Thursday, February 7, 2019

மஹிந்த ராஜபக்ஷவின் பிரதமர் பதவி குறித்த மனு ஒத்திவைப்பு

மஹிந்த ராஜபக்ஷவின் பிரதமர் பதவி மற்றும் அமைச்சரவை செயற்படுவதற்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடை உத்தரவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மேன்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் பிற்போட்டுள்ளது.

குறித்த மனு நீதிபதிகளான புவனேக அளுவிஹாரே மற்றும் முர்து பெர்னாண்டோ ஆகியயோர் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. 122 பாராளுமன்ற உறுப்பினர்கள் சார்பாக ஆஜராகியிருந்த சட்டத்தரணி, இது சம்பந்தமாக மேன்முறையீட்டு நீதிமன்றில் நிலுவையில் உள்ள வழக்கை வாபஸ் பெறுவது சம்பந்தமாக எழுத்துமூல கோரிக்கையை விடுப்பதற்கு, கால அவகாசம் வழங்குமாறு மன்றில் கோரிக்கை விடுத்தார்.

இது தொடர்பில் தமது சேவையாளர்களிடம் கையொப்பம் பெறும் நடவடிக்கை இன்னும் பூர்த்தியாகவில்லை என்பதால் அதற்கு காலம் வழங்குமாறு சட்டத்தரணி கோரிக்கை விடுத்தார். இதனையடுத்து மனுதாரர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி, மேன்முறையீட்டு நீதிமன்றில் உள்ள வழக்கை வாபஸ் பெறுவதாக இருந்தால், உச்ச நீதிமன்றில் உள்ள இந்த மேன்முறையீட்டு மனுவை வாபஸ் பெறுவதற்கு தமது சேவையாளர்கள் தயார் என்று நீதிமன்றில் அறிவித்தார்.

இந்த நிலையில் குறித்த நடவடிக்கையின் முன்னேற்றம் குறித்து ஆராய்வதற்காக, வழக்கை எதிர்வரும் மார்ச் மாதம் 14ம் திகதிக்கு உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

Read more...

அமெரிக்க பாதுகாப்பு பிரிவுடன் எந்தவித உடன்படிக்கையும் மேற்க்கொள்ளவில்லை - பிரதமர் திட்டவட்டம்

அரசாங்கம், அமெரிக்க பாதுகாப்பு பிரிவுடன் எந்த வித உடன்படிக்கையும் மேற்க்கொள்ளவில்லை என்று, பிரதமர் ரணில் விக்ரமசிங்க மறுப்புத் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார நாடாளுமன்றத்தில் எழுப்பிய கேள்விக்கு பதில் வழங்கும் போதே பிரதமர் இவ்வாறு கூறினார். மேலும், அரசாங்கம் ஒருபோதும் அதுபோன்ற உடன்படிக்கையை செய்துகொள்ளவில்லை என்றும் பிரதமர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

இதனிடையே, இதற்கு முன்னரும் இது போன்ற குற்றச்சாட்டுக்கள் தற்போதைய அரசாங்கத்தின்மேல் அண்மைய நாட்களில் முன்வைக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Read more...

மழை - இடி - மின்னல்- காற்று - கடல் கொந்தளிப்பு இன்றும் தொடரும்

வட மாகாணம் தவிர்ந்த ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

கிழக்கு, ஊவா மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அவ்வப்போது மழையும், சப்ரகமுவ, மற்றும் மேல் மாகாணங்களிலும் காலி, மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 50 மி.மீக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

திருகோணமலையிலிருந்து மட்டக்களப்பு ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் பல இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும். கொழும்பிலிருந்து காலி ஊடாக மாத்தறை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது வடகிழக்கு திசையிலிருந்து வீசக்கூடுவதுடன் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 20-30 கிலோ மீற்றர் வரை காணப்படும்.

மன்னாரிலிருந்து புத்தளம் ஊடாக கொழும்பு வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளிலும் ஹம்பாந்தோட்டையிலிருந்து பொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளிலும் காற்றானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40-45 கிலோ மீற்றர் வரை அதிகரித்து வீசக்கூடுவதுடன் அவ்வேளைகளில் கடல் கொந்தளிப்பாகவும் காணப்படும். இடியுடன் கூடிய மழை பெய்யும் நேரங்களில் கடற்பகுதிகளில் அவ்வப்போது பலமான காற்று வீசுவதுடன் அக்கடற்பிரதேசங்கள் கொந்தளிப்பாகவும் காணப்படும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

Read more...

ஜனாதிபதி பிரேரணைக்கு எதிராக இருக்கும் நிலையில், அமைச்சர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க முடியாது - கம்மன்பில

தேசிய அரசாங்க யோசனையை நிறைவேற்றியவுடன் அமைச்சர்களின் எண்ணிக்கையை அதிகரித்து விடலாம் என ஐ தே கட்சியில் உள்ளவர்கள் பகல் கனவு காண்கின்றார்கள் என, பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில கிண்டல் செய்துள்ளார்.

எதிர்க் கட்சிக் காரியாலயத்தில் ஊடகவியலாளர்களை சந்தித்த போதே அவர் இதனைக் கூறினார். இந்த சந்திப்பின்போது புதிய தேசிய அரசாங்கம் தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த கம்மன்பில,

ஐக்கிய தேசியக் கட்சியின் பின் வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு சித்திரைப் புத்தாண்டு பரிசாக அமைச்சுப் பதவிகளை வழங்குவதற்கே இந்தப் பிரேரணை கொண்டுவரப்படுகின்றது.

நாடாளுமன்றத்தில் பிரேரணை நிறைவேற்றப்பட்டாலும் அமைச்சர்களின் எண்ணிக்கையைத் தீர்மானிக்கும் அதிகாரம் ஜனாதிபதிகே இருக்கிறது. அத்துடன், ஜனாதிபதியால் தற்போது உள்ள அமைச்சர்களின் எண்ணிக்கையை குறைக்கும் அதிகாரம் காணப்படுகின்றது.

எனவே, ஜனாதிபதி இந்தப் பிரேரணைக்கு எதிராக இருக்கும் நிலையில், அமைச்சர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க ஒரு போதும் முடியாது என்று உதய கம்மன்பில இதன்போது திட்டவட்டமாக கூறினார்.

Read more...

பால்மா தொடர்பிலான உண்மைத்தன்மையை அறிவதற்கு, நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையிடம் அறிக்கை கோரல்

இலங்கைக்கு இறக்குமதி செய்யும் பால்மா தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பிலான உண்மைத் தன்மையை அறிவதற்கு, நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையிடம் அறிக்கையைக் கோரவுள்ளதாக சபை முதல்வர் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். நேற்று முன்தினம், பிரதியமைச்சர் புத்திக பத்திரணவினால் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பால்மாவில் பன்றிக் கொழுப்பு மற்றும் மெலமைன் கலக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.

இந்த நிலையில் நேற்றைய அமர்வில் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல இவ்வாறு கூறியுள்ளார்.

இந்த கலப்படம் தொடர்பில் ஆராய்வதற்கு எமது நாட்டில் நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபை செயற்படுகிறது. அதன் மூலம் குழு அமைக்கப்பட்டு ஆராய்ந்த பின்னர் அறிக்கை ஒன்றை நாடாளுமன்றம் பெற்றுக்கொள்ளும்.

இந்த அறிக்கை கிடைத்த பின்னர் நாடாளுமன்றத் தெரிவுக்குழு அமைப்பது தொடர்பில் தீர்மானிக்க முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Read more...

படகுகளை விற்பனை செய்தல் மற்றும் பரிமாறல் போன்ற நடவடிக்களுக்கு இன்று முதல் தடை

மாவட்ட அலுவலகங்களினூடாக மேற்கொள்ளப்படுகின்ற மீன்பிடிப் படகுகளை விற்பனை செய்தல் மற்றும் பரிமாறல் உள்ளிட்ட நடவடிக்கைகள், இன்று முதல் தடை செய்யப்பட்டுள்ளதாக, கடற்றொழில் திணைக்களம் அறிவித்துள்ளது. இதன்போது இடம்பெறும் முறைகேடுகளை தவிர்க்கு நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, திணைக்களத்தின் நடவடிக்கை பணிப்பாளர் கல்யாணி ஹேவாப் பத்திரண தெரிவித்துள்ளார்.

மேலும், படகுகளை விற்பனை செய்தல் அவ்லது பரிமாற்ற நடவடிக்கைகளுக்காக மாவட்ட உதவிப் பணிப்பாளரின் சிபாரிசினை பெற்றுக்கொள்வது மிகவும் அவசியம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, மாவட்ட உதவிப் பணிப்பாளரின் சிபாரிசுடன் கொழும்பு தலைமை காரியாலயத்துக்கு வருகைதந்து, அங்கு முன்னெடுக்கப்படும் முறையான ஆய்வின் பின்னரே படகுகளை விற்பனை செய்யவோ பறிமாறவோ சந்தர்ப்பம் கிடைக்கும் என, கடற்றொழில் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதற்கான தலைமை அலுவலகத்தில் விசேட அதிகாரிகள் குழுவொன்று பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், நாட்டில் உள்ள அனைத்து மாவட்ட காரியாலயங்களுக்கும் ஆலோசனைப் பத்திரம் ஒன்று அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாகவும் திணைக்களத்தின் நடவடிக்கை பணிப்பாளர் கல்யாணி ஹேவாப் பத்திரண மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Read more...

இறக்குமதி செய்யப்படுகின்ற பொருட்களுக்கு எவ்வித கட்டண அதிகரிப்பும் இல்லை - சுங்க அலுவலக அதிகாரிகள் சங்கம்

சுங்கத் தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக தேங்கியுள்ள கொள்கலன்களை அப்புறப்படுத்துவதற்கு விசேட பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கொள்கலன்களை அகற்றும் நடவடிக்கையை விரைவாக மேற்கொள்வதற்கு அனைத்துத் தரப்பிலிருந்து அதிகபட்ச ஊழியர்களை இணைத்துக் கொண்டுள்ளதாக, சுங்க அலுவலக அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் விபுல மினுவம்பிட்டிய தெரிவித்துள்ளார்.

இத்துடன், குறித்த கொள்கலன்கள் அகற்றப்படாமை காரணமாக அதற்காக பெருமளவு நிதி செலவிட வேண்டியுள்ளதாக, சுங்க அலுவலக அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் ஜீ. ராஜேந்திரன் கூறியுள்ளார். இதனிடையே, இறக்குமதி செய்யப்படுகின்ற பொருட்களுக்கு எவ்வித கட்டணமும் அதிகரிக்கப்படமாட்டாது என சுங்க அலுவலக அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


Read more...

நாட்டை விட்டு வெளியேறிய பாரிய குற்றவாளிகள் தொடர்பில் சபையில் கேள்வி

நீதிமன்றங்களினால் குற்றஞ்சாட்டப்பட்ட பாரிய குற்றச் செயல்களை மேற்கொண்ட குற்றவாளிகள் எவரும் வெளிநாட்டில் உள்ளனரா? என்பது குறித்த விபரங்களை, சட்ட மா அதிபர் திணைக்களம் வழங்கினால் அவற்றை நாடாளுமன்றத்துக்கு சமர்ப்பிக்க முடியுமென பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

ஜே.வி.பியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளிந்த ஜயதிஸ்ஸ எழுப்பிய கேள்வியொன்றுக்குப் பதிலளிக்கும்போதே பிரதமர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர்கள் என குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் நாட்டைவிட்டு வெளியேறி வெளிநாடுகளில் வாழ்ந்து வருகின்றார்கள். இவர்கள குறித்து நளிந்த ஜயதிஸ்ஸ எம்.பி கேள்வியெழுப்பினார்.

பிரதமரின் கேள்வி நேரத்தில் எழுப்பப்பட்ட இந்த வினாவிற்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பதிலளிக்கையில், குறித்த குற்றவாளிகள் தொடர்பில் நாட்டிலுள்ள 32 மேல் நீதிமன்றங்கள் மற்றும் 49 நீதிமன்றங்களிலிருந்து விபரங்ககளை பெற்றுக்கொள்ள வேண்டியிருப்பதாக சட்டமா அதிபர் அறிவித்திருப்பதாகவும், அவ்வாறான விபரங்கள் கிடைத்த பின்னர் இந்த விடயம் தொடர்பில் நாடாளுமன்றத்திற்கு தெரியப்படுத்த முடியும் என்றும் பதிலளித்துள்ளார்.

Read more...

தேசிய அரசாங்கம் தொடர்பான பிரேரணை, இன்று விவாதத்திற்கு இல்லை

இன்று காலை 10.30 மணிக்குக் கூடவுள்ள நாடாளுமன்ற அமர்வில் தேசிய அரசாங்கமொன்றை ஸ்தாபிப்பது தொடர்பிலான பிரேரணையை சமர்ப்பிக்கப்போவதில்லை என்று, சபை முதல்வர் லக்ஸ்மன் கிரியெல்ல அறிவித்துள்ளார். தேசிய அரசாங்கமொன்றை ஸ்தாபிப்பது தொடர்பிலான பிரேரணையை அடுத்த வாரத்தில் சமர்ப்பிக்க எதிர்ப்பார்த்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

புதிய தேசிய அரசாங்கமொன்றை ஸ்தாபித்து அமைச்சரவை எண்ணிக்கையை அதிகரிப்பதற்கான செயற்பாட்டை இன்று விவாதம் செய்வதற்கு நேற்றைய கட்சி தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. இந்த தீர்மானத்திற்கு ஐ தே கட்சியை தவிர வேறு எந்த கட்சியும் ஆதரவு வழங்கவில்லை. எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச, தேசிய அரசாங்கம் தொடர்பான பிரேரணையை தாம் எதிர்ப்பதாக தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் எதிர்க்கட்சிகளின் கருத்தைப் பொருட்படுத்தாது விவாதத்தை முன்னெடுக்க, ஆளும் ஐக்கிய தேசியக் கட்சி இந்தத் தீர்மானத்தை எடுத்ததாக, மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க நேற்றுக் கூறி இருந்தார்

ஆக, ஆளுங்கட்சியின் தீர்மானத்திற்கு அமைய இன்று குறித்த பிரேரணை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டால், அது அதிகாரத்தை முறையற்ற விதத்தில் பயன்படுத்தும் நடவடிக்கையாக அமையும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.


Read more...

Wednesday, February 6, 2019

அடித்தார் மங்கள அந்தர் பல்டி! பிஎஸ்எம் சார்ள்ஸ் இரும்பு பெண்மணியென புகழாரம்.

சுங்கத் திணைக்களத்தில் பணிப்பாளர் நாயகமாக செயற்பட்ட திருமதி பிஎஸ்எம் சார்ள்ஸ் அவர்களை அப்பதவியிலிருந்து தூக்கி ஓய்வு பெற்ற கடற்படை றியர் அட்மிரல் ஒருவரை பணியில் அமர்த்துவதற்கான அமைச்சரவை அங்கீகாரத்தை பெற்றிருந்தார் நிதியமைச்சர் மங்கள சமரவீர.

திருமதி சார்ள்ஸ் அவர்கள் அப்பதியிலிருந்து தூக்கப்பட்டமைக்கான காரணம் அவர் சுங்கத் திணைக்களத்தில் இடம்பெறும் பகல்கொள்ளைகளை முடிவுக்கு கொண்டுவருவதற்கு மிகவும் துணிச்சலுடன் செயற்பட்டமையாகும். இந்நிலையில் குறித்த இடமாற்றத்தை ஏற்றுக்கொள்ளாத தொழிற்சங்கங்கள் பணிப்பகிஷ்கரிப்பில் இறங்கியதுடன் நாட்டிற்கு பில்லியன் கணக்கில் சேதமும் ஏற்பட்டது.

நிலைமையை சமாளிக்க முடியாத மங்கள சமரவீர தற்போது தனது அமைச்சரவை அங்கீகாரப் பத்திரத்தை மீளப்பெற்றுக்கொண்டு மீண்டும் அவரை பணியை தொடர அனுமதித்துள்ளதுடன் இரும்பு பெண்மணி என்றும் புகழாரம் சூட்டியுள்ளார்.

இன்று இடம்பெற்று ஊடகவியலாளர் மாநாட்டில் மேற்கண்டவாறு தெரிவித்த அவர், சுங்க திணைக்களத்தில் இடம்பெறும் மோசடிகளுக்கு தடுப்பதற்கு பலமான ஒருவரை நியமிப்பது பொருத்தம் என்ற அடிப்படையில் ஓய்வு பெற்ற கடற்படை அதிகாரி ஒருவரை நியமித்துவிட்டு, சுங்க திணைக்களத்தில் இடம்பெறும் மோசடிகள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்கு திருமதி சார்ள்ஸ் அவர்களின் தலைமையில் பலமிக்க விசாரணைக் குழு ஒன்றை நிறுவ திட்டமிட்டிருந்தாக தெரிவித்துள்ளார்.

அத்துடன் திருமதி சார்ள்ஸ் அவர்கள் மிகத் திறமையானதோர் அதிகாரி என்பதை தான் சுனாமி அனர்தம் ஏற்பட்டிருந்தபோது அறிந்து கொண்டதாகவும் , பிரபாகரனுக்குக்கூட அடிபணியாது தனது கடமைகளை மேற்கொண்டதோர் அதிகாரி என்றும் கூறிப்பிட்டார்.

குறித்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட திருமதி சார்ள்ஸ் ஆரம்பிக்கப்பட்டுள்ள மோசடி தொடர்பான விசாரணைகளை 2 மாத காலத்தினுள் நிறைவு செய்து தனது இறுதி அறிக்கையை சமர்ப்பிக்க எதிர்பார்ப்பதாகவும் அதற்கான கால அவகாசம் வேண்டும் என்றும் தெரிவித்தார்.

அத்துடன் இன்று மீண்டும் கடமையேற்ற அவர் நாட்டிற்கும் அதன் பொருளாதரத்திற்கும் வலுச்சேர்கும் வகையில் கடினமாக உழைப்பேன் என்றும் தெரிவித்தார்.


Read more...

சப்ராவின் சரவணபவானின் மகளுக்கு எதற்காக அமெரிக்க தூதரகத்தில் தொழில்? பாராளுமன்றில் டக்ளஸ் கேள்வி

இலங்கை தமிழரசுக் கட்சி இன்று ஊழல் மோசடிகள் தொடர்பான பிரேரணை ஒன்றை பாராளுமன்றுக்கு கொண்டுவந்திருந்தது. இந்த பிரேணை தொடர்பில் பாராளுமன்றில் கருத்து தெரிவித்த ஈபிடிபி யின் தலைவரும் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா, அரசியல் பலம் அல்லது அரசியல் தொடர்புகளை பயன்படுத்தி உற்றார் உறவினர்களுக்கு தகுதி அடிப்படையிலான முறைமை பின்பற்றப்படாது அரச தொழில்வாய்ப்புக்களை பெறுவதும் ஓர் ஊழல் செயற்பாடாகும்.

அந்த வகையில் உங்கள் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் மகள் அமெரிக்காவிலுள்ள இலங்கை தூதரகத்தில் தொழில் செய்துவருவதாக பேசப்படுகின்றது. அத்தொழிலை புரிவதற்கு இலங்கையில் வேறொருவரும் இல்லையா? அத்தொழிலுக்காக விளம்பரம் செய்யப்பட்டு விண்ணப்பங்கள் கோரப்பட்டு விண்ணப்பதாரர்களில் முதன்மை நிலையில் நின்றா உங்கள் நாடாளுமன்ற உறுப்பினரின் மகள் அவ் வேலையை பெற்றார்? உங்கள் பிள்ளைகளுக்கு அமெரிக்காவில் உள்ள இலங்கை தூதரகத்தில் வேலை எடுப்பதற்காகவா உங்களை பிரதிநிதிகளாக மக்கள் அனுப்பினார்கள்? இது ஊழல் செயற்பாடு என்று உங்களுக்கு புரியவில்லையா? என கேள்விக்கணைகளைத் தொடுத்தார்.

அங்கு தொடர்ந்து பேசிய அவர்,
நாட்டில் ஜனநாயகம் தழைக்க வேண்டுமானால் ஊழல்கள் மோசடிகள் விசாரிக்கப்பட்டு சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக நடவடிக்கைகள் எடுக்கப்படல் வேண்டும்.

ஆனால் இது தொடர்பாக இலங்கை தமிழரசுக் கட்சிக்கு சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை கொண்டுவருவதற்கு அருகதை இருக்கிறதா என நான் வினவ விரும்புகின்றேன்.

இலங்கை மத்திய வங்கியில் நடைபெற்ற பிணை முறி மோசடி ரூபா 11 ஆயிரம் மில்லியன் அதாவது 1,100 கோடிக்கும் மேற்பட்ட மோசடி தொடர்பாக எதிர்க் கட்சி தலைவராக இருந்துகொண்டு ஒரு வார்த்தை கூட பேசாமல் மௌனியாக இருந்துவிட்டு இன்று ஊழல் மோசடி தொடர்பாக ஒத்திவைப்பு பிரேரணை கொண்டுவருவது கேலிக்கூத்தாக உள்ளது.

அதுமட்டுமல்ல அது தொடர்பாக அதிமேதகு ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட விசாரணைக் குழுவின் அறிக்கை கூட நாடாளுமன்றத்தில் விவாதத்றிற்கு வரும் போது தமிழ் மொழியாக்கம் தரப்படவில்லை என்ற விடயத்தை முன்னிறுத்தி அதனை நாடாளுமன்றத்தில் விவாதிக்கக் கூட விடாது மூடிமறைத்த பெருமை தமிழரசுக் கட்சியின் பேச்சாளர் கௌரவ சுமந்திரனையே சாரும்.

அதுமட்டுமல்ல மத்திய வங்கி பிணை முறி மோசடி தொடர்பாக பிரதமர் ஒரு விசாரணைக் குழு அமைத்து அங்கு மோசடி நடைபெறவில்லை என்று விடயங்களை மூடி மறைத்து அறிக்கை வந்தபோது கூட தட்டிக் கேட்காமல் மௌனியாகவே செயற்பட்டீர்கள்.

யாரைக் காப்பாற்றுவதற்காக இவ்வாறு செயற்பட்டீர்கள்? ஜனநாயகத்தை காப்பாற்றுவதாக மார்தட்டிக் கொள்ளும் உங்களுக்கு பிணைமுறி மோசடி ஒரு ஜனநாயக விரோத செயல் என்று புரியவில்லையா?

அதுமட்டுமல்ல தங்களின் அதிகாரத்தின் கீழ் கடந்த ஐந்து வருடங்களாக செயற்பட்ட வடக்கு மாகாணசபையின் ஊழல்கள் மோசடிகள் நிரூபிக்கப்பட்டும் மோசடிக்காரர்களான உங்கள் மாகாணசபை அமைச்சர்களுக்கு எதிராக ஏதாவது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டதா?

முதலமைச்சரினால் அமைக்கப்பட்ட விசாரணைக் குழுவே எத்தனையோ மோசடிகள் தொடர்பாக நடவடிக்கைகள் எடுக்குமாறு பரிந்துரைகள் செய்திருந்தும் அந்த அமைச்சர்கள் அல்லது அதிகாரிகளுக்கு எதிராக உங்களது முதலமைச்சரினால் சட்ட நடவடிக்கைகள் ஏதாவது எடுக்கப்பட்டனவா? அங்கும் ஊழலுக்கு விலைபோனவர்களாகவே உங்கள் கட்சி செயற்பட்டிருக்கின்றது.


அண்மையில் பளைப்பகுதியில் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டவர்களை பொலிஸார் கைது செய்தபோது பொலிஸ் மேலதிகாரிகளுடன் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் அவர்கள் நேரடியாக தொடர்பு கொண்டு அவரை விடுவித்துள்ளார்.

விடுவிக்கப்பட்டவர் நாடாளுமன்ற உறுப்பினரின் கார் சாரதியின் சகோதரர்.

அவர் விடுவிக்கப்பட்டதை தொடர்ந்து அவருடன் பிடிபட்ட ஏனைய போதைப்பொருள் வியாபாரிகளும் இத்தலையீடு காரணமாக விடுவிக்கப்பட்டனர்.

அவர்கள் நிரபராதிகளாயின் நீதிமன்றத்தினூடாக அவர்களை விடுவித்திருக்க வேண்டும். இதுவும் ஓர் ஊழல் செயற்பாடு இல்லையா?

இன்று நாட்டையே, குறிப்பாக வடக்கு மாகாணத்தை பெரும் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கியிருக்கும் போதைப்பொருள் வியாபாரிகளை உங்கள் தலையீட்டினால் விடுவித்துவிட்டு இங்கு ஊழலுக்கு எதிராக பிரேரணை கொண்டுவதற்கு உங்களுக்கு அருகதை உண்டா என்று சிந்தித்து பாருங்கள்?

'தனக்கொரு நியாயம் பிறருக்கொரு நியாயம்' என்பதுபோல் இலங்கை தமிழரசுக் கட்சியினராகிய நீங்கள் ஊழலுக்கு உறுதுணையாக இருந்துவிட்டு, பாரிய ஊழல்களைக் கூட எதிர்க் கட்சி தலைவர் பதவியை வைத்துக்கொண்டு பகிரங்கப்படுத்தும் துணிச்சலற்றவர்களாக இருந்துவிட்டு தற்போது இவ் சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையை கொண்டுவருவது எந்த உள் நோக்கத்திற்காக என்று அறிய விரும்புகின்றேன் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

Read more...

விடுதலை புலிகளின் குமரன் பத்மநாதனிடம் இருந்த நிதி, தற்போது எங்கே போனது? - நளிந்த ஜயதிஸ்ஸ.

தமிழீழ விடுதலைப் புலிகளின் சொத்துக்கள், உடமைகளுக்கு பொறுப்பாக இருந்த குமரன் பத்மநாதனின் வெளிநாட்டு நிதி, தற்போது எங்குள்ளது? என, நாடாளுமன்ற உறுப்பினர் நளிந்த ஜயதிஸ்ஸ கேள்வி எழுப்பியுள்ளார்.

வெளிநாடுகளில் குமரன் பத்மநாதனுக்கு இருந்ததாக கூறப்படும், எரிபொருள் நிரப்பு நிலையங்கள், கப்பல்கள், தங்கம் உள்ளிட்ட ஆபரணங்கள், அவரிடமிருந்த நிதிக்கு இப்போது என்ன நடந்தது என்று யாருக்கும் தெரியாது.

இதற்கு காரணமானவர்கள் அரசியல்வாதிகளே. அரசியல்வாதிகளின் செயற்பாடுகள், அவர்களுடைய பணம் என்பவற்றால் குற்றவாளிகள் தண்டனையிலிருந்து தப்பித்துக் கொள்ளும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக, ஜே.வி.பியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளிந்த ஜயதிஸ்ஸ குற்றம் சுமத்தியுள்ளார்.

அமைச்சரவையில் அங்கீகாரம் வழங்கப்பட்ட கைதிகள் பரிமாற்ற சட்டமூலம் இன்று, நாடாளுமன்றில் முன்வைக்கப்பட்ட நிலையில், அது தொடர்பிலான உரையின் போதே, அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள், அந்த நாடுகளில் வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டால், ஏதாவதொரு தண்டனைக் கிடைத்திருக்கும்.

ஆனால் இங்கு கொண்டு வந்ததன் பின்னர், அரசியல்வாதிகளின் செயற்பாடுகள், அவர்களுடைய பணம் என்பவற்றால், அவர்கள் தண்டனையிலிருந்து தப்பித்துக் கொள்கிறார்கள்.

நாம் சட்டத்தை நடைமுறைப்படுத்துவோம். அதற்கு நாம் இணக்கம் தெரிவிக்கின்றோம். ஆனால் சட்டம் உறுதியாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.

அர்ஜூன மஹேந்திரனைக் கைது செய்யாமையினாலேயே, ஐக்கிய தேசியக் கட்சிக்கு வாக்குகள் குறைந்ததாக சரத் அமுனுகம கூறினார்.

எனினும் எங்கள் நாட்டு மக்கள் அவ்வாறு வாக்களிப்பார்களா? என்று நான் சிந்திக்கவில்லை. உதயங்க வீரதுங்க, ஜாலிய விக்ரமசூரிய உள்ளிட்டவர்களைக் கைது செய்து கொண்டு வராமையினால், அவர்களுக்கு எவ்வளவு வாக்குகள் குறைந்திருக்க வேண்டும் எனச் சிந்திக்க வேண்டும் என, நாடாளுமன்ற உறுப்பினர் நளிந்த ஜயதிஸ்ஸ மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Read more...

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் பட்டியலில், கோட்டாபாயவே முன்னிலையில் உள்ளார். - விமல்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் பட்டியலில், முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவே தற்போது முன்னிலை பெற்றுள்ளதாக, நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச கூறியுள்ளார்.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் கோட்டாபய ராஜபக்ஷ போட்டியிடவுள்ளதாக, பல ஊடகங்களில் வெளியாகி வரும் தகவல்கள் குறித்து, இன்று கருத்து வெளியிட்ட போதே, நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச இதனை குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி தேர்தல் நடைபெறுவதற்கு இன்னும் ஒன்பது மாதங்கள் மாத்திரமே எஞ்சியுள்ளன. இந்த நிலையில் பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் குறித்து, பல்வேறு கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

எனினும் பொருத்தமான நேரத்தில் தமது பொது வேட்பாளர் குறித்த அறிவிப்பினை, முன்னாள் ஜனாதிபதியும், தற்போதைய எதிர்க்கட்சி தலைவருமான மஹிந்த ராஜபக்ஷ வெளியிடுவார்.

அத்துடன் இந்த பட்டியலில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவே, தற்போது முன்னிலை பெற்றுள்ளார்.

அதுவே நாட்டு மக்களின் எதிர்பார்ப்பாகவும் காணப்படுகின்றது. அவர் நாட்டுக்காகவும், நாட்டு மக்களுக்காகவும் பல தடவைகளில் அர்ப்பணிப்புடன் செயற்பட்ட ஒருவராவார்.

எனவே எதிரவரும் ஜனாதிபதி தேர்தலில், முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ச, போட்டியிடுவதற்கான வாய்ப்புக்கள் அதிகமாக உள்ளதாக, நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் அடுத்து எந்த தேர்தல் இடம்பெற்றாலும், வெற்றி என்பது எமது தரப்பிற்கே கிடைக்கும் எனவும், அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

Read more...

விரியன் பாம்பு குறித்து, யாழ்ப்பாண பயிர்செய்கையாளர்களுக்கு எச்சரிக்கை.

யாழ்ப்பாணத்தில் தற்போது அறுவடைக் காலம் தொடங்கியுள்ள நிலையில், பல்வேறு வயல்களிலிருந்தும், விரியன் பாம்புகள் மீட்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

வயல் நிலங்களை பெரும்பாலும் தமது விரும்பிய வாழ்விடமாகக் கொண்டுள்ள இந்தப் பாம்புகள் குறித்து, மக்கள் அவதானமாக இருக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

விரியன் இனத்தினைச் சேர்ந்த இவ்வகை பாம்புகள், , மிகவும் விஷம் நிறைந்ததாகும். இரவில் தனது இரைகளைத் தேடி நெளிவதுடன், பகலில் சோம்பேறிபோல் சுருண்டு படுத்திருக்கும் தன்மையினை இவை கொண்டுள்ளன. வயல் அறுவடைக் காலங்களிலும் அறுவடைக் காலத்தின் பின்னரும், பெரும்பாலும் வயலில் தங்குவதையே இந்த பாம்புகள் விரும்புகின்றன. .

அதற்கான காரணம் வயலில் நெற் கதிர்களை வேட்டையாடுவதற்காக வரும் எலிகளையும், சேற்றில் தப்பி வாழும் தவளைகளையும் வேட்டையாடுவதற்காகும்.

இரையைக் கவ்விய பின்னர் தனது பல்லினூடாக கொடிய விஷத்தினை இரையின் உடலினுள் இந்த பாம்புகள் செலுத்துகின்றன. இதனையடுத்து இரை நிலை குலைந்து போய் அசைவற்றுக் காணப்பட்டதும், அந்த இரையை இவை முழுமையாகவே விழுங்கிவிடும்.

இதேவேளை இரவில் நடமாடும் இது போன்ற பாம்புகள் மனிதக் கால்களையும் இரையாக கருதுவதாக அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வொன்றில் கண்டறியப்பட்டுள்ளது. பகலில் பார்வைத் திறன் குறைந்த இவ்வகையான பாம்புகளின் கண்களுக்கு, இரவில் அசையும் உயிருள்ள பொருட்கள் சிவப்பு கலந்த ஒரு நிறமாகத் தெரிவதாகவும், அதனால் மனிதர்களின் பாதங்களையும், இவை இரையாகவே கருதுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வழமையாக விஷப் பாம்புகள் தம்மைத் தீண்டினால் மட்டுமே, திருப்பிக் கொத்தும். ஆனால் இவ்வகையான பாம்புகள் இரையை தேடிச் சென்று தீண்டும் தன்மையுள்ளவை என கருதப்படுகிறது.

இந்த நிலையில், யாழ்ப்பாணம் உள்ளிட்ட தமிழர் தாயகப் பகுதிகளில் வயல் அறுவடைக்காலம் தற்போது தொடங்கியுள்ளதால், இவ்வாறான பாம்புகள் நெற்பயிர்களினிடையே பதுங்கிக் காணப்படும் என்பதுடன், பழுப்பு நிறமாக காணப்படுவதனால், வைக்கோலுக்கும் இதற்கும் இடையில் உள்ள வித்தியாசம் மிக குறைவாகவே காணப்படும்.

இதனால் வயலில் அறுவடை செய்வோர், மிகுந்த அவதானத்துடன் அறுவடை நடவடிக்கையில் ஈடுபட வேண்டும் என, எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Read more...

ஐ.தே.க.வின் தேசிய அரசாங்கத்தை, மைத்திரி- மஹிந்த கூட்டணி, தோற்கடிக்க வேண்டும் - வாசுதேவ.

ஐக்கிய தேசிய கட்சி உருவாக்கவுள்ள தேசிய அரசாங்கத்தை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷவும் இணைந்து தோற்கடிக்க வேண்டுமென, நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே, அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். அவர் தொடர்ந்து கூறியுள்ளதாவது,

ஐக்கிய தேசிய கட்சி, அடுத்து நடைபெறவுள்ள தேர்தலுக்காக, தமது கட்சியினை பலப்படுத்தும் நடவடிக்கையை, தற்போது தீவிரமாக ஆரம்பித்துள்ளது. இதற்காகவே ஐக்கிய தேசிய கட்சி, தேசிய அரசாங்கம் ஒன்றை அமைக்கும் விடயத்தில் அதிக அக்கறையை காட்டுகின்றது.

ஆனால், இதனை இல்லாதொழிக்கும் வகையில், மைத்திரி- மஹிந்த இணைந்த புதிய கூட்டணியை உருவாக்க வேண்டும், நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார, வலியுறுத்தியுள்ளார்.

Read more...

மரண தண்டனை வழங்குவதில், உறுதியாக உள்ளேன் - சற்று முன்னர் ஜனாதிபதி தெரிவிப்பு.

மரண தண்டனை விதிப்பது குறித்து, தமக்கு எவ்வாறான தடைகள் வந்தாலும், மரண தண்டனை விதிப்பது உறுதி என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

சற்று முன்னர் நாடாளுமன்றதிற்கு வருகை தந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நாடாளுமன்றில் வைத்து உரையாற்றும் போதே இதனை கூறியுள்ளார்.

மரண தண்டனை விதிக்கும் செயற்பாடுகளில், மனித உரிமைகள் ஆணைக்குழு ஒருபோதும் தலையிட கூடாது.

பாரிய குற்றம் இழைத்தவர்களுக்கே மரண தண்டனை வழங்கப்படுகின்றது. இந்த நிலையில் குற்றவாளிகளுக்கு மனித உரிமைகள் ஆணைக்குழு, வக்காலத்து வாங்க கூடாது என்று, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வலியுறுத்தினார்.

எமது நாட்டை ஒழுக்கம் உள்ள நாடாக மாற்ற வேண்டும் என்பதே, எனது நோக்கம் என்றும், அவர் கூறியுள்ளார்.

Read more...

பாடசாலை அதிபருக்கு போட்டுப்பிடித்த முஸ்லிம் காங்கிரஸ் பிரமுகருக்கு பிணை.

மருதமுனை சம்ஸ் மத்திய கல்லூரியின் அதிபரை அடித்தார் என்கிற சந்தேகத்தில் ஆஜராக்கப்பட்ட ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் கல்முனை மாநகர சபை உறுப்பினர் ஒருவரை கல்முனை நீதவான் நீதிமன்றம் பிணையில் விடுவித்து உள்ளது.

கல்முனை பொலிஸ் நிலைய பொலிஸார் இவரை கல்முனை பதில் நீதிவான் எம். கே. பேரின்பராசாவின் இல்லத்தில் கடந்த திங்கட்கிழமை ஆஜர்ப்படுத்தினர்

கல்முனை பதில் நீதிவான் பேரின்பராசா தலா ஒரு இலட்சம் ரூபாய் பெறுமதியான இருவரின் சரீர பிணையில் சந்தேக நபரை விடுவித்து வழக்கை எதிர்வரும் 25 ஆம் திகதிக்கு ஒத்தி வைத்தார்.

சந்தேக நபரை ஆதரித்து சட்டத்தரணி ரொஷான் அக்தர் ஆஜரானார்.

பாடசாலை அதிபர் வழங்கிய முறைப்பாட்டை அடுத்தே பொலிஸ் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.


(எஸ்.அஸ்ரப்கான்)

Read more...

பேரறிவாளனின் விடுதலைக்காக, அவரது தாய் தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம்

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 28 ஆண்டுகளாக சிறை தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளனின் விடுதலைக்காக, அவரது தாய் அற்புதம்மாள், பொது மக்களின் ஆதரவு கோரி, தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. .

கடந்த ஜனவரி 24ம் திகதி, இவர் சுற்று பயணத்தை தொடங்கி பல்வேறு கிராமம் மற்றும் நகரங்களுக்குச் சென்றுள்ளார், அத்துடன் கடந்த செப்டம்பர் 2018ல் தமிழக சட்டமன்றம், தனது மகன் பேரறிவாளனின் விடுதலையை உறுதி செய்யும் வகையில், ஆளுநருக்கு பரிந்துரை செய்த போதிலும், ஆளுநர் நடவடிக்கை எடுப்பதில் தாமதம் செய்வது ஏன்? என, அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

பேரறிவாளனின் கருணை மனுவை, தமிழக ஆளுநர் பரிசீலிக்கலாம் என கடந்த ஆண்டு உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. உச்ச நீதிமன்றத்தின் இந்த வழிகாட்டுதலை அடுத்து, தமிழக சட்டமன்றம், ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் உள்ள பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு நபர்களையும் விடுதலை செய்ய முடிவு செய்து, ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துக்கு பரிந்துரை செய்தது.

அந்த பரிந்துரையைத் தொடர்ந்து, கடந்த ஐந்து மாதங்களில் எந்தவித முடிவும் வெளியாகவில்லை. எனினும் இது குறித்து ஆளுநர் தனது முடிவை விரைந்து எடுக்க வேண்டும் என்பதுடன், தனது கோரிக்கைக்கு வலு சேர்க்கும் முகமாக, பொதுமக்களிடம் அற்புதம்மாள், பலத்த ஆதரவை திரட்டி வருகிறார்.

இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள அற்புதம்மாள், அடுத்து எந்த கிராமத்திற்கு போகிறோம் என்ற திட்டம் அவ்வப் போது முடிவு செய்யப்படுகிறது. எவ்வாறாயினும் அனைத்து பகுதிகளுக்கும் பயணம் செய்து மக்களிடம் ஆதரவு திரட்டுவது மட்டுமே, தமது இலக்கு என்று தெரிவித்தார்.

என்னை சந்திக்க பல பெண்கள் வருகிறார்கள். பள்ளியில் இருந்தோ அல்லது வேலைக்குச் செல்லும் இடத்தில் இருந்தோ, மகன் வரத் தாமதமானால், பரிதவித்து போய் விடுவோம், நீங்கள் தைரியத்துடன் போராடி வருகிறீர்கள், உங்களுக்கு ஆதரவு தருவோம் என பல தாய்மார்கள், ஆறுதல் தெரிவித்தனர். அதே போல, சென்னையில் நடக்கவுள்ள கூட்டத்திற்கு வருவதாகவும், உறுதி கூறினார்கள். இது போல பல பெண்களின் ஆதரவு ஒவ்வொரு கூட்டத்திலும் பெருகி வருகிறது, என, பேரறிவாளனின் தாயார் கூறியுள்ளார்.

இவரது சுற்றுப்பயணத்திற்கு பல்வேறு தன்னார்வ அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் ஒத்துழைப்பு வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தான் மக்களை சந்தித்து வாக்கு கேட்கப் போவதில்லை என்பதால், தன்னிடம் பேச மக்கள் உண்மையான ஆர்வத்துடன் வருவதாக அற்புதம்மாள் கூறியுள்ளார்.

இதுவரை கோவை, ஈரோடு, விருதுநகர், ராஜபாளையம், மதுரை, ராமநாதபுரம் உள்ளிட்ட இடங்களில் கூட்டங்களில் இவர் பேசியுள்ளார்.

தன்னார்வலர்கள் வீடுகளில் தங்கிக் கொள்வது, உணவு உண்பது என, தன் மகனின் வயதை ஒத்த நபர்கள் உதவுகிறார்கள் என்று தெரிவித்த அற்புதம்மாள், இந்த மாத இறுதியில் சென்னையில் உள்ள சமூக ஆர்வலர்களிடம் கலந்து பேசி கூட்டத்திற்கான ஏற்பாடுகளை செய்யவுள்ளதாக கூறினார்.

28 ஆண்டுகளாக தன் மகன் சிறையில் இருக்கிறான். அவனது இளமை காலம் முழுவதையும் தண்டனையில் கழித்து விட்டான். உச்ச நீதிமன்றம் அளித்த வழிகாட்டுதலின்படி, என் மகனை விடுதலை செய்வதில் அரசு ஏன் தாமதம் செய்கிறது?

இதனை விளக்கி கூட்டத்தில் பேசும் போது, பலரும் என் வலியை புரிந்து கொண்டு எனக்கு ஆதரவு தருகிறார்கள். பொதுமக்கள் தாமாக முன்வந்து என் பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும் என முடிவு செய்வது, எனக்கு நம்பிக்கையை கொடுக்கிறது என அவர் கூறினார்.

இதேவேளை அற்புதம்மாளின் குற்றச்சாட்டுகள் குறித்து சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் கருத்து வெளியிடும் போது, தமிழக அரசு பரிந்துரை மட்டுமே செய்ய முடியும் என்றும், ஆளுநரை கட்டாயப்படுத்த முடியாது கூறினார்.

ராஜீவ் காந்தி கொலை வழக்கின் விசாரணையை, மாநில அரசு கையாளவில்லை. இந்த வழக்கில் இறுதி முடிவு எடுக்கும் அதிகாரம் எங்களிடம் இல்லை என, சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் கூறியுள்ளார்.

Read more...

மக்களின் நிதியை வீண் விரயமாக்குவதற்கே, பிரதமர் ரணில் பாடுபடுகிறார் போலும் - அனுர குமார திஸாநாயக்க.

மக்களின் நிதியை வீண் விரயமாக்குவதற்கே, பிரதமர் ரணில் விக்ரமசிங்க நடவடிக்கை எடுத்து வருவதாக, மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான அனுர குமார திஸாநாயக்க குற்றம் சுமத்தியுள்ளார். எப்படியாவது அமைச்சரவையின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு பிரதமர் பாடுபட்டு வருகின்றார்.

அத்துடன் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தேசிய அரசாங்கத்துடன் இணையப் போவதாக ஐக்கிய தேசியக் கட்சியினர் கூறியதாகவும், எனினும், அந்த கட்சி,தற்போது அரசாங்கத்துடனேயே இணைந்து கொண்டிருப்பதாகவும், மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க குற்றம் சுமத்தியுள்ளார். இன்று இடம்பெற்ற கட்சி தலைவர்கள் கூட்டத்தில் வைத்து அவர் இதனை கூறினார்.

அத்துடன் தேசிய அரசாங்கமொன்றை ஸ்தாபித்து அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது தொடர்பான பிரேரணை மீதான விவாதத்தை, ஏனைய கட்சிகளின் கருத்தை பொருட்படுத்தாது முன்னெடுக்க, ஐக்கிய தேசியக் கட்சி தீர்மானித்துள்ளதாகவும் அவர் கூறினார்.

இதேவேளை தேசிய அரசாங்கம் தொடர்பான யோசனையை விவாதத்திற்கு எடுத்துக் கொள்ள கட்சித் தலைவர்கள் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று கூடிய கட்சித் தலைவர்களின் கூட்டத்தின் போதே, இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில், இன்று பிற்பகல், நாடாளுமன்ற கட்டிட தொகுதியில் வைத்து, இந்த கட்சித் தலைவர்கள் கூட்டம் இடம்பெற்றது.

Read more...

கேப்பாபிலவு பிரச்சினையை அரச சார்பற்ற நிறுவனங்கள் பூதாகாரமாக்கி வருகின்றன - சுரேன் ராகவன்.

முல்லைத்தீவு - கேப்பாபிலவு மக்களின் பிரச்சினையை, சில அரச சார்பற்ற நிறுவனங்கள் பூதாகாரமாக்கி வருவதாகவும், அதன் காரணமாகவே சரியான தீர்வு காண முடியாமல் போவதாகவும், வட மாகாண ஆளுநர், கலாநிதி சுரேன் ராகவன் குற்றம் சுமத்தியுள்ளார்.

வடக்கில் சுமார் பன்னிரெண்டு இலட்சம் மக்கள் வாழ்ந்து வருகின்ற போதிலும், ஊடகங்களும், அரச சார்பற்ற நிறுவனங்களும், வெறுமனே 56 பேரின் பிரச்சினையை ஊதிப் பெரிதாக்கி, அதனைப் பிரச்சாரம் செய்து வருவதாக வட மாகாண ஆளுநர் குற்றம் சுமத்தியுள்ளார்.

மொத்தமாக 8600 சதுர கிலோ மீற்றர் பரப்பினைக் கொண்ட வடக்கில், 934 கிராம சேவைப் பிரிவுகள் உண்டு. அத்துடன் வடக்கில் 3885 கிராமங்கள் இருக்கின்ற போதிலும், கேப்பாபுலவு கிராமம் பற்றி மட்டுமே பேசப்படுகின்றன. கேப்பாபிலவு பிரச்சினையின் பின்னணியில், தெளிவான ஓர் அரசியல் நடவடிக்கை உள்ளது. அதன் காரணமாக இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண முடியவில்லை எனவும், அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.

இந்தக் கிராமத்திற்கு இரண்டு கிலோ மீற்றர் தொலைவில் காணிகள் வழங்குவதற்கு இணங்கப்பட்ட போதிலும், இந்த கிராமத்தில் உள்ள மக்கள் அதனை நிராகரித்துள்ளனர்.

குறித்த பகுதி, இராணுவ தந்திரோபாய ரீதியில் முக்கியமான ஓர் தளம் என்று இராணுவம் கூறி வருவதாகவும், அது பற்றி வாதிடுவதற்கு தாம் இராணுவப் படைவீரன் கிடையாது எனவும், சுரேன் ராகவன் குறிப்பிட்டுள்ளார்.

கேப்பாபிலவு மக்கள் வேறு ஒரு மாற்று யோசனைத் திட்டத்தை முன்மொழிய வேண்டியது இன்றியமையாததாகும். குறித்த பகுதி தமக்கு தேவையானது என, இராணுவம் கூறினால் அதற்கு எவராலும் சவால் விடுக்க முடியாது.

சரியான தீர்வுத் திட்டமொன்றை நோக்கி நகரும் போது, காணி உரிமையாளர்கள், வெறுமனே கோரிக்கைகளை முன்வைத்து வருவதனால் தீர்வு எட்டுவதில், பல சிரமங்கள் நிலவி வருவதாக வடமாகாண ஆளுனர் சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார்.

இதேவேளை கேப்பாப்பிலவு மக்களின், ''எமது நிலம் எமக்கு வேண்டும்'' என்ற தொடர் போராட்டம், கடந்த 706 நாட்களாக நடைபெற்று வருகின்றது. சுமார் 110 குடும்பங்களைச் சேர்ந்தவர்களின் 171 ஏக்கர் பாரம்பரிய நிலப்பரப்பு, இராணுவத்தால் கையகப்படுத்தப்பட்டுள்ள நிலையில் அந்த மக்கள், தமது பூர்வீக நிலங்களை மீட்க தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Read more...

பெருந்தோட்ட தொழிலாளர்களின், சம்பள உயர்வு தொடர்பான தீர்க்கமான பேச்சுவார்த்தை இன்று.

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு குறித்த தீர்க்கமான பேச்சுவார்த்தை ஒன்று, இன்று இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பேச்சுவார்த்தை தமிழ் முற்போக்கு கூட்டணிக்கும், தொழிலாளர் சம்மேளனத்துக்கும் இடையில் இன்று நடைபெறவுள்ளது.

இன்றைய பேச்சுவார்த்தையின் போது பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பளம் தொடர்பில், தீர்க்கமான பல முடிவுகள் எட்டப்படுமென, தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும், அமைச்சருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

மேலும் சம்பள விவகாரம் தொடர்பில் முதலாளிமார் சம்மேளனத்திடம், அரசாங்கத் தரப்புடன் இணைந்து, தமிழ் முற்போக்கு கூட்டணி பேச்சுவார்த்தை நடத்த முயன்ற போதும் அது கைகூடவில்லை எனவும், அமைச்சர் மனோ கணேசன்குறிப்பிட்டுள்ளார்.

இந்த பேச்சுவார்த்தையில் அமைச்சர்களான நவீன் திசாநாயக்க மற்றும் ரவீந்திர சமரவீர ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பாக செய்து கொள்ளப்பட்ட புதிய கூட்டு ஒப்பந்தத்தை வர்த்தமானிப்படுத்தல், தொடர்ந்தும் இடைநிறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read more...

யாழ் மாணவர்களின் கொலை குற்ற விசாரணைகள் ஒத்திவைப்பு

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர், துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கின் விசாரணைகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கின் மனு மீதான விசாரணைகள், யாழ்ப்பாண நீதவான் அந்தோனி சாமி பீற்றர் போல் முன்னிலையில், விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது குறித்த வழக்கு விசாரணையின் போது, சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் இருவர், நீதிமன்றத்தில் முன்னிலையாகினர்.

அதே போன்று குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளும், வழக்குத் தொடுனர் தரப்பில், அரச சட்டத்தரணியும் முன்னிலையாகியிருந்தனர்.

இதன்போது, கொல்லப்பட்ட மாணவர்களின் நண்பர்கள் உள்ளிட்டவர்களிடம் வாக்குமூலம் பெறப்பட்டதை தொடர்ந்து, வழக்கு விசாரணைகளை எதிர்வரும் 27 ஆம் திகதி வரை, நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் கல்வி கற்றுவந்த மாணவர்களான விஜயகுமார் சுலக்சன், நடராஜா கஜன் ஆகியோர், கொக்குவில் பகுதியில் வைத்து, கடந்த 2016 ஆம் ஆண்டு ஒக்டோபர் 20 ஆம் திகதி, பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டனர்.

இந்த சம்பவம் குறித்து, யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் பணியாற்றிய தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர் உட்பட 5 பொலிஸார் கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.

ஆனால் 11 மாதங்கள் கடந்து, அவர்களை யாழ்ப்பாண மேல் நீதிமன்றம் பிணையில் விடுவித்தது. பின்னர் அந்த காவல்துறையினர், பொலிஸ் சேவையிலும் மீள இணைத்துக் கொள்ளப்பட்டனர்.

அத்துடன் வழக்கில் சந்தேக நபர்களாக குறிப்பிடப்பட்டிருந்த ஐவரில், இரண்டாவது சந்தேக நபரான ஏக்கநாயக்க முதியான்சலாகே ஜயவர்த்தன, நான்காவது சந்தேகநபரான தங்கராஜன் லங்காமனன், ஐந்தாவது சந்தேகநபரான கமல விதானகே நவரத்ன பண்டார ஆகியோர் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டு, அரச சாட்சிகளாக மாற்றப்பட்டனர்.

அதேபோன்ற கடமைக்கு பொறுப்பாக இருந்த முதலாவது சந்தேகநபரான சரத் பண்டார திசாநாயக்க மற்றும் துப்பாக்கி சூடு நடத்தியவரான மூன்றாவது சந்தேக நபரான சமர ஆராய்சிலாகே சந்தன குமார ஆகிய இருவருக்கும் எதிராக, இலங்கை குற்றவியல் நடைமுறை சட்டக்கோவையின் 296 ஆம் பிரிவின் கீழான கொலைக் குற்றச்சாட்டின் கீழ், குற்ற பத்திரத்தை, குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றில் தாக்கல் செய்திருந்தனர்.

தாக்கல் செய்யப்பட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவினரின் அறிக்கையை ஏற்றுக் கொண்ட யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றம், விசாரணைகளைத் துரிதப்படுத்துமாறு உத்தரவிட்டது.

அதனடிப்படையில் இந்த வழக்கு, விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Read more...

மாகந்துரே மதூஸ் கைதானமை, இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை - அரசாங்கம்!

பாதாள உலக குழுத் தலைவர் மாகந்துரே மதூஸ் உள்ளிட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளமையினை, டுபாய் அரசாங்கம் இதுவரையில் உத்தியோகப்பூர்வமாக தமக்கு அறிவிக்கவில்லை என, அரசாங்கம் தெரிவித்துள்ளது.

மாகந்துரே மதூஸ் உள்ளிட்ட 25 பேர் டுபாயில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக, தகவல் வெளியாகியுள்ளமை குறித்து, பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜயவர்தன கருத்து வெளியிடும் போது, இதனை கூறினார்.

இந்த சம்பவம் குறித்து தற்போது டுபாய் அரசாங்கத்துடன், இராஜதந்திர ரீதியிலான பேச்சுவார்த்தைககள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த இராஜதந்திர ரீதியிலான பேச்சுவார்த்தைககள் வெற்றியளிக்கும் பட்சத்தில், டுபாயில் கைது செய்யப்பட்டுள்ள பாதாள உலக குழுத் தலைவர் மாகந்துரே மதூஸ் உள்ளிட்டவர்களை, விரைவில் இலங்கைக்கு அழைத்து வர முடியும் எனவும், இராஜாங்க அமைச்சர் ருவான் விஜயவர்தன நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

போதைப் பொருள் வர்த்தகம், கொலை,கொள்ளை உள்ளிட்ட நாட்டில் இடம்பெற்ற பல்வேறுப்பட்ட குற்றச் செயல்களுடன் தொடர்புடைய பாதாள உலக குழு தலைவர் மாகந்துரே மதூஸ் உள்ளிட்ட 25 பேர் , டுபாயிலுள்ள ஆறு நட்சத்திர விடுதி ஒன்றில் வைத்து, நேற்று கைது செய்யப்பட்டதாக செய்திகள் வெளிவந்தன.

இவ்வாறு கைதானவர்களில் இலங்கை பாடகர் அமல் பெரேரா மற்றும் அவரது புதல்வர் நதீமால் பெரேரா ஆகியோரும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தவிர, பாதாள உலக குழு உறுப்பினர்களான கெசல்வத்தே தினுக, கஞ்ஜிபானி இம்ரான், ரனாலே சூட்டா மற்றும் அங்கொட சுத்தா ஆகியோரும் உள்ளங்குவதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

இதேவேளை கைது செய்யப்பட்டவர்களின் ராஜதந்திர கடவுசீட்டுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதாள உலக குழுவினர் தங்கியிருந்த விருந்தகத்தில், விருந்துபசாரம் வழங்கப்பட்ட போது, ஒருவர் ராஜதந்திர கடவுசீட்டை வைத்திருந்ததாக விடுதி நிர்வாகம், டுபாய் காவல்துறையினருக்கு தகவல் வழங்கியது.

இதன்போதே, கைது செய்யப்பட்டவர்களில், ஒருவரிடம் இந்த ராஜதந்திர கடவுசீட்டு உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

Read more...

யுத்தகாலத்தில் ஏதிலிகளாக சென்ற 16 குடும்பங்கள், தாய்நாட்டிற்கு வருகை.

இலங்கையில் இடம்பெற்ற யுத்தத்தின் போது, இந்தியாவின் தமிழ்நாட்டிற்கு ஏதிலிகளாக சென்றவர்களில், 16 குடும்பங்கள் எதிர்வரும் 14 ஆம் திகதி நாடு திரும்பவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வடக்கு மாகாண அபிவிருத்தி, தொழிற்பயிற்சி திறன்கள் அபிவிருத்தி மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் செயலாளர் வே.சிவஞானசோதி இதனை தெரிவித்துள்ளார்.

குறித்த 16 குடும்பங்களைச் சேர்ந்த 34 பேரும் தங்களது சொந்த விருப்பின் பேரில், எயார் லங்காவின் இரு விமானங்களின் ஊடாக இலங்கைக்கு வருகை தரவுள்ளதாக, வே.சிவஞானசோதி குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறு தாய்நாட்டிற்கு வரும் குடும்பங்கள், யாழ்ப்பாணம், மன்னார், வவுனியா, முல்லைத்தீவு மற்றும் திருகோணமலை ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்களெனவும், இதில் 15 ஆண்களும் 19 பெண்களும் உள்ளடங்குவதாகவும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.

அத்துடன் இவர்களுக்கு இலவச பயணசீட்டும், ஒன்றிணைத்தல் மானிய கொடுப்பனவாக வயது வந்தவர்களுக்கு 10,000 ரூபாயும், வயது குறைந்தவர்களுக்கு 5,000 ரூபாயும், போக்குவரத்து கொடுப்பனவாக 2,500 ரூபாயும், உணவு அல்லாத மானிய கொடுப்பனவாக தனி நபருக்கு 5,000 ரூபாயும், குடும்பத்துக்கு 10,000 ரூபாயும், அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் உயர்ஸ்தானிக அலுவலகத்தினால் வழங்கப்படவுள்ளதாக, வடக்கு மாகாண அபிவிருத்தி, தொழிற்பயிற்சி திறன்கள் அபிவிருத்தி மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் செயலாளர் வே.சிவஞானசோதி இதனை தெரிவித்தார்.

Read more...

கல்லூரியில் அதிகாரிகள் மது அருந்தியதற்கு எதிராக ஸ்ரீபாத கல்வியற் கல்லூரியின் ஆசிரிய மாணவர்கள் ஆர்ப்பாட்டம்.

பத்தனை ஸ்ரீபாத தேசிய கல்வியற் கல்லூரியின் ஆசிரியர் பயிற்சி பெறும் மாணவர்கள், இன்றைய தினம் ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.

பத்தனை தேசிய கல்வியற் கல்லூரி சமையல் அறையில் சமைக்கப்படும் உணவு, சுத்தமாக சமைக்கப்படாதமையால், அந்த கல்லூரியின் சமையல் அறைக்கு, நேற்றைய தினம் பொது சுகாதார பரிசோதகர்கள் திடீர் விஜயம் மேற்கொண்டு, சமையல் அறையை மேற்பார்வை செய்தனர். இதனை அடுத்து ஸ்ரீபாத தேசிய கல்வியற் கல்லூரியின் சமையல் அறைக்கு சீல் வைக்கப்பட்டது.

இதனால் மாணவர்கள், தங்களுக்கான உணவை பெற்றுக் கொள்வதில் சிக்கல்களை எதிர்நோக்கியுள்ள நிலையில், இந்த ஆர்ப்பாட்டம் இன்று நடத்தப்பட்டுள்ளது.

தங்களுக்கு வழங்கப்படுகின்ற உணவு சுத்தமாக வழங்கப்பட வேண்டுமெனவும், கல்லூரியில் இருந்த அதிகாரிகள் மதுபானம் அருந்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதன்போது, கல்லூரியின் பீடாதிபதி, இந்த பிரச்சனைக்கு உரிய நடவடிக்கையினை மேற்கொள்ள வேண்டும் என, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கல்லூரி மாணவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து பத்தனை தேசிய கல்வியற் கல்லூரியின் பீடாதிபதி ரமனி அபேநாயக்க கருத்து வெளியிடும் போது, இந்த விவகாரத்தில் தாம் தன்னிச்சையான தீர்மானம் எதனையும் மேற்கொள்ள முடியாது என கூறியுள்ளார். இது குறித்து விடயத்திற்கு பொறுப்பான உயர் அதிகாரிகளின் ஊடாகவே, நடவடிக்கை எடுக்க முடியும் என, பத்தனை தேசிய ஸ்ரீபாத கல்வியற் கல்லூரியின் பீடாதிபதி ரமனி அபேநாயக்க குறிப்பிட்டுள்ளார்.












Read more...

மாகந்துரே மதூஷ் உள்ளிட்ட 25 பேர் தொடர்பில், பாதுகாப்பு மற்றும் வௌிவிவகார அமைச்சுடன் இணைந்து விசாரணைகள்.

மாகந்துரே மதூஷ் உள்ளிட்ட 25 பேர் தொடர்பில், பாதுகாப்பு மற்றும் வௌிவிவகார அமைச்சுடன் இணைந்து விசாரணைகளை முன்னெடுக்கத் தீர்மானம்

கைது செய்யப்பட்ட பிரபல போதைப்பொருள் கடத்தல்காரரும் பாதாள உலக கோஷ்டித் தலைவருமான மாகந்துரே மதூஷ் உள்ளிட்ட 25 பேர் தொடர்பில், மேலதிக விசாரணைகளை பாதுகாப்பு அமைச்சு மற்றும் வௌிவிவகார அமைச்சுடன் இணைந்து முன்னெடுக்கவுள்ளதாக பொலிஸார் கூறுகின்றனர்.

டுபாயிலுள்ள பிரபல நட்சத்திர விடுதியில் நடைபெற்ற மாகதுரே மதூஷின் பிள்ளையின் பிறந்தநாள் வைபவத்தில் சுமார் 25 பேர் வரை கைதாகியுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் 5 பேர், போதைப்பொருள் கடத்தல்காரர்கள் என்று கூறப்படுகின்றது. இவர்களில் 4 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இவர்களில் கஞ்சி பானை இம்றான், கெசல்வத்தே தினுக்க உள்ளிட்டவர்களும் கைதாகியுள்ளனர். இலங்கையின் பிரபல பாடகர் அமல் பெரேரா, மற்றும் அவருடைய மகன் போன்றோரும், நடிகர் ஒருவரும் இவர்களுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


Read more...

மன்னாரில் மீட்கப்பட்ட உலோகத் துண்டுகளையும் ஆய்வு செய்ய நடவடிக்கை

மன்னார் சதொச கட்டட வளாகத்திலுள்ள மனித எச்சங்களுடன் மீட்கப்பட்ட உலோகத் துண்டுகளையும், எதிர்வரும் காலங்களில் அரச இரசாயனப் பகுப்பாய்வாளருக்கு அனுப்பவுள்ளதாக, அகழ்வுப் பணிகளுக்கு பொறுப்பான சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

நேற்றுவரை 138 ஆவது நாளாக முன்னெடுக்கப்பட்ட அகழ்வுகளின் மூலம் இதுவரை 312 மனித எழும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவற்றில், 297 எழும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளதுடன், அவற்றில் 26 எழும்புக்கூடுகள் சிறுவர்களுடையது என்று கண்டறியப்பட்டுள்ளது.

இந்த நிலையில், அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்திலுள்ள பீட்டா நிறுவனத்தில் காபன் பரிசோதனைக்காக ஒப்படைக்கப்பட்டுள்ள மனித மாதிரிகள் தொடர்பான அறிக்கை, இந்த வாரத்திற்குள் கிடைக்கப்பெறும் எனவும் சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ஸ குறிப்பிட்டுள்ளார்

Read more...

கடவுச்சீட்டுக்களை (Passport ) பெற்றுக்கொள்ள, கொழும்பிற்கு செல்லும் அவசியம் இனி இல்லை

கடவுச்சீட்டுக்களை எதிர்வரும் ஜூன் மாதம் முதல், மாவட்ட செயலகங்கள் ஊடாக வழங்கும் நடவடிக்கைகள் நடைமுறைப்படுத்தப்படுமென குடிவரவு, குடியகல்வு திணைக்களம் அறிவித்துள்ளது.

அசௌகரியங்களைத் தவிர்க்கும் நோக்குடன் மாவட்ட மட்டத்தில் குடிவரவு, குடியகல்வு திணைக்கள கிளைக் காரியாலயங்களை அமைத்து, ஒன்லைன் மூலமாக கொழும்பில் உள்ள தலைமை காரியாலயத்திற்கு விண்ணப்பங்களை அனுப்பி வைப்பதன் மூலம், கடவுச்சீட்டுக்களை பெற்றுக்கொள்ள முடியும் என்று திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

இதுபோன்றே, தேசிய அடையாள அட்டைகளை பிரதேச செயலகங்கள் மூலமாக வழங்கும் நடவடிக்கைகள் நடைமுறைப்படுத்தப்படுவதாக ஆட்பதிவு திணைக்கள ஆணையாளர் நாயகம் அறிவித்துள்ளார். சுமார் 331 பிரதேச செயலகங்களில் அமைக்கப்பட்டுள்ள ஆட்பதிவு திணைக்கள கிளைக் காரியாலயங்களில் ஒப்படைக்கப்படும் விண்ணப்பங்கள், ஒன்லைன் மூலமாக கொழும்பில் உள்ள தலைமைக் காரியாலயத்திற்கு அனுப்பி வைக்கப்படுகின்றன.

தேசிய அடையாள அட்டைகளைப் பெறுவதற்காக கொழும்பிற்கு செல்லவேண்டிய சிரமத்தை தவிர்க்கும் நோக்கிலேயே, இந்த வேலைத்திட்டத்தை ஆட்பதிவுத் திணைக்களம் முன்னெடுக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Read more...

புதிதாக உருவாகும் தேசிய அரசாங்கம் சட்டவிரோதமானது - தயாசிறி ஜயசேகர

தமது சுயநலத்திற்காகவே தேசிய அரசாங்கத்தை அமைக்க ஐ.தே.கட்சி விருப்பம் தெரிவித்துள்ளதாக ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார். நேற்று நடைபெற்ற ஸ்ரீ.சு.கட்சியின் ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கையில் அவர் இவ்வாறு கூறினார்.

புதிய தேசிய அரசாங்கம் தோற்றம் பெறுமாக இருந்தால் அமைச்சர்களின் எண்ணிக்கை 45 ஆக அதிகரிக்கும். அதிகரிக்கப்படும் அமைச்சர்களுக்கும் சம்பளம், வாகனம் மற்றும் சலுகைகள் என்பனவற்றை வழங்க நேரிடும்போது, மக்களுக்கு சுமையாக அமையும்.

முஸ்லிம் காங்கிரஸ், ஐக்கிய தேசிய முன்னணியின் பங்காளிக் கட்சி என்ற அடிப்படையில் தோற்றம் பெறும் தேசிய அரசாங்கம் செல்லுபடியற்றதாகும். புதிதாக உருவாகும் தேசிய அரசாங்கம் சட்டவிரோதமானது. அதை ஒரு போலியான நடவடிக்கை என்றே நாம் பார்க்கின்றோம். எனவே இதனை அங்கீகரிக்க முடியாது. நாடாளுமன்றத்தில் இதைத் தோற்கடிப்பது குறித்து எமது கட்சி உறுப்பினர்களிடையே கலந்துரையாடி வருகின்றோம் என்று, தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.

Read more...

பால்மாவில் பன்றிக் கொழுப்பு - அமளி துமளிப்பட்ட நாடாளுமன்றம்

வெளி நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பால்மாவில் பன்றிக் கொழுப்பு, மரக்கறி எண்ணெய்யை மற்றும் லக்டோ கலந்துள்ளதாக பிரதி அமைச்சர் புத்திக்க பத்திரன நேற்றைய நாடாளுமன்றத்தில் கூறிய கருத்தால், சபையில் கடும் வாதப் பிரதிவாதங்கள் நடைபெற்றன.

பிரதி அமைச்சர் இவ்வாறு தெரிவிக்க, இத்தனை காலமாக பன்றி கொழுப்பையா பிள்ளைகளுக்கு கொடுக்கின்றோம்? என
எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினார்கள்.

குறித்த விடயம் முஸ்லிம் மக்கள் மத்தியில் பாரிய குழப்பத்தை ஏற்படுத்தும் என்று ஆளும் தரப்பின் முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் சுட்டிக்காட்டினார். எனினும் இது உண்மையென, விடயத்துக்கு பொறுப்பான முன்னாள் அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்சா ஆதரவாக பேசினார்.

நாடாளுமன்றத்தில் வாய்மூல விடைக்கான நேரத்தில், மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் கருத்து தெரிவித்த போது, நாட்டில் பால் மா தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் தேசிய பால் மா உற்பத்தியின் வரியை குறைத்தாவது இந்த தட்டுப்பாட்டுக்கு தீர்வு காண நடவடிக்கையெடுக்கப்படுமா? என கேள்வியெழுப்பினார்.

இதன்போது குறுக்கிட்ட புத்தக்க பத்திரன, வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பால்மாவில் பன்றிக் கொழுப்பு, மரக்கறி எண்ணெய்யை மற்றும் லக்டோ கலந்துள்ளதாக தெரிவித்தார்.

பால் மா விலை அதிகரிப்பு குறித்து பால்மா நிறுவனங்கள் அடிக்கடி கோரிக்கை முன்வைத்து வருகின்றன.

பால் மா நிறுவனமொன்றின் உயர் அதிகாரியொருவர் விடயத்திற்கு பொறுப்பான அமைச்சரை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு அது தொடர்பான கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

எவ்வாறாயினும் தாம் இதுவரையில் பால்மா விலை அதிகரிப்பு குறித்து எந்தத் தீர்மானமும் எடுக்கவில்லை என்றும், வாழ்க்கைச் செலவு தொடர்பான குழு அடுத்த வாரம் கூடவுள்ள நிலையில், இந்த குழு பால்மா விவகாரம் தொடர்பில் ஆழமான தீர்மானத்தை எடுக்கும் எனவும் குறிப்பிட்டார்.

Read more...

எந்தத் தடைகள் வந்தாலும் மாற்றங்களை முன்னெடுக்க முடியும் - கல்வி அமைச்சர்

எவ்வாறான தடைகள் வந்தாலும் வேகமாக மாறிவரும் நவீன உலகத்திற்கு ஏற்ற வகையில், கல்வி கட்டமைப்பை மாற்றி மாணவர்களுக்கு இதன் இலாபங்களைப் பெற்றுக்கொடுப்பதற்காக, கடந்த தேசிய அரசாங்கத்தின் அமைச்சரவையில் யோசனைகள் முன்வைக்கப்பட்டன. ஆனால், கல்வியில் மாற்றத்தை கொண்டு வந்தபோது தடைகள் ஏற்படுத்தப்பட்டன என்று கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரயவசம் தெரிவித்துள்ளார்.

குளியாப்பிட்டியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்​கொண்டு கருத்துத் தெரிவித்தப்போதே அவர் இவ்வாறு ​தெரிவித்த்திருந்தார்.

கடந்த காலத்தில் இதனை சிலர் தடுப்பதற்கு திட்டமிட்டதால் அவற்றை செயற்படுத்த முடியாமல் போனது. அத்துடன் நாட்டின் அபிவிருத்திக்காக முன்​வைக்கப்பட்ட திட்டங்களும் உரிய முறையில் முன்னெடுப்பதற்கு குறித்த நபர்கள் தடையை ஏற்படுத்தியதாகவும், இதனால் எதிர்பார்த்த அபிவிருத்தியை முன்னெடுக்க முடியாமல் பின்னடைவை சந்தித்தாகவும் அமைச்சர் இதன்போது தெரிவித்துள்ளார்.

எப்படி இருப்பினும், எவ்வித தடைகள் ஏற்படுத்தப்படினும் கல்வித் துறையில் மாற்றங்களை முன்னெடுக்க முடியும் எனவும் கல்வி கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரயவசம் நம்பிக்கை வெளியிட்டார்.

Read more...

2019 ம் ஆண்டுக்கான பாதீட்டு சட்டமூலம் சமர்ப்பிப்பு - பாதுகாப்பு அமைச்சுக்கு அதிக நிதி ஒதுக்கீடு

நடப்பாண்டுக்கான பாதீட்டு ஒதுக்கீட்டு சட்ட மூலம் நேற்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. சபை முதல்வர் லக்ஷ்மன் கிரியெல்லவினால் சமர்பிக்கப்பட்ட சட்ட மூலத்தில் மொத்த செலவீனமாக 4550 பில்லியன் ரூபாய்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

2200 பில்லியன் ரூபா, மீள கடன் மற்றும் வட்டி செலுத்துவதற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அரச துறை மறுசீரமைப்பு செலவிற்காக 838 பில்லியன்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

இவைதவிர, பிரதமர் அலுவலகத்திற்காக 2 பில்லியன் ரூபாவும் பிரதமருக்கு கீழ் இயங்கும் அமைச்சுக்களுக்காக 98 பில்லியன் ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்த வருடமும் பாதுகாப்பு அமைச்சுக்கு அதிக பணம், ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பாதுகாப்பு அமைச்சுக்காக 393 பில்லியன்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இவற்றோடு சுகாதார அமைச்சுக்கு 187 பில்லியன் ரூபாவும், கல்வி அமைச்சுக்காக 105 பில்லியன் ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ளது.


Read more...

கலைக்கப்பட்டது மத்திய மாகாண அரச சேவைகள் ஆணைக்குழு

ஆட்சேர்ப்பு நடைமுறையில் நியாயமற்ற தன்மை காரணமாக மத்திய மாகாண அரச சேவைகள் ஆணைக்குழு கலைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கபடுகின்றது.

மத்திய மாகாண அரச சேவைகள் ஆணைக்குழு மத்திய மாகாண ஆளுநர் மைத்திரி குணரத்னவினால் கலைக்கப்பட்டுள்ளது. ஆட்சேர்ப்பு நடைமுறையில் நியாயமற்ற தன்மை மற்றும் அதிகாரிகளினால் மேற்கொள்ளப்படும் அழுத்தம் காரணமாக மத்திய மாகாண அரச சேவைகள் ஆணைக்குழு கலைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read more...
Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com