Monday, February 4, 2019

உழைப்புக்கேற்ற ஊதியத்தை பெறும் சுதந்திரம், எமக்கு கிடைக்கவில்லை - பெருந்தோட்ட தொழிலாளர்கள்.

தமது உழைப்புக்கு ஏற்ற ஊதியத்தை பெறக் கூட சுதந்திரமற்ற மக்களாக தாம் வாழ்வதாக தெரிவித்து, பெருந்தோட்ட தொழிலாளர்களினால் போராட்டாமொன்று முன்னெடுக்கப்பட்டது.

இந்த போராட்டம் பொகவந்தலாவ கெம்பியன் நகரத்தில் இன்றைய தினம் காலை, ஆயிரம் இயக்கத்தினரால், கறுப்பு கொடிகள் பறக்கவிடப்பட்டு முன்னெடுக்கப்பட்டது.

இலங்கையின் 71ஆவது சுதந்திர தினத்தில் சுதந்திரமற்ற மக்களாக தோட்ட தொழிலாளர்கள் காணப்படுவதாக தோட்ட தொழிலாளர்கள் விசனம் வெளியிட்டனர்.

அத்தோடு, பெருந்தோட்ட தொழிலாளர்களின் அடிப்படை சம்பளத்தை ஆயிரம் ரூபாயாக வழங்க வேண்டுமெனவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் வலியுறுத்தினர்.

இதன்போது பல்வேறும் எதிர்ப்பு வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியவாறும், கறுப்பு பட்டிகளை அணிந்து கோஷங்களை எழுப்பியவாறும், மக்கள் தமது எதிர்ப்பினை வெளிப்படுத்தினர்.

தமது உழைப்புக்கேற்ற நியாயமான சம்பளத்தை இந்த அரசாங்கம் வழங்க வேண்டும், ஏனைய மக்களை போல சுதந்திரமாக வாழ வழி செய்ய வேண்டும், காணி உரிமை, வீட்டு உரிமை, சுகாதாரம், கல்விக்கான வளங்கள், முகவரிகளை பெற்றுக் கொடுத்தல் போன்ற கோரிக்கைகளை எழுப்பியாறு, ஆர்ப்பாட்டக்காரர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அத்துடன் மலையக பகுதிகளில் முச்சக்கரவண்டிகளில் கட்டப்பட்டிருந்த தேசிய கொடிக்கு பதிலாக, கறுப்பு கொடிகள் பறக்கவிடப்பட்டிருந்தன.

Read more...

மாகாண சபைத் தேர்தலை நடத்தாமல் இருக்கின்றமை ஜனநாயகத்துக்குப் பெரும் பிரச்சினை - ஜனாதிபதி

சுமார் ஒன்றரை வருட காலம் மாகாண சபைத் தேர்தலை நடத்தாமல் இருக்கிறமை ஜனநாயகத்துக்குப் பெரும் பிரச்சினையாகும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். கொழும்பு, காலிமுகத்திடலில் இடம்பெற்ற 71 ஆவது சுதந்திர தின நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனை குறிப்பிட்டார்.

தேர்தல் நடைபெறாமல் இருப்பது ஜனநாயகத்துக்காக குரல் கொடுப்பதாக கூறிக் கொள்ளும், அரச சார்பற்ற நிறுவனங்களுக்கு ஒரு பொருட்டே அல்லவெனவும் ஜனாதிபதி இதன்போது சுட்டிக்காட்டினார்.

இந்த நூற்றாண்டுக்கேற்ப நாம் எமது பொருளாதார யுக்திகளை வகுக்க வேண்டும் எனவும் ஜனாதிபதி மேலும் கூறினார். சுதந்திரத்தின் பின்னர் இதுவரையில் ஒர் அரசியல் ரீதியான தீர்வையோ, பொருளாதார பிரச்சினைகளுக்கான தீர்வையோ காண முடியாமல் இருப்பதும் ஒரு பின்னடைவையே காட்டுகின்றது.

Read more...

பெற்ற குழந்தையை கொலை செய்த கொடூரத் தாய் கைது

4 வயது மகளை கொலை செய்து கலா ஓயாவிற்குள் வீசிய தாய் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. புத்தளம், சாலியவெவ பகுதியில் 29 ஆம் திகதி முதல் தாயொருவர் தனது குழந்தை காணாமல் போயுள்ளதாக பொலீஸாரிடம் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்திருந்தார்.

இந்நிலையில் அயலவர்கள் சிறுமிக்கு அவரது குடும்பத்தினராலேயே ஆபத்து நிகழ்ந்திருக்கலாம் என பொலீஸாரிடம் சந்தேகம் தெரிவித்ததை அடுத்து தாயரிடம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டனர்.

நேற்றைய தினம் முறைப்பாடு செய்த தாயாரிடம் விசாரணைகளை மேற்கொண்ட பொலீசாருக்கு, தனது குழந்தையை தானே கொலை செய்து ஆற்றில் வீசியதாக குறித்த தாய் வாக்கு மூலம் அளித்துள்ளார். தெனுரி திஸாரா என்ற 4 வயதுடைய சிறுமியே இவ்வாறு கொலை செய்யப்பட்டு கலா ஓயாவிற்குள் வீசியதாக சிறுமியின் தாய் குறித்த வாக்குமூலத்தில் தெரிவித்திருந்தார்.

அதனடிப்படையில் 21 வயதான குறித்த தாய் இன்று காலை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன் குறித்த சிறுமியின் சடலத்தை தேடும் பணிகளில் பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் ஒன்றிணைந்து செயற்பட்டு வருகின்றனர்.

Read more...

எவர் மீதும் சார்ந்திராத இலங்கையை உருவாக்குவதற்கு நாம் ஒன்றுபட வேண்டும் - எதிர்க்கட்சி தலைவர்

ஏமாற்றுத்தனங்களுக்கும், அடக்குமுறைகளுக்கு எதிராக நாம் ஒரு தேசமாக மேற்கொண்ட போராட்டத்தின் விளைவாகவே, நமது தேசிய கொடியானது உருவாக்கப்பட்டு, நமக்கே உரிய பன்முகதன்மையை நமது முன்னோர்கள் வெளிப்படுத்தினார்கள். எனவே எவர் மீதும் சார்ந்திராத இலங்கையை உருவாக்குவதற்கு நாம் ஒன்றுபட வேண்டுமென எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ வலியுறுத்தியுள்ளார்.

இலங்கையின் தேசிய சுதந்திரதினத்தை முன்னிட்டு எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ வெளியிட்டுள்ள வாழ்த்துச்செய்தியிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

71 ஆண்டுகளுக்கு முன்பு இலங்கையர் பலர் ஜாதி மத பேதமின்றி ஒருமித்து நின்று ஒன்றாக பயணித்து சுதந்திரத்தை வென்று அதனை எமக்கு விட்டுச் சென்றுள்ளனர். அவர்களால்தான் தற்போதைய இலங்கையானது, சுயாட்சியுடைய இறையாண்மை தேசமாக, சுய ஆணையின் கீழான நீதி நெறிமுறைகளுக்கு அமைவாக இயங்கும் வல்லமையுள்ள தேசமாக திகழ்கிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Read more...

எமது பயணம் தொடரவேண்டும் - வடக்கு மாகாண ஆளுநர் சுரேன் ராகவன்

அரசியல், பொருளாதார, கலாசார, சமூக சுதந்திரத்தினை அனைத்து மக்களும் பெற்றுக்கொள்ளும் வரையிலும் எமது பயணம் தொடரவேண்டும் என வடக்கு மாகாண ஆளுநர் சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார். பிரித்தானியர்கள் ஆட்சியிலிருந்து நமது நாடானது விடுதலை பெற்றமை எமது மண்ணிற்கு பெருமையே. ஆனாலும், எமது பயணம் தொடரவேண்டும். அதற்காக ஜனாதிபதியும், ஏனையவர்களும் மேற்கொள்ளும் எல்லா முயற்சிகளுக்கும் வாழ்த்துக்கள் தெரிவிப்பதாகவும் வடக்கு மாகாண ஆளுநர் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் 71ஆவது தேசிய சுதந்திரதினம் தொடர்பில் வடக்கு ஆளுநர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். 71ஆவது சுதந்திரதின விழாவைக் கொண்டாடும் ஜனாதிபதி பிரதமர் உள்ளிட் அனைத்து இலங்கையர்களுக்கும் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ள அவர், அமைதியாக அனைவரும் சுதந்திர தினத்தை கொண்டாடுவோம் எனவும் தெரிவித்துள்ளார்.

Read more...

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு

இன்றில் இருந்து நாட்டின் கிழக்கு, வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் மழையுடனான வானிலையில் மேலும் அதிகரிப்பு ஏற்படுவதற்கான சாத்தியம் வலுவாக காணப்படும் அதேநேரம், ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அவ்வப்போது மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

இவை தவிர்ந்த பிரதேசங்களில் பிற்பகல் 2 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

100 மில்லி மீற்றர் அளவான பலத்த மழைவீழ்ச்சி மத்திய, சப்ரகமுவ மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களிலும் எதிர்பார்க்கப்படுகின்றது.
ஊவா மாகாணத்திலும் அனுராதபுரம் மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மி.மீக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

அவ்வப்போது காங்கேசந்துறையில் இருந்து திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு ஊடாக பொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் மழை பெய்யக் கூடும்.

நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகளில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது வடகிழக்கு திசையில் இருந்து வீசக்கூடுவதுடன் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 30-40 கிலோ மீற்றர் வரை காணப்படும்.

மன்னாரில் இருந்து புத்தளம் ஊடாக நீர்கொழும்பு வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளிலும் ஹம்பாந்தோட்டையில் இருந்து பொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளிலும் காற்றானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50 கிலோ மீற்றர் வரை அதிகரித்து வீசக்கூடுவதுடன் அவ்வேளைகளில் கடல் கொந்தளிப்பாகவும் காணப்படும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு அறிவுறுத்தியுள்ளது.

Read more...

ஜனாதிபதி மற்றும் பிரதமர் வெளியிட்ட சுதந்திர தின செய்தி

எமது பொது எதிரியாகிய வறுமையையும் ஊழலையும் ஒழிப்பதற்கு நாம் ஒன்றாகச் செயற்பட்டாலேயே தேசிய புத்தெழுச்சியை நோக்கி நாட்டை கொண்டு செல்லலாம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விடுத்துள்ள 71 ஆவது சுதந்திர தின செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை பிரதமர் ரணில் விக்ரமசிங்க, சமூக மாற்றத்துக்கு வழியமைக்கக் கூடிய கலந்துரையாடலுக்கும், செயற்பாடுகளுக்கும் சிறந்ததோர் சந்தர்ப்பமாக தேசிய சுதந்திர தினத்தை மாற்றியமைப்போம் என தெரிவித்துள்ளார்.

இலங்கையின் 71 ஆவது தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி மற்றும் பிரதமர் வெளியிட்டுள்ள சுதந்திர தின வாழ்த்துச் செய்தியிலே இவ்வாறு கூறியுள்ளனர்.

இதனிடையே இலங்கையின் தேசிய சுதந்திர தின நிகழ்வு இன்று காலை 8.00 மணி அளவில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் கொழும்பு காலிமுகத்திடலில் ஆரம்பமாகியுள்ளது.

இந்த வருட நிகழ்விலும் பாதுகாப்பு படையினரின் அணிவகுப்பும், கலை,கலாசார நடனக்கலைஞர்களின் கலாசார நிகழ்வுகள் என கண்கவர் அம்சங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

இவ்வருட சுதந்திர தின நிகழ்வுகளின் சிறப்பு அதிதியாக மாலைதீவு ஜனாதிபதி இப்ராஹிம் மொஹமட் சோலி மற்றும் அவரது பாரியாரும் சிறப்பித்து வருகின்றார்கள்.

இந்த நிகழ்வில் அரசாங்கத்தின் சகல உறுப்பினர்கள் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் உள்ளிட்ட பாராளுமன்றத்தின் சகல எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கும், அரச அதிகாரிகள் மாகாண ஆளுநர்கள், முதலமைச்சர்கள், உள்நாட்டு, வெளிநாட்டு தூதுவர்கள், உயர் ஸ்தானிகர்கள் மற்றும் வெளிநாட்டு இராஜதந்திரிகள், முப்படை தளபதிகள், பாதுகாப்பு படைகளின் பிரதானி, பொலிஸ் அதிகாரிகள் உள்ளிட்ட பாதுகாப்பு படைகளின் இரண்டாம் நிலை அதிகாரிகளும் கலந்து நிகழ்வை சிறப்பித்து வருகின்றார்கள்.

Read more...

Sunday, February 3, 2019

அனைவரையும் அரசுடன் இணையட்டாம்! அழைக்கின்றார் ரணில் விக்கிரமசிங்கே

ஐக்கிய தேசியக் கட்சியை தவிர்ந்த அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் அரசாங்கத்துடன் இணைந்து கொள்ள வருமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்க அழைப்பு விடுத்துள்ளார்.

அலரிமாளிகையில் அபிவிருத்தித் திட்டமொன்றை ஆரம்பித்து வைத்து உரையாற்றுகையில் அவர் இந்த அழைப்புக் கோரிக்கையை முன்வைத்தார்.

நாம் கடந்த 2015 ஆம் ஆண்டு பாரிய சவாலுக்கு முகம்கொடுத்தோம். அந்த ஆண்டில் உலகில் அதிக கடன் பட்ட நாடுகளில் இலங்கையும் காணப்பட்டது. இருப்பினும், நாம் அவற்றை முகாமை செய்து மீண்டும் சுமுகமான நிலைக்கு கொண்டு வந்தோம். எமது இலக்குகளை வெற்றி கொண்டால், எம்மை யாராலும் தோற்கடிக்க முடியாது.

ஆகவே ஐக்கிய தேசியக் கட்சிக்கு வெளியில் உள்ள சகலரும் எம்முடன் இணைந்து செயற்பட வாருங்கள். நாம் ஒன்று பட்டால் எவருக்கும் எம்மைத் தடுத்து நிறுத்திவிட முடியாது என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க அழைப்பு விடுத்தார்.


Read more...

ஜனாதிபதியின் அனுமதியுடன் 10 நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்திற்கு ஆதரவு - கசிந்தது தகவல்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அனுமதியுடன் புதிய தேசிய அரசாங்கம் ஒன்றை அமைப்பதற்கு ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் 10 நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கவுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன.

நாடாளுமன்றத்தில் எதிர்வரும் வியாழக்கிழமை தேசிய அரசாங்க பிரேரணை முன்வைக்கப்படவுள்ளது. இந்த பிரேரணைக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பும் தனது ஆதரவை வழங்கும் என அறிவித்துள்ளதாகவும் சிரேஷ்ட அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Read more...

71 ஆவது தேசிய சுதந்திர தின நிகழ்வில் சிறப்பு அதிதியாக மாலைதீவின் ஜனாதிபதி பங்கேற்பு

நாளை கொண்டாடப்படவுள்ள இலங்கையின் 71 ஆவது தேசிய சுதந்திர தின நிகழ்வில் சிறப்பு அதிதியாக மாலைதீவின் ஜனாதிபதி இப்ராஹிம் மொஹமட் சோலி கலந்துகொள்ளவுள்ளார்.

நாளைய நிகழ்வில் கலந்துகொள்வதற்காக அவர் இன்று இலங்கை வந்தடைந்துள்ளார். இதேவேளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் தேசிய சுதந்திர தின நிகழ்வுகள், காலி முகத்திடலில் மிகவும் பிரமாண்ட ஏற்பாட்டில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read more...

போதைப்பொருள் வியாபாரத்திற்கும் பொலிஸ் அதிகாரிகளுக்கும் தொடர்புண்டு. - எதிர்க் கட்சித் தலைவர்

போதைப் பொருள் வியாபாரத்தைக் கட்டுப்படுத்துவதற்கு தூக்குத் தண்டனை நிறைவேற்றும் தீர்மானம் மாத்திரம் போதுமானதல்லவென எதிர்க் கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

நாட்டில் தலை தூக்கி இருக்கும் போதைப்பொருள் வர்த்தகத்தை கட்டுப்படுத்த முடியாமைக்கு பொலிஸ் அதிகாரிகளும் காரணம். பொலிஸ் அதிகாரிகள் சிலர் போதைப் பொருள் வியாபாரத்தின் பின்னால் செயற்படுகின்றனர். குறித்த அதிகாரிகளுக்கும் அரசியல்வாதிகளுக்கும் இடையில் தொடர்புண்டு. இந்த நிலையில் போதை பொருளை கட்டுப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

பொலிஸ் அதிகாரிகளும், இராணுவமும் இணைந்து போதைப் பொருள் வியாபாரத்தைக் கட்டுப்படுத்த தொடர் சுற்றிவளைப்புக்களை மேற்க்கொள்கிறார்கள். ஆனால் போதைப்பொருளை கட்டுப்படுத்த வேண்டும் என்றால் சட்டவிரோதமாக செயற்படும் பொலிஸாரை இனங்கண்டுகொள்ள வேண்டும் என்று எதிர்க் கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

Read more...

தேர்தல் நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்படும் - வஜிர அபேவர்தன.

ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அனைத்து அரசியல் கட்சிகளின் இணக்கத்துடன், மாகாண சபைத் தேர்தலை நடத்தும் செயற்பாடு துரிதப்படுத்தப்படும் என, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்ற அமைச்சர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் இடம்பெற்ற அதிகாரிகளுடனான சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே ,அமைச்சர் வஜிர அபேவர்தன இதனை கூறினார்.

அமைச்சராக இருக்கின்ற போதிலும், தனது விருப்பப்படி, தனிப்பட்டு எந்த முடிவுகளை எடுக்க முடியாது.

மாகாண சபைத் தேர்தல் நடத்தப்படுவதற்கு முன்பாக தேர்தலை, எந்த முறையில் நடத்துவது என்ற ஒரு பொதுவான நிலைப்பாடு எட்டப்பட வேண்டும் என, அனைத்து அரசியல் கட்சிகளும் கருத்துத் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் அனைத்து மாகாண சபைகளுக்கும் ஒரே நேரத்தில், தீர்மானிக்கப்பட்ட திகதியில் நடத்தப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் அரசாங்கம் உள்ளது.

எது எவராக அமைந்தாலும், தேர்தலை நடத்துவது தொடர்பான நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்படும் என, அமைச்சர் வஜிர அபேவர்தன குறிப்பிட்டார்.

Read more...

தமிழர்களின் அழுகுரலை, சொந்தக் குரலாக கேட்கிறேன் - சுரேன் ராகவன்.

தமிழ் மக்களின் அழுகுரலை தனது சொந்த குரலில் கேட்பதாக, வடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி, சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார்.

ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே, வடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி, சுரேன் ராகவன் இதனை தெரிவித்துள்ளார்.

வடக்கு மாகாணத்தின் 32 வருட வரலாற்றில் நியமிக்கப்பட்ட முதலாவது தமிழ் மொழி ஆளுநர் தாமே. அதனால், தமிழ் மக்களின் அழுகுரலை எனது சொந்தக் குரலில் கேட்கக் கூடியவாறு உள்ளது. இந்த நியமனத்தில் ஜனாதிபதியின் ஒரு அரசியல் சமிக்ஞை உள்ளது என்று தான் நினைப்பதாக, அவர் தெரிவித்தார்.

குறிப்பாக இலங்கை பல கலாசார மற்றும் பல மொழியியல் சமுதாயத்துடனான ஒரு நாடாகும். மேலும் தமிழர்கள் தங்கள் உரிமைகளை ஒரு பிரிக்க முடியாத நாட்டில் சந்தித்திருக்கிறார்கள்.

மேலும் இந்த நியமனத்தால், வடக்கு தமிழ் மக்களின் அழுகை மற்றும் வேண்டுகோளை அவர்களது சொந்த மொழியில் என்னால் கேட்க முடியும். அது சமூக குணமாகும். அத்தோடு மீள்குடியேற்றம் மற்றும் புனர்வாழ்வு ஆகியவற்றில் எனது முன்னுரிமை இருக்கும்.

இந்தியாவில் சுமார் 100,000 இலங்கை அகதிகளை இன்று நாம் கொண்டுள்ளோம். அவர்கள் தாய் நாட்டுக்கு திரும்புவதற்கான உரிமை உண்டு. இங்கு கேள்வி என்னவென்றால், அவர்கள் திரும்பி வந்தால் எங்கே தங்கலாம்? அவர்களுக்கு நிலம் தேவை.

யுத்தம் முடிவடைந்த 2009 ஆம் ஆண்டில் இருந்து இன்று வரை இராணுவம் அரச நிலத்தையும், தனியார் நிலத்தையும் ஆக்கிரமித்துள்ளது. 2010இல் இருந்து ஆக்கிரமிக்கப்பட்ட நிலத்தின் தனியார் மற்றும் அரச காணிகள் 90 வீதமானவை விடுவிக்கப்பட்டுள்ளன.

இங்கு இடம்பெயர்ந்த மக்களை இங்கு மீள்குடியேற்றுவதற்கும் முன்னுரிமை அளிக்கப்படும்.

சிலர் இன்னமும் யாழ்ப்பாணத்தில் முகாம்களில் வாழ்கிறார்கள். அவர்கள் மீனவர்கள் என்றால், கடலுக்கு அருகில் நிலங்களைக் கொண்டிருக்க வேண்டும்.

ஆனால் சில மூலோபாய காரணங்களுக்காக இராணுவம் கடற்கரையோர நிலத்தை விடுவிக்க முடியாது என்றால், இடம்பெயர்ந்தோர் மாற்று இடங்களில் மீள் குடியேற்றப்படுவார்கள்.

இப் பகுதியில் 65,000 வீடுகள் போரில் சேதமடைந்துள்ளன என மதிப்பிடப்பட்டுள்ளது. அவற்றை மீண்டும் கட்டுவதற்கான முயற்சிகள் வெற்றிகரமாக இல்லை. இன்று, வடக்கு அபிவிருத்தி முன்னுரிமை பெற்றுள்ளது. யாழ்ப்பாணத்தில் 16,000 முன்னாள் போராளிகள் உள்ளனர்.

இங்குள்ள விவசாயிகள், மீனவர்கள் மற்றும் வியாபாரிகள் அடிமட்டத்தில் உள்ளனர். ஆகையால், எனது கவனம் விவசாய மற்றும் கடற்தொழில் பக்கம் இருக்கும் என, வடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி, சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார்.

Read more...

வவுனியா, பெரிய கோமரசங்குளத்திலுள்ள மக்கள், உண்ணாவிரத போராட்டம்.

வவுனியா, பெரிய கோமரசங்குளத்தின் யேசுபுரம் பகுதியிலுள்ள மக்கள், உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த பகுதியிலுள்ள சிறிய மலைக் குன்றில் மேற்கொள்ளப்படும் கல்லுடைப்பு நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, இந்த மக்கள் இன்று குடில் ஒன்றை அமைத்து, தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

இந்த பிரதேசத்தில் கல் உடைப்பதால் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுவதுடன், பொதுமக்களின் வீடுகளில் வெடிப்புகள் உருவாகுவதாக பொதுமக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

அத்துடன் கல்லுடைப்பதற்கு பயன்படும் வெடிபொருட்களிலிருந்து பரவுகின்ற நச்சுதன்மையை, குழந்தைகள் சுவாசிக்கும் போது அவர்களுக்கு பல அசௌகரியங்கள் ஏற்படுவதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.

குறித்த விடயம் தொடர்பாக வவுனியா அரச அதிபரிடம் கோரிக்கை விடுத்ததாக தெரிவித்த மக்கள், இதையடுத்து குறித்த பகுதியில் கல் உடைப்பதால் பாதிப்புகள் ஏற்படுகின்றதா? என்று அதிகாரிகள் குழு ஆய்வு செய்ததன் பின்னர் கல் உடைப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.

எனினும் குறித்த ஆய்வு நடவடிக்கையின் போது சிறிய அளவிலான வெடிபொருட்களே பயன்படுத்தபட்டதாகவும், தற்போது மிகவும் சக்தி வாய்ந்த வெடிபொருட்கள் பயன்படுத்தப்படுவதாகவும் குற்றஞ்சாட்டும் மக்கள், குறித்த மலையும் அதனை அண்டியுள்ள காணிகளும் எமது கிராமத்திற்குரியவை எனவும், அந்த வளத்தை இல்லாமல் செய்வதை நாம் விரும்பவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

எனவே குறித்த மலையில் கல்லுடைக்கும் பணிக்கு முற்று முழுதாக தடைவிதிக்கப்பட வேண்டும் எனத் தெரிவித்து, வவுனியா, பெரிய கோமரசங்குளத்திலுள்ள மக்கள், இன்று உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

Read more...

சுதந்திர தினத்தில், 545 சிறைக்கைதிகள் விடுதலை - ஏமாற்றம் கண்ட அரசியல் கைதிகள்.

நாளை கொண்டாடப்படவுள்ள சுதந்திர தினத்தை முன்னிட்டு, 545 சிறைக்கைதிகள் விடுதலை செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் விடுதலை செய்யப்படும் சிறைக் கைதிகளில், எந்த தமிழ் அரசியல் கைதிகளும் இல்லை என, அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பு தெரிவித்துள்ளது.

சுதந்திர தினத்தை முன்னிட்டு 4 பெண்கள் உட்பட 545 சிறைக் கைதிகள், ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் நாளைய தினம் விடுவிக்கப்படவுள்ளனர்.

அந்த வகையில் விடுவிக்கப்படவுள்ள சிறைக் கைதிகளின் பட்டியலில் தமிழ் அரசியல் கைதிகள் எவரும் இல்லை என, அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் ஏற்பாட்டாளர் அருட்தந்தை சக்திவேல் அடிகளார் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் 71 ஆவது சுதந்திர தினம், நாளைய தினம் அனுஷ்டிக்கப்படவுள்ளது. இந்த நிகழ்வை முன்னிட்டு, இன்றும் பல ஒத்திகை நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

இதன் காரணமாக, கொழும்பு காலி முகத்திடல், லோட்டஸ் சுற்று வட்டம் ஆகிய பகுதிகளில், பாரிய வாகன நெரிசல் ஏற்பட்டுருந்தமை குறிப்பிடத்தக்கது.

Read more...

வடக்கில் 5 ஆயிரம் வீடுகளை நிர்மாணிக்க, நிதி ஒதுக்க முடியாது – அரசாங்கம் திட்டவட்டம்.

வடக்கில் ஐயாயிரம் வீடுகளை நிர்மாணிக்க, நிதி ஒதுக்க முடியாது என, அரசாங்கம் தெரிவித்துள்ளது.

வடக்கு மற்றும் கிழக்கில் யுத்தத்திற்குப் பின்னர் இடம்பெயர்ந்தவர்களுக்கு, செங்கலினாலான 25,000 வீடுகளை நிர்மாணிப்பதற்கு, ஐக்கிய நாடுகள் வாழ்விடப் பாதுகாப்பு, மற்றும் ஐக்கிய நாடுகள் திட்ட அமுலாக்கல் நிறுவனத்தால் வடக்கிற்கான வீடமைப்பு திட்டம் அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் குறித்த திட்டத்தின் செலவிற்கு ஐக்கிய நாடுகள் வாழ்விடப் பாதுகாப்பு மற்றும் ஐக்கிய நாடுகள் திட்ட அமுலாக்கல் நிறுவனத்தின் திறை சேரியில் இருந்து, நிதி ஒதுக்கீடு செய்ய முடியாது என அரசாங்கம் வலியுறுத்தியுள்ளது.

எனினும் அடுத்து வரவுள்ள வரவு-செலவுத் திட்டத்தில், கிழக்கு மாகாணத்தில் கொங்கிரீட்டிலான 7 ஆயிரம் வீடுகளை அமைப்பதற்கு, அரசாங்கம் 8 பில்லியன் ரூபாயை ஒதுக்கியுள்ளது. அதற்கான கட்டுமானப் பணிகளை மேற்கொள்ள, அண்மையில் ஒரு உள்ளூர் நிறுவனமும் இணக்கம் வெளியிட்டுள்ளது.

கடந்த 2015 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் இருந்து, வடக்கு மற்றும் கிழக்கில் முதற்கட்ட வீடுகளை அமைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதும், அவை இடைநிறுத்தப்பட்டன.

அந்த வகையில் தனித் தனியாக, 10,000 க்கும் மேற்பட்ட செங்கல் வீடுகளை தற்காலிகமாக அமைப்பதற்கு, இடைக்கால கணக்கு அறிக்கை மூலம் பணம் ஒதுக்கப்பட்டது.

இந்நிலையில் கடந்த ஆண்டு இதற்கான ஐ.நா.வாழ்விடப் பாதுகாப்பு மற்றும் ஐக்கிய நாடுகள் திட்ட அமுலாக்கல் நிறுவனத்தின் ஆரம்ப முயற்சியை அமைச்சரவை அங்கீகரித்தது. இருப்பினும், ஒப்பந்த கைச்சாத்து தாமதமானது.

இவ்வாரத்திற்கு முன்னதாக, பிரதமரின் அலுவலகம் இரண்டு அமைப்புகளின் தலைவர்களை அழைத்து திட்டத்திற்கான நிதிக் கருவூலத்தில் இருந்து, பணத்தை ஒதுக்கீடு செய்ய முடியாது என்றும் இதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு எதிர்ப்புத் தெரிவித்திருந்ததாகவும் செய்திகள் கசிந்தன.

குறிப்பாக, இந்த திட்டமானது உள்ளூர் வங்கியிலிருந்து நிதியுதவி பெறப்பட்டு, மூன்று வகையாக வீடமைப்பு திட்டங்களை கொண்டதாக அமைந்தது. குறிப்பாக முதல் வீட்டிற்கு 1,099,500 ரூபாயும், இரண்டாவது 1,117,700 ரூபாயும் மூன்றாம் 1,116,800 ரூபாயும் என வகுக்கப்பட்டது.

இவ்வாறு வேறுபட்ட வகையை அறிமுகப்படுத்தினால், அது பயனாளிகளிடையே தேவையற்ற சிக்கல்களை ஏற்படுத்தும் என, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரனும் குற்றம் சுமத்தியிருந்தார்.

கடந்த சில வருடங்களாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாதிரி வீடுகளை ஆராய்ந்து, வேறு வகையான சமர்ப்பணங்களை முன்வைத்துள்ளனர்.

இந்த நிலையிலேயே குறித்த அபிவிருத்தித் திட்டதிற்கு ஏற்ற நிதி, தம்மிடம் இல்லையென, அரசாங்கம் தெரிவித்துள்ளது.

Read more...

கட்டுநாயக்க விமான நிலையத்தின் உயர் பாதுகாப்பு வலயத்தை ஒளிப்பதிவு செய்த 4 வெளிநாட்டவர்கள் கைது

''ட்ரோன்'' கெமரா மூலம் உயர் பாதுகாப்பு வலயத்திலுள்ள கட்டுநாயக்க விமான நிலையத்தை ஔிப்பதிவு செய்த மாலைதீவுப் பிரஜைகள் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த நால்வரில் பெண் ஒருவரும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த நால்வரும் நேற்று இரவு கைது செய்யப்பட்டதுடன் அவர்கள் 19, 22 மற்றும் 23 வயதானவர்கள் என்று பொலீசார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சந்தேகநபர்கள் தொடர்பில் கடான பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்ற நிலையில் அவர்கள் இன்று நீர்கொழும்பு நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது

Read more...

காணாமல்போன 4 வயது சிறுமியை தாயே கொன்று ஆற்றில் வீசியுள்ளார். தாய் வாக்குமூலம்.

புத்தளம் – கருவலகஸ்வௌ -நீலபெம்ம பகுதியை சேர்ந்த குறித்த 4 வயது சிறுமி, கடந்த 29 ஆம் திகதி முதல் காணாமற் போயுள்ளதாக சிறுமியின் தாய், பொலிஸில் முறைப்பாடு செய்திருந்தார். முறைப்பாட்டின் அடிப்படையில் பொலிஸார் பல சுற்றிவளைப்பு தேடுதல்களை மேற்கொண்டபோதும் சிறுமியை கண்டு பிடிக்க முடியாதிருந்தது.

இந்நிலையில் அயலவர்கள் சிறுமிக்கு அவரது குடும்பத்தினராலேயே ஆபத்து நிகழ்ந்திருக்கலாம் என பொலிஸாரிம் சந்தேகம் தெரிவித்ததை அடுத்து தாயரிடம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டனர்.

விசாரணைகளின்போது தானே குழந்தையை கொன்று ஆற்றில் வீசியதாக தாயார் தெரிவித்துள்ளார். இதையடுத்து சிறுமியின் உடலத்தை தேடும் பணிகளில் பொலிஸார், கடற்படை மற்றும் சுழியோடிகள் இணைந்துள்ளார்கள்.

Read more...

தேசிய அரசாங்கமா? நீதிமன்றுக்கு செல்வோம்! மிரட்டுகிறார் டலஸ்

தேசிய அரசாங்கமொன்றை ஸ்தாபித்துள்ளதாகக் கூறப்படும் விடயம் அரசியலமைப்பை மீறும் செயல் எனவும், குறித்த பிரேரணைக்கு எதிராக நீதிமன்றத்தை நாடவுள்ளதாக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.

அரசியலமைப்புக்கு முரணாண இந்த யோசனையை நிகழ்ச்சிநிரலில் உள்ளடக்க வேண்டாம் என்ற கோரிக்கையை சபாநாயகரிடம் முன்வைக்கின்றோம்.

நாட்டின் அரசியலமைப்பில், 46 (5) ஆம் சரத்தை மீறுவதாகத் theriviththu நீதிமன்றத்தை நாடவுள்ளோம் என்றும் பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும மேலும் தெரிவித்துள்ளார். இது மாத்திரமின்றி 30க்கும் அதிக அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களை நியமிக்க வேண்டாம் என ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுக்கவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும மேலும் குறிப்பிட்டுள்ளார்.


Read more...

கம்பெரலிய வேலைத் திட்டத்தின் அபிவிருத்தியில் இடையூறு - பிரதமர்

நாட்டின் சில பகுதிகளில் கம்பெரலிய வேலைத் திட்டத்தின் அபிவிருத்தி திட்டங்களுக்கு, பல இடையூறு ஏற்படுத்தப்படுவதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க குற்றம் சுமத்தியுள்ளார்.

அலரி மாளிகையில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே பிரதமர் ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டார்.

ஐக்கியத் தேசியக் கட்சியின் வெற்றியை, எந்த சக்தியாலும் தடுத்து நிறுத்த முடியாது

பெரும்பான்மையை பெற்று அபிவிருத்தித் திட்டங்களை முன்னோக்கி கொண்டு சென்று நாட்டுக்கு நன்மையை பெற்றுத்தர தாம் நடவடிக்கை எடுத்து வருவதாக, பிரதமர் தெரிவித்தார்.

இந்த திட்டத்தில் ஒரு பகுதியான கம்பெரெலிய திட்டத்தில் இடையூறு விளைவிப்பவர்களுக்கு எதிராக, சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும், இந்த திட்டத்திற்கு கைகோர்க்குமாறு, ஐக்கியத் தேசியக் கட்சி சாராதவர்களையும் கைகோர்க்குமாறு, பிரதமர் ரணில் வேண்டுகோள் விடுத்தார்.

Read more...

சட்டவிரோதமாகத் தங்கியுள்ளவர்கள் தொடர்பில் அறிவிக்க விசேட தொலைபேசி இலக்கம்

இலங்கையில் சட்டவிரோதமாகத் தங்கியுள்ளவர்கள் தொடர்பில் அறிவிப்பதற்கு, விசேட தொலைபேசி இலக்கமொன்றை குடியவரவு குடியகல்வுத் திணைக்களம் அறிவித்துள்ளது.

எதிர்வரும் செவ்வாய்க்கிழமை முதல் இந்தத் தொலைபேசி இலக்கத்தை பயன்படுத்த முடியும் என்று திணைக்களத்தின் விசாரணைப் பிரிவின் பிரதி நிர்வாக அதிகாரி எம்.ஜி.வி. காரியவசம் தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, 011-574 99 99 என்ற தொலைபேசி இலக்கம் 24 மணித்தியாலங்களும் செயற்படும் வகையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக விசாரணைப் பிரிவின் பிரதி நிர்வாக அதிகாரி எம்.ஜி.வி. காரியவசம் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Read more...

புதிய அரசியல் அமைப்பு இவ்வாறு தான் அமைய வேண்டும் - கர்டினால் மெல்கம் ரஞ்ஜித் ஆண்டகை

புதிய அரசியல் அமைப்பு தொடர்பில் கர்டினால் மெல்கம் ரஞ்ஜித் ஆண்டகை குறிப்பிட்டுள்ளார்.

வட கிழக்கு மக்களின் உண்மையான தேவைகள் மற்றும் எழுந்துள்ள பிரச்சினைகளை என்பவற்றைத் தீர்ப்பதற்கான சமய மற்றும் அரசியல் ரீதியிலான தேசிய மட்ட கலந்துரையாடல்களை நடாத்தி, அதன் மூலம் அடையாளம் காணப்படும் தீர்வுகளை உள்ளடக்கியதாக புதிய அரசியலமைப்பு தயார் செய்யப்பட வேண்டும் என ரஞ்ஜித் ஆண்டகை குறிப்பிட்டுள்ளார்.

அவ்வாறில்லாமல், 9 மாகாணங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் அமைக்கப்படும் சட்ட திட்டங்களினால் முழு நாடும் சிக்கல்களுக்குள் மாட்டிக் கொள்வதாகவும் கர்டினால் மெல்கம் ரஞ்ஜித் ஆண்டகையை மேற்கோள் காட்டி, இலங்கைக்கான சர்வதேச அமைப்பின் தலைவர் சுனில் சந்திரகுமார தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read more...

இலங்கையில் புற்றுநோய் நோய் தொடர்பில், வெளிவந்த அதிர்ச்சி தகவல்.

இலங்கை பெண்களில் பெருமளவிலானவர்கள் புற்று நோயினால் பாதிக்கப்பட்டிருப்பது அவதானிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இலங்கை பெண்களில் அதிகளவிலானவர்கள் மார்பகப் புற்றுநோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கு அடுத்தபடியாக பெண்கள் எதிர்நோக்கியுள்ள பாதிப்பு கர்ப்பப்பை புற்றுநோய் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த தகவலை சுகாதார மேம்பாட்டுச் சபையின் பணிப்பாளர் வைத்தியர் பபா பலிஹவடன குறிப்பிட்டுள்ளார். இந்த நிலையில் பெண்களை அதிகளவில் தாக்கும் புற்று நோயை கட்டுப்படுத்துவதற்காக பபில்லோமா (எச்.பி.வி.) எனும் தடுப்பூசி போடும் திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.

11 வயதுக்கு மேற்பட்ட பெண் பிள்ளைகளுக்கு அரச பாடசாலைகளில் இந்த தடுப்பூசி போடும் நடவடிக்கை முன்னெடுக்கப்படுகின்றது.

இந்த ஆபத்தான சூழ்நிலையிலிருந்து பெண் பிள்ளைகளை பாதுகாப்பதற்கு பெற்றோர் முன்வர வேண்டுமெனவும் சுகாதார மேம்பாட்டுச் சபையின் பணிப்பாளர் வைத்தியர் பபா பலிஹவடன வேண்டுகோள் விடுத்துள்ளார். இதனிடையே கடந்த 2017ஆம் ஆண்டு கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயிலிருந்து பெண்களைப் பாதுகாக்கும் நோக்கில், எச்.பி.வி. எனும் தடுப்பூசி போடும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.

இந்த நிலையில் இறுதியாக மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பின் பிரகாரம் கடந்த 2018ஆம் ஆண்டில் மாத்திரம் இலங்கையில் புற்றுநோயினால் 29 ஆயிரத்து 843 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார மேம்பாட்டுச் சபையின் பணிப்பாளர் வைத்தியர் பபா பலிஹவடன
குறிப்பிட்டார்.

Read more...

தேசிய சுதந்திரதின நிகழ்வுவின், அணிவகுப்பு மரியாதையில் 5848 படைவீரர்கள்.

இலங்கையின் 71ஆவது தேசிய சுதந்திரதின நிகழ்வின் அணிவகுப்பு மரியாதையில், 5848 படைவீரர்கள் ஈடுபடுத்தப்படவுள்ளதாக, இலங்கை இராணுவம் அறிவித்துள்ளது.

இலங்கையின் 71ஆவது தேசிய சுதந்திரதின நிகழ்வுகள் நாளை இடம்பெறவுள்ளன.

இந்த நிலையில், தேசிய சுதந்திரதின நிகழ்வுகளுக்கான ஒத்திகைகள் இடம்பெற்று வருகின்றன.

இந்த முறை, இடம்பெறவுள்ள தேசிய சுதந்திரதின நிகழ்வுகளில் 5848 படைவீரர்கள் ஈடுபடுத்தப்படவுள்ளதாக, இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் சுமித் அத்தபத்து தெரிவித்துள்ளார்.

அதன்படி இராணுவத்தை பிரதிநிதித்துவப்படுத்தி 3872 பேரும், கடற்படையை பிரதிநிதித்துவப்படுத்தி 1044 பேரும், விமானப்படையை பிரதிநிதித்துவப்படுத்தி 932 பேரும் அணிவகுப்பு மரியாதையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக சுமித் அத்தப்பத்து தெரிவித்துள்ளார்.

அத்துடன் பொலிஸ்திணைக்களத்தை பிரதிநிதித்துவப்படுத்தி, விசேட படைப்பிரிவு உட்பட 920 பேரும், தேசிய மாணவர் செயலணியைப் பிரதிநிதித்துவப்படுத்தி 302 பேரும் இம்முறை தேசிய சுதந்திர தின அணி வகுப்பு மரியாதையில் பங்கேற்கவுள்ளனர்.

தேசிய சுதந்திரதின நிகழ்வுகளுக்கான அணிவகுப்பு மரியாதையின் ஒத்திகை காரணமாக, இன்று காலை 6.30 மணி முதல் காலிமுகத்திடலை அண்மித்த பகுதிகள், மூடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read more...

Saturday, February 2, 2019

நாளொன்றுக்கு இரண்டு பில்லியன் ரூபாய்களை நாட்டுக்கு சேதமாக்கி நிற்கின்றது பிஎஸ்எம் சாள்ஸ் ன் இடமாற்றம்.

சுங்கத்திணைக்களத்தின் இயக்குநர் நாயகமாக கடமையாற்றிய திருமதி சாள்ஸ் அவர்கள் இடமாற்றம் செய்யப்பட்டு அவ்விடத்திற்கு ஓய்வு பெற்ற கடற்படை அதிகாரி ஒருவர் நியமிக்கப்பட்டமைக்கு எதிராக சுங்கத் தொழிலாளர் சங்கங்களின் கூட்டணி தனது பலத்தை எதிர்ப்பை காட்டும் பொருட்டு பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுவருகின்றனர்.

குறித்த தொழிற்சங்கங்களின் பணி பகிஷ்கரிப்பினால் நாட்டுக்கு நாளொன்று 2 பில்லியன் ரூபாய்கள் நஷ்டம் ஏற்படுவதாக கணிப்பிடப்பட்டுள்ளது.

பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபட்டுள்ள தொழிற்சங்கங்கள் திருமதி சாள்ஸ் அவர்கள் பதவி மாற்றம் செய்யப்பட்டமைக்கான நியாயமான காரணத்தை தமக்கு தெரியப்படுத்தும் வரை கடமைக்கு திரும்பப்போவதில்லை என அறிவித்துள்ளதுடன் திருமதி சாள்ஸ் அவர்கள் சுங்கத் திணைக்களத்தில் இடம்பெற்ற மோசடிகளுக்கு எதிராக செயற்பட்டதன் காரணமாகவே அவரை இடமாற்றம் செய்துள்ளதாக குற்றஞ்சுமத்துகின்றனர்.

அத்துடன் சுங்கத் திணைக்களத்தில் நீண்ட நாட்களாக இடம்பெற்றுவந்த பாரிய மோசடிகளை தடுக்க திருமதி சாள்ஸ் அவர்கள் நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தாகவும் இவ்விடமாற்றமானது மீண்டும் மோசடிகளுக்கு இடம் கொடுப்பதாக அமையும் என்றும் அவர்கள் சாடுகின்றனர்.

சுங்கத்திணைக்களத்தில் திருமதி சாள்ஸ் அவர்கள் மேற்கொண்ட மாற்றத்திற்குரிய செயற்பாடுகள் தொடர்பில் இலங்கைநெட் அறிந்து கொண்டதாவது, மோசடிகளை செய்தார்கள் என சந்தேகிக்கப்படுகின்ற 7 சுங்க அத்தியட்சகர்களை சுங்கவரி சட்டத்தின் 137ம் பிரிவின் கீழ் தனக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தை பயன்படுத்தி கட்டாய விடுமுறையில் அனுப்பியிருந்தார். இந்த நிகழ்வானது சுங்க திணைக்களத்தின் வரலாற்றில் இடம்பெறாத ஒர் அதிரடி நடவடிக்கையாகும் எனவும் பதிவாகியுள்ளது.

மேலும் பிஎம்டபிள்யூ வாகன இறக்குமதியில் 16 பில்லியன் ரூபாய்கள் நாட்டுக்கு நஷ்டம் ஏற்படும் வகையான மோசடி ஒன்று இடம்பெற்றுள்ளது. இவ்விடயம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் குறித்த மோசடிக்கு அக்காலத்தில் சுங்க திணைக்களத்தின் இயக்குனர் நாயகமாக இருந்த சூரானந்த பெரேரா என்பவர் ஒத்தாசை புரிந்துள்ளமை நிரூபிக்கப்பட்டதுடன் அவருக்கு 1 லட்சம் ரூபா நஷ்ட ஈடு செலுத்த உத்திரவிடப்பட்டுள்ளது. இந்நிலையில் சுங்க திணைக்களத்தின் இயக்குனர் நாயகமாக நியமிக்கப்பட்ட திருமதி சாள்ஸ் குறித்த விசாரணையின் தீர்ப்பு ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் மீண்டும் நியாயமான விசாரணைகளை மேற்கொள்ளுமாறும் சட்ட மா அதிபர் திணைக்களத்திற்கு சிபார்சு செய்துள்ளார்.

அத்துடன் ஹர்ச என்ற நபருக்கு சொந்தமான Vehicle Lanka என்ற பெயர் கொண்ட கம்பனி ஒன்றினால் வாகனங்கள் மற்றும் உதிரிப்பாகங்களை இறக்குமதி செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றது. அவர்கள் வாகனங்களின் செசி பகுதியை இரு பாகங்களாக வெட்டி நாட்டினுள் இறக்குமதி செய்து அவற்றை ஒட்டி விற்பனை செய்கின்றனர். இதனால் நாட்டிற்கு பெரும் நஷ்டம் ஏற்படுகின்றது என்பதை உணர்ந்த திருமதி சாள்ஸ் மேற்படி செயற்பாட்டினையும் முடக்கியுள்ளார்.

மேலும் இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் ஊடாக இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையேயான வர்த்தக ஒப்பந்தத்தில் இலங்கையிலிருந்து இந்தியாவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் பல்வேறு பொருட்களுக்கு இந்தியாவில் 5 வீத வரியே விக்கப்படமுடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் ஊடாக இலங்கை விவசாயிகளுக்கு பாரிய இலாபம் ஒன்று கிடைக்கப்பெற்றுள்ளது. இதனை தவறாக பயன்படுத்தும் வர்த்தக மாபியாக்கள் இந்தோனேசியா மற்றும் ஈரான் பொருட்களை இலங்கைக்கு தற்காலிகமாக இறக்கி இங்கிருந்து இந்தியாவிற்கு ஏற்றுமதி செய்யும் நடவடிக்கை ஒன்றை மேற்கொள்கின்றனர். இதன் ஊடாக இலங்கை விவசாயிகளுக்கு பாரிய தீங்கு இழைக்கப்படுவதுடன் நாட்டுக்கு கிடைக்கப்பெறவேண்டிய இலாபம் கறுப்பாக மாற்றப்படுகின்றது. இந்த மோசடிக்கும் திருமதி சாள்ஸினால் முற்றுப்புள்ளி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள நிலையிலே அனைத்து மாபியாக்களும் இணைந்து அவரை இடமாற்ற அழுத்தம் கொடுத்துள்ளனர்.

மாவட்டம் ஒன்றின் செயலாளராகவிருந்த அவர் தற்போது நிதியமைச்சினுள் முடக்கப்பட்டுள்ளதாக அறியக்கிடைக்கின்றது. இச்செயற்பாட்டுக்கு எதிராக பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ள தொழிற்சங்கங்கள் தற்போது அத்தியாவசிய கடமைகளை மேற்கொண்டுவருகின்றனர். ஆனால் சாதகமான தீர்ப்பு கிடைக்காத பட்சத்தில் அவர்கள் முழு பகிஷ்கரிப்பில் இறங்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். அவ்வாறான நிலைமை ஏற்படுமாயின் அத்தியாவசியமான உணவுப்பொருட்கள் மற்றும் அத்தியாவசிய பொருட்களை துறைமுகத்திலிருந்து வெளியே கொண்டுவரமுடியாத நிலைமை ஏற்படின் அதன் விளைவுகள் பாரதூரமாகலாம்.

Read more...

தேர்தல் தொடர்பாக ஐ.தே.க. உறுப்பினர்களுக்கும், பிரதமருக்கும் இடையில், முக்கிய சந்திப்பு.

அடுத்து இடம்பெறவுள்ள மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்தும் முறைமை தொடர்பாக, பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்களுக்குமிடையிலான விஷேட கலந்துரையாடலொன்று அடுத்த வாரம் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று டம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட, அமைச்சர் சம்பிக்க ரணவக்க இதனை தெரிவித்தார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டதன் படி ஒன்பது மாகாணங்களுக்குமான தேர்தலை நடத்துவதாக இருந்தால் ஆட்சிக் காலம் நிறைவடையாமலுள்ள ஊவா மாகாண சபை கலைக்கப்பட வேண்டும்.

அத்தோடு தேர்தல்கள் பழைய முறைமையில் நடத்தப்பட வேண்டும் எனவும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தமது ஆலோசனையில் தெரிவித்துள்ளார்.

இவ்வாறான நிலையில், புதிய தேர்தல் முறைமையில் நாடாளுமன்றத்தில் அனைத்து உறுப்பினர்களது ஒத்துழைப்புடனும் திருத்தங்களை மேற்கொள்ள வேண்டிய தேவையுள்ளது.

இந்த இக்கட்டான நிலையில், ஒரு முடிவை எட்டும் முகமாக அடுத்த வாரம் கஇது தொடர்பான கலந்துரையாடலொன்றுக்குm பிரதமர் ரணில் விக்ரமசிங்க, தனது கட்சியின் உறுப்பிப்பினர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார் என, அமைச்சர் சம்பிக்க ரணவக்க மேலும் தெரிவித்தார்.

Read more...

புலிகளின் பெயரில் துண்டுப்பிரசுரம் - ஜனநாயக போராளிகள் கட்சி.

தமிழீழ விடுதலைப் புலிகளின் பெயரில் கண்டெடுக்கப்பட்ட துண்டுப் பிரசுரம், முன்னாள் போராளிகளுக்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளதாக ஜனநாயகப் போராளிகள் கட்சியின் ஊடகப் பேச்சாளர் க. துளசி தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் கடந்த வாரம் வைரவ புளியங்குளப் பகுதியில் கண்டெடுக்கப்பட்ட விடுதலைப் புலிகளின் சின்னத்தைப் பயன்படுத்தி வெளியிடப்பட்டிருந்த துண்டுப் பிரசுரத்தினாலேயே, இந்த அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக ஜனநாயகப் போராளிகள் கட்சியின் ஊடகப் பேச்சாளர் க. துளசி தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் ஊடகவிலாளார்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் வழங்கிய போதே, அவர் இதனை தெரிவித்தார். கடந்த 2009 ஆம் ஆண்டிற்குப் பின்னர் விடுதலைப் புலிகளின் சகல செயற்பாடுகளும் முடக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் தற்போது விடுதலைப் புலிகளின் பெயரைப் பயன்படுத்தி சர்வதேச மட்டத்திலும், இலங்கைக்குள்ளும் ஏற்படுத்தப்படுகின்ற இந்த அநாவசிய செயற்பாடுகள் மிக நீண்டகால அடிப்படையிலேயே தொடர்ந்தும் இலங்கையை ஒரு பாரிய நெருக்கடிக்குள் தள்ளுமென நாம் நினைக்கின்றோம்.

எனவே இலங்கையில் புலனாய்வுத் துறை, சட்டத்துறை, நீதித்துறை இருக்கின்ற நிலையிலே இந்த வதந்திகளுக்கு காரணமாக இருப்பவர்களை அடையாளம் காண்பது, மிக இலகுவான விடயமாகவே உள்ளது.

இங்கு நடைபெறுகின்ற ஒவ்வாரு சம்பவங்களையும் மிக ஆழமாக ஆராய்ந்து இலங்கையை மதிப்பு மிகுந்த நாடாக, ஒரு சுதந்திர நாடாக சகல மக்களும் வாழக் கூடிய ஒரு நாடாகக் கொண்டு செல்ல வேண்டியது அரசின் கடமை என்பதை, தாம் வலியுறுத்துவதாக, ஜனநாயகப் போராளிகள் கட்சியின் ஊடகப் பேச்சாளர் க. துளசி தெரிவித்துள்ளார்.

Read more...

இலங்கை நீதிமன்றங்களில் 7 லட்சத்து 30 ஆயிரத்துக்கும் அதிகமான வழக்குகள் தேக்கம் - அமைச்சர் தலதா அத்துக்கோரல

இலங்கையில் உள்ள நீதிமன்றங்களில் தற்போதுவரை 7 லட்சத்து 30 ஆயிரத்துக்கும் அதிகமான வழக்குகள் தேங்கிக் கிடப்பதாக அமைச்சர் தலதா அத்துக்கோரல தெரிவித்துள்ளார்.

சுமார் 500 மில்லியன் ரூபா செலவில் வெலிமடையில் அமைக்கப்படவுள்ள நீதிமன்ற கட்டிடத் தொகுதியொன்றுக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வில் பங்கேற்றபோது அவர் இதனைக் கூறியுள்ளார். இவ்வாறு தேங்கி கிடைக்கும் வழக்குகளை விசாரணை செய்து தீர்ப்பு வழக்குவதற்குத் தேவையான நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுத்துள்ளதாகவும் நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு  அமைச்சர் தலதா அத்துக்கோரல இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.


Read more...

எலும்புக்கூடுகளின் அறிக்கை வரும்போது தமிழ் மக்கள் அதிர்ச்சி அடைவர். சுமந்திரன்.

அமெரிக்கா கொண்டு செல்லப்பட்டுள்ள எலும்புக்கூடுகளின் அறிக்கை வரும்போது தமிழ் மக்கள் அதிர்சி அடைவர் என்றும் அதுவரைக்கும் தான் அவ்விடயம் தொடர்பில் கருத்துரைக்க விரும்பவில்லை என்றும் தெரிவித்துள்ளார் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரன்.

வெளிநாட்டு வானொலி ஒன்றுக்கு வழங்கிய விசேட செவ்வியில் இவ்விடயம் தொடர்பாக விரிவாக பதிலுரைக்க மறுத்த அவர் தெரிவித்துள்ளதாவது :

நூற்றுக்கணக்கில் மனித எலும்புக் கூடுகள், எச்சங்கள் மீட்கப்பட்ட மன்னார் புதைகுழி விடயத்தில், காபன் பரிசோதனை மூலம் அந்த எச்சங்களின் காலத்தை நிர்ணயம் செய்யும் நடவடிக்கைகள் அமெரிக்காவின் புளோரிடாவில் நடக்கின்றன. அதன்மூலம், அக்கொடூரங்கள்எ நடந்தேறிய காலம் உறுதிப்படுத்தப்படுகின்றபோது அது தமிழர் தரப்புகளுக்கும் அதிர்ச்சியை கொடுக்கும்.'

'மன்னார் புதைகுழி விடயத்தில் நாம் மௌனம் காக்கவில்லை. பல இடங்களில் அது குறித்துப் பேசியிருக்கின்றோம். நாடாளுமன்றத்திலும் பல முறை உரையாற்றியிருக்கின்றோம். இவ்விடயம் குறித்து முறையான விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என நாம் கேட்டிருக்கின்றோம்.

இதில், பிரதானமானது அந்தப் புதைகுழிச் சம்பவங்கள் எந்தக் காலப் பகுதியில் இடம்பெற்றவை என்பதைத் திகதியிடுவதாகும். அதை நாம் பலமுறை வலியுறுத்தியுள்ளோம்.

இப்போது அந்த எலும்புகள், எச்சங்களின் மாதிரிகள் அமெரிக்காவின் புளொரிடாவுக்கு அனுப்பப்பட்டு, ஓரிரு தினங்களுக்கு முன்னர் அது அங்கு போய்ச் சேர்ந்திருக்கின்றன.

காபன் பரிசோதனை மூலம் அவை எந்தக் காலத்துக்கு உரியவை என்பதை நாம் உறுதிப்படுத்திக் கூடியதாக இருக்கும்.

அதன் மூலம், அது எந்தக் காலப் பகுதிக்குரியது என்ற முடிவுகள் வெளியிடுகின்றபோது அது, தமிழ்த் தரப்புகளுக்கும் சில அதிர்ச்சிகளைக் கொடுக்கும் என்றுதான் நான் நினைக்கின்றேன்.

ஆகையினால் நாங்கள் இவ்விடயத்தை வலியுறுத்தாமல் இல்லை. யார்தான் அதற்குக் காரணமாக இருந்தாலும் அவர்கள் அதற்குப் பொறுப்புக்கூற வேண்டியவர்களாக இருப்பார்கள்.

இலங்கை அரசின் இராணுவமாக இருந்தாலும் நிச்சயமாகப் பொறுப்புக்கூற வேண்டியிருக்கும். அல்லது தமிழ்த் தரப்பிலே ஏதேனும் ஓர் ஆயுதக் குழு இதற்குக் காரணமாக இருந்தாலும் அவர்களும் இதற்குப் பொறுப்புக்கூற வேண்டிய தேவைப்பாடு இருக்கும்.

இந்திய அமைதி காக்கும் படை அந்த இடத்திலே இருந்திருக்கவில்லை என்று கூறப்படுகின்றது. அது குறித்தும் நாங்கள் அவதானிக்க வேண்டும்.

எந்தக் காலத்தில் இது நடந்தது என்பது உறுதியாகும்போது சில உண்மைகள் வெளியாகும். அதுவரைக்கும் அது குறித்து அதற்கு மேல் நான் ஏதும் சொல்ல விரும்பவில்லை. ஆனால், காலம் அறியப்படும்போது பல அதிர்ச்சிகள் எமக்கும் காத்திருக்கின்றன என்பது மட்டும் எனக்குத் தெரியும்' என்றார்.

Read more...

உப்பளத்தை மூடுமாறு கடற்றொழிலாளா்கள் மனித உாிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு!

யாழ்ப்பாணம் சாவகச்சேரி பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட தனங்கிளப்பு பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டு வருகின்ற தனியார் உப்பளத்தை தடுத்து நிறுத்த வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தின் சாவகச்சேரி பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட கடற்கரைப் பிரதேசங்களைச் சேர்ந்த 9 மீனவ சங்கங்களும் கிளிநொச்சி பச்சிலைப்பள்ளி பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட 4 மீனவ அமைப்புக்களும் இணைந்து கூட்டாக இக் கோரிக்கையை பல தரப்பினர்களிடத்திலும் விடுத்துள்ளன.

இக் கோரிக்கை தொடர்பில் உரிய பதில் கிடைக்காத நிலையில் மேற்படி அமைப்புக்களின் பிரதிநிதிகள் வெள்ளிக்கிழமை(1) மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ் பிராந்திய அலுவலகத்திற்கு சென்று முறையிட்டுள்ளனர். இதன் போது இந்த விடயத்திற்கு உடனடியாக தாம் நடவடிக்கை எடுக்க முடியாது எனவும் தொடர்பில் சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெளிவுபடுத்தி நடவடிக்கை எடுக்கமாறும் மனித உரிமை ஆணைக்குழுவினால் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாகவும் மேற்படி அமைப்புக்கள் தெரிவித்துள்ளன.

இவ்விடயம் தொடர்பில் அவர்கள் மேலும் தெரிவித்தள்ளதாவது..

சாவகச்சேரி பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட தனங்கிளப்பு பகுதியில் புதிதாக தனியார் உப்பளம் ஒன்று அமைக்கப்பட்டு வருகின்றது.; அதாவது தனங்கிளப்பு, கச்சாய், நாவற்குழி, பெரியமாவடி, கொயிலாகண்டி, மீசாலை, கெற்பெலி, மறவன்புலவு, கிலாலி, புலோப்பளை, அல்லிப்பளை கிழக்கு,கோவிந்தபுலம் கிராமங்களை அண்டிய 200 ஏக்கர் பரப்பு கொண்ட தனியார் உப்பளம் அமைக்கப்பட்டுக் கொண்டு இருக்கின்றது.

இதனால் மேற்கூறப்பட்ட கிராமங்களைச் சேர்ந்த 1500 மீனவர்கள் வாழ்வாதார ரீதியாகப் பாதிப்பை எதிர்நோக்கியுள்ளனர். இம் மீனவத் தொழிலாளிகள் இக் களப்பை நம்பியே தமது வாழ்வாதாரத்தைக் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே 1991 ஆம் ஆண்டு பாதுகாப்பு கருதி ஆணையிறவுப்பாலம் மூடப்பட்டதால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிப்படைந்து காணப்படுகின்றது. மேலும் உப்பளத்தை அமைத்து கடல் நீரை கிட்டத்தட்ட 200 ஏக்கர் பரப்பிற்குள் உள்வாங்குவதால் கடல்நீர் வற்றும். ஆகையினால் இதனையே நம்பியுள்ள நாம் எமது வாழ்வாதாரத் தொழிலை எவ்வாறு மேற்கொள்வது என்றும் கேள்வியெழுப்பியுள்ளனர்.

மேலும் கடல் கடல் மற்றும் அதனை அண்டிய பரப்பும் அதிக உவர்த்தன்மையாக மாற்றமடைந்து கொண்டிருக்கின்றது. இங்குள்ள கண்டல் தாவரங்கள் அழிவடைந்து விட்டது. இதனால் கடல்வாழ் மீனினங்கள் இறந்து கரையொதுங்கி வருவதுடன் உப்பளம் அமைக்கப்படுவதால் வெளியேறும் இரசாயன தாக்கத்தால் கடல்வாழ் உயிரினங்கள் முற்றாக அழிக்கப்பட்டு விடும் நிலை உருவாகும்.

தற்போது நாட்டில் காணப்படும் வரட்சியான காலநிலை யால் குடிநீர் வற்றி உள்ளது. அத்தோடு இவ்வாறான இராசாயனத் தாக்கம் ஏற்பட்டால் குடிநீர் மேலும் வற்றுவதுடன் உவர்த்தன்மையும் அடைந்துவிடும். குடிநீருக்கு மக்கள் திண்டாடும் நிலையும் வரும். அத்தோடு அதணை அண்டியுள்ள விவசாய நிலங்கள் அனைத்து விவசாயம் மேற்கொள்ள முடியாமல் உவர் புமியாக தரவைகளாக மாற்றமடையும் நிலை வந்து விடும். ஏற்கனவே மழைபெய்து காணப்படும் நிலையில் உப்பளம் வந்தால் இங்கு வாழும் மக்கள் எங்கு குடிபெயர்வது? மக்களுக்கு வாழும் சூழல் நிலம் அற்றுப் போகும் நிலை ஏற்படும்.

ஆகையினாலேயே இவ் உப்பளத்தை அமைக்க வேண்டாமென வலியுறுத்தி போராட்டங்களை நடாத்தி சாவகச்சேரி பிரதேச செயலருக்கும் மகஐர் ஒன்றை வழங்கியிருந்தோம். அதன் பிரதிகள் மாவட்ட அரசாங்க அதிபர் உள்ளிட்ட தரப்பினர்களுக்கும் வழங்கி வைத்திருந்தோம். ஆனால் இதற்கு நடவடிக்கை எடுக்கப்படாத நிலையிலையே மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு வந்திருக்கின்றோம். இங்கு அவர்கள் எமக்கு ஆலோசனைகளை வழங்கியிருக்கின்றனர். அதற்கமைய எமது அடுத்த கட்ட நடவடிக்கைகளை நாங்கள் மேற்கொள்ள்ளவுள்ளோம் என்றனர்.


Read more...

அமைச்சர் றிசாத் பதியுதீன் அவர்களுக்கு ஓர் திறந்த மடல்!

அமைச்சர் அவர்களே ! அஸ்ஸலாமு அலைக்கும்

முகநூல் எதற்காக உருவாக்கப்பட்டதோ தெரியவில்லை. ஆனால் முகநூல் இல்லாவிட்டால் உங்களுக்கு கட்சியும் இல்லை, உங்களை புகழ்பாடுவதற்கு எவரும் இருந்திருக்க வாய்ப்புமில்லை. அதற்காக மார்க்குக்கு நீங்கள் ரொம்பவும் கடமைப்பட்டுள்ளீர்கள்.

முஸ்லிம் காங்கிரஸ் மூலமாக அரசியல் அடையாளத்தினை பெற்றதன்பின்பு 2004 இல் தனிக்கட்சி ஆரம்பித்ததும், அரசியல் அதிகாரத்தை அனுபவிப்பதற்காக சிலர் உங்களோடு இணைந்தார்களே தவிர, முஸ்லிம் மக்கள் எவரும் உங்களது கட்சியையும், உங்களையும் ஏற்றுக் கொள்ளவில்லை.

எவ்வளவுதான் தனிக்கட்சி, தலைவர் என்று பாரியளவில் விளம்பரம் செய்தாலும், உங்களது சொந்த கட்சி மூலமாக இதுவரையில் தேர்தலில் நீங்கள் போட்டியிட்டதுமில்லை, வன்னி மாவட்டத்துக்கு வெளியே யாரும் உங்கள் கட்சியை கணக்கில் எடுக்கவுமில்லை.

இந்த நிலையில்தான் 2௦11 இல் “அரபு வசந்தம்” என்ற பெயரில் மத்திய கிழக்கின் துனீசியா என்ற நாட்டில் மக்கள் புரட்சி ஏற்பட்டது. இந்த புரட்சிக்கு செல்வாக்கு செலுத்தியது “முகநூல்” என்பது அன்று பேசப்பட்ட விடயமாகும்.

இதன் பின்புதான் இளைஞ்சர்கள் மத்தியில் முகநூல் பாவனை இலங்கையிலும் அதிகரித்ததுடன், உங்களது பார்வை முழுவதும் முகநூல் பக்கம் திரும்பியது.

இளைஞ்சர்களுக்கு இருந்த முகநூல் மோகத்தினை தனது அரசியல் பிரச்சாரத்துக்கு சாதகமாக பயன்படுத்துவதற்காக திட்டமிட்டு ஏராளமான பணத்தை செலவழித்து வருகின்றீர்கள்.

வேலையில்லாத பகுத்தறிவில்லாத இளைஞ்சர்களுக்கு தொழில் வழங்குகின்றேன் என்ற போர்வையில் அவர்களை கூலிக்கு அமர்த்தி உங்களை புகழ்பாட செய்வதுடன், முஸ்லிம் காங்கிரசையும், அதன் தலைவரையும் ரொம்பவும் கேவலமாக வசைபாட செய்தீர்கள்.

அப்போது முகநூல் பாவனை இளைஞ்சர்களிடம் மட்டும் இருந்ததனால் அரசியல் தெரியாத அப்பாவி இளைஞ்சர்கள் உங்களது வசைபாடல்களை உண்மை என்று நம்பினார்கள்.

பொய்யான உங்களது வசைபாடல்களை தொடர்ந்தும் பொறுத்துக்கொள்ள முடியாமல், சில வருடங்களின் பின்பு உங்களது பிரச்சாரத்தின் ஆபத்தினை புரிந்துகொண்டு தற்காப்பு நடவடிக்கைக்காக நாங்கள் களத்தில் இறங்கினோம்.

அதாவது இந்த நாட்டு முஸ்லிம்களுக்கும், உங்களுக்கும் அரசியல் அடையாளம் தந்த முஸ்லிம் காங்கிரசை அழியவிடாது பாதுகாப்பதற்காக எந்தவித எதிர்பார்ப்புமின்றி உங்களது போலி பிரச்சாரத்துக்கு எதிராக உண்மையை மக்களுக்கு எடுத்துரைத்து வருகின்றோம்.

நாங்கள் ஒருபோதும் உங்களது அரசியலுக்கு எதிராக குறுக்கே நிக்கவுமில்லை, முகநூல் அரசியலை நாங்கள் வலிந்து ஆரம்பிக்கவுமில்லை, யாரும் எங்களை பிரச்சாரம் செய்யும்படி கட்டளையிடவுமில்லை.

ஆனால் உங்களால் அமர்த்தப்பட்ட கூலிப்படைகள் மூலமாக வெளியிடப்படுகின்ற இட்டுக்கட்டப்பட்ட வசைபாடலுக்கு எதிர் பிரச்சாரம் மட்டுமே செய்து வருகிறோம்.

நீங்கள் முஸ்லிம் காங்கிரசை அழிக்கும் நோக்கில் முகநூல் மூலமாக எங்கள் கட்சிக்கும், எங்களது தலைவருக்கும் வசை பாடாமல் இருந்திருந்தால், நாங்கள் முகநூல் அரசியலுக்கு வந்திருக்க மாட்டோம்.

உங்களினால் கூலிக்கு அமர்த்தப்பட்ட அப்பாவி இளைஞ்சர்களைக் கொண்டு முகநூல் மூலமாக அவதூறு பரப்பும் அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கு நீங்கள் உடன்பட்டால், இன்றிலிருந்து நாங்களும் முகநூல் அரசியலுக்கு முடிவுகட்டுவதற்கு தயாராகவே உள்ளோம்.

நாங்கள் நாகரீகமான முறையில் அரசியல் பேசுகின்றபோது நீங்கள் எங்கள் மீது அநாகரிகமான முறையில் அவதூறு கூறுகின்றீர்கள்.

அதாவது யாரெல்லாம் முஸ்லிம் காங்கிரசுக்காக கடுமையாக வரிந்துகட்டிக்கொண்டு எழுதுகின்றார்களோ அவர்களை இலக்குவைத்து, அவ்வாறானவர்களை மூலைக்குள் முடக்கவேண்டும் என்ற நோக்கில் தனிப்பட்ட அவதூறுகளை அவர்கள் மீது பரப்புகிண்றீர்கள்.

இதில் உங்களுக்கு எந்தவித சம்பந்தமும் இல்லை என்று தட்டிக்கழித்துவிட முடியாது. ஏனென்றால் எங்கள்மீது அவதூறு பரப்புவதற்காக மாதாந்த சம்பளம் வழங்குவதுடன், தங்குமிடம், வாகனம், தொழில்நுட்ப உபகரணங்கள் போன்ற வசதிகளை செய்து கொடுத்து உட்சாகப் படுத்துகின்றீர்கள்.

இவ்வாறான வசதிகளை நீங்கள் வழங்காதிருந்திருந்தால் உண்ண வழியில்லாமல் இருக்கின்ற எவரும் எங்கள் மீது வசைபாட வந்திருக்கமாட்டார்கள், என்பது அனைவருக்கும் தெரிந்த விடயமாகும்.

ஆனால் இவ்வாறான எந்தவித வசதிகளும் எங்கள் தலைவர் எங்களுக்கு செய்து தரவில்லை. நாங்களே வலிந்து செயல்படுகின்றோம்.

வெளியே நல்லவர்போன்று நடித்தாலும், எங்களுக்கு எதிரான அவதூறுகளை எழுதிவிட்டு அதனை உங்களுக்கு கான்பிக்கின்றபோது அதனை பார்த்து அளவில்லா ஆனந்தம் அடைகின்றீர்கள் என்ற செய்தியை கேள்வியுற்று ஆச்சர்யம் அடைந்தோம்.

அதிகார மமதையில் இருக்கின்ற உங்களுக்கு உள்ளார்ந்த இறை அச்சம் இருக்குமென்று கூறமுடியாது. செய்த்தான் அதனை மறக்கடித்துவிடுவான்.

நாங்கள் எவ்வளவுதான் தொழுதாலும், அற்ப அரசியலுக்காக பிறர்மீது அவதூறு கூறுவதன்மூலம் நிரந்தரம் இல்லாத இந்த வாழ்க்கையில் எதனை அடையப்போகின்றீர்கள் ? அவ்வாறு பெறுகின்ற பதவிகள் அல்லாஹ்விடத்தில் ஏற்றுக்கொள்ளப்படுமா ?

எங்களது மரணத்தின் பின்பு இந்த கூலிகள் யாரும் உங்களுக்காக சிபாரிசு செய்ய வரப்போவதில்லை. மாறாக இந்த கூலிகளுக்காக நீங்கள் சிபாரிசு செய்யவும் முடியாது. மறுமையில் அவர்கள் அனைவரும் உங்களுக்கு எதிராகவே சாட்சி கூறுவார்கள்.

இவ்வாறு அவதூறு கூறுவதை நிறுத்திவிட்டு அரசியலை கற்றுக்கொடுங்கள். உங்களது கட்சியின் கொள்கை, எதிர்கால திட்டம், சமூகத்துக்கான உங்களின் பங்களிப்பு போன்றவற்றை பேசுங்கள்.

நாங்களும் எங்களது அரசியலை பேசுகிறோம். இவ்வாறு நாங்கள் ஆரோக்கியமான அரசியலை விவாதிகும்போது இதில் எது சரி ? எது பிழை என்பதனை மக்கள் தீர்மானிக்கட்டும் என்று கூறுவதுதான் இந்த கடிதத்தின் நோக்கமாகும்.

இங்கே நாங்கள் உங்களது ஊடகத்தைப் பற்றி பேசவில்லை. ஊடகத்தில் உத்தியோகபூர்வமாக பணிபுரிவது வேறு, அதற்கப்பால் முகநூல்களில் வசைபாடுவது என்பது வேறு.

எனவே அரசியல் பக்குவமும், மறுமை பற்றிய அச்சத்தினையும் அல்லாஹ் உங்களுக்கு வழங்க வேண்டும் என்று பிரார்த்திகின்றேன். இந்தமடலை பார்த்தவுடன் உங்களது கூலிகள் மீண்டும் என்மீது வசைபாட வருவார்கள் என்ற எதிர்பார்ப்புடன் எனது இந்த மடலை நிறைவு செய்கிறேன்.

இப்படிக்கு

முகம்மத் இக்பால்

சாய்ந்தமருது

Read more...

''டொரன்ட் ''என்ற செயலிகளினால் பரவும் ''ரம்பா'' - கணினிகள் ஜாக்கிரதை

''ரம்பா'' எனப்படும் வைரஸினால் கணினிகளிடையே பாதிப்பு ஏற்படுவதாக இலங்கை கணினி அவசரப் பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது. வின்டோஸ் 7 , வின்டோஸ் 8.1 மற்றும் வின்டோஸ் 10 ஆகிய மென்பொருள் உடையாய் கணங்களுக்கு பாதிப்பு ஏற்படலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

ரம்பா வைரஸ் ஆனது கணினிகளில் இலவசமாக தரவிறக்கம் செய்யப்படும் இணைப்புகள் ஊடாக கணினிகளில் நுழைவதாக இலங்கை கணினி அவசரப் பிரிவின் சிரேஷ்ட தகவல் தொழில்நுட்ப பொறியியலாளர் ரவிந்து மீகஸ்முல்ல தெரிவித்தார். தரவிறக்கம் செய்வதற்காக பயன்படுத்தப்படும் டொரன்ட் என்ற செயலிகளினால் குறித்த வைரஸ் வேகமாக பரவுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

குறித்த வைரஸ் தொற்றினால், கணினிகளில் உள்ள ஆவணங்கள், நிழற்படங்கள், காணொளிகள் ஆகியவற்றை திறக்க முடியாத நிலை ஏற்படும் அதே நேரம் குறித்த ஆவணங்கள் மீளவும் பயன்படுத்த குறிப்பிட்ட ஒரு தொகை பணம் செலுத்த வேண்டும் என கோரப்படுகின்றது.

இவ்வாறு பணம் கோரப்படுமாயின் பணம் செலுத்த வேண்டாம் என பயனாளர்களுக்கு இலங்கை கணினி அவசரப் பிரிவு வலியுறுத்தியுள்ளது. இந்த வைரஸ் தாக்கம் ஏற்படாமல் இருப்பதற்கு முக்கிய ஆவணங்களை கணினியுடன் தொடர்புபடாத வகையில் பதிவு செய்து கொள்ள வேண்டிய அதே நேரம் இலவச தரவிறக்கங்களை தவிர்க்க வேண்டும் எனவும் இலங்கை கணினி அவசரப் பிரிவு அறிவுறுத்தியுள்ளது.


Read more...

திண்ம உணவுப் பொருட்களுக்கும் வர்ணக் குறியீடு.

கடந்த காலங்களில் குளிர்பானங்களுக்கு வர்ண குறியீடு பயன்படுத்தப்பட்டமை போன்று நேற்று முதல் திண்ம உணவுப் பொருட்களுக்கும் வர்ண குறியீட்டு முறையை பயன்படுத்தும் வேலைத்திட்டத்தை சுகாதார அமைச்சு மேற்கொண்டுள்ளது.

இலங்கையில் தொற்றா நோய்களைக் கட்டுப்படுத்தும் நோக்கில், மென் பானங்களில் சீனியின் அளவை அறிந்துகொள்வதற்காக அறிமுகம் செய்யப்பட்ட வர்ணக் குறியீட்டு முறையை சுகாதார அமைச்சு திண்ம உணவுப் பொருட்களுக்கும் அறிவித்துள்ளது.

கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் மென்பான வகைகளுக்கு இந்த முறைமை அறிமுகம் செய்யப்பட்டிருந்தது.

சீனி, உப்பு, எண்ணெய் செறிந்த உணவுப் பொருட்களை அதிகமாக உட்கொள்வதன் மூலம் மக்கள் தொற்றா நோய்களுக்கு ஆளாகும் நிலை அதிகரித்துள்ளதாக சுட்டிக்காட்டியுள்ள சுகாதார அமைச்சு, அதனைத் தடுக்கும் நோக்கிலேயே இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக குறிப்பிட்டிருந்தது. இதன்படி, ஆகக் கூடுதலான சீனி அடங்கியுள்ள உணவுப் பொருட்களுக்கு சிவப்பு நிறக் குறியீடு இடப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இலங்கையின் உணவுச் சட்டத்திற்கு அமைய, இந்த வர்ணக் குறியீட்டு முறை, திண்ம உணவுப் பொருட்களுக்கும் நேற்று முதல் அமுல்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read more...
Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com