபதியின் பொருளாதார ஆலோசகர் டொக்டர் சரத் ராஜபத்திரன, தேசிய பொருளாதார சபையின் செயலாளர் நாயகம் பேராசிரியர் லலித் சமரகோன் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read more...

ஐக்கிய நாடுகள் அதிகாரியை அச்சுறுத்திய சம்பவம், ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

ஐக்கிய நாடுகளின் உயர் அதிகாரி ஒருவர், யாழ்ப்பாணத்தில் வைத்து, இலங்கை இராணுவத்தினரால் துப்பாக்கி முனையில் அச்சுறுத்தப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியிருந்தன.

இதனை அடுத்து, கொழும்பில் உள்ள ஐக்கிய நாடுகள் அதிகாரிகள் சிலர், சம்பவம் குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கவனத்துக்கு கொண்டு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த வருடம் நவம்பர் மாதம் 27ஆம் திகதி இடம்பெற்ற இந்த சம்பவம் தொடர்பா, ஐக்கிய நாடுகள் சபையின் அதிகாரி ஒருவரை மேற்கோளிட்டு, ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டிருந்தது.

அந்த செய்தியில் இலங்கை இராணுவத்தினர் எனக் கூறிக் கொண்ட இருவர், யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள ஐக்கிய நாடுகள் அதிகாரி ஒருவரின் வதிவிடத்துக்குள் நுழைந்துள்ளதாக பிரசுரிக்கப்பட்டிருந்தது.

இதன்போது ஒருவர் கைத்துப்பாக்கியை வைத்திருந்ததுடன், அவர்கள் ஐக்கிய நாடுகள் சபை அதிகாரி குறித்து விசாரித்ததுடன் அவர்களை அச்சுறுத்தியதாக கூறப்படுகிறது.

எனினும், தமது தரப்பினர் இத்தகைய நடவடிக்கையை மேற்கொள்ளவில்லை என, வடக்கில் உள்ள இராணுவத்தினர் குறிப்பிட்டுள்ளனர்.

தற்போது இந்த சம்பவத்தை ஐக்கிய நாடுகளின் அதிகாரிகள் சிலர், ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் பாதுகாப்பு அமைச்சு, ஜனாதிபதியின் கட்டுப்பாட்டின் கீழ் இருக்கின்ற நிலையில், இச்சம்பவம் தொடர்பாக இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read more...

தோட்ட தொழிலாளர்களின் நலனுக்காக, கடந்த ஆண்டு, 200 கோடி ரூபாய் செலவு.

பெருந்தோட்டப்புறங்களில் பணியாற்றும் ஊழியர்களின் வீடமைப்பு மற்றும் அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்கு பல்வேறு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.

இந்த வேலைத்திட்டங்களுக்காக கடந்த வருடத்தில் மட்டும், 200 கோடி ரூபாய்கள் செலவு செய்யப்பட்டுள்ளதாக, பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியம் குறிப்பிட்டுள்ளது.

இந்த நிதியத்தை, பெருந்தோட்ட கம்பனிகள், பெருந்தோட்ட தொழிற்சங்கங்களின் ஒன்றியம்,மற்றும் அரசாங்கம் ஆகியன இணைந்து அமைத்துள்ளன. இதுவரை குறித்த நிதியம் 2 லட்சத்து 10,000 ஆயிரம் பேரை, பொருளாதார ரீதியில் முன்னேற்றுவதற்கான முன்னெடுப்புக்களை மேற்கொண்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டில் பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியம்,1200 வீடுகளை முழுமையாக நிர்மாணித்துள்ளதுடன், அவற்றில் 1045 வீடுகள், பெருந்தோட்ட மக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

இந்த வீடுகளில், வரவேற்பறை,இரண்டு படுக்கையறைகள்,சமையல் அறை,கழிவறை வசதிகள் அனைத்தும் உள்ளடக்கப்பட்டுள்ளன.

இந்த அனைத்து வேலைத்திட்டங்களுக்கு, 200 கோடி ரூபாய்கள் செலவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்த பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நித்தியம்,மேலும பல அபிவிருத்தி பணிகளை மக்களுக்கு கொண்டு சேர்ப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாக தெரிவித்துள்ளது.

Read more...

ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு, இதுவரை 70 முறைப்பாடுகள்.

ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு, இதுவரையில் 70 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த முறைப்பாடுகள் தொடர்பான விசாரணைகள், எதிர்வரும் 28 ஆம் திகதியில் இருந்து ஆரம்பிக்கப்படவுள்ளதாக, ஜனாதிபதி ஆணைக்குழுவின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

கடந்த 2015 ஜனவரி 15 முதல், 2018 டிசம்பர் 31 வரையான காலத்தில் அரசாங்க நிறுவனங்களில் இடம்பெற்றதாக கூறப்பட்டும் ஊழல்கள் தொடர்பாகவே இந்த விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளது.

இதனிடையே குறித்த ஆணைக்குழு, கடந்த 14 ஆம் திகதி கூடிய போது, ஆணைக்குழுவுக்கு முதலில் கிடைத்த 48 முறைப்பாடுகளில் இரண்டினை விசாரிப்பதற்கு, தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக, ஆணைக்குழுவின் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

Read more...

Saturday, February 16, 2019

முறையான திட்டமின்மையால் விவசாயிகள், பெரும் ஆபத்தில் உள்ளனர் - அகில இலங்கை விவசாய சங்கம்

தற்போது அறுவடை ஆரம்பித்த போதிலும், நெல்லை கொள்வனவு செய்வதறகான எந்தவொரு திட்டத்தையும் அரசாங்கம் மேற்கொள்ளவில்லை என, அனைத்து அகில இலங்கை விவசாய சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.

தம்புள்ளையில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் கலந்து கொண்ட அகில இலங்கை விவசாய சங்கத்தின் அமைப்பாளர் நாமல் கருணாரட்ன இதனை தெரிவித்துள்ளார்.

நெல் கொள்முதல் விலை நிர்ணயிக்கப்பட்டாலும், அதனை கொள்வனவு செய்வதற்கு ஒரு திட்டம் இல்லாமல் உள்ளது. இதன் காரணமாக விவசாயிகள் பெரும் ஆபத்தில் உள்ளனர் என, அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

விவசாயிகள் மற்றும் நுகர்வோரை பாதுகாப்பதற்காக, அரசாங்கம் இந்த விடயத்தில் கட்டாயமாக தலையீடு செய்ய வேண்டும் என, நாமல் கருணாரட்ன மேலும் தெரிவித்தார்.

Read more...

சபாநாயகருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் - சிசிர ஜெயக்கொடி

சபாநாயகர் கரு ஜெயசூரியவுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக, ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிசிர ஜயகொடி தெரிவித்துள்ளார்.

புதிதாக கொண்டுவர தீர்மானிக்கப்பட்டுள்ள அரசியலமைப்பு சபையின் தன்னிச்சையான செயற்பாடுகளை நிவர்த்திக்க, அதன் தலைவரான சபாநாயகர் கரு ஜெயசூரிய இதுவரையிலும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமைக்கு எதிராகவே, இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இது குறித்த தீர்க்கமான தீர்மானத்தை, நாடாளுமன்ற குழு ஒன்று கூடி எடுக்கும் என, நாடாளுமன்ற உறுப்பினர் சிசிர ஜயகொடி குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் இதற்குரிய நடவடிக்கைகள், தற்போது தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், அவர் மேலும் கூறினார்.

Read more...

புலம்பெயர் புலிகள் மக்களின் பணத்தை மக்களுக்காக தருகின்றார்கள் இல்லை. அழுகின்றார் சிவாஜிலிங்கம்.

நடைபெற்று முடிந்த யுத்தத்தின் பெயரால் புலம்பெயர் நாடுகளில் வாழும் தமிழ் மக்கள் கோடிக்கணக்கான பணத்தை புலம்பெயர் புலிகளிடம் வாரி வழங்கியுள்ளதாகவும், அப்பணத்தை இலங்கையிலே பாதிக்கப்பட்ட மக்களுக்காக செலவிட புலிகள் முன்வரவேண்டும் என தாம் பல முறை புலிகளிடம் வேண்டுதல் விடுத்தபோதும் அவர்கள் ஒரு சதத்தைக்கூட மக்களுக்காக வழங்க முன்வருகின்றார்கள் இல்லை என ரெலோ அமைப்பின் முக்கியஸ்தர் எம்கே சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

கடந்தவாரம் சிங்கள தொலைக்காட்சி ஒன்றின் நேரடி விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே சிவாஜிலிங்கம் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தெரிவிக்கையில், யுத்தத்திலே பாதிக்கப்பட்ட மக்கள் பலர் அங்கவீனர்களாகவும் தொழில்வாய்ப்பற்றவர்களாகவும் வறுமையில் வாடுகின்றனர். இந்தமக்களுக்கு நியாயமான உதவிகள் தேவைப்படுகின்றது. எனவே புலிகளின் பணத்தை பதுக்கி வைத்திருக்கும் புலம்பெயர் புலிகளிடம் அப்பணத்தை கொண்டு பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த உதவுமாறு நாம் பலமுறை வேண்டுதல் விடுத்துள்ளோம். ஆனாலும் அவர்கள் அவ்வாறு செய்வதாக இல்லை.

மேலும் கடந்த காலங்களில் 12 தடவைகள் தான் ஜெனிவாவில் இடம்பெறும் ஐ.நா மனித உரிமைகள் மாநாட்டில் தனது சொந்த பணத்தை செலவிட்டு கலந்து கொண்டபோதும், கடந்த இரு தடவைகள் அங்கு செல்லவில்லை என்றும் அதற்கான காரணம் அவர்களிடமிருந்து எவ்வித பண உதவியும் கிடைக்காமையே என்றும் கூறினார்.

Read more...

நாட்டில் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள்

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் இலங்கை வந்துள்ளார்கள். 260 மில்லியன் ரூபா கடனை தவணைக் கொடுப்பனவாக வழங்குவது குறித்து கலந்துரையாடவென சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் இலங்கைக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கை மத்திய வங்கி திறைசேரி, நிதியமைச்சு என்பனவற்றின் அதிகாரிகளுடன் குறித்த அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தவிருக்கிறார்கள்.
உலக வங்கியின் 5ஆவது தவணைக் கொடுப்பனவு கடந்த வருடம் நவம்பர் மாதம் இலங்கைக்கு வழங்கப்பட இருந்தது.

அரசியல் நெருக்கடியினால் இந்த நிதி இலங்கைக்கு கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Read more...

வவுனதீவில் கொலைசெய்யப்பட்ட பொலிஸ் அதிகாரியின் குடும்பத்தினருக்கு அரச துறையில் தொழில்

வவுனதீவில் கடமையிலிருந்த போது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டு கொலைசெய்யப்பட்ட பொலிஸ் அதிகாரி கனேஷ் தினேஷின் மூத்த சகோதரிக்கு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவினால் நூலக உதவியாளர் நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

தெஹியத்தகண்டிய, நுவரகல மகா வித்தியாலய விளையாட்டரங்கில் இடம்பெற்ற மகாவலி காணி உறுதிகள் வழங்கும் நிகழ்வு மற்றும் மகாவலி விவசாய பாராட்டு, பரிசளிப்பு விழாவில் வைத்து இந்த நியமனம் ஜனாதிபதியால் வழங்கி வைக்கப்பட்டது.

இதேவேளை, கடந்த வருடம் நவம்பர் மாதம் 30 ஆம் திகதி, மட்டக்களப்பு வவுனதீவில் கடமையில் இருந்த போது கொலைசெய்யப்பட்ட மற்றுமொரு பொலிஸ் அதிகாரி இந்திக்க பிரசன்னவின் குடும்ப நலன்பேணலுக்காகவும் ஜனாதிபதியினால் இதற்கு முன்னர் நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Read more...

இன்றும் நாளையும் மழை - வளிமண்டலவியல் திணைக்களம்

நாட்டில் இன்றும் மாலை வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் அதிகமாக காணப்படுகின்றது என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

கிழக்கு மாகாணத்திலும் பொலன்னறுவை மாவட்டத்திலும் காலை வேளையிலும் மழை பெய்யக் கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பலத்த மின்னல் தாக்கத்திற்கான சாத்தியம் காணப்படுகின்றது. சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் குருநாகல், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மி.மீ அளவான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

Read more...

கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகம் விடுத்த முக்கிய அறிவிப்பு

கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகம் முக்கிய அறிவிப்பு ஒன்றை வழங்கியுள்ளது. கிழக்கு மாகாண ஆளுநரின் தலைமையில் மாகாணத்துக்குள் நடைபெறும் அரச நிகழ்வுகளில் ஆளுநரை வரவேற்பதற்கு சில கட்டுப்பாடுகளை வித்தித்து குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

ஆளுநரின் தலைமையில் மாகாணத்துக்குள் நடைபெறும் எந்தவொரு நிகழ்விலும் மலர் மாலைகள், பொன்னாடை போர்த்துதல் மற்றும் நினைவுச் சின்னம் வழங்குதல் என்பவற்றை தவிர்ந்து கொள்ளுமாறு மாகாண அரச நிறுவனங்களுக்கு குறித்த அறிவித்தல் விடுக்கப் பட்டுள்ளது.

கிழக்கு மாகாண பிரதம செயலாளர், அமைச்சின் சகல செயலாளர்கள், பிரதிச் செயலாளர் மற்றும் திணைக்களத் தலைவர்கள் ஆகியோருக்கு ஆளுநரின் செயலாளர் அசங்க அபேவர்தனவின் கையொப்பத்துடன் இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

Read more...

இன்னும் இரண்டு வாரங்களில் நாட்டில் கசிப்பு இல்லை - குப்பைகளை எங்கு போடுவது ? - ஜனாதிபதி

இன்னும் இரண்டு வாரங்களில் நாட்டில் கசிப்பு ஒழிப்பு நடவடிக்கையை ஆரம்பிக்கவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். மகாவலி C வலயத்தின் திம்புலாகல – நுவரகல மகா வித்தியாலயத்தில் நிர்மாணிக்கப்பட்ட இரண்டு மாடி கட்டட திறப்பு விழா நிகழ்விலேயே ஜனாதிபதி இவ்விடயங்களைக் குறிப்பிட்டார். நாட்டிலிருந்து கசிப்பை முற்றாக ஒழித்து, கசிப்பு இல்லாத நாட்டை உருவாக்குவதற்கு விசேட திட்டமொன்றை நடைமுறைப்படுத்தவுள்ளதாகவும் ஜனாதிபதி இதன்போது குறிப்பிட்டார்.

கசிப்பையை அருந்துகின்றவர்கள் மனைவியைத் தாக்குகின்றனர். பொருட்களை நிலத்தில் வீசி அவற்றிற்கு சேதம் விளைவிக்கின்றார்கள், இந்த கசிப்பு போதை காரணமாக நோய்வாய்ப்படுகின்றனர். இதனால் பொருளாதாரம் வீழ்ச்சியடைகின்றது. பிச்சைக்காரர்களாக மாறுகின்றனர். இது தவறு என தெரிந்தாலும் தவறான விடயங்களை செய்து தமது வாழ்வை அழித்துக் கொள்கின்றார்கள் என்று ஜனாதிபதி தெரிவித்தார்,

எனவே மதுவற்ற கிராமங்களை உருவாக்கத் வேண்டிய வேலைத் திட்டங்களை தயாரிக்குமாறு, அமைச்சின் செயலாளர் மற்றும் பணிப்பாளர் நாயகத்திடம் தாம் வேண்டுகோள் விடுப்பதாகவும் ஜனாதிபதி இதன்போது வாக்குறுதி வழங்கினார்.

இதேபோன்று நாட்டிலுள்ள அனைத்துப் பிரதேசங்களிலுமுள்ள மக்கள், குப்பைகளை கொட்ட வேண்டாம் என்று கூறிவருகின்ற நிலையில் குப்பைகளை எங்கு போடுவது? என ஜனாதிபதி கேள்வி எழுப்பினார். குறித்த குப்பைகளை கடலில் போட்டோமாக இருந்தால் சர்வதேச ரீதியில் அரசாங்கத்துக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்வார்கள். கிராமப் புறங்களை பொறுத்த வரை குப்பைகளைப் போடுவதற்கு எதிராக எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை மக்கள் முன்னெடுத்து வருகின்றார்கள்.

நம் அன்பான விவசாயிகளிடம் ஒரு வேண்டுகோளை விடுகின்றேன். நாம் உடம்புக்குள் உட்கொள்ளும் உணவு தவிர்ந்த ஏனைய அத்தனையும் குப்பைகளாகவே சேர்கின்றன. தற்பொழுது குப்பை முகாமை செய்வதற்குள்ள நவீன முறைமையை பொருத்தமான ஒர் இடத்தில் அமைப்பதன் மூலமே இந்தக் குப்பை பிரச்சினைக்கு தீர்வை வழங்கலாம். இவ்வாறு செய்வதனால் எந்தவொரு பிரச்சினையும் வரப்போவதில்லை எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

Read more...

பிரதமர் இன்று முல்லைத்தீவுக்கு விஜயம்

இன்றைய தினம் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, முல்லைத்தீவுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வடக்கு அபிவிருத்தி அமைச்சர் என்ற வகையில், அவர் வட மாகாணத்தின் அபிவிருத்தி பணிகள் குறித்த கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றார்.

இதன் ஒரு கட்டமாக பிரதமர் காங்கேசன்துறை துறைமுகம், பலாலி விமான நிலையம் உள்ளிட்ட முக்கிய இடங்களுக்கு சென்று அங்கு இடம்பெறும் அபிவிருத்தி நடவடிக்கைகளை ஆராய்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, வட மாகாணத்திலுள்ள மக்களை சந்தித்து, பல முக்கிய விடயங்கள் குறித்து கலந்துரையாடியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை பிரதமரின் இன்றைய முல்லைதீவிற்கான விஜயம், முக்கிய நகர்வாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Read more...

ஜனாதிபதியின் தீர்மானத்திற்கு, இலங்கை கத்தோலிக்க ஆயர் பேரவை எதிர்ப்பு

இலங்கையில் மரண தண்டனையை நடைமுறைப்படுத்துவது தொடர்பான ஜனாதிபதியின் பிரேரணைக்கு, இலங்கை கத்தோலிக்க ஆயர் பேரவை எதிர்ப்பு வெளியிட்டுள்ளது.

கத்தோலிக்க திருச்சபையின் தற்போதைய நிலைப்பாடு மற்றும் போதனைகளுக்கு அமைய, எந்தவொரு காரணத்திற்காகவும் மரண தண்டனையை ஏற்றுக்கொள்ள முடியாது என, பேரவை வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனினும் போதைப்பொருளை ஒழிப்பதற்கு கட்டாயமாக கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என, இலங்கை கத்தோலிக்க ஆயர் பேரவை வௌியிட்டுள்ள அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

போதைப்பொருளுக்கு அடிமையானவர்களுக்கு புனர்வாழ்வளித்தல் மற்றும் போதைப்பொருள் வர்த்தகத்தை ஒழிப்பதற்கான நியாயமான செயற்பாடொன்றை அனைவரின் ஒத்துழைப்புடனும் முன்னெடுக்க வேண்டும் என, குறித்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த அறிக்கையில், கொழும்பு பேராயர் மல்கம் ரஞ்சித் ஆண்டகை உள்ளிட்ட 14 ஆயர்கள் கையெழுத்திட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read more...

மத தலைவர்களும் அரசியல் தலைவர்களுமே அனைத்திற்கும் முட்டுக்கட்டையாக உள்ளனர் – சம்பிக்க ரணவக்க

இலங்கையில் தற்போதுள்ள பல பிரச்சனைகளுக்கு, ஒரு சில மத தலைவர்களும், அரசியல் தலைவர்களுமே முட்டுக்கட்டையாக உள்ளதாக, அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க குற்றம் சுமத்தியுள்ளார்.

இதன் காரணமாகவே, பிரச்சினைகளுக்கு தீர்வைக் கண்டு நாட்டை மீட்டெடுக்க முடியாதுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கொழும்பு - களனி பகுதியில் நேற்றைய தினம் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு, கருத்துரைத்த போதே அவர் இதனை தெரிவித்தார்.

நாட்டில் இத்தகைய குழப்பங்களை விளைவிப்பவர்கள், நாட்டை பற்றி சற்று சிந்துத்து செயற்பட வேண்டும். இதனை விடுத்து அனைத்து வேலைதிட்டங்களையும் தடுக்க, ஏதேனும் ஒரு வகையில், குழப்பங்களை ஏற்படுத்துவதனால், இந்த நாட்டு மக்களே பிரச்சினைகளை சந்திக்க நேரிடுவதாக, அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க குறிப்பிட்டுள்ளார்.

Read more...

மனித உரிமைகள், ஜனநாயகம் குறித்து அமெரிக்கா அதிகமாக வலியுறுத்தக்கூடாது – ஜயநாத் கொலம்பகே

இலங்கையில் பணியாற்றும் போது, மனித உரிமைகள், ஜனநாயகம் குறித்து அமெரிக்கா அதிகமாக வலியுறுத்தக்கூடாது என்று, கடற்படையின் முன்னாள் தளபதி அட்மிரல் ஜயநாத் கொலம்பகே தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம், கொழும்பு தாஜ் சமுத்ரா விடுதியில் இந்தோ- பசுபிக் பிராந்தியம் தொடர்பான முக்கிய கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.

இந்த கலந்துரையாடலில் கலந்து கொண்ட அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் தெற்கு மத்திய ஆசியாவுக்கான பதில் முதன்மை பிரதி உதவிச் செயலர் தோமஸ் எல் வஜ்டா உள்ளிட்ட முக்கியஸ்தர்களிடம், இலங்கையின் முன்னாள் கடற்படை தளபதி அட்மிரல் ஜயநாத் கொலம்பகே, இந்த வலியுறுத்தலை விடுத்துள்ளார்.

இலங்கை மிகவும் ஆபத்தான நிலைமையில் இருக்கிறது. இது போன்றதொரு நிலைமையை இதற்கு முன்னர் நாங்கள் யாரும் எதிர்கொண்டதில்லை.

எமது பொருளாதார வளர்ச்சி, ஆப்கானிஸ்தானை விட கொஞ்சமே அதிகமாக இருக்கிறது. 30 ஆண்டுகாலப் போரின் போது இருந்ததை விட இப்போதைய நிலை மோசமாக உள்ளது. இலங்கையில் இடம்பெற்ற போரின் போது கூட, பொருளாதாரம் வளர்ச்சி கண்டது.

இலங்கையுடன் அமெரிக்காவின் ஈடுபாடு மிக முக்கியமானது. இலங்கை போன்ற நாடுகளுடன் இணைந்து பணியாற்றும் போது, அமெரிக்கா மனித உரிமைகள், ஜனநாயகத்தை வலியுறுத்துகிறது.

30 ஆண்டுகால யுத்தத்தின் போது ஏற்பட்ட பாரிய இழப்புடன் ஒப்பிடுகையில், இப்போது, மக்களின் தனிமனித பாதுகாப்பு அதிகரித்துள்ளது.

2009 ஆம் ஆண்டு மே மாதத்துக்கு முன்னர், நாங்கள் மாதம் தோறும் குறைந்தது 250 உயிர்களை இழந்தோம். இப்போது எத்தனை பேரை இழக்கிறோம்?

ஜனநாயகம், எமக்கு எதைக் கொடுத்தது? குறுகிய வாதம், பிளவுகள், இனங்களுக்கிடையிலான முரண்பாடுகள், என்பவற்றை தான், ஜனநாயகம் எமக்கு கொடுத்துள்ளது என, கடற்படையின் முன்னாள் தளபதி அட்மிரல் ஜயநாத் கொலம்பகே தெரிவித்தார்.

Read more...

ஏதிலிகள் மீண்டும் தாய்நாட்டிற்கு வர, உதவ வேண்டும் - ஆளுநர் கோரிக்கை.

தமிழ்நாட்டில் உள்ள இலங்கை ஏதிலிகள், மீண்டும் தாய்நாட்டுக்கு வருவதற்கு, ஐக்கிய நாடுகள் சபை உதவியளிக்க வேண்டும் என, வடக்கு மாகாண ஆளுநர், கலாநிதி சுரேன் ராகவன் கோரிக்கை விடுத்துள்ளார்.

இலங்கைக்கான ஐ.நா.வதிவிட ஒருங்கிணைப்பாளர் ஹனா சிங்கர் அம்மையாருடன், நேற்று சந்திப்பை மேற்கொண்ட போதே, அவர் இதனை தெரிவித்தார்.

இந்த சந்திப்பின் போது வட மாகாணத்தில் உள்ள காணிகள், வீடுகள் மற்றும் இந்தியாவில் உள்ள இலங்கை ஏதிலிகளின் நிலைமைகள் தொடர்பாக விரிவாக கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் வழிகாட்டலில், இலங்கை பாதுகாப்புப் படையினரால் ஆக்கிரமிக்கப்பட்ட வடக்கு மாகாணத்தில் உள்ள காணிகளும், பண்ணை நிலங்களும் மக்களிடம் படிப்படியாக கையளிக்கப்படுவதை ஆளுநர் சுரேன் ராகவன், ஐக்கிய நாடுகள் அதிகாரியிடம் சுட்டிக்காட்டினார்.

இந்த செயல்பாட்டின் மூலமாக வட மாகாணத்தில் ஏற்கனவே தேவையாகவுள்ள வீடுகளின் எண்ணிக்கையில், திடீரென அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது என்றும் அவர் கோரினார்.

அத்துடன் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இருந்து இடம்பெயர்ந்து, இந்தியா சென்ற ஏதிலிகளை மீண்டும் தாயகத்திற்கு அழைத்து வருவதற்கு, ஐக்கிய நாடுகள் சபை, உதவ வேண்டும் என ஆளுநர் இதன் போது கேட்டுக்கொண்டுள்ளார்.

வடக்கு மாகாணம் இளனியில் இடம்பெற்ற யுத்தத்தால், மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக இங்கு வசிக்கும் மக்கள் பல்வேறுபட்ட பொருளாதார பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருகின்றனர். அவர்களுக்கு சிறந்த தீர்வு வழங்கப்பட வேண்டும்.

இதேவேளை ஏற்கனவே இங்கு ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்பட்டு வரும் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு தமது, நன்றியை தெரிவித்துக் கொள்வதாக, ஐக்கிய நாடுகள் சபையின் அதிகாரியிடம், வட மாகாண ஆளுநர் சுரேன் ராகவன் குறிப்பிட்டுள்ளார்.

Read more...

புதிய அரசியல் அமைப்பு மாற்றம், தற்போது சாத்தியமற்றது - ரவுப் ஹக்கீம்

இலங்கையில் புதிய அரசியல் அமைப்பு மாற்றம் என்பது, தற்போதைக்கு சாத்தியம் இல்லாத ஒன்றாகவே காணப்படுவதாக, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவரும், அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட போதே, அவர் இதனை தெரிவித்தார். பல கட்சிகளின் பரிந்துரைகள் அடங்கிய அறிக்கையே, மாற்று யோசனைகளுடன் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

இதில் வெவ்வேறு கட்சிகள் இணக்கப்பாட்டை அடைய வேண்டிய பல அம்சங்கள் உள்ளதாகவும், இது தற்போதுள்ள ஆட்சிக் காலத்தில் சாத்தியமில்லாத ஒன்று எனவும், அமைச்சர் ரவுப் ஹக்கீம் தெரிவித்தார்.

Read more...

Friday, February 15, 2019

நாட்டை பிளவுபடுத்தி, முஸ்லிம்களின் உரிமையை பறிக்க முனையும் புதிய அரசியல் யாப்பை ஏற்றுக் கொள்ள முடியாது. சிலோன் தவ்ஹீத் ஜமாஅத் திட்டவட்டம்.

சர்வதேசத்தை திருப்திப்படுத்துவதற்காகவும், தமிழ் மக்களின் வாக்குகளை பெற்றுக் கொள்வதற்காகவும் முஸ்லிம்களின் உரிமையை பறித்து உருவாக்கப்படும் புதிய அரசியல் யாப்பை முஸ்லிம்கள் ஒரு போதும் ஏற்றுக் கொள்ள மாட்டோம் என்று சிலோன் தவ்ஹீத் ஜமாஅத் அறிவித்துள்ளது.

கொழும்பு 10 இல் அமைந்துள்ள அமைப்பின் தலைமையகத்தில் அமைப்பின் தலைவர் ரிஸான் தலைமையில் நடைபெற்ற ஊடக மாநாட்டின்போதே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டது.

புதிய அரசியல் யாப்பின் முன் நகல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதில் ஒருமித்த நாடு தத்துவம், வடகிழக்கு இணைப்பு, மாகாணங்களுக்கான காணி பொலிஸ் அதிகாரங்களை பகிர்ந்தளிப்பது, ஜனாதிபதி முறைமை நீக்கம் மற்றும் அரசியல் சாசன நீதி மன்றம் போன்ற பல விவகாரங்கள் இணைக்கப்பட்டுள்ளன.

இலங்கையின் அரசியல் யாப்பு ஒற்றை ஆட்சியாகவே காணப்படுகிறது. ஒற்றை ஆட்சியென்பதை ஒருமித்த நாடு என்று மாற்றி நாட்டுக்குள் பல பிளவுகளை கொண்டுவர ரனில் தலைமையிலான அரசாங்கம் முனைப்புக் காட்டி வருகிறது.

ஒற்றை ஆட்சியென்பது பிளவு படாத நாட்டை குறிக்கும் வார்த்தையாகும். ஒருமித்த நாடு என்பது பிளவுபட்ட, ஆட்சியமைப்பை குறிக்கும் சொல்லாடல் ஆகும். நாட்டை பிளவுபடுத்தி இன்னுமொரு உள்நாட்டுப் போரை நோக்கி நாட்டை இட்டுச் செல்லும் முயற்சியாகவே இந்த ஒருமித்த நாடு தத்துவம் பார்க்கப்பட வேண்டியுள்ளது. ஆகவே புதிய அரசியல் யாப்பில் ஏளவே இருப்பதைப் பொன்ற ஒற்றை ஆட்சி என்ற வார்தையே மீண்டும் இடம் பெற வேண்டும்.

வடகிழக்கு மாகாணங்கள் இணைக்கபடுவதை ஒரு போதும் முஸ்லிம்கள் ஏற்றுக் கொள்ள மாட்டோம். தற்போது கிழக்கு மாகாணத்தில் சுமார் 39 சதவீத முஸ்லிம்கள் வாழ்கிறார்கள்.

கிழக்கு மாகாணம் வடக்குடன் இணைக்கப்பட்டால் முஸ்லிம்கள் 17 சதவீதமாக குறைந்து விடுவார்கள். இது முஸ்லிம்களுக்கு பேரிழப்பாகும்.

பொலிஸ், காணி அதிகாரங்கள் புதிய அரசியல் யாப்பின் பிரகாரம் மாகாண அரசுகளுக்கு வழங்கப்படவுள்ளது. மாகாணங்களுக்கு குறித்த அதிகாரங்கள் வழங்கப்படுவதென்பது ஒவ்வொரு மாகாணத்திலும் வாழும் சிறுபான்மை மக்களுக்கு பெரும் ஆபத்தாக அமைந்து விடும். இது தொடர்பில் நாடு முழுவதும் விரிவாக தெளிவுரைகளை நாம் முஸ்லிம்களுக்கு மத்தியில் வழங்கி வருகிறோம்.

ஜனாதிபதி முறை மாற்றத்தை முஸ்லிம்கள் ஏற்றுக் கொள்ள முடியாது. சிறுபான்மையாக வாழும் முஸ்லிம்களுக்கு இந்நாட்டில் பல அநியாயங்கள் இழைக்கப்படுகிறது.

அநியாயங்கள் நடைபெறும் போது, அநியாயத்திற்கு துணை நிற்கும் அரசாங்களுக்கு பாடம் புகட்டுவதற்கு உள்ள ஒரே தேர்தலாக ஜனாதிபதி தேர்தல் மாத்திரமே அமைந்திருக்கிறது. ஐந்து வருடங்களுக்கு ஒரு முறையாவது நியாயம் கேட்க்கும் இந்த முறையிருப்பது முஸ்லிம்களுக்கு மிகவும் பாதுகாப்பானதாகும். ஆகவே தான் ஜனாதிபதி முறைமையை மாற்றக் கூடாது என்று முஸ்லிம்கள் வலியுறுத்தி வருகிறோம்.

புதிய அரசியல் யாப்பில் அரசியல் சாசன நீதி மன்றம் என்றொன்றை ஸ்தாபிக்கவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. குறித்த அரசியல் சாசன நீதி மன்ற நீதிபதிகள் தவறிழைத்தால் அவர்களை சர்வதேச நீதி மன்றம் விசாரணைக்கு உட்படுத்தும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது இலங்கையின் இறையாண்மையை கேள்விக்குள்ளாக்கும் பெரும் ஆபத்தான ஒரு முறைமையாகும்.

சர்வதேசத்தின் தலையீட்டை இலங்கை நீதித்துறையில் நேரடியாக நுழைவிக்கும் இந்த செயல்பாட்டை நாம் ஒரு போதும் ஏற்றுக் கொள்ள முடியாது.

இது போல் பல பிரச்சினைகள் புதிய அரசியல் யாப்பில் காணப்படுகிறது. ஆகவே தான் புதிய அரசியல் யாப்பை ஏற்றுக் கொள்ள முடியாது என்று மறுத்து வருகிறோம். முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் இது பற்றிய தெளிவுகளை பெற்றுக் கொள்ள வேண்டும் என்பதுடன், புதிய அரசியல் யாப்பு பாராளுமன்றத்திற்கு கொண்டுவரப்பட்டால் அதற்கு எதிராகவே முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் வாக்களித்து புதிய அரசியல் யாப்பை தோல்வியடையச் செய்ய வேண்டும் என்றும் தவ்ஹீத் ஜமாஅத் கேட்டுக் கொள்கிறது.

புதிய அரசியல் யாப்புக்கு எதிராக நாடு முழுவதும் தெளிவூட்டும் பிரச்சாரங்களை தவ்ஹீத் ஜமாஅத் மேற்கொண்டு வருவதுடன், இதற்கு எதிராக வீதியிலிறங்கி போராடவும் தயங்காது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

சிலோத் தவ்ஹீத் ஜமாஅத்தின் இன்றைய ஊடக சந்திப்பில் அமைப்பின் பொதுச் செயலாளர் அப்துர் ராசிக் அவர்கள் சிங்கள மொழியிலும், அமைப்பின் தலைவர் ரிஸான் மற்றும் துணை செயலாளர் ரஸ்மின் ஆகியோர் தமிழ் மொழியிலும் கருத்துக்களை தெரிவித்தார்கள்.


Read more...

லயோலா கல்லூரியில் உலகத் திரைப்பட விழா! முன் பதிவு அவசியம்!

இவ்வுலகில் பிறக்கும் ஒவ்வொரு உயிருக்கும் தான் பிறந்த மண்ணில் வாழும் உரிமை இருக்கிறது. ஆனாலும் உள்நாட்டுக் கலவரம், வேலை இல்லாத் திண்டாட்டம், பொருளாதார வீழ்ச்சி, காலநிலை மாற்றம், வளங்களைக் கொள்ளை அடிப்பதற்காக தொடுக்கப்படும் போர் உள்ளிட்ட பல காரணங்களால் பாதிக்கப்பட்டு, தங்கள் உறவுகள், உடமைகளை இழந்து வேறு நாடுகளில் அகதிகளாக தஞ்சம் அடைகின்றவர்கள் பல கோடி பேராக இன்று அதிகரித்துள்ளனர்.

UNHCR (United Nations High Commission for Refugees) என்கிற அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் 2018 - ஆம் ஆண்டு வரை சொந்த நாட்டை விட்டு பல்வேறு நாடுகளில் தஞ்சம் அடைந்தவர்களின் எண்ணிக்கை சுமார் ஏழு கோடி பேர் என்றும், இதில் இரண்டரைக் கோடி பேர் அகதிகளாக இருக்கின்றனர் என்றும் கூறுகிறது. இவர்களில் 51% குழந்தைகள் தங்களின் பெற்றோர்களிடமிருந்து பிரிந்து தனியே பயணம் மேற்கொள்வதாகவும் கூறப்படுகிறது.

இவற்றுள் பிற நாடுகளுக்கு வரும் அகதிகளை மற்ற நாடுகள் அணுகும் விதத்தில் பல கொடுமையான துயரங்களை அந்த மக்கள் எதிர் கொள்ள வேண்டியுள்ளது. தங்களின் அடிப்படை வாழ்வாதாரத்தை இழந்து, சொந்த நாட்டையும், உடைமைகளையும் விட்டு வெளியேறும் மக்களை நேசக்கரம் கொண்டு ஏற்றுக் கொள்வது மிகச் சில நாடுகளே. அதிலும் அகதிகளுக்கான அடிப்படை தேவைகளைப் பூர்த்தி செய்து கொடுப்பது என்பது மிக சொற்ப இடங்களில் மட்டுமே நடக்கிறது.

இலங்கையில் இருந்து தமிழகம் வந்து அகதிகளாக இருக்கும் ஈழத்தமிழர்களிடம் வலி சுமந்த பல கதைகள் உள்ளன. ஒரு அகதியின் துயரை அவர்களுடன் உரையாடுவதன் மூலம் எளிதாகப் புரிந்து கொள்ளலாம். ஈழத்தமிழர்கள் மட்டுமின்றி, இன்று மெக்ஸிகோவில் இருந்து அமெரிக்காவிற்கு அடைக்கலம் தேடும் மக்கள் சந்திக்கும் பிரச்சனைகள், ரோஹிங்கிய முஸ்லிம்கள் படும் இன்னல்கள் என அடைக்கலம் தேடும் மக்களின் போராட்டத்தைச் சொல்லிக் கொண்டே போகலாம்.



லயோலா கல்லூரியில் லைவ் (LIVE-Loyola Institute of Vocational Education) துறையால் திரைப்படம் மற்றும் ஊடகம் பயிலும் மாணவர்களுக்கு கடந்த மூன்று ஆண்டுகளாக உலகத் திரைப்பட விழா நடத்தப்பட்டு வருகிறது. ஒவ்வொரு வருடமும் ஒரு தலைப்பில் இந்த விழா நடத்தப்படுகிறது. கடந்த ஆண்டு சுற்றுசூழல் பாதுகாப்பை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட படங்கள் திரையிடப்பட்டன. இந்தியா மட்டுமின்றி உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த திரைப்படங்கள் திரையிடப்பட்டு, அந்த விழா பெரும் வரவேற்பைப் பெற்றது.

அதனைத் இந்த வருடத்திற்கான திரைப்பட விழாவில் 'புலம் பெயர்ந்தோர் மற்றும் அகதிகளின் வாழ்க்கை' என்ற கருவை அடிப்படையாகக் கொண்ட திரைப்படங்கள் இடம்பெறுகின்றன. பிப்ரவரி 19-ஆம் தேதி முதல் 22-ஆம் தேதி வரை நிகழ இருக்கும் லைவ் திரைப்பட விழாவில், உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து 12 முழு நீள திரைப்படங்களும், ஏழு குறும்படங்களும் திரையிடப் பட இருக்கின்றன. இந்தியாவின் மிக முக்கியமான இயக்குனர்களில் ஒருவரான கௌதம் கோஸ் (Goutam Ghose) இயக்கிய ‘ஷங்காச்சில்’ (Shankhachil) என்கிற படம் திரையிடப்படுகிறது. அதோடு அவர் இவ்விழாவில் முக்கிய விருந்தினராகவும் கலந்து கொள்கிறார். அவரோடு இலங்கையிலிருந்து இயக்குனர் சுஜீத், கேரளாவிலிருந்து இயக்குனர் மகேஷ் நாராயணன் மற்றும் ஜெர்மனி நடிகர் வசிலிஸ் கௌலகானியும் (Vassilis Koulakani)மற்றும் பல தமிழ் திரைப்பட நட்சத்திரங்களும் விழாவில் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளனர்.

திரையிடப்படும் சில படங்களின் குறிப்புகள் பின் வருமாறு:



‘ஷங்காச்சில்’ (Shankhachil)

கௌதம் கோஸ் இயக்கிய இந்தப் படத்தின் கதை இந்தியா - பங்களாதேஷ் எல்லைப் பகுதியில் நடைபெறுகிறது. தங்கள் இளம் மகளின் சிகிச்சைக்காக ஒரு இஸ்லாமியக் குடும்பம், இந்துப் பெயர்களை தங்கள் அடையாளமாகக் கொண்டு கொல்கத்தாவிற்கு வருகிறது. அதனால் அவர்கள் சந்திக்கும் இன்னல்களை நெஞ்சை உருக்கும் வகையில் திரையில் எடுத்துக் காட்டியுள்ளார் கௌதம் கோஸ்.


டேக் ஆஃப் Take off : (Malayalam)

ஈராக் நாட்டில் 2014-ம் ஆண்டு ISIS தீவிரவாதிகளால் ஏற்பட்ட கலவரத்தின் போது, அந்த நாட்டின் அரசு ஆஸ்பத்திரிகளில் பணிபுரிந்து வரும் கேரள மாநிலத்தை சேர்ந்த செவிலியர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகிறது. அவர்கள் எப்படி மீட்கப்பட்டனர் என்பதை மிகவும் புல்லரிக்கும் விதமாக திரைப்படம் உருவாகியிருக்கிறார் மகேஷ் நாராயணன்.



டெஸரிட்டோ - Desierto (பிரான்ஸ்)

மெக்ஸிக்கோவிலிருந்து பல இளைஞர்கள் ஒரு குழுவாக ஒரு ஏஜெண்டின் துணையுடன் அமெரிக்காவிற்குள் ஊடுருவ முற்படும்போது ஒரு அமெரிக்கன் தன்னை நாட்டு பாதுகாவலனாக நினைத்துக் கொண்டு அந்த இளைஞர்களை குறி தவறாமல் சுட்டுத் தள்ளுகிறான்.அவனுடைய முரட்டு நாயும் இந்த கோர தாக்குதலில் அவனுக்கு துணை நிற்கிறது. மயிர்க்கூச்செரியும்படியான காட்சி அமைப்புகளை கொண்டுள்ள இந்தப் படம் பிரபல இயக்குநர் ஜோனாஸ் க்யுரான் (Jonas Cuaron) அவர்களால் இயக்கப்பட்டு2015-ம் ஆண்டு வெளியானது.



தி லாஸ்ட் ஹால்ட் (The Last Halt)

இலங்கையிலிருந்து ஒரு இளம்பெண் தன் மேற்படிப்பை தொடரும் முடிவுடன் இங்கிலாந்து செல்கிறாள். தூரத்து உறவினர் ஒருவரின் வீட்டில் தங்கிக் கொண்டு மேற்படிப்பிற்க்கான முயற்சிகளை அவள் எடுக்கும்போது, அந்த உறவினர்கள் ஏதோ சிறு காரணத்திற்காக அவளைத் துரத்தி விட தன்னந் தனியே தவிக்கிறாள்.ஆயினும் இலங்கையில் நோய்வாய்ப்பட்டு சிகிச்சை பெற்று கொண்டிருக்கும் தன் பெற்றோர்களுக்கு தன் உண்மை நிலையை சொல்லாமல், தான் நன்றாய் இருப்பதாய் கூறுகிறாள். ஏதாவது வேலை ஒன்று கிடைத்தால் அதன் மூலம் அந்த நாட்டில் முறைப்படி தங்கிப் படிப்பதற்கு முயற்சி செய்யலாம் என்று பலவாறு முயற்சி எடுக்கிறாள். அவளுடைய எண்ணம் ஈடேறுமா என்பதை மிகவும் உணர்ச்சிப்பூர்வமாக சித்தரிக்கிறது இந்தப் படம்.

இவற்றைத் தவிர இவ்விழாவில் இன்னும் பல சர்வேதேச அளவில் முக்கியத்துவம் வாய்ந்த பல திரைப்படங்களும், குறும்படங்களும் திரையிடப்படுகின்றன. திரைத்துறையைச் சேர்ந்த மாணவ / மாணவிகள் இந்த விழாவின் மூலம் சர்வதேச திரைப்படங்களின் பார்வை, அதன் போக்கு மற்றும் தொழில்நுட்ப உக்திகளை அறிந்து கொள்ள முடியும். அது அவர்களின் துறைசார்ந்த வளர்ச்சிக்கு பெரிதும் உதவியாக இருக்கும் என்பது நிதர்சனம்.

இத்திரைப்பட விழா ஊடகம் மற்றும் சினிமாத் துறைப் படிப்புகளைச் சார்ந்த மாணவர்களுக்காக நடத்தப்படுகிறது. இந்த விழாவில் கலந்து கொள்ள முன்பதிவு செய்தல் அவசியம். அதன் விபரங்கள் பின் வருமாறு:

கைப்பேசி எண்கள்: 9789016557, 9500092712
E-mail: live@loyolacollege.edu
Web: http://www.loyolacollege.edu/live/FilmFestival.php

Read more...

ஜனாதிபதி கலந்துகொண்ட நிகழ்வில், துப்பாக்கியுடன் ஒருவர் கைது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலந்து கொண்ட நிகழ்வொன்றில் வைத்து, துப்பாக்கியுடன் ஒருவர் கைது செய்யப்பட்டமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிறிபுர - நுவரகல பகுதியில், சந்தேகத்துக்கிடமான வகையில், தனது பணப் பையில் துப்பாக்கி, துப்பாக்கி ரவையின் பாகங்கள் என்பவற்றை வைத்திருந்த நிலையில், குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில், இடம்பெற்ற குறித்த நிகழ்வில், சந்தேகத்துக்கிடமான குறித்த நபர் நடமாடியுள்ளார். இதனை அடுத்து அவரை சோதனை செய்த போது, வெடிக்கும் நிலையில் இருக்கும் வெடிபொருட்களின் பாகங்களை தனது பொதியில் அவர் மறைத்து வைத்திருந்ததாக, ஜனாதிபதியின் பாதுகாப்பு பிரிவினர் குறிப்பிட்டுள்ளனர்.

இதனை அடுத்து கைது செய்யப்பட்ட நபரிடம் தீவிர விசாரணைகளை முன்னெடுக்கவுள்ளதாக, ஜனாதிபதியின் பாதுகாப்பு பிரிவினர் குறிப்பிட்டுள்ளனர்.

Read more...

புத்தளத்தில் இன்று பூரண ஹர்த்தால்.

புத்தளத்தில் இன்று பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. புத்தளம் அருவக்காட்டில் குப்பைகளை கொட்டும் திட்டத்திற்கு எதிராக, இன்று காலை முதல், இந்த பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படுகிறது.

கொழும்பில் சேகரிக்கப்படும் குப்பைகளை கொட்டுவதற்கு தெரிவு செய்யப்பட்ட புத்தளம் அருவக்காடு சேராக்குளி பகுதியில், தமது உள்ளூராட்சி மன்ற எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பைகளை இம்மாதம் 15ஆம் திகதி முதல் கொட்டுமாறு, பெருநகரம் மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் புத்தளம், சிலாபம் நகர சபைகளுக்கும், புத்தளம், கற்பிட்டி, வனாத்தவில்லு மற்றும் கருவலகஸ்வெவ பிரதேச சபைகளின் தலைவர்களுக்கும் கடிதம் மூலம் அறிவுறுத்தியுள்ளார்.

கடந்த ஜனவரி மாதம் 30 ஆம் திகதி இந்த கடிதம் அவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதனை கண்டித்தே இன்று புத்தளம், கரைத்தீவு, தில்லையடி, கற்பிட்டி உள்ளிட்ட பிரதேசங்களில் உள்ள அனைத்து வர்த்தக நிலையங்கள், பொதுச் சந்தை என்பன மூடப்பட்டு பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படுகிறது.

அத்துடன், குறித்த வீதிகளில் பொதுமக்களின் நடமாட்டம், மிகவும் குறைவாகவே காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்றைய தினம் புத்தளம் நகரத்தில் உள்ள பாலர் பாடசாலை, அரச மற்றும் தனியார் பாடசாலைகளுக்கு ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் வருகையும் குறைவாகவே பதிவாகியுள்ளது. அதிகமான ஆசிரியர்கள் இன்று சுகயீன விடுமுறையை அறிவித்துள்ளனர்.

புத்தளம் - அருவக்காட்டில் குப்பை கொட்டும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், கடந்த புதன்கிழமை முதல் தொடர்ச்சியாக மூன்று தினங்களை புத்தளத்தில், கறுப்பு தினமாக பிரகடனப்படுத்துவதாக, புத்தளம் பெளத்த மத்திய நிலையம், இந்து மகா சபை, கிறிஸ்தவ சபை, அகில இலங்கை ஜம் இய்யத்துல் உலமாவின் புத்தளம் கிளை, புத்தளம் பெரிய பள்ளி ஆகியன இணைந்து அறிவிந்திருந்தமை சுட்டிக்காட்டகக்காது.

Read more...

2020 இல், நாட்டை ஆளும் ஆளுமை, மொட்டு சின்னத்திற்கே உண்டு - ரொஷான் ரணசிங்க எதிர்வுகூறல்.

எதிர்வரும் 2020 ஆம் ஆண்டு ஜனவரி மாதம், இலங்கையில் மொட்டு சின்னத்தின் ஜனாதிபதியே, நாட்டை ஆட்சி செய்வார் என, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தொழிற்சங்க தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரொஷான் ரணசிங்க எதிர்வுகூறியுள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் மட்டக்களப்பு மாவட்டத்திற்கான முதலாவது அங்குரார்ப்பண கூட்டம் மட்டக்களப்பில் இன்றைய தினம் நடைபெற்றது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய பிரதி அமைப்பாளர் எஸ்.அமரசிங்க தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டு, கருத்துரைத்த போதே, அவர் இதனை கூறினார்.

இந்த கூட்டத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் சில மாவட்ட அமைப்பாளர்கள் கலந்து கொண்டதுடன், பிரதேசசபை தவிசாளர்கள், உறுப்பினர்கள், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் முக்கியஸ்தர்கள், உறுப்பினர்கள் உளியிட்ட பலர் கலந்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. .

அடுத்து வரவுள்ள தேர்தல் எமது தரப்புக்கு சாதகமானதாக அமையும். மக்களும் எமக்கே தமது ஆதரவை வழங்க தயாராக உள்ளனர் என்று, ரொஷான் ரணசிங்க குறிப்பிட்டார்.

Read more...

அஸ்கிரிய மகாநாயக்கரை, வட மாகாண ஆளுநர் சந்தித்தார்.

வடக்கு மாகாண ஆளுநர், கலாநிதி சுரேன் ராகவன், இன்றைய தினம் அஸ்கிரிய பீடத்தின் மகாநாயக்கர் வரக்காகொட ஸ்ரீ ஞானரத்ன தேரரை சந்தித்து ஆசி பெற்றுக்கொண்டார்.

கண்டிக்கு விஜயம் மேற்கொண்ட வடக்கு ஆளுநர், வரலாற்று சிறப்புமிக்க கண்டி ஸ்ரீ தலதா மாளிகைக்குச் சென்றார்.

ஸ்ரீ தலதா மாளிகைக்கு விஜயம் மேற்கொண்ட ஆளுநரை, தலதா மாளிகையின் தியவதன நிலமே பிரதீப் நிலங்க தெல வரவேற்றார்.

அதனை தொடர்ந்து புனித தந்த தாதுவினை தரிசித்து, வடக்கு ஆளுநர் சுரேன் ராகவன், அங்கு இடம்பெற்ற வழிபாடுகளில் ஈடுபட்டார். அதன் பின்னர் அஸ்கிரிய பீடத்தின் மகாநாயக்கரை சந்தித்து ஆசி பெற்றுக்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read more...

''தமிழர்களுடன் மோதுவதற்கான அவசியம் எனக்கு இல்லை '' - பிரதமர்.

இலங்கையில் இடம்பெற்ற யுத்தத்தில் மக்கள், பெரும் இழப்புகளை சந்தித்துள்ள நிலையில், தமிழ் மக்களுடன் மோதிக் கொள்வதற்கான அவசியம் தனக்கில்லை என, பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி மீளாய்வு கூட்டம் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில், இன்றைய தினம், கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட போதே, பிரதமர் இதனை தெரிவித்தார்.

வடக்கு மாகாணமே யுத்தத்தினால் அதிகளவில் பாதிக்கப்பட்டது. வட மாகாணத்தின் அனைத்து பகுதிகளும் முழுமையான அழிவை எதிர் கொண்டன. பலர் உயிரிழந்தனர். இதை விட, இந்த நாட்டின் அனைத்து பகுதிகளிலும் பல உயிரிழப்புகள் சம்பவித்தன. எமது ஜனாதிபதி ஒருவர் உயிரிழந்தார். ஜனாதிபதி வேட்பாளர் ஒருவர் உயிரிழந்தார். எமது கட்சியில் பலர் உயிரிழந்தனர். அனைவரும் உயிரிழந்தமையினாலேயே நான் இந்த தலைமைத்துவத்திற்கு வந்தேன்.

அது கடந்த காலம். எனவே, தமிழ் மக்களுடன் மோதிக் கொள்வதற்கான அவசியம் எனக்கில்லை. ஐக்கிய தேசிய கட்சியினர் மாத்திரமின்றி தமிழ் தலைமைகள் பலரும் உயிரிழந்துள்ளனர். அனைவரும் யுத்தம் மாத்திரமல்லாது, ஏதோவொரு வகையில் மரணித்துள்ளனர், அதிகமான பாதிப்புக்களையும் சந்தித்துள்ளார். இந்த கசப்பான கடந்த காலத்தை மறந்து நாம் முன்னோக்கி பயணிக்க வேண்டும்.

அதற்கமைய உண்மையை பேசி, ஒருவருக்கொருவர் மன்னிப்பு கோரி எதிர்கால நடவடிக்கைகளை முன்னெடுத்து செல்ல வேண்டும். எனவே, இதனை செய்து நல்லிணக்கத்தை ஏற்படுத்துவோம். நாம் நாட்டை கட்டியெழுப்ப வேண்டும். எந்நாளும் கடனாளிகளாக விளங்க முடியாது.

வடக்கு மாகாணத்தை கட்டியெழுப்ப வேண்டும். வடக்கை சீர்க்குலைக்க முடியாது. அதற்கு நல்லணிக்கத்தை ஏற்படுத்த வேண்டும். அதுவும் தற்போது ஏற்பட்டுள்ளது. எனவே, அச்சமின்றி எமக்காக காத்திருக்கும் பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்து முன்னோக்கி செல்வோம்.

தெற்கில் பாரிய அபிவிருத்திகளை முன்னெடுத்து வருவது போன்று வடக்கையும் அபிவிருத்தி செய்வோம். கிழக்கு மாகாணத்தில் திருகோணமலையை, பாரியளவில் அபிவிருத்தி செய்யவும் தற்போது நடவடிக்கை எடுத்து வருகின்றோம்.

இதன்மூலம், எதிர்வரும் ஒரு தசாப்த காலத்திற்குள், இலங்கையை பாரிய அபிவிருத்தியடைந்த நாடாக மாற்ற முடியும் என்பதில், எவ்வித சந்தேகமும் இல்லை என, பிரதமர் ரணில் விக்ரமசிங்க நம்பிக்கை வெளியிட்டார்.

Read more...

நாட்டில் தற்போது இனப்பிரச்சனையோ , பிரதேச பிரச்சனையோ இல்லை - பாலித்த ரங்கே பண்டார

தற்போதுள்ள நாட்டில், இனப்பிரச்சினையோ அல்லது பிரதேச பிரச்சினையோ இல்லை என, ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பாலித்த ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் தேசிய அரசாங்கம் குறித்து கருத்து வெளியிட்ட போது, அவர் இதனை தெரிவித்தார்.

தேசிய கொள்கைகளை ஒன்று சேர்க்கும் விதத்தில் உருவாக்கப்படவுள்ள தேசிய அரசாங்கத்துக்கான பெரும்பான்மை ஆதரவினை நிச்சயமாக ஐக்கிய தேசிய கட்சி பெற்றுக்கொள்ளும்.

கடந்த காலத்தை போன்று அல்லாமல், சிறந்த தேசிய அரசு ஒன்றை கட்டியெழுப்புவதுடன் வரவு – செலவுத் திட்டத்திற்கான பெரும்பான்மை பலத்தையும் பெற்று, தேசிய அரசாங்கத்தின் உறுதித் தன்மையினை நிலை நாட்டுவோம்.

கடந்த ஏழு தசாப்தங்களில் நாம் இனப்பிரச்சினை, பிரதேசவாத பிரச்சினையென பல்வேறு சவால்களை எதிர்கொண்டிருந்தோம். எனினும் தற்போது இலங்கையில் அத்தகைய இனப்பிரச்சினையோ அல்லது பிரதேச பிரச்சினையோ இல்லை.

வடக்கு மற்றும் தெற்கை சேர்ந்த மக்கள், ஒருவருக்கு ஒருவர் புரிந்துணர்வுடன் வாழ்கின்றனர். இந்த நிலை கடந்த மூன்றரை வருடங்களாக முன்னெடுக்கப்பட்டு வந்த நல்லாட்சி அரசாங்கத்தின் தேசிய கொள்கைகளினூடாகவே கிடைக்கப்பெற்றுள்ளது.

இந்த மாற்றத்தை கட்டியெழுப்பும் நோக்கிலும், தேசிய ஒற்றுமையை பாதுகாத்து கொள்ளவும் மீண்டும் தேசிய அரசாங்கத்தை உருவாக்க எமது தரப்பு தீர்மானம் எடுத்தது.

பல்வேறு தரப்பினர் அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட முன்வந்துள்ள நிலையில், அதற்கு ஏற்ற வகையில் தேசிய ஒருமைப்பாடும் உருவாக்கப்பட வேண்டும். இதற்கு தேசிய அரசாங்கமே தீர்வாக அமையும் என, ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பாலித்த ரங்கே பண்டார குறிப்பிட்டார்.

Read more...

சட்டத்தை எவரும் தவறாக கையில் எடுக்க முடியாது - நீதிவான் அந்தோனி சாமி பீற்றர் போல்

எந்த நாட்டிலும் சட்டத்தை எவருமே தவறாகக் கையில் எடுக்க முடியாது. ஏதேனும் சீர்கேடுகள் இடம்பெற்றால், அவற்றைத் தடுக்க பல வழிமுறைகள் உள்ளன. அவற்றை உரிய முறையில் பின்பற்ற வேண்டும் என, யாழ்ப்பாண நீதிமன்ற நீதிவான் அந்தோனி சாமி பீற்றர் போல் குறிப்பிட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் நீதிமன்ற எல்லைக்குட்பட்ட வியாபார நிலையங்களில் விற்பனை செய்யப்படும் காலாவதியான உணவுப் பண்டங்களை அகற்றல் மற்றும் சுகாதாரமற்ற நடவடிக்கைகளை கட்டுப்படுத்தும் நோக்கில், சுகாதாரப் பரிசோதகர் என, போலி அடையாள அட்டையைத் தயாரித்து பணியாற்றி வந்த இளைஞர் ஒருவரை, கடுமையாக எச்சரித்து விடுவித்த போதே, நீதவான் இதனை கூறினார்.

பொதுச் சுகாதாரப் பரிசோதகர்களுக்கு சுகாதாரச் சீர்கேடு தொடர்பாக பலமுறை முறைப்பாடு செய்தும் நடவடிக்கை எடுக்காத நிலையிலேயே, யாழ்ப்பாணத்திலுள்ள பிரபல கல்லூரியின் பழைய மாணவன் ஒருவர், போலி ஆவணங்களைத் தயாரித்து சுகாதாரப் பரிசோதகர் சேவையைப் பயன்படுத்தினார் என்ற குற்றச்சாட்டில் கோப்பாய் பொலிஸாரால்கடந்த தினம் கைது செய்யப்பட்டார்.

அந்த இளைஞன் பொதுச் சுகாதாரப் பரிசோதர் சேவைக்கான போலி அடையாள அட்டையை, தனது பெயரில் தயாரித்து வைத்து பல வியாபார நிலையங்களுக்குச் சென்று, காலாவதியான மற்றும் சுகாதார சீர்கேடான உணவுப் பண்டங்களை அழித்துள்ளார்.

அவரின் இந்த நடவடிக்கை தொடர்பாக வியாபார நிலைய உரிமையாளர் ஒருவரால் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு வழங்கப்பட்டது. இதனை அடுத்து சம்பவம் குறித்த விசாரணைக்கு பொலிஸார் குறித்த இளைஞரை அழைத்த போதும், அவர் காவல்துறையிடம் செல்லவில்லை.

இந்த நிலையில் இளைஞனுக்கு எதிராக யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் யாழ் பொலிஸார் வழக்குத் தாக்கல் செய்தனர். அதனால் அவருக்கு அழைப்பாணை அனுப்பப்பட்டது. எனினும் இளைஞன் நீதிமன்றில் முன்னிலையாகத் தவறியதால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டது.

பிடியாணை உத்தரவை நிறைவேற்றிய பொலிஸார், இளைஞனைக் கைது செய்து யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தினர். இதனை அடுத்து அந்த இளைஞர், ஒருநாள் விளக்கமறியலில் வைக்கப்பட்ட பின்னர் விடுவிக்கப்பட்டார்.

வழக்கு விசாரணையின் போது , 'சந்தேகநபர் சட்டத்துக்கு புறம்பாகச் செயற்படும் நோக்குடன் நடந்து கொள்ளவில்லை. அவர் சமூக அக்கறை கொண்டே இவ்வாறு செயற்பட்டார். அதனால் அவரை இந்தக் குற்றச்சாட்டிலிருந்து விடுக்கவேண்டும்' என்று, இளைஞர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி மன்றுரைத்தார்.

இதேவேளை, இளைஞனுக்கு எதிராக நீதிமன்ற நடவடிக்கையைக் கோரி எந்தவித முறைப்பாட்டையும் பதிவு செய்யவில்லை என தெரிவித்த வர்த்தகர், அவரை எச்சரிக்க வேண்டும் என்ற நோக்குடனேயே இவ்வாறு நடந்து கொண்டதாக மன்றுக்கு கூறினார்.

இரு தரப்பு விண்ணப்பங்களையும் ஆராய்ந்த யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் ஏ.எஸ்.பி.போல், இளைஞனை எச்சரிக்கை விடுவித்ததுடன், சட்டத்தை யாரும் தவறாக பைடன்படுத்த ஒருபோதும் அனுமதிக்கப்பட்ட மாட்டாது என கூறினார்.

Read more...
Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com