Saturday, February 9, 2019

4 இலட்சத்து 16 ஆயிரத்து 280 ரூபாவை விழுங்கி, ஏப்பம் விட்டவர் யாராக இருப்பார்? - யாழ் மாநகர சபையின் ஊழல் அம்பலமானது.

யாழ்ப்பாணம் நல்லூர் உற்சவ காலத்தின் போது யாழ் மாநகர சபையினால் பொருத்தப்பட்ட பாதுகாப்புக் கமராக்களுக்கான ஒப்பந்தத்திற்கு, அதிக நிதி செலாவானதாக காட்டப்பட்டுள்ளமை தற்போது அம்பலமாகியுள்ளது.

இந்த விடயம் குறித்து, நேற்று இடம்பெற்ற அமர்வின் போது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர், கேள்வி எழுப்பிய போதே, இந்த ஊழல் மோசடி வெளிச்சத்திற்கு வந்தது.

கடந்த 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற நல்லூர் உற்சவகால திருவிழாவின் போது, நல்லூர் பிரதேசத்தின் பாதுகாப்பு கருதி, பாதுகாப்புக் கமராக்களை பொருத்துவதற்கு கோரப்பட்டது. இதனை அடுத்து, குறித்த பணிகளை முன்னெடுப்பதற்காக சில நிறுவனங்கள் விண்ணப்பித்திருந்தன.

இந்த நிலையில் யாழ்ப்பாணம் பரமேஸ்வராச் சந்தியில் இயங்கும் நிறுவனம் ஒன்றிடம் பாதுகாப்புக் கமராக்கள் பொருத்தும் பணி வழங்கப்பட்டது. அதனடிப்படையில் குறித்த நிறுவனத்திற்கு யாழ் மாநகர சபையால் 6 இலட்சத்து 60 ஆயிரத்து 200 ரூபாய் கொடுப்பனவான வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை அடுத்து யாழ் மாநகரசபையில் நடைபெற்ற அமர்வின் போது நிகழ்ச்சி நிரலில் இணைக்கப்பட்டிருந்த நல்லூர் ஆலய வரவு செலவு அறிக்கை ஒவ்வொரு உறுப்பினருக்கும் வழங்கப்பட்டிருந்தது.

அதனை அவதானித்த தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் யாழ் மாநகர சபை உறுப்பினர் பார்த்திபன், நல்லூர் சூழலில் பாதுகாப்புக் கமரா பொருத்திய செலவாக 10 இலட்சத்து 76 ஆயிரத்த 480 ரூபாய் கணக்குக் காட்டப்பட்டிருந்தமை தொடர்பில், சம்மந்தப்பட்ட நிறுவனத்தினருடன் தொடர்பு கொண்டு வினவினார்.

இதன்போது குறித்த கண்காணிப்புக் கமரா பொருத்தும் நிறுவனத்தினர் வழங்கிய தகவல் உறுப்பிரை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது. யாழ்ப்பாண மாநகர சபையினால், குறித்த நிறுவனத்திற்கு வழங்கிய தொகையை விட அதிகமாக 4 இலட்சத்து 16 ஆயிரத்து 280 ரூபாய் பணம் செலவு செய்யப்பட்டதை அறிந்த அவர், நேரடியாக அந்த நிறுவனத்தினரைச் சந்தித்து கலந்துரையாடிய போது, தாம் சமர்ப்பித்து வழங்கப்பட்ட பற்றுசீட்டு பிரதிகளை குறித்த நிறுவனத்தினர், உறுப்பினருக்கு, வழங்கியுள்ளனர்.

இதனையடுத்து நேற்றைய அமர்வின் போது குறித்த விடயத்தைப் பிரஸ்தாபித்த உறுப்பினர் பார்த்திபன், பாதுகாப்புக் கமராக்கள் பொருத்துவதற்கென 6 இலட்சத்து 60 ஆயிரத்து 200 ரூபா செலவிடப்பட்டுள்ள நிலையில், செலவு அறிக்கையில் 10 இலட்சத்து 76 ஆயிரத்த480 ரூபாய் செலவிடப்பட்டதாக கணக்கிடப்பட்டு, மோசடி இடம்பெற்றதை சுட்டிக்காட்டினார்.

இதனையடுத்து சபையில் பிரசன்னமாகியிருந்த கணக்காளரைப் பதிலளிக்குமாறு, முதல்வர் ஆர்னோல்ட் உத்தரவிட்ட நிலையில், அது தொடர்பில் உடனடியாக தமக்கு பதிலளிக்க முடியாது எனவும், குறித்த விடயம் தொடர்பில் ஆராய்ந்து பதிலளிப்பதாகவும் தெரிவித்தார்.

இதனையடுத்து தவறுகள் நிகழ்ந்திருப்பின் அது தொடர்பில் ஆராய்ந்து அடுத்த அமர்வில் அறிக்கையை சமர்ப்பிக்குமாறு, முதல்வர் ஆர்னோல்ட் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இதேவேளை குறித்த கமராக்களைப் பொருத்திய நிறுவனம், யாழ் மாநகர சபைக்குச் சமர்ப்பித்த கேள்வி கோரல் விண்ணப்பம் பரிசீலனைக்கு எடுக்கும் திகதிக்கு முன்னர் உடைக்கப்பட்டு, போட்டி நிறுவனம் ஒன்றிற்கு வழக்கப்பட்டது.

குறித்த போட்டி நிறுவனம், அதன் பிரதியை பாதுகாப்புக் கமராக்களை வழங்கும் சீன நிறுவனத்திற்கு அனுப்பி வைத்ததாகவும் அதனடிப்படையில் குறைந்த கட்டணத்தில் பாதுகாப்புக் கமராக்களை பொருத்தும் செயற்பாடுகளில் ஈடுபடுவதால், ஆரம்பத்தில் ஒப்பந்தமான நிறுவனத்தினருடான பணிகளை சீன நிறுவனம் இரத்துச் செய்ய நடவடிக்கை எடுத்திருப்பதாகவும், சபையின் கவனத்திற்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் மற்றொரு உறுப்பினரான சி.தனுஜன் கொண்டு வந்தார்.

இதன்போது குறித்த விடயங்கள் தொடர்பில் தானும் அறிந்ததாகவும் இது தொடர்பில் உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும் என, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினரான லோக தயாளன் குறிப்பிட்டார். இந்த நிலையில் இவை தொடர்பிலும் ஆராய்வதாக சபை முதல்வர் ஆர்னோல்ட் குறிப்பிட்டார்.

Read more...

அடுத்த தேர்தலில் களமிறங்குவது குறித்து, மைத்திரி - மஹிந்த கூட்டணி முக்கிய பேச்சு!

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை உள்ளடக்கிய பாரிய கூட்டணி ஒன்றை அமைப்பது குறித்து, இரண்டு கட்சிகளுக்கும் இடையில் முக்கிய பேச்சுக்கள் நடத்தப்பட்டுள்ளதாக, அரசாங்க தரப்பு செய்திகள் தெரிவித்துள்ளன.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் இல்லத்தில் வைத்து, கடந்த தினம் இந்தப் பேச்சுக்கள் இடம்பெற்றன. சுமார் 2 மணித்தியாலங்கள் நீடித்த இந்தப் பேச்சுவார்த்தையில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ, பொதுஜன பெரமுனவின் தவிசாளர் ஜி.எல்.பீரிஸ், நாடாளுமன்ற உறுப்பினர்கள் தயாசிறி ஜெயசேகர, மஹிந்த அமரவீர, தினேஸ் குணவர்த்தன, விமல் வீரவன்ச, உதய கம்மன்பில, டக்ளஸ் தேவானந்தா, வாசுதேவ நாணயக்கார, ஏ.எச்.எம்.அதாவுல்லா, திஸ்ஸ விதாரண உள்ளிட்ட அரசியல் முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கூட்டத்தில் வைத்து, பரந்துபட்ட கூட்டணியை அமைப்பதற்கான, பேச்சுக்களை நடத்துவதற்கான குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. டலஸ் அழகப்பெரும தலைமையிலான இந்தக் குழுவில், தயாசிறி ஜெயசேகர, திலங்க சுமதிபால, அதாவுல்லா, டக்ளஸ் தேவானந்தா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இந்தக் குழுவின் அமைப்பாளராக உதய கம்மன்பில நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டு வாரங்களுக்குள் புதிய அரசியல் கூட்டணியை உருவாக்கும் பணிகளை இந்தக் குழு முன்னெடுக்கும் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் கட்சித் தலைவர்களுடன் இந்தக் குழு நடத்தும் பேச்சுக்களை அடுத்து, எதிர்வரும் 16, 17ஆம் திகதிகளில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் கலந்துரையாடல்களை நடத்தவுள்ளது.

பின்னர் இது குறித்த தீர்மானம் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும் என, அரசாங்க தரப்பு செய்திகள் தெரிவிக்கின்றன.

Read more...

''எடுத்தோம்,கவிழ்த்தோம்'' என இருந்தால், ஐக்கிய தேசிய முன்னணி வீட்டுக்குத் தான் செல்ல வேண்டும்.

ஐக்கிய தேசிய முன்னணியும், ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸும் இணைந்து, தேசிய அரசாங்கம் ஒன்றை அமைப்பதற்கான தீவிர முயற்சியில் இறங்கிய போதும், தற்காலிகமாக அந்த செயல்பாடுகள் பிற்போடப்பட்டிருப்பதாக அறிய முடிகிறது. இது குறித்த நாடாளுமன்ற விவாதம், கடந்த நாடாளுமன்ற கூட்டத்தொடரில் இடம்பெற்ற போது, இந்த தீர்மானம் எட்டப்பட்டது.

நிலையியற் கட்டளைகள்,காலக்கெடு என ஐக்கிய தேசிய முன்னணி சார்பில், தேசிய அரசாங்க உருவாக்கத்தின் தாமதத்திற்கு பல்வேறு காரணங்கள் முன்வைக்கப்பட்டன. எவ்வாறாயினும், தேசிய அரசாங்க உருவாக்க பணிகள் பிற்போடப்பட்டமைக்கான உண்மையான காரணம், தேசிய அரசாங்கத்தின் மீது விழுந்த பலத்த எதிர்ப்பே என, பல கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. ஒரு வகையில் இந்த கருத்தை எம்மால் மறுக்கவோ அல்லது மறைக்கவோ முடியாது.

இந்த எதிர்ப்பு தேசிய அரசாங்கத்திற்கு மட்டுமே என்று ஒருபோதும் கூறி விடமுடியாது. இதற்கு முன்னர் ஐக்கிய தேசிய முன்னணியின் அரசாங்கம் முன்னெடுத்த பல நடவடிக்கைகள் இடைநடுவில் நிறுத்தப்பட்டன. அண்மையில் சுங்க திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் அந்த பதவியில் இருந்து நீக்கப்பட்டதை அடுத்து, இந்த அரசாங்கத்த்தின் மீது பலத்த எதிர்ப்பு வெளியிடப்பட்டது. அந்த பதவி நீக்கத்தை அடுத்து, நாட்டின் அத்தியாவசிய பொருட்களுக்கு பாரிய தட்டுப்பாடு ஏற்படும் நிலை உருவானது. இந்த எதிர்ப்புக்கு தாக்கு பிடிக்க முடியாத அரசாங்கம், இறுதியாக சார்ள்ஸின் இடமாற்றத்தை இடைநிறுத்தி, மீண்டும் அந்த பதவியை மூன்று மாதங்களுக்கு நீடித்தது.

இந்த செயல்பாடு, அரசாங்கத்தின் தற்போதைய தளம்பலை உறுதிப்படுத்துகிறது. கடந்த வருடம் ஓக்டோபரில் ஏற்பட்ட அரசியல் மாற்றத்தை அடுத்து, தற்போதைய அரசாங்கத்திற்கு மக்கள் பக்கம் இருந்து நம்பகமான ஆதரவு கிடைத்தது. எனினும் கிடைத்த சந்தர்ப்பத்தை சரியாக பயன்படுத்திக் கொள்ள முடியாத, ஓர் ஆளுமையற்ற தன்மையை இந்த அரசாங்கம் கொண்டிருப்பதாக பல்வேறு விமர்சங்கள், முன்வைக்கப்பட்டு வருகின்றன.

கடந்த வருடத்தில் நிகழ்ந்த அரசியல் குழப்பத்தை முடிவுக்கு கொண்டு வர, ஐக்கிய தேசிய முன்னணியை விட, சிறுபான்மை கட்சிகளும், சில சிவில் சமூக குழுக்களும் பெரும் பங்களிப்பை செலுத்தின. இவற்றின் முக்கிய செயல்பாடுகளை சாதகமாக்கிக் கொண்ட, ஐக்கிய தேசிய முன்னணி மீண்டும் ஆட்சிக்கு வந்ததன் பின்னர், உறுதியான முன்னெடுப்புகளை மேற்கொள்ளாது அனைத்தையும் காலம் தாழ்த்தி வருவது, மக்கள் மத்தியில் பெரும் ஏமாற்றத்தை தந்துள்ளது.

அரசியல் குழப்பத்தின் முற்றுப்புள்ளிக்கு பாடுபட்ட, அனைத்து தரப்பினரின் கனவுகளையும், வெற்றிகளையும், ஐக்கிய தேசிய முன்னணி, தனது சிறுமைத்தனமான செயல்பாடுகளால் ஒருபோதும் சிதைத்து விட கூடாது என, மக்கள் நலன் விரும்பிகள் எதிர்பார்க்கின்றனர்.

எனவே இக்கட்டான சூழ்நிலையில் இருக்கும் ஐக்கிய தேசிய முன்னணி, ''எடுத்தோம்,கவிழ்த்தோம்'' என செயல்படாமல், அனைத்து விடயங்களையும் ஆழமாகவும், தூர நோக்குடனும் சிந்தித்து செயல்பட வேண்டும் என்பது, தவிர்க்க முடியாததாகும்.

Read more...

Friday, February 8, 2019

நாய் கவ்விச் சென்ற மனித தலை, மீட்கப்பட்ட சம்பவம் குறித்த விசாரணைகள் தீவிரம் - காவல்துறையினர்.

பேலியகொடை பகுதியில் நாய் ஒன்று கவ்விச் சென்ற மனித தலை மீட்கப்பட்டதை அடுத்து, அது குறித்து இடம்பெற்ற விசேட விசாரணைகள் தற்போது தீவிரமடைந்துள்ளதாக, தெரிவிக்கப்படுகிறது.

இந்த சம்பவம் குறித்த விசாரணைகளை கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவு முன்னெடுத்துள்ளது, கடந்த தினம் பேலியகொட பகுதியில், நாய் ஒன்று மனித தலையை கவ்விச் செல்வதாக, பிரதேசவாசிகள் காவல்துறைக்கு அறிவித்திருந்தனர்.

தகவல் அறிந்த அப்பகுதி காவல்துறையினர், அண்மையில் வெளிநாட்டு பிரஜைகளின் சாரதி ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கும், இந்த சம்பவத்திற்கும் தொடர்பு உள்ளதா? என்ற கோணத்தில் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக அறிய முடிகிறது.

கடந்த வருடன் டிசம்பர் மாதம், கொழும்பில் உள்ள சொகுசு குடியிருப்பு ஒன்றின் நான்காவது மாடியில் தங்கியிருந்த, வெளிநாட்டு ஜோடிகளின் சாரதி, அந்த வீட்டின் அறையினுள் மர்மமான முறையில் உயரிழந்திருந்தார்.

கதிரையொன்றில் கட்டப்பட்டு எரிக்கப்பட்டிருந்த அவரது சடலம் தொடர்பில், அந்த வெளிநாட்டு ஜோடி, இலங்கை காவல்துறையினருக்கு அறிவித்திருந்தது.

இந்த நிலையில், மொரட்டுவை பகுதியில் நபரொருவர், கடந்த டிசம்பர் மாதம் 5 ஆம் திகதி முதல், காணாமல் போயிருந்ததாக காவல்துறையில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்ததோடு, அவரே இந்த வெளிநாட்டு ஜோடிக்கு சாரதியாக கடமையாற்றியுள்ளார் என்பதும் தெரிய வந்துள்ளது.

இதற்கமைய மீட்கப்பட்டுள்ள மனித தலை, குறித்த நபருடையதாக இருக்கலாம் என சந்தேகிக்கும் காவல்துறையினர் அதனை உறுதி செய்வதற்காக, மேலதிக விசாரணைகளை தீவிரமாக மேற்கொண்டு வருவதாக குறிப்பிட்டனர்.

Read more...

4 வருடங்கள் சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழ் அரசியல் கைதிக்கு பிணை.

கடந்த நான்கு வருடங்களாக, அரசியல் கைதியாக தடுத்து வைக்கப்பட்டிருந்த குடும்ப பெண் ஒருவரை, கெப்பத்திகொல்லாவ நீதவான் நீதிமன்றம், ரொக்கப் பிணையில் செல்ல அனுமதி வழங்கியுள்ளது.

அதிகரித்த வறுமைக் கோட்டின் கீழ் வாழும் குறித்த குடும்பப் பெண் சார்பாக, மன்னார் மாவட்ட பிரஜைகள் குழு இந்த பிணை மனுக்கான முன்னெடுப்புக்களை மேற்கொண்டு வந்துள்ளது.

முல்லைத்தீவு மாவட்டத்தின் விஸ்வமடு கிராமத்தைச் சேர்ந்த இரு பிள்ளைகளுக்கு தாயான திருமதி ரவீந்திரன் மதனி என்ற 31 வயதான இளம் குடும்பப் பெண், கடந்த 2014 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 10 ஆம் திகதி, பயங்கரவாத விசாரனை பிரிவினரால் கைது செய்யப்பட்டார். பின்னர் வெலிமடை காவல்துறையினரால், பதவிய சுற்றுலா நீதவான் நீதிமன்றில் இவருக்கெதிரான வழக்கு தாக்கல் செய்யப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன.

இவருக்கு எதிராக தண்டனைக் கோவை சட்டத்தின் கீழ் 443, 369, 394 ஆகிய சட்டத்தின் கீழ், பயங்கரவாத வழக்கு தாக்கல் செய்யப்பட்டதோடு, கண்ணிவெடி அகற்றும் பொருட்களை கையாண்டுள்ளமை தொடர்பாகவும், இவருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

குறித்த வழக்குகளுக்கான தீர்ப்பு, கெப்பத்திகொல்லாவ நீதவான் நீதிமன்றில் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட போதும், இந்த வழக்கை விசாரித்து வந்த நீதவான் ரி.ஜே.பிரபாகரன், இடமாற்றம் செய்யப்பட்டதை அடுத்து, வழக்கின் விசாரணைகள் தாமதமாகின.

எனினும் இந்த அரசியல் கைதியினை கெப்பத்திகொல்லாவ நீதவான் நீதிமன்றில், முன்னிலைப்படுத்திய போது, இவருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.

குறித்த பெண், சிறைச்சாலை அதிகாரிகளால் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது, சந்தேக நபர் சார்பாக சிரேஸ்ட சட்டத்தரணி வீ.எஸ்.நிரஞ்சன் முன்னிலையாகி இருந்ததுடன், மன்னார் மாவட்ட பிரஜைகள் குழு தலைவர் அருட்பணி.ஏ.ஞானப்பிரகாசம் அடிகளார் தலைமையில், ஆளுனர் சபையைச் சேர்ந்தவர்களும், இந்த அரசியல் கைதியின் நலன் கருதி, மன்றுக்கு சமூகமளித்திருந்தனர்.

இதன் போது குறித்த அரசியல் கைதியான பெண்ணை, 25 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பிணையில் செல்ல, நீதவான் உத்தரவு பிறப்பித்தார்.

Read more...

அரசியலே தெரியாத விக்னேஸ்வரனை, முதலமைச்சராக்கியமை, தமிழ் தேசிய கூட்டமைப்பின் முதல் பிழை - சரவணபவன்.

அரசியலே தெரியாத சி.வி.விக்னேஸ்வரனை, வடமாகாண முதல்வராக்கியமை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மாபெரும் பிழை என, அந்த கட்சியின் யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் குற்றம் சுமத்தியுள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு, தமிழ் மக்கள் மத்தியில் தொடர்ந்தும் நல்ல வரவேற்பு உள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மக்களுக்காக மேற்கொள்ள வேண்டிய முடிவுகளை 100 சதவீதம் நேர்த்தியாக செய்துள்ளது. எனினும் வழங்க வேண்டிய சில தீர்வுகளை வழங்காமல் தமிழ் தேசிய கூட்டமைப்பு ,காலம் தாழ்த்தி வருகின்றது என்று, யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் குறிப்பிட்டார்.

கடந்த 2010 ஆம் ஆண்டும்; 2015 ஆம் ஆண்டும் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில், வடக்கில் மாற்றுக் கட்சிகளை மக்கள் நிராகரித்தமை நாம் அறிந்ததே. வெளிநாட்டில் இருக்கும் பல புலம்பெயர் தமிழ் அமைப்புகள், கடந்த தேர்தலில் மாற்றுக் கட்சிகளுக்கே ஆதரவு வழங்கியுள்ளன.

எனினும் களத்தில் இருந்த முக்கிய தரப்பினரான மக்கள், தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கே ஆதரவு வழங்கியதாகவும், அதேபோன்று எதிர்வரும் தேர்தலிலும், மக்கள் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கே ஆதரவு வழங்குவார்கள் என்றும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

Read more...

இலங்கையின் மாற்றுத் திறனாளிப் பெண்கள், அதிகமான நெருக்கடிக்கடிகளை சந்திக்கின்றனர் - ஐக்கிய நாடுகள் சபை.

ஐக்கிய நாடுகள் சபையின் மகளிருக்கான பிரதிநிதி ஒருவர், இலங்கையின் மாற்றுத் திறனாளிப் பெண்கள், பல்வேறு வகையில் நெருக்கடிகளை சந்திப்பதாக குறிப்பிட்டுள்ளார். இலங்கையில் மாற்றுத்திறனாளி பெண்களும், சிறுமிகளும் பல்வேறு மட்டங்களில் ஒதுக்கப்படல், பாரபட்சம், துஷ்பிரயோகம் உள்ளிட்டவற்றை எதிர்நோக்குவதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. ஐக்கிய நாடுகளின் மகளிருக்கான அமைப்பின், இலங்கைக்கான பிரதிநிதி ரமயா சல்காதோ இதனைத் தெரிவித்துள்ளார்.

கடந்த 2012ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட சனத்தொகை மதிப்பீட்டின் படி, அனைத்து வயதுப் பிரிவுகளிலும் மாற்றுத்திறனாளி ஆண்களை விட, மாற்றுத்திறனாளி பெண்களின் எண்ணிக்கை அதிகமாகும்.

எனினும், இலங்கையில் மாற்றுத்திறனுடைய தொழிலில் உள்ளவர்களின் 15 வீதமானவர்கள் மாத்திரமே, பெண்கள் என கூறப்படுகின்றது.

இந்த நிலையானது, சந்தர்ப்பங்களை அணுகுவதிலுள்ள பாரிய இடைவெளியை குறிப்பதாக, ஐக்கிய நாடுகளின் மகளிருக்கான அமைப்பின் இலங்கைக்கான பிரதிநிதி ரமயா சல்காதோ தெரிவித்துள்ளார்.

எனினும் இந்த நிலைமையை மாற்றியமைத்து, இலங்கையின் மாற்றுத் திறனாளி பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது அவசியம் என, அவர் வலியுறுத்தல் விடுத்துள்ளார்.

Read more...

இந்திய பிரஜைகள் 09 பேர் கைது - பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம்

சட்டவிரோதமாக நாட்டில் தங்கிருந்த இந்திய பிரஜைகள் 09 பேர் நுவரெலிய, பொரலந்தை பிரதேசத்தில் வைத்து பொலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். குடிவரவு மற்றும் குடியகல்வு சட்டங்களை மீறி சட்டவிரோதமாக நாட்டில் தங்கியிருந்த நிலையில் இவர்கள் கைதாகியதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

24 மற்றும் 42 வயதுகளுக்கு இடைப்பட்டவர்களே கைது செய்யப்பட்டுள்ள நிலையில், கைதாகிய இவர்களிடம் செல்லுபடியான விசா இருந்திருக்க வில்லை என்றும் கண்டறியப்பட்டுள்ளது. இந்த நிலையில் குறித்த 09 பேரும் இன்று நுவரெலிய நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read more...

பகிடிவதை என்ற போர்வையில் தாக்குதலுக்கு உள்ளான மாணவன்

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவன் ஒருவன் சக மாணவர்களினால் பகிடிவதைக்கு இலக்காகி தாக்கப்பட்டுள்ளார். குறித்த மாணவன் தலைப்பகுதியில் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இவ்வாறு பகிடிவதை என்ற போர்வையில் தாக்கப்பபட்ட மாணவன், ஊடகவியலாளராகவும் செயற்பட்டு வரும் ப.சுஜீவன் என்று கண்டறியப்பட்டுள்ளது. பல்கலைக்கழக வாளாகத்திற்குள் குறித்த மாணவனை சூழ்ந்த நான்காம் வருட மாணவர்கள், பகிடிவதை எனக்கூறி, அவர் மீது சரமாரியாகத் தாக்குதலை நடத்தியுள்ளதாக தெரிவிக்கபடுகின்றது.


Read more...

ஜனாதிபதி நல்லவர் என்றாலும் அவரது அதிகாரங்கள் சிலரினால் தவறான பயன்படுத்தப்படுவதாக ஸ்ரீ விமல தேரர் தெரிவிப்பு

நாட்டில் தற்போது எழுந்துள்ள சிக்கலான நிலைமையினை ஜனாதிபதியே பொறுப்பேற்க வேண்டும் என, கெடம்பே ராஜோபவனாராமாதிபதி கெப்பிடியாகொட ஸ்ரீ விமல தேரர் தெரிவித்துள்ளார்.

நாட்டில் ஏற்பட்டுள்ள நிலைமைகள் அனைத்திற்கும் ஜனாதிபதியே பொறுப்பேற்க வேண்டும். அவர் தனது பொறுப்பிலிருந்து விலகி நிற்க முடியாது எனத் தெரிவித்தார். மேலும், ஜனாதிபதி நல்ல மனிதர் என்ற போதிலும், அவரது அதிகாரங்கள் சிலரினால் தவறான செயற்பாடுகளுக்கு பயன்படுத்தப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். மேலும் நாட்டில் தேர்தல், சட்டம், ஒழுங்கு என எதுவுமின்றி ஒரு தன்னிச்சையான நாட்டின் ஆட்சி நிலவுகின்றமையை காணக்கூடியதாக இருப்பதாகவும் அவர் வருத்தம் தெரிவித்தார்.

மத்திய மாகாண ஆளுநர் மைத்திரி குணரத்ன, ஸ்ரீ விமல தேரரை சந்தித்தபோதே தேரர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

Read more...

பலத்த மழை இன்றும் நாளையும் தொடரும்

மழையுடனான வானிலையில் இன்றும் நாளையும் மேலும் அதிகரிப்பு ஏற்படும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது.

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. சப்ரகமுவ, மத்திய, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மி.மீக்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

திருகோணமலை மற்றும் அனுராதபுரம் மாவட்டங்களில் சில இடங்களில் 75 மி.மீ அளவான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.
கிழக்கு கரையோரப் பகுதிகளில் பல இடங்களில் காலை வேளையில் சிறிதளவில் மழை பெய்யக் கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும்.

மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.


Read more...

இந்திய அரசாங்கத்தினால் திருத்தப்பட்ட சட்டத்தில் இலங்கை ஏதிலிகள் புறக்கணிக்கப்பட்டுள்ளார்களா?

இலங்கையில் இருந்து இந்தியாவிற்கு புலம்பெயர்ந்து வாழ்ந்து வரும் ஏதிலிகள், இந்திய அரசாங்கத்தினால் திருத்தப்பட்ட சட்டத்தில் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. குறித்த சட்டம் இந்தியா லோக் சபாவில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

போர் மற்றும் பல்வேறு காரணங்களினால் நாட்டில் இருந்து இடம்பெயர்ந்த இலங்கை ஏதிலிகள் சுமார் 1 லட்சம் பேர் அளவில் இந்தியாவில் வசிக்கின்றார்கள். இவர்களில் 3 ல் இரண்டு பகுதியினர் அரசாங்க முகாம்களிலும் ஏனையோர் முகாம்களுக்கு வெளியிலும் வாழ்ந்து வருகின்றார்கள்.

குறித்த மக்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்க வேண்டும் என்று தொடர்ந்தும் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. ஆனாலும் புதிய திருத்தப்பட்ட பிரஜைகள் சட்டத்தின் கீழும் அவர்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்கட்டப்பட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பில் இந்திய உள் துறை அமைச்சர் ராஜ் நாத் சிங் விளக்கம் அளிக்கையில் , இலங்கை ஏதிலிகள் அனைவரும் கடந்த 2011 ஆண்டு டிசம்பர் வெளியிடப்பட்ட நிலையான செயற்பாட்டு நடைமுறையின் கீழ் பாதுகாக்கப்படுவார்கள் என்று தெரிவித்துள்ளார்.


Read more...

முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வாவுக்கு எதிரான வழக்கில் இருந்து விலகினார் நீதியரசர் பிரியந்த ஜயவர்தன

நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டு தொடர்பில் முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வாவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவை எதிர்வரும் மே மாதம் 8ஆம் திகதி பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது. உயர்நீதிமன்ற நீதியரசர்களான பிரியந்த ஜயவர்தன, மூர்து பெர்னாண்டோ மற்றும் இ.ஏ.ஜி.ஏ. அமரசேகர உள்ளிட்ட மூவரடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் இந்த மனு நேற்று விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டது.

தனிப்பட்ட காரணங்களுக்காக இந்த வழக்கு விசாரணைகளிலிருந்து விலகுவதாக நீதியரசர் பிரியந்த ஜயவர்தன உயர்நீதிமன்றத்திற்கு அறிவித்தமை காரணமாக குறித்த மனுவை பிறிதொரு நாளில் பரிசீலனைக்கு உட்படுத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, சரத் என் சில்வா, "சிவில்" ஆடையில் வருகை தந்து சட்டத்தரணி ஆசனத்தில் அமர்ந்தமை தொடர்பில் மனுதாரர்கள் சார்பில் ஆஜராகிய ஜனாதிபதி சட்டத்தரணி உபுல் ஜயசூரிய மன்றில் கண்டனம் வௌியிட்டுள்ளார்.

கடந்த 2018 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் மருதானையில் பேரணி ஒன்றில் உரையாற்றுகையில் நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் கருத்து வௌியிட்டதாக சரத் என் சில்வா மீது குற்றம் சுமத்தப்பட்டது. மேலும் சரத் என் சில்வாவின் சட்டத்தரணி தரத்தை நீக்காமல் இருப்பதற்கான காரணத்தை குறிப்பிடுமாறும் குறித்த மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பிரதிவாதி இவ்வாறான நடவடிக்கையில் மீண்டும் ஈடுபடாமல் இருப்பதை உறுதிப்படுத்தும் வகையில் இடைக்கால உத்தரவொன்றை பிறப்பிக்குமாறும் மனுதாரர்கள் கோரி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

Read more...

புத்திக்க பத்திரண கூறியது பொய் - அமைச்சர் ராஜித்த

வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பால்மாக்களில், பன்றி எண்ணெய் கலந்திருப்பதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளில் எந்த வித உண்மை இல்லையென, சுகாதார மற்றும் போசனை அமைச்சர் ராஜித்த சேனாரத்ன மறுப்பு தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் புத்திக்க பத்திரணவினால் , பால்மா தொடர்பில், தவறான குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது என்றும் நியூசிலாந்திலிருந்து இறக்குமதி செய்யப்படும் பால்மாக்களில், பன்றி எண்ணெய் கலக்கப்படவில்லை எனவும் சுகாதார மற்றும் போசனை அமைச்சர் ராஜித்த சேனாரத்ன விளக்கம் அளித்துள்ளார்.

இது இவ்வாறு இருக்க வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பால்மாவில் பன்றிக்கொழுப்பு, மரக்கறி எண்ணெய் மற்றும் லக்டோ கலப்படங்கள் உள்ளதாக, நுகர்வோர் அதிகார சபைக்கு இதுவரையில் எந்தவித முறைப்பாடுகளும் கிடைக்கவில்லையென நுகர்வோர் அதிகார சபையின் பணிப்பாளர் எம்.எஸ்.எம் பெளசர் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், இறக்குமதி செய்யப்படும் பால்மா வகைகளில் கலப்படம் இருப்பதாக முறைப்பாடுகள் பாராளுமன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளன. அத்துடன், அமைச்சர் ரிஷாட் பத்தியுத்தீனும், பிரதியமைச்சர் புத்திக பத்திரனவும் அதிகார சபையிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இதனால், இறக்குமதி செய்யப்பட்ட பால்மா வகைகளை தேசிய ரீதியில் உள்ள ஆய்வு கூடங்களில் அதிநவீன தொழில்நுட்ப வசதிகள் இல்லாமை
காரணமாக ஆய்வு செய்ய முடியாத சூழ்நிலை உருவாகியுள்ளது. இதனால் சர்வதேச ஆய்வு கூடங்களை நாடவேண்டி ஏற்பட்டுள்ளது. இதற்காக வெளிநாட்டு ஆய்வு கூடங்களுடன் தொடர்புகளை மேற்கொண்டுள்ளோம். சர்வதேச ஆய்வு கூடத்தில் பால்மா வகைகளின் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, அவரில் கலப்படங்கள் உள்ளன என கண்டுபிடிக்கப்பட்டால் குறிப்பிட்ட பால்மா நிறுவனங்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்படும். அத்துடன், அது மனித பாவனைக்கு உதவாத பால்மா வகை என்றால் உடனடியாக தடைசெய்யப்படும்.

சர்வதேச ஆய்வுகூடங்கள் மேற்கொள்ளும் ஆய்வு அறிக்கை சுகாதார அமைச்சுக்கு அனுப்பி வைக்கப்பட்டு, சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அதிகார சபையின் பணிப்பாளர் எம்.எஸ்.எம் பெளசர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Read more...

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன இனி ஒரே கூட்டணியில் ?

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுடன் இணைந்து பயணிப்பது உறுதி என்று, நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பீ. திஸாநாயக்க தெரிவிக்கிறார்.

இரண்டு காட்சிகளும் ஒரு பொதுவான பெயரிலும் ஒரே சின்னத்திலும் கூட்டணி அமைப்பது தொடர்பில் பேச்சுவார்த்தை இடம்பெறுவதாகவும் அவர் கூறியுள்ளார். இந்தப் பேச்சுவார்த்தையில் பொதுஜன பெரமுனவினால் நியமிக்கப்பட்டுள்ள 8 பேருடன் இணைந்து கலந்துகொள்வதற்கு ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி சார்பில் தயாசிறி ஜயசேகர, திலங்க சுமதிபால மற்றும் அதாவுல்லா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.

Read more...

கபில நிற தத்தி தாக்கி பயிர்களை பதராக மாற்றும் மேலும் ஒரு அபாயம்

மட்டக்களப்பு – கிரான் பகுதியில் உள்ள விவசாய நிலங்கள் பூச்சிகளின் தாக்கத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை வெளியிட்டுள்ளனர். கிரான் கமநல சேவை பிரிவிற்குட்பட்ட கிராமங்களில் 14,925 ஏக்கர் விவசாய நிலங்களில் பயிர்செய்கை இடம் பெற்றிருந்த நிலையில், அவற்றில் 9,294 ஏக்கர் விவசாய நிலங்கள் கபில நிற தத்தியின் தாக்கம் காரணமாக அழிவடைந்துள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

இதனால் சுமார் 2800 விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நெற்பயிர்களை அறுவடை காலத்தில் தாக்கும் கபில நிற தத்திகள் பயிர்களை பதராக மாற்றுவதாக அங்கிருக்கும் விவசாயிகள் கூறுகிறார்கள்.

இந்த நிலையில் இந்த கபில நிறத் தத்தியின் தாக்கம் காரணமாக நெல் பயிர்கள் கருப்பு நிறத்தில் மாறுவதுடன், சோறு துவர்ப்பு சுவையைத் தருவதாக விவசாயத் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்.

Read more...

அடுத்த வாரம் மீளாய்வு செய்யும் பணிகள் ஆரம்பம்

நடைபெற்று முடிந்த 2018 ஆம் ஆண்டு கல்வி பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகளை மீளாய்வு செய்வதற்காக அனுப்பி வைக்கப்பட்ட விண்ணப்பங்களின் தொகை 65,000 என்று பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மீளாய்விற்காக விண்ணப்பிப்பதற்கான சந்தர்ப்பம் கடந்த டிசம்பர் மாதம் 30 ஆம் திகதி முதல், இவ்வாண்டு ஜனவரி 16 ஆம் திகதி வரையில் வழங்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் கிடைக்கப் பெற்ற விண்ணப்பங்களின் அடிப்படையில் பெறுபேறுகளை மீளாய்வு செய்யும் பணிகள் அடுத்த வாரத்தில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக பரீட்சசைக்ள ஆணையாளர் நாயகம் சனத் பீ பூஜித்த தெரிவித்துள்ளார்.

இதனிடையே, கடந்த வருடம் நடைபெற்ற உயர் தர பரீட்சையில் 7,21,469 பேர் தோற்றியிருந்த அதேநேரம் 1,60, 907 பேர் பல்கலைக்கழகங்களுக்கு தெரிவாகியுள்ளனர். இதேவேளை, 119 பரீட்சார்த்திகளின் பெறுபேறுகளை இடைநிறுத்தபட்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Read more...

மட்டக்களப்பில் ஜனாதிபதி .............

இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மட்டக்களப்பிற்கு விஜயம் செய்கின்றார். வறுமையை ஒழிப்பதற்காக நடை முறைப்படுத்தப்படும் கிராம சக்தி இயக்கத்தின் கிழக்கு மாகாண செயற்குழு கூட்டம், ஜனாதிபதி தலைமையில் மட்டக்களப்பு மண்முனை வடக்குப் பிரதேச செயலகத்தில் நடைபெறவுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் வசிக்கும் 5 லட்சத்து 26 ஆயிரத்து 576 மக்களில் சுமார் 11 .3 வீதமானவர்கள் வறுமையால் பாதிக்கப்பட்டுள்ளதாக அடையாளங் காணப்பட்டுள்ளார்கள். அத்துடன், அம்பாறை மாவட்டத்த்தில் 6 லட்சத்து 49 ஆயிரத்து 402 மக்களில் சுமார் 2.6 வீதமானவர்களும், திருகோணமலையில் 3 லட்சத்து 79 ஆயிரத்து 541 மக்களில் 10 வீதமானவர்களும் வறுமையால் பாதிக்கப்பட்டுள்ளதாக புள்ளி விபரங்கள் கூறுகின்றன.

ஆகவே இந்த மக்களில் வாழ்வாதாரங்களில் அரசாங்கம் உடனடியாக கவனம் செலுத்த வேண்டிய தேவை உள்ளது.

இந்த நிலையில் அரசாங்கம் முன்னெடுத்து வரும் கிராம சக்தி மக்கள் இயக்கத்தின் பல்வேறு திட்டங்கள் மக்களுக்கு வறுமையில் இருந்து மீள்வதற்கு பெரும் உதவியாக இருக்கும் நிலையில், இந்த வேலை திட்டம், குறித்த பிரதேச மக்களிடத்தில் ஏற்படுத்திய முன்னேற்றம் மற்றும் எதிர்கால நடவடிக்கை குறித்து இன்று இடம்பெறவுள்ள ஜனாதிபதி தலைமையிலான கூட்டத்தில் ஆராயப்படவுள்ளது.

இவை தவிர மக்கள் முகம் கொடுத்துள்ள இடையூறுகள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

Read more...

Thursday, February 7, 2019

மாகந்துர மதுஸுடன் கைதான, பிரபல பாடகரின் வீடுகள், விசேட அதிரடி படையினரால் முற்றுகை!

டுபாயில் கைது செய்யப்பட்ட இலங்கையை சேர்ந்த பிரபல பாடகரின் வீடுகளில், விசேட அதிரடி படையினர் இன்று சோதனை நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 05 ஆம் திகதி, பாதாள உலகக் குழு மற்றும் போதைப்பொருள் கடத்தல் தொடர்பான குற்றச்சாட்டுகளில் முக்கிய சந்தேக நபரான மாகந்துரே மதுஷ் உள்ளிட்ட 25 பேர் கைதுசெய்யபட்டனர்.

அவர்களில் இலங்கையை சேர்ந்த பிரபல பாடகர் அமல் பெரேராவும் அவருடைய புதல்வரும் உள்ளடங்கியிருந்தனர். இந்த நிலையில் அவருக்கு சொந்தமான வீடுகளில், விசேட அதிரடி படையினர் சோதனை நடத்தியுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன.

இதேவேளை கைது செய்யப்பட்ட பாதாள உலக குழுவினரை இலங்கைக்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக, இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read more...

சம்பள பிரச்சினை குறித்த மனுவொன்று, இளைஞர்களால், இந்திய உயர் ஸ்தானிகராலயத்தில் கையளிக்கப்பட்டது.

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு, அடிப்படை சம்பளமாக 1000 ரூபாய் வழங்க வேண்டும் என வலியுறுத்தி, மலையக இளைஞர் அமைப்பினால் இந்திய உயர் ஸ்தானிகராலயத்தில் மனுவொன்று கையளிக்கப்பட்டது.

இந்த மனுவில் தற்காலிக நலன் கருதி செய்து கொள்ளப்பட்டுள்ள புதிய கூட்டு ஒப்பந்தத்தில், மேலும் சில புதிய விடயங்கள் உள்ளடக்கப்பட வேண்டும் என, வலியுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

1000 ரூபாய் சம்பள உயர்வை வலியுறுத்தி, கடந்த தினத்தில், கோட்டை புதையிரத நிலையத்திற்கு முன்பாக உண்ணாவிரதம் இருந்த இளைஞர்களினால், இந்த மனு இன்று கையளிக்கப்பட்டுள்ளது.

குறித்த மனுவில், ஊழியர் சேமலாப நிதி மற்றும் நம்பிக்கை நிதி என்பன அடிப்படை சம்பளத்திலிருந்து அல்லாமல் மாதத்தின் மொத்த சம்பளத்திற்கே ஒதுக்கபட வேண்டும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அத்துடன் வேலை தளங்களில் வைத்து தொழிலாளார்கள் சுகவீனமுற்றால் சம்பளத்துடன் கூடிய விடுமுறை வழங்கப்படுவதோடு, பெண் தொழிலாளர்களின் நலன்கள், விஷேட கவனத்தில் கொள்ளப்பட்டு தொழிற்சார் உரிமைகள் பேணப்படுதல் வேண்டும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு, இயற்கை அனர்த்தங்கள் ஏற்படும் போது தொழில் பாதுகாப்பும், நலன்களும், சம்பளமும் , விடுமுறையும் கவனத்திற் கொள்ளப்படுவதோடு, தொழிற்லாளர்கள் காப்புறுதி திட்டத்திற்குள் உள்வாங்கப்பட வேண்டும். கழிப்பறைகள் முதலுதவிப் பெட்டிகள் என்பன உரிய இடத்தில் வைக்கபடல் வேண்டும்.

சர்வதேச தேயிலைத் தினம் கம்பனிகளின் சந்தைப்படுத்தலுக்கான தினமாக மட்டுமல்லாது, தொழில் நலன் உரிமைகள் விழிப்பு நாளாக பிரகடனப்படுத்தப்படல் வேண்டும் எனவும், குறித்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை அரசாங்கத்தின் தலையீட்டுடன், பெருந்தோட்ட தோட்டத் தொழிலாளர்களின் பிரச்சினைக்கு தீர்வு வழங்கப்படும் என, விசேட அபிவிருத்தி திட்டங்களுக்கான அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சர் வே. இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

அரசாங்கத்துடனும், பிரதமருடனும் கலந்துரையாடி பெருந்தோட்டத் தொழிலாளர்களின் பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் என, விசேட இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

தொழிலாளர்களின் ஆயிரம் ரூபாய் சம்பள உயர்வு தொடர்பாக தமிழ் முற்போக்கு கூட்டணிக்கும், பெருந்தோட்ட முதலாளிமார் சம்மேளனத்திற்கும் இடையிலான பேச்சுவார்த்தை இன்று அலரி மாளிகையில் இடம்பெற்று தோல்வி கண்டது.

இந்த சந்திப்பை அடுத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே, அவர் இதனை கூறினார். இந்த சந்திப்பு தோல்வியடைந்தாலும், மீண்டும் அரசாங்கத்துடனும், பிரதமருடனும் கலந்துரையாடி பெருந்தோட்டத் தொழிலாளர்களின் பிரச்சினைக்கு தீர்வு காண்போம் என, விசேட அபிவிருத்தி திட்டங்களுக்கான அமைச்சர் வே.இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

Read more...

இலங்கை மத்திய வங்கி பொது மக்களுக்கு விசேட அறிவுறுத்தல்.

ஏ.ரீ.எம் அட்டைகளை கொண்டு, பணப்பரிமாற்றங்களை மேற்கொள்ளும் இலங்கை மக்கள், மிகுந்த அவதானத்துடன் செயல்பட வேண்டும் என, இலங்கை மத்திய வங்கி அறிவுறுத்தல் விடுத்துள்ளது. இது குறித்து இலங்கை மத்திய வங்கி, விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அண்மைக்காலமாக மோசடியான முறையில், ஏ.ரீ.எம் அட்டைகளை கொண்டு பணபரிமாற்ற நடவடிக்கைள் முன்னெடுக்கப்பட்டதாக, தமது நிறுவனத்திற்கு பல முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. இவ்வாறான சந்தர்ப்பங்களை குறைத்துக் கொள்வதுடன், வாடிக்கையாளரின் நிதிக்கான பாதுகாப்பை உறுதிப்படுத்த, மத்திய வங்கியும், ஏனைய அதிகாரம் வழங்கப்பட்ட முதன்மை வங்கிகளும், இதுவரை பயன்படுத்திய பாதுகாப்பு அளவிடைகளுக்கு மேலதிகமாக, பல அளவிடைகளை ஆரம்பித்துள்ளன.

தானியக்கக்கூற்று பொறிகள் பரிமாற்றங்களை வலுப்படுத்தும் நோக்கில், ஈ.எம்.வி செயல்படுத்தப்பட்ட கொடுப்பனவு அட்டைகளை, வாடிக்கையாளர்கள் பயன்படுத்துமாறு இலங்கை மத்திய வங்கி அறிவுறுத்தியுள்ள்ளது.

ஈ.எம்.வி செயல்படுத்தப்பட்ட கொடுப்பனவு அட்டைகளின் முன்பக்கத்தில் தெளிவாக புலப்படக்கூடிய இலத்திரனியல் சிப் அட்டை ஒன்று பொருத்தப்பட்டிருக்கும். இதன்மூலம் தானியக்கக்கூற்று பொறிகள் பரிமாற்றங்களை, பாதுகாப்பாக மேற்கொள்ள முடியும் என கூறப்படுகிறது.

ஏ.ரீ.எம் அட்டைகள், அடையாளம் காணப்படாத, அதிகாரமளிக்கப்படாத மற்றும் காணாமல் போன நிலையில் இருந்தால், விரைந்து உரிய வங்கியின் அதிகாரிக்கு அறிவிக்க வேண்டும். அத்துடன் CCTV கேமராக்களில் தென்படாத வகையில் யாராவது, ஏ.ரீ.எம் நிலையத்தில் நடமாடினால், உடனடியாக வங்கிக்கோ அல்லது காவல்துறைக்கோ அறிவிக்குமாறு பொது மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கடந்த காலங்களில் இலங்கையின் பல்வேறு இடங்களில் இது போன்ற சம்பவங்கள் தொடர்பில், சீன பிரஜைகளும், ருமேனிய பிரஜை ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் ஏ.ரீ.எம் இயந்திரத்திற்கு அருகாமையில், இயந்திரம் ஒன்றை பொருத்தி, ஏ.ரீ.எம் அட்டைகளை உட்செலுத்தும் வாடிக்கையாளர்களின் தரவுகளை திருடி, பின்னர் பண மோசடியில் ஈடுபட்டுள்ளமை, விசாரணைகளின் போது, கண்டறியப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடம் இருந்து, 200 போலி ஏ.ரீ.எம் அட்டைகள் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஏ.ரீ.எம் இயந்திரங்களுக்கு முன்பாக சந்தேகத்திற்கு இடமான முறையில் நடமாடும் நபர்கள் குறித்து, உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் வழங்குமாறு, காவல்துறை ஊடக பேச்சாளர், காவல்துறை அத்தியாசகர் ருவான் குணசேகர கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read more...

மாலியில் உயிரிழந்த இராணுவ வீரரின் இறுதிக் கிரியையில், ஐ.நா. அதிகாரி பங்கேற்பு

ஐக்கிய நாடுகள் அமைதி காக்கும் பணிகளின் போது உயிரிழந்த பொலனறுவையை சேர்ந்த இலங்கை வீரரின் இறுதிக்கிரியை, இன்று இடம்பெற்றது.

மாலியில் உயிரிழந்த இராணுவ வீரர்களின் உடலங்கள், கடந்த திங்கட்கிழமை இலங்கைக்கு கொண்டு வரப்பட்டன. அதனை தொடர்ந்து உடலங்கள், அவர்களது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.

இதனிடையே பொலனறுவையை சேர்ந்த இராணுவ வீரரின் இறுதிக் கிரியை இன்று இடம்பெற்றது. உயிர் நீத்த வீரரின் இறுதி அஞ்சலி நிகழ்வில், இலங்கைக்கான ஐ.நா. வதிவிட ஒருங்கிணைப்பாளர் ஹனா சிங்கர், சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள், உயிரிழந்த வீரரின் குடும்ப உறுப்பினர்கள், பாடசாலை மாணவர்கள் எனப் பெருந்திரளானவர்கள் கலந்து கொண்டனர்.

கடந்த தினம் மாலி நாட்டில் அமைதி காக்கும் பணிகளை மேற்கொண்ட போது, இடம்பெற்ற குண்டு தாக்குதலில் இலங்கை இராணுவத்தைச் சேர்ந்த இரண்டு வீரர்கள் பரிதாபமாக பலியாத்துடன், ஆறு பேர் காயமடைந்தனர்.

இதனை அடுத்து ஐக்கிய நாடுகள் சபை, இந்த சம்பவத்திற்கு எதிராக தமது கண்டனத்தை வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Read more...

இலங்கைக்கு கடத்தவிருந்த கேரளா கஞ்சா பொதிகள் கைப்பற்றப்பட்டன – இலங்கை ஏதிலி ஒருவர் கைது!

இலங்கைக்கு கடத்தவிருந்த ஒருதொகை கேரளா கஞ்சா பொதிகள் இராமேஸ்வரம் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கஞ்சா போதைப்பொருளை இந்திய காவல்துறையினர் இன்று கைப்பற்றினர்.

எனினும் இதனைக் கடத்த முயன்றவர்கள் தப்பியோடியுள்ளனர். இந்த நிலையில் அவர்களைக் கைது செய்யும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருவதாக இந்திய காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். அத்துடன் இந்த சம்பவத்துடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில், இலங்கை ஏதிலி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இராமநாதபுரம், உச்சிபுளி - அரியமான் கடற்கரைப் பகுதியிலிருந்து இலங்கைக்கு கஞ்சா கடத்த இருப்பதாக, இராமநாதபுரம் மாவட்ட கண்காணிப்பாளர் ஓம்பிரகாஷ் மீனாவுக்கு, இரகசிய தகவல் ஒன்று வழங்கப்பட்டுள்ளது.

இதையடுத்து அரியதான் கடற்கரைப் பகுதிக்கு சென்ற காவல்துறையினர், சேதுநகரைச் சேர்ந்த ஜெயகுமார் என்பவருக்குச் சொந்தமான தோட்டத்தை, சந்தேகத்தின் பேரில் சோதனை செய்தனர்.

இதன்போது, குறித்த தோட்டத்திலுள்ள அறை ஒன்றில் இலங்கைக்கு கடத்துவதற்காக மறைத்து வைக்கப்பட்டிருந்த, 98 பொதிகளில், 196 கிலோ கஞ்சா போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த போதைப்பொருள் கடத்தலோடு தொடர்புபட்ட முக்கிய குழு தப்பியுள்ள நிலையில், காவல்துறை உயரதிகாரிகள் மற்றும் உளவுத்துறை அதிகாரிகள், குறித்த தோட்டத்தின் உரிமையாளரிடம் தற்போது தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதனிடையே நேற்றிரவு உச்சிபுளி பேருந்து நிலையத்தில் சந்தேகத்திற்கு இடமாக நின்று கொண்டிருந்த ஒருவரை, அப்பகுதி காவல்துறையினர் விசாரித்தனர். இதன்போது, அவர் இலங்கையின் வவுனியா மாவட்டத்தைச் சேர்ந்த கார்த்திக் என்பது தெரிய வந்தது.

அவர் கரூர் மாவட்டத்தில் உள்ள ஏதிலிகள் முகாமிலிருந்து இலங்கைக்கு தப்பிச் செல்ல முயற்சித்ததுடன், அவர், தம்வசம் 10 கிலோ கேரள கஞ்சா வைத்திருந்ததும் தெரிய வந்தது.

இதனால் கார்த்திக்கை கைது செய்த இந்திய காவல்துறையினர், அவரிடம் விசாரணை நடத்தி வந்த நிலையில், இன்று காலை, அதே பகுதியில் 196 கிலோ கஞ்சா தோட்டத்தில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.

எனவே, இலங்கை ஏதிலிக்கும், தப்பியோடிய போதைப்பொருள் கடத்தல் குழுவுக்கும் இடையில், தொடர்பு உள்ளதா? என்ற கோணத்தில், இந்திய உளவுத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடந்த 24 மணி நேரத்தில் இரண்டு கட்டமாக, 206 கிலோ கஞ்சா போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம், இராமநாதபுரம் மாவட்ட கடலோர பகுதிகளில், பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

Read more...

அரசியல் தீர்வுத்திட்ட யோசனைகளுக்குப் பதிலளிக்கப் பயந்து, மஹிந்த தரப்பினர் பின்வாங்கினர் - இரா.சம்பந்தன்.

இலங்கையின் இனப்பிரச்சனைக்கான அரசியல் தீர்வுத்திட்ட யோசனைகளுக்குப் பதிலளிக்கப் பயந்து, மஹிந்த தரப்பினர் தம்முடன் பேச்சுவார்த்தை மேசைக்கு வரவில்லை என, தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

தமது ஆட்சியின் போது தேசிய இனப்பிரச்சனைக்கு தீர்வுகாணும் முயற்சி தோல்வி கண்டதற்கு, தமிழ்த் தேசிய கூட்டமைப்பே பிரதான காரணம் என்று, முன்னாள் ஜனாதிபதியும், தற்போதைய எதிர்க்கட்சித் தலைவருமான மகிந்த ராஜபக்ஷ, அண்மையில் தெரிவித்த கருத்துக்கு பதிலளித்த போதே, இரா.சம்பந்தன் இதனை கூறினார்.

மகிந்த ராஜபக்ச தலைமையிலான அரசுடன் அனைத்துச் சுற்றுப் பேச்சுகளிலும், உண்மையான முகத்தை கொண்டு நாம் பயணித்தோம். எனினும் எமது தீர்வுத் திட்ட யோசனைகளுக்குப் பதிலளிக்கப் பயந்த மஹிந்த ராஜபக்ச தரப்பினர், பேச்சுவார்த்தையை புறக்கணித்தனர். இங்கு போலி முகத்தை கொண்டவர்கள் மஹிந்த தரப்பினரே என, இரா.சம்பந்தன் கூறினார்.

இது, நாட்டு மக்களுக்கும் பன்னாட்டுச் சமூகத்துக்கும் தெரிந்த விடயம். ஆனால், இப்போது மகிந்த ராஜபக்ச, புதுக்கதை ஒன்றை கூறியுள்ளார்.
முதலில் மஹிந்த ராஜபக்ச, உண்மையை மட்டுமே பேச வேண்டும். தன் மீதான பிழைகளை அவர் மறைக்க முற்படக் கூடாது. மகிந்த அரசுடன் அனைத்துச் சுற்றுப் பேச்சுகளிலும் தமிழ் தேசிய கூட்டமைப்பு பங்கேற்றியது. எமது சிறந்த தீர்வுத்திட்ட யோசனைகளுக்குப் மஹிந்த தரப்பால் பதில் கூற முடியவில்லை. எனவே தான் மஹிந்த தரப்பினர் பேச்சுவார்த்தை மேசைக்கு வராமல் பின்வாங்கினார்கள் என, அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

எனினும் தற்போது எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும் மகிந்த ராஜபக்ஷ எந்த வேளையிலும் எங்களுடன் பேச்சுவார்த்தைக்கு இணங்க முடியும். நாமும் தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என்ற வகையில், சிறந்த எதிர்காலத் தீர்வுக்காக, எத்தகைய தரப்பினருடனும் பேச தயாராக உள்ளோம். எனினும் அந்தப் பேச்சுகள் அனைத்தும் நேர்மையானதாக இருக்க வேண்டும். காலத்தை வீணடிக்கும் வகையில் இருக்கக் கூடாது என்று இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

இதேவேளை மஹிந்த ஆட்சிக் காலத்தில், தமிழ் மக்களின் அடிப்படை பிரச்சனை மற்றும் இனப் பிரச்சனைக்கான தீர்வு தொடர்பில், தமிழ் தேசிய கூட்டமைப்புக்கும், மகிந்த ராஜபக்ஷ அரசாங்கத்திற்கும் இடையில் மொத்தமாக 18 சுற்று பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுள்ளன.

இந்த பேச்சுவார்த்தையில் அரச தரப்பு சார்ப்பில், சஜின்வாஸ் குணவர்த்தன, ஜி.எல்.பீரிஸ், நிமால் சிறிபாலடி சில்வா ஆகியோர் கலந்து கொண்டதுடன், தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் இரா.சம்பந்தன், மாவை சேனாதிராஜா, சுரேஷ் பிரேமச்சந்திரன், எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மகிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தினால் நாடாளுமன்ற தெரிவு குழு ஊடாக இனப் பிரச்சனைக்கு தீர்வு காணப்படும் என தெரிவிக்கப்பட்டதுடன், அதில் தமிழ் தேசிய கூட்டமைப்பினை பங்கேற்குமாறு, பகிரங்க அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

ஆனால் முக்கியமான விடயங்களை அரசாங்கத்துடன் பேசி, அதில் ஒரு தீர்வு எட்டப்படும் பட்சத்தில், அதன் பின்னர் நாடாளுமன்ற தெரிவு குழுவில் அங்கம் வகிக்கலாம் என, தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், அடுத்த சுற்று பேச்சுவார்த்தைக்கு நாள் குறிப்பிடப்படிருந்தும், மகிந்த தரப்பினர் பேச்சுவார்த்தை மேசைக்கு வரவில்லை. பேச்சுவார்த்தை மேசைக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பினர் மாத்திரம் சென்று, ஏமாற்றமடைந்தமை குறிப்பிடத்தக்கது.

Read more...

படைப்புழுவின் ஆக்கிரமிப்பால் கைவிட்ட சோளப்பயிர்ச்செய்கையை, தற்போது மீள ஆரம்பிக்கலாம் - விவசாய திணைக்களம்.

நாட்டின் பல்வேறு மாவட்டங்களின் விவசாயிகளுக்கு பாரிய அச்சுறுத்தலாக இருந்த சேனா படைப்புழுக்கள், தற்போது நாட்டில் இருந்து முற்றாக அழிக்கப்பட்டுள்ளதாக, விவசாய துறையின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி டப்ளிவ்.எம்.ட்பிளிவ்.வீரகோன் தெரிவித்துள்ளார்.

அத்துடன் எதிர்வரும் சிறுபோக பருவ காலத்தில் மீண்டும் சோள உற்பத்தியை, விவசாயிகள் எந்தவித அச்சமும் இன்றி ஆரம்பிக்கலாம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சேனா படைப்புழுக்கள் தற்போது முற்றாக கட்டுப்படுத்தப்பட்டுள்ள நிலையில், எதிர்வரும் காலத்தில் 15 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் சோள உற்பத்தியை மேற்கொள்ள எதிர்பார்த்துள்ளதாக, விவசாய துறையின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி டப்ளிவ்.எம்.ட்பிளிவ்.வீரகோன் தெரிவித்தார்.

அண்மைக் காலமாக நாடளாவிய ரீதியில் தீவிரமடைந்து வந்த சேனா படைப்புழுக்களின் தாக்கத்தினால், பல்லாயிரக் கணக்கான விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டிருந்தன. இந்த படைப்புழுவின் தாக்கம் வாழைச் செய்கையையும் அதிகமாக பாதித்ததாக விவசாயிகள் தெரிவித்தனர்.

அத்துடன் சேனா படைப்புழுவால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு விவசாய அமைச்சு நட்டஈடு வழங்க முன்வந்துள்ளதாக செய்திகள் வெளிவந்தன. எனினும் இதுவரை தமக்கான எந்தவித நட்டஈட்டையும் அரசாங்கம் வழங்கவில்லை என, விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

Read more...

மீண்டும் ஏமாற்றம் கண்ட அப்பாவி மக்கள்.

பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பாக இன்று இடம்பெற்ற பேச்சுவார்த்தையும், தோல்வியில் நிறைவடைந்துள்ளது.

பெருந்தோட்ட தொழிலாளர்களின் ஆயிரம் ரூபாய் சம்பள உயர்வு தொடர்பாக, தமிழ் முற்போக்கு கூட்டணிக்கும், பெருந்தோட்ட முதலாளிமார் சம்மேளனத்திற்கும் இடையிலான பேச்சுவார்த்தை இன்று அலரி மாளிகையில் வைத்து, பிரதமர் ரணில் விக்ரமசிக்க தலைமையில் இடம்பெற்றது.

இதன் போது, பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பளத்தை ஆயிரம் ரூபாயினால் அதிகரிக்க முடியாது என, முதலாளிமார் சம்மேளனத்தின் பிரதிநிதிகள் மீண்டும் உறுதியாக தெரிவித்ததை அடுத்து, இன்றைய பேச்சுவார்த்தையும் தீர்வின்றி நிறைவு பெற்றுள்ளது.

ஏற்கனவே இது குறித்த பேச்சுவார்த்தை இடம்பெறும் என்று அறிவிக்கப்பட்ட போதும், அந்த பேச்சுவார்த்தை இன்று வரை ஒத்திவைக்கப்பட்டிருந்தது.

அதன்படி இன்றைய பேச்சுவார்த்தையில் தமிழ் முற்போக்கு கூட்டனியின் அமைச்சர்களான மனோ கணேசன், பழனி திகாம்பரம், வேலுசாமி இராதாகிருஸ்ணன் மற்றும் அமைச்சர் நவீன் திஸாநாயக்க, ரவீந்திர சமரவீர ஆகியோருடன், முதலாளிமார் சம்மேளனத்தினரும் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர்.

இதேவேளை பெருந்தோட்ட தொழிலாளர்களின் அடிப்படை சம்பளத்தை 700 ரூபாயாக அதிகரித்த கூட்டு ஒப்பந்தத்தில், கைகெழுத்திட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பளத்தை 1000 ரூபாயாக அதிகரிக்க வேண்டுமென வலியுறுத்தியும், தொடர்ந்தும் மலையகம் உள்ளிட்ட நாட்டின் பல பகுதிகளில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் இன்று இடம்பெற்ற பேச்சுவார்த்தையும் தோல்வியிலேயே முடிவடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும் தாம் கோரியபடி, அடிப்படை சம்பளமாக 1000 ரூபாய் வழங்காவிட்டால், தொடர்ந்தும் போராட்டங்களை முன்னெடுக்க தயாராக உள்ளதாக, பெருந்தோட்ட தொழிலாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இவர்களுக்கு ஆதரவாக பல அமைப்புக்களும் தற்போது போராட்ட களத்தில் குதித்துள்ளன.

நிச்சயமாக 1000 ரூபாய் சம்பளத்தை பெற்று தருவதாக உறுதியளித்த முன்னாள் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான்,முன்னாள் ராஜாங்க அமைச்சர் வடிவேல் சுரேஷ் உள்ளிட்டவர்கள் மீது, பெருந்தோட்ட மக்கள் அதிருப்தி கொண்டுள்ளனர். உறுதியளித்த வேதனத்தை பெற்றுத்தருவதாக தெரிவித்து, தம்மை ஏமாற்றியது மட்டுமல்லாது, முதலாளிமார் சம்மேளனத்திடம், தம்மை காட்டிக் கொடுத்து விட்டதாக, பெருந்தோட்ட தொழிலாளர்கள், மலையக அரசியல்வாதிகள் மீது, பல குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Read more...

தேசிய அரசாங்கம் அமைக்கும் யோசனை குறித்த வாக்கெடுப்பு நாளை - கரு ஜயசூரிய.

ஐக்கிய தேசிய கட்சி முன்வைத்த தேசிய அரசாங்கம் அமைக்கும் விடயம் தொடர்பிலான யோசனை, நாளை வாக்கெடுப்புக்கு விடப்படும் என, சாயநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்தார்.

இன்று கூடிய நாடாளுமன்ற அமர்வில், இந்த யோசனை தொடர்பான விவாதம் இடம்பெற்றது. இதன்போது தேசிய அரசாங்கம் தொடர்பான யோசனையை நாளைய தினம் வாக்கெடுப்புக்கு விட கட்சித் தலைவர்கள் இணக்கம் வெளியிட்டதாக, சபாநாயகர் கரு ஜயசூரிய அறிவித்தார்.

இந்த நிலையில் நாளை நடைபெறவுள்ள தேசிய அரசாங்கம் குறித்த யோசனை மீதான வாக்கெடுப்பிற்கு ,கட்டாயம் ஆதரவளிக்குமாறு, ஆளும் கட்சியில் உள்ள அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களிடமும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை தேசிய அரசாங்கமொன்றை உருவாக்கி அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது தொடர்பான பிரேரணை மீதான விவாதத்தை, ஏனைய கட்சிகளின் கருத்தை பொருட்படுத்தாது முன்னெடுக்க, ஐக்கிய தேசியக் கட்சி தீர்மானித்துள்ளதாக, மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க குற்றம் சுமத்தியிருந்தார்.

அத்துடன் மக்கள் நலனை பாராது முன்னெடுக்கப்படும் இந்த செயல்பாட்டை, தாம் ஒருபோது ஏற்க மாட்டோம் என, ஒன்றிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


இதேவேளை 19ஆவது அரசியலமைப்பு திருத்தத்தின் கீழ் அரசியலமைப்பு பேரவைக்கு மிகவும் பொருத்தமானவர்களே தெரிவுசெய்யப்பட்டுள்ளனர் என, சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

அரசியலமைப்பு பேரவைக்கான நியமனம் தொடர்பான ஜனாதிபதியின் குற்றச்சாட்டை சபாநாயகர் நிராகரித்து, இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

தெரிவு நடைமுறையில் சிரேஷ்டர்கள் என்ற விடயம் மாத்திரம் கவனத்தில் கொள்ளப்படுவதில்லை.

ஜனாதிபதியின் பட்டியலிடப்பட்ட பரிந்துரைக்கமையவே ஒவ்வொரு நியமனமும் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. அரசியலமைப்பு பேரவை எவரையும் தன்னிச்சையாக நியமிக்கவில்லை.

ஜனாதிபதியின் பரிந்துரைகளுக்கமைய பொருத்தமான உறுப்பினர்களை தெரிவு செய்வதில் எவ்வித அநீதியும் இழைக்கப்படவில்லை. நாம் இதில் எவ்வித தவறுகளையும் காணவில்லை என, நாடாளுமன்றத்தில் வைத்து சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்தார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாடாளுமன்றத்தில் விசேட உரையொன்றை ஆற்றியிருந்தார். இதன்போது, அரசியலமைப்பு சபைக்கான நியமனத்தில் சிரேஸ்ட உறுப்பினர்கள் முற்றாக புறக்கணிக்கப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Read more...

வேதனமின்றி அலுகோசு வேலை செய்ய தயார் - நாமல் குமார.

வேதனமின்றி அலுகோசு வேலை செய்ய தான் தயாராக இருப்பதாக, ஊழல் எதிர்ப்பு இயக்கத்தின் செயற்பாட்டு பணிப்பாளர் நாமல் குமார தெரிவித்துள்ளார். டுபாயில் வைத்து கைது செய்யப்பட்ட மாகந்துரே மதுஷ் உள்ளிட்ட குற்றவாளிகளின் தூக்கு தண்டனையை நிறைவேற்ற சம்பளமின்றி பணியாற்ற தான் இப்போதே தயார் நிலையில் உள்ளதாக அவர் கூறியுள்ளார்.

பிரபல பாதாள உலகக் குழு மற்றும் போதைப்பொருள் கடத்தலின் முக்கிய தலைவனான மாகந்துரே மதுஷ் உள்ளிட்ட 25 பேர் டுபாயில் கைது செய்யப்பட்டதை அடுத்து, அவர்களை பாதுகாப்பாக இலங்கைக்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாக, இலங்கை அரசாங்கம் தெரிவித்திருந்தது.

இந்த விடயம் குறித்து ஊழல் எதிர்ப்பு இயக்கத்தின் செயற்பாட்டு பணிப்பாளர் நாமல் குமார இன்று கருத்து வெளியிட்டுள்ளார். மரண தண்டனையை இரண்டே மாதங்களுள் நிறைவேற்றுவதாக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று உறுதியளித்திருந்தார். ஜனாதிபதியின் இந்த அறிவிப்பை தாம் வரவேற்பதாக, நாமல் குமார குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதியின் இந்த துணிகரமான கருத்து, ஒரு முன்னேற்றகரமான நிலையை எட்டியுள்ளது. இதனால், அலுகோசு பதவிக்கான வெற்றிடத்தை நிரப்புவதற்கான தேவை ஏற்பட்டுள்ளது.

எனவே, அந்த பதவியில் வேதனம் இன்றி, ஒரு தொழிலாக அல்லாது, சமூக சேவையாக இந்த பணியை செய்வதற்கு, இப்போதே தாம் தயாராக உள்ளதாக நாமல் குமார தெரிவித்தார்.

அத்துடன், பாரிய குற்றச் செயல்களுக்கு சூத்திரதாரியாக திகழும் மாகந்துரே மதுஷ் போன்றவர்களுக்கு எதிராக, மரண தண்டனையை நிறைவேற்றுவது அத்தியவசியமானது என, ஊழல் எதிர்ப்பு இயக்கத்தின் செயற்பாட்டு பணிப்பாளர் நாமல் குமார குறிப்பிட்டுள்ளார்.

Read more...

தமிழ் மாணவர்களின் பாதுகாப்பு, உறுதிப்படுத்தப்பட வேண்டும் - பிரதமரிடம் கோரிக்கை முன்வைத்த வேலுகுமார்.

பத்தனை ஸ்ரீபாத கல்வியற் கல்லூரியில் பயிலும் தமிழ் மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு, பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம், நாடாளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் கோரிக்கை முன்வைத்துள்ளார்.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் ஆகியோருக்கு எழுதிய கடிதத்திலேயே, அவர் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

அத்துடன் மாணவர்களின் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றுமாறும், இந்த விவகாரத்தில் தாங்கள் உடனடியாக தலையிட்டு தீர்வை பெற்றுத் தருமாறும் நாடாளுமன்ற உறுப்பினர் வேலுகுமார், பிரதமரிடமும்,கல்வி அமைச்சரிடமும் கடிதம் மூலம் கோரியுள்ளார்.

தமது கோரிக்கைக்கு உரிய தரப்பிடம் இருந்து பதில் கிடைக்கும் என எதிர்பார்ப்பதாக வேலுகுமார் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

ஸ்ரீபாத கல்லூரியின் சமையல் அறை அண்மையில் சீல் வைக்கப்பட்டமை, முறையாக உணவு வழங்காமை, அத்துடன், பதிவாளர் உட்பட சில உத்தியோகத்தர்கள் கல்லூரி அலுவலகத்துக்குள், கடமை நேரத்தில் வைத்து , மதுபானம் அருந்தியமை தொடர்பான காணொளிகள் வெளியானதை அடுத்து, ஸ்ரீபாத கல்வியற் கல்லூரி ஆசிரிய மாணவர்கள், நேற்றும் இன்றும் போராட்டத்தை முன்னெடுத்தனர்.

இதேவேளை இன்றைய தினம் கல்வியற் கல்லூரிகளின் பணிப்பாளர் எம்.எம்.பண்டார, கல்வியற் கல்லூரியின் ஆசிரிய மாணவர்களுடன் தொலைபேசியில் உரையாடியுள்ளார். கல்லூரியில் ஒழுக்கயீனமாக நடந்துகொண்ட பதிவாளர் உள்ளிட்ட சிற்றூழியர்களை இடமாற்றம் செய்வதுடன், அடுத்த கட்டமாக அவர்களை பதவியில் இருந்து நீக்குவதற்கான நடவடிக்கைகளையும் முன்னெடுப்பதாக, எம்.எம்.பண்டார கல்வியற் கல்லூரி ஆசிரிய மாணவர்களிடம் உறுதியளித்ததை அடுத்து, மாணவர்களின் போராட்டம் இன்று கைவிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Read more...

படுகொலை சதித் திட்டம் தொடர்பில் உண்மைகள் வெளிப்படுத்தப்படும் - ஜனாதிபதி நம்பிக்கை

முக்கிய பிரமுகர்களை படுகொலை செய்யும் சதித் திட்டம் தொடர்பான விசாரணைகள் இரண்டு வாரங்களில் சட்டமாஅதிபரிடம் கையளிக்கப்படவுள்ளது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

இந்த சதித் திட்டம் குறித்து விசாரணை நடத்தி வரும் குற்றப் புலனாய்வுப் பிரிவினர், சில நாட்களுக்கு முன்னதாக தம்மிடம் வாக்குமூலம் ஒன்றை பெற்றுக் கொண்டனர் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார். விசாரணைகள் சுமுகமான முறையில் முன்னெடுக்கப்படுவதாகவும், விரைவில் உண்மைகள் வெளிப்படுத்தப்படும் என்று எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

Read more...

நீதிபதி விக்கும் களுஆரச்சி இன்று விசேட பேச்சுவார்த்தைக்கு அழைப்பு

கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி விக்கும் களுஆரச்சி இன்று காலை விசேட பேச்சுவார்த்தை ஒன்றிற்கு அழைப்பு விடுத்துள்ளார். கொழும்பு மேல் நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள வழக்குகளின் அநாவசிய தாமதங்களைத் தவிர்த்து கொள்ளும் நடவடிக்கை தொடர்பில் கலந்துரையாடுவதற்கு, இந்த அழைப்பு அவரால் விடுக்கப்பட்டுள்ளது.

பொலிஸார் மற்றும் சட்டமா அதிபர் திணைக்களத்தினால் தொடரப்பட்டுள்ள வழக்குகளை துரிதகதியில் விசாரித்து நிறைவுசெய்யுமாறு தலைமை நீதிபதி நளின் பெரேரா முன்வைத்த ஆலோசனைக்கு இணங்க, கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி விக்கும் களுஆரச்சி, இந்த விசேட கலந்துரையாடலுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

இந்த கலந்துரையாடலுக்கு கொழும்பு மேல் நீதிமன்றத்தில் சேவையாற்றும் அனைத்து மேல் நீதிமன்ற நீதிபதிகள், சட்டமா அதிபர் திணைக்கள அதிகாரிகள் மற்றும் கொழும்பு மேல் நீதிமன்ற எல்லைக்குட்பட்ட அனைத்து சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read more...

மாகந்துரே மதூஷ் உள்ளிட்ட 25 பேரின் இரத்தமாதிரிகள் பரிசோதனைக்கு

கைது செய்யப்பட்ட பிரபல போதைப்பொருள் கடத்தல்காரரும் பாதாள உலகக்குழு தலைவருமான மாகந்துரே மதூஷ் உள்ளிட்ட 25 பேரின் இரத்தமாதிரிகள், டுபாய் பாதுகாப்புப் பிரிவினரால் பெறப்பட்டுள்ளதாக, பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். இந்த இரத்த மாதிரிகளை வைத்து கைதாகிய சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்ட சந்தர்ப்பத்தில் போதைப்பொருள் பயன்படுத்தியிருந்தனரா? என்பது தொடர்பில் ஆராயும் பொருட்டே பெறப்பட்டதாக பொலீசார் கூறுகின்றனர்.


இதேவேளை, சந்தேகநபர்களை நாட்டிற்கு அழைத்துவருவது தொடர்பிலான சட்ட ஆலோசனைகளை எவ்வேளையிலும் வழங்குவதற்கு தயார் என சட்டமா அதிபர் திணைக்களம் குறிப்பிட்டுள்ள அதேநேரம் பாதுகாப்புத் தரப்பினர் இதுவரை சட்ட ஆலோசனைகளை கோரவில்லை என சட்டமா அதிபர் ஜயந்த ஜயசூரிய இதன்போது குறிப்பிட்டார். இதேவேளை, கைது செய்யப்பட்டுள்ள குழுவில் இலங்கை இராஜதந்திர கடவுச்சீட்டுள்ள ஒருவரும் அடங்குவதாக துபாயின் ‘கலீஞ் டைம்ஸ்’ என்ற பத்திரிகை வௌியட்டமை குறிப்பிடத்தக்கது.

சந்தேகநபர்களை தடுத்துவைத்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து செல்வதாக டுபாய் பாதுகாப்புப் பிரிவினர் அறிவித்துள்ளதாக பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.


Read more...

இனப்படுகொலை தொடர்பில், சுயாதீனமான விசாரணைகள் வேண்டும் - மேலும் ஒரு வலியுறுத்தல்

தமிழ் மக்களுக்கு எதிராக அரங்கேறிய இனப்படுகொலை தொடர்பில், சுயாதீனமான விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று
பார்சிலோனா வலியுறுத்தியுள்ளது. இலங்கை தொடர்பாக ஸ்பெயின் நாட்டின் பிராந்திய அரச கட்டமைப்பிற்குள் ஒன்றான பார்சிலோனாவில் இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

எதிர்வரும் மார்ச் மாதம் இலங்கை தொடர்பான விடயங்கள் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் பிரஸ்தாபிக்கவுள்ள நிலையில் இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

தமிழ் மக்களின் உரிமைகளை வழங்குவதற்கு இலங்கை அரசாங்கம் தயங்கக் கூடாது என்றும், அரசியல் கைதிகளை தாமதமின்றி விடுதலை செய்யவேண்டும் என்பது உள்ளிட்ட பல தீர்மானங்கள், இதில் அடங்குகின்றன. அத்துடன் தமிழ் மக்களுக்கு எதிரான மனித உரிமை மீறல்களை விசாரிக்க, சிறப்பு தூதுவரை ஐக்கிய நாடுகள் சபை நியமிக்க வேண்டும் என்றும் கோரியுள்ளது. இந்தத் தீர்மானங்களை ஐக்கிய நாடுகள் சபைக்கு அனுப்புவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவற்றோடு, சுயாட்சி அதிகாரம் மிக்க தமிழ் மக்களுக்கான தேசம் ஒன்று உருவாக்கப்பட வேண்டும் எனவும் எனவும் ஸ்பெயின் நாட்டின் பிராந்திய அரச கட்டமைப்பிற்குள் ஒன்றான பார்சிலோனா, மேலும் தெரிவித்துள்ளது.

Read more...
Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com