Monday, February 11, 2019

நாட்டு மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு செயல்பட வேண்டும் அமைச்சர் ராஜித சேனாரத்ன

இந்த நாட்டு மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு செயற்பட்டு, நாட்டின் நற்பெயரை ஜனாதிபதி மைத்திரிபால பாதுகாக்க வேண்டும் என அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணி அரசு முழு ஒத்துழைப்புகளையும் ஜனாதிபதிக்கு வழங்கி வருகின்றது.

இந்நிலையில் தற்போதும் பிரதமர் மற்றும் அமைச்சர்களுடன் ஜனாதிபதி மீண்டும் முரண்பாடான நிலையில் இருந்து வருகின்றார். இது நாட்டினது நலனிற்குச் சாதகமானது அல்ல.

நாட்டின் அபிவிருத்தியை நோக்கமாகக் கொண்டே தேசிய அரசு அமைக்கும் யோசனையை ஐக்கிய தேசிய முன்னணி முன்வைத்துள்ளது. இந்த விடயத்தில் ஜனாதிபதி நாட்டினது நலனை முன்னிறுத்தியே தனது நடவடிக்கைகளை எடுக்கவேண்டும்.

ஆனால் ஜனாதிபதி இந்த விடயத்தில் மீண்டும் தனது கடும் நிலைப்பாட்டினைத் தொடர்ந்து வெளிப்படுத்தி வருகின்றார். மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியானவுடன் தேசிய அரசு அமைக்கும் யோசனைக்கு ரணில் விக்கிரமசிங்க முழு ஆதரவு வழங்கியிருந்தார்.

எனவே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதனை மறக்காமல் செயற்பட வேண்டும்” என அமைச்சர் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Read more...

கோட்டாபய ராஜபக்ஷவின் மனு நிராகரிப்பு.

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ உட்பட 7 பேருக்கு எதிராக சட்ட மா அதிபரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரிக்க கொழும்பு விஷேட நீதாய மேல் நீதிமன்றத்திற்கு அதிகாரம் இல்லை என பிரதிவாதிகளினால் தாக்கல் செய்யப்பட்ட மனுவை கொழும்பு விஷேட நீதாய மேல் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

குறித்த வழக்கு சம்பத் அபேகோன் (தலைவர்), சம்பத் விஜயரத்ன மற்றும் சம்பா ஜானகி ராஜரத்ன ஆகிய நீதிபதிகள் முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதன்போது, பிரதம நீதியரசரினால் வழங்கப்பட்ட கட்டளையின் அடிப்படையில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுவதாக கொழும்பு விஷேட நீதாய மேல் நீதிமன்ற நீதிபதிகள் குழுவின் தலைவர் சம்பத் அபேகோன் தெரிவித்துள்ளார்.

இதனால் குறித்த வழக்கை விசாரிக்க தங்களுக்கு இருக்கும் அதிகாரம் தொடர்பில் தீர்மானம் ஒன்றை குறிப்பிட முடியாது என கொழும்பு விஷேட நீதாய மேல் நீதிமன்ற நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர்.

அதனடிப்படையில் குறித்த ஆட்சேபனை மனு நிராகரிக்கப்பட்டிருந்தது.

இதனை அடுத்து குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்தக் கொள்ளப்பட்ட சந்தர்ப்பத்தில் வழங்கின் 6 ஆவது பிரதிவாதியான மஹிந்த சாலிய என்பவர் சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதனால் நீதிமன்றத்திற்கு ஆஜராக முடியயவில்லை என அவரின் சட்டத்தரணி குறிப்பிட்டிருந்தார்.

இதனால் குறித்த வழக்கை எதிர்வரும் 22 ஆம் திகதி வரையில் ஒத்திவைக்க கொழும்பு விஷேட நீதாய மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது முன்னாள் பாதுகாப்பு செயலாளர் நீதிமன்றத்தில் ஆஜராகி இருக்கவில்லை என்பதுடன் சிறிது நேரம் கழித்தே அவர் ஆஜாராகியதாக தெரிவிக்கப்படுகின்றது.

பாதையில் ஏற்பட்ட வாகன நெரிசல் காரணமாக உரிய நேரத்திற்கு ஆஜராக முடியவில்லை என அவரது சட்டத்தரணி நீதிமன்றத்திடம் தெரிவித்துள்ளார்.

பிரதிவாதிகள் உரிய நேரத்திற்கு நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு எச்சரிக்கை ஒன்றை விடுக்குமாறு அரசாங்கத்தின் பிரதி சொலிசிஸ்டர் ஜெனரல் திலீப பீரிஸ் நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்திருந்தார்.

குறித்த கோரிக்கையை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள் குழு அனைத்து பிரதிவாதிகளும் உரிய நேரத்திற்கு ஆஜராகுமாறு எச்சரிக்கை விடுத்திருந்தது.

கடந்த அரசாங்க காலத்தில் டீ.ஏ. ராஜபக்ஷ நினைவுத் தூபி மற்றும் நூதனசாலை அமைப்பதற்கு 90 மில்லியன் ரூபா அரச நிதியைப் பயன்படுத்தியதாக கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட 07 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டு சட்டமா அதிபர் திணைக்களத்தால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Read more...

யாழில் கேபிள் கம்பங்கள் அகற்றிய விவகாரம்: சீராய்வு மனு மீதான விசாரணைகள் ஒத்திவைப்பு!

யாழ்ப்பாணத்தில் கேபிள் கம்பங்கள் அகற்றிய விவகாரம் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட சீராய்வு மனு மீதான விசாரணைகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக நீதிமன்ற செய்திகள் தெரிவித்துள்ளன.

கேபிள் கம்பங்களை யாழ்ப்பாண மாநகர முதல்வர் அகற்றியமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு பிற்போடப்பட்டிருந்தது.
இதனை ஆட்சேபித்துத் தாக்கல் செய்யப்பட்ட சீராய்வு மனு இன்று யாழ்ப்பாண மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போதே யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கர், குறித்த மனுவை எதிர்வரும் 27ஆம் திகதி வரை ஒத்திவைத்தார்.

மேலும் குறித்த சீராய்வு மனுவின் பிரதிவாதிகள் முறையே யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி, சட்ட மா அதிபர், மாநகர முதல்வர் இ.ஆனோல்ட், மாநகர ஆணையாளர் ஜே.ஜெயசீலன் ஆகியோருக்கு அறிவித்தல் அனுப்ப, நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கர் உத்தரவிட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Read more...

இனவாதிகளுக்கு ஏற்றவாறு அரசியல் அமைப்பை உருவாக்க முடியாது - ரவி கருணாநாயக்க.

இந்த நாட்டில் உள்ள இனவாதிகளின் கருத்திற்கு ஏற்றவாறு அரசியலமைப்பை உருவாக்க முடியாது என, மின்சக்தி மற்றும் சக்தி வலுத்துறை அமைச்சர் ரவி கருணாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

இன்றைய தினம், அமைச்சர் ரவி கருணாநாயக்க மேல் மகாண ஆளுநர் அசாத் சாலியை, அவரது அலுவலகத்தில் சந்தித்துக் கலந்துரையாடியிருந்தார். இதன் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோதே அமைச்சர் ரவி கருணாநாயக்க இதனை கூறினார்.

புதிய அரசியலமைப்பு, ஒரு இனத்திற்காகவோ, ஒரு மதத்திற்காகவோ தயாரிக்கப்பட மாட்டாது. தற்போது நாட்டுக்கு புதிய அரசியலமைப்பொன்று அவசியமான ஒன்றாக இருக்கிறது. இதனை நாம் பலவந்தமாகக் கொண்டுவர முடியாது.

அனைத்து மக்களின் ஒத்துழைப்புடன், அவர்களின் எதிர்ப்பார்ப்பை பூர்த்தி செய்யக்கூடிய வகையிலேயே அது அமையப்பெற வேண்டும். எவ்வாறாயினும் ஒற்றையாட்சி, பௌத்தத்திற்கு முன்னுரிமையுடன் தான் புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படும். இதில் நாம் உறுதியாக இருக்கிறோம்.

இனவாதிகள் தான் இது தொடர்பில் பொய்யான கருத்துக்களை கூறிவருகிறார்கள். இவ்வாறான ஒரு அரசியலமைப்பு ஒரு இனத்துக்கோ, மதத்துக்கோ அல்லது கட்சிக்கோ மட்டும் மட்டுப்பட்டதாக இருக்காது.

இலங்கையர் எனும் அடிப்படையில்தான் இந்த அரசியலமைப்பு உருவாக்கப்படும் என்பதைக் கூறிக்கொள்ள விரும்புறோம். இந்தப் பிரச்சினையை நாம் வெகுவிரைவில் தீர்ப்போம்” என அமைச்சர் ரவி கருணாநாயக்க மேலும் குறிப்பிட்டார்.

Read more...

மதூஷ் உள்ளிட்ட சந்தேகநபர்களை டுபாய் சிறையில் வைத்திருப்பதே நல்லது - மஹேஷ் சேனாநாயக்க

டுபாயில் கைது செய்யப்பட்டுள்ள மதூஷ் உள்ளிட்ட சந்தேகநபர்களை அந்த நாட்டிலேயே சிறையில் வைப்பதே புத்திசாலித்தனமானது என்று இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் மஹேஷ் சேனாநாயக்க தெரிவித்துள்ளார். இந்த தகவல் சகோதர நாளிதழில் வெளியாக்கப்பட்ட செய்தியில் இருந்து கிடைக்கப் பெற்றுள்ளது.

இந்த சந்தேகநபர்களை நாட்டிற்கு அழைத்து வந்தால் அவர்கள் சிறையிலிருந்து தப்பிச் செல்வதற்கு வாய்ப்பு இருப்பதாகவும், பாதாள உலக கூட்டத்தை ஒழிப்பதற்கு ஜனாதிபதி எடுத்துள்ள முயற்சி பாராட்டுக்குரியது எனவும் இராணுவத்தளபதி தெரிவித்ததாக குறித்த நாளிதழ் குறிப்பிட்டுள்ளது.

இது மாத்திரமன்றி மாகந்துரே மதூஷை கைது செய்ததன் மதிப்பு நிச்சயமாக பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்கே உரியது எனவும்,
போதைப் பொருட்களைக் கைப்பற்றுவதற்கு எஸ்.ரி.எப். படைப் பிரிவின் கட்டளை அதிகாரி எம்.ஆர். லத்தீப் எடுக்கும் நடவடிக்கை மிக முக்கியமானது என்பதுடன் அவரது சேவைக் காலம் நீடிப்பும் விசேட அம்சமாகும் எனவும் இராணுவத் தளபதி மஹேஷ் சேனாநாயக்க தெரிவித்ததாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Read more...

பல்கலைக்கழக பிரவேசத்துக்கு விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி

பல்கலைக்கழக பிரவேசத்துக்கு விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்தினால் குறைவடைந்துள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.

புதிய கல்வியாண்டுக்காக (2018/2019) விண்ணப்பிக்கும் கால எல்லை ஒரு வாரத்தினால் காலத்தினால் நீடிக்கப்பட்டும் கூட, கடந்த வருடத்துடன் ஒப்பிடும் போது இவ்வருடம் பிரவேசத்திற்காக விண்ணப்ப எண்ணிக்கை குறைவடைந்துள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

கடந்த வருடம் பல்கலைக்கழக அனுமதிக்காக விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை 78900 என கணிப்பிடப்பட்ட நிலையில், இந்த வருடம் அந்த எண்ணிக்கை 77 ஆயிரத்தையும் தாண்டாதவகையிலேயே உள்ளதாக விண்ணப்பங்களை கணக்கிடும் போது கணிப்பிடப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. இந்த வருடம் விண்ணப்பங்கள் வீழ்ச்சிக்கு online முறையே முக்கிய காரணம் என்றும் சுட்டிகாட்டப்பட்டுள்ளது.

Read more...

முறிகள் மோசடி தொடர்பில் சம்பந்தப்பட்ட தரப்பினரிடமிருந்து நிதி இழப்பை மீள அறவிடும் வகையில் புதிய சட்ட திருத்தம்

முறிகள் மோசடியினூடாக இடம்பெற்ற 5.8 பில்லியன் ரூபா நிதி இழப்பை சம்பந்தப்பட்ட தரப்பினரிடமிருந்து மீள அறவிடும் வகையில் சட்ட திருத்தம் மேற்கொள்ள அரசாங்கம் தயாராகியுள்ளதாக இலங்கையின் ஆங்கில ஊடகமான சண்டே டைம்ஸ் பத்திரிகை வௌியிட்டுள்ள செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

குறித்த பத்திரிகை, பதிவு பங்கு பரிவர்த்தனை கட்டளைச்சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளதாக குறிப்பிட்டுள்ளதுடன், குறித்த திருத்தங்கள் தொடர்பில், கடந்த வௌ்ளிக்கிழமை பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் சட்டமாஅதிபர் திணைக்களத்தின் அதிகாரிகளுக்கு இடையில் கலந்துரையாடலொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளது. இந்த கலந்துரையாடலில், பதிவு மற்றும் பங்குப் பரிவர்த்தனை கட்டளைச் சட்டத்தின் 21/டீ/5 சரத்திலுள்ள பொறுப்பு என கூறப்படும் லியபிலிடி என்பதற்குப் பதிலாக நட்டம் எனப்படும் டமேஜஸ் என்ற பதத்தை இணைப்பதற்கு கவனம் செலுத்தப்பட்டகாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்காக குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கு சட்டமாஅதிபர் திணைக்களம், மத்தி வங்கி மற்றும் திறைசேரியின் அதிகாரிகள் உள்வாங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read more...

வடக்கில் கல்வித்துறை பணியாற்றும் பெண்கள் பாலியல் ரீதியில் துன்புறுத்தல் - ஆளுநருக்கு முறைப்பாடு

வட மாகாணத்தின் கல்வித்துறையில் பணிபுரியும் பெண்கள் பலரும் பாலியல் ரீதியில் துன்புறுத்தப்படுவது தொடர்பில் வட மாகாண ஆளுநர் சுரேன் ராகவனுக்கு அதிகளவான முறைப்பாடுகள் கிடைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த முறைப்பாடுகள் பாலியல் ரீதியில் துன்புறுத்தப்படுவது மற்றும் பால்நிலை சமத்துவம் இல்லாமை தொடர்பிலும் முன்வைக்கப்பட்டுள்ளதாக சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. இந்த முறைப்பாடுகளை கவனத்தில் எடுத்த ஆளுநர் சுரேன் ராகவன், இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு அவற்றிற்கான தீர்வுகளை வழங்குவதற்கு குறைகேள் விசாரணைக் குழுவொன்றினை ஸ்தாபிக்க தீர்மானித்துள்ளார்.

குறித்த குறைகேள் விசாரணைக் குழுவில் இரு பெண்கள் உள்ளடக்கப்படவுள்ளதுடன் மொத்தமாக 3 பேர் அங்கத்துவம் வகிப்பர்.
அதில் ஒருவர் முறைப்பாட்டாளர்களினால் முன்மொழியப்பட்டவராகவும் இருப்பார். ஆகவே, குறித்த குழு நியமிக்கப்பட்டவுடன் தனது பணிகளை நேர்த்தியாக முன்னெடுக்கும் என்று நம்பப்படுகின்றது.

Read more...

எதிர்வரும் 13 ஆம் திகதி வரை, கடல் பிரதேசங்களில் காற்றின் வேகம் அதிகரிக்கும் - வளிமண்டலவியல் திணைக்களம்

இன்றில் இருந்து எதிர்வரும் 13 ஆம் திகதி வரை நாட்டிலும் நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்று சற்று அதிகரிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. அத்துடன் நாடு முழுவதும் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50-60 கிலோ மீற்றர் வரை அதிகரித்து வீசும் அதே நேரம் கிழக்கு, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் பல தடவைகள் மழை பெய்யக் கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

நீர்கொழும்பிலிருந்து கொழும்பு, மற்றும் காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் பல இடங்களில், குறிப்பாக மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது வடகிழக்கு திசையிலிருந்து வீசக்கூடுவதுடன் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 30-40 கிலோ மீற்றர் வரை காணப்படும். மன்னாரிலிருந்து புத்தளம் மற்றும் கொழும்பு ஊடாக பலப்பிட்டி வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளிலும் மாத்தறையிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக மாத்தறை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளிலும் காற்றானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50-55 கிலோ மீற்றர் வரை அதிகரித்து வீசக்கூடுவதுடன் அவ்வேளைகளில் கடல் ஓரளவு கொந்தளிப்பாகவும் காணப்படும்.

இடியுடன் கூடிய மழை பெய்யும் நேரங்களில் கடற்பகுதிகளில் அவ்வப்போது பலமான காற்று வீசுவதுடன் அக்கடற்பிரதேசங்கள் கொந்தளிப்பாகவும் காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

Read more...

Sunday, February 10, 2019

அமைச்சர்களே நீங்கள் மறுபிறப்பில் பன்றி , கோழி , மாடுகளாக பிறப்பீர்கள்! இந்நாட்டு மக்கள் உங்களை கொன்று உண்பார்கள்.

எனது குலத்தை காண்பிப்பதற்காக தேர்தல் வாக்குச் சாவடிக்கு செல்லும் வழியிலுள்ள மின்கம்பங்களில் மேளங்களை தொங்கவிட்டார்கள். இருந்தபோதும் மாத்தறை மக்கள் எனக்கு 99762 வாக்குகளை வழங்கினார்கள் என்று மாத்தறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் நிரோசன் பிறேமரட்ண தெரிவித்துள்ளார்.

நேற்று முன்தினம் பாராளுமன்ற விவாதம் ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர் மிகவும் ஆணித்தரமான கருத்துக்களை பதிவு செய்து பேசுகையில் :

எங்கள் ஊரிலே வினிதா சமரசிங்க குணசேகர என்றொரு பெண் இருந்தார். அவர் பொலிஸ் கொஸ்தாபலாக கடமையாற்றும்போது, ஒரு தமிழ் இளைஞனை மணந்து கொண்டார். அந்த இளைஞன்தான் பின்னாளில் புலிகளின் பொலிஸ் அதிபராகவும் அரசியல் துறைப் பொறுப்பாளராகவும் நடேசன் எனும் பெயரில் அடையாளம் காணப்பட்டார்.

வினிதா சமரசிங்க குணசேகரவின் கணவன் பிரபாகரனின் அரசியல்துறை தலைவன் என அறிந்து கொண்ட பின்னர் நாங்கள், அவரது வீட்டுக்கு கல்லெறிந்து விரட்டவில்லை. அவர்கள் அங்கு வாழும்போது அவர்களது நல்ல கெட்ட விடயங்களில் பங்குகொள்ளாமல் ஒதுக்கி வைக்கவில்லை.

யுத்தம் முடிவடைந்த பின்னர் எனக்கும் இன்னும் ஞாபகம் உண்டு அப்போது, சுயாதீன ரூபவாஹினியில் இருந்தேன். பிரபாகரனின் தகப்பனாரை கொண்டுவந்து பனாகொட வைத்தியசாலையில் வைத்தியம் செய்தார்கள். பின்னர் அவர் மரணித்தபோது எமது படை வீரர்கள் விம்பி விம்பி அழுவதை நான் பார்த்தேன்.

இன்று நான் மதுஸ்ஸின் தந்தையாரின் மரண வீட்டிற்கு சென்றது பற்றி விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றது. நான் அந்த மரண வீட்டிற்கு சென்றது மதுஸ் என்ற மனிதனுக்காக அல்ல. நான் அங்கு சென்றது எனது மனிதாபிமானத்திற்காக. கம்புறுபிட்டிய கிரமாத்திற்கும் எனக்கும் மிகுந்த நெருக்கம் உள்ளது. எனது தந்தை கம்புறுபிட்டிய வைத்திசாலையில் 17 வருடங்கள் தொழில்புரிந்தார். அவர் அங்கு தொழில்புரிந்த காலத்தில் அவர் செய்தவேலை யாதெனில் கம்புறுபிட்டிய வை சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த மக்களின் சிரங்குகளை கழுவியதாகும். அதற்காக அந்த மக்கள் எம் மீது அளவுகடந்த அன்பு செலுத்தினார்கள். அவ்வாறு அன்பு செலுத்திய மனிதர்களில் ஒருவரது மரண வீட்டிற்கே நான் சென்றேன். அது எனது மனிதாபிமானம் தொடர்பான விடயம். நாளை மதுஸ் மரணித்து அவரது உடலம் எங்காவது வைக்கப்பட்டிருந்தால் அவரது மரணவீட்டிற்கும் நான் செல்வேன்.

ரஞ்சன் ராமநாயக அவர்கள் தனது முகநூலிலே நான் ரின்டி என்றொரு ஹோட்டலை ஆரம்பித்துள்ளதாகவும் அதற்கு 8 கோடிகள் செலவாகியுள்ளதாகவும் அவ்வளவு பணம் எங்கிருந்து கிடைத்தது என்ற கேள்வியையும் எழுப்பியிருந்தார்.

நான் இன்று உங்களுக்கு ஒன்றை கூறவிரும்புகின்றேன். நாம் கடந்த 34 வருடங்களாக ஒரு வீட்டில் குடியிருக்கின்றோம். அது அரச காணி அதற்கு இதுவரை எங்களுக்கு உறுதிகூடக்கிடைக்கவில்லை. அவ்வாறு எமது கிராமத்தில் 58 குடும்பங்கள் உறுதிகள் இன்றி வாழ்கின்றனர். நான் விரும்பியிருந்தால் எனக்குரிய உறுதியை பெற்றுக் கொண்டிருக்க முடியும் அனாலும் நான் அவ்வாறு செய்ய மாட்டேன். எனது கிராமத்திலுள்ள 58 பேருக்கும் கிடைக்கும்போது நானும் அதை பெற்றுக்கொள்வேன்.

நான் ஆரம்பித்திருக்கும் வியாபரம் வாடகை கட்டிடம் ஒன்றிலேயே ஆரம்பித்துள்ளேன். அவுஸ்திரேலியாவில் இருக்கும் வைத்தியர் ஒருவருக்கு சொந்தமான அந்த கட்டிடத்தை எடுத்துவிட்டு வியாபரத்தை ஆரம்பிப்பதற்கு போதிய முதல் இன்றி 6 மாதங்கள் இயங்கமுடியாத நிலையில் இதே பாராளுமன்ற கட்டிடத்தொகுதியில் உள்ள மக்கள் வங்கிக்கு சென்று கடன்தருமாறு வேண்டினேன். சொத்துக்கள் இன்றி கடனொன்றை பெற்றுக்கொள்ள முடியாது என்றார்கள். அதன் பின்னர் என்னுடைய நண்பர் ஒருவரிடம் இதுபற்றி கூறினேன். அவர் தனது காணி ஒன்றை இந்த வங்கியில் அடகு வைத்து எனக்கு தேவையான பணத்தை கொடுத்தார். அந்த கடனை இன்றும் இதே கட்டிடத்திலுள்ள கீழ்மாடியில் மீழச் செலுத்திக்;கொண்டிருக்கின்றேன்.

ஜேவிபி யே என்மீதான சேறடிப்புக்கு அத்திவாரமிட்டது. நாங்கள் ஒருபோதும் களவெடுத்து பழகியவர்கள் அல்ல. நான் க.பொ.த (சா.த) செய்யும்போது மாவரெல்ல சந்தையில் நாட்டாமி வேலை செய்துகொண்டிருந்தேன். எனது குடும்பத்தில் 5 பேர் பாடசாலைக்கு செல்லவில்லை. அவர்கள் 4ம் 5ம் வகுப்புடன் படிப்பை நிறுத்திக்கொண்டனர். அவர்களுக்கு அதற்கான பொருளாதாரம் இருக்கவில்லை.

நான் பாடசாலைக்கு சென்றுகொண்டிக்கும்போது எனது குலத்தை சொல்லி என்னை கல்லால் அடித்திருக்கின்றார்கள். ஆனால் அந்தப்பக்கம் திரும்பிப்பார்க்கவில்லை காரணம் திருப்பிப்பார்த்தால் அவ்விடத்திலேயே நான் நிற்கவேண்டி வரும் என்பதால். நான் மாத்தறை மாவட்டத்தில் தேர்தலில் போட்டியிட்டபோது, அந்த மாவட்டத்தை சேர்ந்த அரசியல்வாதிகள் இருவர் வாக்கடுப்பு நிலையங்கள் இரண்டுக்கு செல்லும் பாதைகளில் உள்ள மின்கம்பங்களில் மேளங்களை தொங்கவிட்டு இவனுக்காக 'சேர்' சொல்லப்போகின்றீர்கள் என்று எழுதியிருந்தார்கள். ஆனாலும் மாத்தறை மாவட்ட மக்கள் அதை கேட்கவில்லை அவர்கள் எனக்காக 99762 விருப்பு வாக்குகளை தந்தார்கள்.

எனது மூதாதையர்கள் தலதா மாளிகையில் மேளம் அடித்ததையிட்டு தான் பெருமைப்படுகின்றேன். எவருக்கும் அது பிரச்சினையாக இருக்கலாம் அனாலும் அது எனக்கு பெருமைக்குரியவிடயம்.

எனக்கு எந்தச் சந்தர்ப்பத்திலும் மதுஸ்போன்றவர்களை நியாயப்படுத்தவேண்டிய தேவை இல்லை. ஆனால் மதுஸ் போன்றவர்கள் இந்நாட்டில் உருவாகாது தடுக்கவேண்டும். பிரபாகரன் என்ற ஒரு மனிதர் உருவானார். லட்சக்கணக்கான மக்களின் உயிர்கள் காவுகொள்ளப்பட்டது. ஆனால் இன்றுவரை எவராவது ஆய்வொன்றை மேற்கொண்டு பிரபாகரன் உருவானதற்கு இதுதான் காரணம் என்று கூறியுள்ளார்களா? இல்லை.

ஆனால் இந்த நாட்டிலே பிரச்சினை ஒன்று இருக்கின்றது. அந்த பிரச்சினைக்கு ஓர் தீர்வு வேண்டும். அந்த தீர்வு எங்கிருந்தோ ஒரிடத்தில் ஆரம்பிக்கப்படவேண்டும்.

அந்தவகையில் நான் இங்கிருந்து மதுசுக்கு விடுக்கும் கோரிக்கை யாதெனின். மதுஸ் என்றோ ஒருநாள் மரணிக்கத்தான் போகின்றார். ஆனால் அவர் அதற்கு முன்னர் இந்தநாட்டிலே அவருக்கு யாருடன் தொடர்பு உள்ளது. அவருக்கு உதவி புரிபவர்கள் யார்? அவர் யார் யாருக்கு உதவி புரிந்துள்ளார் என்பதை இந்த நாட்டுமக்களுக்கு அறிவிக்கவேண்டும்.

நாம் இந்த நாட்டிலே இன்னும் மதுஸ் போன்றவர்கள் உருவாவதை தடுக்கவேண்டும். அவர்கள் எவ்வாறு உருவானார்கள் என்பதை அறியவேண்டும். மதுஸ் இன் தாயார் ஜேவிபி யின் பிரபல ஆதரவாளர். அவரை 1988 ம் ஆண்டு பிறேமதாஸ் ஆட்சிக் காலத்தில் அரச படைகள் சுட்டுக்கொன்றார்கள். அத்துடன் அவரது தந்தையர் வேறு திருமணம் ஒன்று செய்து கொண்டார். அந்நிலையில் பிறிதொருவரிடம் வளர்ந்தவர் மதுஸ். ஆனால் ஜேவிபி தனது ஆதரவாளர் சுட்டுக்கொல்லபட்டபின்னர் அந்த குடும்பத்தில் நிலை தொடர்பில் எவ்வித கவனமும் செலுத்தவில்லை. அவர்கள் அவ்வாறு கவனம் செலுத்தியிருப்பார்களானால் இன்று மதுஸ் போன்றவர்கள் உருவாக வாய்ப்பிருந்திருக்காது. அமெரிக்க இராணுவத்தால் யப்பான் மீது வீசப்பட்ட அணுகுண்டுகளின் விசம் தற்போதும் அந்த நாட்டிலே உள்ளது. அவ்வாறே இந்த நாட்டில் ஜேவிபி உருவாக்கிய வன்செயலின் தாக்கம்தான் மதுஸ்போன்றவர்கள்.

நான் இந்த பாராளுமன்றில் பேசிக்கொண்டிருக்கின்றபோது, இவ்விடத்திலிருந்து 500 மீட்டர் தூரத்திலுள்ள கிம்புலாகல சந்தியில் எனது மூத்த அண்ணர் கையிலே எண்ணை பொக்களங்களுடன் வடை சுட்டுக் விற்றுக்கொண்டிருக்கின்றார். நாங்கள் ஒரு மனிதனின் வெற்றிலை ஒன்றைக்கூட களவெடுத்தவர்கள் இல்லை. உழைத்து சாப்பிட்டு பழகிய மனிதர்கள். நான் இந்த பாராளுமன்றுக்கு வந்தது உங்களுடைய நிகழ்சி நிரலுக்கு செயற்பட அல்ல.

இந்த பாராளுமன்றிலே இன்று என்ன நடக்கின்றது. இருதரப்பினரும் மாறி மாறி விரல்களை நீட்டுகின்றனர். அதை விடுத்து இந்த நாட்டை முன்னேற்ற முன்வரவேண்டும் அதை செய்ய எம்மால் முடியும். அதற்கு தேவையானது, நேர்மையான மனதும் சிந்தனையும் மாத்திரமே.

இந்தநாடு சுதந்திரம் பெறும்போது ஒருகோடியே இருபத்தையந்து லட்சம் தங்கப்பவுண்கள் இருந்த நாடு இது. இன்று நாம் எதை வைத்துள்ளளோம்.

1978 ஆம் ஆண்டு யாப்பின் ஊடாக இந்த நாட்டிலே கள்வர்களும், போதைப்பொருள் வியாபாரிகளும், கொலைகாரர்களும் உருவானார்கள். 1978 ம் மகாவலி திட்டத்திற்காக உலகவங்கியாலும் சர்வதேச நாணய நிதியத்தாலும் அபிவிருத்திக்கென பணம் வாரி வழங்கப்பட்டது. ஆனால் வேலைகள் எதுவும் எதிர்பார்த்த வேகத்தில் செல்லவில்லை. அவர்கள் தங்களது பிரதிநிதிகளை பரிசோதனைக்கு அனுப்பினார்கள். இங்குவந்து பரிசோதனை மேற்கொண்டவர்கள் ஒர் அறிக்கையிட்டார்கள். அந்த அறிக்கையில் வழங்கப்பட்ட நிதியில் 40 வீதம் செலவிடப்பட்டுள்ளது ஏனைய பணம் அரசியல்வாதிகளதும் அரச அதிகாரிகளதும் பைக்குச் சென்றுள்ளது என தெரிவித்திருந்தார்கள். இந்த நாட்டின் சொத்துக்களை கொள்ளையிடுதல் 1978ல் ஆரம்பமானது.

இந்த நாட்டை திருத்தவேண்டுமாக இருந்தால் செய்யவேண்டிய இருவிடயங்களே உண்டு. ஒன்று நிர்வாக கட்டமைப்பை மாற்றியமைத்தல் மற்றது நீதி (சட்ட) வியூகத்தை மாற்றியமைத்தல். நாம் கள்வர்கள் உருவாகின்ற ஓட்டைகளை அடைக்கவேண்டும். அதன் பின்னர் அந்த கள்ளர்கள் நிர்வாகத்திலுள்ள ஓட்டையினூடாக பாய்கின்றபோது அவர்களை சட்டத்தினூடாக வளைத்துப்பிடித்து கட்டிப்போடுகின்ற வியூகம் ஒன்றை நாம் அமைத்துக்கொள்ளவேண்டும். ஆனால் இதை செய்யமாட்டார்கள். ஏனென்றால் அவர்களுக்கு அதிகாரத்தை கையில் வைத்துக்கொள்ளவேண்டும்.

இவர்கள் நல்லாட்சி என்றுதான் வந்தார்கள். ஆனால் எங்கள் அடிமனதிலும் அவ்வாறான ஒன்று வேண்டுமென்றுதான் எதிர்பார்த்தோம். மத்திய வங்கியின் பிணைமுறி கொள்ளை இடம்பெற்றபோது ரணில் விக்கிரமசிங்கவின் மனச்சாட்சி எங்கே போனது.

இந்த நாட்டிலே நீதியை பற்றியும் அதை நடைமுறைப்படுத்துகின்ற நீதிபதிகள் பற்றியும் என்னிடம் கேள்விகள் உண்டு. நீதி தேடுகின்ற முன்றாம் தரத்து மக்கள் எங்கே நீதி தேடிச் செல்வது. இந்த நாட்டிலே நீதி எங்கே உள்ளது.

நான் ஒரு பௌத்தன். இந்த பாராளுமன்றிலே இருக்கின்ற உறுப்பினர்கள் அமைச்சர்கள் நீங்கள் யாவரும் எமது மக்களின் சொத்துக்களை தின்னுகின்றீர்கள். மாபெரும் பாவத்தை செய்கின்றீர்கள். பௌத்த தத்துவங்களின்படி நீங்கள் யாவரும் அடுத்த பிறப்பிலே இந்த நாட்டில் கோழி, பன்றி , மாடுகளாக பிறப்பீர்கள். இந்த நாட்டு மக்கள் உங்களை உணவுக்காக கொன்று உண்பார்கள்.

Read more...

செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளரை அச்சுறுத்திய இராணுவம்.

செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர் ஒருவரை, இராணுவத்தினர் அச்சுறுத்திய சம்பவம், முல்லைத்தீவு, கணுக்கேணியில் இன்று இடம்பெற்றுள்ளது.

கணுக்கேணிப் பகுதியில் பொதுக் குழாய்க்கிணறு ஒன்றில் இருந்து இராணுவத்தினர் தொடர்ச்சியாக, இருபதிற்கும் மேற்பட்ட தண்ணீர் பௌசர்களில் நீரை எடுத்து செல்கின்றனர்.

இதனால் அந்த கிராமத்தில் உள்ள மக்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்கொள்வதாக, பல குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. இது குறித்து சம்பந்தப்பட்ட தரப்பினரிடம் முறைப்பாடும் அளிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் இன்று மக்கள் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் இணைந்து, இராணுவத்தினரிடம் நீர் எடுக்க வேண்டாம் என்று கோரிக்கை முன்வைத்தமையால், இராணுவத்தினருக்கும் மக்களுக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் குறித்த சம்பவம் தொடர்பாக செய்தி சேகரிப்பதற்காக சென்ற ஊடகவியலாளர்களை அச்சுறுத்து வகையில், இராணுவத்தினர் ஒளிப்படம் எடுத்துள்ளதுடன், ஊடகவியலாளர் ஒருவரின் கமராவினையும் பறிக்க முற்பட்டுள்ளனர்.

அத்துடன் குறித்த செய்தியைப் பதிவு செய்து கொண்டிருந்த ஊடகவியலார்களை, அங்கிருந்த இராணுவ அதிகாரிகள் கடும் தொனியில் எச்சரிக்கை விடுத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read more...

நிறைவேற்று ஜனாதிபதி முறைமை, சர்வாதிகாரத்திற்கு நிகரானது - ஜே.வி.பி

இலங்கையில் இப்போதுள்ள நிறைவேற்று ஜனாதிபதி முறைமை, சர்வாதிகார ஆட்சிக்கு நிகரானதாகவே காணப்படுவதாக, மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட போதே, அவர் இதனை தெரிவித்தார்.

ஆட்சி அதிகாரங்கள் அனைத்தும், ஒரு தனிநபர் கையில் குவிக்கப்பட்டுள்ளதால் முறையற்ற அதிகாரப் பிரயோகங்கள் இடம்பெற அதிகமான வாய்ப்புக்கள் உள்ளன.

இந்த நிலைமை, ஓர் சர்வாதிகார ஆட்சிக்கே வழிவகுக்கும் என்பது இன்று எம் அனைவராலும் அறியக்கூடியதாகவுள்ளது. ஏற்கனவேயே கடந்த ஆட்சியில் நாட்டு மக்கள் சர்வாதிகார ஆட்சியினை அனுபவித்திருந்தனர்.

தற்போதுள்ள இலங்கையில் நடைமுறையில் உள்ள நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையினை நீக்காவிட்டால், பிரதான கட்சிகளான ஐக்கிய தேசியக் கட்சிக்கும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் எதிராக, நாம் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவோம் என, ஜே.வி.பியின் நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Read more...

இந்த அரசாங்கம், அடுத்து என்ன செய்ய போகிறது?

இலங்கையில் இடம்பெற்ற யுத்தத்தின் போது, இடம்பெற்றதாக கருதப்படும் மனித உரிமை மீறல்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, சரியான நீதி கிடைக்க வேண்டும் என்பதே, நாட்டு மக்கள் முதல் சர்வதேசம் கொண்டுள்ள எதிரார்ப்பாகும். எனவே இந்த எதிர்பார்ப்பை நிறைவேற்ற இந்த அரசாங்கம் அடுத்தாக என்ன செய்யப் போகிறது? என்பதே இப்போதுள்ள கேள்வியாகும்.

இதுவரை காலமும் நாட்டில் ஏற்பட்ட அரசியல் குழப்ப நிலை குறித்த பேச்சுக்கள் தீவிரமடைந்திருந்தன. எதிர்வரும் 25 ஆம் திகதி ஜெனீவா கூட்டத்தொடர் ஆரம்பமாகவுள்ள நிலையில், தற்போது இலங்கையில் இடம்பெற்ற மந்த உரிமை மீறல்கள், சட்ட விதிமுறை மீறல்கள் குறித்த கருத்துக்கள் அதிகமாக பேசப்பட்டு வருகின்றன.

இந்த விடயம் தொடர்பில் நீதியை எதிர்பார்த்துள்ள மக்கள் மாத்திரமன்றி, நீதியை நிலைநாட்டும் பணியில் ஈடுபட்டுள்ள அதிகாரிகளும் அதிக கவனம் செலுத்தும் நிலை உருவாகியுள்ளது. ஒவ்வொரு முறையும் மக்கள் சந்த்தித்த மனித உரிமை மீறல்கள் குறித்தும், அவர்களுக்கான நீதி கோரியும், பல கூட்டத்தொடர்களில் சர்வதேசம் தமது கருத்தாடல்களை மேற்கொண்டு வருகின்றது.
இருப்பினும் மக்களுக்கான நீதி இன்று வரை கிடைக்காமல், ஏமாற்றம் மட்டும் நீடித்துக் கொண்டு செல்கின்றது.

இறுதி யுத்தத்தின் போது, தாம் பட்ட துன்பங்களும், அதன் பின்னர் ஏற்பட்ட காயங்களும் ஆற வேண்டும் என, மீண்டும் தம்மை வருத்தி மக்கள் பல போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். ஒரு பக்கம் தனது உறவுகளை இழந்து தத்தளித்து கொண்டிருக்கும் மக்களும், மறு பக்கம், தமது உறவுகள் எங்கு இருக்கிறார்கள் என்றே தெரியாமல் அவர்களை தேடி தருமாறு தவிக்கும் மக்களும், நாளுக்கு நாள் உள்நாட்டு மற்றும் சர்வதேச சமூகத்திடையே ஏமாற்றப்பட்டு கொண்டிருக்கின்றார்கள்.

இதற்கிடையில் கடந்த 2015 ஆம் ஆண்டுக்கு முன்னர், இலங்கை குறித்த மூன்று பிரேரணைகள் ஜெனீவா மனித உரிமைகள் மாநாட்டில் வைத்து நிறைவேற்றப்பட்டன. இதில் மூன்றாவது பிரேணை பலராலும் வரவேற்கப்பட்டது. அந்த பிரேரணையில் இலங்கையில் இடம்பெற்ற யுத்தத்தின் போது மேற்கொள்ளப்பட்ட மனித உரிமை மீறல்கள், சட்ட விதிமுறை மீறல்கள் குறித்து, ஐக்கிய நாடுகள் சபை விரிவான விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் என கோரிக்கை முன்வைக்கப்பட்டிருந்தது.

அதற்கான விசாரணை அறிக்கை கடந்த 2015 ஆம் ஆண்டு, செப்டெம்பர் மாதம் வெளியிடப்பட்டது. அந்த அறிக்கையில் பொறுப்புக்கூறல், நல்லிணக்கம், கலப்பு நீதிமன்றம் ஊடாக யுத்த குற்றச்சாட்டு விசாரணை முன்னெடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தல் விடுக்கப்பட்டிருந்தது.

எனினும் அந்த காலத்தில் இருந் நல்லாட்சி அரசாங்கம், இந்த அறிக்கையில் வலியுறுத்தப்பட்ட விடயங்களை விரும்பவில்லை. அடுத்து இலங்கை தொடர்பில் அமெரிக்காவால் முன்வைக்கப்பட்ட பிரேரணையில், கலப்பு நீதிமன்றம் குறித்த விடயம் உள்ளடக்கப்படவில்லை.

மாறாக வெளிநாட்டு நீதிபதிகளின் பங்குபற்றுதலுடன் கூடிய நீதிமன்ற பொறிமுறை ஒன்று உருவாக்கப்பட்ட வேண்டும் என்று வலியுறுத்தல் விடுக்கப்பட்டது. அந்த பிரேரணைக்கு 2015 ல் இலங்கை அனுசரணையும் வழங்கியிருந்தது. அதன் மேற்பார்வை காலம் கடந்த 2017 ஆம் ஆண்டு, நிறைவு பெற்றது.

அதன் பின்னர் மீண்டும் இரண்டு வருடங்களுக்கு அந்த பிரேரணை நீடிக்கப்பட்ட்டது. அதன்படி நீடிக்கப்பட்ட பிரேரணை இந்தமுறை இடம்பெறவுள்ள 40 ஆவது கூட்டத்தொடரில் மீண்டும் மேற்பார்வைக்கு உட்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்த நிலையில் இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்த கடந்த 4 வருடங்களில், பொறுப்புக்கூறல் விடயத்தில் இலங்கையின் முன்னெடுப்புக்களுக்கு என்ன நடந்தது? என, மனித உரிமை ஆணையாளர் தனது மதிப்பீட்டு அறிக்கையில் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதனை அடுத்து, இலங்கை அரசாங்கம் சர்வதேசத்திற்கு வழங்கிய பொறுப்புக்கூறல் தொடர்பில் பல கருத்தாடல்கள் இடம்பெறும் என பலராலும் எதிர்பார்க்கப்படுகின்றது. காணாமல் போனோர் அலுவலகம் நிறுவப்பட்டு, அதன் செயல்பாடுகள் இன்று வரை இடம்பெற்றாலும், காணாமல் ஆக்கப்பட்டவர்கள் அதில் திருப்தி கொள்ளவில்லை என்பதே உண்மையாகும்.

இதுதவிர இழப்பீடு வழங்குவதற்கான அலுவலகம்,உண்மையை கண்டறியும் ஆணைக்குழு என அரசாங்கத்தால், பல நகர்வுகள் இடம்பெற்றாலும், மக்கள் அதில் முழுமையான நம்பிக்கை இன்றி, மன விரக்தியில் உள்ளனர் என்பதை, எம்மால் பார்க்க முடிகின்றது.

இந்த நிலை, இன்னும் சில காலம் நீண்டால், அடுத்து வரும் தலைமுறைகளும் அதிகாரம் பொருந்திய அரசை ஏற்காமல் கொந்தளிப்புடன் இருக்கும் என, பல அரசியல் செயல்பாட்டாளர்கள் கருதுகின்றனர். இத்தனை கேள்விகளையும், எதிர்பார்ப்புக்களையும், கொண்டு, இறுதியில் மக்கள் மீண்டும் ஒருமுறை ஏமாற்றப்பட்டால், 30 வருடங்களுக்கு முன் தோன்றிய யுத்தம், இப்போது உருவெடுத்து விடுமோ என்ற அச்சம் எம்மவர் மத்தியில் தோன்றியுள்ளது.

இந்த அனைத்து விடயங்களுக்கும் நியாயமானதும், திருப்தியானதுமான தீர்வை வழங்க, இந்த அரசாங்கம் அடுத்து என்ன செய்ய போகிறது? என்பதே அனைவர் மனதிலும் உள்ள முதன்மை கேள்வியாகும்.

Read more...

சேவை செய்யாமல் உள்ள அரசியல்வாதிகள், விரட்டி அடிக்கப்பட வேண்டும் - மனோ கணேசன்.

சேவை செய்யாமல் மக்களை ஏமாற்றி வரும் அரசியல்வாதிகளை அடித்து விரட்ட வேண்டும் என, அரச கரும மொழிகள், இந்து சமய விவகார அமைச்சர் மனோ கணேசன் குறிப்பிட்டுள்ளார்.

நடமாடும் சேவை நிகழ்வொன்று இன்று, மாத்தளையில் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்த போதே, அமைச்சர் மனோ கணேசன் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இந்த அரசாங்கம், மக்களது அரசாங்கம். இந்த அரசாங்கத்தினை மக்களே ஏற்படுத்தினார்கள். இந்த அரசாங்கத்திலில் அங்கத்தவர்களாக இருப்பவர்களையும், மக்களே தெரிவு செய்தார்கள்.

எனவே அவர்களுக்குச் சேவை செய்யவே நாம் கதிரையில் இருக்கின்றோம். ஆனால் அவ்வாறு மக்களுக்குச் சேவை செய்ய முடியாத அமைச்சர்கள் வீட்டுக்குப் போய் விட வேண்டும்.

அவர்கள் இந்த நாட்டு மக்களுக்கு தேவையில்லை. மக்களுக்குச் சேவை செய்யாத அந்த அமைச்சர்களை, மக்கள் தான் அடித்துத் துரத்த வேண்டும்.

இந்த நாட்டில் அனைத்து இனங்களுக்கும் சமத்துவம் ஏற்படுவதை உறுதிப்படுத்துவதற்கு, அமைச்சர் என்ற வகையில் நான் பல முயற்சிகளை முன்னெடுத்து வருகின்றேன்.

இந்த முயற்சிகளுக்கு பல தடைகள் வந்தாலும், இந்த முயற்சிகளை நான் கைவிடப் போவதில்லை. இதில் நாம் தமிழராகவோ, சிங்களவராகவோ அல்லது முஸ்லிமாகவோ எம்மை அடையாளப்படுத்தாமல், இலங்கையராக அடையாளப்படுத்த வேண்டும் என, அமைச்சர் மனோ கணேசன் மேலும் குறிப்பிட்டார்.

Read more...

தனமல்வில துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலி

இன்று மதியம் 12.20 மணியளவில் தனமல்வில பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவிக்கின்றார். இதன்போது 42 வயதுடைய சுதுஹகுரு சுமித் எனும் வசந்த என்பவர் உயிரிழந்துள்ளார். இரண்டு மோட்டார் சைக்கிளில் வந்த இனம்தெரியாத நபர்களினால், இருவர் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது.

அத்துடன் சம்பவத்தில் காயமடைந்த 22 வயதுடைய இளைஞன் ஒருவன் ஹம்பாந்தோட்டை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த நிலையில் சம்பவத்தில் உயிரிழந்த நபர் 4 மாதங்களுக்கு முன்னர் இடம்பெற்ற கொலை சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

Read more...

பிரபல போதைப்பொருள் வர்த்தகர் "அந்தரே வத்தே சாமர" கைது

அந்தரே வத்தே சாமர என்ற மற்றுமொரு போதைப்பொருள் கடத்தல்கார் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தர்ப்பத்தில் அவரிடமிருந்த கைக்குண்டு ஒன்றும் 5 கிராம் நிறையுடைய ஹெரோயின் போதைப்பொருளும் மீட்கப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

துப்பாக்கிமுனையில் அச்சுறுத்தல் மற்றும் கப்பம் கோருகின்றமை உள்ளிட்ட பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்த அந்தரே வத்தே சாமர, இதுவரை நாளும் தலைமறைவாகி இருந்து வந்தார். இந்த நிலையில், பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் இன்று அதிகாலை மட்டக்குளிய பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விளக்கமறியலில் உள்ள தெமட்டகொட சமிந்தவுடன் இணைந்து சந்தேகநபர் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளதுடன் அங்கொட லொக்கா மற்றும் மாகந்துரே மதூஷின் உதவியாளராகவும் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்தநிலையில், சந்தேகநபர் பொலிஸ் திட்டமிட்ட குற்றச்செயல் தடுப்புப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்படவுள்ளார்.

Read more...

31 பேரின் குருதி மாதிரிகளில் போதைப்பொருள்

பிரபல போதைப்பொருள் கடத்தல்காரரும் பாதாள உலகக்குழு தலைவர் என கூறப்படும் மாகந்துரே மதூஷ் உள்ளிட்டவர்கள் இன்று டுபாய் நீதி மன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளனர். இன்று நீதிமன்றத்தில் 40 பேரும் முன்னிலை படுத்தப்படவுள்ள நிலையில் சந்தேகநபர்களில் 31 பேரின் குருதி மாதிரிகளில் போதைப்பொருள் காணப்பட்டமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடந்த வாரத்தில் டுபாயில் கைது செய்யப்பட்ட குறித்த சந்தேகநபர்ககளில் இலங்கையில் இடம்பெறும் போதைப்பொருள் கடத்தல்களுடன் தொடர்புடைய முன்னணி போதைப்பொருள் கடத்தற்காரர்கள் ஐவர் அடங்குவதாக டுபாய் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

அவர்களில் கஞ்சிப்பானை இம்ரான் எனப்படும் போதைப்பொருள் கடத்தல்காரரும் ஒருவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Read more...

சட்டவிரோத மதுபான விற்பனையைக் கட்டுப்படுத்தும், விசேட சுற்றுநிருபம்

சட்டவிரோத மதுபான விற்பனையைக் கட்டுப்படுத்தும், விசேட சுற்றுநிருபம் ஒன்றை வௌியிடவுள்ளதாக, ஜனாதிபதி அறிவித்துள்ளார். அடுத்த வாரமளவில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் இந்த விசேட சுற்று நிரூபம் வெளியாகவுள்ளது.

பொலன்னறுவையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்தபோதே ஜனாதிபதி இதனை தெரிவித்தார். சட்டவிரோத மதுபானம் காணப்படும் எந்த இடமாக இருந்தாலும் குறித்த பகுதிக்கு பொறுப்பான பொலிஸ் அதிகாரிகள் இந்த விடயம் தொடர்பில் பொறுப்பேற்க வேண்டும் எனவும் ஜனாதிபதி இதன்போது வலியுறுத்தினார்.

Read more...

மக்கள் நலன் கருதாத கூட்டு ஒப்பந்தத்திற்கு, எதிர்ப்பு தெரிவித்து பாத யாத்திரை.

மக்கள் நலனை கருத்தல் கொள்ளாத கூட்டு ஒப்பந்தத்திற்கு எதிராக பெருந்தோட்ட மக்கள் பாத யாத்திரையொன்றை முன்னெடுக்க தீர்மானித்துள்ளனர். புதிதாக கைச்சாத்திடப்பட்டுள்ள கூட்டு ஒப்பந்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்த பாதயாத்திரை முன்னெடுக்கப்படவுள்ளது.

மலையக மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் எதிர்வரும் செவ்வாய்கிழமை இந்த பாதயாத்திரை முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கயை குறித்த பாதயாத்திரை நுவரெலியா முதல் ஹட்டன் வரை முன்னெடுக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பெருந்தோட்ட தொழிலாளர்களின் 1000 ரூபாய் சம்பள உயர்வு விடயத்தில் ஏற்பட்டுள்ள இழுபறி நிலையை கண்டித்தும், கடந்த காலத்தில் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்ட வருகைக்கேற்ற திறன் விருத்தி கொடுப்பனவு 140 ரூபாயை புதிய கூட்டு ஒப்பந்தத்தில் உள்ளடக்குமாறு வலியுறுத்தியுமே, இந்த பாதயாத்திரை முன்னெடுக்கப்படவுள்ளது.

இதேவேளை, கூட்டு ஒப்பந்தத்தின் மூலம், பெருந்தோட்ட தொழிலாளர்கள் ஏமாற்றப்பட்டுள்ளதாக, தமிழ் முற்போக்கு கூட்டணி தொடர்ச்சியாக குற்றம் சுமத்தி வருகின்றது.

அத்துடன் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமது தரப்பு போராட்டங்களை முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாகவும் தமிழ் முற்போக்கு கூட்டணி தெரிவித்துள்ளது.

Read more...

தேசிய அரசாங்கத்தை ஆதரிப்பதில் இருந்து, சுதந்திர கட்சி உறுப்பினர்கள் விலகல்.

கட்சியில் இருந்து கிடைத்த அழுத்தம் காரணமாக, தேசிய அரசாங்கத்தை ஆதரிக்கும் செயற்பாட்டில் இருந்து, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி உறுப்பினர்கள் பின்வாங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பல நாடாளுமன்ற உறுப்பினர்கள், தேசிய அரசாங்கத்தில் இணைந்து கொள்ள ஆர்வமாக உள்ளனர். ஆனால் அவர்கள் தமது வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக, சபை முதல்வரும், அமைச்சருமான லக்ஷமன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசிய முன்னணியால் உருவாக்கப்படவுள்ள தேசிய அரசாங்கத்திற்கு ஆதரவு கொடுத்தால், அவர்களுக்கு எதிராக ஒழுக்கயீன நடவடிக்கை எடுக்கப்படும் என, அறிவிக்கப்பட்டதை அடுத்தே அவர்களில் பெரும்பாலோர், இந்த நடவடிக்கையில் இருந்து பின்வாங்குவதற்கு முடிவு செய்துள்ளதாக அறிய முடிகின்றது.

சுதந்திர கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் தேசிய அரசாங்கத்தில் இணைந்து கொள்வதற்கு ஆர்வமாக உள்ளனர். ஆனால் நாடாளுமன்றில் பெரும்பான்மை இல்லாத அரசாங்கத்திற்கு ஆதரவளிக்க, அவர்கள் தயாரில்லை.

தேசிய அரசாங்கத்தை ஸ்தாபிப்பதற்கான தீர்மானம் அடுத்த நாடாளுமன்ற அமர்வில் முன்வைக்கப்படவுள்ளது. இருப்பினும் ஏற்கனவே இந்த தீர்மானம் சபாநாயகரிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற நிலையியற் கட்டளையின் பிரகாரம், சபாநாயகருக்கு தீர்மானத்தை சமர்ப்பித்த பின்னர், நாடாளுமன்றில் சமர்ப்பிக்க ஐந்து நாட்கள் காலஅவகாசம் தேவை என, அமைச்சர் லக்ஷமன் கிரியெல்ல கூறியுள்ளார்.

அத்துடன் ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸுடன் கைகோர்த்து, ஒரு தேசிய அரசாங்கத்தை உருவாக்க ஐக்கிய தேசிய முன்னணி முயற்சித்து வருவதாகவும் அவர் கூறினார்.

Read more...

பிரபாகரன் ஏன் உருவாகினார்? என்று, யாரும் இதுவரை ஆராயவில்லை - நிரோஷன் பிரேமரத்ன.

பிரபாகரனின் தந்தையின் மரணத்தில் பல இராணுவ வீரர்கள் கண்ணீர் சிந்தினார்கள். அதற்காக அவர்கள் பிரபாகரனின் ஆதரவாளர்கள் என்று ஒருபோதும் கூறிவிட முடியாது என, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் நிரோஷன் பிரேமரத்ன குறிப்பிட்டுள்ளார். பிரபல பாதாள உலக குழு தலைவர் மாகந்துரே மதுஷின் தந்தையின் இறுதி கிரியைகளில் கலந்துகொண்டமையால் நிரோஷன் பிரேமரத்ன மீது, பல விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. அதற்கு பதில் வழங்கும் முகமாகவே அவர் இதனை கூறினார்.

தான் மனிதாபிமான அடிப்படையிலேயே மதுஷின் அப்பாவின் இறுதி கிரியைகளில் கலந்து கொண்டேன். எனினும் இது குறித்து ஜே.வி.பி. தவறான கருத்துக்களை பரப்பி வருகின்றது. இலங்கையின் யுத்த காலத்தில் பல உயிர்கள் கொன்று குவிக்கப்பட்டன. அத்துடன் பிரபாகரனின் தந்தை மரணித்த போது, இலங்கையின் இராணுவ வீரர்கள் கண்ணீரே சிந்தினார்கள். அதற்காக அவர்கள் அனைவரும் புலிகளின் ஆதரவாளர்கள் என கூறினால், அது தவறான கருத்தாகும். ஜே.வி.பியின் தீவிர ஆதரவாளரான மாகந்துரே மதுஷின் தாயாரை, பிரேமதாச அரசே சுட்டுக்கொன்றது என, நாடாளுமன்ற உறுப்பினர் நிரோஷன் பிரேமரத்ன குறிப்பிட்டார்.

பாதாள உலக குழு தலைவர் மாகந்துரே மதுஸுக்கும் தனக்கும் இடையில் எந்தவித தொடர்பும் இல்லை. அவருக்கு எந்தவித கொடிய தண்டனைகளை வழங்கினாலும், அதை பற்றி எனக்கு கவலையில்லை. மதுஷ் போன்ற மோசமான நபர்கள், இனியும் இந்த நாட்டில் இருக்க கூடாது. அத்துடன் மதுஷ் இவ்வாறு நடந்து கொண்டமைக்கான காரணத்தை அறிந்து கொண்டு, எதிர்காலத்தில் அவரை போன்றவர்கள் உருவாகாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

மதுஷின் இந்த நிலைக்கும் ஒரு வகையில் ஜே.வி.பியே காரணமாகும். மதுஷின் தாயாரை பிரேமதாச அரசு கொன்று விட்டது. அவரது தந்தை வேறு ஒரு பெண்ணுடன் சென்று விட்டார். மாகந்துரே மதுஷ் வேறு ஒருவரிடம் வளர்த்துள்ளார். இதனாலேயே மதுஷின் வாழ்க்கை தலைகீழாகியுள்ளது.

என்னை மாகந்துரே மதுஸுடன் தொடர்புபடுத்தும் ஜே.வி.பியின் உறுப்பினர்கள், மதுஷின் தாயாரது மரண சடங்கில் ஒரு தடவையாவது கலந்து கொண்டார்களா?

பிரபாகரன் ஏன் உருவாகினார்? என்பதை நாம் யாருமே ஆராய்ந்து பார்க்கவில்லை. ஆனால் பிரபாகரனின் உருவாக்கத்தை அடுத்து, நாட்டுக்கு பலத்த அழிவு ஏற்பட்டது. இப்போது மதுஷ் ஏன் உருவாகினார்? என்பதையாவது அறிந்து, நாட்டை காப்பாற்ற வேண்டிய கடமை அனைவருக்கும் உள்ளது என, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் நிரோஷன் பிரேமரத்ன குறிப்பிட்டார்.

Read more...

போலியான தகவல்களை வழங்கி, நட்டஈடு பெற, சிலர் முயற்சிக்கின்றனர் - அமைச்சர் ஹரிசன்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாக போலியான தகவல்களை வழங்கி, பலர் நட்டஈடு பெற முயற்சிப்பதாக, விவசாயம், கிராமிய பொருளாதாரம், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசன நீர் முகாமைத்துவம், கடற்தொழில் மற்றும் நீரியல் வள அமைச்சர் பி.ஹரிசன் குற்றம் சுமத்தியுள்ளார். எனினும் வடக்கிலுள்ள நெற்செய்கையாளர்கள் வெள்ளத்தால், அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். அவ்வாறு பாதிக்கப்பட்டவர்களுக்கு எதிர்வரும் 14 ஆம் திகதி வியாழக்கிழமை நட்டஈடு வழங்க, தாம் நடவடிக்கை எடுப்பதாக அவர் கூறினார். அவ்வாறு பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு முதல் 14 நாட்களுக்குள் நட்டஈடு வழங்கப்படாவிட்டால், அவர்கள் முறைப்பாடு பதிவு செய்யலாம் எனவும் அவர் தெரிவித்தார்.

வடக்கில் விவசாயத்திற்கும், விவசாயிகளுக்கும் ஏற்பட்ட சேதங்கள்,அழிவுகள் தொடர்பில் விசேட குழுக்கள் நியமிக்கப்பட்டு, தகவல்கள் திரட்டப்பட்டுள்ளன. முழுமையான அழிவு, பகுதி அளவிலான அழிவு, சிறிய சேதம் என்று பல கட்டங்களாக இவை வகைப்படுத்தப்பட்டுள்ளன.

வடக்கில் 50 ஆயிரம் நெற்செய்கை வெள்ளத்தால், அழிவடைந்துள்ளன. இதற்கமைய முழுமையாக பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு, ஏக்கர் ஒன்றுக்கு 40 ரூபாய் வழங்கப்படும் என, அமைச்சர் கூறினார். இந்த நடவடிக்கை எதிரவரும் 14 ஆம் திகதி முதல், 20 ஆம் திகதி வரை முன்னெடுக்கப்படும். இந்த நட்டஈடு யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வவுனியா, முல்லைத்தீவு மாவட்ட அலுவலகங்களில் வைத்து, விவசாயிகளுக்கு வழங்கப்படும்.

இதேவேளை நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா, வெள்ளத்தால், சோள பயிர்செய்கையும் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளது என குறிப்பிட்டிருந்தார். சோள பயிர்செய்கையும் இவ்வாறு பாதிக்கப்பட்டிருப்பின், பிரதேசத்திற்கு பொறுப்பான மாவட்ட செயலர், தமக்கு பரிந்துரைத்தால், நிச்சயமாக அவர்களுக்கும் ஏக்கர் ஒன்றுக்கு 40 ஆயிரம் ரூபாய் வீதம் வழங்க தயாராக உள்ளதாக, விவசாயம், கிராமிய பொருளாதாரம், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசன நீர் முகாமைத்துவம், கடற்தொழில் மற்றும் நீரியல் வள அமைச்சர் பி.ஹரிசன் குறிப்பிட்டார்.

வடக்கில் ஏற்பட்ட வெள்ளத்தால், 1600 மாடுகளும், 700 ஆடுகளும், 5000 கோழிகளும் இறந்துள்ளன. இவற்றின் மொத்த பெறுமதி 55 மில்லியன் ரூபாய்களாகும். எனவே இதற்கான நட்டஈட்டை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளோம்.

எனினும் உண்மையாக பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு மட்டுமே எம்மால் நட்டஈட்டை வழங்க முடியும். பலர் தமக்கு பொய்யான தகவல்களை வழங்கி நட்டஈட்டை பெற முற்படுவதாகவும், அவர்களுக்கு எந்தவித நட்டஈடும் வழங்கப்பட மாட்டாது என தெரிவித்த, விவசாயம், கிராமிய பொருளாதாரம், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசன நீர் முகாமைத்துவம், கடற்தொழில் மற்றும் நீரியல் வள அமைச்சர் பி.ஹரிசன், போலித் தகவல்களை வழங்குவோருக்கு எதிராக, சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்தார்.

Read more...

பல்கலைக்கழகங்கள் தொடர்பான, புதிய அறிக்கை விரைவில் - சுனில் ஹந்துன்நெத்தி.

இலங்கை பல்கலைக்கழகங்கள் தொடர்பிலான புதிய அறிக்கை ஒன்றை தயாரிப்பதாக, கோப் குழு தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்துள்ளார்.

பல்கலைக்கழகத்திற்கான நிதி, வௌிநாட்டு மாணவர்களுக்கான புலமைப்பரிசில், பல்கலைக்கழகத்தில் முன்னெடுக்கப்படும் செயற்றிட்டங்கள், மாணவர்களுக்காக ஒதுக்கப்பட்ட நிதி உள்ளிட்ட காரணிகள் தொடர்பிலான அறிக்கையே சமர்ப்பிக்கப்படவுள்ளதாக அவர் சுட்டிக் காட்டினார்.

அனைத்து பல்கலைக்கழகங்களிலும் பொதுவான பிரச்சினைகளே காணப்படுகின்றன. இதேவேளை, கோப் குழு அறிக்கையில் உள்ளடங்கும் விடயங்கள் தொடர்பில் விடயத்திற்கு பொறுப்பான அமைச்சின் செயலாளர்களால் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து, எதிர்வரும் மார்ச் 24 ஆம் திகதிக்கு முன்னர் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என கோப் குழுவின் தலைவர் சுனில் ஹந்துன்நெத்தி கூறியுள்ளார்.

அத்துடன் கோப் குழுவின் அறிக்கை கடந்த மாதம் 24 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட நிலையில், அது குறித்து அமைச்சர்கள் தமது நிலைப்பாட்டை சபாநாயகருக்கு அறிவிக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

Read more...

காங்கேசன்துறை அபிவிருத்தி திட்டம் வெள்ளிக்கிழமை ஆரம்பம்.

யாழ்ப்பாணம் - காங்கேசன்துறைத் துறைமுக அபிவிருத்தித் திட்டம், எதிர்வரும் வெள்ளிக்கிழமை ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த துறைமுக அபிவிருத்தி திட்டம், இந்திய நிதியுதவி கீழ் ஆரம்பிக்கப்படவுள்ளது. இந்த திட்டத்திற்கு 45.27 மில்லியன் அமெரிக்க டொலர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம், மூன்று ஆண்டுகளுக்குள் பூர்த்தியடையும் என தெரிவிக்கப்படுகின்றது.

பிரதமர் ரணில் விக்ரமசிங்க, இந்திய உயர்ஸ்தானிகர் மற்றும் துறைமுகங்கள், கப்பற்துறை அமைச்சர் சாகல ரத்நாயக்க உள்ளிட்ட அரசாங்கத்தின் முக்கியஸ்தர்கள், இந்த திட்டத்தின் ஆரம்ப நிகழ்வில் கலந்து கொள்ளவுள்ளனர்.

இதேவேளை பலாலி விமான நிலைய அபிவிருத்தி திட்டமும் எதிர்வரும் வெள்ளிக்கிழமை ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

சுமார் 2 பில்லியன் ரூபாய் செலவில் இந்த இரு அபிவிருத்தித் திட்டத்தை முன்னெடுப்பதற்கு, அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளதாக அரசாங்க தரப்பு செய்திகள் தெரிவிக்கின்றன.

Read more...

அடுத்து வரப்போவது, மாகாண சபை தேர்தலே - மீண்டும் ஜனாதிபதி வலியுறுத்தல்.

ஜனாதிபதி தேர்தல் இடம்பெறுவதற்கு முன்னர், மாகாண சபை தேர்தலே இடம்பெறும் என, ஜனாதிபதி மைத்திரிப்பால சிறிசேன மீண்டும் திட்டவட்டமாக கூறியுள்ளார். இது குறித்து சட்ட ரீதியாக எழுந்துள்ள பிரச்சனைகள் அனைத்தும் முழுமையாக தீர்க்கப்படும் என அவர் தெரிவித்தார். நேற்று பொலன்னறுவையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட ஜனாதிபதி, இதனை கூறினார்.

நாட்டில் ஜனாதிபதி தேர்தல் உரிய நேரத்தில் நடத்தப்படும். எனினும் சில தரப்பினர், பலவந்தமான தேர்தலை நடத்த பல முயற்சிகளை முன்னெடுத்து வருகின்றனர். ஆனால் அதற்கு தாம் ஒருபோதும் இடமளிக்கப்பட போவதில்லை என, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளார்.

நாட்டின் நலன் கருதி, ஆட்சிக்கு வந்த நான்கு வருடங்களில், பல முக்கிய நடவடிக்கைகளை மேற்கொண்டதாக தெரிவித்த ஜனாதிபதி, நாட்டை பாதாளத்திற்குள் தள்ளும் போதைப்பொருள் கடத்தல் குறித்து, தாம் மிகவும் பாடுபட்டு அதிக வேலைத்திட்டங்களை முன்னெடுத்துள்ளதாக தெரிவித்தார்.

இந்த செயல்திட்டத்திற்காக இலங்கையில் என்றும் இல்லாதவாறு, காவல்துறையினரை பலப்படுத்தியுள்ளதுடன், எதிர்வரும் நாட்களில் மேலும் பல முக்கிய மாற்றங்களை மேற்கொள்ள தான் திட்டமிட்டுள்ளதாக அவர் கூறினார்.

இந்த நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்த ஸ்ரீலங்கா சுதரித்திர கட்சி அர்ப்பணிப்புடன் செயல்படும் என, இதன்போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

Read more...

ஒரு தொகை கஞ்சா போதைப்பொருள் பொதிகள், யாழில் மீட்பு - காவல்துறை.

யாழ்ப்பாணத்தில் கைமாற்றவிருந்த ஒரு தொகை கஞ்சா போதைப்பொருள் பொதிகளுடன், ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம், செம்மணி வீதியில் வைத்து நேற்று மாலை, வத்தராயன் தாளையடிப் பகுதியைச் சேர்ந்த 37 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இதன்போது 17 கிலோ 560 கிராம் கேரளா கஞ்சா போதைப்பொருள் பொதிகள் அவரிடம் இருந்து மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ்.மாவட்ட பொலிஸ் புலனாய்வாளர்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், யாழ். பிரதேச பொலிஸ் அத்தியட்சகரின் தலைமையிலான பொலிஸ் குழுவினர் இணைந்து, இந்த கஞ்சா தொகையை மீட்டுள்ளனர்.

குறித்த கஞ்சா பொதிகள், தாளையடியில் இருந்து, விற்பனை செய்வதற்கு கைமாற்ற முற்பட்ட போதே, பொலிஸாரிடம் பிடிபட்டுள்ளது.

கைதுசெய்யப்பட்ட குடும்பஸ்தரிடம், யாழ்ப்பாணம் பொலிஸார் தற்போது தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இவரை, இன்றைய தினம் யாழ்ப்பாணம் நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கையை, முன்னெடுத்து வருவதாக யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Read more...

Saturday, February 9, 2019

தமிழ் தேசியத்துள் ஒழிந்திருக்கும் போதை வியாபாரிகள்!

கல்வியின் விளைநிலம் என்று முன்னோர் காலத்தில் புகழ்பெற்றிருந்த இலங்கையின் யாழ் மாவட்டம் இன்று சமூகவிரோத செயல்களின் விளைபூமியாக பரிணமித்து நிற்கின்றது. போதைப்பொருள் வியாபாரிகளின் சொர்க்க பூமியாக அது திகழ்கின்றது. யாழ்பாணத்தில் போதைப்பொருள் மொத்தவியாபார வலைப்பின்னல்கள் ஒவ்வொன்றும் சிக்குகின்றபோது, அதன் பின்னணியில் வடபிராந்தியத்தில் முன்னணியில் நிற்கின்ற அரசியல் பிரபலங்களின் கை இருக்கின்றமை வெளிவந்துகொண்டிருக்கின்றது.

அந்த வரிசையில் அண்மையில் வல்வெட்டித்துறை பிரதேசத்தில் 108 கீலோ கிராம் கேரளா கஞ்சாவுடன் மாட்டியுள்ளார் தமிழ் தேசிய போர்வையினுள் ஒழிந்திருந்து மாவீரர்கள் என்போருக்கு வல்வெட்டிதுறையில் விழா நாடத்திக்கொண்டிருந்த சண்முகம் என்பவர். இவர் கடந்த உள்ளுராட்சி தேர்தலில் வல்வெட்டித்துறை மாநகர சபைக்குட்பட்ட ரேவடி வட்டாரத்தில் உதயசூரியன் சின்னத்தில் „தூய கரங்கள். தூய நகரம்' என்ற சுலோகத்தின் கீழ் போட்டியிட்டிருந்தவர். தந்தை செல்வாவின் பின் ஒழிந்து நின்று „சுயநிர்ணயமும் நகர அபிவிருத்தியும்' வேண்டுமென்றால் போடுங்கள் உங்கள் வாக்குகளை எனக்கு என்று கேட்டவர்தான் இந்த போதைப்பொருள் கடத்தல் மன்னன்.



நோர்வே நாட்டிலிருந்து குற்றச்செயல் ஒன்று காரணமாக நாடுகடத்தப்பட்டிருந்த சண்முகம் சொந்தமாக இயந்திரப்படகு ஒன்றை வல்வெட்டித்துறையில் வைத்திருந்து மேற்படி வியாபாரத்தில் ஈடுபட்டுவந்துள்ளார்.

இலங்கையிலே அரசியல்வாதிகளும் சமூகவிரோதிகளும் இன்று தேசியத்தினுள் மாத்திரம் ஒழிந்து கொள்வதில்லை, அவர்கள் தங்களை தாங்களே இலகுவாக விளம்பரம் செய்துகொள்ள மிகவும் மலிவான தளம் ஒன்று உண்டு. அதுதான் மக்களின் அவலங்களும் வறுமைகளும். கொள்ளையடிக்கும், கப்பம் வாங்கும், போதைப்பொருள் கடத்தும் சட்டவிரோத பணத்தை கொண்டு வறுமையில் வாடும் மக்களுக்கு 1000 ரூபாவுக்கு ஒரு பார்சலை கொடுத்து அதற்கு மேலதிகமாக 1000 ரூபாவை ஊடகங்களுக்கும் கொடுத்துவிட்டால், கொள்ளயைடிப்பவன் வள்ளலாகின்றான். அவனுடைய பின்னணி தொடர்பில் எவரும் கரிசனை கொள்வதில்லை. அவன் தனது தொழிலை தங்கு தடையின்றி செய்து முடிக்கின்றான்.

கீழுள்ள படங்களில் அவ்வாறான காட்சிகளை கண்கின்றீர்கள். கண்டனத்திற்குரிய விடயம் யாதெனில் சுவிட்சர்லாந்திலிருந்து குழுவொன்று இவனுக்கு உதவியும் ஒத்தாசையும் புரிகின்றது என்பதாகும்.




இவ்வாறே குறித்த கஞ்சாக்கடத்தல்காரன் வல்வெட்டித்துறையின் முக்கிய பிரமுகராக காண்பிக்கப்படுகின்றான். அங்கு இடம்பெறுகின்ற கலைகலாச்சார நிகழ்வுகளின் முக்கிய பிரதிநிதியாக கலந்து கொண்டு போட்டிகளில் வென்றவர்கள் இவன் கையால் பரிசில்கள் வழங்கப்படும் காட்சிகளை இங்கு காணலாம். இவர்கள் வழர்ந்துவந்து நாங்கள் போதைப்பொருள் கடந்தல்காரனின் கையால் பரிசில் வாங்கிய பெருமைக்குரியவர்கள் என்று பெருமைபட்டுக்கொள்ளட்டும்.



வல்வெட்டித்துறையில் மாவீரர் நிகழ்வுகளை நிகழ்திய மாபெரும் வீரன் தனது வீர தீர செயல்களை காண்பிக்கும் செல்பி இது. கயவர்கள் தமது இருப்பிற்காக எதுவெல்லாம் செய்வார்கள் என்பதற்கு இது சிறியதோர் உதாரணம்.



Read more...

"த ஹிந்து" பத்திரிகை ஏற்பாடு செய்திருந்த மாநாட்டில் மஹிந்த ராஜபக்ஸ உரை

எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஸ, இந்தியாவின் ‘த ஹிந்து’ பத்திரிகை ஏற்பாடு செய்திருந்த மாநாடொன்றில் உரை நிகழ்த்தியுள்ளார். இந்தியா சென்றிருந்த எதிர்க்கட்சித் தலைவர் பெங்களூரில் இன்று ஆரம்பமான மாநாட்டில் கலந்து கொண்டிருந்தார்.

இந்த மாநாட்டில் உரை நிகழ்த்திய எதிர்கட்சித் தலைவர், இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையிலான எதிர்கால உறவுகளை அடிப்படையாகக் கொண்டு கருத்துக்களை வெளிப்படுத்தி இருந்தார். இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையிலான உறவில் பாதிப்பு ஏற்பட்ட சந்தர்ப்பங்கள் தொடர்பிலும் எதிர்க்கட்சித் தலைவர் இங்கு சுட்டிக்காட்டினார்.

இதேவேளை இந்த மாநாடு நாளையுடன் நிறைவுபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read more...

விசேட சுற்றி வளைப்புக்களில் 3876 பேர் பொலிஸாரினால் கைது

நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது சந்தேகிக்கப்படும் 3876 பேர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவின் பணிப்புரைக்கமைய முன்னெடுக்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.


இந்த விஷேட சுற்றிவளைப்பு நடவடிக்கை நேற்றிரவு 11.00 மணிமுதல் இன்று அதிகாலை 3.00 மணி வரையில் இடம்பெற்றதாக பொலிஸ் ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

கைது செய்யப்பட்டவர்களில் 950 பேர் பிடியாணை பிறப்பிக்கப்பட்டவர்கள் எனவும், 904 பேர் மது போதையுடன் வாகனம் செலுத்தியவர்கள் எனவும், அத்துடன் போதைப் பொருட்களை வைத்திருந்தவர்கள் 1033 பேர் எனவும் பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர்.

Read more...

''கைதிகளும் மனிதர்களே'' - ஜனாதிபதிக்கு விளக்கிய, மனித உரிமை ஆணைக்குழு.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அண்மையில், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு மீது முன்வைத்த விமர்சனங்கள் குறித்த செய்திகள் தற்போது அதிகமாக அடிபடுகின்றன. ஒரு புறம் இலங்கை மனித உரிமை ஆணைக்குழு மீது, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்வைத்த விமர்சனங்களால், ஆணைக்குழு அதிருப்தி வெளியிட்டுள்ளது. மறு புறம் ஜனாதிபதி தன்னிலை விளக்கங்களை வழங்க வேண்டும் என்றும், பலரால் எதிர்பார்க்கப்பட்டு வருகின்றது.

இந்த விடயம் குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு, மனித உரிமை ஆணைக்குழுவின் தலைவரான கலாநிதி தீபிகா உடகம கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அந்த கடிதத்தில், அநீதியான விமர்சனங்கள் காரணமாக, நாங்கள் மனமுடைந்து போயுள்ளதுடன் உற்சாகம் இழந்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சிறைச்சாலையில், கைதிகள் தாக்கப்பட்ட விடயத்தில் மனித உரிமை ஆணைக்குழுவின் தலையீடு குறித்து, கருத்து தெரிவித்துள்ளதை தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ள தீபிகா உடகம, சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களின் நலன்களை கண்காணிப்பதும், உரிமைகளை உறுதி செய்வதும் மனித உரிமை ஆணையகத்தின் முக்கிய பணிகளில் ஒன்று என தெரிவித்துள்ளார்.

சிறைக்கைதிகளின் உரிமைகள் மற்றும் அவர்களுக்கான தண்டனைகள் குறித்து, இலங்கை மனித உரிமை ஆணையம் தகவல்களை முன்வைப்பது, குற்றவாளிகளை பாதுகாக்க முயல்வதாக அர்த்தப்படுத்தப்படுவதாகவும், அது முற்றாக தவறானதாகும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை சிறைகளில் விசேட அதிரடிப்படையினர் நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளமை குறித்து, தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களும் அவர்களது குடும்பத்தவர்களும் கவலை வெளியிட்டுள்ளனர். இதன் காரணமாக ஆணைக்குழு விசேட அதிரடிப்படையின் கட்டளை அதிகாரிக்கு கடிதமொன்றை அனுப்பியது . அந்த கடிதத்தில் கைதிகளும் மனிதர்களே என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

இதேவேளை மாலியில் உள்ள இலங்கையின் அமைதிகாக்கும் படையினரை மீள அழைப்பது, இலங்கை மனித உரிமை ஆணையத்தின் நடவடிக்கைகளால் தாமதமானது என, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்திருப்பது தவறானது எனவும், தீபிகா உடகம தெரிவித்துள்ளார்.

மாலியில் இலங்கை படையினர் கொல்லப்பட்டமைக்கு இலங்கை மனித உரிமை ஆணையகத்தின் மீது பழியை போடுவது, கடும் கரிசனத்தையும் வேதனையும் அளித்துள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எங்களது சுதந்திரத் தன்மை காரணமாகவும், எங்கள் மீதான நம்பிக்கை காரணமாகவும், ஐக்கிய நாடுகள் அமைதி காக்கும் படையில் தற்போது இடம்பெற்று வரும், படையினர் குறித்த விசாரணைகளை மேற்கொள்ளும் பொறுப்பை, ஐக்கிய நாடுகள் சபை எங்களிடம் வழங்கியுள்ளது என, இலங்கை மனித உரிமைகள் ஆணையகத்தின் தலைவர் தீபிகா உடகம, ஜனாதிபதிக்கு அனுப்பிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Read more...

உண்மை நிரூபிக்கப்பட்டால், பதவியில் இருந்து விலக தயார் - சமல் ராஜபக்ஷ சூளுரை.

ஸ்ரீலங்கன் எயார் லைன்ஸ் நிறுவனத்தின் பணிப்பாளர் சபை கூட்டம் தனது இல்லத்தில் இடம்பெற்றமையை நிரூபித்தால், தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்வதாக முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்ஷ சவால் விடுத்துள்ளார்.

சமல் ராஜபக்ஷவின் உத்தியோகபூர்வ இல்லத்தில், குறித்த கூட்டம் இடம்பெற்றதாக கோப் குழு அறிக்கை வெளியிட்டது. இதனை அடுத்து நாடாளுமன்றில் பெரும் அமளி துமளி ஏற்பட்டது.

நாடாளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற கோப் குழு அறிக்கை தொடர்பான, சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையின் போதே, இந்த பதற்றம் ஏற்பட்டது.

இதில் கலந்து கொண்டிருந்த இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க, ஸ்ரீலங்கா எயார் லைன்ஸ் நிறுவனத்தின் பணிப்பாளர் சபை கூட்டம் முன்னாள் சபாநாயகர் சமால் ராஜபக்ஷவின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் இடம்பெற்றுள்ளதாக, கோப் குழு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறினார்.

ஸ்ரீலங்கா எயார் லைன்ஸ் நிறுவனத்தின் கூட்டம் சபாநாயகரின் வாசஸ்தலத்தில் நடத்த எந்த தேவையும் இல்லை. அப்படியாயின் யாருடைய தேவைக்கு இது நடத்தப்படுள்ளது? என்பதை உணர்ந்து கொள்ளலாம் என, ரஞ்சன் ராமநாயக்க குறிப்பிட்டார்.

இதன்போது சபைக்கு வந்த முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்ஷ, ஒழுங்கு பிரச்சினையை முன்வத்து, அவ்வாறு கூட்டம் நடத்தி தீர்மானங்கள் எடுத்திருப்பதை நிருபித்தால், தமது நாடாளுமன்ற பதவியை இராஜினாமா செய்வதாக குறிப்பிட்டார்.

இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர்களான சுனில் ஹந்துன்னெத்தி, சமல் ராஜபக்ஷ மற்றும் ரஞ்சன் ராமநாயக்க ஆகியோருக்கிடையில், பெரும் வாக்குவாதங்கள் இடம்பெற்றதாக, நாடாளுமன்ற செய்திகள் தெரிவித்துள்ளன.

Read more...

மாகந்துரே மதுஸுக்கும், மங்களவுக்கும் இடையில் தொடர்புள்ளதா?

பாதாள உலக குழுவின் முக்கிய தலைவராக கருதப்பட்ட மாகந்துரே மதுஸ் உள்ளிட்ட 25 பேர், டுபாயில் மறைந்திருந்த நிலையில், அந்த நாட்டு காவல்துறையினரால் அதிரடியாக செய்யப்பட்டனர். இந்த நிலையில் மாகந்துரே மதுஸுக்கும், அமைச்சர் மங்கள சமரவீரவுக்கும் இடையில் தொடர்புகள் இருப்பதாக செய்திகள் பரவின.

இந்த விடயம் தொடர்பாக அமைச்சர் மங்கள சமரவீர கடிதமொன்றை எழுதியுள்ளார். கைது செய்யப்பட்ட பாதாள உலக குழுவில், ராஜதந்திர கடவுச்சீட்டு வைத்திருந்தவர் யார்? என்பது தொடர்பிலான விசாரணையை விரைந்து நடத்துமாறு, நிதி அமைச்சர் மங்கள சமரவீர எழுதிய கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த கடிதம், நேற்றைய தினம், பொலிஸ்மா அதிபருக்கு எழுதப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாகந்துரே மதுஷ் கைது செய்யப்பட்ட போது, ராஜதந்திர கடவுச் சீட்டுடன் கைது செய்யப்பட்டவர், தனது ஊடக இணைப்புச் செயலாளர் என்று, பொய் பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமைச்சர் மங்கள சமரவீர குறிப்பிட்டார்.

அத்துடன் ராஜதந்திர கடவுச்சீட்டுடன் கைது செய்யப்பட்ட நபருக்கும், தனக்கும் இடையில் எவ்வித தொடர்பும் இல்லை என்று, இதுவரை இடம்பெற்ற இரண்டு ஊடகவியலாளர் சந்திப்புகளின் போது தான் தெரிவித்திருந்த போதும், தனக்கு எதிரான பிரச்சாரங்கள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாக, மங்கள சமரவீர தனது கடிதத்தில் சுட்டிக் காட்டியுள்ளார்.

குத்துடன் ஊடகங்களில் வெளியாகும் செய்திகளை போன்று, தான் யாருக்கும் ராஜதந்திர கடவுச்சீட்டை பெற்றுக் கொடுக்க வில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

இந்தப் பொய்ப் பிரச்சாரம் காரணமாக, தனது 30 வருட காலத்திற்கும் மேற்பட்ட அரசியல் வாழ்க்கைக்கு, பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், தனது நற்பெயருக்கு கலங்கம் ஏற்பட்டுள்ளதாகவும், அமைச்சர் மங்கள சமரவீர தனது கடிதத்தில் கூறியுள்ளார்.

எனவே, டுபாயில் ராஜதந்திர கடவுச்சீட்டுடன் கைது செய்யப்பட்ட நபர் யார் என்பதை கண்டறிவதற்காக, விசேட விசாரணை ஒன்றை ஆரம்பிக்குமாறு நிதி அமைச்சர் மங்கள சமரவீர, பொலிஸ்மா அதிபரிடம் தனது கடிதம் மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதேவேளை போதைப் பொருள் கடத்தல்காரர்களுக்கு அரசியல்வாதிகள் பாதுகாப்பு வழங்கி வருவதாகவும், அந்த செயல்பாடு உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் எனவும், மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி தெரிவித்துள்ளார்.

நாட்டில் தற்போது பாரிய நெருக்கடியை ஏற்படுத்தும் வகையில் தலைதூக்கியுள்ள போதைப்பொருள் கடத்தல் மற்றும் விற்பனை செயற்பாடுகள், கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட வேண்டும் என்று மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி தெரிவித்துள்ளார்.

குறிப்பாக அரசியல்வாதிகளிடம் இருந்து போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு கிடைக்கும் பாதுகாப்பு உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

போதைப்பொருள் செயற்பாடுகளுக்கு இலங்கை ஒரு மூலஸ்தானமாக மாறியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.கொழும்பில் நேற்று மாலை இடம்பெற்ற நிகழ்வொன்றில் பங்கேற்று உரையாற்றிய போதே, மேல் மாகாண ஆளுநர் இந்த கருத்துக்களை வௌியிட்டார்.

Read more...

கையைக் கட்டிக்கொண்டிருப்பதால், எல்லாமே புஷ்வானமாகி விடும் - எம்.ஏ.சுமந்திரன்.

புதிய அரசமைப்பு சரியான தருணத்தில் அனைத்துத் தரப்பினரினதும் இணக்கத்துடன், கொண்டு வரப்படும் எனவும், கையைக் கட்டிக் கொண்டிருப்பதால் எதுவும் நடக்காது என்றும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடக பேச்சாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

புதிய அரசியல் அமைப்பை உருவாக்கும் முயற்சி தோல்வியடைந்தால், அதற்கான பொறுப்பை ஏற்க நாம் தயாராக உள்ளோம். ஆனால் அதற்கான முயற்சி, தொடர்ந்து முன்னடுக்கப்படும் என்ற நம்பிக்கை இருக்கும் வரைக்கும், அதில் முழுமையாக தம்மை அர்ப்பணிப்பேன் என சுமந்திரன் கூறியுள்ளார்.

அத்துடன் தமது நம்பிக்கை, வழிநடத்தல் குழுவின் செயற்பாட்டை அடிப்படையாகக் கொண்டது எனவும், இடைக்கால அறிக்கை, உடன் வெளிவர வேண்டும் என்பதே தமது எதிர்பார்ப்பு எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

புதிய அரசமைப்பு சரியான நேரத்தில் வரும் என்ற நம்பிக்கை உள்ளது. இப்போதைக்கு பிரதமர் மற்றும் ஜனாதிபதியின் கருத்துகளை வைத்து கொண்டு, கணிப்புக்களை மேற்கொள்ள முடியாது.

எதிர்வரும் மார்ச் மாதத்தில் இதைவிட மும்முரமாக இந்த வேலைகள் நடைபெறக்கூடும். அதை விடுத்து, கையைக் கட்டிக் கொண்டிருப்பதால் எதுவும் நடக்காது.

ஒக்டோபர் சதிப் புரட்சியை பார்த்த போது, மீண்டும் அரசு மாற்றப்படும் என்று, எவரும் நம்பிக்கை கொண்டிருக்கவில்லை, எனினும் அது தலைகீழாக மாற்றப்பட்டமை, அனைவருக்கும் நம்பிக்கையளிப்பதாக அமைந்துள்ளது.

புதிய அரசமைப்பை இந்த நாடாளுமன்றக் காலத்தில் நிறைவேற்றுவதற்கான பல சந்தர்ப்பங்கள் உள்ளன. தற்செயலாக நாடாளுமன்றம் கலைக்கப்பட்டாலும், அடுத்த நாடாளுமன்றத்தில் அதனை நிறைவேற்றலாம் என, தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடக பேச்சாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார்.

Read more...
Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com