Wednesday, February 13, 2019

சி.வி.விக்னேஸ்வரனின் ஆட்சேபனை, நீதிமன்றத்தினால் நிராகரிப்பு!

வட மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனின் ஆட்சேபனையை, நீதிமன்றம் நிராகரித்துள்ளது. நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டு தொடர்பில் வட மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் உள்ளிட்ட மூவரினால் முன்வைக்கப்பட்ட அடிப்படை ஆட்சேபனையை நிராகரித்து, மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று, இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

வட மாகாண முன்னாள் அமைச்சர் பா. டெனிஸ்வரனை அமைச்சுப் பதவியில் இருந்து நீக்குவது தொடர்பில் வௌியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை அமுல்படுத்துவதை இடைநிறுத்தும் வகையில், மேன்முறையீட்டு நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட உத்தரவினை நடைமுறைப்படுத்தாமையினால், சி.வி. விக்னேஸ்வரன் நீதிமன்றத்தை அவமதித்ததாக குற்றம் சுமத்தப்பட்டது.

மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய உத்தரவிற்கு அமைய, தம்மை மீண்டும் அமைச்சுப் பதவிக்கு நியமிக்காமல் சி.வி.விக்னேஸ்வரன் செயற்பட்டுள்ளமையினால், அவர் நீதிமன்றத்தை அவமதித்துள்ளதாக பா. டெனிஸ்வரன் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இது குறித்து முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் ஆட்சேபனை தெரிவித்து நீதிமன்றத்தை நாடிய போதும், நீதிமன்றம் சி.வி.விக்னேஸ்வரனின் ஆட்சேபனையை நிராகரித்துள்ளது. அத்துடன் குறித்த வழக்கை எதிர்வரும் 15 ஆம் திகதி வரை, நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

Read more...

நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி நீதிமன்றத்தில் சரணடைந்தார்.

ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி, இன்றைய தினம் நீதிமன்றத்தில் சரணடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

போதைப்பொருள் தடுப்பு பிரிவு பொலிஸ் அதிகாரியொருவரை தாக்கியதாக, சமிந்த விஜேசிறி மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. இந்த சம்பவம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறியை கைது செய்ய, சபாநாயகர் அனுமதி வழங்கியிருந்த நிலையிலேயே இவர் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார்.

போதைப்பொருள் தடுப்பு காவல்துறை அதிகாரிகள் சிலருடன், நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி மற்றும் அவருடைய பாதுகாப்பு அதிகாரிகள், சாரதி ஆகியோருக்கு இடையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை கைகலப்பு ஏற்பட்டிருந்தது.

இதன்போது, காயமடைந்த போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் பொலிஸ் கான்ஸ்டபிள், பண்டாரவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

இதனை அடுத்து சபாநாயகர் கரு ஜயசூரிய, நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறியை கைது செய்யவதற்கான உத்தரவை வழங்கியிருந்த நிலையில், அவர் இன்று நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார்.

இந்த சம்பவத்தில் காயமடைந்த சமிந்த விஜேசிறியின் சாரதி, தியத்தலாவ வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், நேற்று முன் தினத்தில் கைது செய்யப்பட்டார். அத்துடன் அவரை எதிர்வரும் 18 ஆம் திகதி வரை, விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Read more...

வட மாகாண கல்வி வளர்ச்சிக்கு உதவ, இந்தியா முன்வந்துள்ளது.

இலங்கையில் இடம்பெற்ற யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வட மாகாண மாணவர்களின் கல்வி நிலையை மேம்படுத்துவதற்கு, இந்தியா எந்தவித உதவிகளையும் வழங்க தயாராக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் முன்னணி பல்கலைக் கழகங்களின் பிரதிநிகளின் தூதுக்குழுவினர் இன்றைய தினம், வடக்கு மாகாண ஆளுநர், கலாநிதி சுரேன் ராகவனை சந்தித்தனர்.

இந்த சந்திப்பின் போது, பின்தங்கிய நிலையிலுள்ள வட மாகாண கல்வியை, மீண்டும் கட்டியெழுப்ப துணை புரியுமாறு இந்திய தூதுக்குழுவிடம், ஆளுநர் சுரேன் ராகவன் வேண்டுகோள் விடுத்தார்.

ஆளுநரின் வேண்டுகோளை ஏற்றுக் கொண்ட இந்திய பிரதிநிதிகள், வட மாகாண கல்வி வளர்ச்சிக்கு தம்மால் முடிந்த உதவிகளை வழங்க தயாராகவுள்ளதாக குறிப்பிட்டனர்.

இதேவேளை, இலங்கை- இந்திய பல்கலைக்கழக பீடங்களுக்கிடையில் மாணவர் பரிமாற்ற நிகழ்ச்சித் திட்டத்தை அறிமுகப்படுத்துவது தொடர்பாகவும், வட ஆளுநர், இந்திய அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளார்.

இந்த விடயம் தொடர்பாக இந்திய தூதரகத்துடன் இணைந்து மேற்கொள்ளக்கூடிய சாத்தியமான வழிமுறைகளை ஆராய்ந்து நடவடிக்கை எடுப்பதாக, இதன்போது இந்திய பிரதிநிதிகள் உறுதியளித்துள்ளதாக, வட மாகாண ஆளுநர் அலுவலக செய்திகள் தெரிவிக்கின்றன.

Read more...

அமைச்சர்களது எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு, தமிழ் தேசிய கூட்டமைப்பு ஒருபோதும் அனுமதிக்காது - யோகேஸ்வரன்.

அமைச்சர்களது எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு, ஒருபோதும் ஆதரவு வழங்க மாட்டாதென, அந்த கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு – செங்கலடி பிரதேச செயலகப்பிரிவிலுள்ள பொதுநல அமைப்புக்களுக்கு உபகரணங்களை கையளிக்கும் நிகழ்வு, பிரதேச செயலாளர் ந.வில்வரத்தினம் தலைமையில் இடம்பெற்றது.
இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே, அவர் இதனை தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசிய கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்களை இணைத்து தேசிய அரசாங்கத்தை அமைப்பதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு முழுமையான ஆதரவை வழங்கும். ஆனால், அமைச்சர்களது எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு ஒருபோதும் ஆதரவளிக்காது.

தற்போது வரையப்பட்டுள்ள புதிய அரசியல் யாப்பினை நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற வேண்டுமாயின், மூன்றில் இரண்டு பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவு தேவைப்படுகின்றது.
ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கத்தில், போதுமான நாடாளுமன்ற உறுப்பினர்கள், தற்போது இல்லை.

தேசிய அரசாங்கம் என்ற போர்வையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பிரதிநிதிகளும் இணைக்கப்படுவார்களாக இருந்தால், நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை வரக்கூடிய சூழல் ஏற்படும். அவ்வாறு தேசிய அரசாங்கம் அமைக்கப்பட்டால், புதிதாக கொண்டு வரப்படும் அரசியல் யாப்பினை நிறைவேற்ற முடியும்.

இந்த நாட்டில் சகல பிரஜைகளுக்கும் ஏற்ற வகையில் புதிய அரசியல் யாப்பு கொண்டுவரப்பட்டு, நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவுடன் நிறைவேற்ற வேண்டும் என்பதில், தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுதியாக உள்ளது.

ஆனால், சில தரப்பினர் எதிர்பார்ப்பது போல, அமைச்சர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் தீர்மானத்திற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு ஒருபோதும் ஆதரவு வழங்காது என, தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.


Read more...

பல சுற்றுப் பேச்சுவார்த்தைகளுக்கு பின்னர், வெறுமனே 50 ரூபாவை மட்டும் வழங்க இணக்கம்.

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த அடிப்படை வேதனமாக 1000 ரூபாய் வழங்கப்படாத நிலையில், அது குறித்து தமிழ் முற்போக்கு கூட்டணி, அரசாங்கம் மீது தமது அதிருப்தியை வெளியிட்டது.

இதனை அடுத்து தமிழ் முற்போக்கு கூட்டணி, அரசாங்க தரப்பினருடன் பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள உறவு குறித்த பல சுற்றுப் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்தது. இந்த பேச்சுவார்த்தைகளில் எட்டப்பட்ட தீர்மானத்திற்கு அமைய, அடிப்படை வேதனத்துடன் மேலதிகமாக, 50 ரூபாயை பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு நிவாரண நிதியாக வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

தேயிலைச் சபையில் இன்றைய தினம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த, பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் நவீன் திஸாநாயக்க இதனை அறிவித்துள்ளார்.

இதற்கான அமைச்சரவை யோசனை எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் தாக்கல் செய்யப்படவுள்ளதாகவும், அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் இந்த நிவாரண நிதி, எதிர்வரும் ஒரு வருடக் காலத்திற்கு மட்டுமே வழங்கப்படவுள்ளது. இந்த நிவாரண நிதிக்கென, தேயிலை சபையின் நிதியிலிருந்து 1.2 பில்லியன் ரூபாய் கடன் அடிப்படையில் ஒதுக்கப்படவுள்ளது. இந்த கடன் தொகை பின்னர் அரசாங்கத்தினால் தேயிலை சபைக்கு வழங்கப்படும் என்றும் அமைச்சர் நவீன் திஸாநாயக்க கூறினார்.

பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பளம் அதிகரிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியும் அவர்களுக்கு 1000 ரூபாய் வழங்கப்படவில்லை. அத்துடன், தொழிலாளர்கள் எதிர்க்கும் கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்தானத்தை அடுத்து மலையகம் முழுவதும் பெரும் பதற்றம் நிலவியது.

முன்னதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க, பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் நவீன் திஸாநாயக்க, தமிழ் முற்போக்கு கூட்டணியை அங்கத்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோருக்கு இடையில் பல சுற்றுப் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Read more...

மனித எலும்பு கூடுகளின் ஆய்வு அறிக்கை, தயார் நிலையில் உள்ளது - சமிந்த ராஜபக்ச.

மன்னார் சதொச வளாகத்தில் வைத்து மீட்கப்பட்ட மனித எச்சங்கள், கார்பன் பரிசோதனைக்காக அமெரிக்காவிற்கு அனுப்பப்பட்ட நிலையில், தற்போது அதன் ஆய்வு அறிக்கை தயார் நிலையில் உள்ளதாக, சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இந்த ஆய்வு அறிக்கை, நாளைய தினம், இலங்கைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக, அவர் குறிப்பிட்டார்.

அத்துடன் குறித்த ஆய்வு அறிக்கை, கடந்த 10 வருட காலத்தை அடிப்படையாகக் கொண்டு அமைந்திருக்கும் என்றும், சமிந்த ராஜபக்ச குறிப்பிட்டார்.

மன்னார் மனித புதைக்குழியின் அகழ்வுப் பணிகள், 144 ஆவது நாளாக இன்றும் இடம்பெற்றன. அகழ்வுப் பணிக்கு பொறுப்பான சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ஷ தலைமையில், இன்றைய தினம் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டன. இந்த பணிகளின் பின்னர், ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறினார்.

மன்னார் மனித புதைக்குழியிலிருந்து இதுவரை 316 மனித எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அவற்றில் 307 மனித எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளன. மீட்கப்பட்ட மனித எலும்புக்கூடுகளில் 26 எலும்புக்கூடுகள் சிறுவர்களுடையதாகும்.

இதேவேளை இன்றைய தினம் இடம்பெற்ற அகழ்வுப் பணிகளின் போது சுமார் 40ற்கும் மேற்பட்ட பொலிஸார், பயிற்சி பெற்றுக் கொள்ளும் அடிப்படையில், மனித புதைக்குழியின் அகழ்வுப் பணிகள் இடம்பெறும் பகுதிக்கு வருகை தந்ததாக சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அத்துடன் வெகு விரைவில் மன்னார் மனித எச்சங்கள் தொடர்பில் எழுந்துள்ள மர்மங்கள், நிவர்திக்கப்படும் எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

Read more...

பெருந்தொகை பெறுமதியான வெளிநாட்டு சிகரட்களுடன் ஒருவர் கைது

டுபாயில் இருந்து சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு ஒரு தொகை ​வெளிநாட்டு சிகரட்களை கொண்டு வந்த இலங்கையர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். மினுவங்கொட பகுதியை சேர்ந்த 41 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர் நேற்றுக் காலை 8.35 மணியளவில் டுபாயில் இருந்து எமிரேட்ஸ் விமான சேவைக்கு சொந்தமான EK 650 என்ற விமானத்தில் இலங்கையை வந்தடைந்தார். அவரது பயணப் பொதியில் இருந்து 148 பெட்டிகளில் அடைக்கப்பட்ட 29,600 சிகரட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதுடன், அவற்றின் பெறுமதி சுமார் 1.6 மில்லியன் ரூபாய் என்று சுங்கப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பில் சுங்க அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Read more...

வடக்கின் நீர் பிரச்சனைக்கு துரித தீர்வுகள் பெற்றுக்கொடுக்கப்பட வேண்டும்- ஜனாதிபதி

வடக்கு மக்களின் வறுமை நிலைக்கான பிரதான காரணியாக காணப்படும் நீர் பிரச்சனைக்கு துரித தீர்வுகள் பெற்றுக்கொடுக்கப்பட வேண்டும் என ஜனாதிபதி வாக்குறுத்தி வழங்கியுள்ளார். ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனயின் தலைமையில் நேற்றைய தினம்
ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற வட மாகாணத்திற்காக முன்மொழியப்பட்டுள்ள நீர் வழங்கல் செயற்திட்டத்தின் முன்னேற்ற மீளாய்வு பற்றிய கலந்துரையாடலின்போதே ஜனாதிபதி இதனை தெரிவித்தார்.

மகாவலி மற்றும் சுற்றாடல் இராஜாங்க அமைச்சர் அஜித் மான்னப்பெரும மற்றும் அமைச்சின் செயலாளர் அநுர திசாநாயக்க உள்ளிட்ட அரச அதிகாரிகள் இந்த கலந்துரையாடலில் கலந்து கொண்டிருந்தனர். விவசாயத்தை பிரதான வாழ்வாதாரமாகக் கொண்ட இப்பிரதேச மக்களுக்கு அவர்களது விவசாயத்திற்குத் தேவையான நீர்ப்பாசன வசதிகள் உரியவாறு பெற்றுக்கொடுக்கப்படின், வட மாகாணத்தில் நிலவும் ஏனைய அபிவிருத்தி பிரச்சினைகளுக்கும் தீர்வு கிடைக்கும் என தெரிவித்தார்.

சுற்றாடல் பாதிப்புகளின்றி நடைமுறைப்படுத்தப்படும் இந்த செயற்திட்டத்தினூடாக துரித மற்றும் வெற்றிகரமான பெறுபேறுகளை வடக்கு மக்கள் பெற்றுக்கொள்வார்கள் என ஜனாதிபதி இதன்போது நம்பிக்கை தெரிவித்தார். வட மாகாண நீர்ப்பாசன மற்றும் குடிநீர் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள ஏனைய நீர் வழங்கல் திட்டங்களின் முன்னேற்றம் குறித்தும் இதன்போது மீளாய்வு செய்யப்பட்டது.

முன்மொழியப்பட்டுள்ள வடமத்திய பாரிய கால்வாய்த்திட்டம், நெதர்லாந்து அரசாங்கத்தின் நிதியுதவியில் 2020ஆம் ஆண்டில் நடைமுறைப்படுத்தப்படுவதற்கு முன்மொழியப்பட்டுள்ள “யாழ்ப்பாணத்திற்கு நீர்” செயற்திட்டம் ஆகியன தொடர்பாகவும் வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் ஜயிக்கா நிறுவனத்தின் நிதியுதவியின் கீழ் முன்னெடுக்கப்படும் “எல்லங்கா” குளக் கட்டமைப்பு அபிவிருத்தி செயற்திட்டத்தின் முன்னேற்றம் தொடர்பாகவும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.


Read more...

தரமான தலைக்கவசங்களே இறக்குமதி செய்யப்படும் - அமைச்சர் அர்ஜூன ரணதுங்க

மோட்டார் சைக்கிள்கள் செலுத்தும் போது கட்டாயமாக பயன்படுத்தப்படும் தலைகவசங்கள், தரமானதாக இறக்குமதி செய்யப்படும் என்று போக்குவரத்து சிவில் விமான சேவைகள் அமைச்சர் அர்ஜூன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

கம்பஹா பண்டாரநாயக்க வித்தியாலயத்தில் நேற்று, வீதி விபத்துக்களை கட்டுப்படுத்துவது தொடர்பாக பாடசாலை மாணவர்களுகாக நடத்தப்பட்ட செயலமர்வில் அமைச்சர் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறினார். அநேகமான வீதி விபத்துங்கள் மோட்டார் சைக்கிள்களினாலே ஏற்படுகின்றன.

மோட்டார் சைக்கிள்கள் விபத்துக்கு உள்ளாகும்போது உயிரிழப்புகள் ஏற்படுகிறன. இதற்கு தரமற்ற தலை கவச பாவனையே காரணம் என்று
அமைச்சர் அர்ஜூன ரணதுங்க சுட்டிக்காட்டினார். இதனிடையே குறித்த நிகழ்வை வீதிபாதுகாப்பு தொடர்பான தேசிய சபை ஏற்பாடுசெய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Read more...

Tuesday, February 12, 2019

வைத்தியரால் ஏற்பட்ட எனது அப்பாவின் மரணம். தந்தையை இழந்த மகனின் துயரப்பதிவு.

முன்னொருகாலத்தில் வைத்தியர் உருவத்தில் கடவுள் வந்து என்னை காப்பாற்றினார் என்று மக்கள் வைத்தியரை கடவுளுக்கு நிகராக போற்றிப் புகழ்வர். ஆனால் இன்று வைத்தியர் வேடத்தில் யமதூதன் வந்தான் என்று மக்கள் திட்டித்தீர்க்கின்றனர்.

குறிப்பாக இலங்கையிலே வைத்தியர் மற்றும் வக்கீல் ஆகிய தொழில்களை புரிகின்றவர்கள் மீது மக்கள் மிகவெறுப்பும் சந்தேகமும் கொண்டுள்ளனர். இவ்விரு தொழில்களும் மனிதாபிமானத்தை காக்கும் புனித தொழிலகளாகும். நோயுற்றவனை பாதுக்காக்கவும் அநீதி இழைக்கப்பட்டவனுக்கான நீதியை பெற்றுக்கொடுக்கவும் எனவுள்ள இவ்விரு தொழிலாளிகளும் இன்று தங்களது பை மட்டும் நிறைந்தால்போதும், அதற்காக எந்த அக்கிரமத்தையும் செய்வோம் என செயற்படுகின்றார்கள்.

அவ்வாறு ஒரு நோயாளி மரணவேதனையில் அழுகின்றபோது தற்போது மழை பெய்கின்றது நாளைவந்து பார்கின்றேன் என்ற வைத்தியரின் பொறுப்புணர்சியின்மையால் தந்தையரை இழந்து நிற்கும் நபர் ஒருவரின் துயரப்பதிவு ஒன்று இவ்வாறு அமைந்துள்ளது.


அப்பாவின் மரணம்....

2002 February 13 அன்று நான் தாய்நாட்டை விட்ட சில காரணங்களுக்காக சவுதி அரேபியா நோக்கி பயணமாகிறேன்....

2004 December 5 அன்று மட்டக்களப்பு எங்கும் கடும் மழை அன்று அவரது தேவை காரணமாக மண்டூர் எனும் கிராம்சென்ற எனது அப்பா நாங்கள் வசித்த காக்காச்சிவட்டை என்னும் எங்கள் விவசாய கிராமம் நோக்கி புறப்பட்டு செல்கிறார். அடைமழையும் காற்றும் வீசுகிறது, வீட்டை அண்மிக்கும் தருவாயில் அப்பாவால் துவிச்சக்கர வண்டியை மிதிக்க இயலவில்லை...

துவிச்சக்கரவண்டியை உருட்டிக்கொண்டே அப்பா வீடு வந்தடைகிறார்..

முற்றாக மழையில் நனைந்தமையால் குளித்துவிட்டு ஓய்வேடுக்கிறார்..

அன்றிரவு 8: 00 மணிக்கு ஒரு கால் வலிக்க ஆரம்பித்து இடுப்புவரை செல்கிறது அவரால் தாங்கமுடியாத அளவிற்கு வலி அதிகரிக்கிறது..

அம்மாவிடம் வலி தாங்க முடியவில்லை என சொல்கிறார்.

உடனே அம்மா அண்ணாவை அவசரமாக அழைத்து உடனடியாகவே #களுவாஞ்சிகுடி வைத்தியசாலைக்கு கொண்டு செல்கின்றானர்.. .

மழை ஓய்ந்தபாடில்லை..

மருத்துவமனையில் சேர்பித்ததும்

மருத்துவத்தாதி அப்பாவிற்கு #பனடோல் மட்டுமே மருந்தாக கொடுக்கிறார்..

அன்று சேவையில் வைத்திய அத்தியட்சகராகவிருந்த DR வசீகரன் அவர்களுக்கு தொடர்பெடுத்து அப்பாவின் நிலை பற்றி கூறுகிறார்..

அதே வைத்தியசாலையில் 150M தூரத்திலே உள்ள விடுதியில் தங்கியிருந்த வசீகரன் மழையை காரணம்காட்டி உடனே வந்து அப்பாவை பரிசோதிக்க மறுத்துவிடுகிறார்..

இரண்டு அண்ணாக்களும் அம்மாவும் அப்பாவின் பக்கத்திலே இருக்கின்றனர் ..

இரவு 10 மணி அப்பா ஒரு அண்ணாவை துணைக்கு நிற்குமாறும் மற்ற அண்ணாவை அம்மாவை கூட்டிக்கொண்டு வீடுசெல்லுமாறு கூறுகிறார்..

அப்பாவிற்கு வலி அதிகரித்தே செல்கிறது..

அண்ணா அப்பாவிடம் என்ன செய்கிறதுஅப்பா என கேட்கிறார்..

அப்பாவோ "எனக்கு சாகிற வலி வலிக்குது நீ என்ன செய்யபோகிறா அம்மாவ கூட்டீற்று போ" என சொல்கிறார்..

மீண்டும் அங்குள்ள மருத்துவ தாதியிடம் சென்று வைத்தியரை வரவழைக்க கேட்கின்றனர்..

வைத்தியரோ மழை என்னால் இப்போ வரமுடியாது காலையில் வந்து பார்த்துகொள்கிறேன் என்று சொல்லிவிடுகிறார்...

வேறு வழியின்றி அம்மாவும் ஒரு அண்ணாவும் வீட்டுக்கு செல்கின்றனர்...

இரவு 12 மணியளவில் வலி அதிகமாகி வலி தாங்க முடியாமல் அண்ணா வின் கண்முன்னே அப்பாவின் உயிர் பிரிகிறது..

Dr வசீகரனால் அடுத்தநாள் காலையில் அப்பாவின் மரணச்சான்றை மட்டுமே தரமுடிந்தது..

இப்படியே எத்தனை உயிர்களை பறித்தாரோ இந்த வசீகரன்...😢 😢

(அப்பாவிற்கு மரணம் பாம்புக்கடியால் ஏற்பட்டிருக்குமோ என்ற சந்தேகம் இன்றுவரை நீழ்கிறது....)

Read more...

திஸ்ஸ அத்தநாயக்கவிற்கு எதிரான வழக்கை துரிதமாக்க தீர்மானம்.

ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்கவிற்கு எதிராக, தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை துரிதமாக்குவதற்கு தீர்மானித்துள்ளதாக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போதைய ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் கையொப்பமிட்டதாக தெரிவிக்கப்படும் அறிக்கை ஒன்றை ஊடகங்களுக்கு வௌியிட்டு, இனவாதத்தைத் தூண்டுவதற்கு முயற்சித்தமை தொடர்பில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்கவிற்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்த வழக்கு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி விக்கும் களுஆராச்சி முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இதன்போது பிரதிவாதி மீதான குற்றப்பத்திரத்தை மீளப் பெறுவதற்கு முறைப்பாட்டாளர் சார்பில் சட்டமா அதிபருக்கு, கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக, பிரதி சொலிஷ்ட்டர் ஜனரல் திலிப் பீரிஸ் மன்றுக்கு அறிவித்துள்ளார்.

இந்த நிலையில், குறித்த வழக்கை நிறைவுசெய்வதற்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் இணக்கம் தெரிவித்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.

இதற்கமைய இந்த வழக்கு விசாரணைகளை துரிதப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக, பிரதி சொலிஷ்ட்டர் ஜனரல் திலிப் பீரிஸ் தெரிவித்துள்ளார்.

Read more...

163 ஆம் இலக்க வீதியில் சேவையில் ஈடுபடும், தனியார் பேருந்து பணியாளர்கள் பணிப்பகிஷ்கரிப்பு.

163 ஆம் இலக்க வீதியில் தெஹிவளை – பத்தரமுல்லைக்கிடையில் சேவையில் ஈடுபடும் தனியார் பேருந்து பணியாளர்கள், பணிப்பகிஷ்கரிப்பை ஆரம்பித்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன.

மேல் மாகாண பயணிகள் போக்குவரத்து அதிகார சபையினால் வழங்கப்பட்டுள்ள சுதந்திர பயண அனுமதிப்பத்திரத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்தே, இந்த பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை தனியார் பேருந்து சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்தார்.

இதேவேளை எரிபொருள் விலை சூத்திரத்திற்கு ஏற்ற வகையில் எரிபொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டதை அடுத்து, பேருந்து பயண கட்டணங்களும் அதிகரிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

எனினும் பேருந்து பயண கட்டணங்களை அதிகரிக்க அனுமதி அளிக்கப்பட மாட்டாது என, நிதியமைச்சு தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Read more...

நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்தவிற்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்.

நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அழுத்தகமேவிற்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவுள்ளது. அரச நிதியை முறையற்ற விதத்தில் பயன்படுத்தியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக, மூவரடங்கிய நிரந்தர நீதாய மேல் நீதிமன்றத்தில் இந்த குற்றப் பத்திரம் தாக்கல் செய்யப்படவுள்ளது.

இதற்காக சட்டமா அதிபரின் கருத்தை பெறவுள்ளதாக, இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினர், இன்றைய தினம் கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றத்திற்கு தெரியப்படுத்தினர். மேலும் இது தொடர்பாக சட்டமா அதிபரின் ஆலோசனையை பெறவுள்ளதாகவும், இந்த வழக்கை மூவரடங்கிய நிரந்தர நீதாய மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்வது தொடர்பாக பிரதம நீதியரசரின் ஆலோசனையும் கோரப்பட்டுள்ளதாகவும், இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினர் குறிப்பிட்டனர்.

அதற்கமைய, இந்த நடவடிக்கைகளின் முன்னேற்றம் தொடர்பில் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 30 ஆம் திகதி, நீதிமன்றத்தில் அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்குமாறு, கொழும்பு பிரதம நீதவான் லங்கா ஜயரத்ன உத்தரவு பிறப்பித்துள்ளார்.

விளையாட்டுத்துறை அமைச்சராக செயற்பட்ட போது, விளையாட்டுப் பொருட்களை கொள்வனவு செய்வதற்காக 5 கோடியே 35 இலட்சத்திற்கும் அதிக அரச நிதியை முறையற்ற விதத்தில் பயன்படுத்தியதாக மஹிந்தானந்த அளுத்கமகேவிற்கு எதிராக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு, இந்த குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read more...

இளம் தாதியின் மரணம் குறித்த வழக்கு விசாரணை ஒத்திவைப்பு - நீதவான் நீதிமன்றம்.

ஹட்டன் பகுதியில் அண்மையில் தற்கொலை செய்துக் கொண்டதாக தெரிவிக்கப்படும் இளம் தாதியின் மரணம் தொடர்பான வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரியவிக்கப்பட்டுள்ளது.

குறித்த வழக்கு இன்று ஹற்றன் நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இதன்போது நீதியான தீர்ப்பை வழங்குவதற்கு முறையான விசாரணைகளை மேற்கொண்டு, உரிய சாட்சி பதிவுகளை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு, நீதவான் பொலிஸாருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

அதனை தொடர்ந்து வழக்கு விசாரணையை எதிர்வரும் மார்ச் மாதம் 19ஆம் திகதிக்கு ஒத்திவைப்பதாக, நீதவான் அறிவித்துள்ளார். கடந்த ஜனவரி மாதம் 28 ஆம் திகதி இளம் தாதியொருவர், தமது மருத்துவர் கொடுத்த பாலியல் தொல்லைகளை தாங்க முடியாமையினால் தற்கொலை செய்து கொள்வதாக, கடிதம் ஒன்றை எழுதி வைத்து விட்டு, தற்கொலை செய்து கொண்டமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், தற்கொலை செய்துக் கொண்டதாகக் கூறப்படும் தாதியின் மரணத்திற்கு, நீதியான விசாரணை நடத்தப்பட்ட வேண்டும் என்று கோரி, இன்று கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

தலவாக்கலை - வட்டகொடை பகுதியிலுள்ள மக்கள் இணைந்து இந்த கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Read more...

தயாசிறி ஜயசேகரவிற்கு திடீர் மாரடைப்பு - வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான தயாசிறி ஜெயசேகர சற்று முன்னர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாகவே, அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜெயவர்தனபுர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள தயாசிறி ஜெயசேகரவிற்கு தற்போது தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவமனை தகவல்கள் தெரிவித்துள்ளன.

எனினும் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜெயசேகரவின் தற்போதைய உடல்நிலை குறித்த விபரங்கள் உடனடியாக வெளியிடப்படவில்லை.

Read more...

கடற்பகுதிகளில் இடம்பெறும் குற்றங்களை கட்டுப்படுத்த புதிய குழு நியமனம்

இலங்கையின் கடற்பிரதேசங்களில் இடம்பெறும் குற்றங்களைக் கட்டுப்படுத்துவதற்கு, புதிய குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளதாக கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்திணைக்களத்தின் நடவடிக்கைப் பிரிவுப் பணிப்பாளர் கல்யாணி ஹேவாபத்திரண தெரிவித்துள்ளார்.

கடற்தொழில் திணைக்களத்தில் இன்று வைத்து இன்று கருத்துத் தெரிவித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

சட்டவிரோத ஆயுதங்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தல்கள் என்பன தற்போது அதிகளவில் கடற்பிரதேசங்களினூடாகவே இடம்பெறுகின்றன. அவற்றினைக் கட்டுப்படுத்துவதற்கு கடற்படை மற்றும் ஏனைய பாதுகாப்புப் பிரிவுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

எனினும் கடந்த காலங்களில் பல்வேறு குற்றச்செயல்கள் அதிகரித்தே வண்ணமே உள்ளன. இந்த நிலையிலேயே குறித்த குழு நியமிக்கப்பட்டுள்ளது.

இந்த குழுவில் கடற்படை உளவுப்பிரிவு, குற்றப்புலனாய்வுத் திணைக்களம், கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்திணைக்களம் மற்றும் பொலிஸ் அதிகாரிகள் ஆகியோர் உள்ளடங்கியுள்ளதாக, கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்திணைக்களத்தின் நடவடிக்கைப் பிரிவுப் பணிப்பாளர் கல்யாணி ஹேவாபத்திரண தெரிவித்துள்ளார்.

Read more...

இலங்கை அரசாங்கத்தை, இந்தியா ஒருபோதும் பகைத்துக் கொள்ளாது - ராமகிருஷ்ணன்

இலங்கை அரசாங்கத்தைப் பகைத்து கொண்டு ஒருபோதும் இந்திய அரசு தமிழர்களுக்குத் தீர்வினை வழங்காது என, தி ஹிந்து பத்திரிகையின் ஆசிரியர் ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதியும் எதிர்கட்சித்தலைவருமான மஹிந்த ராஜபஷவின் இந்திய பயணம் தொடர்பாக அவர் கருத்து தெரிவித்த போதே, அவர் இதனை கூறினார்.

இலங்கைத் தமிழ் மக்களுக்கு ,அரசியல் ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் உதவிகள் மற்றும் அவர்களின் கல்விக்கான உதவிகள் என்பன தொடர்பாக இலங்கையில் இருந்து வரும் தமிழ் அரசியல் தலைவர்கள் இந்திய அரசியல் தலைவர்களுடன் ஆக்கபூர்வமான பேச்சுக்களில் ஈடுபடுவதில்லை.

இந்திய அரசாங்கம் இலங்கையில் எந்த விதமான பாகுபாட்டையும் வைத்துக்கொள்ள போவதில்லை. இந்திய அரசாங்கத்திற்கு தமிழர்களுக்கு நன்மை செய்யவேண்டும் எனும் எண்ணம் உள்ளது. ஆனால் ஒரு நாட்டின் அரசாங்கத்தைப் பகைத்து கொண்டு எந்த விதமான நடவடிக்கைகளிலும் ஈடுபட மாட்டார்கள்.

தமிழர்களுக்கு தீர்வு வழங்க வேண்டும் என்ற அக்கறை இந்திய அரசாங்கத்திடம் இருக்கின்றது. ஆனால் அவர்கள் தென்னிலங்கையுடன் இணைந்து, ஒரு தீர்வு வழங்க வேண்டும் என எதிர்பார்க்கின்றார்கள் என, தி ஹிந்து பத்திரிகையின் ஆசிரியர் ராமகிருஷ்ணன் குறிப்பிட்டுள்ளார்.

Read more...

தமிழ் தேசிய கூட்டமைப்பின் அடுத்த தலைவர், எம்.ஏ.சுமந்திரனா ?

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அடுத்த தலைவராக எம்.ஏ.சுமந்திரனை தெரிவு செய்வது தொடர்பாக, தமிழ் தேசிய கூட்டமைப்பின் அடுத்த உயர்மட்டக் கூட்டத்தில், ஆலோசனை நடத்தப்படவுள்ளதாக, பிரபல ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் முதுமையினாலும், உடல்நலக் குறைவினாலும், தமது பொறுப்புகளை நிறைவேற்றுவதில் சிரமப்படும் நிலையிலேயே, கூட்டமைப்பின் புதிய தலைவராக எம்.ஏ.சுமந்திரனை நியமிக்கும் முயற்சிகள் முன்னெடுக்கப்படுவதாக, அந்தச் செய்திகளில் கூறப்பட்டுள்ளது.

அதேவேளை, நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனை கூட்டமைப்பின் அடுத்த தலைவராக நியமிப்பதற்குத் தேவையான முயற்சிகள் முன்னெடுக்கப்படுவதை உறுதிப்படுத்தியுள்ள, நாடாளுமன்ற உறுப்பினர் சரவணபவன், அடுத்த உயர்மட்டக் கூட்டத்தில் இதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

இரா.சம்பந்தன் மிகச் சிறந்த தலைவர். ஆனால் அவரது உடல் நிலை தற்போது நன்றாக இல்லை. இதனால் அவர் கட்சியின் காப்பாளராக இருக்க வேண்டும் என்று, உறுப்பினர்கள் விரும்புகின்றனர். என்று சரவணபவன் கூறியுள்ளார்.

கட்சியின் மூப்பு நிலைப்படி நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசாவே, கூட்டமைப்பின் அடுத்த தலைவராக வர வேண்டும். எனினும், அவரது உடல்நிலைய தீவிரமான அரசியல் செயற்பாட்டுக்குத் தலைமை தாங்குவதற்கு ஏற்றதாக இல்லாமையினால், சுமந்திரனை முன்னிறுத்த முயற்சிகள் நடப்பதாகவும், நாடாளுமன்ற உறுப்பினர் சரவணபவன் தெரிவித்துள்ளார்.

எனினும், இதுதொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அதிகாரபூர்வ தகவல்கள் ஏதும் இதுவரை வெளியாகவில்லை.

Read more...

அர்ஜுன் அலோசியஸிடம், மூன்று மணிநேரம் தொடர் விசாரணை.

பெர்ப்பர்ச்சுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜுன் அலோசியஸிடம் இந்த இன்றைய தினம், சுமார் மூன்று மணிநேரம் தொடர் விசாரணைகள் இடம்பெற்று வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

லஞ்சம் மற்றும் ஊழல் குறித்த விசாரணைகளை முன்னெடுக்கும் ஆணைக்குழுவில் அர்ஜுன் அலோசியஸ் இன்று முன்னிலையானார்.
இதன்போதே அவரிடம் மூன்று மணிநேரம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை மத்திய வங்கியின் பிணைமுறி மோசடி குற்றச்சாட்டு தொடர்பாக, பெர்ப்பர்ச்சுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜுன் அலோசியஸ் மற்றும் அதன் நிறைவேற்று அதிகாரி கசுன் பலிசேன ஆகியோர் கடந்த ஆண்டு கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டனர்.

எனினும் கடந்த ஜனவரி மாதம் முதலாம் திகதி, கடும் நிபந்தனையின் அடிப்படையில், பிணையில் விடுவிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று இந்த வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read more...

சம்பள உயர்வை பெற்று தருமாறு வலியுறுத்தி, பிரித்தானியாவிற்கு மகஜர் - மலையகத்தில் கையெழுத்து வேட்டை ஆரம்பம்.

1000 ரூபாய் சம்பள உயர்வு உள்ளிட்ட பெருந்தோட்ட தொழிலாளர்களின் அடிப்படை பிரச்சினைகளை உள்ளடக்கிய மகஜர் ஒன்று, பிரித்தானிய மற்றும் இந்திய உயர்ஸ்தானிகர்களுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து இன்றைய தினம் மலையகத்தில் கையெழுத்து வேட்டை நடத்தப்பட்டுள்ளது. மலையக இளைஞர்கள் அமைப்பின் ஏற்பாட்டில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கபட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மலையகத்தின் அனைத்து பிரதான நகரங்களிலும், தோட்டங்களிலும் இந்த கையெழுத்து வேட்டை இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்த மக்களின் கையெழுத்துக்களுடனான மகஜர் ஜனாதிபதி, பிரதமர், எதிர்கட்சி தலைவர், இந்திய மற்றும் பிரித்தானிய உயர்ஸ்தானிகர் உள்ளிட்ட பல முக்கியஸ்தர்களுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, பெருந்தோட்ட கம்பனிகள் பிரதேச சபைகளுக்கு செலுத்தும் வரி மிக குறைந்த மட்டத்தில் இருப்பதால், தற்போதய சூழ்நிலைக்கேற்ப அதை மாற்றியமைக்க வேண்டியுள்ளதாக கொட்டகலை பிரதேச சபை தலைவர் இராஜமணி பிரசாத் தெரிவித்துள்ளார். சபையின் மாதாந்த அமர்வில் தலைமையேற்று உரையாற்றும் போதே இவ்வாறு கூறினார்.

சில பெருந்தோட்ட கம்பனிகள் தேயிலை செடிகளை தொழிலாளர்களுக்கு பராமரிப்பதற்காக, உப குத்தகை அடிப்படையில் வழங்கியுள்ளன.

இவ்வாறு தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ள தேயிலை செடிகளின் பரப்பிற்கு கம்பனிகளால் அறவிடப்படும் வரி, கம்பனிகளால் பிரதேச சபைகளுக்கு செலுத்தும் வரியை விட இரண்டு மடங்காக காணப்படுகின்றது. இந்த விடயத்தையும், நாம் கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது.

தற்போது பெருந்தோட்ட நிறுவனங்கள் பிரதேச சபைகளுக்கு செலுத்தும் ஏக்கர் வரி, தொழிற்சாலை வரி, கட்டங்கள் அமைத்தலுக்கான அனுமதி மற்றும் அதற்கு செலுத்த வேண்டிய வரி போன்றவை குறைந்த மட்டத்தில் காணப்படுகிறது. அதுமாத்திரமின்றி அவை முறையான உள்ளூராட்சி மன்ற சட்ட திட்டங்களுக்கு அமைய பேணப்படாமல் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

அதனால் தோட்டங்கள் பிரதேச சபைகளுக்கு செலுத்த வேண்டிய வரிகள் தொடர்பான விடயங்களை, மறுபரிசீலனை செய்து முறையான வரி அறவீட்டு முறையை அறிமுகப்படுத்தவுள்ளதாக அவர் தெரிவித்தார்.

Read more...

புதிய அரசிலமைப்பு வடக்கையும் கிழக்கையும் இணைக்க அல்ல - லக்ஷ்மன் கிரியெல்ல

புதிய அரசிலமைப்பின் ஊடாக மாகாணசபைகளைப் பலப்படுத்தவே அரசாங்கம் முயற்சிக்கின்றது என்று அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார். புதிய அரசிலமைப்பு வடக்கையும் கிழக்கையும் இணைக்க அல்ல என்றும் அவர் தெரிவித்துள்ளார். கண்டியில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டிருந்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

சிறுபான்மையினக் கட்சிகள் அனைத்தும், ஒற்றையாட்சிக்கு பச்சைக்கொடி காண்பித்துள்ள சந்தர்ப்பரம் இலங்கை வரலாற்றில் முதன்முறையாக நிகழ்ந்துள்ளது. நாம் செய்யும் ஒரே விடயம் மாகாணசபைகளை பலப்படுத்துவது மட்டுமே. சிலர், வடக்கையும் கிழக்கையும் நாம் இணைக்கப்போவதாகக் கூறுகிறார்கள். இன்னும் சிலர் மாகாணசபைகளுக்கு பொலிஸ் அதிகாரங்களை வழங்கப்போவதாகக் கூறுகிறார்கள். இது எல்லாம் அடிப்படையற்ற குற்றச்சாட்டுக்கள்.

நாம், இரண்டு தடவைகள் நாட்டின் அரசியலமைப்பை ஸ்தாபித்த போது அன்று தமிழ்க் கட்சிகள் தமது எதிர்ப்பைவெளிப்படுத்தினார்கள். ஆனால் தற்போது நிலைமை மாற்றம் அடைந்து தற்போது தமிழ்க்கட்சிகள் இந்தப் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன என லக்ஷ்மன் கிரியெல்ல மேலும் குறிப்பிட்டார்.

Read more...

தமிழர்களை ஏமாற்றும் விதத்தில் மஹிந்த கருத்துரைத்தாலும் தமிழ் மக்கள் மிகவும் தெளிவாகவே இருக்கின்றனர் - பிரதமர்

மஹிந்த ராஜபக்ஷவால் தமிழர்களுக்கான தீர்வினை வழங்க முடியாது என பிரதமர் ரணில் விக்ரமசிங்க அடித்துக் கூறியுள்ளார். கொழும்பில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோதே பிரதமர் இவ்வாறு கூறினார். ஆட்சியைப் பிடிப்பதற்காக மீண்டும் தமிழர்களை ஏமாற்றும் விதத்தில் மஹிந்த ராஜபக்ச கருத்துக்களை வெளியிட்டு வந்தாலும் தமிழ் மக்கள் மிகவும் தெளிவாகவே இருக்கின்றனர்.

தமது ஆட்சியின்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரைப் பல தடவைகள் பேச்சு மேசைக்கு அழைத்த மஹிந்த ராஜபக்ஷ, இறுதியில் அவர்களையும், ஒட்டு மொத்த தமிழர்களையும் ஏமாற்றி தமிழ் மக்களுக்கு துரோகம் செய்துள்ளார். இப்படி இருக்க எந்த முகத்துடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனும் தமிழ் மக்களுடன் நேரடியாகப் பேசி தீர்வுத் திட்டத்தை மஹிந்த ராஜபக்ச முன்வைக்கப்போகின்றார் ? என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கேள்வி எழுப்பி இருந்தார்.

புதிய அரசமைப்பு உருவாக்கத்துக்கான வழிநடத்தல் குழு விரைவில் கூடும். அதன்போது அடுத்தகட்ட நடவடிக்கைகள் தொடர்பில் தீர்மானிக்கப்படும். எனவே, எத்தனைத் தடைகள் வந்தாலும், புதிய அரசியலமப்பினைத் தயாரிக்கும் முயற்சியைக் கைவிடப்போவதில்லை என பிரதமர் ரணில் விக்ரமசிங்க மேலும் குறிப்பிட்டார்.

Read more...

2 மில்லியன் ரூபா செலவில் முதியோர் இல்லங்களை அபிவிருத்தி செய்ய திட்டம் - சமூக வலுவூட்டல் அமைச்சர்

போதைப்பொருளுக்கு அடிமையானோரை புனர்வாழ்வுக்கு உட்படுத்துவது தொடர்பில் தமது அமைச்சு கவனம் செலுத்தியிருப்பதாக தொழில் தொழிற்சங்க உறவுகள் மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர் தயா கமகே தெரிவித்தார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற வாசனைத் திரவிய உற்பத்திகளை ஏற்றுமதி செய்யும் சபை, சமுர்த்தி அபிவிருத்தித் திணைக்களத்தின் தேசிய சபை சமூக பாதுகாப்புச் சபை, சமுர்த்தி சமூக அடித்தள வங்கிகள், இலங்கை சமூகப் பாதுகாப்புச் சபை தேசிய சமூக அபிவிருத்தி நிறுவகத்தின் கட்டுப்பாட்டுச் சபை ஆகியவற்றின் அதிகாரிகளுக்கு நியமனக் கடிதங்களை வழங்கும் நிகழ்வில் உரையாற்றிய போது அவர் இவ்வாறு கூறினார்.

போதைப்பொருளுக்கு அடிமையானோரை புனர்வாழ்வுக்கு உட்படுத்தும் வேலைத்திட்டம் கிராமிய மட்டத்தில் இருந்து அமுலாக்கப்படும். சமகால அரசாங்கம் முன்னெடுக்கும் பாதுகாப்பு ஏற்பாடுகள் காரணமாக இலங்கைக்குள் போதைப்பொருள் கடத்தும் நடவடிக்கை பெருமளவில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் தயா கமகே தெரிவித்தார்.

இவை தவிர, இரண்டு மில்லியன் ரூபா செலவில் முதியோர் இல்லங்களை அபிவிருத்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக அமைச்சர் தயா கமகே இந்த சந்திப்பில் தெரிவித்தார். நாடெங்கிலுமுள்ள முதியோர் இல்லங்களுக்கு தலா இரண்டு மில்லியன் ரூபாவை வழங்குவதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகவும் இந்த யோசனையை முதியோர் கட்டுப்பாட்டுச் சபையும் அங்கீகரித்துள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

Read more...

அரச ஊடகங்களின் செயற்பாடுகளை ஆராய்வதற்கு புதிய குழு

அரச ஊடகங்களை மேலும் மக்கள் சேவை ஊடகங்களாக மாற்றுவதற்கு நிதி மற்றும் ஊடக அமைச்சர் குழுவொன்றை நியமித்துள்ளார்.

ஏழு பேர் அங்க த்துவப்படுத்தும் இந்த குழுவில் ஐநாவின் கலாசார அமைப்பான யுனெஸ்கோவின் ஆலோசகராக பணி புரிந்த விஜயானந்த ஜயவீர குழுவின் தலைவராகவும், பேராசிரியர் ஜயதேவ உயன்கொட, கலாநிதி பிரதீப் வீரசிங்ஹ, பிரபல ஊடகவியலாளர் நாலக குணவர்த்தன, மனித உரிமை செயற்பாட்டாளர்கள் கௌசல்யா பெர்னாண்டோ, அனோமா ராஜகருணா, சட்டத்தரணி சுதர்ஷன குணவர்த்தன ஆகியோர் அங்கம் வகிக்கிறார்கள்.

இன்று சமூகத்தில் ஊடகப் பயன்பாடு, அவற்றின் சுதந்திரம் தொடர்பில் சமூக கருத்தாடல் தீவிரம் பெற்ற நிலையில் தனியார் ஊடகங்களை ஒழுங்குறுத்துவதற்கு முன்னர், அரச ஊடகங்களை மெய்யான மக்கள் சேவையாக மாற்ற வேண்டும் என்பது ஊடகத்துறை சார்ந்த நிபுணர்களின் கருத்தாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read more...

எரிபொருள் விலை அதிகரிப்பு

எரிபொருள் விலையில் நேற்று நள்ளிரவு முதல் அதிகரிப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு அறிவித்துள்ளது. இதன்படி, 92 ஒக்டைன் ரக பெற்றோல் ஒரு லீட்டரின் விலை 6 ரூபாவினாலும், 95 ஒக்டைன் ரக பெற்றோல் ஒரு லீட்டரின் விலை 5 ரூபாவினாலும், சுப்பர் டீசல் ஒரு லீட்டரின் விலை 8 ரூபாவினாலும், ஒட்டோ டீசல் ஒரு லீட்டரின் விலை 4 ரூபாவினாலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இந்த அதிகரிப்புடன், 92 ரக பெற்றோல் 129 ரூபாவாகவும், 95 ரக பெற்றோல் 152 ரூபாவாகவும் அதிகரித்துள்ளது. 118 ரூபாவாக காணப்பட்ட சுப்பர் டீசலின் விலை 126 ரூபாவாகவும், ஒட்டோ டீசலின் விலை 103 ரூபாவாகவும் அதிகரித்துள்ளதாகவும் நிதி அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது.

Read more...

அமைச்சர் மங்கள சமரவீர பொறுப்புக் கூறவேண்டும் - வாசுதேவ நாணயக்கார விளக்கம்

சுங்கத் திணைக்களத்துக்கு ஏற்பட்ட நிதி இழப்பிற்கு அமைச்சர் மங்கள சமரவீர பொறுப்புக் கூறவேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினருமான வாசுதேவ நாணயக்கார குறிப்பிட்டுள்ளார். கொழும்பில் சோசலிச மக்கள் முன்னணி நடத்திய ஊடக சந்திப்பிலேயே அவர் இந்த கருத்தை தெரிவித்தார்.

அண்மையில் சுங்கத் திணைக்கள ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டங்களில் ஈடுபட்டமையால் சுங்கத்திணைக்களத்திற்கு பாரியளவில் வருமான இழப்பு மற்றும் சரக்குகளைக் கையாளுதலில் தாமதநிலை போன்ற பாதகமான விளைவுகள் ஏற்பட்டிருந்தன. ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதற்கு அமைச்சர் மங்கள சமர வீராவின் தன்னிச்சையான நடவடிக்கையே காரணமாகும். ஆகவே சம்மந்தப்பட்ட அமைச்சர் என்ற வகையில் அமைச்சர் மங்கள சமரவீர இதற்கு பொறுப்புக் கூறவேண்டும். என்று வாசுதேவ நாணயக்கார மேலும் தெரிவித்தார்.

Read more...

அரிசி ஆலை உரிமையாளர்களுக்கு சலுகைகளை வழங்குவது தொடர்பான அமைச்சரவைப் பத்திரம் இன்று

சிறிய மற்றும் நடுத்தர அளவிலான அரிசி ஆலை உரிமையாளர்களுக்கு சலுகைகளை வழங்குவது தொடர்பான அமைச்சரவைப் பத்திரம் இன்றிய அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும் என ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

சிறிய மற்றும் நடுத்தர அரிசி ஆலை உரிமையாளர்களுடன் நேற்று பத்தரமுல்லவில் இடம்பெற்ற சந்திப்பின்போதே ஜனாதிபதி இதனை தெரிவித்தார். சிறிய மற்றும் நடுத்தர அளவிலான அரிசி ஆலை உரிமையாளர்களுக்கு ஏற்பட்டுள்ள பிரச்சனைகளுக்கு தீர்வுகண்டு அரச கொள்கைகளுக்கு அமைவாக அனைவருக்கும் உயர்ந்தபட்ச சலுகைகளை பெற்றுக்கொடுக்கும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என ஜனாதிபதி இதன்போது குறிப்பிட்டார்.

அதேபோன்று வளர்ச்சியடைந்துள்ளோருக்கே மேலும் முன்னேறுவதற்கு வாய்ப்புகளை ஏற்படுத்தாது வீழ்ச்சியடைந்துள்ளோரை மீண்டும் கட்டியெழுப்புவதற்கே அரச கொள்கைகளுக்கு அமைவாக முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது என ஜனாதிபதி இதன்போது வாக்குறித்து வழங்கினார்.

அத்துடன் வறுமையிலுள்ள மக்களை முன்னேற்றுவதற்கு முன்னுரிமையளித்து விரிவான செயற்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதி குறிப்பிட்டார். நாட்டின் பொருளாதார சுபீட்சத்திற்காக வலுவான பயணமொன்றினை மேற்கொள்ள வேண்டியதன் முக்கியத்துவத்தையும் ஜனாதிபதி இதன்போது சுட்டிக்காட்டினார்.


Read more...

போதைப்பொருள் வர்த்தகத்திற்கு பிரதமரின் அரசாங்கமே மீண்டும் புத்துயிர் அளித்தது - குற்றம் சுமத்துகின்றார் விமல் வீரவன்ச

போதைப்பொருள் வர்த்தகத்திற்கு ரணிலின் அரசாங்கமே மீண்டும் புத்துயிர் அளித்தது என நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச குற்றம் சுமத்தியுள்ளார். ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். போதைப்பொருள் வர்த்தகர்களுக்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் அவரோடு உள்ளவர்களும் மறைமுகமாக உதவுகின்றார்கள். குறிப்பாக நாட்டிலும் மற்றும் வெளிநாட்டில் இருக்கும் போதைப்பொருள் வர்த்தகர்களுக்கு பிரதமரின் அரசாங்கம் தேவையான உதவிகளை வழங்கி வருகின்றது.

போதைப்பொருள் வார்த்தகளுக்கும் ரணில் அரசாங்கத்திற்க்கும் உள்ள தொடர்பை ஜனாதிபதி நன்கு அறிவார். போதைப்பொருள் வர்த்தகர்களுக்கு எதிராகவும் அவர்களுக்குப் பக்கபலமாக இருக்கும் சில அரசாங்கத்தைச் சேர்ந்தவர்களுக்கு எதிராகவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உடனடியாக நடவடிக்கைளை எடுக்கவேண்டும். மஹிந்தவின் ஆட்சிக்காலத்தில் போதைப்பொருள் வர்த்தகர்களுக்கு முடிவு கட்டப்பட்டிருந்தது. ஆனால் 2015ஆம் ஆண்டுக்குப் பின்னர் நாட்டில் மீண்டும் போதைப்பொருள் வர்த்தகத்துக்கும் பாதாள உலகக் குழுவினருக்கும் தாராளமாகச் சுதந்திரம் அளிக்கப்பட்டது என விமல் வீரவன்ச மேலும் குறிப்பிட்டார்.

Read more...

மின்சார மோசடியில் ஈடுபட்டவர்கள் அரங்கத்திற்கு செலுத்திய தண்டப்பணம் 130 மில்லியன் ரூபா

மின்சார பாவனை தொடர்பில் மோசடியில் ஈடுபட்ட இரண்டாயிரத்து 500 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. குறித்த 2500 பேரும் கடந்த வருடத்தில் மோசடியில் ஈடுபட்டதாக இலங்கை மின்சார சபை சுட்டிக்காட்டியுள்ளது.

இந்த குற்ற செயல்களில் ஈடுபட்டவர்கள் மூலம் இலங்கை மின்சார சபை 130 மில்லியன் ரூபாவை தண்டப் பணம் கிடைத்துள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

Read more...

மாதிவெலவில் கைதாகியவர் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்

ஒரு தொகை ஹெரோயினை எடுத்துச் செல்லும் போது மாதிவெல பிரதேசத்தில் வைத்து பிரபல பாதாள உலக தலைவர்களுள் ஒருவர் என அழைக்கப்படும் அங்கொட லொக்காவுடன் நெருக்கமான தொடர்பை கொண்ட ஒருவர், கைது செய்யப் பட்டுள்ளார்.

39 வயதுடைய ஒருவரே ஊழல் ஒழிப்புப் பிரிவு அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். கைது செய்யப்பட்டபோது அவரிடம் இருந்த 42.4 கிராம் ஹெரோயினை பொலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

மிரிஹான பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள அவரை இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Read more...

நாடாளுமன்ற உ றுப்பினர் சமிந்த விஜேசிறியின் சாரதிக்கு விளக்கமறியல்

பண்டாரவளையில் பிரதேசத்தில் நேற்று முன்தினம் நிகழ்ந்த மோதல் ஒன்று தொடர்பில் கைதாகிய நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறியின் சாரதியை, எதிர்வரும் 18 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

போதைப்பொருள் ஒழிப்புப்பிரிவின் அதிகாரிகள் சிலருக்கும் பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி, அவரின் பாதுகாப்பு உத்தியோகத்தர் மற்றும் சாரதிக்கு இடையில் நேற்று முன்தினம் மாலை 6.30 மணியளவில் மோதல் இடம்பெற்றது. இதன்போது, போதைப்பொருள் ஒழிப்புப்பிரிவின் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் காயமடைந்தார். அத்தோடு அவர் சிகிச்சைகளுக்காக பண்டாரவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். இதே சமயம் தானும் தாக்குதலுக்கு இலக்காகியதாக தெரிவித்து, சமிந்த விஜேசிறியின் சாரதியும் தியதலாவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.

கைதாகிய அவர் தற்போது சிறைச்சாலை அதிகாரிகளின் பாதுகாப்பின் கீழ் பதுளை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதுடன் அவரை அடையாள அணிவகுப்பிற்கு உட்படுத்தப்படவுள்ளதாக பொலீசார் தெரிவித்துள்ளனர்.

Read more...

Monday, February 11, 2019

புலிகள் மக்களுக்கு செய்த கொடுமைகள் பற்றி வன்னி சென்று மக்களிடம் கேளுங்கள். இந்திய ஊடகங்களுக்கு மஹிந்த .

இந்தியாவிற்கு உத்தியோக பூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ள எதிர் கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்சவிடம் இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படுகின்ற போர்க்குற்றங்கள் தொடர்பாக கேட்கப்பட்டபோதே அவர் மேற்கண்டவாறு பதிலளித்துள்ளார்.

அவர் ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் :

இறுதிப்போரில் இராணுவம் போர்க்குற்றங்களில் ஈடுபடவில்லை. பாதுகாப்புத்தேடி இராணுவம் கட்டுப்பாட்டு பகுதிகளுக்கும் தப்பியோடி வந்த தமிழ் மக்களை புலிகளே சுட்டுக் கொன்றார்கள்.

விடுதலைப்புலிகளின் பிடியில் சிக்கித் தவித்த தமிழ் மக்களை மீட்கும் பணி 2009ஆம் ஆண்டு மே மாதம் 18, 19ம் திகதிகளில் நிறைவுக்கு வந்தது. சர்வதேச விதிமுறைகளிற்கு அமையவே இந்த நடவடிக்கையை எடுத்தோம். இதற்கு இந்தியா உட்பட பல நாடுகள் எமக்கு உதவி செய்தார்கள்.

வன்னியில் விடுதலைப் புலிகளின் பகுதிகளை நோக்கி இராணுவம் நடத்திய தாக்குதல்களில் சில பொதுமக்கள் கொல்லப்பட்டு இருக்கலாம். போர் நடவடிக்கைகளின் போது இது தவிர்க்க முடியாதது. ஆனால் மக்களை மீட்டெடுக்கும் இறுதிப்போரில் இராணுவம் போர் குற்றங்களில் ஈடுபடவில்லை.



பாதுகாப்புத் தேடி இராணுவத்தின் கட்டுப்பாட்டு பகுதிகளுக்குள் தப்பியோடி வந்த ஆயிரக்கணக்கான தமிழ் மக்களை விடுதலைப் புலிகளே சுட்டுக் கொன்றார்கள். இதுதான் உண்மை. உயிர்தப்பி தற்போது வாழும் அந்த பகுதி மக்களிடம் கேட்டுப்பாருங்கள். அவர்கள் அப்போது நடந்த உண்மையைச் சொல்வார்கள். விடுதலைப் புலிகள் தங்களை எப்படி கேவலமாக நடத்தினார்கள் என்பதை அவர்கள் கூறுவார்கள்.

வீடுகளுக்குள் புகுந்து வலுக்கட்டாயமாகச் சிறுவர், சிறுமிகளை பிடித்து இயக்கத்தில் சேர்த்தார்கள். தமது சொல்லை கேட்காத போராளிகளையும் சுட்டுக் கொன்றார்கள். சிலரை காணாமல் போகச்செய்தார்கள்.

இறுதிப் போரில் இசைப்பிரியாவையும் பாலச்சந்திரனையும் இராணுவம் கைது செய்து சுட்டுக் கொன்றது என்பதற்கு எந்தவித ஆதாரமும் இல்லை. போலி காணொளிகளையும், ஒலிநாடாக்களையும் வைத்து படையினர் மீது குற்றச்சாட்டுகளை முன் வைக்க வேண்டாம்.



பிரபாகரனின் இளைய மகன் பாலச்சந்திரன் சிறுவன் அல்ல. அவர் ஒரு போராளி. அவருக்கு ஐந்து மெய்ப்பாதுகாவலர்களை பிரபாகரன் நியமித்திருந்தார். அதேவேளை, இசைப்பிரியாவும் ஆயுதம் தூக்கிய ஒரு போராளி. அவருக்கு புலிகள் அமைப்பினர் சூட்டிய பெயர்தான் இசைப்பிரியா.

இறுதிப்போரில் இராணுவத்திடம் சரணடைந்த புலிகள் அமைப்பின் 12,500 போராளிகளுக்கு புனர்வாழ்வளித்து விடுதலை செய்தோம். இப்படி செய்த எம் மீதும் இராணுவத்தின் மீதும் சில சர்வதேச அமைப்புகளும், சில நாடுகளும் போர்க் குற்றச்சாட்டுக்களை சுமத்துவது நியாயமா?

ஐ.நா மனித உரிமைகள் சபையில் இலங்கைக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள், புலம்பெயர் புலிகள் அமைப்புகளின் நிகழ்ச்சி நிரலின் அடிப்படையில் நிறைவேற்றப்பட்டவை. எம்மை பழிதீர்க்கும் வகையில் புலிகள் அமைப்புக்கள் தயாரித்த இந்த நிகழ்ச்சி நிரலுக்கு சில சர்வதேச அமைப்புக்களும், சில நாடுகளும் துணை போனதை நினைக்கும்போது கவலையாக உள்ளது. இந்த தீர்மானங்களை வைத்து எமது இராணுவத்தை தண்டிக்க நாம் அனுமதிக்க மாட்டோம்' என்றார்.

Read more...

மஹிந்த ராஜபக்ச தலைமையிலான புதிய அரசாங்கத்தை இந்தியா எதிர்பார்க்கிறது - ஜி.எல்.பீரிஸ்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான புதிய அரசாங்கத்தையே இந்தியா விரும்புவதாக, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தவிசாளர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அண்மையில் பெங்களூரில் நடைபெற்ற வருடாந்த மாநாட்டில் விசேட அதிதியாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கலந்துக் கொண்டு சிறப்புரை ஆற்றினார்.

அதில் இந்திய துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, இந்திய ஊடக பிரதானிகள், உயர்மட்ட வர்த்தக பிரதிநிதிகள், பேராசிரியர்கள் எனப் பெரும்பாலனோர் கலந்துக் கொண்டிருந்தனர்.

இலங்கையில் இவ்வாண்டுக்குள் மாற்றமொன்று நிகழும் என அவர்கள் அனைவரும் எதிர்பார்த்துள்ளனர். அதுமாத்திரமின்றி நாட்டில் மஹிந்த தலைமையில் புதிய அரசாங்கமொன்று தோற்றம் பெறும் என்றும் அவர்கள் நம்பிக்கை கொண்டுள்ளனர்.

ஆனால், ஆட்சியை கைப்பற்றுவது எமது நோக்கமல்ல. பத்து ஆண்டுகளுக்கு நாட்டை ஆட்சி செய்யக்கூடிய அடித்தள கொள்கை ஏற்படுத்துவதே எமது நோக்கம்.

இது தெற்கிற்கு மாத்திரம் வரையறுக்கப்பட்டதல்ல. வடக்கு- கிழக்கையும் உள்ளடக்கிய கொள்கை திட்டமொன்றை ஸ்தாபிப்பதே எமது கட்சியின் குறிக்கோள் என ஜி.எல். பீரிஸ் தெரிவித்தார்.

Read more...
Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com