Friday, February 15, 2019

வகுப்பு தடையை நீக்குமாறு வலியுறுத்தி, மாணவர்கள் வீதியில் இறங்கி போராட்டம்.

வகுப்புத்தடையை உடன் நீக்குமாறு வலியுறுத்தி, இன்றைய தினம் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. சப்ரகமுவ
பல்கலைக்கழகத்தின் பிரதான நுழைவாயிலை மறித்து, அங்கு கல்வி பயின்று வரும் மாணவர்கள் ஒன்று திரண்டு, குறித்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

முதலாம் ஆண்டு மாணவர்களை பகிடிவதை செய்தமை, பல்கலைக்கழக நிர்வாகத்திற்கு தடை ஏற்படுத்தியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் 54 மாணவர்களுக்கு, நேற்று வகுப்பு தடை விதிக்கப்பட்டது.

இன்று முதல் எதிர்வரும் 21ஆம் திகதிவரை குறித்த மாணவர்களுக்கு வகுப்பு தடை விதிக்கப்பட்டது.

இந்த செயல்பாடு உடன் நிறுத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தியே, பல்கலைக்கழக மாணவர்கள் இந்த போராட்டத்தை மேற்கொண்டனர். இதனை அடுத்து, விரைவில் மாணவர்களின் பிரச்சனைகள் தீர்க்கப்படும் என, பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது.

Read more...

எதிர்வரும் 21 ஆம் திகதி, சி,வி.விக்னேஸ்வரனுக்கு எதிரான வழக்கு, விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் - நீதிமன்றம்

வட மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரனுக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கினை, எதிர்வரும் 21ம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

இந்த மனு மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி குமுதுனி விக்ரமசிங்க முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொல்லப்பட்ட போதே, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

வட மாகாண மீன்பிடித்துறை அமைச்சராக இருந்த பா.​டெனிஸ்வரன் மீது, ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு, அவரை அந்த அமைச்சு பதவியிலிருந்து நீக்க வடமாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் நடவடிக்கை எடுத்திருந்தார்.

இதனையடுத்து இவரது செயல்பாட்டை எதிர்த்து, உத்தரவொன்றை பிறப்பிக்குமாறு கோரி, பா.​டெனிஸ்வரன் மேன்முறையீடு மனுவொன்றை தாக்கல் செய்தார்.

அதன்படி பா.​டெனிஸ்வரனை மீண்டும் அமைச்சர் பதவியிலிருந்து நீக்குவதற்கு விக்னேஸ்வரன் எடுத்த தீர்மானத்துக்கு தடை உத்தரவு பிறப்பித்து, மீண்டும் அவருக்கு அந்தப் பதவியை வழங்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது.

எனினும் நீதிமன்றத்தின் அந்த உத்தரவை செயற்படுத்தாமை காரணமாக, முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரன் நீதிமன்றத்தை அவமதித்ததாக கூறி, வட மாகாண முன்னாள் மீன்பிடித்துறை அமைச்சர் பி.​ டெனிஸ்வரன் இந்த மனுவை தாக்கல் செய்தார்.

இது குறித்த வழக்கு விசாரணை இன்று இடம்பெற்ற போதே, மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி குமுதுனி விக்ரமசிங்க இந்த உத்தரவை பிறப்பித்துள்ளதாக, நீதிமன்ற செய்திகள் தெரிவிக்கின்றன.

Read more...

மைத்திரியும், ரணிலும் இணைந்தால் மட்டுமே, அபிவிருத்திகள் இடம்பெறும் - ராதாகிருஷ்ணன்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் இணைந்து செயற்பட்டால் மாத்திரமே, நாட்டின் அபிவிருத்தியை சிறப்பாக முன்னெடுத்து செல்ல முடியும் என மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவரும், விசேட பிரதேசங்களுக்கான அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் நுவரெலியா மீப்பிலிமான பகுதியில் நிர்மாணிக்கப்பட்ட புதிதாக நிர்மாணிக்கப்பட்ட இரண்டு மாடி கட்டிடம் இன்று திறந்து வைக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் பங்கேற்று உரையாற்றிய போதே, வேலுசாமி இராதாகிருஸ்ணன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

கடந்த 2015 ஆம் ஆண்டு நல்லாட்சி அரசாங்கம் உருவாக்கப்பட்ட பின்பு நாட்டின் அனைத்து பணிகளும், மிகவும் வேகமாக முன்னெடுக்கப்பட்டன.

அதன் பின்பு ஒரு குறிப்பிட்ட காலப்பகுதியில் ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் ஏற்பட்ட முறுகல் நிலை காரணமாக, அபிவிருத்தி பணிகளின் வேகம் சரமாரியாக குறைவடைந்து. இதன் காரணமாக மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த முறுகல் நிலையின் உச்சகட்டமாக, கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் ஏற்பட்ட ஜனநாயக விரோத ஆட்சி மாற்றம் காரணமாக அனைத்து அபிவிருத்தி பணிகளும் முழுமையாக ஸ்தம்பிதம் அடைந்தது.

இதனால் எமது நாட்டிற்கும் இந்த மக்களுக்கும் பல்வேறு சிக்கல்களுக்கு முகம் கொடுக்க நேர்ந்தது. ஆனால் மீண்டும் பிரதமராக ரணில் விக்கிரமசிங்க பதவியேற்ற பின்பு மீண்டும் அபிவிருத்தி பணிகளை ஆரம்பிக்க முடியும் என அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால் அது நடைபெறவில்லை. மீண்டும் இருவருக்கும் இடையில் கயிறுலுப்பு நடைபெறுகின்றது.

அரசாங்கம் என்பது இரண்டு பக்கமாக பிரிந்து நின்று விளையாடுகின்ற உதைப்பந்தாட்ட போட்டியல்ல. போட்டி என்று வருகின்ற பொழுது ஒவ்வொரு தலைவரும் தனது அணி வெற்றி பெற வேண்டும் என்றே நினைப்பார்கள்.

ஆனால் போட்டி சில வேளைகளில் சமநிலையில் முடிந்துவிடும் இதன்போது பார்வையாளர்கள் ஏமாற்றமடைவார்கள். ஆனால் அரசாங்கத்தில் அப்படி செய்ய முடியாது. ஜனாதிபதியும் பிரதமரும் இணைந்து செயற்பட்டால் மாத்திரமே நாட்டின் அபிவிருத்தி உட்பட அனைத்து பணிகளையும் சிறப்பாக செய்ய முடியும்.

நாடு நன்றாக இருந்தால் மாத்திரமே யாரும் தேர்தலில் போட்டியிட முடியும், ஆட்சி செய்ய முடியும். எனவே அனைவரும் நாட்டின் நலனை கருத்தில் கொண்டு செயற்பட முன்வர வேண்டும்“ என தெரிவித்தார்.

Read more...

எந்தவொரு காரணத்திற்காகவும் பரீட்சைக்கான விண்ணப்பிக்கும் திகதி, நீடிக்கப்பட மாட்டாது - பரீட்சைகள் ஆணையாளர் நாயகம்

நடைபெறவுள்ள கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கான விண்ணப்பம் கோரும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பி.பூஜித அறிக்கை ஒன்றை வௌியிட்டுயுள்ளார். குறித்த அறிக்கையில் பாடசாலை விண்ணப்பதாரிகள் எதிர்வரும் 25ஆம் திகதிக்கு முன்னரும், தனியார் பரீட்சார்த்திகள் மார்ச் மாதம் முதலாம் திகதிக்கு முன்னரும் விண்ணப்பங்களை அனுப்பிவைக்க வேண்டும் என்று, பரீட்சைகள் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

இந்த முறை பரீட்சைகள் புதிய மற்றும் பழைய முறைப்படி இடம்பெறவுள்ளது. பாடசாலை விண்ணப்பதாரிகளுக்கான விண்ணப்பங்கள் பாடசாலை அதிபர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. பரீட்சைக்கான விண்ணப்பிக்கும் திகதி எந்தவொரு காரணத்திற்காகவும் நீடிக்கப்படப்மாட்டாது என்று பரீட்சை திணைக்கள ஆணையாளர் தெரிவித்துள்ளார். விண்ணப்பங்களை பூர்த்தி செய்து விரைவாக அனுப்பி வைக்குமாறு பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சுட்டிக்காட்டியுள்ளார்.

Read more...

செம்மணி வீதியில் வைத்து பேருந்து மீது, கல்வீச்சுத் தாக்குதல்

யாழிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த பயணிகள் பேருந்து மீது, நேற்று இரவு 10.15 மணியளவில் கல்வீச்சுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. செம்மணி வீதியில் வைத்தே இந்த கல்வீச்சுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ள நிலையில், இதன்போது பேருந்தின் முன் கண்ணாடி சேதமடைந்துள்ளது.

பேருந்து சாரதிகளுக்கிடையிலான போட்டித் தன்மை காரணமாக இந்த சம்பவம் நேர்ந்திருக்கலாம் என்று குறித்த பேருந்தின் சாரதி தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் காரணமாக நீண்ட நேரம் பேருந்து வீதியில் பயணிக்காமல் நின்றதால் பயணிகள் தமது பயணங்களில் பெரும் சிரமங்களை எதிர்நோக்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Read more...

யாழ் பெண்களுக்கு புதிய நுண்கடன் சட்டம் மூலம், தீர்வு - நிதி அமைச்சர்

யாழ்ப்பாணத்தில் நுண்கடன் பிரச்சினைக்கு முகம் கொடுத்து வரும் பெண் தலைமைத்துவ குடும்பங்கள் புதிய நுண்கடன் சட்டத்தினால் தீர்வை பெற்றுக்கொள்ள முடியுமென நிதி அமைச்சர் மங்கள சமரவீர உறுதி அளித்துள்ளார். யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இந்த விடயத்தை தெரிவித்தார்.

வறுமையை நுண்கடன் திட்டத்தினால் இல்லாமல் செய்யலாம். ஆனால் வட்டி வீதங்கள் அதிகரிக்கப்பட்ட நுண்கடன் திட்டத்தினால் வறுமையான குடும்பத்திலுள்ள பெண்கள் அதிகளவு பாதிக்கப்பட்டுள்ளனர்.

எனவே, வட்டி வீதங்கள் அதிகரிக்கப்பட்டுள்ள மக்களை பாதுகாப்பதற்காக இப்புதிய நுண்கடன் சட்டத்தனை அறிமுகம் செய்யவுள்ளோம் என்று நிதி அமைச்சர் நம்பிக்கை வெளியிட்டார். இதன்போது மேலும் கருத்து தெரிவித்த நிதி அமைச்சர், நுண்கடன் திட்டத்துக்குப் பதிலாக மக்களுக்கென விசேட சலுகைகள் காணப்படும் என்டர்பிரைஸ் ஸ்ரீலங்கா அரச சலுகை வட்டி கடன் திட்டத்தில், மக்கள் இணைந்துக் கொள்வது சிறந்ததாகும். இவ்விடயம் தொடர்பில் குறிப்பிட்ட வங்கிகளுக்கு ஆலோசனையும் வழங்கியுள்ளதாகவும் அவர் கூறினார்.

இந்த திட்டத்தில் எந்ததொரு வங்கியாவது சலுகையை வழங்க மறுத்தால், உடனடியாக 1925 என்னும் இலக்கத்துக்கு தொடர்பு முறையிட முடியும் என்றும் அவர் கூறியுள்ளார்.


Read more...

கிளிநொச்சியில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க

வடக்கு மாகாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்க, இன்று கிளிநொச்சிக்கு செல்கின்றார். கிளிநொச்சிக்கு செல்லும் பிரதமர், கிளிநொச்ச்சி பொது வைத்தியசாலையின் விபத்து சிகிச்சை பிரிவு கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வில் கலந்துகொள்கின்றார். இந்த நிகழ்வை தொடர்ந்து கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் இடம்பெறவுள்ள அபிவிருத்தி மீளாய்வு கூட்டத்தில் கலந்துகொள்ளவுள்ளார்.

இதேவேளை, யாழ். செம்மணி பகுதியில் நவீன வசதிகளுடன் கூடிய பாரிய நகரம் ஒன்றை அமைப்பதற்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க அங்கீகாரம் வழங்கியுள்ளார். மூன்று நாள் விஜயமொன்றை மேற்கொண்டு வடக்கிற்கு சென்ற பிரதமர், யாழ். மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற அபிவிருத்தி முன்னேற்றங்கள் தொடர்பான கூட்டத்தில் நேற்று கலந்துகொண்டார்.

இதன்போது இந்த திட்டத்திற்கான மாதிரி வரைபை பார்வையிட்ட பிரதமர், குறித்த செம்மணி பகுதியில் நிர்மாணிக்க தீர்மானிக்கப்பட்ட நவீன நகர திட்டம் சிறந்தது என பாட்டினார். அத்துடன்குறித்த நகரத்தை அமைப்பதற்கான நிதி மூலத்தை கண்டறிவதற்கு பிரதமர் ரணில் விக்கரமசிங்க இணக்கம் தெரிவித்துள்ளார்.

இதேநேரம் நேற்று கோப்பாய் பிரதேச செயலகத்தின் கட்டிடத்தை பிரதமர் திறந்து வைத்தார். அத்துடன் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் திடீர் விபத்து சிகிச்சைப் பிரிவு பிரதமர் தலைமையில் திறந்து வைக்கப்பட்டது. அதன் பின்னர், பலாலி விமான நிலையம், காங்கேசன்துறை துறைமுகம் ஆகியவற்றுக்கு விஜயம் செய்த பிரதமர், நிலைமைகளை நேரில் கண்காணித்தார். அதனையடுத்து, மயிலிட்டி கிராமத்தில் மீள்க்குடியேறிய மக்களுக்காக நிர்மாணிக்கப்படும் குடியிருப்புத் தொகுதிக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்விலும் பிரதமர் கலந்துகொண்டிருந்தனர்.

Read more...

மாகாண சபை வேண்டாம் எனின், அதனை அரசியலமைப்பிலிருந்து நீக்கி விடுங்கள் - மஹிந்த தேசப்பிரிய

மாகாண சபைத் தேர்தலை நடாத்த முடியாது என்றிருந்தால் மாகாண சபை முறைமையை அரசியலமைப்பிலிருந்து நீக்கி விடுங்கள் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். பெப்ரல் அமைப்பின் 30 வருடம் நிறைவை முன்னிட்டு கொழும்பு நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறியுள்ளார்.

தேர்தலை நடாத்துவது அல்லது நடாத்தாமல் விடுவது தொடர்பில், அரசியல் குழுக்களுக்கு ஏற்ப விளக்கம் கொடுக்கப்படுகிறது. அவரவர்க்கு உகந்த நேரத்தில் தேர்தலை நடத்த கே கோரி நீதிமன்றம் செல்கின்றனர். இந்த நடவடிக்கை மூலம் தாம் நினைக்கும் நேரத்தில் தேர்தலை நடத்துவதை சரி என ஏற்றுக் கொண்ட மனப்பாங்கு கொண்ட சமூகமாக இன்றைய நிலை மாறியுள்ளது.

மாகாண சபைத் தேர்தலே முதலில் நடாத்தப்பட வேண்டும். மாகாண சபை வேண்டாம் எனின், தயவு செய்து அதனை அரசியலமைப்பிலிருந்து நீக்கி விடுங்கள். அத்துடன் நவம்பர் மாதம் 10 ஆம் திகதி வரையில் ஜனாதிபதித் தேர்தல் ஒன்றை நடாத்த முடியாது. அதுவரை நாம் மாகாண சபைத் தேர்தலுக்காக போராடுவோம் எனவும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Read more...

எவராக இருந்தாலும் பதவி நிலைகளை பார்க்காது சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் - ஜனாதிபதி

போதைப்பொருள் கடத்தல் செயற்பாடுகளில் ஈடுபடும் யாராக இருந்தாலும் அவர்களது அந்தஸ்து, பதவி நிலைகளை பார்க்காது சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். அநுராதபுரம் சல்காது விளையாட்டரங்கில் இடம்பெற்ற அநுராதபுர மாவட்ட விசேட மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே, ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இந்த விடயம் தொடர்பில் கருத்துக்களை வெளியிட்டார்.

இதன் போது, சுற்றாடல் அழிவு நடவடிக்கைகளுடன் தொடர்புடையவர்கள் எவராக இருந்தாலும் அவர்களும் உரிய முறையில் தண்டிக்கப்படுவார்கள் என்று ஜனாதிபதி தெரிவித்தார்.

Read more...

Thursday, February 14, 2019

புதிய யாப்பு நிறைவேறுவது சாத்தியமா? வை.எல்.எஸ்.ஹமீட்.

புதிய அரசியலமைப்பிற்கான வரைபு அரசினால் சமர்ப்பிக்கப்பட்டிருக்கின்றது. ஒரு முஸ்லிம் அதனை படித்து அதன் உள்ளடக்கத்தைப் புரிந்துகொள்வானானால் அதில் முஸ்லிம்களுக்குள்ள ஆபத்தை விளங்கிக்கொள்வானானால் அவனால் நிம்மதியாகத் தூங்கமுடியாது.

இந்த யாப்பு வரைபு கடந்த மூன்றாண்டுகளுக்குமேலான முஸ்லிம் கட்சித்தலைவர்களும் உள்வாங்கப்பட்ட கலந்துரையாடலுக்குப்பின்தான் தயாரிக்கப்பட்டிருக்கின்றது.

இவ்வாறான ஒரு நகல் யாப்பைத் தயாரிக்க சம்மதமளித்துவிட்டு அல்லது அதில் முஸ்லிம்களின் பாதுகாப்பு மற்றும் உரிமைகள் தொடர்பான காப்பீடுகள் எதுவும் உள்வாங்கப்படாத நிலையில் இந்த யாப்பு நிறைவேறாது; என்று ஒற்றை வசனத்தில் முஸ்லிம்களின் கண்களில் மண்தூவப்படுகிறது.

அவ்வாறு நிறைவேறாது என்று வைத்துக்கொண்டாலும் அதற்காக ஒரு யாப்புவரைபில் முஸ்லிம்களின் நலன் உள்வாங்கப்படத்தேவையில்லை; என்பது நியாயமான வாதமா? என்ற கேள்வி ஒரு புறமிருக்க; இதன் நடைமுறைச் சாத்தியம்பற்றி ஆராய்வோம்.

இந்த யாப்பு நிறைவேறாது என்பவர்கள் நாங்கள் வாக்களிக்க மாட்டோம்; அதனால் அது நிறைவேறாது; என்ற அர்தத்திலோ அல்லது இதை நாங்கள் நிறைவேற்ற விடமாட்டோம்; என்ற அர்த்தத்திலோ, இது நிறைவேறாது; என்று கூறவில்லை. ஏனெனில் அவர்களது பாராளுமன்ற உரைகள் உட்பட அவர்களது தொடர்ச்சியான கருத்துக்கள் இந்த நகல் யாப்பை ஆதரிப்பதாகவே இருக்கின்றது.

அவர்கள் ‘இந்த யாப்பு நிறைவேறாது’ என்பதற்கான காரணம் ஒன்றில் மக்களைத் தாக்காட்டுவதாக இருக்கவேண்டும் அல்லது பிரதான எதிரணியான மஹிந்த தரப்பு இதனை எதிர்க்கின்றது; எனவே அரசு 2/3 ஐப் பெற்றுக்கொள்ளாது; என்பதாக இருக்கவேண்டும்.

வெளித்தோற்றத்தில் இது நிறைவேறாது; போன்றே தோன்றுகிறது. ஆனாலும் யதார்த்தநிலை சாத்தியப்பாடுகள்; என்ன?

இந்த நாட்டு அரசியலில் கொள்கை, இலட்சியம், தேசியப்பார்வை என்கின்ற எதுவும் கிடையாது. அவை மேடைகளுக்கான ஆபரண பேச்சுக்கள் மாத்திரமே. ஒக்ஸ்போட் பல்கலைக்கழகத்தில் படித்த 1920 களின் நடுப்பகுதியில் சமஷ்டியைப் பிரேரித்த பண்டாரநாயக தான் டட்லி- செல்வா ஒப்பந்தத்தை எதிர்த்ததும் தனிச்சிங்கள சட்டத்தைக் கொண்டுவந்ததுமாகும்.

அதேபோன்றுதான் சகல இனங்களும் சேர்ந்து உருவாக்கிய ஐ தே கட்சிதான் பண்டா- செல்வா ஒப்பந்தத்தை எதிர்த்தது. எனவே, இந்நாட்டில் அனைத்துக்கட்சிகளினதும் கொள்கை, இலட்சியம் அனைத்தும் வெறும் “ அரசியல் சந்தர்ப்பவாதம்தான்”. அதில் அனைத்துக் கட்சிகளிடமும் ஒற்றுமை இருக்கின்றது.

இந்தப்பின்னணியில்தான் மஹிந்தவின் நிலைப்பாடு பார்க்கப்படவேண்டும். இன்று மஹிந்தவினால் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடமுடியாது. தனது சொல் கேட்கக்கூடிய ஒருவரை ஜனாதிபதியாக்கி சட்டத்தைத் திருத்தி அக்கதிரைக்கு தான் மீண்டும் வந்துவிடவேண்டும்; என்பது அவரது இலக்கு.

இந்த விடயத்தில் தனது சகோதரர்களை நம்ப அவர் தயாரில்லை. சிராந்தியை இறக்கமுடியுமா? என ஆலோசிக்கின்றார். அவர் வெற்றிபெறுவாரா? கூட்டுக்கட்சிகள் உடன்படுமா? என்ற கேள்விகள் இருக்கின்றன. இந்தக் கேள்விக்கு அவர் காணப்போகின்றவிடை அல்லது அதற்கு மாற்றீடாக இன்னொருவரை அடையாளம் காணமுடியுமா? என்பதில் அவர் காணப்போகின்றவிடை அவருடைய யாப்புத்தொடர்பான நிலைப்பாட்டில் மாற்றத்தைக் கொண்டுவரலாம்.

நிறைவேற்று ஜனாதிபதி பதவியை ஒழித்துவிடுவதே சிறந்தது இன்னுமொருவரின்கீழ் பிரதமராக இருப்பதைவிட; என்ற நிலைப்பாட்டிற்கு அவர் வரவேண்டிவரலாம். அவ்வாறான ஒரு நிலை தோன்றுமானால் சிலவேளை ஒரு சில திருத்தங்களுடன் இந்த யாப்பு இலகுவாக நிறைவேற்றப்படலாம்.

அவ்வாறு நடக்காது; என்று வைத்துக்கொள்வோம். அண்மையில் மஹிந்தவுடன் SLPP இல் இணைந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் சுமார் ஐம்பது பேர். இதன்பொருள் வெளியில் அண்ணளவாக 175 பேர் இருக்கிறார்கள் என்பதாகும். தேவை 150 மாத்திரம்தான்.

ஒரு புறம் டயஸ்போராக்களின் பணபலம். இன்னொருபுறம் மேற்கத்தைய நாடுகள் வரிந்துகட்டிக்கொண்டு இதனைச் சாத்தியப்படுத்த வாரியிறைக்கும் வள்ளல் தன்மையோடு காத்திருப்பு. அடுத்தபுறம் மனித உரிமைக் குற்றச்சாட்டுக்களில் இலங்கைக்கு கொடுக்கப்பட்டுக் கொண்டிருக்கும் அழுத்தம். மறுபுறம் அதிகாரப்பகிர்வுக்கு முழுமையான ஆதரவு வழங்கும் சந்திரிக்கா, SLFP பா உ க்கள் பலருடன் ஐ தே க க்கு ஆதரவு வழங்க எடுக்கும் முயற்சி. இந்தப் பின்னணியில் 150 நிச்சயமாக தூரத்துப் பச்சை என்று கூறமுடியுமா?

இதற்கு இன்னொரு பக்கம் இருக்கின்றது. கோட்டாவுக்கு அமெரிக்க பிரஜாஉரிமையை நீக்க முடியாதுபோகும்; எனவே தனக்குத்தான் போட்டியிட மஹிந்த சந்தர்ப்பம் வழங்குவார்; என மனப்பால் குடிக்கின்றார்; மைத்திரி. அது பகல்கனவு என்பது புரிந்ததும் தனக்கு மீண்டும் கிடைக்காத ஜனாதிபதிப் பதவி இருக்கவே கூடாது; என எண்ணி சில திருத்தங்களுடன் அவர் ஆதரவளிக்கமாட்டார்; என்பதற்கு உத்தரவாதமில்லை.

இன்னொரு மூலையில் கோட்டா வேட்பாளராக வருவதை ஏற்றுக்கொள்ள ஆயத்தமில்லாத நிலையில் குமார்வெல்கம போன்ற பலர் இருக்கிறார்கள். அவர்கள் சந்திரிக்காவுடனும் பேசுவதாகக் கூறப்படுகிறது. அவர்கள் புதிய யாப்புக்கெதிரான தங்களது நிலைப்பாட்டை மாற்றமாட்டார்கள்; என்பதற்கும் உத்தரவாதமில்லை.

இவை எல்லாவற்றிற்குமேலாக, நகல் யாப்பில் புதிய தேர்தல்முறை பிரேரிக்கப்பட்டிருக்கின்றது. இதற்காக எல்லை நிர்ணயக்குழு அமைக்க பிரேரிக்கப்பட்டிருக்கின்றது. அடுத்தமுறை வெற்றிபெற மாட்டோம்; என்கின்ற அச்சத்தில் உள்ள பா உ க்கள் எதிரணியில் இல்லாமலில்லை.
புதிய யாப்பை நிறைவேற்றி புதிய தேர்தல்முறைக்காக எல்லை நிர்ணயம் செய்வதற்காக பாராளுமன்றத் தேர்தலை ஒரு வருடமோ, இரு வருடமோ ஒத்திப்போட அதை மறைமுகமாகவோ, நேரடியாகவோ செய்வதற்கான சரத்தை கொண்டுவருவருவது சாத்திமற்றதல்ல.

மீள்பரிசீலனைக்கு மூன்று மாதங்கள் மட்டுமே வழங்கப்பட்ட மாகாணசபைத் தேர்தல் எல்லை அறிக்கை காலவரையின்றி சென்றுகொண்டிருப்பதைக் கவனத்திற்கொள்க. சர்வஜன வாக்கெடுப்புக்குட்படுத்துவதால் தேர்தலை ஒத்திப்போடுவதில் சட்டப்பிரச்சினை எழாது. இந்நிலையில் இதற்கு ஆசைப்பட்டு வெற்றியில் நம்பிக்கையில்லாத பா உ க்கள் கை உயர்த்தமாட்டார்களா?

எனவே, ஒரே வசனத்தில் நிறைவேறாது; என்று நாம் வாழாவிருப்பது அறிவுடமையாகுமா? சிலவேளை நிறைவேறாமலே போகலாம். நிறைவேறினால் .......என்ன செய்வது? நாம் இந்த நாட்டில் அடிமையாக மாறுவதா?

நிறைவேறுமோ! நிறைவேறாதோ! ஒரு யாப்பு வரையப்படும்போது எமது நலன்கள், நமது பாதுகாப்புக் காப்பீடுகள் அதற்குள் உள்வாங்கப்படத் தேவையில்லையா? ஏன் நாம் இந்த நாட்டில் இரண்டாம் தரப்பிரஜைகளா? நாம் வாய்பேசா ஊமைகளா?

மலையகத்தலைவர்கள் மலையகமக்களின் ஒரு சம்பளப்பிரச்சினைக்காக எப்படிப்போராடுகிறார்கள்! தமிழ்தலைவர்கள் அவர்களது பிரச்சினைகளுக்குக் எப்படிப்படிப் போராடுகிறார்கள்! நமக்குத் தலைவர்கள் இல்லையா? பிரதிநிதிகள் இல்லையா? எதற்காகவாவது போராடியிருக்கிறார்களா? போராடி எதையாவது பெற்றுத் தந்திருக்கிறார்களா?

நல்லாட்சி அரசுக்கு மறுவாழ்வு கொடுத்துவிட்டு பறிக்கப்பட்ட ஒரு அலுவலகத்தைக்கூட, பறிக்கப்பட்ட ஒரு ஏக்கர் காணியைக்கூட மீட்கமுடியாத ஓர் அபலைச்சமூகம் நாம். இந்நிலையில் இந்த நகல் யாப்பில் நமக்கு அடிமைச் சாசனம் எழுதிவைத்திருக்கின்றார்களே! யாராவது கவலைப்படுகின்றோமா? இந்த தலைவர்களை, இந்தப்பிரதிநிதிகளை அழைத்து இதில் என்ன இருக்கிறது? ஏன் இது எங்களைக் கண்டுகொள்ளவில்லை? என்றாவது கேட்டிருக்கின்றோமா?

அவர்களுக்கும் அதில் என்ன இருக்கின்றது; என்று தெரியாது. நமக்கும் அதில் என்ன இருக்கின்றதென்று தெரியாது. அவர்களுக்கும் அதைப்பற்றிக் கவலையில்லை. நமக்கும் அதைப்பற்றிக் கவலையில்லை. என்ன சமூகம் நாம்?

அடிவிழுந்தால் ஒரு வாரம் முகநூலில் முழங்குவோம். அடுத்தமுறை அடிவிழும்வரை எதைப்பற்றியும் அலட்டிக்கொள்ளமாட்டோம். அவர்களும் நம்மை நன்றாகவே புரிந்துவைத்திருக்கிறார்கள். அடுத்த தேர்தலுக்கு நமக்குத்தான் வோட்டுப்போடுவார்கள்; என்ற அசையாத நம்பிக்கை அவர்களுக்கு.

நம் தலைவிதியை மாற்றுவதெப்போது?

Read more...

அமைச்சர் ரவி கருணாநாயக்கவிடம் விசாரணை

இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளால், மத்திய வங்கி பிணைமுறி மோசடி சம்பவம் தொடர்பில் அமைச்சர் ரவி கருணாநாயக்கவிடம் வாக்குமூலம் ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் பேர்பசுவல் ட்ரசரீஸ் நிறுவன தலைவர் அர்ஜுன் அலோசியஸிடமும் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் அண்மையில் வாக்குமூலம் பெறப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Read more...

வடக்கில் தேவையாகவுள்ள வீடுகளின் எண்ணிக்கையில் சடுதியான அதிகரிப்பு - ஐ.நா வதிவிடப் பிரதிநிதிக்கு ஆளுநர் தெரிவிப்பு

வட மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் மற்றும் இலங்கைக்கான ஐ.நா வதிவிடப் பிரதிநிதி ஹனா சிங்கர், ஆகியோருக்கிடையிலான சந்திப்பு ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது. இந்த சந்திப்பின்போது வட மாகாணத்தில் நிலவும் காணி பிரச்சினை, தேவையாகவுள்ள வீடுகள் மற்றும் இந்தியாவில் வாழும் இலங்கை அகதிகள் தொடர்பில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.

அண்மைக்காலத்தில் வட மாகாணத்தில் பாதுகாப்பு படைகளிடமுள்ள பொதுமக்களின் காணிகள் மற்றும் விவசாயப் பண்ணைகள் உரிமையாளர்களிடம் கையளிக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் வட மாகாணத்தில் ஏற்கனவே தேவையாகவுள்ள வீடுகளின் எண்ணிக்கையில் சடுதியான அதிகரிப்பு ஏற்பட்டிருப்பதால் அதுதொடர்பிலும் இதன்போது அவதானம் செலுத்தப்பட்டது.

மேலும், இந்தியாவில் அகதிகளாக வாழும் வடக்கு கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த மக்களை மீண்டும் நாட்டுக்கு அழைத்து வருவதற்கு ஐக்கிய நாடுகள் சபையின் உதவியையும் எதிர்பார்ப்பதாக ஆளுநர் கோரிக்கை விடுத்தார். அத்தோடு வட மாகாணத்தில் ஐ.நா மேற்கொள்ளும் அபிவிருத்தி செயற்திட்டங்களுக்கு தனது நன்றியினை தெரிவித்த ஆளுநர், இறுதி போரின்போது பாரியளவில் பாதிக்கப்பட்ட மக்கள் வாழும் மாகாணமாக வட மாகாணம் காணப்படுவதால், இந்த மாகாணத்தில் வாழும் மக்கள் பொருளாதார ரீதியில் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளதால் அதிலிருந்து அம்மக்கள் வெளியே வரக்கூடிய செயற்திட்டங்களையும் முன்னெடுக்குமாறு ஐநாவின் வதிவிடப் பிரதிநிதியிடம் கோரிக்கையினை முன்வைத்தார்.

இதன்போது கருந்துத் தெரிவித்த இலங்கைக்கான ஐநா வதிவிடப் பிரதிநிதி, ஆளுநருடனான இந்த சந்திப்பு மிகுந்த ஆரோக்கியமாக அமைந்திருந்ததுடன் ஆளுநருடைய கோரிக்கைகள் தொடர்பில் அவதானத்தைச் செலுத்துவதாகவும் நம்பிக்கை வெளியிட்டார்.

Read more...

தற்கொலையா? படுகொலையா? பெண்ணின் திடீர் மரணம் தொடர்பான வழக்கில் புதிய திருப்பம்.

மத்திய முகாம் பிரதேசத்தை சேர்ந்த இரு பிள்ளைகளின் தாயான தில்லைநாயகி - வயது 36 என்கிற குடும்ப பெண் 2016 கால பகுதியில் வீட்டில் திடீர் மரணம் அடைந்தது தொடர்பான வழக்கில் புதிய அதிரடி திருப்பம் ஏற்பட்டுள்ளது.

இம்மரணம் தொடர்பாக அப்போது விசாரணை நடத்திய மத்தியமுகாம் பொலிஸ் நிலைய பொலிஸார் இவர் உடலில் தீ மூட்டி தற்கொலை செய்து கொண்டார் என்று கல்முனை நீதவான் நீதிமன்றத்துக்கு அறிக்கை சமர்ப்பித்து இருந்தனர். ஆனால் இது தற்கொலை அல்ல திட்டமிடப்பட்ட படுகொலை என்று இறந்தவரின் தாய், சகோதரன் ஆகியோர் சந்தேகம் தெரிவித்திருந்தனர். அதே நேரத்தில் சட்ட வைத்திய அதிகாரியின் அறிக்கையில் வன்முறை இடம்பெற்றிருப்பதற்கு இடம் உள்ளது என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் அன்றைய கல்முனை நீதிவான் பயாஸ் ரஸாக் இவரின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அறிவித்திருந்தார்.

இந்நிலையில் இம்மரணம் தொடர்பான வழக்கு கல்முனை நீதிவான் ஐ. என். ரிஸ்பான் முன்னிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை இடம்பெற்றபோது இறந்தவரின் தாய், சகோதரன் ஆகியோரை ஆதரித்து ஆஜராகி வருகின்ற சட்டத்தரணி அன்ஸார் மௌலானா மிக நீண்ட காலமாக இழுபட்டு செல்கின்ற மத்தியமுகாம் பொலிஸ் நிலைய பொலிஸாரின் விசாரணையில் திருப்தி இல்லை என்று முன்வைத்தார். இதனால் இவ்விசாரணையை மத்தியமுகாம் பொலிஸ் நிலைய பொலிஸாரிடம் இருந்து நீதிமன்றம் விடுவித்து நியாயமான புலனாய்வு விசாரணை இடம்பெறுவதற்கு தகுந்த கட்டளையை பிறப்பிக்க வேண்டும் என்று கோரினார்.

இறந்தவரின் தாய், சகோதரன் ஆகியோர் சார்பில் சட்டத்தரணியால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை ஏற்று கொண்ட நீதிவான் ஐ. என். ரிஸ்பான் கிழக்கு பிராந்திய சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தலைமையிலான பொலிஸ் குழு இம்மரணம் தொடர்பான விசாரணையை மேற்கொள்வதற்கு உத்தரவு பிறப்பித்தார்.

(எஸ்.அஷ்ரப்கான்)

Read more...

யாழ்.போதனா வைத்தியசாலையின் புதிய கட்டிடம், பிரதமரால் திறந்து வைப்பு.

யாழ்.போதனா வைத்தியசாலையில் புதிதாக அமைக்கப்பட்ட விபத்து மற்றும் அவரச சிகிச்சைப் பிரிவுக்கான கட்டடத்தை, இன்றைய தினம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க திறந்து வைத்துள்ளார்.

வடக்கிற்கு விஜயம் மேற்கொண்டுள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, இன்று பிற்பகல் இந்த கட்டடத்தை திறந்து வைத்துள்ளார். 600 மில்லியன் ரூபாய் செலவில் இந்த விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவு அமைக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வில் அமைச்சர்களான ராஜித சேனாரத்ன, அகிலவிராஜ் காரியவசம், விஜயகலா மகேஸ்வரன், சாகல ரத்நாயக்க, நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, சுமந்திரன், சித்தார்த்தன், சரவணபவன் ஆகியோர் கலந்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை பிரதமர் ரணில் விக்ரமசிங்க, நாளையும், நாளை மறு தினமும் கிளிநொச்சி, முல்லைத்தீவு உள்ளிட்ட இடங்களுக்குச் சென்று அங்கு இடம்பெற்று வரும் அபிவிருத்தி பணிகள் குறித்து ஆராயவுள்ளார்.

Read more...

ஜனாதிபதியின் உறுதிமொழி மீளப்பெறப்பட வேண்டும் - சர்வதேச நீதிபதிகள் கோரிக்கை.

இலங்கையில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடுகின்றவர்களுக்கு மரண தண்டனை விதிப்பது தொடர்பான உறுதிமொழியை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன திரும்பப் பெறுமாறு, சர்வதேச நீதிபதிகளின் ஆணையம், வலியுறுத்தியுள்ளது.

அத்துடன் மரண தண்டனையை மீண்டும் அமுல்படுத்துவது, சர்வதேச மனித உரிமைகள் சட்டத்தின் கடப்பாடுகளை, இலங்கை மீறுவதாக அமையும் என்றும் குறித்த ஆணையம் சுட்டிக்காட்டியுள்ளது.

மேலும், ஜனாதிபதியின் இந்த செயற்பாடு நாட்டின் மனித உரிமைகளுக்கு தீவிர அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என்று, ஆணையத்தின் ஆசிய பசுபிக் பணிப்பாளர் ஃப்றெட்றிக் றவ்ஸ்கி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

எந்த சூழ்நிலையிலும் தாம் மரண தண்டனையை எதிர்ப்பதாகவும், இதனை வாழ்வுரிமை மீறலாகவும், மனிதாபிமானமற்ற சீரழிவாக கருதுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறான தடைகள் வந்தாலும் இரண்டு மாதங்களில் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிப்பது உறுதி என, கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் உரையாற்றிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உறுதியளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Read more...

ஐரோப்பிய ஒன்றியத்தின் கறுப்பு பட்டியலில், இலங்கையும் இணைக்கப்பட்டது.

ஐரோப்பிய ஒன்றியத்தின் கறுப்பு பட்டியலில் இலங்கையும் உள்வாங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பயங்கரவாதத்திற்கு நிதியளித்தல் மற்றும் பண மோசடி குற்றச்சாட்டிலேயே, ஐரோப்பிய ஒன்றியம் இலங்கையை கறுப்பு பட்டியலில் இணைத்துள்ளது.

பண மோசடி மற்றும் எதிர்ப்பு பயங்கரவாத நிதி கட்டமைப்பின் மூலோபாய குறைபாடுகளை கொண்ட சுமார் 23 நாடுகளின் கறுப்பு பட்டியல், ஐரோப்பிய ஒன்றியத்தினால் வெளியிடப்பட்டுள்ளது.

பணமோசடி மற்றும் பயங்கரவாத நிதியளிப்பு அபாயங்களிலிருந்து ஒவ்வொரு நாட்டையும் பாதுகாக்கும் நோக்கில் இந்த பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே தங்களது குறைபாடுகளை விரைவாக நிவர்த்திப்பதற்கு, தகுந்த நடவடிக்கைகளை எடுக்குமாறு, இந்த கறுப்பு பட்டியலில் இடம்பெற்றுள்ள நாடுகளை, ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்தியுள்ளது.

Read more...

பெண்களுக்கு எதிரான வன்முறைகளை கண்டித்து யாழில் ஆர்ப்பாட்டம்

நாளுக்கு நாள் அதிகரித்து வரும் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை இல்லாதொழிக்குமாறு வலியுறுத்தி, வல்லமை சமூக மாற்றத்திற்கான இயக்கத்தினர், இன்றைய தினம் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை மேற்கொண்டனர்.

இந்த கவனயீர்ப்பு போராட்டம், யாழ்ப்பாணம், திருநெல்வேலி சந்தை பகுதியில் இன்று முற்பகல் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது பெண்களுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் வன்முறைகளை இல்லாதொழிக்குமாறு கோரி, பதாகைகளை ஏந்தியதுடன், போராட்டக்காரர்கள் சத்தமாக கோஷங்களையும் எழுப்பியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கவனயீர்ப்பு போராட்டம், பேரணியாக பலாலி வீதியூடாக பரமேஸ்வர சந்திவரைச் சென்று, அங்கிருந்து இராமநாதன் வீதியூடாக யாழ்.பல்கலைக்கழக வாயிலை அடைந்தது.

பல்கலைக்கழக வாயிலிலும் சில நிமிடங்கள் போராட்டக்காரர்கள், தமது போராட்டத்தினை முன்னெடுத்து, பின்னர் அங்கிருந்து களைந்து சென்றனர்.

யாழில் பதின்ம வயது சிறுமிகள் மீது, பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொள்ளப்பட்டு வரும் சம்பவங்கள், திகரித்துள்ள நிலையில், இந்த கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Read more...

ராஜபக்ஷக்களுக்கு இடையில், ஒரு பனிப்போர் நிலவுகிறது - பொன்சேகா

தற்போது ஜனாதிபதி தேர்தலின் வேட்பாளர் தொடர்பாக ராஜபக்ஷக்களுக்கு இடையில், கடும் பனிப்போர் நிலவுவதாக, ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

களனியில் பகுதியில் இன்றைய தினம் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டதன் பின்னர், ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை குறிப்பிட்டார்.

அடுத்து இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியோ, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவோ, ஐக்கிய தேசிய கட்சிக்கு ஒருபோதும் சவாலாக இருக்கப் போவதில்லை.

இந்த தேர்தலில் தாங்கள் வெற்றிபெற போவதாக, அந்த கட்சிகள் கூறி வருகின்றன. எனினும் அது கனவாக மட்டுமே இருக்கும்.

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி, மக்கள் மத்தியிலிருந்து தூக்கி எறியப்பட்டுள்ள நிலையில், ஐக்கிய தேசிய கட்சியின் பிரதான எதிர்க் கட்சியாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மாறியுள்ளது.

எனவே எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சியும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவும் பிரதான இரு சக்திகளாக விளங்கும் என, ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா மேலும் குறிப்பிட்டார்.

Read more...

கிளிநொச்சி வெள்ளப்பெருக்குக்கு இரணைமடுக் குளமா காரணம் ? - அறிக்கை ஆளுநரிடம் கையளிப்பு

கிளிநொச்சியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்குக்கு இரணைமடுக் குளம்தான் காரணமா? என்பது தொடர்பான உண்மை நிலையை கண்டறியும் வடமாகாண ஆளுநர் சுரேன் ரகவானால் நியமிக்கப்பட்ட குழுவின் இடைக்கால விசாரணை அறிக்கை, ஆளுநரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

இந்த இடைக்கால அறிக்கை விசாரணைக் குழுவின் தலைவர் பொறியியலாளர் இரகுநாதனினால் ஆளுநரிடம் கையளிக்கப்பட்டது. கடந்த வருடம் டிசம்பர் மாதம் கிளிநொச்ச்சி பகுதி மக்கள் பெரும் வெள்ளப் பெருக்கு முகம் கொடுத்து இருந்தார்கள். இது குறித்த விசாரணைகளை ஆளுநரால் அமைக்கப்பட்ட குழுவினர் மேற்கொண்டு இருந்தார்கள்.

இந்த நிலையில் குறித்த அறிக்கை ஆளுனரிடம் கையளிக்கபட்டுள்ளது.
இதன்போது ஆளுநரின் செயலாளரும் ஆளுனருடன் உடன் இருந்தார்.

Read more...

மாகந்துர மதூஷின் 2 வாகனங்கள் கண்டுபிடிப்பு

மாகந்துர மதூஷின் இரண்டு வாகனங்களை பொலிஸ் விஷேட அதிரடி பிரிவினர் கண்டுபிடித்துள்ளனர். சபுகஸ்கந்த பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பமுனுவல, கோனவில பகுதியில் உள்ள அவரது இரண்டாவது மனைவியின் சித்தி வீட்டில் இருந்து குறித்த வாகனங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இதன்போது இரண்டாவது மனைவியின் தாயின் பெயரில் பதிவு செய்யப்பட்டிருந்த KDH ரக வாகனம் ஒன்றும் இரண்டாவது மனைவியின் சித்தப்பா பெயரில் பதிவு செய்யப்பட்டிருந்த பிராடோ வகை வாகனம் ஒன்றையும் பொலிஸ் விஷேட அதிரடி பிரிவினர் கண்டுபிடித்துள்ளனர்.

Read more...

ஜனாதிபதி தலைமையில் விசேட மாநாடு இன்று

சுற்றாடல் பாதுகாப்புச் செயற்றிட்டத்தின் ஊடாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள அநுராதபுர மாவட்ட விசேட மாநாடு இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இடம்பெறவுள்ளது. இந்த மாநாடு அநுராதபுரம் சல்காது விளையாட்டரங்கில் இம்மாநாடு இடம்பெறவுள்ளது. இதில் அநுராதபுர மாவட்ட மக்கள் முகம்கொடுக்கும் சுற்றாடல் பிரச்சினைகள் தொடர்பில் அவதானம் செலுத்தப்படவுள்ளது.

குறிப்பாக அவர்கள் முகம் கொடுத்து வரும் காட்டுயானை பிரச்சினை தொடர்பிலும் இதன்போது விசேட அவதானம் செலுத்தப்படவுள்ள அதேநேரம், கழிவகற்றல் தொடர்பில் காணப்படும் முக்கிய பிரச்சினைகள், நீர் முகாமைத்துவம் மற்றும் வன பரிபாலனம் ஆகியவற்றில் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பிலும் அதிக கவனம் செலுத்தப்படவுள்ளது.

இதேவேளை, இம் மாநாட்டில் மகாசங்கத்தினர் உள்ளிட்ட சர்வ மதத் தலைவர்கள், அரச அதிகாரிகள் மற்றும் பாடசாலை மாணவர்கள் கலந்துகொள்ளவுள்ளதுடன், அவர்களினூடாக சுற்றாடல் பாதுகாப்பு தொடர்பில் மக்களை தெளிவூட்டுவதும் இம்மாநாட்டின் முக்கிய நோக்கமாகும்.

Read more...

முதலாம்ஆண்டிற்கு மாணவன் ஒருவரை சேர்ந்துக் கொள்வதற்கு 1 இலட்சம் ரூபா இலஞ்சம் - வளமாக சிக்கினார் அதிபர்

காலியில் உள்ள பெண்கள் பாடசாலை அதிபர் இலஞ்சம் பெற முற்பட்ட சந்தர்ப்பத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த அதிபர், 1 ஆம் ஆண்டிற்கு மாணவன் ஒருவரை சேர்ந்துக் கொள்வதற்காக1 இலட்சம் ரூபா இலஞ்சம் பெற்றுக் கொள்ள முற்பட்ட போது, அவர் இலஞ்ச ஊழல் ஒழிப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது, இரண்டு வாரங்களாக குறித்த மாணவன் பாடசாலைக்கு வருகை தந்த போது அவருடைய பெயர், இடாப்பில் பதிவு செய்யப்பட்டிருக்கவில்லை. குறித்த மாணவனின் பெயர் இடாப்பில் பதிய படவேண்டுமாயின், 1 இலட்சம் ரூபா கொடுக்க வேண்டும் என்று அதிபர் தெரிவித்துள்ளார்.

இதனை அடுத்து குறித்த பெற்றோர் இந்த விடயம் தொடர்பில் இலஞ்ச ஊழல் ஒழிப்பு பிரிவினரிடம் முறைப்பாடு செய்துள்ளனர். பின்னர் நேற்றைய நாளில் குறிப்பிட்ட இலஞ்சத் தொகையை, அதிபருக்கு வழங்க முற்பட்ட சந்தர்ப்பத்தில், குறித்த அதிபர் கைதாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Read more...

வடக்கு, தெற்கு மக்களுக்கு இடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த அரசாங்கம் திடசங்கற்பம் பூண்டுள்ளது - நளீன் பண்டார

ரூபாவின் பெறுமதியை ஸ்திரப்படுத்த அரசாங்கம் வலுவான வேலைத்திட்டத்தை முன்னெடுத்திருப்பதாக சட்டம், ஒழுங்கு பிரதியமைச்சர் நளீன் பண்டார தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் உரையாற்றிய பிரதியமைச்சர் இதனை கூறினார். இன்றளவில் நாட்டின் பொருளாதாரமும் குறிப்பிடத்தக்களவு ஸ்திர நிலையை அடைந்திருப்பதாக தெரிவித்த அவர், வடக்கு மக்களுக்கும், தெற்கு மக்களுக்கும் இடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த அரசாங்கம் திடசங்கற்பம் பூண்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

Read more...

நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி விடுதலை

பண்டாரவளையில் பொலிஸ் போதை தடுப்பு பிரிவு உத்தியோகத்தர் ஒருவர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் நீதிமன்றத்தில் சரண் அடைந்திருந்த ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி, மற்றும் அவரது பாதுகாப்பு உத்தியோகத்தருக்கும் நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி தனது சட்டத்தரணியூடாக பண்டாரவளை நீதவான் நீதிமன்றில் நேற்று முன்தினம் ஆஜராகி இருந்தார்.

இந்நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி மற்றும் அவரது உத்தியோகத்தர் ஆகிய இருவரும், பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

Read more...

மாவனல்லை விவகாரம் தொடர்பில் சந்தேக நபர்களுக்கு ஆதரவாக நீதிமன்றத்தில் ஆஜராகாத சட்டத்தரணிகள்

புத்தர் சிலைகளுக்கு சேதம் ஏற்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர்களை எதிர்வரும் 27 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

மாவனல்லையிலும், அதனை அண்மித்த பிரதேசங்களிலும் அண்மையில் புத்தர் சிலைகளுக்கு சேதம் விளைவிக்கப்பட்டிருந்தது.
இந்த குற்றம் இழைத்தமை தொடர்பான வழக்கு, நேற்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இச்சம்பவம் தொடர்பில் பெண் ஒருவர் உட்பட 17 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் தவிர, குறித்த குற்றத்தை புரிந்தார்கள் என்ற சந்தேகத்தின் பேரில் நாவலப்பிட்டிய -உலப்பனை பிரதேசத்தில் வசிக்கும் இருவர் கைதாகியுள்ளனர். அதில் பெண் ஒருவரும் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இவர்களும் நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நேற்று கேகாலை சிறைச்சாலையிலுள்ள 11 சந்தேகநபர்கள் கடுமையான பாதுகாப்புடன் நீதி மன்றத்திற்கு அழைத்து வரப்பட்டதுடன், மேலும் வனாத்தவில்லு பிரதேசத்திலிருந்து கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் நான்கு பேர், கொழும்பு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திலிருந்து அழைத்து வரப்பட்டுள்ளனர்.

குறித்த நால்வர் மீதும் மாவனல்லையில் புத்தர் சிலையை சேதப்படுத்தியவர்களுக்கு ஆயுதப் பயிற்சி வழங்கியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இதேவேளை, இந்த வழக்கு தொடர்பில் சந்தேக நபர்களுக்கு ஆதரவாக எந்தவொரு சட்டத்தரணியும் நீதி மன்றத்தில் ஆஜராகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Read more...

Wednesday, February 13, 2019

ஜனாதிபதி படுகொலை சூழ்ச்சியுடன், மாகந்துர மதுஷிற்கு தொடர்பு உள்ளதா?

முன்னாள் பிரதி பொலிஸ்மா அதிபர் நாலக டி சில்வா, பிரபல பாதாள உலக குழு தலைவர் மாகந்துர மதுஷ் மற்றும் பாடகர் அமல் பெரேரா ஆகியோருக்கு இடையில் ஏதேனும் தொடர்பு உள்ளதா? என்ற கோணத்தில், தற்போது தீவிர விசாரணைகள் இடம்பெற்று வருவதாக குற்றவியல் புலனாய்வு திணைக்களம் நீதிமன்றில் தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட முன்னாள் பிரதி பொலிஸ்மா அதிபர் நாலக டி சில்வாவின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

குறித்த வழக்கு விசாரணையானது, இன்று கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் எடுத்துக் கொள்ளப்பட்ட போதே, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

அத்துடன் இந்த விசாரணைகளின் போது, அமல் பெரேரா மற்றும் மாகந்துர மதுஷ், தற்போது டுபாய் பொலிஸால் கைது செய்யப்பட்டு, தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக, நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டப்பட்டது.

இந்த நிலையில் கடந்த 2016 ஆம் ஆண்டு ஜூலை 21இல் பாடகர் அமல் பெரேரா, நாலக டி சில்வாவை, அவரது அலுவலகத்தில் வைத்து சந்தித்தார் என்று, குற்றவியல் புலனாய்வு திணைக்களத்தின் அதிகாரிகள், நீதிமன்றத்தில் தெரிவித்தது.

அதன்படி குறித்த விடயம் தொடர்பாக விசாரணைகளை நடத்த இன்டர்போல் உதவியை நாடவுள்ளதாகவும், குற்றவியல் புலனாய்வு திணைக்களம் நீதிமன்றில் தெரிவித்துள்ளது.

மேலும் முன்னாள் பிரதி பொலிஸ்மா அதிபர் நாலக டி சில்வா மற்றும் இந்திய பிரஜை எம்.தோமஸ் ஆகியோரின் விளக்கமறியல் எதிர்வரும் 27 ஆம் திகதி வரை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read more...

பிரதமரின் கோரிக்கையை அமைச்சரவை நிராகரித்தது.

உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை அமைக்க அனுமதி வழங்குமாறு, பிரதமர் அமைச்சரவையிடம் கோரிய போதும், அது நிராகரிக்கப்பட்டுள்ளது.

குறித்த ஆணைக்குழுவை அமைப்பதற்காக அனுமதி கோரும் பத்திரத்தை, பிரதமர் ரணில் விக்ரமசிங்க நேற்று அமைச்சரவையில் சமர்ப்பித்திருந்தார்.

எனினும், உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை அமைப்பதற்கு அமைச்சரவையில் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு அமைச்சராக பதவி வகிக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இந்த முன்மொழிவு தொடர்பாக ஆராய்வதற்கு, கால அவகாசம் தேவைப்படுவதாக தெரிவித்துள்ளார்.

அது மாத்திரமல்லாது அமைச்சர் சம்பிக்க ரணவக்கவும், இந்த ஆணைக்குழு தொடர்பான அமைச்சரவைப் பத்திரத்தை ஆராய, கால அவகாசம் கோரியுள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பான முக்கிய விவாதம், விரைவில் இடம்பெறவுள்ள நிலையில், பிரதமர் ரணில் விக்ரமசிங்க, குறித்த ஆணைக்குழுவை அமைப்பதற்கு அனுமதி கோரியிருந்தார்.

இந்த ஆணைக்குழு முன்னிலையில் போர்க்குற்றங்கள் தொடர்பாக குற்றஞ்சாட்டப்பட்டவர்கள், தமது குற்றங்களை ஒப்புக்கொள்ள வாய்ப்பு வழங்கப்படும்.

இதேவேளை கடந்த 2015ஆம் ஆண்டிலும், ஜெனிவாவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கு அமைய, உண்மை நல்லிணக்க ஆணைக்குழு அமைக்கப்படும் என, அரசாங்கம் உறுதியளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Read more...

பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்கள், வாக்களிப்பு இயந்திரமாக மட்டும் இருக்கக்கூடாது - வேலுகுமார்

நாடாளுமன்றத்தில் தக்க நேரத்தில், பெரும்பான்மையை நிரூபிக்கவும், சரியான சட்டமூலங்களை நிறைவேற்றவும், வாக்களிப்பு இயந்திரமாக மாத்திரம் பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்களை பயன்படுத்தப்பட கூடாது என, என நாடாளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் தெரிவித்துள்ளார்.

கண்டியில் இன்று நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட போதே அவர் இதனை குறிப்பிட்டார்.

மக்களால் தெரிவு செய்யப்படும் பிரதிநிதிகளுக்கு, நாடாளுமன்றத்தில் முன்னுரிமை வழங்கப்பட வேண்டும். குறிப்பாக பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அதிக வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும்.

ஆனால், இலங்கையில் இன்னும் கட்சி அரசியலே நடத்தப்படுவதால், அதி உயர் சபையிலும் ‘வெட்டுக்குத்து’ அரசியல் ஏதாவதொரு வடிவத்தில், தொடர்ந்த நிலையில் இருப்பது, கசப்பான உண்மையாகும்.

துறைசார் விடயத்தில் தேர்ச்சி இல்லாதவர்களுக்கு அந்த அமைச்சுப் பதவி வழங்கப்படுகின்றது. அரசாங்க இயந்திரம் சிறப்பாக செயற்படுவதற்கு இத்தகைய அணுகுமுறைகளே பெரும் தடையாக உள்ளன.

அமைச்சுப் பதவி கிடைக்காததால், அரசாங்கத்தையே இவ்வாறு விமர்சிக்கின்றார் என, சிலர் என் மீது வியாக்கியானம் கூறலாம். ஆனால், உண்மை நிலைமையை மக்களுக்கு தெளிவுப்படுத்த வேண்டிய தேவைப்பாடு எமக்குள்ளது.

நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை பெறுவதற்கும், சட்டமூலங்களை நிறைவேற்றிக் கொள்வதற்குமென வாக்களிப்பு இயந்திரமாக மட்டும் பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்களை பயன்படுத்தக்கூடாது. மாறாக நாடாளுமன்றத்தில் காணப்படும் தற்போதைய அரசியல் முறைமை மாற்றியமைக்கப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் தெரிவித்தார்.

Read more...

முருகன் மற்றும் நளினிக்கு வழங்கப்பட்டு வந்த சலுகைகள் அனைத்தும் ரத்து!

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வரும் 7 பேரில், முருகன் மற்றும் அவரது மனைவி நளினி ஆகியோருக்கு வழங்கப்பட்டு வந்த சலுகைகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமது விடுதலை தொடர்பான ஆவணத்தில், தமிழ்நாடு ஆளுநர் கையெழுத்திடாமல், இழுத்தடிப்பு செய்வதாக குறிப்பிட்டு, முருகன் மற்றும் அவரது மனைவி நளினி ஆகிய இருவரும், உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தமிழ்நாடு வேலூர் ஆண்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முருகன், 6 ஆவது நாளாகவும், பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நளினி 4 ஆவது நாளாகவும் தமது உண்ணாவிரதத்தை முன்னெடுத்துள்ளனர்.

இந்த நிலையில், குறித்த உண்ணாவிரத போராட்டத்தின் மூலம் சிறைச்சாலையின் விதிகளை மீறியதாக குறிப்பிட்டு, முருகன் மற்றும் அவரது மனைவி நளினி ஆகியோருக்கு வழங்கப்பட்டு வந்த சலுகைகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

உண்ணாவிரதப் போராட்டத்தை கைவிட்டால் மட்டுமே, மீண்டும் அவர்களுக்கான சலுகைகளை வழங்குவது குறித்து பரிசீலனை செய்ய முடியும் என, தமிழ்நாடு சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

எனினும், தமிழ்நாடு ஆளுநரிடமிருந்து தீர்க்கமான பதிலொன்று வரும் வரை, தாங்கள் உண்ணாவிரதத்தை கைவிடப் போவதில்லையென நளினி மற்றும் முருகன் ஆகியோர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், நளினி மற்றும் முருகன் ஆகிய இருவருக்கும் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read more...

குற்றங்களின் இரகசியத்தன்மையை அறிவதற்காக, விசேட மென்பொருள் அறிமுகம்.

குற்றங்களின் இரகசியத் தன்மையை அறிந்து கொள்ளும் நோக்கில், விசேட மென்பொருளொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.

முக்கிய குற்றங்கள் இடம்பெறுவதற்கான காரணங்கள், குற்றவாளிகளின் செயற்பாடுகளை இனங்கண்டு கொள்ளவும், குற்றங்கள் இடம்பெறும் கால நேரங்களை அறிந்து கொள்ளும் நோக்கிலும், இந்த மென்பொருள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மென்பொருள் நாடு முழுவதிலும் உள்ள அனைத்துக் காவல்துறை நிலையங்களையும் உள்ளடக்கியதாக உருவாக்கப்பட்டுள்ளது.

தற்போது, காவல்துறைகளின் செயற்பாட்டிலுள்ள VPN வலையமைப்பிற்குள் இந்த மென்பொருளை இணைத்துள்ளதாகவும், இதன்படி குற்றம் இடம்பெற்ற இடத்தை Google வரைபடத்தினூடாக கண்டறிந்து அதனூடாக தகவல்களைப் பெற்றுக் கொள்ள முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஶ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகமும், இலங்கை காவல்துறையும் இணைந்து, இந்த இரகசிய தகவல் மென்பொளை தயாரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Read more...

பாதாள குழுவினரும், அரசியல்வாதிகளும் ஒரே நாணயத்தின் இரண்டு பக்கங்களாவர் - புத்திக பத்திரண!

பாதாள உலக குழுவினரும், இலங்கையின் அரசியல்வாதிகளும் ஒரே நாணயத்தின் இரண்டு பக்கங்களைப் போன்று மாறியுள்ளதாக, பிரதியமைச்சர் புத்திக பத்திரண தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே, அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 35 வருடங்களுக்குள் அரசியல்வாதிகளுக்கும், பாதாள உலக குழுவினருக்கும் இடையிலான உறவு பாரியளவில் அதிகரித்துள்ளது.
இந்த நாட்டில் உள்ள அரசியல்வாதிகள் மனசாட்சிக்கு விரோதமின்றி மக்களுக்காக மாத்திரமே, சேவை புரிந்திருந்தால், பாதாள குழு உறுப்பினர்களுக்கு துணைபோயிருக்க மாட்டார்கள்.

பாதாள உலக் குழுவின் முக்கிய தலைவர்களில் ஒருவரான மாகந்துர மதுஷ் உள்ளிட்ட சந்தேக நபர்கள் டுபாயில் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்களுக்கும், இலங்கை அரசியல்வாதிகளுக்கும் இடையில் தொடர்புகள் உள்ளதாக, பல செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளன. இது குறித்து கருத்து வெளியிட்ட போதே, பிரதியமைச்சர் புத்திக பத்திரண இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்

Read more...

உயர் தேசிய டிப்ளோமா கற்கை நெறி மாணவர்கள் போராட்டம் - கொழுப்பில் கடும் வாகன நெரிசல்

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, உயர் தேசிய டிப்ளோமா கற்கை நெறி மாணவர்கள் இன்றைய தினம் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த போராட்டம் கொழும்பு – புஞ்சி பொரளை பகுதியில் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த போராட்டம் காரணமாக புஞ்சி பொரளை மற்றும் கொழும்பு நகர மண்டப பகுதிகளில், கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பல வருடங்களாக தமது கற்கை நெறியில் காணப்படும் பிரச்சினைகளுக்கு தீர்வினைப் பெற்றுத் தரும்படி வலியுறுத்தியே, மாணவர்களால் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

Read more...

மின்தூக்கி செயலிழந்தமை குறித்த தர மதிப்பீட்டு அறிக்கை, சபாநாயகரிடம் இன்று கையளிக்கப்படும்.

பாராளுமன்ற மின்தூக்கிகள் தொடர்பிலான தரமதிப்பீட்டு அறிக்கை இன்று சபாநாயகர் கருஜயசூரியவிடம் கையளிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பாராளுமன்றத்தில் மின்தூக்கியை செயற்படுத்திய நிறுவனத்தினால் இந்த அறிக்கை சபாநாயகரிடம் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

குறித்த நிறுவனத்தின் அதிகாரிகள், இந்த விடயம் தொடர்பில் கடந்த சில நாட்களாக ஆய்வுகளை முன்னெடுத்திருந்ததாக, பாராளுமன்ற படைக்கள சேவிதர் நரேந்திர பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றக் கட்டடத் தொகுதியினுள் 10 மின்தூக்கிகள் செயற்பாட்டில் உள்ளன. அவற்றில் இரண்டு, பாராளுமன்ற உறுப்பினர்களின் பாவனைக்காக ஒதுக்கப்பட்டுள்ளன.

கடந்த 7ஆம் திகதி பாராளுமன்ற உறுப்பினர்கள் பயன்படுத்தும் மின்தூக்கி செயலிழந்தமையால், பாராளுமன்ற உறுப்பினர்கள் 12 பேர், சுமார் 20 நிமிடங்கள் மின்தூக்கிக்குள் சிக்கிக் கொண்டனர்.

இதனையடுத்து, மின்தூக்கி செயலிழந்தமைக்கான காரணம் குறித்து, மின்தூக்கியை நிர்வகிக்கும் தனியார் நிறுவனம் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என, சபாநாயகர் கரு ஜயசூரிய கோரிக்கை முன்வைத்தார்.

இது குறித்த அறிக்கைகையே இன்றைய தினம் சபாநாயகரிடம் கையளிக்கப்படவுள்ளது. இதேவேளை நாடாளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பு நோக்கத்தை கருத்தில் கொண்டு, 6 பேர் மாத்திரம் மின்தூக்கியில் பயணிக்கும் அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளதுடன், மின்தூக்கி செயற்பாட்டாளர் ஒருவரும், பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read more...
Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com