Wednesday, February 6, 2019

இன்றும், இடியும் மழையுமான காலநிலை - கடற்றொழிலாளர்கள் அவதானம் - வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்த எச்சரிக்கை

இன்று கிழக்கு, ஊவா, மற்றும் வடமத்திய மத்திய மாகாணங்களில் அவ்வப்போது மழை பெய்வதுடன், ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 MMக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

காங்கேசந்துறையிலிருந்து திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் பல இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும். நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகளில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது வடகிழக்கு திசையிலிருந்து வீசக்கூடுவதுடன் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 30-40 கிலோ மீற்றர் வரை காணப்படும். மன்னாரிலிருந்து புத்தளம் ஊடாக கொழும்பு வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளிலும் ஹம்பாந்தோட்டையிலிருந்து பொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளிலும் காற்றானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 45-50 கிலோ மீற்றர் வரை அதிகரித்து வீசக்கூடுவதுடன் அவ்வேளைகளில் கடல் கொந்தளிப்பாகவும் காணப்படும்.

இடியுடன் கூடிய மழை பெய்யும் நேரங்களில் கடற்பகுதிகளில் அவ்வப்போது பலமான காற்று வீசுவதுடன் அக்கடற்பிரதேசங்கள் கொந்தளிப்பாகவும் காணப்படும்.

Read more...

கிரலாகல தூபி மீதேறி நிழற்படம் எடுத்தமை தொடர்பான வழக்கு முடிவுற்றது

கிரலாகல தூபி மீதேறி நிழற்படம் எடுத்தமை தொடர்பில் கைது செய்யப்பட்டிருந்த 8 பல்கலைக்கழக மாணவர்களும், தண்டப் பணம் விதித்து விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்தில் இறுதி வருடத்தில் கல்வி பயிலும் மாணவர்கள் எண்மரும், கெப்பித்திகொல்லாவ நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டனர். இவர்கள் மீது மூன்று குற்றச்சாட்டுகள் தொடர்பில் ஹொரவப்பொத்தான பொலிஸார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருந்தனர்.

இதில் இரண்டு குற்றச்சாட்டுகளுக்கு 1000 ரூபா அடிப்படையில் அரசாங்கத்திற்கு தண்டப் பணம் செலுத்தவேண்டிய அதேநேரம், ஏனைய குற்றச்சாட்டுகளுக்காக தலா 50,000 ரூபா தண்டப்பணம் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

Read more...

தேசிய அரசாங்கம் அமைப்பதற்கு நாம் ஆதரவு வழங்கப் போவதில்லை - TNA, எதிராக வாக்களிப்போம் - ஐ.ம.சு. கூ

தேசிய அரசாங்கம் அமைப்பதற்கு தாம் ஒரு போதும் ஆதரவு வழங்கப் போவதில்லையென தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தின் தேசிய அரசாங்கம் தொடர்பான பிரேரணை குறித்து கருத்துத் தெரிவிக்கையில் அவர் தமது நிலைப்பாட்டை இவ்வாறு தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் பெரிய கட்சியொன்றுடன் தேசிய அரசாங்கம் அமைத்து, அதன் மூலம் நாடாளுமன்றத்தில் பலத்தை ஸ்தீரப்படுத்த நடவடிக்கை எடுக்குமாக இருந்தால், அதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவை வழங்க, நாம் பின்னிற்க மாட்டோம் எனவும் அவர் இதன்போது குறிப்பிட்டார்.

இதனிடையே, ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய அரசாங்கம் தொடர்பான பிரேரணைக்கு எதிராக வாக்களிப்பதற்கு, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழு நேற்று ஏகமனதாக தீர்மானித்துள்ளது. எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஸ தலைமையில், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. இதன்போதே தேசிய அரசாங்கம் தொடர்பான பிரேரணைக்கு தாம் எதிராக வாக்களிக்கவுள்ளதாக அவர்கள் அறிவித்துள்ளனர்.

இதேவேளை சபை முதல்வர் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தேசிய அரசாங்கமொன்றை உருவாக்கி அமைச்சுப் பதவிகளை அதிகரிப்பதற்கான பாராளுமன்ற அனுமதியை பெற்றுக்கொள்ளும் பிரேரணையை, சபநாயகரிடம் அண்மையில் கையளித்தார். இந்த பிரேரணை தொடர்பான கலந்துரையாடல் நாளை நாடாளுமன்றத்தில் இடம்பெறவுள்ளதாகவும் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல குறிப்பிட்டுள்ளார்.


Read more...

புதிய கூட்டு ஒப்பந்தத்தை வர்த்தமானிப்படுத்துதலில் தொடர்ந்தும் இழுபறி

புதிய கூட்டு ஒப்பந்தத்தை வர்த்தமானிப்படுத்துதலில் தொடர்ந்தும் தாமதம் நிலவுகின்றது.

அத்துடன் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பாக முன்னெடுக்கப்படவிருந்த பேச்சுவார்த்தை நேற்று நடைபெறவில்லை. இந்த பேச்சு வார்த்தை தமிழ் முற்போக்கு கூட்டணிக்கும், முதலாளிமார் சம்மேளனத்துக்கும் இடையில் நடைபெறுவதாக இணக்கப்பாடு எட்டப்பட்டிருந்தது.

இதனிடையே, கடந்த முதலாம் திகதி, தமிழ் முற்போக்கு கூட்டணி பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து, கூட்டு ஒப்பந்தத்தின் மூலம் பெருந்தோட்ட தொழிலாளர்கள் ஏமாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டு இருந்ததமை குறிப்பிடத்தக்கது.

Read more...

புதிய அமைப்பாளர்கள் பலருக்கு ஜனாதிபதி நியமனக் கடிதங்களை வழங்கினார்

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் புதிய அமைப்பாளர்கள் பலருக்கு ஜனாதிபதி நியமனக் கடிதங்களை வழங்கி வைத்துள்ளார். இதன் அடிப்படையில், துமிந்த திஸாநாயக்க கலாவெவ தொகுதியின் அமைப்பாளராகவும், ஹொரவ்பொத்தான தொகுதியின் அமைப்பாளராக வீரகுமார திஸாநாயக்கவும், மதவச்சி தொகுதியின் அமைப்பாளராக திஸ்ஸ கரலியத்தவும் தமது நியமனக் கடிதங்களை பெற்று கொண்டனர்.

புத்தளம் மாவட்ட தலைவராக நியமனம் பெற்ற தயாசிறித திசேரா தனது நியமனக் கடிதத்தை ஜனாதிபதியிடம் இருந்து பெற்றுக் கொண்டார். இவர்களோடு அனுராதபுரம் மேற்கு, மிஹிந்தலை, அனுராதபுரம் கிழக்கு மற்றும் கெக்கிராவை ஆகிய தொகுதிகளுக்கும் புதிய அமைப்பாளர்கள் தமது நியமனக் கடிதங்களை கட்சியின் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் இருந்து பெற்று கொண்டனர்.

அநுராதபுரம் மேற்கு தொகுதி அமைப்பாளராக நியமனம் பெற்ற டபிள்யு.பீ.ஏகநாயக்கவும், மிகிந்தலை தொகுதி அமைப்பாளராக நியமனம் பெற்ற டபிள்யு.கே.இலங்கசிங்கயும், அநுராதபுரம் கிழக்கு தொகுதிக்கு பேமசிறி ஹெட்டிஆரச்சி மற்றும் டி.பீ.பந்துசேன ஆகியோரும், கெக்கிராவ தொகுதி யின் அமைப்பாளராக நியமனம் பெற்ற ரொஹான் ஜயகொடியும், அனுராதபுர மாவட்டத்தின் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் புதிய மாவட்ட அமைப்பாளர்களாக பி.பீ.திசாநாயக்க, எம்.ஹேரத் பண்டா, எம்.ஆர்.பீ.ஞானதிலக ஆகியோரும் தமது நியமனக் கடிதத்தை பெற்றுக்கொண்டனர்.

Read more...

Tuesday, February 5, 2019

71 சுதந்திர தினக் கொண்டாட்டத்திலும் வெளிப்பட்டது டபிள் ஏஜென்ட் சிறிதரனின் இரட்டை முகம்.

நேற்று இலங்கையின் சுதந்திர தினக் கொண்டாட்டங்கள் நாடுபூராகவும் இடம்பெற்றபோது வட பகுதியில் சிலர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தமை யாவரும் அறிந்தது. இந்த இரு நிகழ்வுகளிலும் இடம்பெற்ற தமிழரசுக் கட்சியின் சிறிதரனின் சித்து விளையாட்டு சுட்டிக்காட்டப்படவேண்டியதும் கண்டனத்துக்குரியதாகவும் உள்ளது.

கிளிநொச்சியின் கரைச்சி பிரதேச சபையின் உறுப்பினரான சிறிதரனின் சகா ஒருவர் நேற்று மாவட்ட செயலகத்தில் மாவட்ட செயலாளர் அருமைநாயகம் அவர்களின் தலைமையில் 57 படைப்பிரிவின் கட்டளை அதிகாரி மேஜர் ஜெனரல் ரவிப் பிரிய, கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்களின் பிரதி பொலீஸ் மா அதிபர் மகிந்த குணரட்ன ஆகியயோரது பிரசன்னத்தில் தேசிய கொடியேற்றலுடன் ஆரம்பமான நிகழ்வில் கலந்து கொண்டு தேசியக் கொடியின் முன் அணிவகுத்து நின்றார்.



அதே உறுப்பினர் அந்நிகழ்வை முடித்துக்கொண்டு வரும்வழியில் சுதந்திர தினத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும் கிளிநொச்சியில் நூலக காணியின் எஞ்சிய பகுதியினையும், மத்திய விளையாட்டு மைதானத்தையும் விடுவிக்க கோரியும் இடம்பெற்ற எதிர்ப்பார்பாட்டத்திலும் கலந்து கொண்டு சுலோகம் ஒன்றை பிடித்துக்கொண்டு நின்றார்.



அரசிற்கும் அதன் அதிகாரிகளுக்கும் தங்களை விசுவாசிகளாக காட்டிக்கொள்ளும் சிறிதரனும் அவனது சகாக்களும் மக்களை எவ்வாறு ஏமாற்றுக்கின்றனர் என்பதற்கு இது ஒரு சிறு உதாரணம் மாத்திரமே.

Read more...

கிரானில் உள்ள 5 கிராமங்களை கருணா மூஸ்லிம்களுக்கு தாரைவார்த்த சரித்திரம் கேளீர்.

கிழக்கு மாகாணத்தின் ஆளுனராக ஹிஸ்புல்லா நியமிக்கப்பட்டபோது, அதற்கு எதிராக முதன்முதலில் கிளர்ந்தெழுந்தவர் புலிகளின் முன்னாள் மட்டு அம்பாறை தளபதியாகவிருந்து இலங்கை அரசுடன் இணைந்து கொண்ட கருணா அம்மான் என்கின்ற விநாயகமூர்த்தி முரளிதரன்.

அவ்வாறு அவர் கிளர்ந்தெழுவதற்கு கூறிய காரணம் „முஸ்லிம் ஒருவர் கிழக்கின் ஆளுனரானால் கிழக்கின் காணிகள் மற்றும் வளங்கள் யாவும் பறிபோய்விடும்" என்தாகும். ஆனால் கருணா சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பிரதித் தலைவராகவும் மீள்குடியேற்ற பிரதியமைச்சராகவும் பாராளுமன்ற உறுப்பினராகவும் இருந்தபோது கிரான் பிரதேசத்தில் உள்ள 5 தமிழ் கிராம சேவையாளர் பிரிவுகளை ஓட்டமாவடியுடன் இணைக்க ஏழுத்துமூலம் ஒப்புதல் தெரிவித்த இருண்ட பக்கத்திற்கு இலங்கைநெட் இன்று வெளிச்சம் போட்டு காட்டவுள்ளது. அவ்வாறு வெளிச்சம் போடுவதற்கான காரணம் வேறு ஒன்றும் அல்ல எமது அரசியல்வாதிகள் திறந்தவெளியில் தமிழ் தேசியம் பேசி தங்களை தேசத்தின் காவலர்களாக காண்பித்துக்கொண்டு திரை மறைவில் மேற்கொள்ளும் காட்டிக்கொடுப்புக்களை மக்கள் அறியவேண்டும் என்பதாகும்.

2012ம் மேற்படி 5 கிராம சேவகர் பிரிவுகளையும் ஓட்டமாவடி பிரதேச செயலகத்துடன் இணைப்பதற்கு வர்த்தமானி அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. அந்நிலையில் மட்டக்களப்பிற்கு புதிதாக அரச அதிபராக கடமையேற்றிருந்த திருமதி சார்ள்ஸ் உடன் இணைந்து அரச உத்தியோகித்தர்கள் அந்த இணைப்பை நடைமுறைப்படுத்துவதற்கு தாமதித்து வந்துள்ளனர். வர்த்தமானி அறிவித்தல் நடைமுறைப்படுத்தப்படாமை தொடர்பில் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சுக்கு அமீர் அலி யால் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டினை அடுத்து உயர் மட்ட அதிகாரிகள் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

இச்சந்திப்பில் குறித்த வர்த்தமானி அறிவித்தல் வாபஸ் பெறப்படவேண்டும் என்ற மக்களின் விருப்பை எடுத்துரைத்துள்ளார் திருமதி சார்ள்ஸ். அத்துடன் குறித்த கிராம சேவகர் பிரிவுகள் ஓட்டமாவடியுடன் இணையும்போது அங்குள்ள மக்கள் எதிர்கொள்ளக்கூடிய அசௌகரியங்களையும் விளக்கியதுடன் குறித்த பிரதேசமானது பிரதி அமைச்சர் கருணாவின் பிறப்பிடம் என்பதால் கருணா நிச்சயமாக உடன்பட மாட்டார் என்றும் குறிப்பிட்டுள்ளார். அவ்வாறு திருமதி சார்ள்ஸ் தெரிவித்திருந்தற்கான காரணம், கருணா அரசின் பலமிக்கவராக இருக்கும்போது, உள்நாட்டு அலுவல்கள் அமைச்சின் உயரதிகாரிகள் சற்று அஞ்சலாம் என்ற எதிர்பார்பிலாகும்.

அத்தருணத்தில் தனது கோப்பிலிருந்த கடிதம் ஒன்றை எடுத்து மேசையிலெறிந்த உள் நாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளர் டலலாகே, இதோ கருணாவின் ஒப்புதல் என்றுள்ளார். கடிதத்தை சந்திப்பில் கலந்து கொண்டவர்கள் வாசித்தபோது, மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி குழுவின் இணைத்தலைவராவிருந்த கருணா குறித்த கிராமங்களை ஓட்டமாவடி பிரதேச செயலகத்துடன் இணைப்பதற்கு விருப்பு தெரிவித்திருந்தமை தெரியவந்துள்ளது. அத்துடன் இவ்விணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தவர்கள் அனைவரும் தமது நவ துவாரங்களையும் பொத்திக்கொண்டு திரும்பியுள்ளனர்.

எமது அரசியல்வாதிகளும் முன்னாள் புலிகள் உட்பட்ட ஆயுத்குழுக்களும் தமிழ் மக்களை விலைகூறி அடிமாட்டுக்கி எவ்வாறு விற்கின்றனர் என்பதற்கு இதுவும் ஒரு உதாரணம். ஆனால் குறித்த கிராமங்கள் ஓட்டமாவடியுடன் இணைக்கப்பட்டமை தொடர்பில் இன்றும் அரசியல் மேடைகளில் முழக்கமிட்டு வாக்கு பிச்சை எடுக்கப்படுவதை நாம் அவதானிக்கின்றோம்.

Read more...

தமிழ் தேசிய கூட்டமைப்பினாலேயே, அரசியல் தீர்வு காணும் முயற்சி தோல்வி கண்டது - மஹிந்த ராஜபக்ச.

தமது ஆட்சியின் போது, தேசிய இனப் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணும் முயற்சி தோல்வி அடைந்தமைக்கு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே பிரதான காரணமாக இருந்ததாக, எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ சுட்டிக் காட்டினார்.

இன்றைய தினம் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு, கருத்து வெளியிட்ட போதே, அவர் இதனை தெரிவித்தார்.

அரசமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டத்துக்கு அப்பால் சென்று, செனட் சபையை உருவாக்குவதற்கு யோசனை முன்வைத்திருந்தோம். அன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒத்துழைப்பு வழங்கியிருந்தால், சிறந்த அரசியல் தீர்வை எட்டியிருக்கலாம்.

ஆனால், தீர்வை நோக்கிப் பயணிப்பதற்குரிய அக்கறை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் சற்றும் இருக்கவில்லை. பேச்சுவார்த்தை மேசையில் வைத்து காலையில் ஒரு விடயத்தையும், மாலையில் வேறொரு விடயத்தையும் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் கூறிவந்தனர்.

ரணில் ஆட்சிக்கு வந்தால் தாம் கோருவதை அவர் தருவார் என்பதே எதிர்பார்ப்பாக இருந்தது. என்னுடன் இருந்த பகைமை காரணமாக ரணிலிடமிருந்து தீர்வைப் பெறவே கூட்டமைப்பினர் விரும்பினர்.

ஆனால், இன்று என்ன நடக்கின்றது? வடக்கில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு இல்லை. விவசாயிகளுக்கு உற்பத்திப் பொருட்களை சந்தைப்படுத்த முடியாதுள்ளது. ஏன் குடிப்பதற்கு சுத்தமான குடிதண்ணீர் கூட இல்லை.

வடக்கு மக்களுக்கு அரசு என்ன செய்கின்றது? இன்னும் மாகாண சபைத் தேர்தல் நடத்தப்படவில்லை. அதனை உடன் நடத்துமாறு வடக்கு மாகாண சபை வலியுறுத்தவும் இல்லை.

இலங்கை ஓர் சிறிய நாடாகும். இங்கு தனி ராஜ்ஜியம் குறித்து கதைப்பதறகு எவருக்கும் உரிமை இல்லை. மாகாண சபைகளுக்கு பொலிஸ் அதிகாரத்தை வழங்கினால், முதல்வரை கும்பிட்டுக் கொண்டிருக்க வேண்டிய நிலை உருவாகும்.

நாம் ஆட்சிக்கு வந்த பின்னர் கீழ் மட்டத்திலிருந்து சகல தரப்பினருடனும் கலந்துரையாடி தீர்வு முன்வைக்கப்படும். நாம் மீண்டும் ஆட்சியமைக்க தமிழ் மக்களின் வாக்குகள் அவசியமில்லை என, எந்தவொரு சந்தர்ப்பத்திலும் நான் குறிப்பிடவில்லை.

எனது ஆட்சியின் போது, 12 ஆயிரத்து 500 முன்னாள் போராளிகளுக்கு புனர்வாழ்வளித்து விடுதலை செய்தேன். காணிகளை விடுவித்தேன். அதேவேளை, அரசியல் கூட்டணி அமைப்பது தொடர்பில் பேச்சுகள் இடம்பெற்று வருகின்றன.

மக்களுடன் கலந்துரையாடிய பின்னர் இறுதி முடிவு எடுக்கப்படும். ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பதும் இன்னும் பரீசிலனை மட்டத்திலேயே இருந்து வருகிறது.

மேலும், அரசால் முன்வைக்கப்படவுள்ள வரவு – செலவுத் திட்டம் மக்கள் நலன் சார்ந்ததாக இருக்காவிட்டால், அதனை நிச்சயமாக நாம் எதிர்ப்போம் என, எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ச கூறினார்.

Read more...

இந்த அரசாங்கம், சர்வாதிகார போக்கில் செயல்பட்டு வருகின்றது - ஜீ.எல்.பீரிஸ்.

தற்போதைய அரசாங்கம், சர்வாதிகார போக்கில் செயல்பட்டு வருவதாக, பொதுஜன பெரமுனவின் தவிசாளர், பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் குற்றம் சுமத்தியுள்ளார்.

பொதுஜன பெரமுனவின் தலைமை காரியாலயத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே, அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அரச நிர்வாகத்தின் மீது அரசாங்கம் சர்வாதிகார போக்கிலான செயற்பாடுகளை முன்னெடுப்பது, கண்டிக்கத்தக்கது என பொதுஜன பெரமுனவின் தவிசாளர், பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் இதன்போது சுட்டிக்காட்டினார்.

இந்த அரசாங்கம் தற்போது முன்னெடுத்து வரும் செயல்பாடுகள், மக்கள் மத்தியில் பெரிதும் விமர்சிக்கப்படுகின்றன. அத்துடன் அரசாங்கத்தின் பொறுப்பற்ற தன்மையை அனைத்து செயல்பாடுகளிலும் காண முடியும் என, பொதுஜன பெரமுனவின் தவிசாளர், பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் கூறியுள்ளார்.

Read more...

ஸ்ரீபாத கல்வியற் கல்லூரியின், சமையல் அறைக்கு, சீல் வைக்கப்பட்டது.

ஹட்டன் ஸ்ரீபாத கல்வியற் கல்லூரியின் சமையல் அறைக்கு, சீல் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இங்கு சுமார் 450 ஆசிரிய மாணவர்கள் பயிற்சி பெற்று வருகின்றனர்.

இவர்களுக்கான சமைத்த உணவுகள், குறித்த சமையல் அறையிலேயே தயார் செய்து வழங்கப்படுகின்றன. எனினும் குறித்த சமையல் அறையில் உணவுகள் சுகாதாரமான முறையில் வழங்கப்படுவதில்லை என, பல குற்றச்சாட்டுக்கள் எழுந்தன.

இதனை அடுத்து இன்று ஸ்ரீபாத கல்வியற் கல்லூரிக்கு விஜயம் மேற்கொண்ட, உணவு சுகாதார பரிசோதகர்கள், அங்குள்ள சமையல் அறைக்கு சீல் வைத்துள்ளனர்.

அத்துடன் குறித்த சமையல் அறையை சுத்தம் செய்து, சுகாதாரமாக பேணுவதற்காக, மூன்று மாதம் கால அவகாசம் வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் ஸ்ரீபாத கல்வியற் கல்லூரியில் பயிற்சி பெற்று வந்த சுமார் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள், உணவு ஒவ்வாமை காரணமாக பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.









Read more...

பாதாள உலக குழுத் தலைவன் மாகந்துர மதூஷ் உட்பட 25 பேர் டுபாயில் கைது!

பாதாள உலக குழுத் தலைவரான மாகந்துர மதூஷ் உட்பட 25 பேர் டுபாயில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

டுபாய் மற்றும் இந்நாட்டு பொலிஸார் ஒன்றிணைந்து மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது இவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மாகந்துர மதூஷ் டுபாயில் ஏற்பாடு செய்திருந்த விருந்தொன்றின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து போதைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

கைது செய்யப்பட்டவர்களுள் இலங்கையின் பிரபல பாடகர் ஒருவர் மற்றும் நடிகர் ஒருவர் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் பாதாள உலக குழு உறுப்பினர்களான கெசல்வத்த தினுக மற்றும் கஞ்சிபானை இம்ரான் ஆகியவர்களும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பல்வேறு குற்றங்கள் மற்றும் போதைப் பொருள் வியாபாரத்துடன் தொடர்புடைய சமரசிங்க ஆராச்சிலாகே மதூஷ் லக்சித எனும் மாகந்துர மதூஷ் பாதுகாப்பு பிரிவினர்களிடம் இருந்து தப்பித்து கடந்த காலங்களில் வெளிநாட்டில் இருந்துள்ளார்.

எவ்வாறாயினும் இவர் பல முறை நாட்டிற்குள் வந்து சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Read more...

பெருந்தோட்ட தொழிலாளர்களின் வேதன அதிகரிப்பு தொடர்பான பேச்சுவார்த்தை, நாளை வரை பிற்போடப்பட்டுள்ளது - திலகராஜ்.

பெருந்தோட்ட தொழிலாளர்களின் 1000 ரூபாய் வேதன அதிகரிப்பு தொடர்பான முக்கிய பேச்சுவார்த்தை ஒன்று, இன்று பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கும், தமிழ் முற்போக்கு கூட்டணியினருக்கும் இடையில் இடம்பெறவிருந்த நிலையில், அந்த பேச்சுவார்த்தை பிற்போடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் முற்போக்கு கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.திலகராஜ் இதனை தெரிவித்தார். இன்று இடம்பெறும் அமைச்சரவை கூட்டத்தின் பின்னர், தமக்கும், பிரதமருக்கும் இடையில் முக்கிய சந்திப்பை மேற்கொள்ளவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

எனினும், அமைச்சரவை கூட்டத்தின் பின்னர் இந்த பேச்சுவார்த்தையை மேற்கொள்ள முடியாது எனவும், இதன் காரணமாக நாளை வரை இந்த பேச்சுவார்த்தை பிற்போடப்பட்டுள்ளதாகவும், நாடாளுமன்ற உறுப்பினர் திலகராஜ் தெரிவித்தார்.

இதேவேளை இன்றைய அமைச்சரவை கூட்டத்தின் போது, இலங்கை தேயிலை தொடர்பில் கருத்துக் பரிமாற்றங்கள் இடம்பெற்றன. இதன்போது அமைச்சர் மனோ கணேசன், பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வு, அதிகரிக்கப்பட வேண்டும் என, வலியுறுத்தல் விடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் நாளைய தினம் பிரதமருடன் இடம்பெறவுள்ள பேச்சுவார்த்தையில், தீர்க்கமான முடிவுகள் எட்டப்படும் என, எதிர்பார்ப்பதாக தமிழ் முற்போக்கு கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.திலகராஜ் கூறினார்.

இதேவேளை தமது கோரிக்கை உரிய முறையில் நிறைவேற்றப்படாவிட்டால், தாம் அரசாங்கத்தில் இருந்து விலகுவதாக, அமைச்சர் மனோ கணேசன், முன்னர் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Read more...

திருகோணமலை இளைஞர்களின் மரணத்திற்கு, சரியான நீதி விசாரணை வேண்டும் - தௌபீக்

அண்மையில், திருகோணமலை கிண்ணியா பிரதேசத்தில் கடலில் குதித்து உயிரிழந்த இரு இளைஞர்களின் மரணம் தொடர்பாக, நீதியான விசாரணை நடத்தப்பட வேண்டும் என, நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக் வலியுறுத்தல் விடுத்துள்ளார்.

இன்றைய தினம் நாடாளுமன்றத்தில், ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தில் கலந்து கொண்டு, உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டார்.

சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டு, கிண்ணியாவைச் சேர்ந்த இரு அப்பாவி இளைஞர்கள், கடந்த ஜனவரி 29ஆம் திகதி பரிதாபமாக உயிரிழந்தனர்.

திருகோணமலை கடற்படையால் சுற்றிவளைக்கப்பட்டதன் பின்னர், படையினர், வானத்தை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தியதால், குறித்த இரு இளைஞர்களும் அச்சமடைந்து, தம்மை துப்பாக்கிச் சூட்டில் இருந்து காப்பாற்றி கொள்ள, கடலில் பாய்ந்தனர். எனினும் இந்த இரு இளைஞர்களும் உடல்களாகவே மீட்கப்பட்டனர்.

மண் அகழ்வுக்கான சட்டபூர்வ அனுமதி பத்திரத்துடனேயே அவர்கள் இதனை செய்து வந்துள்ளனர். நாட்டில் சொல்ல முடியாத எத்தனையோ பாரிய பிரச்சினைகள் தலைதூக்கியுள்ளன. ஆனால், அதனை விடுத்து அப்பாவி மக்கள் மீது மட்டுமே, நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

இந்த நிலையில், உயிரிழந்த இளைஞர்களின் குடும்பத்திற்கு அரசாங்கம் என்ன செய்ய போகிறது?. இது குறித்து நீதியான முறையில் விசாரணை நடத்தப்பட வேண்டும்.

இதே போன்ற சம்பவம் மணலாறு பிரதேசத்திலும் இடம்பெற்றுள்ளது. யுத்த காலத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் யுத்தத்தின் பின்பும் தொடர்ச்சியாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த பிரச்சினைக்கு அரசாங்கம் உரிய தீர்வு வழங்க வேண்டும்.

அது மாத்திரமின்றி உயிரிழந்த இளைஞர்களின் குடும்பங்களுக்கு உரிய நட்டஈடு வழங்கவும், அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக் வலியுறுத்தல் தெரிவித்தார்.

Read more...

விசாரணை அறிக்கைகளுக்காக, பாரிய நிதி வீணடிக்கப்பட்டுள்ளது - எம்.ஏ.சுமந்திரன்.

விசாரணை ஆணைக்குழுக்களை நிறுவுவதற்கும், அறிக்கைகளை சமர்ப்பிப்பதற்கும் என, தற்போது, பாரிய நிதி வீணடிக்கப்பட்டுள்ளதாக, தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் குற்றம் சுமத்தியுள்ளார்.

பாரதூரமான ஊழல் மோசடிகள் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை குறித்த பிரேரணையை முன்வைத்து, இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றுகையிலேயே, அவர் இதனை குறிப்பிட்டார்.

அரச சொத்துக்களை துஷ்பிரயோகம் செய்தவர்களுக்கு எதிராக, கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

ஆணைக்குழுவின் அறிக்கையில் குற்றமிழைத்தவர்கள், அவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய தண்டனை என்பன குறித்து தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், குற்றமிழைத்தவர்களுக்கு தண்டனை வழங்குவதற்கான செயற்பாடுகள், ஏன் தாமதிக்கப்பட்டு வருகின்றன?.

இந்த ஆணைக்குழுக்களுக்கும், அதன் அறிக்கைகளுக்கும் என, இதுவரையிலும் பொது மக்களின் பணம் வீணடிக்கப்பட்டுள்ளது. இதனால் நேரமும், பணமும் செலவானதே மிச்சம்.

குற்றமிழைத்தவர்களுக்கு தண்டனை வழங்க தவறும் பட்சத்தில், அவர்கள் மீண்டும் தவறிழைப்பார்கள். எனவே, பொது நிதியை பாதுகாக்க வேண்டியது, நாடாளுமன்றத்தின் தலையாய கடமையாகும்.

ஆணைக்குழுக்கள் தமது அறிக்கையை சமர்ப்பிக்க, பாரிய நிதி வீணடிக்கப்பட்டுள்ளது. ஆனால், பொறுப்பானவர்கள் இதுவரை நடவடிக்கை எதனையும் எடுக்கவில்லை என, தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடக பேச்சாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் குற்றம் சுமத்தினார்.

Read more...

மீண்டும் பி.எஸ்.எம்.சார்ள்ஸ், சுங்க திணைக்களத்தின் நிறைவேற்று பணிப்பாளராக நியமனம்.

சுங்க திணைக்களத்தின் நிறைவேற்று பணிப்பாளராக, பி.எஸ்.எம்.சார்ள்ஸ் மீண்டும் நியமனம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில், தற்போது ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்று வரும் அமைச்சரவை கூட்டத்தில், இதற்கான அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

பி.எஸ்.எம். சார்ள்ஸை, அந்த பதவியில் இருந்து நீக்குவதற்கு கடந்த வாரம் முடிவெடுத்ததை, அமைச்சரவை மீள பெற்றுக்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் திருமதி பி.எஸ்.எம். சார்ள்ஸுக்கு, 1 வருட காலம் சேவை நீடிப்பு வழங்கப்பட்டுள்ளதுடன், அவருடைய 3 மாத சேவையை பொறுத்து, அவர் தொடர்பாக இறுதி தீர்மானம் எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

சுங்கத் திணைக்களத்தின் பணிப்பாளராக கடமையாற்றிய பி.எஸ்.எம்.சார்ள்ஸ், திடீரென இடமாற்றம் செய்யப்பட்டு, அந்த பதவிக்கு வேறு ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

எனினும், இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், சுங்க திணைக்களத்தினர் இணைந்து பாரிய தொடர் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

இந்த நிலையில், அவரை மீண்டும் நியமிக்க, அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read more...

தமிழர்களின் தேவைகளை பூர்த்தி செய்ய, சிங்கள தலைமைகள் தேவை – அருண் தம்பிமுத்து.

தமிழ் மக்கள் எதிர்பார்க்கும் சுய நிர்ணய உரிமை உள்ளிட்ட பல முதன்மை விடயங்களை, சிங்கள தலைமைகள் ஒருபோதும் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை என, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர் அருண் தம்பிமுத்து தெரிவித்துள்ளார்.

சுய நிர்ணய உரிமை தொடர்பாக கருத்து வெளியிட்ட போதே, அவர் இதனை கூறினார். ஒரு சிங்கள தலைமைத்துவம் வந்தால் தான் தமிழர்கள் பல விதமாக ஆதரவினை பெற முடியும். அத்துடன் தமிழர்கள் தங்களது தேவைகளை பெற்றுக்கொள்ள, வழி ஏற்படுத்திக் கொடுக்கப்படும்.

உலகளாவிய ரீதியில் பரந்து காணப்படும் தமிழர்களின் செயற்பாடுகள் அதிகரிக்க வேண்டும். அதற்கு சிங்கள தலைமைத்துவத்தின் பங்களிப்பு கட்டாயமாக தேவை என்பதை, தமிழர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும் என, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர் அருண் தம்பிமுத்து இதன்போது குறிப்பிட்டார்.

Read more...

சுங்க திணைக்கள பணிப்பாளரின் பதவி நீக்கத்திற்கும், எனக்கும் எந்தவித தொடர்பும் இல்லை - ரிஷாட் பதியுதீன்.

முன்னாள் சுங்கத் திணைக்களப் பணிப்பாளரான திருமதி சார்ள்ஸ், அந்த பதவியிலிருந்து நீக்கப்பட்டமைக்கும், தனக்கும் எவ்வித தொடர்பும் இல்லையென, அமைச்சர் ரிஷாட் பதியூதீன் தெரிவித்துள்ளார்.

சுங்கத் திணைக்களப் பணிப்பாளர் பதவியில் இருந்து, பி.எம்.எஸ்.சார்ள்ஸ் நீக்கப்பட்டதை அடுத்து, சுங்க திணைக்கள அதிகாரிகள் இணைந்து, இன்று ஏழாவது நாளாகவும், தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனால், துறைமுகங்களின் சில முக்கிய செயற்பாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. அத்துடன் இந்த போராட்டத்திற்கு மதுவரி திணைக்களம், பதிவாளர் திணைக்களம் என்பனவும், தமது ஆதரவை வழங்கியுள்ளன,

இந்த நிலையில் சுங்கத் திணைக்களத்தின் பணிப்பாளரான சார்ள்ஸ் அந்த பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளமை குறித்து, அமைச்சர் ரிஷாட் பதியூதீன் கருத்து வெளியிட்ட போதே, இதனை கூறினார்.

திருமதி சார்ள்ஸை பதவி நீக்கிய விடயத்தில், தன்னுடைய தலையீடு எதுவும் இல்லை என்பதுடன், அவரை பதவி நீக்கியமையை, தன்னால் ஏற்றுக் கொள்ள முடியாது எனவும், அமைச்சர் ரிஷாட் பதியுதீன் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் நிதி அமைச்சர் மங்கள சமரவீர தவறானவர் அல்ல. அவர் எப்போதும், சிறந்த முடிவுகளையே எடுப்பார். சில வேளைகளில் சுங்க திணைக்கள பணிப்பாளர் குறித்து, யாராவது குற்றச்சாட்டு கடிதங்களை அமைச்சர் மங்கள சமரவீரவிற்கு அனுப்பியிருக்கலாம்.

எனினும் அமைச்சர் மங்கள சமரவீர, இனவாதியாக செயற்படுபவர் அல்ல என, அமைச்சர் ரிஷாட் பதியுதீன் இதன்போது சுட்டிக் காட்டியுள்ளார்.

Read more...

ஜனாதிபதி ஆணைக்குழு வெளியிட்ட அறிக்கை, பொய்யானது - மஹிந்தானந்த அளுத்கமகே.

ஜனாதிபதி ஆணைக்குழு வெளியிட்ட விசாரணை அறிக்கை, பொய்யானது என, பொது எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே குற்றம் சுமத்தியுள்ளார்.

ஊழல் மற்றும் மோசடிகள்; தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை குறித்த பிரேரணை மீதான விவாதம், இன்றைய தினம் கூடிய நாடாளுமன்ற அமர்வின் போது, விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இந்த விவாதத்தை ஏற்று உரையாற்றிய போதே, நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே இந்த குற்றச்சாட்டை முன்வைத்தார்.

ஜனாதிபதி ஆணைக்குழுவின் கீழ் எனக்கு எதிராகவும் பல குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையில் மொத்தமாக 34 பேருக்கு எதிராக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. ஆனால், என் மீதான ஒரு வழக்கு மாத்திரமே, பதிவு செய்யப்பட்டது. ஏனைய 33 பேருக்கு எதிராக, எந்த வித வழக்கும் பதிவு செய்யப்படவில்லை.

பாரிய ஊழல் மோசடிகளை நிறுத்துவதற்கு அதிகாரத்தை பெற்றுக் கொண்டு, ஆட்சிக்கு வந்தவர்கள், தற்போது ஆட்சிக்கு வந்து நான்கு ஆண்டுகளாகின்றன. ஆனால், இதுவரை ஒருவருக்கு எதிராக மாத்திரமே அவர்களால், வழக்கு தாக்கல் செய்ய முடிந்துள்ளது.

ஏனெனில், ஆணைக்குழு அறிக்கை பொய்யான ஒன்றாகும். இதனாலேயே வழக்கு தொடர முடியாதுள்ளது. இது மேன்முறையீட்டு நீதிமன்றிலும் உறுதிபடுத்தப்பட்டுள்ளது.

எனக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் நான் மேன்முறையீடு செய்ததன் மூலம், இந்த அறிக்கை, அரசியல் பழிவாங்கல் என்பது நிரூபனமாகியுள்ளது.

எனவே சம்மந்தப்பட்டவர்கள், இவ்வாறான அரசியல் பழிவாங்கலில் ஈடுபட வேண்டாம். ராஜபக்ஷ அரசாங்கத்தின் பாரிய மோசடிகள் குறித்து பேசினீர்கள். இறுதியில் 11 பர்ச்சசுக்கு வழக்கு தொடர்கிறீர்கள். இது தான் நீங்கள் கூறிய பாரிய மோசடியா? என, நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே கேள்வி எழுப்பினார்.

Read more...

கிளிநொச்சியில் படைப்புழு தொடர்பாக ஆராயும், விசேட கூட்டம்.

விவசாயயிகளுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள படைப்புழுவின் தாக்கம் தொடர்பாக, கிளிநாச்சி மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் இன்று விசேட கூட்டம் ஒன்று இடம்பெற்றது.

இந்த கூட்டம் இன்று பிற்பகல் மாலை 3 மணியளவில் ஆரம்பமாகியது.

இதன்போது படைப்புழுவை கட்டுப்படுத்தல், மற்றும் அதன் தாக்கம் உள்ளிட்ட பல விடயங்கள் குறித்து ஆராயப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கலந்துரையாடலில் கிளிநாச்சி மாவட்ட அரசாங்க அதிபர், பிரதேச செயலாளர்கள், விவசாய திணைக்களங்கள் சார் அதிகாரிகள், விவசாயிகள், பொலிஸார், பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இலங்கையில் தீவிரமாகப் பரவி வரும் படைப்புழுவின் தாக்கம் குறித்து, அண்மைக் காலமாக மக்களுக்கு தெளிவூட்டும் செயற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன.

அத்துடன் இந்த படைப்புழுவை ஒழிப்பதற்கான மருந்தை விரைவில் பெற்றுத்தர, நடவடிக்கை எடுக்கப்படும் என விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

இதுவரைக் காலமும் சோளப்பயிர்ச்செய்கையை பாதித்திருந்த படைப்புழு, தற்போது வாழை, குரக்கன் உள்ளிட்ட ஏனைய பயிர்செய்கைகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதன் காரணமாக நாடு முழுவதும் உள்ள பல விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், அவர்களுக்கான நட்டஈட்டை தாம் வழங்குவதாக, விவசாய அமைச்சு தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Read more...

நாட்டினை ஸ்தம்பிதம் அடையச் செய்யும் வேலைநிறுத்தப் போராட்டங்கள்.

நாளைய தினம் கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளதாக, இலங்கை ஆசிரியர் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

சுமார் நான்காயிரத்திற்கும் மேற்பட்ட அதிபர்களுக்கு, இரண்டாம் மொழி கல்வியினை வழங்குவது தொடர்பான சுற்றறிக்கை, தற்போது வரை வெளியிடப்படாமைக்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக, இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் யோசப் ஸ்ராலின் தெரிவித்தார்.

இந்த விடயம் தொடர்பாக தாம் இரண்டு தடவைகள் அமைச்சர் மனோ கணேசனுடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்திருந்ததாகவும், எனினும் இதுவரையில் இதற்கான உரிய தீர்வு எட்டப்படவில்லை எனவும், இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் யோசப் ஸ்ராலின் குறிப்பிட்டார்.

அத்துடன் தமக்கான தீர்வு விரைவில் பெற்றுக்கொள்ளப்பட வேண்டும் என்று வலியுறுத்தி, நாளை காலை 10 மணியளவில் குறித்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படும் என, அவர் தெரிவித்தார்.

இதேவேளை, யாழ். போதனா வைத்தியசாலை தாதியர் இருவரின் செயற்பாடுகள் தொடர்பில் ஊடகங்களில் வெளியாகிய செய்தி, அனைத்து தாதியர்களுக்கும் அசௌகரியங்களை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது என்பதை சுட்டிக்காட்டியுள்ள தாதியர்கள், இன்று வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அரச தாதி உத்தியோகத்தர் சங்கத்தின் ஏற்பாட்டில் இன்று காலை யாழ். போதனா வைத்தியசாலையின் தாதியர்கள், அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அத்தோடு, குறித்த சம்பவம் தொடர்பில் வெளியாகிய செய்திக்கு வைத்தியசாலைப் பணிப்பாளரால் மறுப்பு அறிக்கை வெளியிட வேண்டும் எனவும், தாதியர்கள் இதன்போது வலியுறுத்தினர்.

இதன் காரணமாக வைத்தியசாலையின் வைத்திய சேவை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளளதோடு, நோயாளர்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர்.

எனினும் தம்மை பற்றி வெளியாகிய இந்த செய்தி உண்மைக்கு புறம்பானது என தெரிவித்தும், இந்த செய்தியை வெளியிட்டவர்களை கண்டித்தும் குறித்த வேலை நிறுத்த போராட்டம், யாழ் போதனா வைத்தியசாலையின் மருத்துவ தாதியர்களால் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை சுங்க திணைக்களத்தின் பணியாளர்கள் முன்னெடுத்து வரும் சட்டப்படி வேலை செய்யும் போராட்டம் காரணமாக, தமக்கு பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்து, இன்றைய தினம் புறக்கோட்டை மொத்த வர்த்தக உரிமையாளர்கள் சங்கம், கடையடைப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

சுங்க திணைக்கள பணிப்பாளர் திருமதி சார்ள்ஸ், பதவியில் இருந்து நீக்கப்பட்டு அந்த இடத்திற்கு மற்றுமொருவர் நியமிக்கப்பட்டமையை கண்டித்து, சுங்க திணைக்களத்துடன், 14 ற்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்கள் இணைந்து, இந்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன .

Read more...

மாகாண சபை தேர்தல் தொடர்பான இறுதி முடிவு இன்று.

மாகாண சபை தேர்தல் தொடர்பான இறுதி தீர்மானம், இன்று நாடாளுமன்றத்தில்  வைத்து அறிவிக்கப்படுமென எதிர்பார்க்கப்படுகின்றது.

அதன்படி இன்று இடம்பெறும் அமைச்சரவை கூட்டத்தில், இந்த விடயம் தொடர்பாக இறுதி தீர்மானம் மேற்கொள்ளப்படவுள்ளதாக, அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த அமைச்சரவை கூட்டத்தின் போது, எதிர்வரும் மே மாதம் 31 ஆம் திகதிக்கு முதல், மாகாண சபை தேர்தல் நடத்தப்பட வேண்டுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் யோசனை முன்வைக்கப்பட்டது.

இதுவரை மாகாண சபைக்கான தேர்தல் இடம்பெறும் தினம் குறித்து பல்வேறுபட்ட பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றிருந்தன. இந்த நிலையில், குறித்த யோசனையை இன்றைய அமைச்சரவை கூட்டத்தில் முன்வைக்க, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்தன திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி மாகாண சபை தேர்தல் தொடர்பான இறுதி தீர்மானம், இன்று அறிவிக்கப்படுமென எதிர்பார்க்கப்படுகின்றது.

Read more...

நாடாளுமன்ற குழப்ப நிலை விசாரணைகளைத்துரிதப்படுத்துவீர். சீஐடி க்கு பிரதி சபாநாயகர்.

நாடாளுமன்றத்தில் ஏற்பட்ட குழப்பநிலை தொடர்பில் விசாரணைகளைத் துரிதப்படுத்துமாறு, பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி ஆலோசனை வழங்கியுள்ளார். குறித்த ஆலோசனை குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினருக்கு வழங்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 14,15 மற்றும் 16ஆம் திகதிகளில் மோதல் நிலை ஏற்பட்டது.

குறித்த சம்பவம் தொடர்பில், தமது குழுவினரால் முன்னெடுக்கப்பட்ட விசாரணையின் அறிக்கை தொடர்பில் சபாநாயகர் கருஜயசூரிய பரிசீலனை செய்வதாகவும் பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி தெரிவித்துள்ளார். பிரதி சபாநாயகர் ஆந்த குமாரசிறியின் தலைமையில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைக்கு இணையாக, குற்றப்புலனாய்வுத் திணைக்களமும் விசாரணைககளை முன்னெடுத்துள்ளது.

இந்த மோதல் தொடர்பில் 59 உறுப்பினர்கள் குறித்து நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என இது தொடர்பில் நியமிக்கப்பட்ட விசாரணைக்குழு, சபாநாயகருக்கு வழங்கிய அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக, சர்வதேச ஊடகமான BBC அண்மையில் செய்தி வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Read more...

ஊஞ்சல் உடைந்து வீழ்ந்த விபத்தல் சிறுமியும் பலி - 5 பேர் கைது

சிறுவர் பூங்காவில் ஊஞ்சலின் ஒருபகுதி உடைந்து வீழ்ந்ததில் படுகாயமடைந்த 13 வயது சிறுமியும் உயிரிழந்துள்ளார். குறித்த அசம்பாவிதம் வெயாங்கொட – நய்வலவில் அமைந்துள்ள சிறுவர் பூங்காவில் நேற்று சம்பவித்தது. இந்த அனர்த்தம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் குறித்த சிறுவர் பூங்காவை பராமரித்துவந்த 5 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

வெயாங்கொட - நய்வலவில் அமைந்துள்ள சிறுவர் பூங்காவில் நேற்று ஊஞ்சலின் ஒருபகுதி உடைந்து வீழ்ந்ததில் 47 வயதுடைய பெண்ணொருவர் உயிரிழந்ததுடன் குறித்த பெண்ணின் மகள் படுகாயமடைந்தார். இதன்போது படுகாயமடைந்த 13 வயதான சிறுமி, சிகிச்சைகளுக்காக கம்பஹா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ள நிலையில் சிறுமியும் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Read more...

மாலைதீவின் ஜனாதிபதிக்கும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையிலான முக்கிய சந்திப்பு இன்று

மாலைதீவின் ஜனாதிபதி இப்ராஹிம் மொஹமட் ஷோலிக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று நடைபெறவுள்ளது.

ஜனாதிபதியின் அழைப்பிற்கு அமைய மூன்று நாள் அரச விஜயம் மேற்கொண்டு மாலைத்தீவு ஜனாதிபதி உள்ளிட்ட குழுவினர் கடந்த ஞாயிற்றுக்கிழமை இலங்கையை வந்தடைந்தனர். இந்த நிலையில் நேற்று கொண்டாடப்பட்ட இலங்கையின் 71 ஆவது சுதந்திர தினத்தில் விஷேட அதிதியாக மாலைதீவின் ஜனாதிபதி இப்ராஹிம் மொஹமட் ஷோலி மற்றும் அவரின் பாரியார் கலந்து கொண்டிருந்தனர்.

இந்த விஜத்தின் அடுத்த கட்டமாக, இன்று ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதியை சந்தித்து கலந்துரையாட உள்ளதாக தெரிவக்கப்படுகின்றது.

Read more...

யாழில் 72 கிலோ கேரளக் கஞ்சாவை கடத்திய 2 பேர் கைது

யாழ்ப்பாணத்தில் 72 கிலோ கேரளக் கஞ்சாவுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். விசேட பொலிஸ் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் நேற்று இரவு 8 மணி அளவில் குறித்த இருவரையும் பொலீசார் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த இரண்டு போதை பொருள் கடத்தல்காரர்களையும் யாழ்ப்பாணத்தில் இருந்து பின்தொடர்ந்த விசேட பொலிஸ் புலனாய்வுப் பிரிவினர், தென்மராட்சி எல்லைப் பகுதியில் வைத்து கைது செய்துள்ளனர்.

இந்த நிலையில் கைதான இரண்டு சந்தேக நபர்களும் சாவகச்சேரி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

Read more...

வடக்கில் மாம்பழச்செய்கையை அதிகரிப்பதற்கு விவசாய அமைச்சு நடவடிக்கை

வடக்கில் மாம்பழச்செய்கையை அதிகரிப்பதற்கு விவசாய அமைச்சு நடவடிக்கை எடுத்துள்து.

முதல்கட்டமாக , 10,000 டொம் ஜே.சி. வகையான மாம்பழக்கன்றுகளை யாழ். மாவட்ட விவசாயிகளுக்கு வழங்குவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது. முன்னதாக குறித்த வகை மாம்பழச் செய்கை வரண்ட வலயத்தில் வெற்றியளித்துள்ள நிலையில், இதனை யாழ். மாவட்டத்தில் அறிமுகப்படுத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

Read more...

அமைச்சர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் அதிகாரம் ஜனாதிபதி கையிலேயே. தேசிய அரசாங்கம் முடியாது என்கிறார் SB !

அமைச்சர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கே உள்ளதென்றும் தேசிய அரசாங்கத்தை ஸ்தாபிக்க விடமாட்டோம் என்றும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பீ. திஸாநாயக்க தெரிவித்தார். உத்தேச தேசிய அரசாங்க பிரேரணை தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்

முஸ்லிம் காங்கிரஸிலுள்ள ஒரே ஒரு பாராளுமன்ற உறுப்பினராகவுள்ள அலி சாஹிர் மௌலானாவுடன் இணைந்து, தேசிய அரசாங்கத்த அமைக்கும் பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன. இந்த நடவடிக்கை மூலம் அமைச்சரவையின் உறுப்பினர்களை 48 ஆக அதிகரித்துக்கொள்ள எதிரிபார்க்கப்படுகின்றது.

இந்த நடவடிக்கை குறித்து நீதிமன்றத்தை நாடவுள்ளோம். இது அரசியல் அமைப்பிற்கு முரணான பண்பாடற்ற ஒரு செயலாகும். அத்துடன், இந்த பிரேரணை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு ஜனாதிபதியிடம் அமைச்சரவையின் எண்ணிக்கையை அதிகரிக்க கோரி முன்வைக்கப்படுமிடத்து, ஜனாதிபதி அதனை அங்கிகரிக்கமாட்டார் எனவும் எஸ்.பீ. திஸாநாயக்க குறிப்பிட்டார்.

Read more...

இந்திய அரசாங்கத்தின் உயரிய விருதை பெற்ற யாழ் எழுத்தாளர்

யாழ்ப்பாணத்தை சேர்ந்த எழுத்தாளர் ஐயாத்துரை சாந்தன், இந்திய அரசாங்கத்தின் சாகித்திய அகாடமியின் ''பிரேம்சந்த் பெலோஷிப் விருது'' வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார்.

தமிழ் மற்றும் ஆங்கில நூல்களை எழுதிய எழுத்தாளரான ஐயாத்துரை சாந்தனை 2017 ஆம் ஆண்டுக்கான இந்திய அரசாங்கத்தின் சாகித்திய அகாடமியின் விருது பெற்றமைக்காக, டெல்லி தமிழ் சங்கம் தனது உயரிய பாராட்டையும் கௌரவத்தையும் அவருக்கு வழங்கியது.

இந்த கௌரவிப்பு நிகழ்வு, கடந்த சனிக்கிழமை முன்னை நாள் யாழ் இந்திய துணைத் தூதுவரும், இந்திய மத்திய வெளியுறவுத்துறை பாஸ்போர்ட் மற்றும் விசா துறையின் இயக்குனர் அ . நடராஜன் தலைமையில் டெல்லியில் நடைபெற்றது.

ஐயாத்துரை சாந்தன், ஈழத்தின் முக்கியமான எழுத்தாளர்களுள் ஒருவராக அறியப்படுவதுடன் மொழிபெயர்ப்பிலும் உலக எழுத்தாளர்களைத் தமிழில் அறிமுகம் செய்வதிலும் குறிப்பிடத்தக்க பங்காற்றி வருகிறார்.

அத்துடன், தமிழிலும் ஆங்கிலத்திலுமாக 27 நூல்களை ஐயாத்துரை சாந்தன் எழுதி இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

Read more...

இன்றைய நாடாளுமன்றத்தில் முக்கியத்துவம் கொடுக்கப்படும் விடையங்கள் இவைதான்

வரவு செலவுத் திட்டத்திற்கான நிதி ஒதுக்கீட்டுச் சட்ட மூலம் நிதி அமைச்சர் மங்கள சமரவீரவினால் இன்று நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ளது.

2019 ம் ஆண்டுக்கென தயாரிக்கப்பட்டுள்ள வரவு செலவுத் திட்டத்தின் மொத்தச் செலவாக 2 லட்சத்து 31 ஆயிரத்து 200 கோடி ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது. வரவு செலவுத் திட்டம் சபையில் முன்வைக்கப்படுவதற்கு ஒரு மாதத்துக்கு முன்னர் நிதி ஒதுக்கீட்டு அறிக்கை சமர்ப்பிக்கப்படுவது நாடாளுமன்ற சம்பிரதாயம் ஆகும்.

இதனிடையே இன்றைய தினத்தில், நாடாளுமன்ற நிகழ்ச்சிநிரலில் 15 கேள்விகள் உள்ளடக்கப்பட்டுள்ளன. 2010 ஆம் ஆண்டு முதல் இதுவரையான காலப்பகுதிக்குள் மரணதண்டனை விதிக்கப்பட்ட கைதிகள் தொடர்பிலும், மீதொட்டமுல்ல குப்பைமேடு, இறக்குமதி செய்யப்பட்ட மருந்துகள் தொடர்பிலும் பிரஸ்தாபிக்கப்படவுள்ளதாக தெரியவருகின்றது.

இதேவேளை, தேசிய அரசாங்கத்தை உருவாக்குவதற்கான யோசனை தொடர்பில் இந்த வாரத்திற்குள் விவாதத்திற்கு எடுத்துக்கொள்வதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த யோசனை சபை முதல்வர் லக்ஸ்மன் கிரியெல்லவினால் சமர்ப்பிக்கப்பட்டபட்டமை குறிப்பிடத்தக்கது.

Read more...

Monday, February 4, 2019

நிதியமைச்சுடன் தொடர்புடைய இரு வர்த்தகர்களால் கொலை அச்சுறுத்தல்! சட்ட நடிவடிக்கைக்கு தயாராகின்றார் சார்ள்ஸ்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு மௌன விரதம்.

சுங்கத் திணைக்களத்தில் இடம்பெற்ற பல்வேறு மோசடிகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து சுங்க பகல்கொள்ளைக் கலாச்சாத்தையே பதவியேற்ற குறுகிய காலத்தினுள் மாற்றிப்போட்டார் திருமதி பி.எஸ்.எம் சார்ள்ஸ்.
இவரது செயற்பாடு எற்றுமதி இறக்குமதி மாபியாக்களுக்கு பெரும் தலையிடியாக அமைந்திருந்தது. இதனால் நிதியமைச்சின் முக்கிய செயலாளர் ஒருவரின் அழுத்தத்தின் பெயரால் இவர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில் தனது இடமாற்றத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் அதற்கு எதிராக நீதிமன்றை நாடவுள்ளதாகவும் முன்னாள் சுங்கத் திணைக்கள பணிப்பாளர் நாயகம் பிஎஸ்எம் சார்ள்ஸ் தெரிவித்துள்ளதுடன் தனது உயிருக்கு நிதி அமைச்சுடன் தொடர்புடைய வர்த்தகர்கள் இருவரால் கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டிருந்தது என்றும் தெரிவித்துள்ளார்.

'என்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்பது எனக்குத் தெரியவில்லை.

உரிய அறிவுறுத்தல்கள் எதுவுமின்றி, சுங்கத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் பதவியிலிருந்து நிதி அமைச்சுக்கு இடமாற்றம் செய்யப்பட்டிருக்கிறேன்.

என்னுடைய இந்தத் திடீர் இடமாற்றம், பல சந்தேகங்களை ஏற்படுத்துகிறது.

சுங்கத் திணைக்களம், கடல் போன்றது. சட்டவிரோதமான கடத்தல்கள், வியாபாரங்கள் என அனைத்தும், சுங்கத் திணைக்களத்தினூடாகவே இடம்பெற்று வருகின்றன.

இது தொடர்பில், எனக்குக் கீழுள்ள அதிகாரிகளே விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். இவ்வாறான நிலையிலேயே, திடீரென நான் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளேன்.

இது தொடர்பிலும், எனது திடீர் இடமாற்றம் தொடர்பாகவும் சட்டநடவடிக்கை எடுப்பது தொடர்பில் ஆராய்ந்து வருகிறேன்' என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

சுங்கத் திணைக்களப் பணிப்பாளர் பதவியில் இருந்து, பி.எம்.எஸ்.சார்ள்ஸ் நீக்கப்பட்டதை அடுத்து, திணைக்கள அதிகாரிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனால், துறைமுகங்களில் சரக்குப் பெட்டகங்கள் சோதனையிடப்படாமல் தேங்கியுள்ளதுடன் அரசாங்கத்துக்குக் கிடைக்க வேண்டிய பல பில்லியன் ரூபா வருமானம் கிடைப்பதில் இழுபறி ஏற்பட்டுள்ளது.

நாட்டின் உயரிய நிலையிலிருந்த தமிழ் அதிகாரி ஒருவரின் அடிப்படை உரிமை மீறப்படும் நிலைமை காணப்படுகின்றபோது, இதுவரை எந்தவொரு தமிழ் அரசியல்வாதியும் அவர் சார்பாக குரல்கொடுக்க முன்வரவில்லை. குறிப்பாக தமிழ் மக்களின் காவலர்கள் எனக் கூறிக்கொண்டு ரணில் விக்கிரமசிங்கவின் பதவியை காக்க நீதிமன்று சென்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பு கள்ள மௌனம் காப்பதை அவதானிக்க முடிகன்றது.

எது எவ்வாறாக இருந்தாலும் சிங்கள சமூகத்திலிருந்து பிஎஸ்எம் சாள்ஸ் அவர்களின் சேவை மெச்சப்படுவதை சிங்கள ஆங்கில ஊடகங்களில் அவதானிக்க முடிகின்றது என்பது இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

Read more...

தமிழ் முற்போக்கு கூட்டணி அரசியல் நாடகமாடுகின்றது – கணபதி கனகராஜ்.

தமிழ் முற்போக்கு கூட்டணி அரசியல் நாடகமாடி வருவதாக, இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவர்களுள் ஒருவரான கணபதி கனகராஜ் குற்றம் சுமத்தியுள்ளார்.

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு குறித்து, அமைச்சர் மனோ கணேசன் தலைமையிலான தமிழ் முற்போக்கு கூட்டணியினர் முன்வைத்த கருத்துக்கள் தொடர்பாக தமது நிலைப்பாட்டை அறிவிக்கும் போதே, அவர் இவ்வாறு குற்றம் சுமத்தியுள்ளார்.

இது தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள அவர், “பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பள அதிகரிப்பை யார் பெற்றுக்கொடுத்தாலும் அதனை நாம் வரவேற்போம். எனினும், தமிழ் முற்போக்குக் கூட்டணி, கூட்டு ஒப்பந்தத்தை வைத்து அரசியல் செய்வதை எதிர்க்கின்றோம்.

கூட்டு ஒப்பந்தம் இரத்துச் செய்யப்பட வேண்டும் என மக்கள் மத்தியில் போலியான பிரசாரத்தை முன்னெடுத்துவரும் கூட்டணிக்கு, உண்மையில், கூட்டு ஒப்பந்தத்தை இரத்து செய்யக்கூடிய இயலுமைக் காணப்படுகின்றது.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் நெருங்கியத் தொடர்பை பேணி வருவதாகவும் அரசாங்கத்தில் இரண்டு அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சுக்களைக் கொண்டிருப்பதாகவும் மார்தட்டிகொள்ளும் கூட்டணிக்கு, ஐ.தே.கவின் தொழிற்சங்கமான இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தை, கூட்டு ஒப்பந்தத்திலிருந்து வெளியேற்ற ஏன் முடியவில்லை ?

1992ஆம் ஆண்டு நாடாளுமன்றில் கொண்டுரவப்பட்ட பிரேரணை ஒன்றினூடாகவே கூட்டு ஒப்பந்தம் கொண்டுவரப்பட்டது. இப்பிரேரணைக்கு எதிராக, கூட்டு அமைச்சரவைப் பத்திரம் ஒன்றை தாக்கல் செய்து, அதனை நாடாளுமன்றில் நிறைவேற்றுவதனூடாக ஒப்பந்தத்தை இரத்து செய்ய முடியும்.

மேற்குறிப்பிட்ட இரண்டையும் செய்யக்கூடிய இயலுமை தமிழ் முற்போக்கு கூட்டணிக்கு இருக்கின்ற போதிலும் அதனை செய்யாது கூட்டு ஒப்பந்த விவகாரத்தில், இ.தொ.காவை குறைகூறியே அரசியல் செய்கின்றது“ என தெரிவித்துள்ளார்.

Read more...

மாலியில் உயிரிழந்த இரு படையினரின் உடலங்கள் கொண்டுவரப்பட்டுள்ளது.

கடந்த 25 ம் திகதி மாலியில் கிளர்ச்சியாளர்கள் மேற்கொண்ட தாக்குதலில் உயிரிழந்த இரு படைவீரர்களதும் உடல்கள் இன்று பிற்பகல் 3 மணியளவில் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் வீசேட விமானத்தில் கொண்டுவரப்பட்ட இவ்வுடலங்களை இராணுவத் தளபதி லெப் ஜெனரல் மகேஸ் சேனாநாயக்க பொறுப்பேற்றுள்ளார்.

இத்தாக்குதலில் உயிரிழந்த கப்டனும் சிப்பாயும் முறையே மேஜர் மற்றும் சார்ஜன்ட் தரத்திற்கு பதவியுயர்த்தப்பட்டுள்ளனர். மேலும் அவர்கள் ஒவ்வொருவருக்கும் நஷ்ட ஈடாக மாலி நாட்டு அரசாங்கம் 50000 அமெரிக்க டொலர்களை வழங்குவதாக அறிவித்துள்ளது.

அத்துடன் பொலநறுவையைச் சேர்ந்த குறித்த சார்ஜன்டின் வீட்டிற்கு நேரில்சென்று ஜனாதிபதி மைத்திரபால தனது ஆறுதலை தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.


Read more...

ஐக்கிய தேசிய முன்னணிக்கு எதிராக, நீதிமன்றம் நாடுவோம் - மஹிந்த அணி.

ஐக்கிய தேசிய முன்னணியின் தீர்மானத்திற்கு எதிராக நீதிமன்றத்தை நாடவுள்ளதாக, மஹிந்த அணியினர், எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

தேசிய அரசாங்கம் ஒன்றினை அமைப்பது தொடர்பான பிரேரணை சபாநாயகர் கரு ஜெயசூர்யாவிடம், நேற்று முந்தினம் கையளிக்கப்பட்டது.

இந்த நிலையில் மஹிந்த அணியின் நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும, இந்த விடயம் தொடர்பாக கருத்து வெளியிட்டார்.

இந்த நடவடிக்கையானது, அரசியலமைப்பை மீறும் செயல் என்பதே உண்மையாகும்.

அரசியலமைப்புக்கு முரணாண இந்த யோசனையை, நிகழ்ச்சி நிரலில் உள்ளடக்க வேண்டாம் என, தமது அணி சபாநாயகரிடம் கேட்டுக்கொள்வதாக, டலஸ் அழகப்பெரும கூறியுள்ளார்.

அத்துடன், ஐக்கிய தேசிய முன்னணியின் தீர்மானத்திற்கு எதிராக நீதிமன்றத்தை நாடவுள்ளதாகவும், டலஸ் அழகப்பெரும இதன்போது எச்சரிக்கை விடுத்துள்ளார்.

முப்பதிற்கும் அதிக அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களை நியமிக்க வேண்டாம் என, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் இதன்போது கோரிக்கை விடுக்கவுள்ளதாகவும், மஹிந்த அணியின் நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

Read more...
Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com